உள்ளுர் தினசரியில் அன்றைக்கு வந்த விளம்பரத்தைப் பார்த்து வாய் பிளந்து நின்னது என்னவோ உண்மை. இவ்வளாம் பெருசா? எப்போ? அந்தப்பக்கம் எத்தனை முறை பகலிலும் இரவிலுமாப்போயிருக்கோம்? கண்ணுக்கே தெம்படலை!!! அல்லும்பகலும் நெருக்கியடிக்கும் போக்குவரத்து நெரிசலிலே மாட்டிக்கிட்டு பயப்பிராந்தியோடு சாலையிலேயே கண்ணு நட்டுக்கிட்டு இருந்தால் அக்கம்பக்கம் யானையே நின்னாலும் கண்ணுக்குத் தெரியுமா?
அண்ணா சாலையில்தான்னு சொல்றீங்க..... இன்னிக்குக் கட்டாயம் கண்ணால் பார்க்கணும் என்ற முடிவோடு இருந்தேன். ராத்திரிக்கு எப்படியும் விமானநிலையம் போயாகணும்.வர்றாள். அப்ப மறக்காமல் யானையைப் பார்க்கலாம்.
சனிக்கிழமையா இருக்கேன்னு பார்த்தசாரதியை தரிசிக்கக் கிளம்பினோம். ஏழுமணி வாக்கில்பதிவர் சந்திப்பு ஒன்னு இருக்கு. தில்லக்கேணி ஐயா வழக்கம்போல் இருக்கார். ஸ்பெஷல் தரிசனம் இப்போ சீக்ர தரிசனம் ஆகி இருக்கு. நேரக்குறைவு காரணம் சீக்ரமா எனக்குப் பெருமாளை ஸேவிக்கணும். சந்நிதிக்கு இடப்புறம் டிக்கெட் கொடுக்கறாங்க. கூடவே கொஞ்சம் மஞ்சள் குங்குமப்ரசாதமும். நேரா நம்மைக்கொண்டுபோய் மூலவருக்கு முன்வாசலில் விட்டாறது. தர்ம தர்சனம் வரிசைக்குப் பாரலலா ஒரு வரிசையில் போய் நிக்கணும்.ரெண்டே நிமிசத்தில் முழிச்சுப் பார்க்கும் மூலவர் முன் சடாரி, தீர்த்தம் எல்லாம் ஆச்சு. வழக்கத்துக்கு மாறா மூலவர் பளிச்ன்னு இருக்காரேன்னால் நல்ல மின்விளக்கு ஃபோகஸ் செய்யுது அவர் முகத்தை!அடடா.... பாரதப்போரின் விழுப்புண்கள் ,அம்பு கொத்திய இடங்கள் எல்லாம் தழும்புகளாய்த் தெரியுதே!!!!
மூலவரை நாம் பார்த்த(னின் தேரை ஓட்டிய )ஸாரதின்னு சொல்றோமே தவிர இவருக்கு அசல்பெயர் வேங்கடக்ருஷ்ணன். ரெண்டே கைகளுடன் குடும்ப சமேதராய் இங்கே காட்சி கொடுக்கிறார். அண்ணனும், தம்பியும், மனைவியும்,மகனும் பேரனுமா கூட்டம்தான். மூணுதலைமுறை! ஆனால் நட்ட நடுவில் ஒன்பதடி உசரத்தில் ஆஜானுபாகனாய் முறுக்கு மீசையுடன் புஷ்ப அலங்காரங்களுடன் ஜொலிப்பவனை விட்டு இந்தப்பக்கம் அந்தப்பக்கம் கண்களை ஓட்டினால்தானே குடும்பம் தெரியும்? எங்கே ஓட்ட விடறான். முட்டைக்கண்ணால் நம்ம முழிச்சுப் பார்க்கிறானே!!! அவன் கண்ணைவிட்டு அகலுதா நம் கண்கள்?
இடக்கையில் இருக்கும் சங்கு வலக்கையில் வந்துருக்கு. சக்கரத்தை விஷ்ணு லோகத்துக்கு அனுப்பி இருக்கார், சாரதி வேஷம் கட்டுனப்ப! அதான் போரில்ஆயுதம் எடுக்கமாட்டேன்னு துரியோதனனுக்கு வாக்குக் கொடுத்துருந்தாரே! கையில் ஒரு சாட்டை தேர்க் குதிரைகளை விரட்ட. ஆனால் இடுப்பில் இருந்து தொங்கும் வாள் எதுக்கு? இது ஆயுதம் இல்லையோ???? ஒருவேளை தற்காப்புக்கோ? என்னவோ போங்க 'சாமி'யைப் புரிஞ்சுக்கவே முடியலை. சப்தரிஷிகளுக்கும் தரிசனம் தந்துருக்கார். நமக்கும்தான்........... இல்லையோ?
மீசைக்காரனை மீசையில்லாமல் கூட தரிசிக்கலாமாம். வருசத்துக்கு அஞ்சு நாட்கள். பகல்பத்து உற்சவத்தின் ஆறாம் நாளில் இருந்து பத்தாம் நாள் வரை! சென்னைக்கு வரும்போதெல்லாம் தவறாமல் ஒருமுறையாவது வந்து தரிசிக்கும் கோவில் என்றாலும் இதுநாள்வரை மைனஸ் மீசை பார்க்கக் கிடைக்கலை. ராப்பத்து மட்டும் ஒரே ஒருநாள் கிடைச்சது.ஸ்ரீராமர் அலங்காரம்.
சீக்ர தரிசனத்துலே வந்தால் நாம் மிஸ் பண்ணுவது ராமனையும் ரங்கனையும்:( பக்கத்துலே கம்பித் தடுப்பு வரிசைகளில் வரும் சனம் பார்வையை மறைச்சுருது. கூட்டம் இல்லேன்னா..... அப்ப எதுக்கு சீக்ரம்? பொது தரிசனத்துலே வந்தால் மூணு சந்நிதிகளையும் தரிசிக்கும் சான்ஸ் கிடைச்சுருமே! என்னவோபோங்க..........இடப்பக்கம் இருக்கும் ஹனுமனையும் ஆழ்வார்களையும் மட்டுமே சேவிக்க முடிஞ்சது.
கோவிலை வலம் வந்து வேதவல்லித்தாயார், யோக நரசிம்மர், கஜேந்திர வரதர், நம்ம ஆண்டாளம்மா எல்லோரையும் தரிசனம் செஞ்சுக்கிட்டு கருவறை விமானத்துக்குக் கண்ணைச் செலுத்தும்போது கீழே முற்றத்தில் (யோகநரசிம்மர் சந்நிதிக்குப்பின்பக்கம்) மேடையில் குழலூதும் கிருஷ்ணனும் பசுவுமா ஒரு சுதைச்சிற்பம். புதுசு. என்னவோ அங்கே இருக்கும் பழைய அமைப்புக்கு ஒட்டாமல் இருந்ததா கோபால் சொன்னார். பெருமாள் திருவடிகளைக் கும்பிட்டுவிட்டு, பக்கத்துலே கண்ணாடிப்பொட்டியில், கோவில் எப்படி இருக்குன்ற டிஸ்ப்ளே பார்த்தால் அருமையான அமைப்புதான். ஆனால் கோவில் உள்ளே நிஜமாவே நாம் இருக்கும்போது அந்த ஒரிஜனல் அழகு தெரியறதில்லை:( பஞ்சமூர்த்திகள் உள்ள திருக்கோவில்!!!
பிரஸாத ஸ்டாலில் புளியோதரையும் மைசூர்பாகும் சக்கரைப் பொங்கலும்கிடைச்சது. இங்கே சக்கரைப் பொங்கல் ரொம்ப விசேஷம். ஆண்டாள் சொன்ன முழங்கைநெய்வார என்பதைக் கடைப் பிடிக்கிறார்கள். போரில் சும்மா இருந்தவரையும் எதிரிகளின் அம்பு தாக்கி காயம் ஆச்சே. புண்கள் ஆறிக்கிட்டணுமேன்னு ரொம்ப காரம் இல்லாமல் வெறும் மிளகுப்பொடி மட்டும் சேர்த்த புளியோதரையும், ஏகப்பட்ட நெய்யும் முந்திரிப்பருப்புமா கலந்து செஞ்ச சக்கரைப்பொங்கலும் சூப்பர். ஒரு கிலோ அரிசிக்கு 700 கிராம் முந்திரியும் 350 கிராம் நெய்யுமாம். !!!! (எனக்குக் கிடைச்ச சக்கரைப் பொங்கலில் மூணே முந்திரிதான் இருந்துச்சு. நான் ஒன்னும் சொல்லப்போறதில்லை மூச்....)
ப்ருந்தாரண்யத்தில் இருந்து கிளம்பினோம். ஆஹா... அதென்ன? இதுதான் பழைய பெயராம் இந்த தலத்துக்கு. துளசிவனம். அப்புறம்தான் அல்லிக்கேணியாச்சு. பீச் ரோடுவழியா திரும்பி வந்தோம். விவேகாநந்தர் இல்லத்தில் 150 வது பிறந்தநாள் விழான்னு நடந்துக்கிட்டு இருக்கு. மறுநாள் மாலை 4 மணிக்கு சிறப்பு நிகழ்ச்சி வச்சுருக்காங்க.
அறைக்கு வந்தகொஞ்ச நேரத்தில் பதிவர் மின்னல்வரிகள் பாலகணேஷ் வந்தார். புதுமுகம் என்ற பிரமிப்பு ஒன்னும் இல்லாமல் எதோ காலங்காலமா தினமும் பார்த்துப்பேசிவந்ததைப் போல் ஒரு தோணல். நேத்து விட்ட இடத்துலே இருந்து பேச ஆரம்பிக்கிறோம். பதிவர் குடும்ப லக்ஷணம் என்பது இதுதான். அவருக்கும் அநேகமா இப்படித்தான் இருந்துருக்கணும். விதிவிலக்காக நம்ம கோபால் மட்டும் இருந்தார்:-)))))
நேரம் போறது தெரியாமல் ஒரு அரட்டை. அவர் வீட்டு புத்தக அலமாரியை ஒரு நாள் அபேஸ் பண்ணிடணுமுன்னு இருக்கேன். பதிவுலகம் ஒன்னு இப்படி அராஜகம் பண்ணிக்கிட்டு இருக்குன்னு அவருக்கு ரொம்பநாளாத் தெரியாதாம். அப்புறம்தெரிஞ்சதும் கண்ணைத் திறந்துக்கிட்டே கடலில் குதிச்சுட்டாரு:-))))) இப்பதான் ஒரு வருசம் ஆகி இருக்குன்னார். மனம்கவரும் அருமையான பதிவுகளை எழுதிவரும் நண்பர்களைப்பற்றி, ' இதைப்படிச்சீங்களா? அதைப்படிச்சீங்களா? ன்னு விசாரிச்சுக்கிட்டோம். விழாவுக்குக் கட்டாயம் வந்துருங்கன்னு சொல்லி நினைவூட்டுனதும் நண்பர் ஒருவரையும் கூட அழைச்சுக்கிட்டு வரேன்னார். நண்பர் பெயரை நான் சட்னு சொன்னதும் வியப்புதான். ஒரே குட்டையில் இருக்கும் மீன்களுக்கு ஒன்றையொன்று புரியாதா?:-))))))) இவ்ளவு பேசுனவ சரிதாவைப் பற்றி மட்டும் ஒன்னும் விசாரிச்சுக்கலை!
விமானநிலையம் போகணுமுன்னு கோபால் நினைவுபடுத்தினார். போறவழியில் கவனிச்சுக்கிட்டே வந்தேன். ஆஹா.... அட்டகாசமான விளக்கொளியில் மின்னுவதை எப்படித்தவறவிட்டேன்?
இன்னிக்குத்தான் திறப்புவிழா. அதான் பளிச் பளிச்.
இத்தனைநாள் எப்படியோ மறைச்சு வச்சுருந்தாங்க போல. பிரமாண்டமாத்தான் நிக்குது! மகளுடன் திரும்பி வரும்போது யானையைக் காமிச்சேன். மெட்ரோ வேலைகள் நடப்பதால் முழு வியூவும் பார்வைக்கு அகப்படலை. ஒருநாள் போகத்தான் வேணும். மகளுக்குப் பிடிக்கும்.
அடுத்த ரெண்டு நாட்களும் மகளுக்குத் துணிகள் எடுப்பது தைக்கக்கொடுப்பது, உறவீனர் வீடுகளுக்கு விஸிட் என்று அலைஞ்சோம். எங்க வீட்டு இமெல்டா மார்கோஸ் என்ற பட்டத்துக்கு உரிய மகளை எகஸ்ப்ரெஸ் அவென்யூவுக்குக் கூட்டிப் போனோம். நானும் ஒரு கிளாஸ் மனப்பால் குடிச்சுட்டுக் கிளம்பினேன். எனக்கு அங்கே ஸ்ரீரங்கா ஜுவல்லர்ஸ் பார்க்கணும். (கவனிக்க: பார்க்கணும்) சான்ஸ் கிடைச்சா எதாவது சின்னதா.............
எனக்கு முன்னாலேயே என் அதிர்ஷ்டம் (ஒருவேளை கோபாலின் அதிர்ஷ்டமாகக்கூட இருக்குமோ?) அங்கே போய் உக்கார்ந்துவிட்டது. மூணுதளமும் மாறிமாறி ஏறி இறங்கினது மிச்சம். கடையைக் காணோம்:( போச்சு என் காமதேனு...........
எனெக்கென்னமோ இங்கே பார்க்கிங் சார்ஜ் கூடுதல் என்று தோணுது. ஒருவேளை எங்கூர் மால்களில் எல்லாம் இலவச பார்க்கிங் என்பதால் இருக்கலாம். பார்க்கிங் மட்டுமா...உள்ளே இதர சாமான்களும் இப்படித்தான் தீ பிடிச்ச விலை. சாதாரண ப்ரிண்ட் (மயிலிறகு டிஸைன்) உள்ள புடவை பத்தாயிரத்துச் சொச்சம். புளிப்பு திராக்ஷை!
வீட்டு அலங்காரச் சாமான்கள் கடையில் யானை மந்தைகள். எல்லாமே ரொம்ப அழகா நீட்டா வச்சுருக்காங்க. அசப்பில் எங்கூர் கடைகள் போல ஒரு ஃபீலிங்ஸ். அதான் ஒன்னும் வாங்கிக்கலை:-)
பகலுணவு நேரமாச்சேன்னு ஃபுட்கோர்ட் பக்கம் போனால் நளாஸ் ஆப்பம் கண்ணில் பட்டது. நம்ம பதிவர் மோகன்குமார் ஒரு பதிவில் குறிப்பிட்ட நினைவு வரவே அங்கேயே சாப்பிடலாமுன்னு முடிவு. முதலிலேயே காசைக் கட்டணும். மீதிச் சில்லறை கிடைக்காதுன்னு பதிவுகளின் மூலம் தெரிஞ்சதால் சரியாக் கணக்குப் போட்டு அதுக்குண்டான தொகையை மட்டும் கட்டி ப்ரீபெய்டு கார்டு வாங்கினோம். எக்ஸ்ட்ரா எதாவது வேணுமுன்னா.... மூச். இந்த சிஸ்டம் சரியானதில்லைன்னு எனக்குப் படுது. மீதியை நம்ம டெபிட் கார்டுக்கு அனுப்பக்கூடாதா? இல்லை சாப்பாட்டு பில்லை சாப்பிட்டப்பிறகு நம்ம க்ரெடிட் கார்டைக் கொண்டு கட்டலாம் என்று இருக்கக்கூடாதா? இங்கெல்லாம் அப்படித்தானே செய்யறோம். என்னவோ போங்க..... உள்ளுர் விவகாரம் ஒன்னும் புரிபடமாட்டேங்குது:(
அறைக்குத் திரும்பும் வழியில் அண்ணாசாலையில் ஒரு ஆண்டீக் கடை பெயர்பலகை பார்த்தது நினைவுக்கு வர அங்கே போனோம். ஒரே இருட்டு. தட்டுத்தடவி கண்கள் இருட்டுக்குப் பழக்கமானதும் ரெண்டு மனிதர்கள் இருப்பதைக் கண்டேன். பவர் கட்டாம். இன்னும் ஒரு மணி நேரம் ஆகுமாம் வெளிச்சம் வர. ஜன்னல் வழியா சூரிய ஒளி புக முடியாமல் அடைச்சுவச்ச சாமான்கள். தெருபக்கம் ஷோ விண்டோ. பொருட்கள் ஒன்னும் சரிவரலைன்னு நினைச்ச சமயம் உள்ளே இருந்து ஒரு மணியைக் கொண்டுவந்தார். பித்தளை மாதிரி இருக்கு. ஆனால்...ஏழு உலோகங்களின் கலவை. Tibetan Prayer Bell தியானத்துக்கானதாம். ஒரு மரக்கட்டையால் விளிம்பைச் சுத்தினால் ஒருமாதிரி 'ஓம்' என்ற ஒலி வருது.
ரெண்டு சைஸ் இருக்கு. கொஞ்சம் பெரியதை (11 செமீ விட்டமும் 20 செ.மீ உயரமும்) வாங்கினோம். பேரம் பேசத் தோணலை.கடை இருக்கும் அழகைப் பார்த்தால் அன்றைக்குப் பூராவும் நாங்க மட்டுமே கஸ்டமராக இருப்போம் போல. ரெண்டு பேர் காலையில் இருந்து கடையைத் திறந்துவச்சுக்கிட்டு மொட்டு மொட்டுன்னு உக்கார்ந்துருக்காங்க. போயிட்டுப் போகுது போ!
ஒரு 46 விநாடி வீடியோ இது. நின்னு நிதானமா கட்டையை சுத்திவர ஓடவிட்டா நல்ல சப்தம் வருது. இங்கே அவசரடியா ... ச்சும்மா ஒரு சாம்பிள்.
