எல்லாம் இந்த ரெண்டு வருசமாத்தான். நகர மையம் அழிஞ்சு போச்சு பாருங்க அப்போதிருந்துதான். ஊர் போயிருச்சுன்னு மூலையிலே உக்காந்து அழுதுகிட்டே இருந்தா என்ன பயன்? நடக்கவேண்டியது நடந்தாகணுமே!
ஸேண்ட்டா க்ளாஸ் மக்களுக்கு கிறிஸ்மஸ் ஸ்ப்ரிட்டை ஊ(ற்ற)ட்ட வழக்கமா பண்டிகைக்கு ஒரு மாசம் முந்தி வர்றதுண்டு. அதைப்பார்த்ததும்தான் ஐயோ...பண்டிகை நெருங்கிருச்சே....இன்னும் வாங்க வேண்டியதை வாங்கலையேன்னு கடைகளுக்கு மக்கள் ஓடுவாங்க. முக்கியமா பரிசுப்பொருட்கள். பரிசுப்பொருட்கள் வாங்கி, அழகா கிறிஸ்மஸ் தீம் உள்ள கிஃப்ட்பேப்பரில் பொதிஞ்சு கிறிஸ்மஸ் மரத்தடியில் வச்சுடணும். மத்தபடி நடுராத்திரியிலோ இல்லை காலையிலோ சர்ச்சுக்குப்போய் சாமி கும்பிட வேண்டிய அவசியம் எல்லாம் இல்லையாக்கும் கேட்டோ!!!
அலங்காரவண்டிகள் ஊர்வலம் நடக்கக் கட்டக்கடைசியில் ஸேண்ட்டா தன்னுடைய ரெயின்டீர் இழுக்கும் வண்டியில் வருவார். அநேகமா எல்லா வருசமும் ஒரேமாதிரி வண்டிகள்தான் ஊர்வலத்தில் வரும். அலங்காரங்களை எடுத்துப் பத்திரப்படுத்தி வச்சுக்குவாங்க. இதுக்குன்னே ஒரு ட்ரஸ்ட் உண்டு. யாரு அதிகமா டொனோஷன் கொடுக்கறாங்களோ அவுங்க பெயரைப் போட்டுக்குவாங்க. எல்லாம் ஒரு விளம்பரம்தான். இந்த வருசம் ஸ்மித் சிட்டிக்காரங்க.
சிட்டிக்கவுன்ஸிலுமொரு நல்ல தொகையை ட்ரஸ்ட்டுக்குக் கொடுக்குது. உள்ளுர் பத்திரிகைகள் பெரிய அளவில் விளம்பரம் கொடுத்து மக்களுக்கு இன்ன தேதி, இந்த நேரம் என்று நினைவூட்டிக்கிட்டே இருப்பாங்க. எந்த சாலையில் புறப்பட்டு எந்த சாலையில் ஊர்வலம் வரப்போகுது, எங்கே முடிவு, எத்தனை மணிக்குக் குறிப்பிட்ட சாலைகளில் போக்குவரத்து நிறுத்தப்படும், அணிவகுப்பு நடக்குமுன் ரெடியா வரிசை கட்டி நிற்கும் வண்டிகள் எந்தத் தெருவுக்கு எப்போ வந்து சேரணும் என்றெல்லாம் விவரமாப் போட்டுருவாங்க.அணிவகுப்பு வண்டிகள் நிற்கும் அந்தக் குறிப்பிட்டத் தெருவுக்குப் போக்குவரத்து அன்றைக்குக் காலை 8 மணி முதல் ரத்து. அங்கே வசிக்கும் மக்களுக்கு மட்டும் விதிவிலக்கு உண்டு.
ஊர்வலம் ரெண்டு மணிக்குத் தொடக்கமுன்னா அது போகும் வழியில் போக்குவரத்து ஒரு மணி நேரத்துக்குமுன்னேயே நிறுத்தப்படும். மக்கள் வந்து கூட நேரம் எடுக்குமில்லே? பார்க்கிங் கிடைக்காம சைடு தெருக்களில் நிறுத்திட்டு குஞ்சு குளுவான்களையெல்லாம் இழுத்துக்கிட்டு வரணுமா இல்லையா?
நாங்களும் ஒரு ஒன்னரைக்குப்போய்ச் சேர்ந்தோம். சாலையின் ரெண்டு பக்கங்களிலும் மக்கள் உக்கார்ந்துருந்தாங்க. எங்கூரில் தெருவிலே தைரியமாத் தரையில் 'உக்காரலாம்' :-)) இருக்கைகள் கொண்டு வந்த பாக்கியவான்கள் இன்னும் மஜாவா இடம் பிடிச்சு இருந்தாங்க. வீட்டுப்பின்பக்கத்தில் வைக்கும் அவுட்டோர் ஏரியா அம்பர்லாவைக்கூட ஒருத்தர் கொண்டு வந்துருந்தார். பெரிய குடும்பி!!!
எங்க கோடைகாலம் நேத்துதான் ( டிசம்பர் 1) ஆரம்பிச்சுருக்கு. இன்றைக்கு 25 டிகிரி வரப்போகுதுன்னதும் முன் ஜாக்கிரதையாத்தானே இருக்கணும்! ஏன்னா....இங்கே நிலவரம் இப்படி. ஏகப்பட்ட (melanoma)ஸ்கின் கேன்ஸர். ஓஸோன் லேயரில் பெரிய பொத்தல் எங்க தலைக்கு மேலே இருக்காம்.
Slip, Slop, Slap என்ற ஸ்லோக(ம்)ன் எங்கள் வேதம். Slip on a shirt, Slop on the 30+ sunscreen, Slap on a hat, Seek shade or shelter, Slide on some sunnies. - "Slip, Slop, Slap, Seek, Slide" sunglasses இல்லாம வெளியே போகாதே!!!! கேன்ஸர் சொஸைட்டியின் எச்சரிக்கை!
ஒன்னரைவயசு அலெக்ஸ் நம்ம பக்கத்தில் இருந்தார். முழு வளர்ச்சி அடைந்த வர்தான். ஆனால் நம்ம கோகியைவிடச் சின்ன உருவம்!
காவல்துறை மகளிர் அணி முழுப்பொறுப்பும் எடுத்துக்கிச்சு.
வந்தார், ஆசனத்தில் அமர்ந்தார் பார்த்தார்:-)
சரியா ரெண்டு மணிக்கு ப்ராஸ் பேண்ட் இசை முழங்க பரேடு ஆரம்பிச்சு நம்ம பக்கம் வரும்போது ரெண்டு அஞ்சு. மிஸஸ் ஸேண்ட்டா வீட்டு அடுக்களைக் கரடிகள், கிறிஸ்மஸ் பண்டிகைக்கு முதல்நாள் ராத்திரி எப்படி சிம்னி வழியா ஸேண்டா பரிசுப்பொருட்களைக்கொண்டு வந்து நல்ல பிள்ளைகளுக்குத் தர்றார்ன்னு (பசங்க இன்னுமா இதை நம்புது?????) சேதி சொல்லும் காட்சிகளுடன் ஊர்வலம் நகருது.
நாட்டுக்கு ராணுவம் எவ்ளோ முக்கியமுன்னு காமிக்க எங்க ஊர்ப்பக்கம் இருக்கும் ராணுவமுகாம் வீரர்கள் ஊர்வலத்தில் முதல்முறையாக வந்தாங்க. நிலநடுக்கம் வந்தவுடனே அழிவில் இருந்து ஆட்களை மீட்க அவசரநிலை அறிவிப்பு வந்தவுடன் ஆரம்பிச்ச இவுங்க வேலைகள் இன்னும் இங்கே முடியலை. மிடுக்கோடு மிடுக்கா ரெண்டு சின்னப்பிள்ளைகளைத் தோளில் சுமந்து போனது எனக்குப் பிடிச்சுருந்துச்சு. நாளைய ராணுவ வீரர்கள்!!!
அடுத்து வந்தவங்களும் ஆபத்துதவிகளே. தீயணைக்கும் படை! தீமட்டும் அணைக்காம சாலைவிபத்துகளுக்கும் இவுங்க உதவி தேவைப்படுது.
உள்ளுர் பாலே நடனப்பள்ளிகள், ம்யூஸிக் ஸ்கூல்ஸ் எல்லாம் இடைக்கிடைக்கு வந்துக்கிட்டே இருந்துச்சு. குழந்தைகளுக்கு பரிச்சயமான தொலைக்காட்சி கேரக்டர்ஸ் ,மிஸ் பிக்கி, பனானா இன் பைஜாமாஸ், சூப்பர்மேன், த்ரீ லிட்டில் பிக்ஸ், பினொக்கியோ, பீட்டர் பேன், ஹாண்டட் ஹௌஸ் என்னும் பேய் வீடு, லைஃப் எஜுகேஷன் ட்ரஸ்ட் லோகோ ஒட்டகச்சிவிங்கி , உள்ளுர் விலங்கியல் பூங்காவான ஒரானா பார்க் வாசிகள் இப்படி.
Star wars Return of the Jedi மவுசு இன்னும்தீரலை!
பிள்ளைகள் கைதட்டி ஆரவாரத்தோடு எல்லோரையும் கவனிச்சுப்பெயர் சொல்லிக் கூப்பிடுதுங்க.
பெரியவங்களுக்கு இப்போதைய ஆர்வம் சிமெண்ட் மிக்ஸ் வண்டிகளும் கன்ஸ்ட்ரக்ஷன் கம்பெனி வண்டிகளும்தான். ஊரை திரும்பக்கட்டி எழுப்பும் வேலை நடந்துக்கிட்டு இருக்கே! சின்ன சின்ன பில்டிங் கம்பெனியெல்லாம் கூட இப்பச் செழிப்பா வளர்ந்துபோச்சு. எலெக்ட்ரீஷியன்களுக்கும் ப்ளம்பர்களுக்கும் பயங்கர டிமாண்ட். உலகின் பலநாடுகளில் இருந்து தாற்காலிகமா வந்து இங்கெ வேலை செய்யறாங்க.
jesus the great christmas present னு ஒரு அலங்கார வண்டி.
புது சர்ச் ஒன்னு ஆரம்பமாகி இருக்கு போல. இதுவரை நான் பார்க்காத ஒன்னு. என்ன ஏதுன்னு விசாரிச்சால்..... இது(வும்) இங்கிலாந்து சமாச்சாரம். 1990 கடைசியில் அங்கே சில மக்களால் தொடங்கப்பட்டு பத்தே வருசத்தில் கடல்கடந்து வந்துருக்கு. இங்கே ஏற்கெனவே பாரம்பரியமா இருந்து வரும் சர்ச்சுகளை வேணாமுன்னு விலக்கி புதுசுபுதுசா வெவேற பெயரில் உருவாகிவரும் சர்ச்சுகள் உண்டு.
டெஸ்டினி சர்ச்சுன்னு ஒன்னு 1998 லே தொடங்கி நடந்துக்கிட்டு இருக்கு இந்த நாட்டில். (இதைப்பற்றிச் சொல்ல ஏராளமா இருக்குன்னாலும் இப்போ இங்கே வேணாம்.பின்னொருக்கில் கேட்டோ!) கும்பிடுவது ஒரே சாமி. ஆனால் இதுலே ஆயிரத்தெட்டு பிரிவுகள். என்னமோ போங்க!
சுருக்கமாச் சொன்னா நம்மூர் ஆஸ்ரமங்களும் மடங்களும் நினைவுக்கு வந்தாச் சரி.
இங்கிருக்கும் வெவ்வேற தேச மக்கள் அவுங்கவுங்க நாட்டுக்கொடிகளும் அலங்காரமுமா ஊர்வலத்தில் போனாங்க. இந்தியமக்கள் மிஸ்ஸிங். ரெண்டே பேர் வேடிக்கை பார்க்கும் கூட்டத்தில் இருந்தாங்கன்னு சொல்லிக்கலாம். பிலிப்பீனோஸ், கம்போடியன்ஸ்,ஜாப்பனீஸ், இந்தோநேஷியன்ஸ், ரஷ்யன்ஸ்னு நல்லத்தான் இருந்துச்சு. ஆனால் பெரிய அளவில் கூட்டமாக் கலந்துக்கிட்டவங்க சீனர்கள்தான். வெவ்வேறு குழுவா விதவிதமான உடைகளிலும் விதவிதமான இசைக்கருவிகளோடும் அலங்கார வண்டிகளும் கால் நடையுமாக(!)வும் பிரமாண்டமான சீனக்கொடி பிடிச்சுப்போனாங்க. எங்கூர் மக்கள் தொகைக்கணக்கில் பார்த்தால் அடுத்த வருசம் பரேடில் 75% , அதுக்கடுத்தவருசம் 100% இவுங்கதான் இடம்பிடிக்கப்போறாங்க கேட்டோ!
சீனத்து சின்னமேளம்!
சிகப்பும் மஞ்சளும் வெள்ளையுமா மூணு சிங்கங்கள் ஜல்ஜங் ஜல்ஜங்ன்னு கொட்டுமேளத்தோடு வண்டியிலே ஆடிக்கிட்டே போனதுகள். எனக்கு இந்த சிங்க ஆட்டம் ரொம்பப்பிடிக்கும். ரசித்தேன்.
ரெண்டு ட்ராகன்கள் வேற வளைஞ்சும் நெளிஞ்சும் பறந்தும் ஆடுனதுகூட எனக்குப்பிடிச்சது.
சீனாவில் தடை செய்யப்பட்ட ஃபலூன் டாஃபா குழுவினர் இங்கே இதுவரை காணாத அளவில் பெருகி இருக்காங்க. மேளதாளத்தோடு படை திரண்டு போறாங்க!!!
எங்கூர்லே என்ன விசேஷமுன்னா, நம்ம ஹரே கிருஷ்ணா கோவில் தேரும் இந்த ஊர்வலத்தில் வரும். சின்மயானந்தா குழுவினரும் அட்டகாசமாப் புடவையெல்லாம் கட்டிக்கிட்டு வருவாங்க. இந்த வருசம் இவுங்களைக் காணோம். கோயிலே இடிஞ்சு விழுந்து இப்பத்தான் இடிபாடுகளை எடுத்துக்கிட்டு இருக்கும் நிலையில் ஊர்வலம் வான்னு கூப்பிட்டால் அநியாயம் இல்லையோ?
கம்போடியாக்குழுவினர் கொடியில் அங்கோர்வாட் படம் போட்டுருந்துச்சு. அழகான அலங்காரத்தோடு ஊர்வலத்தில் வந்தாங்க.
சாலை முழுசையும் பொதுப் போக்குவரத்துக்கு மூடி வச்சுருக்காங்களே..... ஜாலியா நடு ரோட்டில் போகக்கூடாது? இப்பவும் ஒழுங்கு குலையாம ஊர்வல வண்டிகள் எல்லாம் இடது பக்கம் நடுக்கோட்டைத் தொடாமல் போகுது பாருங்க. எல்லாரையும் இந்தியாவில் கொண்டு போய்விடணும்.
நியூஸிலெண்ட் வின்டேஜ் மெஷினரி க்ளப், பழையகாலத்து சைக்கிள்கள் (பென்னி ஃபார்த்திங்) எல்லாம் ரசிக்கும்படி இருந்தாலும், காவல்துறையின் கென்னல் க்ளப் (போலீஸ் டாக்ஸ்) அணிவகுப்பு சூப்பர். எல்லாம் சிங்க நாய்கள்! (அல்சேஷியன்ஸ்க்கு நம்மூட்டுச் செல்லப்பெயர்)
உள்ளூர் ரக்பி ஆட்டக்குழு 'க்ருஸேடர்ஸ் ' குதிரைகளோடு தோன்றியதும் பலத்தவரவேற்பு. முக்கியமான ஆட்டக்காரர்கள் எல்லாம் நடந்தே போய் கையில் உள்ள ரக்பி பந்துகளை குழந்தை ரசிகர்களுக்குப் போட்டுப்பிடிச்சு வேடிக்கை காட்டிக்கிட்டே போனது பிடிச்சிருந்துச்சு. நாட்டின் தேசிய விளையாட்டை விட்டுடமுடியுதா என்ன?
குதிரைன்னதும் என்னோட ஃபேவரிட் குதிரை வகைகளான க்ளைட்ஸ்டேல் ஹார்ஸஸ் பூட்டிய வண்டியை இழுத்துக்கிட்டுக் கம்பீர நடையில் போனதுகள். என்ன திடமான கால்கள்!! நல்ல கொண்டை போட்ட வால்!!!! சூப்பர்ம்மா:-)))
ஊர்மக்களை விட்டுக்கொடுக்காம நம்ம டவுன் க்ரையர், நம்மூர் விஸர்ட் எல்லாமும் பங்கெடுத்துக்கிட்டது எங்க எல்லோருக்கும் மகிழ்ச்சியே! உள்ளுர் இன்ஷூரன்ஸ் கம்பெனி, ரேடியோ ஸ்டேஷன்ஸ், அந்தக்கால அண்ட் இந்தக்கால ஆம்புலன்ஸ் வண்டிகள், செயிண்ட் ஜான்ஸ் ஆம்புலன்ஸ் சர்வீஸில் பணிபுரியும் மக்கள், கேர்ள் கைட்ஸ், பாய்ஸ் ஸ்கௌட் ன்னு நீண்டுகிட்டே போன ஊர்வலம் கடைசியா ஸேண்ட்டா வண்டியில் ஜிங்கிள் பெல்ஸ் பாடிக்கிட்டே வந்து மக்களுக்கு கை உயர்த்தி ஆசி வழங்குனதோடு முடிஞ்சது. சரியா ஒன்னேகால் மணி நேரம்.
சேண்ட்டா வண்டிக்குப்பின் போலீஸ் வண்டி அதுக்குப்பின் குப்பை அள்ளும் வண்டி ஊர்வல விநியோகத்தில் பறந்து விழுந்த மிட்டாய்த்தாள்களையும், விளம்பரத்தாள்களையும் பெருக்கிப்பொறுக்கிப் போட்டுக்கிட்டே போய் ஊர்வலம் முடிஞ்ச அஞ்சாவது நிமிசம் சாலை எல்லாம் பளிச் பளிச்.
கடைசி காமணி நேரத்துலே என் கெமெரா பேட்டரி மண்டையைப் போட்டுருச்சு:( அதான் கோபால் கெமெரா இருக்குல்லேன்னு பார்த்தால்.... கார்ட் ஃபுல் ஆகிருச்சும்மான்றார்.
ரெண்டு பேரும் எடுத்த படங்களைஇங்கே ஒரு ஆல்பத்தில்போட்டு வச்சுருக்கேன். எடிட் பண்ணிக்கலை. ரெண்டு செட் கூடுதல்தான். எப்படியும் இன்னும் ஒரு வாரத்துலே உலகம் அழிஞ்சுறப் போகுதாம். அப்புறம் அம்மான்னா வருமா ஐயான்னா வருமா? இப்பவே பார்த்து ரசிச்சுக்க வேண்டியதுதான்.
பொழைச்சுக்கிடந்தா எல்லோருக்கும் மெர்ரி க்றிஸ்மஸ்:-)))
