நேரவித்தியாசத்தில் தூக்கம் கலைஞ்சு போனதும் ரெண்டு பேருக்கும் ஒரே ஐடியா! பேசாம எழுந்து குளிச்சுட்டுக் கோவிலுக்குப்போய் வரலாமா? இங்கேயே காலை ப்ரேக்ஃபாஸ்ட் இருக்கு. ஏழரை தொடங்கி பத்தரை வரையாம். போயிட்டு வந்து சாப்பிட்டால் ஆச்சு.
வாசலில் ஆட்டோ. அறுவது கேட்டு அறுவதுக்கு பேரம் படிஞ்சது. பெட்ரோல்விலை எல்லாம் ஏறிப்போச்சு சார்.......... ம்ம்ம் ஒன்னும் சொல்றதுக்கில்லை. அதுவும் முதல்நாளே வாக்குவாதம் வேணாம்
(இல்லேன்னா மட்டும் நாம் ஜெயிச்சுருவோமாக்கும்?)
ரெண்டே கி,மீட்டர் தூரத்தில் இருக்கும் கோவில் வாசலில் போய் இறங்கியாச்சு. வெங்கடேசன். ஆஃப் வெங்கடநாராயணா ரோடு, தி.நகர். காலை ஏழுமணிகூட ஆகலை. கோவில் சந்நிதி மூடி இருக்கு! ஏழரைக்குத்தான் திறப்பாங்களாம். இதென்ன புதுப்பழக்கம்?
பிரபந்தம் படிக்கறதுக்காக..... அட ராமா? அதை மக்கள்ஸ் நாலு பேர், காதாரக் கேட்டா.... தமிழ் வளராதோ? நாலாயிரம் எல்லாம் தமிழில்தானே?
வாசல் கேட்டையொட்டி பூவிற்கும் கூட்டத்தை சற்றே ஒதுங்கி இருக்கச்சொல்லி இருக்கு நிர்வாகம். ஆரவாரம் அவ்வளவா இல்லை.
வாசலில் தேவுடு காக்கணுமா/ பேசாம பக்கத்துலே இருக்கும் சரவணபவனுக்குள் நுழைஞ்சு ஒரு காஃபியாவது குடிச்சுட்டு வரலாமேன்னு போனோம்.
வடை ஒன்னு இருபத்தியஞ்சு ரூபாய்ன்னதும் ஆடிப்போயிட்டேன். அப்ப....ஆட்டோவுக்கு அறுவது நியாயமோ!!!!!
கையோடு காலைஉணவை முடிச்சுக்கலாமா?. (வடை ஆசை யாரை விட்டது?) எனக்கொரு மினி டிஃபன், நுரை ததும்பும் காஃபி ருசி நல்லாவே இருக்கு.
கோயிலுக்கு மீண்டு வந்தால் பெரிய வரிசை. ஆனால் நகருது. நாமும் வரிசையில் நின்னு உள்ளே போறோம். "யம்மா நல்லா இருக்கீங்களா? துளசி கொண்டாந்து தரட்டா?" துளசிக்கே துளசியான்னு திரும்பிப் பார்த்தால் நமக்குப் பரிச்சயப்பட்டபூக்காரம்மா சாமுண்டீஸ்வரி! வேணாம். நான் திரும்பி வரும்போது வாங்கிக்கறேன். 'அந்தாண்டை கடை போட்டுருக்குமா' ன்னு சொல்லிப்போனதும் உள்ளே போய் நம்ம கன்ஸர்ன் தாயாரையும் சிரிக்கும் பெரும் ஆளையும் வணங்கினோம்.சாமிக் காசை ஆசாமி கையில் கொடுக்காதேன்னு அறிவிப்புகள் அங்கங்கே இருந்தாலும் சனம் தனி கவனிப்புக்காக நோட்டை நீட்டுவதும் கவனிப்பு(ம்) கிடைப்பதுமாத்தான் இருக்கு.
முந்தியெல்லாம் தரிசனம் முடிஞ்சு வலப்பக்கம் திரும்பி சந்நிதித் தடுப்புக்குப்பின்னால் போய் சாமிக்கு நேரா ஹாலில் உக்கார்ந்துக்க முடியும். கொஞ்சநேரம் தியானம்கூட செஞ்சுக்க வழி இருந்துச்சு. இப்ப? நேரா பின்வாசலுக்கு விரட்டப்படுகிறோம். புன்சிரிப்போட பார்த்துண்டே இருக்கன்:( ஹூம்... நல்லா இரும்! அநியாயம் பார்க்க பார்க்க, பொம்பளை மனசு பொங்கும். தாயாரின் முகமே சாட்சி.
பின்கதவு வழியா வெளியே வந்து கம்பிக்குப்பின் துயில் கொள்ளும் ரங்கனை சேவிச்சப்ப புதுசா ரெண்டு ஆண்டாள்கள். பஞ்சலோகமா இருக்கணும். மின்னறாள்!
இடப்பக்கம் மூலையில் மூடி இருக்கும் கவுண்டர். அதன் முன்னே வரிசையில் காத்து 'இருக்கும்' சனங்கள். அந்தப் பக்கத்துச் சுவரில் அழகான ஓவியங்கள். எல்லாம் இவனைப்பற்றித்தான். போனமுறை பார்த்த நினைவு இல்லை. அழகாத்தான் வரைஞ்சுருக்கார் ஆர்ட்டிஸ்ட். அலுவல அறைக்குள் எட்டிப்பார்த்து, படம் எடுக்க அனுமதி கேட்டப்ப, சந்நிதியை விட்டுட்டு எடுத்துக்குங்கன்னார் ட்யூட்டியில் இருந்தவர்.
திருமலைதிருப்பதி தேவஸ்தான ஆஃபீஸா தொடங்குன இடம். சாமியோட அலுவலகமுன்னு பக்கத்துலே சாமி சிலை ஒன்னு வைக்கப்போக இப்ப இதே ஒரு பெரிய கோவிலா ஆகி இருக்கு! இன்னும் ஸ்பெஷல் தரிசன டிக்கெட் வரலையே தவிர மற்ற எல்லாமும் வந்தாச்சு, தாயார் உள்பட. மலையில் தனியா நின்னவர் இங்கே துணைக்கு வீட்டம்மாவை பக்கத்துலே உக்கார்த்திவச்சுருக்கார். சனிக்கிழமைகளிலும், புதுவருசதினத்திலும் பண்டிகை நாட்களிலும் கூட்டம் அம்முது!
படங்களை எடுத்துக்கிட்டே வாசல்வரை போயிருக்கேன். கேட்டில் இருந்த நாட்டாமை லபோதிபோன்னு கூவிக்கிட்டே ஓடிவந்து படம் எடுக்கக்கூடாதுன்னார். அனுமதி வாங்கி இருக்குன்னதும் 'ஸார்...படம் எடுக்கறாங்க ஸார்' ன்னு கூவுனார். அலுவலக வாசலில் நின்னுக்கிட்டு இருந்தவர், .எடுத்துக்கட்டும், நான்தான் சொன்னேன்னதும் கப்சுப். கொடுத்த வேலையைச் சரியாச் செய்யறார்தானே?
நடந்தது நடப்பது எல்லாத்தையும் வேடிக்கை பார்த்துக்கிட்டு நின்ன கோபாலின் கையில் லட்டு! அட! கொடுத்துட்டானா......
அங்கேன்னு கண் போன திசையில் பார்த்தால் பக்தர் ஒருவர் ஏதோ வேண்டுகோளுக்காக பெட்டிநிறைய லட்டோடு நமக்காக காத்திருக்கார்.
கோவிலில் இருந்து அறைக்கு வர அதே ரெண்டு கிலோமீட்டருக்கு நாற்பது கேட்டார் ஆடோக்காரர். கெஸ்ட் ஹவுஸ் வாசலில் ஆட்டோ பிடிக்கக்கூடாது (பாடம் 1)
என்கூட ஒரு பத்து நாளாவது இருக்கணுமுன்னு ரெண்டு வாரத்துக்கு சென்னைக்கு வந்துட்டாங்க நெருங்கிய தோழி, கவிதாயினி. ட்ராவல்ஸில் சொல்லி வச்சுருந்த வண்டி வந்ததும் ரெண்டு மணிக்குக் கிளம்பிப்போய் தோழி மதுமிதாவின் வீட்டுக்குப்போய் அவர் குடும்பத்தோடு கொஞ்ச நேரம் பேசிட்டு நாங்க மூணுபேருமா வல்லியம்மா வீட்டுக்குப் போனோம்.,
அங்கே இன்னொரு கலைஞருடன் சந்திப்பு. ஆர்ட்டிஸ்ட்! ஸ்கல்ப்சர், ட்ராயிங்.....மட்டுமா? பிலீவ் மீ......... ரிப்ளீஸ் பிலிவ் இட் ஆர் நாட் போல(வே) அந்தரத்துலே இருக்கும் குழாயில் இருந்து தண்ணீர் கொட்டுது. ஆஹா.... வீட்டம்மாவின் கொலுவுக்கு வருசாவருசம் புதுப்பொம்மை ரெடி!
ட்ராயிங் நோட்புக் என் கைக்கு வந்துச்சு. அடடடா....... நம்ம யானை!
படங்களையெல்லாம் க்ளிக்கிட்டு, சக கலைஞரை பாராட்டிட்டு, கேசரியும் மசால் வடையுமா ஒரு வெட்டு வெட்டிட்டு வந்தோம். இதுக்கிடையில் விழாவுக்கான ஏற்பாடுகள் சிலவும்.
சென்னையில் சில கோவில்களில்....... நம்முடைய இப்போதைய அனுபவம் கொஞ்சம் (?) பார்த்துட்டு நகரைவிட்டுக் கிளம்பி ஒரு சுற்றுலா போய் வரலாம். அஞ்சாறுநாட்கள் பயணம்தான். ரெடியா?
