அங்கெ ஒன்னும்தான் இல்லைன்னு படிச்சுப்படிச்சு நம்ம கீதா, சுப்பைய்யா வாத்தியார் போன்ற நண்பர்கள் சொல்லி இருந்தாலும்............... எப்படி? எப்படின்னு பார்க்கணுமுன்னு மனசுக்குள் ஒரு தவிப்பு. இது ஒரு நாப்பது வருசக் கனவு. போதாக்குறைக்கு இது அந்த ஏழு மோக்ஷபுரிகளில் ஒன்னு. ஒன்னுமில்லைன்னாலும் குறைஞ்ச பட்சம் மோக்ஷமாவது கிடைக்கட்டுமேன்னு துணிஞ்சேன். இதோடு ஆறு டௌன். ஒன் மோர் டு கோ:-)
அலஹாபாத்தில் இருந்து 167 கிமீ தொலைவு. எப்படியும் மூணரை மணி நேரத்துலே போயிடலாம் என்றார் ட்ராவல் டெஸ்க்காரர். நல்ல வண்டியா ஒன்னு வேணும். இன்னோவா கொடுங்கன்னு நேத்தே சொல்லி வச்சுருந்தோம்.
பொழுது விடிஞ்சதும் நான் பயணத்துக்குச் சீக்கிரமாத் தயார். மூணரை மணி நேரமுன்னா எப்படியும் பகல் கோவில் மூடும் நேரத்துக்குக் கொஞ்சம் முந்தி போவோம். அப்புறம் சாயங்காலம் நாலுவரை கோவில் திறக்கணுமேன்னு தேவுடு காக்க வேண்டி இருக்கும். கொஞ்சம் நிதானமாக் கிளம்பினால் சரியா இருக்குமுன்னு நம்ம இவர் வலைமேய ஆரம்பிச்சார். ப்ச்...உண்மைதான். அப்ப நமக்கு மட்டும் வலை வேலை இல்லையா என்ன?
அப்படி இப்படின்னு ஒன்பதரைக்குக் கிளம்பிட்டோம். சுல்த்தான்பூர், ஃபைஸாபாத் மெயின் ரோடு. வழியில் சின்னச்சின்ன ஊர்கள். பழவண்டிகள், கடைத்தெருக்கள், கரும்பு லோடு ஏத்திப்போகும் ட்ரக்குகள், ட்ராக்ட்டர்கள், கடுகுப்பூ பூத்திருக்கும் வயல்கள் இப்படிப் பலதையும் கடந்து போறோம். அங்கங்கே கோவில்களும் திடீர் திடீர்னு கண்ணில் படுது. சாலைகள் அழகைச் சொல்லவே வேணாம்:(
ஃபைஸாபாத் பெட்ரோல் பங்கில் ஒரு சின்ன ஸ்டாப். பாத்ரூம் இருக்கான்னு விசாரிச்சால், ஒரு தூணுக்கு மேல் கையைக்கொண்டு தடவி சாவி எடுத்துக் கொடுத்தார் ஊழியர். நாட் பேட். அங்கிருந்து கிளம்பி கொஞ்சதூரத்தில் வலக்கைப்பக்கம் பிரியும் சாலையில் எட்டரை கிமீ தொலைவில் இடது பக்கம் அயோத்யாவுக்குள் போகும் சாலை பிரியுது.
வண்டி நுழைஞ்ச அதே நொடி, பறந்து வந்தது ஒரு பட்டாளம். ஷ்டாப் ஷ்டாப்..........
ஏழெட்டுப்பேர். எல்லாம் சின்னபசங்கதான் பதினைஞ்சு பதினாறு. ஒரே ஒரு நாட்டாமை. இளைஞன், வயசு ஒரு இருபத்திநாலு......... ம்ம்ம்ம்ம்ம்
"எல்லாக் கோவிலையும் சுத்திக் காட்ட 100 ரூ மட்டும் கொடுத்தால் போதும். அதுக்கு மேலே கேட்டா.... இந்த 'வேலை'யை விட்டுருவேன். தாய் மேல் ஆணை. மா கஸம்!!!! "
நமக்கும் முன்பின் தெரியாத ஊரில் ஒரு ஆள் இருந்தாத் தேவலைதானே! 'ஸாத் மே ஆவ்'என்றதும் ஒரு பையன் வண்டிக்குள் ஏறிக்கிட்டான். 16. பெயர்... ஆனந்த். இனி அவனே கைடு பண்ணட்டுமுன்னு நம்ம ட்ரைவருக்குச் சொல்லிட்டோம். அவருக்கும் நிம்மதி ஆச்சு:-)
அலஹாபாதில் இருந்து ஒன்பதரைக்குக் கிளம்பி இங்கே அயோத்யா வந்து சேரும்போது மணி ரெண்டேகால்! முதலில் லஞ்ச் முடிச்சுக்கணும். கோபால் முகம் வாடி இருக்கு. பரபரப்பா இருக்கும் கடைத்தெருவில் சாப்பிட நல்ல இடம் எதுன்னு ரெண்டு பக்கமும் பார்த்துக்கிட்டே மெள்ள ஊர்ந்து போறோம். மணிக்கூண்டு இருக்கும் இடத்தில் (ஓடாத கடிகாரம்) வண்டியை நிறுத்தினோம், ஆனந்த சொல்படி. அட்டகாசமான கட்டிடம்!!!!
கண்ணெதிரே நாலைஞ்சு கடைகள். அதில் பார்க்க சுத்தமா இருந்த ஒன்னில் போய் உக்கார்ந்தோம். நம்ம டிரைவரை ஏற்கெனவே சாப்பிட அனுப்பியாச்சு. ஆனந்தையும் நம்மகூடவே கூட்டிப் போனோம். அவன் விடுவிடுன்னு கடைசி மேஜைக்குப் போயிட்டான். ( சின்னப்பையன் என்பதால் இந்த'ன்')
கடையின் முன்பக்கம் தவா ரொட்டி செஞ்சுக்கிட்டு இருக்காங்க ரெண்டு பேர். ரெண்டு விநாடி தோசைக்கல்லில் போட்டு திருப்பின சப்பாத்தியை அடுத்தவர் கேஸ் அடுப்பில் நேரடியாக் காமிச்சு உப்ப வச்சுக்கிட்டு இருக்கார். ஆளுக்கு ரெண்டு ரொட்டி, கோபாலுக்கு ஒரு தால் சொல்லியாச்சு.
அடுத்த நிமிசமே சாப்பாடு வந்தாச்சு. கூடவே ஓரத்தில், நறுக்கிய கேரட் வில்லைகளும் ஊறுகாய் போல ஒன்னும். இது சந்த்ரா மார்வாடி போஜனாலய். ஸோ... நோ வெங்காயம்:-) (ஆமாம்.மார்வாரிங்க பூமிக்கு அடியில் விளைஞ்சதைச் சாப்பாட்டில் சேர்த்துக்கமாட்டாங்களே.... அப்ப எப்படி கேரட்? ) எங்க சாப்பாடு ஆனதும் திரும்பிப் பார்த்தால் இன்னும் நம்ம ஆனந்த் ஒன்னும் சாப்பிடாமல் சும்மா உக்கார்ந்திருப்பது தெரிஞ்சது.
பில் என்ன ஆச்சுன்னா......... கடை முதலாளி, நம்மை ஒரு விநாடி ஏற இறங்கப் பார்த்துட்டு, அதான் நீங்க ஒன்னுமே சாப்பிடலையே.... என்னான்னு பில் போட ? என்றார். மெனு கார்டு பார்க்க நல்லாவே இருந்துச்சுதான். அதுக்காக........? சொல்லுங்கன்னதும் தயக்கதோடு முப்பது ரூபாய்ன்னார்.
இருநூறை நீட்டி, ஆனந்துக்கு என்ன வேணுமோ அதைக் கொடுங்க. மீதிக்காசை ஆனந்திடம் கொடுத்துருங்கன்னு சொன்னோம். சாப்பிட ஆரம்பிச்ச ஆனந்த், அடுத்த அஞ்சாவது நிமிட் ஆஜர்.
சின்னச்சின்ன வீடுகளும், திண்ணைகளும், கயித்துக் கட்டில்களுமா மக்கள் எளிய வாழ்க்கை. வீதிகள் சந்து சந்தா இல்லாமல் கொஞ்சம் அகலமாவே இருக்கு. சுத்தம்தான் போதாது:( இதுலே அங்கங்கே குரங்கன்மாரின் நடமாட்டமும்.
கண்ணைத் திருப்பிய இடமெல்லாம் குப்பைமேடுகளும், கோபுரங்களுமாக....
முதல் விஸிட். சரயு நதிக்கரை. இதையொட்டிய ஒரு சின்னக் கோவிலில் கும்பிடு. மணற்பரப்பில் ஓலைத்தட்டிகளால் கூரையும் சுவருமா அமைப்புகள். நதிக்கரையில் கொஞ்சம் மக்கள்ஸ். படகுப்பயணம் கூட இருக்கு.
அலங்காரமா இருந்த ஒரு' கேட் 'போட்ட வாசல். உள்ளே ராம்லீலா நடக்கும் மைதானமாம். நம்ம ஆனந்த் கூட ராம்லீலா நாடகத்தில் நடிப்பதுண்டாம். ஓக்கே ஓக்கே.... நடிகன்!!!
ஸ்ரீ ராம் தர்பாருக்குள் போறோம். உள்ளே முற்றத்தில் போய் செருப்பைக் கழட்டலாம். முற்றத்தைச் சுத்தி இருக்கும் வெராந்தாக்களும் வளைவுகளுடன் அலங்காரத்தூண்களும், அங்கங்கே சில சந்நிதிகளுமா இருக்க ரெண்டு மாடிக் கட்டிடம். முற்றத்தின் மேல்பாகம் வலை அடிச்சு வச்சுருக்காங்க. நேயுடூஸின் நடமாட்டம் அதிகம் பாருங்க:-))))
நம்ம ஆனந்த:-)
முற்றத்தின் அடுத்த பக்கம் வராந்தா சுவரோர மண்டபம். மூணு வாசல். நடுவில் ராமரும் சீதையும் உக்கார்ந்திருக்க, பின்னால் மூணு தம்பிகள் நிக்கறாங்க. அடுத்த ரெண்டு பக்கங்களிலும் இதே ஐவர் வெவ்வேற போஸில். மஞ்சளும் ஆரஞ்சுமாய் சாமந்திப்பூ மாலைகள். எல்லோருக்கும், பேக் ட்ராப் உட்பட ஒரே யூனிஃபாரம்.
ஏற்கெனவே நாம் பல வட இந்தியக் கோவில்களுக்குப் போயிருப்பதால் இந்தவகைச் சாமிச்சிலைகள் கண்ணுக்குப் பழகி இருக்கு . நோ அதிர்ச்சி. (ஆனால் சட்னு மனசில் ஒரு பக்திப் பரவசம் வர்றது மிஸ்ஸிங்தான் கேட்டோ!)
அடுத்த ஹாலுக்குள் போனால் சீதாவின் சமையலறை. ஒரு பக்கம் பெரிய பாத்திரங்களும் கடாய்களுமா. பாவம் சீதை. இவ்ளோ சமைக்கணுமா? த்ரௌபதிக்குக் கிடைச்ச அக்ஷயபாத்ரம் இவளுக்குக் கிடைக்கலை பாருங்க:(
ஒரு மேடையில் வனவாசம் போன கோலத்தில் ராமனும் சீதையும். (நீளமுடி ராமனும் பாப் கட் சீதையும்) கூடவே சில சாமியார்களின் படங்கள், ஒரு Gகதை!
தனிப்பட்ட மடத்தின் கோவிலாக இருக்கணும். இதுக்குள் ஆனந்த் வந்து, அடுத்த பகுதியில் ஒரு பாபா (சாமியார் ) இருக்கார். நான் போய் அனுமதி வாங்கிட்டு வந்துட்டேன். அவரை தரிசிக்கலாமுன்னு சொன்னதும் அங்கே போனோம்.
ராமர் கோவிலைக் கட்டியே ஆகணுமுன்னு கடந்த 20 வருசமா ஒரு பொழுது விரதம் இருக்காராம், பாபா. அதுவும் அன்னம்,ரோட்டி எல்லாம் உபேக்ஷிச்சு! தினமும் ஒருமுறை இரவில் பாலும் பழமும் மட்டும். மேடையில் காவி போர்த்தி அமர்ந்திருக்கார் பாபா. சுத்திவர சாமி படங்கள். தலைக்குப் பின்புறச் சுவரில் வரப்போகும் ராம் மந்திர் படம் ஒன்னு இருக்கு. காலை முதல் இரவு வரை அசையாமல் இப்படி உக்காரணுமுன்னா...... பாவம்,இல்லையோ?
பெரியவருக்கு வணக்கம் சொல்லிக்கிட்டோம். லேசா தலை ஆட்டினார். பக்கத்தில் இருந்த சிஷ்யர், ஒரு நோட்டுப்புத்தகம் நீட்டி, இதுலே கோவில் கட்ட எவ்வளவு கொடுக்கப்போறீங்கன்னு எழுதுங்கன்னார். நோட்டை வாங்கிப் பார்த்தால் எல்லாம் அஞ்சிலக்கமா இருக்கு. கோபால் ஒரு மூணு இலக்கம் எழுதிட்டு காசை நீட்டினார்.
சிஷ்யரின் ஏமாற்றம் முகத்தில் தெரிஞ்சது. ஆனந்தின் பக்கம் பார்வையை வீசினாருன்னு நினைக்கிறேன்.
சக்கரத்துலே காத்து சரியா இருக்கான்னு செக் பண்ணினார் ஒருத்தர்:-)
அடுத்து ஒரு ஹனுமன் கோவில் வழியாப் போனோம். வாசலுக்கு ரெண்டு பக்கமும் பக்கத்துக்கொரு காலா வச்சு நிக்கறார். கோவில் மூடி இருக்குன்னு ஆனந்த் சொன்னதை நம்பினேன்.
தொடரும்...:-)
