உண்மைதான் போல! உள்ளுர் மக்களுக்கு தங்கள் ஊரைப்பற்றியும் மாயூரநாதரையும் முக்கியமா அபயாம்பிகையைப் பற்றியும் ரொம்ப ரொம்ப உசந்த அபிப்பிராயம்! பெரிய கோவில் என்றால் இந்த ஊர் மக்களுக்கு மாயூரநாதர் கோவில்தான்! ஊரும் லேசுப்பட்ட ஊர் இல்லை. காசிக்குச் சமமான ஊராம். காவிரி நதியின் கரையில் இருக்கும் ஆறு தலங்கள் காசிக்குச் சமம் என்கிறார்கள். திருவையாறு, திருவெண்காடு, திருவிடைமருதூர், திருவாஞ்சியம், திருசாய்க்காடு வரிசையில் இந்தத் திருமயிலாடுதுறை. இதுக்கு மாயூரம். மாயவரம், மயிலாடுதுறைன்னு பல பெயர்கள்.
மாயவரத்தின் புகழ்பெற்ற மணிக்கூண்டை க் கடந்து போகும்போதுதான் அச்சச்சோ க்ளிக்கலையேன்னு தோணி, க்ளிக் க்ளிக். சரியா வரலை. ஓடும்வண்டியில் இருந்து எடுக்கும் படங்கள் சொதப்பலாத்தான் ஆகிப்போகுது பலசமயங்களில்:(
இந்தப்பக்கங்களில் எல்லாக்கோவில்களுக்குமே வயசு ரெண்டாயிரமுன்னு ஒரே குத்துமதிப்பாச் சொல்றது போலவே இங்கேயும்! நாம் வேணா ஒன்னு செய்யலாம் உனக்கும் வேணாம் எனக்கும் வேணாம்..... 1500ன்னு வச்சுக்கலாம். சரியான காலம் யாருமே எழுதி வைக்கலை பாருங்க:( குலோத்துங்க சோழர்காலத்துலே கோவிலை புனரமைப்பு செஞ்சாருன்னு ஒரு சரித்திரக்குறிப்பு இருக்காம். (அதுவும் இவர் ஒன்னாமவரா, ரெண்டாமரா மூணாமவரான்னு தெரியலை:( தெரிஞ்சவுங்க சொல்லலாம் ப்ளீஸ்) மூணாமவர்ன்னு வச்சுக்கிட்டாலும் அவர் ஆண்ட நாற்பது ஆண்டுகாலத்தில் (கி.பி. 1178-1218) புனரமைப்பு நடந்துருக்கணும். ஆனால் கோவில் இப்பவும் கூட நல்லா ஸ்ட்ராங்காத்தான் இருக்கு.
கிட்டத்தட்ட ஒரு முக்காலரைக்கால் ஏக்கர் விஸ்தீரணம். சரியாச் சொன்னால் 85 செண்ட். கிழக்கு பார்த்த ராஜகோபுரத்துக்கு ஒன்பது நிலை ! பிரமிப்போடு பார்த்துக்கிட்டே நாலேமுக்கால் மணிவாக்கில் கோவிலுக்குள் நுழைஞ்சோம். கோபுர வாசலே கூட அகலம் அதிகமுள்ள கட்டுமானம். இந்த ராஜகோபுரத்துக்கு இந்த வருசம் ஐநூறாவது பொறந்தநாள்! கட்டிய காலம் கிபி 1513-1515, கோவில் குறிப்பு சொல்லுது. கருங்கல் பாவிய பாதை நீளமாப்போகுது கோபுரவாசலின் அடுத்ததிறப்புக்கு வந்தால் மரங்கள் அடர்ந்த வெளிப்பிரகாரம்.
சட்னு கண்ணில் விழும் குளம். இதுவும் நல்ல சுத்தமாவே இருக்கு.நடுவில் குட்டியா ஒரு நீராழி மண்டபம். ப்ரம்ம தீர்த்தம். சாக்ஷாத் ப்ரம்மனே உண்டாக்கியது என்று நம்பிக்கை!
அழகான தூண்களுடன் இருக்கும் முன்மண்டபத்து விதானங்களில் கண்ணைப்பறிக்கும் வண்ண ஓவீயங்கள். ஃப்ரேம் போட்டு வச்சமாதிரி இருக்கு! அதையும் கடந்து நெடும்பாதையில் போறோம். கோவில் உள்பிரகாரத்துக்குள் நுழைஞ்சவுடனே கொஞ்சம் இருட்டா இருந்துச்சு. பவர்கட் கோவிலையும் விட்டு வைக்கலை:(
கண்ணில் பட்ட புள்ளையார் மற்றும் கடவுளர்களைக் கும்பிட்டபடியே மூலவரையும் தரிசனம் செஞ்சோம். அதென்னவோ குருக்கள்கூட யாருமில்லை அங்கே. அபி அப்பா ஊரில் இருந்துருந்தால் நல்ல விளக்கம் சொல்லி இருப்பார். கூட்டமும் அதிகமில்லை. அங்கொன்று இங்கிரண்டு என்றுதான்..... ஏகப்பட்ட சிவலிங்கங்கள்! வழக்கமான சிவன் கோவில்களில் இருக்கும் சமயக்குரவர் நால்வருடன் அறுபத்துமூவர். நடராஜரும் சிவகாமியும், தக்ஷிணாமூர்த்தியும் ...அப்புறம்..... சரியா நினைவுக்கு வரலை:(
அபயாம்பிகைக்குத் தனிக்கோவிலாகவே அமைஞ்சுருக்கு! ப்ரகாரத்தின் மதில்சுவரில் உள்ள வாசல் வழியா இங்கே வந்தோம். சந்நிதி வெளியே கம்பிகேட். உள்ளே கண்ணுக்கு நேரா ரொம்ப தூரத்தில் இருக்காள். கிட்டே போய் தரிசிக்க முடிஞ்சது. ஹம்மா........நிகுநிகுன்னு கொள்ளை அழகு! ஆளுயரம். அபய ஹஸ்தம் காண்பிக்கும் அபயாம்பிகை!
தக்ஷயாகம் நடந்து முடிஞ்சு சிவனின் கோபத்துக்கு ஆளான தாக்ஷாயணியை மயிலாகப்பிறந்து என்னை வழிபடுன்னு சிவன் சபிச்சுட்டார். மயிலாக இருந்து தவம் செய்த ஊர் என்கிறார்கள். நம்ம சிங்காரச் சென்னையிலும் கயிலைக்குச் சமமான மயிலை என்று கோவில்வாசலில் எழுதி வச்சுருக்கும் மயிலாப்பூரும் இப்படித்தான் அம்பாள் மயிலாக பிறவி எடுத்து ஈசனை வழிபட்ட தலம் என்று ஊரின் பெயர்க்காரணம் சொல்லுவதைப்போலவே இங்கும்.
எனக்கு என்ன ஒரு சந்தேகமுன்னா.... தக்ஷனின் யாகத்தில் விழுந்து உயிரைவிட்ட மனைவியின் உடலை சிவன் கையில் எடுத்துக்கிட்டு கோபம் கொந்தளிக்க உலகெல்லாம் அலைஞ்சு திரிஞ்சதையும் அதைக் கண்கொண்டு காணமுடியாத விஷ்ணு தன் சுதர்சனத்தால் உடலை துண்டுகளாக்கியதும். அவை தெறித்து (பண்டைய) பாரதம் முழுசும் சிதறி விழுந்து சக்தி பீடங்களானதும் புராணக்கதையாக படித்தும், அந்த இடங்களில் சிலதைப் பார்த்தும் தெளிஞ்சதால் ஏன் 'தக்ஷயாகம் எபிஸோட்'லே இந்த ஸீன் இன்னொருக்கா நடந்ததா வருது என்பதுதான்.
குடும்பச்சண்டையில் மனைவி தீக்குளிப்பு விவரம் இங்கே பாருங்க நேரம் இருந்தால்!
ஒருவேளை பழைய சண்டையெல்லாம் முடிஞ்சு மறுபடி அம்பாளும் ஈசனுமிணைஞ்சு கயிலையில் நிம்மதியா, ஓய்வா இருந்த ஒரு நாளில்.... வேற எதோ ஒரு நிகழ்வைப் பார்த்து கொசுவத்தி ஏத்தி இருக்கலாம். ஏங்க உங்களை ஒன்னு கேக்கலாமா? இப்படி அன்பா இருக்கும் உங்களுக்கு அப்படி ஒரு கோபம் அன்னைக்கு ஏன் வந்துச்சுன்னு பழசைக்கிளற..... அம்புட்டுதான்..... சும்மாக்கிடந்த சங்கை ஊதுன மாதிரி................ பிடி சாபம். மயிலாகப் போ!
மயில் கோலத்தில் தவம் செய்த மனைவிக்கு தரிசனம் தந்து கூடவே கூட்டிப்போக ஈசனும் மயில் உருவில் வந்தார். மனைவியைக் கண்டதும் ஆனந்தமா தோகை விரித்து ஆடியிருப்பார் இல்லையா? அதான் மயில் ஆடும் துறைன்னு பெயர் வந்திருக்கலாம். அப்புறம் ரெண்டு பேரும் தம் சுய உருவில் இங்கே சுயம்புவாகத் தோன்றிய மாயூர நாதராகவும், அனைத்து உயிர்களுக்கும் அபயம் தந்து காப்பாற்றும் அபயம்பிகையாகவும் இருந்து நமக்கு அருள் புரியறாங்க.
கோயிலில் இருக்கும் முருகன் சந்நிதியை குமரக்கட்டளைன்னு சொல்றாங்க. இது மட்டும் தருமபுரம் ஆதீனத்தின் பொறுப்பிலுள்ளது. பாக்கி இருக்கும் கோவில் பகுதிகள், சந்நிதிகள் எல்லாம் திருவாவடுதுறை ஆதீனத்தின் பொறுப்பிலாம்.
வழக்கமான கோவில் திருவிழாக்கள் மட்டுமில்லாமல் துலாமுழுக்கு ன்னு ஒன்னு இங்கே விசேஷம். காவிரியில் முழுகிஎழுந்து வந்து ஈசனை வணங்கினால் பாவங்கள் அனைத்தும் தீரும் என்று ஒரு ஐதீகம். (வருசாவருசம் சேரும் பாவத்தை வருசத்துக்கு ஒருக்கா முழுகி தீர்த்துக்கலாமுன்னு நினைக்கப்படாது. போன பாவம் போச்சு. இனி புதுப்பாவம் செய்யாம இருக்கணுமுன்னு மனசில் ஒரு தீர்மானம் எடுத்துக்கிட்டு அதன்படி நடக்கணும்,ஆமா!)
துலா முழுக்கு இவ்விதம் புகழ்பெற்றதற்கு புராணக் கதை ஒன்னு இருக்கு. ஒரு சமயம் கண்வ மகரிஷி கங்கையை நோக்கிப் பயணம் செய்கிறார். வழியில் மூன்று பெண்கள் தங்கள் அழகெல்லாம் இழந்து உருக்குலைஞ்ச நிலையில் தள்ளாடி நடந்து வர்றாங்க. யாரு என்னன்னு விசாரிக்கிறார். அவுங்க மூவரும் புண்ணிய நதிகளான கங்கை, யமுனை,சரஸ்வதி! இந்த நிலைக்கு என்ன காரணமுன்னு கேக்கறார். பூலோக மக்கள் , தங்கள் பாவங்களைப்போக்கிக்க எங்களிடம் வந்து நீராடறாங்க. அவுங்களை விட்டுப்பிரிந்த பாவச்சுமை எங்கள் மேல் படர்ந்து எங்களை இப்படி ஆக்கிருச்சு. இதுக்கு பரிகாரம் எதாவது கிடைக்குமான்னு தேடிபோறோமுன்னு அழுதுகிட்டே சொன்னாங்க.
கவலைப்படாதீங்க. இப்படியே போனா பாரதத்தின் தென்பகுதியிலே காவேரி என்னும் புண்ணிய நதி ஒன்னு ஓடுது. அது மயிலாடும்துறை என்ற ஊரைக்கடந்து போகும் இடத்தில் நீங்கள் போய் முழுகினால் உங்கமேல் உள்ள பாவச்சுமை நீங்கிவிடும். சீக்கிரம் போங்கன்னார். துலா மாசம் என்று சொல்லப்படும் ஐப்பசி மாதம் முழுசும் இம்மூவரும் நீராடித் தங்கள் மேல் படிந்திருந்த பாவங்களைப் போக்கிக்கிட்டு,மாயூரநாதரையும் அபயாம்பாளையும் வழிபட்டு, தங்கள் சுய ரூபத்தை அடைஞ்சாங்க. கங்கையினும் புனிதமாம் காவேரின்னு உசத்தியாச் சொல்றாராம் கம்பர்.
இதனால் இந்த ஊரையொட்டி ஓடும் காவேரியில் துலா ஸ்நானம் செய்ய பக்தர்கள் ஏராளமா வர்றாங்க. மாசமுழுவதும் முங்க முடியாதவர்கள், ஐப்பசி மாச அமாவாசையில் முங்கி எழுந்தால் இதே பலன். அமாவாசைக்கு வரமுடியலையா? நோ ஒர்ரீஸ். ஐப்பசி மாசக் கடைசி நாளில் முங்கிருங்க. இதே பலன் கிடைச்சுரும்னு சாஸ்திரங்கள் சொல்லுது. நம்ம மதம் ரொம்பவே ப்ளெக்ஸிபிளா இருக்கு பாருங்க. கடைசிநாள் முழுகுவதை கடைமுழுக்குன்னு கொண்டாடிடறாங்க.
ஐப்பசி மாசம் முழுக்க ரொம்ப பிஸியாப்போயிருச்சு. என் பாவம் தீரவே தீராதான்னு அழுது புலம்பாதீங்க யாரும். இருக்கவே இருக்கு கார்த்திகை மாசம். ஐப்பசி முடிஞ்சு கார்த்திகை பிறக்கும் நாளுக்கும் இதே பலன் உண்டு. இதுக்குப்புண்ணியம் கட்டிக்கிட்டவர் நினைவா இதுக்கு முடவன்முழுக்குன்னு பெயர் வச்சுருக்காங்க.
ஐப்பசி மாசம் காவேரியில் மூழ்க ஆசைப்பட்டு ஃபிஸிக்கலி சேலஞ்சுடுஆன ஒருவர் ரொம்ப தூரத்தில் இருந்து புறப்பட்டு இங்கே வந்துருக்கார். அவர் வந்து சேரவும் ஐப்பசி மாசம் கடை(சி) முழுக்கு நடந்து முடிக்கவும் சரியா இருந்துருக்கு! அடடா.... நமக்குக் கொடுத்து வைக்கலையேன்னு மனம் உருகி இறைவனை வேண்டினார். யாராவது கரைஞ்சால் சிவனுக்குத் தாங்கமுடியாது கேட்டோ! வருத்தப்படாதே, இன்னிக்குக் கார்த்திகை பிறந்துருக்கு. அதே பலன் இன்னைக்கும் எக்ஸ்டெண்ட் பண்ணிட்டேன். இப்பவே நீ போய் முங்கி நீராடு ன்னு அசரீரியா அனௌன்ஸ் பண்ணினார். அவரும் நீராடி தன் பாவங்களைப் போக்கிண்டார்!
இன்னும் வேற வெர்ஷன்களும் உண்டு. அதை இன்னொருசமயம் பார்க்கலாம். மேலே சொன்னதுக்குத்தான் லாஜிக் வொர்கவுட் ஆகுதுன்னு என் தோணல்.
இப்படியாக இத்தனை பெருமைகளை உடைய ஊரை, ஆயிரம் ஆனாலும் மாயூரம் ஆகாதுன்னு உள்ளூர் ஆட்கள் சொல்லிக்கறதுலே என்ன தப்பு??
சரி, வந்து வண்டியிலேறுங்க. இந்தளூர் போகலாம்.
தொடரும்.......:-)
