Quantcast
Channel: துளசிதளம்
Viewing all 1428 articles
Browse latest View live

கிருஷ்ணார்ப்பணம் 1

$
0
0
எதா இருந்தாலும் வீக் எண்டுக்குன்னு நேர்ந்து விட்டுருவோம். இதுலே ஒன்னே ஒன்னு மட்டும் அடங்காது.  'அவுங்க ' சனி ஞாயிறு வேலை செய்ய மாட்டாங்க. அச்சானியமா இருக்குன்னு நினைச்சுக்குவீங்கன்னுதான் பெயரைச் சொல்லலை:-)

 இந்த வீக் எண்டுக்கு ரெண்டு ஈவெண்ட். 

1. இந்திய சுதந்திர தின விழா.

 சனிக்கிழமை மாலை 6 மணிக்கு டின்னரோடு ஆரம்பிச்சது. பூரி, சாதம், உருளைக்கிழங்கு கறி, பீன்ஸ் கூட்டு,  ரெய்த்தா, அப்பளம். ஊறுகாய், கேசரி, காஃபி, டீ, குளிர் பானங்கள் இப்படி ஒரு மெனு. உள்ளூர் ஸ்வாமி நாராயண் கோவில் அடுக்களையில் தயார் செய்யப்பட்டு வந்து இறங்குச்சு. கடவுளின் ஆசிகளோடு வந்த சாப்பாட்டை முடிச்சோம். எட்டு மணிக்கு மேடை நிகழ்ச்சிகள் ஆரம்பம்.




 இந்த ஆண்டு பெண் ஜனாதிபதி எங்களுக்கு. ஃபிஜி இந்தியர் ப்ரமீளா. தேர்தல் நடந்தப்பத்தான் தெரிஞ்சது மூணு வருசமா க்ளப் கதிகேடாப் போயிருந்துச்சுன்னு:(

 காரணம் ரொம்பவே சிம்பிள்... சாட்டை எடுக்கஇண்டியன் க்ளப்பின் தந்தை நாட்டில் இல்லை:(



 நிலநடுக்கம் காரணம் மக்கள் மன அழுத்தத்தில் ஆழ்ந்துட்டாங்க. நோ மோர் சோஸியலைஸிங்:( ஊரை விட்டு வேறு ஊர்களுக்கும் நாட்டுக்கும் புலம் பெயர்ந்துட்டாங்களாம்!

 ஹேய்.... ஜுஜுபி..... நொண்டிச் சாக்குகள்! 


 புறக்கணிப்புக்கு எல்லாத்தையும் விட முக்கியமான ஒரு காரணம்.....

 இந்தியனாக இருக்கணும் என்றால் நாட்டுக்கு சிறப்பு சேர்க்கும் குண அம்சமான அங்கிங்கெனாதபடி பாதாளம் வரை வேர்பரப்பி நிற்கும் ஒரு சமாச்சாரத்தில் எந்தவகையிலாவது சம்பந்தப்பட்டு இருக்கணும். இருந்தாங்க..... :(

 பொறுக்க முடியாமக் கேள்வி கேட்டவங்களுக்கு எந்த ஒரு தனி மரியாதை கிடைக்குமோ அது(வும்) கிடைச்சது. அதனால் கொந்தளிச்சுப்போய்க் கிடந்தாங்க.

க்ளப்பின் எந்தையும் தாயும்  மகிழ்ந்து குலாவி ..............


 ஃபாதர் ஆஃப் த க்ளப் திரும்பி வந்ததும் ரெண்டு குழுவும் தனித்தனியா வந்து கண்டுக்கிட்டு ஒப்பாரி எல்லாம் வச்சாங்க. ஃபாதரும், மதரும் ரெண்டு பக்கத்தையும் நின்னு கேட்டு உண்மை எதுன்னு கண்டு பிடிச்சதும்....

 கட்டாயம் இதுக்குப் புத்துயிர் கொடுக்கலாமா? இல்லை போஸ்ட்மார்ட்டம் பண்ணிக்கிட்டு ஒழியட்டுமுன்னு விட்டுட்டு இன்னொரு குழந்தையை பெத்துக்கலாமான்னு உக்கார்ந்து யோசிச்சு, கடைசியா ஒரு முறை ஐ யூ ஸியிலே இருப்பதைக் கவனிச்சு உயிர் ஊட்டிப் பார்க்கலாம். பொழைச்சு எழும்போல இருந்தால் மேற்கொண்டுன்னு...... மீட்டிங் ஒன்னு போட்டால் 100 குடும்பங்களை விட்டுட்டுப்போன (குடும்பத்துக்கு ரெண்டு பேர் என்று வச்சாலும் 200 பேர் இருக்க வேண்டிய) இடத்தில் எண்ணி மூணே மூணு அங்கத்தினர் ஊழல் கட்சியிலும், எதிரிகளாக ரெண்டே ரெண்டு பேரும் வருகை தந்தாங்க! இன்றைக்கு ஏ ஜி எம் நடத்தனுமுன்னு ஏற்பாடு! கிழிஞ்சது போ:( 

 மூணு வாரத்தில் எல்லா அங்கத்தினருக்கும் தகவல் அனுப்பி இன்னொரு கூட்டத்தை ஏற்பாடு செய்யுங்கன்னு ஃபாதர் சொல்லிட்டார். அங்கத்தினர் லிஸ்ட் எங்கேன்னு கேட்டால்..... ஊழலோடு சேர்த்து அதையும் ஸ்வாஹா பண்ணி இருக்காங்க:(

 நண்பர்கள் லிஸ்ட் அவுங்கவுங்ககிட்டே இருக்கும் பாருங்க அதை வச்சு எல்லோருக்கும் தகவல் அனுப்பி மூணு வாரம் முன்னறிவிப்பெல்லாம் விதிப்படி கொடுத்து இன்னொரு ஏ ஜி எம் கூட்டம் ஏற்பாடாச்சு. கொஞ்சம் முன்னேற்றம்!!!   கடந்த ஆண்டுகளில் கிடைச்ச மரியாதையை நினைச்சு பழைய அங்கத்தினர் யாரும் தலை காட்டலை:(    ஆனால் புதுசா நாலு பேர் வேடிக்கை பார்க்க வந்துருந்தாங்க.

 சட்ன்னு அவுங்களைப்பிடிச்சுப்போட்டு பழைய இந்தியப் பெருச்சாளிகளை உள்ளே வரவிடாமல் சங்கத்தைக் காப்பாத்த ஃபிஜி இண்டியர் ஒருவரை ஜனாதிபதி ஆக்கினோம்:-) அப்படியும் ஒரு பெருச்சாளி வேற ஒரு போஸ்ட்டில் இடம் பிடிச்சாச்சு. சரி. போகட்டும் திருந்துமான்னு பொறுத்துப் பார்க்கலாம். வழக்கமா ஏழு பேர் நிர்வாகிகள். ஆனால்..... நாலு பேர் இருக்கும் க்ளப்புக்கு ஏழு நியாயமா? மூணே ஜாஸ்தி இல்லையோ?

 1997 சுதந்திர தின பொன்விழா ஆண்டுதான் நம்ம க்ளப் ஆரம்பிச்சு முதல் விழாவைக் கொண்டாடுச்சு. 15 வருசத்துக்குப்பின் இந்த சுதந்திர தின விழாவில் மறு உயிர். புது ஜனாதிபதி நல்லா ஊக்கத்தோடு உழைச்சு ஆட்களைச் சேர்த்துருந்தாங்க. பயந்துக்கிட்டேதான் போனேன்...... தனியா உக்கார்ந்து சாப்பிடும்படி ஆகிருமோன்னு!

 இந்த வருசத்தின் முதல் ஒன்று கூடல் என்பதால் இதையே புது அங்கத்தினர்களைக் கவர்ந்திழுக்கும் முயற்சியா வச்சுக்கணும். நம்மாட்களுக்கு இலவசமாக் கிடைச்சால்தான் வரவும் செய்வாங்க. இன்றைக்கு மெம்பர்ஷிப் எடுத்தால் எல்லாம் இலவசம். நல்லா ஒர்க்கவுட் ஆகிருச்சு:-))))

 நாங்களும் ஒரு அஞ்சு பேரைப்பிடிச்சுப் போட்டோமுன்னு வையுங்க:-)))))

 கூடியவரை மேடையை அலங்கரிச்சுக்கிட்டு இருந்தாங்க. இப்போதைக்கு இது யதேஷ்டம்:-)

 கடவுள் வணக்கம், கஸல் பாடல்கள். ஃபாதரின் சிறப்புரை, எத்னிக் கவுன்ஸில் அங்கத்தினரின் பேச்சு, ரெண்டு நடனம் இப்படி நிகழ்ச்சிகள். மேடை நிகழ்ச்சியின் கடைசியில் இந்திய தேசிய கீதம்,  கஸல் குழுவினரால் பாடப்பட்டது. ராகம் வேற ஒரு வர்ஷன்னு வச்சுக்கலாம். இசைக்குழு முழுசும் ஃபிஜி மக்கள்ஸ்.




 நம்மூர் ஹரே க்ரிஷ்ணாவில் சாமி பாட்டுகளையெல்லாம் வழவழா கொழகொழான்னு பாடுவது நினைவுக்கு வந்துச்சு. வெள்ளைக்கார நாவில் பெங்காலிமொழி படும் பாடு:-)

 எனெக்கென்னவோ...வந்தேமாதரம் பாட்டுதான் தேசிய கீதமா இருக்கணும் என்ற விருப்பம். 

 அப்புறம் டான்ஸ் ஆரம்பிச்சது. தாண்டியா! ஆக மொத்தம் இங்கே ரெண்டே வகைதான். பஞ்சாபிகள் ஆக்ரமிச்சால் பல்லே பல்லே  பாங்க்ரா இருக்கும். குஜராத்திகள் என்றால் தாண்டியா.

 நமக்கு ஒரு விரோதமும் இல்லை. எப்படியோ ஜனங்கள் ஆடிப்பாடி மகிழ்ச்சியா இருந்தாச் சரி.

  அனைவருக்கும் இந்திய சுதந்திர நாளுக்கான இனிய வாழ்த்து(க்)கள்.

கிருஷ்ணார்ப்பணம் 2

$
0
0
ஏண்டா க்ரிஷ்ணா, ஒரு பேச்சுக்கு ,   க்ரிஷ்ணா நீ பேகனே ..... பாரோ.......ன்னு சொன்னதை நிஜமுன்னு நம்பிக்கிட்டு இந்த ஓட்டம் ஓடி வரலாமோ? ஆவணி மாசம் க்ருஷ்ணபக்ஷம் அஷ்டமி திதி, ரோஹிணி நட்சத்திரம் எல்லாம் கூடிவரும் வேளையில் பொறந்தவனுக்கு அப்படி என்ன அவசரமோ?

 சிலசமயம் அப்படித்தானாம். ஆடிமாசம் முடியலை. அதுக்குள்ளே ஸ்ரீ கிருஷ்ண ஜயந்தி வந்துருக்கு. ஒரு குழுமத்தில் இதைப்பற்றிப் பேசிக்கிட்டு இருந்தப்ப, ஆவணி மாசம் ரெண்டு அமாவாசை வருது. அது மலமாதம்ன்னு சொன்னார் ஒருத்தர். அதனால்தான் ஆடியிலேயே ஆவணிஅவிட்டம். கோகுலாஷ்டமி வந்துருதாம். அடப்பாவமே.... இந்த ஆவணிக்கு புத்தி ஏன் இப்படிப்போச்சு:( சொன்னவர் தொழில்முறை ஜோதிடர் என்பதால்....... நான் வாயைத் திறக்கலை:-)

 இந்த இடும்பிக்கு எல்லாம் சரியா அமையலை. அதனால் செப்டம்பர் எட்டுதான் கொண்டாடப்போறேன்னு முடிவு எடுத்துட்டா. அதான் தனிவழிக்காரியாச்சே! அதுக்காக கோவிலில் கொண்டாட்டம் இருக்கு வான்னு வீடு தேடிவந்த அழைப்பிதழை உதறமுடியுதா?

 இதுதான் இந்தவார வீக் எண்ட் ஈவண்ட் # 2

 விடாமல் ஒரு மழை! நம்மூரில் நிலநடுக்க அழிவுகளை இன்னும் சரியாக்கலை. அதுக்குள்ளே கெட்டகுடியே கெடுமுன்னு மழையும் வெள்ளமும். வீட்டைவிட்டு சாலைகளுக்கு வந்துறாதீங்கன்னு அரசு போக்குவரத்துத்துறை சொல்லுது.

 யோவ்..... க்ரிஷ்ணன் பொறந்தப்ப யமுனையில் வெள்ளமைய்யா. அதான் இப்படி. அதுக்காக நாங்க கூடையிலே வச்சுத் தலையில் சுமந்து காருலே கொண்டு போவோமோன்னு நினைக்காதே!

 நல்ல பொடவையாக் கட்டமுடியலைன்ற கவலையோடு கோவிலுக்குப்போய்ச் சேர்ந்தோம். கோலாகலமா இருக்கு. ஆனால்.... கூட்டம் கம்மி. மழை காரணமோ?

 நல்ல க்ரீடங்கள் வச்சு அலங்கரிச்சு இருந்தாங்க. நாலு செட் சாமி சிலைகள் இருக்கு. அதுலே ரெண்டு பக்கக் கடைசியில் இருக்கும் சந்நிதிகளில் இருக்கும் சாமிகளுக்கு ட்ரெஸ் சேஞ்ச் கிடையாது.

 அக்‌ஷர்புருஷோத்தம், ஸ்வாமி நாராயண்  என்று அவர்களும், நர நாராயணர்கள் என்று நானும் சொல்லிக்கும் நடுச்சந்நிதி பாய்ஸ், ராதா கிருஷ்ணரா இருக்கும் தம்பதிகள் இந்த நால்வருக்கும்தான் விதவிதமான ஆடை அலங்காரங்கள்.

 சனிக்கிழமைகளில் கோவிலுக்குப்போகும்போது இன்னிக்கு என்ன நிற உடையாக இருக்குமுன்னு நினைச்சுக்கிட்டே போவேன். நான் நினைச்ச நிறம் (கிட்டத்தட்டன்னு வச்சுக்கலாம்) இருந்துச்சுன்னா ஒரு தனி மகிழ்ச்சி.

 இந்த நாலுபேரில் மூணு பாய்ஸ்க்கும் ஒரே மாதிரி ஒரே நிறத்திலும். ராதாம்மாவுக்கு மட்டும் ஏறக்கொறைய அதே நிறத்தில் புடவையுமா இருக்கும். ராதாம்மா சில நட்களில் கையில் ஹேண்ட்பேக் கூட வச்சுருப்பாங்க:-)

 இந்தக்கோவிலில் எங்களுக்குப் பிடிச்சது ஒன்னுன்னா அது டிஸிப்ளின். எல்லாம் சரியான நேரத்துக்கு நடக்கும். பூஜை முடிஞ்சவுடன் வயசு வித்தியாசம் இல்லாம எல்லா ஆண்களும் வேக்குவம் க்ளீனர் வச்சு தரை, சுவர்கள் எல்லாம் சுத்தப்படுத்துவாங்க.

 பெண்கள்தான் லக்ஷ்மண ரேகைக்கு இப்பால் உட்காரணுமே. அந்தக் கடுப்பில் நான் நல்லா சுத்தம் செய்யட்டும். ஆண்களுக்குன்னு முன்மரியாதை கிடைக்குதுல்லேன்னு இருப்பேன்:-)

 இன்னொரு பிடிச்ச விஷயம் ஹாலில் நாற்காலிகள் போட்டு வச்சுருப்பாங்க. அதுலே உக்கார்ந்து சாமி கும்பிடலாம். ஆரத்தியின்போதுகூட எழுந்திரிக்க வேணாம்!!!!

 கொஞ்சநாளா சதுர்மாஸ்ய விரதத்தில் ஆரம்பிச்சு வழக்கமான சந்நிதிகளைத்தவிர சின்னதா ஒரு தாற்காலிக சந்நிதி அலங்கரிச்சு வச்சுருக்காங்க.நல்ல ஸ்டேண்டு போட்டு அதில் ஒரு சின்ன ஊஞ்சல். குட்டியா ஒரு சிலை அதுலே வச்சுருப்பாங்க. ஒரு மணிக்கயிறு ஊஞ்சலோடு இணைஞ்சுருக்கும். நாம் அதை இழுத்து லேசா ஊஞ்சலை ஆட்டலாம்.

 பண்டிகைகள் கொண்டாட்டங்கள் தவிர காலத்துக்கேற்ப, வசிக்கும் நாட்டுக்கு ஏற்ப சில பல அலங்காரங்களும் செய்வதுண்டு.

 ஒலிம்பிக் விளையாட்டுகள் தொடங்குன சமயம் லண்டன் 2012 மஸ்காட் ரெண்டு பக்கமும் வச்சு கலந்துகொள்ளும் நாடுகளின் கொடிகளை வரிசையா வச்சு அலங்கரிச்சு இருந்தாங்க. எல்லாம் இளைஞர்களின் கை வரிசை! அழகா இருந்துச்சு!

 எது செஞ்சாலும் அழகா அம்சமா மனப்பூர்வமா செஞ்சுடறாங்க.போனமாசம் ஒரு ரத யாத்ரா விழாவுக்குப்போனப்ப குதிரைகள் பூட்டுன தேரில் சாமி நம்ம பக்கமெல்லாம் கூட வந்தார். அவருக்குப் பெண்கள் நோ அப்ஜெக்‌ஷன்:-) ரிமோட் கண்ட்ரோலில் ஓடும் கார் பொம்மையை வாங்கி அதன்மேல் தேர் அலங்கரிச்சு ரெண்டு குதிரைகளையும் இணைச்சுட்டாங்க. சும்மாச் சொல்லக்கூடாது. கோவிலுக்கு வரும் இளைஞர்கள் குழு உக்காந்து நல்லாவே யோசிக்குது!


 நாங்கள் கொஞ்சம் லேட்டாத்தான் போனோம். பெரிய திரையில் ஸ்ரீ ப்ரமுக் ஸ்வாமி மகராஜ் கண்ணன் பிறந்ததைப் பற்றிச் சொல்லிக்கொண்டிருந்தார். வெண்ணெய்த் தாழியைக் கவிழ்த்த கண்ணன் திரையில்! ஹால் முழுசும் பலூன்களைக் கட்டித்தொங்கவிட்டு, நடுவில் சின்னதா ஒரு உறி. அதுலே வெண்ணெய் (சேர்த்த சாக்லெட்ஸ்) வச்சுருந்தாங்க. உறியடி உற்சவம்போல மனிதக்கோபுரங்களின் மேல் குழந்தைகளை ஏற்றி வெண்ணெய் எடுத்து எல்லாருக்கும் பகிர்ந்துதரும் சீன் நல்லாவே ஒர்க்கவுட் ஆச்சு. பலூன்களைஎல்லாம் குத்தி ஒடைச்சதும் மலர்மாரி பொழிஞ்சது:-)))))

வரப்போகும் சுதந்திர தினத்துக்காக எல்லோரும் எழுந்து நின்னு இந்திய தேசிய கீதம் பாடினோம். பெரிய திரையில் இந்தியக்கொடி பறக்க நல்ல துள்ளல் இசையுடன் அருமையாகவே பாடப்பட்டது. அது என்னமோ தெரியலை எப்பவும் அந்த ஜயஹே வரும்போது மனசுக்குள்ளில் ஒரு கசிவு:(

 நடுக்கும் குளிரைப் பொருட்படுத்தாமல் சின்னக்குழந்தைகள் எல்லோரும் விழாவை முன்னிட்டு அழகா உடுத்திக்கிட்டு வந்துந்தாங்க. இப்பெல்லாம் பசங்க பொறக்கும்போதே ரிமோட் கண்ட்ரோல் எப்படி ஆபரேட் செய்யணுமுன்னு தெரிஞ்சுக்கிட்டுத்தான் பொறக்கறாங்கன்னு எனக்கு ஒரு தோணல். மாடர்ன் சமாச்சாரங்கள் எல்லாம் அதுகளுக்கு அத்துபடி. அழகா இருக்குன்னு ஒரு குழந்தையை கெமெராவில் ஃபோகஸ் செஞ்சதும். நின்னு போஸ் கொடுத்துட்டு க்ளிக்கினவுடன் படம் எப்படி வந்துருக்கு கிட்டே வந்து எட்டிப் பார்த்தது ஒரு பிஞ்சு:-))))

ஆஜ்கல் பச்சோ லோக் பஹூத் ஆகே ஹை!! 


 ஆரத்தி முடிஞ்சதும் வழக்கம்போல் விருந்து. வயித்துக்குக் கேடு வராமல் ஒரு சாப்பாடு. பூரி, சாதம், ஆலூபைங்கன் கறி, பச்சைப்பட்டாணி கூட்டு, அப்பளம், ஊறுகாய், இன்றைய இனிப்பு பாதாம் கீர்!

 நண்பர்களை சந்திக்க இப்படிக் கோவில் விசேஷங்கள்தான் உதவுது. இல்லைன்னா இந்தக் குளிர்காலத்தில் ஹைபர்னேட் பண்ணும் ஜீவன்கள் நாங்கள்! (இன்னும் 17 நாட்களில் குளிர்காலம் முடியப்போகுது காலண்டர் கணக்குப்படி)

 கோவில் நிதிக்காக இப்பெல்லாம் கொஞ்சம் பாட்டு சிடிகள் புத்தகங்கள், பூஜைக்காக ஊதுபத்தி போன்ற சில பொருட்கள் விற்பனைகள் முக்கிய (மக்கள் கண்டிப்பா வருவாங்கன்னு தோணும் )நாட்களில் நடக்குது. ஒரு மேசையில் பரத்தி வச்சுருப்பாங்க.

 அங்கே தமிழ்ப்புத்தகங்கள் இருக்குன்னு கோபால் கண்டுக்கிட்டு வந்து சொன்னார். பாய்ஞ்சேன்.

தமிழில் இருந்த ரெண்டு புத்தகங்களையும், நித்யகான் என்று ஆரத்திப்பாட்டுகள் உள்ள ஹிந்தி புத்தகம் ஒன்றும் வாங்கினேன்.

 1: 101 அமுதமொழிகள் என்று ஒரு புத்தகம். மொழியாக்கம் முனைவர் ல.சம்பத் குமார் M.A. M.Phil, Ph.D இணை மொழிபெயர்ப்பு P..பானுமதி M.A.. ஸ்ரீ ப்ரமுக் ஸ்வாமி மஹராஜ் குஜராத்தியில் சொன்னதை தமிழில் அச்சுப்போட்டுருக்காங்க.

 சாம்பிள்: இறைவனின் சக்தி,

 சிலர் ஆளும் சக்தியையும் சிலர் பணத்தின் சக்தியையும் சிலர் ஆன்மீக சக்தியையும் பெற்றிருக்கலாம்.ஒவ்வொருவரும் தங்களின் சக்தி குறித்தே பேசுகின்றனர்..ஆனால் இவை எல்லாவற்றிற்கும் மேல் இறைவனின் சக்தி உள்ளது.

 2; சிக்ஷாபத்ரியின் முத்துக்கள். மொழி பெயர்ப்பு மேற்படியாளரே. முனைவர். ல. சம்பத் குமார். அன்பளிப்பு டாக்டர்..நா.மகாலிங்கம் தலைவர் சக்தி குழுமம் கோவை.    ஸ்வாமி நாராயண் சம்ப்ரதாயத்தின் நியமங்களையும், சாதாரண மனிதருக்குள்ள நியதிகளையும் இதில் சொல்லி இருக்காங்க.

 எப்படியோ ஓசைப்படாம தமிழ் நியூஸிவரை வந்துருக்கு!

 எல்லாம் க்ருஷ்ணார்ப்பணம்:-))))

அடடா..... நம்ம மெரினாவில் இப்படி வச்சா நல்லா இருக்காது? (ப்ரிஸ்பேன் பயணம் 26)

$
0
0
மதியச் சாப்பாடு தேடலாமேன்னு,   சர்ச்சுக்கு நேரா சனங்க போய் வந்துக்கிட்டு இருந்த இடைவெளியில் புகுந்தேன். இது தலைமைத் தபாலகத்தை ஒட்டியே இருக்கு. கோட்டைகளில் இருப்பதைப்போல அழகா ஆர்ச் வச்ச பாதை.


 பாதசாரிகள் கடக்க வச்சுருக்கும் க்ராஸிங்கில் பச்சை மனுஷன் வந்ததும் நம்பி கடக்கலாம். எங்கே கவனிக்காமல் போயிருவோமோன்னு டப்டப்ப்ன்னு மெஷின்கன் சுடுவதுபோல ஒரு சத்தம் வேற இந்த ஊரில் வருது. எங்க நியூஸியில் எல்லாம் சைலண்டே!


 வருத்தத்தோடு குறிப்பிடும் ஒரு சமாச்சாரம்....இந்தியாவில் வண்டி ஓட்டிகள் பெடஸ்ட்ரியன் க்ராசிங்கில் பாதசாரிகளுக்காக வண்டியை நிறுத்துவதே இல்லை:( பச்சைமனுஷனை நம்பி நாம் சாலையில் இறங்கினால் சிகப்பு மனுசனா ஆஸ்பத்திரிக்கு போகவேண்டி இருக்கும். சண்டிகரில் இன்னும் ஒரு விசேஷம், எல்லா ரவுண்டபௌவுட்களிலும் ஒரு ஆம்புலன்ஸ் வேற தயாரா நிக்கும். ரைட் ஹேண்ட் ரூல்ஸ் எதுவும் இல்லை. நாலாபக்கங்களிலும் ஒரே சமயத்தில் பாய்ஞ்சு இடிச்சுத்தள்ளிக்கிட்டு வரும் வண்டிகள் முட்டிமோதி யாராவது அடிபட்டா தூக்கிக்கிட்டு ஓடுவாங்களாம்! 

 சரி. ஆர்ச் வாசலுக்கு வருவோம். இது குவீன் தெருவில் வந்து சேருது. எதுத்தாப்போல பரந்த புல்வெளி. போஸ்ட் ஆஃபீஸ் சதுக்கம்.அதுக்கடியிலே ஃபுட் கோர்ட். பத்துப் படிகளோடு எஸ்கலேட்டர் போட்டு வச்சுருக்காங்க. நோகாம நோம்பு கும்பிடலாம்.



 சுத்திவரக் கடைகளும் நடுவிலே இருக்கைகளுமாப் போட்டு வச்சுருக்காங்க. மேலே வட்டமான சீலிங் கண்ணாடி வெளிச்சம் கொண்டுவருது. எல்லா துரித உணவகங்களும் இடம் புடிச்சு உக்கார்ந்துருக்கு. ரெண்டுமூணு இந்தியக்கடைகளும் 'கர்ரி' ' வித்துக்கிட்டு இருக்கு. ஒரு கடையில் 12 மணிக்கு முன்னால் வாங்கினால் சிக்கன் கர்ரி அஞ்சே டாலராம். முழுசா எல்லா கடைகளையும் சுத்திப்பார்த்துட்டு ஸப்வேயில் ஒரு ஆறு இஞ்ச் வாங்கி முழுங்கிட்டு அடுத்த பக்கத்தில் வெளியே வந்தேன். இது அடிலெய்டு தெரு.

 பரந்து கிடக்கும் புல்தரையின் நடுவில் வட்டமான தடுப்பு. இதுக்குள்ளில் இருக்கும் கண்ணாடிதான் அடித்தளத்தில் இருக்கும் ஃபுட் கோர்ட்டின் நடுவில் இருக்கும் கண்ணாடி ஸீலிங். லஞ்சு ப்ரேக் சமயமானதால் ஏகப்பட்ட கூட்டம். ஓய்வா உக்கார்ந்து சாப்பிட்டுக்கிட்டு அரட்டையடிச்சுக்கிட்டு இருந்தாங்க. மக்களுக்கு உற்சாகம் கொடுக்கத் தெருப்பாடகர்கள் வேற பஸ்கர் என்ற பெயரில். ஒருமாதிரிப் பிச்சைன்னும் வச்சுக்கலாம். நாம் விருப்பப்பட்டுக் காசு போட்டால் சரி. போடலைன்னா அதுக்காக நம்மூர் போல சொற்களால் குதறமாட்டாங்க.

 எனெக்கன்னவோ இந்த பஸ்கர்களைக் கண்டால் கொஞ்சம் பிடிக்காதுதான். நம்மூரில் பொழைக்க வேற வழி இல்லைன்னாதான் பிச்சை எடுப்பாங்க. இங்கெ என்னன்னா எதாவது கலையைக் கத்துக்கிட்டு அதை தெருவில் காட்சிப்படுத்தறாங்க. எங்கூர்லே வருசாவருசம் ரெண்டு வாரத்துக்கு பஸ்கர்ஸ் ஃபெஸ்டிவல் வேற நடக்கும். உலகெங்குமிருந்து தங்கள் திறமைகளைக் காமிக்க பஸ்கர்ஸ் வர்றாங்க. 

 பல சமயங்களில் சூப்பர் மார்கெட் வாசலில் சின்ன, பள்ளிக்கூடப் பசங்க ஒரு வயலினையோ, ரெக்கார்டரையோ வச்சுக்கிட்டு கீங் கீங்ங்கிங்கீன்னு நம்ம காதைத் துளைச்சுக்கிட்டு வாசிப்பாங்க. ஃபண்ட் ரெய்ஸிங்காம். ஸ்கூல் கேம்ப் இப்படி எதுக்காச்சும் போக! 

 எனக்குப் பெற்றோர்கள் மேல்தான் கோபம் பொங்கும். வெல்ஃபேர் டிபார்ட்மெண்டுலே விஷயம் சொல்லிக் கேட்டால் காசு கிடைக்கும். இல்லைன்னா பள்ளிக்கூடமே கூட காசு போட்டுப் பிள்ளைகளைக் கூட்டிப்போகும். பள்ளிக்கூட முதல்வரிடம் ரகசியமாச் சொன்னால்கூடப் போதும். எத்தனையோ பிள்ளைகளுக்கு பகலில் ஸ்கூல் லஞ்ச் கூட எங்கிருந்து வருதுன்னு ரெண்டாம்பேருக்குத் தெரியாம பரிமாறப்படுது. இப்படி இருக்கும் நாட்டில் பிள்ளைகளை சூப்பர்மார்கெட் வாசலில் நிறுத்துவதா? ஏற்கெனவே சோஸியல் வெல்ஃபேர் சிஸ்ட்டத்தில் இருக்கும் பெற்றோர்கள்தான் இப்படியெல்லாம் செய்யறாங்க:( 

 வெல்ஃபேர் சிஸ்டத்தை ஏமாத்தி மக்கள் வரிப்பணத்தைக் கூசாமல் வாங்கிக்கும் பலரில் நம்மாட்கள் கூட இருக்காங்க. அதெல்லாம் தனிக்கதை. என்னமோ போங்க:( 



 இந்த அண்டர்கிரவுண்ட் ஃபுட் கோர்ட் பார்த்ததும் சென்னை மெரினாவில் இப்படி ஒன்னு அமைச்சுட்டா.... கடற்கரையின் அழகு பாழாகாமல் இருக்குமே. சனம் தின்னு முடிச்ச குப்பைக்கூளம் எல்லாம் நெடூக பரந்த கடற்கரை மணலில் பறந்து சுற்றுப்புறத்தைப் பாழாக்காதேன்னு இருந்துச்சு. இப்ப ஒரு மூணு வருசம் முந்தி மெரீனாவை அழகு படுத்தறோமுன்னு கட்டி வச்சுருக்காங்க பாருங்க. அதுக்கடியிலேயே ஃபுட் கோர்ட் வைக்கலாம். நினைச்சுப் பார்க்கப்பார்க்கப் பெருமூச்சுதான்.

 மெரீனா எவ்வளவு அழகான நீளமான கடற்கரை! இப்படிப் பாழடிச்சு வைக்கும் சனத்தை என்னன்னு சொல்ல:(


 நம்ம வங்கிக்கட்டிடம் ப்ரமாண்டமா நிக்க அதுலே ஒரு நவீன சிற்பம். என்ன சொல்லுதுன்னு தெரியலை. உன் மார்பெலும்புவரை தோண்டிப் பார்த்து இருக்கும் காசை எடுத்துவோம் என்பதா? இல்லை நெஞ்சு பிளந்தாலும் உங்களுக்கு சேவை செய்வோம் என்பதா? இல்லையாம். வங்கி எப்படி தொழில்துறைக்கு உழைக்குதுன்னு காமிக்குதாம். நெஞ்சாங்கூட்டில் நீயே நிற்கிறாய்............





குவீன்தெரு டேவிட் ஜோன்ஸுக்குள் நுழைஞ்சு முந்தாநாள் கோல்ட் கோஸ்ட்டில் பார்த்து வச்ச காலணி, இங்கே  என் சைஸுக்குக் கிடைக்குதான்னு நேத்து நோட்டம் விட்டு ரெண்டு அளவுகளில் ரெண்டு ஜோடி எடுத்து வைக்கச் சொன்னதைப் போட்டுப் பார்த்தேன். (டிப்ஸ்: ஷூ வாங்கும்போது சாக்ஸ் போட்டுக்கிட்டு செக் பண்ணிக்கணும். )நேத்து செருப்புப் போட்டுருந்ததால் காலுறை  'கையில்'  இல்லை:-)))))


ஷனால் கடைக்கு வெளியே வரிசைகட்டி நிற்கும் கூட்டம். உள்ளே என்ன ஆடுது? விசாரிச்சால் ஸேல் போட்டுருக்காங்களாம்.  நவ்வாலுபேராத்தான் உள்ளே விடுவதால்  வரிசையில் காத்து நிக்கறாங்களாம்.  இதுலே எல்லாம் யானை விலை. ஆனாலும் ச்சும்மா உள்ளே போய்ப் பார்க்க இம்மாம் கூட்டமான்னு இருக்கு!    காசு இருக்கப்பட்டவன் எதையெல்லாம் வாங்குவான்னு தெரிஞ்சுக்கவும் ஒரு கூட்டம் தயாரா இருக்கு பாருங்க!








 காலுக்குச் சரியா இருந்ததை வாங்கிக்கிட்டு கொஞ்சம் மற்றகடைகளைச் சுத்திவந்தப்ப,  டீக்கடை ஒன்னு கண்ணில் பட்டது. அழகழகான பீங்கான் கப் அண்ட் சாஸர்கள், டீ செட்டுகள் ன்னு அமர்க்களமா இருக்கு. ஏழெட்டுவகை சாயா போட்டு வச்சுருக்காங்க. குடி குடின்னு உபச்சாரம் வேற!

"வேணாம். இப்போதான் லஞ்ச் முடிச்சேன். "

"ஆமாம்...  டீ யைச் ச்சாய் ன்னு சொல்வது இந்திய வார்த்தை. நீங்க எப்படி டீயை அதே பெயரில் சொல்றீங்க? "

 "இது விதவிதமான ஸ்பைஸ்கள் சேர்த்தது அதான் சாய்ன்னு சொல்றோம்."

" அய்ய..... வெறும் டீதான் எங்களுக்கு ச்சாய். நீங்க சொல்வது போல ஸ்பைஸ் எல்லாம் சேர்த்தால் அது மஸாலா ச்சாய். "

" அய்யய்யோ..... அப்படியா? இப்படி ஒரு பெயர் இருப்பதே எனக்குத் தெரியாதே! உங்க மஸாலா சாய்லே என்னென்ன ஸ்பைஸ் போடுவீங்க? "

 "சிம்பிளா வேணுமுன்னா இஞ்சி தட்டிப்போட்டுக்கலாம். இல்லை கூடவே ரெண்டு ஏலக்காய் தட்டிப்போட்டுக்கலாம். இல்லைன்னா டீ மஸாலான்னு ஒன்னு தனியா விக்குது. அது குறுமிளகு, பட்டை, கிராம்பு , ஏலக்காய், சுக்கு எல்லாம் கலந்த பொடி . சாயா தயாரிக்கும்போது இந்த மசாலாப்பொடியில் அரை டீஸ்பூன் சேர்த்துட்டா மஸாலா சாய் ரெடி. ஆனால் ஒன்னு,  நாங்க எந்த டீயா இருந்தாலும் அதுலே பால் சேர்த்துத்தான் குடிப்போம். அதுவும் சூடான பால். "

 லெக்சர் கொடுக்கச் சான்ஸ் கிடைச்சால் விடமுடியுதா?

 " அட! ச்சாயில் இவ்வளோ விஷயம் இருக்கா!! விளக்கமா சொல்லித்தந்ததுக்கு நன்றி. நான் இனி வாடிக்கையாளர்கள் கேக்கும் கேள்விகளுக்கு நல்லா விளக்கத்தோடு பதில் சொல்வேன். லாட்டே ச்சாய்ன்னு பால் சேர்த்த திடீர் சாயா கூட இப்ப வந்துருக்கு. வெறும் சுடுதண்ணி சேர்த்தால் போதும். வேணுமா?  "

  " லிப்டன் டீதானே? பார்த்தேன். வேணாம். நான் டில்மா டீ வச்சுருக்கேன் "

 அம்பாரிவச்ச யானைப்படம் போட்ட லிப்டனை பார்க்காம மிஸ் பண்ண முடியுமா? 

நல்லா விளம்பரம் பண்ணிக்கறாங்க. ஊர் முழுசும் இருக்கும் வாடகை சைக்கிள் எல்லாம் லிப்டன் டீ குடிக்கச்சொல்லுதே!

 1890 ஆம் ஆண்டு ஸ்காட்லாந்துக்காரர் தாமஸ் லிப்டன் ஆரம்பிச்ச டீ யாவாரம். இப்ப உலகெல்லாம் கொடிகட்டிப்பறக்குது! வகைவகையான ருசி, மணங்கள்ன்னு தூள் கிளப்புறாங்க. ஐஸ் டீன்னு இப்ப இங்கே லோல்படுது சூப்பர்மார்கெட்டுகளில். ரெடி டு ட்ரிங்.


 " கடையைப்படம் எடுக்கலாமா? "

 " பொதுவா எடுக்கக்கூடாது. நீங்க எனக்கு இவ்வளோ விஷயம் சொல்லிக்குடுத்துட்டீங்க. நான் அந்தப்பக்கம் போயிடறேன். நீங்க படம் எடுத்துக்குங்க. நான் பார்க்கலை:-) "

 அட! பேரம் படிஞ்சுருச்சே:-)))))).

 பொடி நடையில் அன்ஸாக் சதுக்கம் தாண்டி நடந்து அறைக்குப்போய்ச் சேர்ந்தப்ப மணி ரெண்டேகால்:-)

 கொஞ்ச நேரத்துக்கு வலை மேயலாம். கட்டுன காசு வீணாகலாமோ?

 தொடரும்.............:-)

Buy Now or Cry Later... (ப்ரிஸ்பேன் பயணம் 27)

$
0
0
இப்ப வாங்கு இல்லைன்னா பின்னாளில் (உக்காந்து) அழுன்னு எங்கே பார்த்தாலும் மாட்டி வச்சுருக்கு.

 "என்ன சமாச்சாரம்? எதுக்கு அப்புறமா அழணும்? இப்பவே வாங்குறதை வாங்கிக்கிட்டு அழுதால் என்ன? "

 " எதுக்கும்மா வாங்கிக்கிட்டு அழணும்? "

 "என்னைச் சொல்லலைங்க..... நான் வாங்கிக்கிட்ட பிறகு பில் வரும்போது நீங்க தான் உக்காந்து அழணும். அதைத்தான் சொல்றாங்க."

 இங்கே பெரிய ஸேல் நடக்கும் காலமாம் இது. இவுங்க வணிகத்துக்கான நிதியாண்டு ஜூனோட முடியுது. அதனால் கடையில் இருக்கும் சரக்குகளையெல்லாம் வித்துத் தொலைச்சுட்டு அடுத்த வருசம் புதுக்கணக்கு ஆரம்பிக்கவாம்!

 உண்மையைச் சொன்னால்.... கடைகளில் ஸேல் என்று போட்டுருக்கும் விலையிலேயே குறைஞ்சது நூறு சதமானம் லாபம் இருக்கத்தான் செய்யும். சீஸன் ஆரம்பிக்கும்போது புதுசா அறிமுகப்படுத்தும் பொருட்களையும் துணிமணிகளையும் குறைஞ்சபட்சம் நானூறு சதம் லாபம் வச்சுத்தான் விப்பாங்க. (எப்படித் தெரியுமுன்னு கேக்கப்பிடாது. நானும் ஒரு யாவாரத்தை ஆறு மாசம் நடத்திப்பார்த்துருக்கேனே) 

 மக்கள்ஸ்க்கு புதுசா வந்தவைகளை உடனே வாங்கிப்போட்டுக்கிட்டே ஆகணும். அதிலும் இந்த யங் பீப்பிள்ன்னு சொல்லும் இளைய சமூகம் இருக்கே.... அப்பப்பா.... வாங்கலைன்னா அந்த ஸோ கால்ட் நண்பர்கள் குழுவிலிருந்து விலக்கப்படும் அபாயம் இருக்கு(ன்னு இவுங்களாவே நினைச்சுக்கறதுதான்) 

அதனால் கடைகளில் யாவாரம் கொடிகட்டிப்பறக்கும். முதல் ஒரு சில மாசங்களிலேயே போட்ட பணத்தை எடுத்துருவாங்க. அப்புறம் வருசம் பூராவும் எதாவது ஒரு பெயரில் நடக்கும் ஸேல்களில் கொஞ்சம் கொஞ்சமா விலை குறைப்பு நடந்துக்கிட்டு இருக்கும்.

 ஃபேஷன் மாறிக்கிட்டே இருக்கு பாருங்க. கடைசியிலே ஸ்டாக் டேக்கிங் ஸேலுன்னு அடிமாட்டு விலை. பை ஒன் கெட் 2 ஃப்ரீன்னு வருமுன்னா பாருங்க.

 இங்கே புத்தகக்கடைகளிலும் இப்படித்தான். புதுப்புத்தகம் ரிலீஸ் ஆனதும் ரொம்பப்புகழ் வாய்ந்/த்த எழுத்தாளருன்னா அநியாயத்துக்கு 79.95ன்னு ஆரம்பிப்பாங்க! 99.95 எல்லாம்கூட சர்வசாதாரணம். அப்புறம்...? 

கழுதை தேய்ஞ்சு கட்டெறும்புதான்.... திடுக்குன்னு ஒரு நாள் பார்த்தா.... ஒரு ப்ளாஸ்டிக் பை அஞ்சு டாலருன்னு போட்டுருக்கும். அதாவது அந்தப் பையை வாங்கிக்கிட்டு, அது கொள்ளும் அளவுக்கு ஸேலில் போட்டுருக்கும் புத்தகங்களை நிறைச்சுக்கலாம். வழிய வழிய நிறைப்பது நம் சாமார்த்தியம்! நல்லநல்ல புத்தகங்களாத் தேடி நிதானமா எடுக்கலாம். ஆனா..... பையைத் தூக்க முடியாமல் சூப்பர்மார்கெட் ட்ராலியில் வச்சுத் தள்ளிக்கிட்டு(ம்) வந்திருக்கேன்

 சொன்னா நம்ப மாட்டீங்க எங்க ஊருலே தங்க நகைகூட அம்பது சதம் கழிவுன்னு அறிவிப்பாங்க. என்ன ஒன்னு, ஒம்போது காரட் என்பதால் நமக்கு அவ்வளவா ஆர்வம் இருக்காது. அப்படியும் விடமுடியுதா? வைரப்பெண்டண்ட் ஒன்னு இப்படி அரைவிலையில் வாங்குனேன். தங்கத்துக்கு மதிப்பில்லை. ஆனா வைரக்கல்லுக்கு இருக்கே! 

 இன்னொருக்கா , இந்த ஊருக்கு வந்த புதுசுலே ஒரு ஒம்பது கேரட் தங்கத்துலே கோபாலுக்கு (சர்ப்பிரைஸ்) பர்த்டே கிஃப்ட்டா இருக்கட்டுமுன்னு ஒரு ப்ரேஸ்லெட், (அப்பவும் அரைவிலைதான்) வாங்கினேன்.

 சில வருசத்துக்கு முன்னே இவர் சென்னைக்குப் போன சமயம் சரவணா தங்கநகைக்கடையில் உறவினர்களுக்கு நகை வாங்கப்போன சமயம் அவுங்க வாங்கப்போற தங்கத்தின் தரம் பார்க்க கம்ப்யூட்டர் மெஷீன் இருக்குன்னு அதுலே வச்சுப்பார்த்தப்ப, இவரும் தன்னுடைய ப்ரேஸ்லெட்டைக் கழட்டி மிஷீனுலே வச்சாராம். சீச்சீ.... வெளியே எடு. இது தங்கத்தை மட்டுமே தரம் பார்க்குமுன்னு மெஷீன் காறித்துப்பி, மானம் போச்சுன்னு சொன்னார்:-) 
ஒன்பதுக்கு நம்மூரில் இவ்ளோதான் மதிப்பு:( 

 கடந்த பல வருசங்களில் கவனிச்சது என்னன்னா..... ஃபேஷன் ஃபேஷன்னு ஆண்களுக்குள்ள உடுப்பு வகைகள் ஏராளமா வர்றதும். பெண்களைவிட ஆண்கள் இதுலே கிறங்கிப் போயிருப்பதுமா இருக்கு! உடுப்புன்னு இல்லை அலங்காரச்சாமான்களும் ஆம்பிளைகளுக்கு இப்போ எக்கச்சக்கம். நான் சம்பாரிக்கிறதையெல்லாம் மனைவிக்கும் பிள்ளைகளுக்குமே செலவு செய்யும் தியாகியா இருக்கேன்னு ஒரு காலத்துலே ஃப்லிம் காமிச்சுக்கிட்டு இருந்தவங்க எல்லாம் இப்ப வரம்பு மீறி தங்களுக்காகவும் செலவு செஞ்சுக்கிட்டு இருக்காங்க என்பதுதான்.

 இதுலே என்ன ஆறுதல்ன்னா.... நாளை மறுநாள் க்ரெடிட் கார்ட் பில் வந்தவுடன் மனைவிமேல் மட்டும் குற்றம் சாட்டமுடியாது என்பதே:-)))))

 சொல்லிவச்ச மாதிரி எல்லா பெரிய கடைகளிலும் உள்ளே நுழைஞ்சவுடன் தரைத்தளத்துலே  மேக்கப் சாமான்கள்தான்.  விதவிதமான பெயர்களில்  அழகுசாதனத் தயாரிப்பாளர்களின் தனித்தனி கவுன்ட்டர்கள்.   ஒவ்வொன்னிலும் யாரையாவது உக்காரவச்சு அழகுபடுத்திக்கிட்டே இருக்காங்க.  துல்லியமா முகம் பார்க்க  பெரிய உருப்பெருக்கும் கண்ணாடி.  எப்பேர்ப்பட்டவர்களுக்கும்  அதுலே பார்க்கும்போது கட்டாயம் ஏதோ  தன் முகத்துலே குறை இருப்பதாத் தோணிப்போகும்!

இந்தக் கடைகள் எல்லாம் குறைஞ்சது  ஏழெட்டு மாடிகளில் இருக்கு. ஒவ்வொரு தளமும்  அலங்காரம், ஆண்கள், பெண்கள் , குழந்தைகள், வீட்டு அலங்காரம், கட்டில்மெத்தை படுக்கைவிரிப்புகள், பாத்திர பண்டங்கள்., டிவி , கெமெரா, கம்ப்யூட்டர்ன்னு எலெக்ட்ரானிக்ஸ்,  ஸூட் கேஸ்கள்ன்னு  தனித்தனி தளத்தில் வச்சுடறாங்க.  கஷ்டமில்லாமல்  ஏறிப்போக எஸ்கலேட்டர்ஸ்.

சென்னையில்கூட லைஃப் ஸ்டைல் கடை ரெண்டு மூணு மாடிகளில் இருக்குல்லே? 

ஏகப்பட்ட விற்பனையாட்கள், உதவியாளர்கள்ன்னு பெரும்படை.  இம்மாம் பெரிய அடுக்கு மாடிகளை ஒரே சீதோஷ்ணத்தில் வச்சுக்கணுமுன்னா பவர் பில் எவ்ளோ ஆகுமுன்னு நினைச்சுக்குவேன். அதையெல்லாம் யாரு கட்டுவாங்க?  வாடிக்கையாளர்கள் தலையில்தான் இல்லே? அதான் எல்லா சாமான்களும் யானை விலை!


அம்பது டாலருக்கு மூணு அரைக்கை ஷர்ட். நூறு டாலருக்கு மூணு முழுக்கை பிஸினெஸ் ஷர்ட்டுன்னு கொட்டி வச்சுருக்கு. கடைக்குள் ஒரு மாடி முழுசும் ஆண்களுக்கான ஆடைஅலங்காரங்கள். நிறைய mannequins புது உடைகளைப்போட்டு மினுக்கிக்கிட்டு இருக்குதுங்க. இந்த மாடல்கள் எல்லோருக்கும் 100% பெர்ஃபெக்ட் பாடி! நல்ல உயரமா, தொப்பை இல்லாமல் கச்சிதமா மிடுக்கா நிக்கறாங்க. முந்தி எல்லாம் வெள்ளை இனத்து மாடலாகவே இருந்தது போய் இப்போ கலர்களுக்கு ஆதரவா கருப்பு நிற மாடல்களும் வச்சுருக்காங்க.

 ஆதிகாலத்துலேயே ( 15 ஆம் நூற்றாண்டு) மாடல் பொம்மைகள் செய்வது வழக்கத்துக்கு வர ஆரம்பிச்சுருக்கு. ஃப்ரான்ஸ் நாட்டிலே உடுப்புகள் டிஸ்ப்ளே செய்ய மாடல்கள் உண்டாக்குனப்ப நார் , மெல்லிய பிரம்பு எல்லாம் வச்சு உண்டாக்குனாங்க. 1835 லே கம்பி சுத்தி வச்சு பொம்மைகள், அதுக்கப்புறம் காகிதக்கூழாலேதான் செஞ்சாங்களாம். அப்புறம் நல்ல வழுவழுப்பு, ஷார்ப் ஃபீச்சர் இருக்கணுமுன்னு மெழுகுலே செய்ய ஆரம்பிச்சு, இப்ப ப்ளாஸ்டிக், லேடக்ஸ்ன்னு வந்து நிக்குது.

 மருத்துவத்துறை, ராணுவத்துறை, உடுப்புத்தயாரிக்கும் தொழில்துறைன்னு இப்ப ஏகப்பட்ட இடங்களில் இந்த mannequins பயன்படுத்தறாங்க.

 இன்னொரு விஷயம் நான் கவனிச்சது ...பத்திரிக்கைகளில் விளம்பரத்துக்கு உண்மை மனிதர்களை மாடலாப் பயன்படுத்திப் படம் எடுக்கும்போது பெண்கள் என்றால் குழைவு, சிரிப்புன்னு உணர்ச்சிக்குவியலான முகங்களும் ஆண்கள் மாடலாக இருக்கும்போது ஒரு அலட்சியமா நிற்பது போலவும் இன்னும் சொல்லப்போனால் கொஞ்சம் கோபமான உணர்வைக் காமிச்சு ரூடா நிற்பதுபோலவும்தான் போடறாங்க. எதுக்கு இந்த ஆள் இவ்ளோ கோபமா பார்க்கறாருன்னு நினைச்சுக்குவேன். அப்படி இருந்தால்தான் ஆண்மைன்னு இருக்கோ என்னவோ?


 இங்கே பல பொம்மைகளுக்கு முகமே இல்லை. வெறும் தலை மட்டும் உடம்போடு இருக்கு! அப்பாடா.... கோபம் இல்லைன்னா மூஞ்சே இல்லை:-))))) இதுவும் நல்லாத்தான் இருக்கு. நமக்குப்பிடிச்ச முகத்தை வச்சுப் பார்த்துக்கலாம்,இல்லை!

 விதவிதமான எண்கள் போட்டுக் குமிஞ்சு கிடக்கும் ஷர்ட் மலைகளில் நமக்கு வேண்டியதைத் தேடிக்கிட்டு இருந்தோம். நீங்க என்ன வேணா சொல்லுங்க..... ஆண்களுக்குக் கலர் ச்சாய்ஸ் ரொம்பக் கம்மிதான். அழுக்குக்கலர்தான் அதிகம். இல்லைன்னா ஒரே சோகையான நிறம். அதுவும் இல்லைன்னா கட்டம், கோடு. இப்படி ....... ஆஃபீஸுக்குப் போடறதுன்னா வெள்ளை இல்லாட்டா நீலம்.

 நமக்கு வேணும் என்ற அளவுன்னு நினைச்ச ஒரு சட்டையை எடுத்துக்கிட்டுப் போட்டுப் பார்க்கணுமுன்னு கேட்டால், அதே அளவுள்ள (போட்டுப் பார்க்கறதுக்குன்னே வச்சுருக்கும் ) ஒரு சட்டையைக் கொடுத்தாங்க. இவர் ட்ரெஸ்ஸிங் ரூமில் போய் போட்டுவந்து காமிச்சப்ப,   'தெனாலி ஆலங்கட்டி மழை கமல்'  ஞாபகம்தான் வந்துச்சு. கைவிரல் நுனியில் இருந்து ஒரு முழம் ஸ்லீவ் கீழே தொங்குது:-))))))))))))))

 மார்பளவு கொஞ்சம் லூஸா இருக்கட்டுமேன்னுதான்....

 நிறைய ஆண்களுக்கு, மறுபாதி அப்ரூவ் பண்ணாதான் திருப்தி போல! ட்ரெயல் ரூம் வாசலில் மறுபாதிகள் காத்துக்கிட்டு இருந்தோம்.

 எப்பவும் பயணசமயத்துலே கைப்பையில் வச்சுருக்கும் இஞ்சு டேப் (அதெல்லாம் நான் ரெண்டாயிரம் துணி கெடுத்த முழு டைலராக்கும் கேட்டோ!! ) எடுத்துக் கையை அளந்தால்..... நம்மளவர் கை சின்னதா போச்சா என்ன? கடையில் உதவியாளரிடம் சொன்னால்..... காலர் சைஸும் ஸ்லீவ் சைஸும்தான் ஷர்ட்ஸ்லே பார்க்கணுமாம்.

 எப்பப்பார்த்தாலும் ரெடிமேட் வகைகளில் ஸ்மால் மீடியம் லார்ஜ், எக்ஸ்ட்ரா லார்ஜுன்னே வாங்கிப் பழக்கப்பட்டுட்டோம் நியூஸியில். இதே மாதிரி சீனாவில் லார்ஜ் வாங்கினால் தொலைஞ்சோம். அது குழந்தைப்பிள்ளை போடுவதா இருக்கும். அங்கே வாங்கினால் ஏழெட்டு எக்ஸ் சைஸு வாங்கிக்கணும்:-))))) 

 அதுவும் ஸ்லீவ் அளக்கும்போது தோள்ப்பட்டையில் இருந்து விரல் நுனிவரை அளக்காமல் பின்னங்கழுத்து நடுவில் (தண்டுவட முதல் எலும்பில்) இருந்து கைவிரல் நுனி வரையாம்!

 அடராமா..... இந்த விஷயம் தெரியாமலே டெய்லரா இருந்துருக்கேனே:( பரவாயில்லை. இப்பத் தெரிஞ்சு போச்சுல்லே.... இனி லேடீஸ் அண்ட் ஜென்ட்ஸ் டெய்லர்ன்னு போட்டுக்கலாம்:-)))))

 தொடரும்............:-))))




காசுச் சத்தம் கேக்குதைய்யா.... காசுச் சத்தம்.... காசுச் சத்தம்... (ப்ரிஸ்பேன் பயணம் 28)

$
0
0
தகதகன்னு வெளிச்சம் போட்டு மினுங்கும் செண்ட்டர் கோர்ட் முழுசும் நிறைய மக்கள்ஸ். பாட்டும் கூத்துமா இருக்கு. இன்னிக்கு வெள்ளிக்கிழமை லேட் நைட் ஸ்பெஷலா எதாவது இருக்குமுன்னு போய்ப் பார்த்தால் வால்லபீஸ் கூட்டம். Australian national rugby union team . Wallabies என்ற அஃபிஸியல் செல்லப்பெயர். 1883 ஆண்டு சதர்ன் ரக்பி ஃபுட்பால் யூனியன் என்ற பெயரில் ஆரம்பிச்சது.



 ஆஸியில் The Australian National Rugby League Team என்று ஒரு லீக் கங்காரூஸ் ( Kangaroos) என்ற பெயரில் இருக்கு, அவுங்க ஊரின் விசேஷ உயிரினங்கள் பெயரைப் பெருமைப்படுத்தும் விதமாத்தான் வச்சுக்கிட்டு இருக்காங்க.

 நாங்க சும்மா இருக்கமுடியுமா? NZ Rugby League என்னன்னா New Zealand Kiwis என்று வச்சுக்கிட்டு இருக்கு. 1908 ஆம் ஆண்டுமுதல் விளையாடிக்கிட்டு இருக்காங்க. NZ Rugby Unionக்கு செல்லப்பெயரா ஆல் ப்ளாக்ஸ்ன்னு இருக்கு. எங்க தேசிய நிறம் கருப்பு என்பதை இங்கே சொல்லக் கடமைப்பட்டுள்ளேன். இந்த ரக்பி யூனியன் எங்க ஊரான கிறைஸ்ட்சர்ச்சில்தான் முதன்முதலில் கிறைஸ்ட்சர்ச் ஃபுட்பால் க்ளப் என்ற பெயரில் 1863 ஆம் ஆரம்பிச்சுருக்கு. என்ன இருந்தாலும் இதுதானே மெயின் லேண்ட் ஆஃப் நியூஸி..

 வெள்ளையர்கள் நியூஸி வந்து குடியேறுமுன்பே உள்நாட்டு மவொரி மக்கள் பந்துபோல ஒன்னை வச்சுக்கிட்டு( ரக்பி பந்து, நீளவட்டமா ஓவல் ஷேப்பிலே இருப்பது உங்களுக்குத் தெரிஞ்சுருக்கும்தானே? ) கி ஓ ராஹி ki-o-rahi என்ற விளையாட்டு விளையாடிக்கிட்டு இருந்துருக்காங்க. இந்த விளையாட்டின் விதிகள் ஏறக்கொறைய அஸ்ட்ராலியன் ஃபுட் பால் விளையாட்டைப்போலவே இருந்துருக்கு. ஆனால் அப்போ அடுத்த நாட்டைப் பற்றிய விவரங்கள் இங்கே தெரிஞ்சுருக்க வாய்ப்பில்லைதானே?

 க்ளப் ஆரம்பிச்சு ஒரு ஏழு வருசம் போல தாங்களே சில நியமங்களை உண்டாக்கிக்கிட்டு வெள்ளையர் ஆடிக்கிட்டு இருந்தாங்க. அப்புறம் 1870 ஆண்டுதான் ரக்பி ஃபுட்பால் நியமங்கள் இங்கே அறிமுகப்படுத்தப்பட்டன.

மத்த நாடுகளோடு விளையாடுனாலும் எங்களுக்கு ஆஸிகளை ஜெயிப்பதுதான் வாழ்வின் நோக்கம். கேம் நடக்கும் சமயங்களில் பார்த்தீங்கன்னா.... வெறி பிடிச்சு அலையும், ஒரு கூட்டம்! ரத்த பூமி!!! ரொம்ப விஸ்தரிக்காமல்  'சுருக்'ன்னு சொல்லணுமுன்னால் இந்தியா பாகிஸ்தானோடு விளையாடும் க்ரிக்கெட்டை நினைச்சுக்குங்க.

 மாட்சிமை தாங்கிய மகாராணியம்மாவின் குடிகள் என்றாலும் எங்க நாட்டில் க்ரிக்கெட் & ரக்பியை ஒப்பிட்டால் ரக்பி விளையாட்டு ஒரு மாத்து அதிகம்தான். என்னதான் சொல்லுங்க இது உள்ளூர் விளையாட்டில்லையோ!!!! இந்த டீம்களில் எப்பவும் நிறைய ஐலண்டர்ஸ் இருப்பாங்க. ஆட்டத்துக்கு ஏத்த உடல்வாகு அவுங்களுக்கு இருக்கே!
 Saia Faingaaவுக்கு சின்ன வயசு விசிறிகள் ஏராளம்.



 போஸ்டர்கள் விநியோகிச்சுக்கிட்டும் ஆட்டோகிராஃப் போட்டுக்கிட்டும் இருந்த விளையாட்டு வீரர்களைக் கிளிக்கவே ஃபொட்டோக்ராஃபர்களின் பெரும் கூட்டம் படை எடுத்துருந்துச்சு. கையில் ஒன்றையணாக் கெமெராதான் இருக்குன்னு நான் சும்மா இருக்க முடியுமா? க்ளிக் க்ளிக்.



மகளுக்கு பிடிக்குமுன்னு ரெண்டு போஸ்டர்கள் வாங்கி அதைப் பத்திரமாக் கொண்டுவந்து காமிச்சவுடன், யக் 'என்றாள், அசல் கிவி!


சில ஊர்களுக்குப் போகும்போது குறிப்பிட்ட சிலதைச் செய்ஞ்சு முடிக்கலைன்னா பயணம் போன திருப்தியே எனக்கு இருக்காது. ரிச்சுவல்ஸ் முக்கியம். இங்கே அது கஸீனோ. ஒரு பயணத்துலே ஜஸ்ட் ஒரு முறைதான் . பெரிய எதிர்பார்ப்பு ஒன்னும் இல்லை. நிறைய காசும் செலவு செய்ய மாட்டேன். ஆனா...போகணும். போனேன்.

மாலின் கோடிவரை நடந்து சாலைக்கு எதிர்ப்புறம் வண்ண விளக்கொளியில் ஆர்ப்பாட்டமில்லாமல் அமைதியா இருக்கு கஸீனோ கட்டிடம். உள்ளே போனோம்.

முதல் ஹாலில் Roulette Poker Blackjack இப்படி i2 வகைகள். பெரிய மேசைகளில் ஆட்டம் நடக்க சின்னக்குன்றுகள் போல் சிப்ஸ் குவிச்சு வச்சு ஆடுறாங்க மக்கள்ஸ். நாம் என்ன பரம்பரை கேம் ப்ளேயர்ஸா என்ன? ஸ்லாட் மெஷீன்கள் இருக்கும் ஹால்கள் பகுதிக்குப்போய் மினிமம் ஒரு செண்ட் கேம் மெஷீன்களில் ரெண்டைப் பிடிச்சோம்.

 சொன்னால் நம்ப மாட்டீங்க.....எங்க கிறைஸ்ட்சர்ச் நகரில் நிலநடுக்கம் வந்து நகர மையமே அழிஞ்சு போனப்ப, தப்பிப்பிழைச்ச சில கட்டிடங்களில் எங்கூர் கஸினோவும் ஒன்னு. சின்னதா எங்கூருக்கும் ப்ரிஸ்பேனுக்கும் சின்னதா ஒரு ஒப்பீடு செய்தால் ப்ரிஸ்பேன் கஸீனோ ரொம்பப் பெருசு. எங்க ஊரில் 500 ஸ்லாட் மெஷீன்கள் இங்கே 1300. எங்கூரில் குறைஞ்சது 20 வயசு இருந்தால்தான் உள்ளே அனுமதி. இங்கே 18 வயசு.

 நான் கை பை கொண்டுவரலை. கோபாலிடம் பர்ஸ் வாங்கிப்பார்த்தால் சில்லறையா ஒரு ஒன்பது டாலர்கள்தான் இருக்கு. எப்பவும் என்னோட லிமிட் 20 என்பதால்..... நோட்டை எடுத்துக்கிட்டுப்போய் சில்லறை வாங்கிக்கணும். முதலில் இந்த ஒன்பது காலியாகட்டும். அப்புறம் சில்லறை மாத்தலாமுன்னு ஆளுக்கொரு மெஷீனில் ஆட ஆரம்பிச்சோம். சின்னச்சின்ன வெற்றியும் தோல்விகளுமா ஆடிக்கிட்டே இருக்கோம். திடீருன்னு கலகலன்னு  'காசு மழை'  கொட்டும் ஓசை! என்னதான் சொல்லுங்க பணத்தின் ஓசை ஒரு தனி இனிமைதான் இல்லையா? எனக்கு அடுத்த மெஷீனில் விளையாடும் பெண்ணுக்கு அதிர்ஷ்டம் மெஷீனைப் பிய்ச்சுக்கிட்டு கொட்டோ கொட்டுன்னு கொட்டுது. அவுங்க ரெண்டு மெஷீனைப் பிடிச்சுக்கிட்டு ரெண்டு கையாலும் பாய்ஞ்சு பாய்ஞ்சு விளையாடுறாங்க.

 அங்கங்கே காசு விழும் சத்தம் கேட்டாலும் மழை இல்லை. நாம் மட்டும் சும்மா இருக்கலாமான்னு  'கலெக்ட் கேஷ்' பட்டன் அமுக்குனதும் லொட்ன்னு ஒரு டாலர் விழுந்துச்சு:-)))) திருப்பி அதை மெஷினில் நுழைச்சேன். சரியா ஒன்னரை மணி நேரம் அதே ஒன்பது டாலரை வச்சே விளையாடினோமுன்னு வையுங்க. போய் வந்து போய்வந்து போய்வந்துன்னு பலமுறைகள் ஆகி பூஜ்யம் வந்ததோடு கிளம்பிட்டோம்.

 சிங்கையில் கஸினோவுக்குள் நுழைய உள்ளுர் வாசிகளுக்கு 100 டாலர் கட்டணம். வெளிநாட்டவர் பாஸ்போர்ட் காமிக்கணும். இங்கே எங்க பக்கங்களில் அதெல்லாம் ஒன்னும் இல்லை.

 என் மனக்குறை என்னன்னா..... கஸீனோ உள்ளே படம் பிடிக்க அனுமதி இல்லை:( ப்ச்......





வெளியே வாசல் முற்றத்தில் நிறைய சாப்பாட்டுக்கடைகளின் கூடாரங்கள்.   மும்முரமான வியாபாரத்தில் இருக்கு. நமக்கும் பசி. ஆனால் இந்தக் கூடாரங்களில் நமக்கு ஒன்னும் வாகா இல்லை என்பதால் மாலில் இருக்கும் ஏகப்பட்ட ஃபுட்கோர்ட்டுகளில்,   நமக்குக்கிட்டே இருக்கும் ஒன்னில் நுழைஞ்சோம்.

 ஹரே க்ருஷ்ணா வெஜிடேரியன் ஸ்டாலில் போண்டாமாதிரி ஒன்னை சாம்பிள் கொடுத்துக்கிட்டு இருந்தாங்க. பரவாயில்லையே. நல்லாத்தானே இருக்குன்னு அங்கேயே சாப்பாட்டுக்கு ஆர்டர் செஞ்சோம்.

 ஐயோ..... இப்படித் தூண்டிலில் போண்டாவை வச்சுப் பிடிச்சுட்டாங்களேன்னு புலம்ப வேண்டியதாப் போச்சு. சோம்பல்படாம பக்கத்துத் தெரு இஸ்கான் கோவிந்தாசுக்கே போயிருக்கலாம். விதி யாரை விட்டது?


 கெட்டுப்போன நாக்கை பழைய நிலைக்குத் திருப்ப மாலில் இருந்த ஸ்விஸ் ஐஸ்க்ரீம் கடையில் டபுள் ஸ்கூப் ஐஸ்க்ரீம் வாங்கித்தின்னுட்டு அறைக்குப் போக பொடி நடையில் கிளம்பினோம். போற போக்கில் சாயங்காலம் பார்த்து வச்சுருந்த ஷர்ட்ஸ் வாங்கிக்கணுமேன்னு மறுபடி அந்தப் பெரிய கடைக்குள்ளே நுழைஞ்சதும் கோபாலின் கால்கள் வேகமெடுத்து ஸூட் கேஸ் மாடிக்குப் போயிருச்சு. பை வாங்கலையோ பை.. பழிக்குப்பழின்னு நானும் கிச்சன் கேட்ஜெட்ஸ் இருக்கும் மாடிக்குப் போயிட்டேன்:-)

 லேட் நைட் முடியும் சமயம் (மணி ஒன்பதாகப்போகுது) ஒருவரை ஒருவர் கண்டுபிடிச்சோம். யாரும்  எதுவும் வாங்கலை. ஆனா பார்த்து வச்சுருக்கு. நாளைக்கு சனிக்கிழமைதானே. இவருக்கு வேலை இல்லை. காலையில் வந்து வாங்கிக்கணும்.

 தொடரும்............:-)

தங்கப்பதக்கத்தைத் தொட்டுப் பார்த்தேன்!

$
0
0
எங்க நியூஸியில் எனக்கு ரொம்பப்பிடிச்ச ஒரு வழக்கம் இருக்குதுங்க. எதாவது ஒரு போட்டியில் எடுத்துக்காட்டா உலகக்கோப்பை ஆட்டத்தில் வெற்றின்னு வச்சுக்குங்க... அந்தக் கோப்பையை நாடு முழுவதும் இருக்கும் நகரங்களுக்குக் கொண்டுவந்து காமிப்பாங்க.

 மக்கள் வரிப்பணத்தில் இதுக்கும் ஒரு பகுதியை அரசு செலவழிக்குதில்லையா? அதனால் இதைப் பார்க்கும் உரிமையும் நமக்கு வந்துருது பாருங்க:-) 

நடந்து முடிஞ்ச ஒலிம்பிக் விளையாட்டுப்போட்டிகளில் நியூஸி 13 பதக்கங்களை ஜெயிச்சுருக்கு.

 ஆறு தங்கம்

 ரெண்டு வெள்ளி

 அஞ்சு வெண்கலம்.

 உலகளவில் பதக்கப் பட்டியலில் நியூஸி பதினைஞ்சாவது இடம் பிடிச்சுருக்கு.

 நாலே மில்லியன் சனம் இருக்கும் சின்ன நாட்டுக்கு இது மகத்தான வெற்றின்னே நான் நினைக்கிறேன்.

 லண்டனில் இருந்து திரும்பி வந்த விளையாட்டுக்காரகளுக்கு அரசு தரப்பில் முதல் வரவேற்பு இங்கே நம்மூரில் (கிறைஸ்ட்சர்ச்) இன்னிக்கு நடக்குது.இப்போ அதுக்குப்போய்வந்துதான் அவசர அவசரமா இந்தப்பதிவை எழுதறேன். 

சுடச்சுடத் தருவதில் உள்ள மகிழ்ச்சி எனக்கு வேணாமா? :-))))

 அதென்ன பெரிய ஊரான ஆக்லாந்தை விட்டுட்டு நமக்கு இந்த அதிர்ஷ்டம் கிடைச்சதுன்னா.... நம்மூர்தானே மெயின் லேண்ட். அதுக்காகவோ?

 ஊஹூம்..... நாம்தான் நிலநடுக்கப்புகழ் ஊரா ஆகிட்டோமே:( நடந்து போன அழிவுகளால் மனம் உடைஞ்சு இருக்கும் மக்களைக் கொஞ்சமாவது மகிழ்ச்சிப்படுத்தணுமுன்னு அரசு எடுத்த முடிவு இது.

 நகர மையம் இப்போ இல்லாததால் கொஞ்ச நாளா விசேஷங்கள், விழாக்கள் எல்லாம் கிறைஸ்ட்சர்ச் ஹேக்ளி பார்க்கில் (பொட்டானிக் கார்டன்) நடக்குது. போன வாரம் முழுக்க விடாமல் பெய்ஞ்ச மழையால் அங்கே நிறைய பகுதிகளில் தண்ணீர் சரியா வடியாமல் தேங்கி நிக்குது. நிலநடுக்கத்தில் ஊரின் வடிகால் குழாய்களுக்கும் ஆபத்து வந்துருந்துச்சே:( அவைகளைத்தான் முதலில் பழுது பார்க்கும் வேலை நடக்க ஆரம்பிச்சு இன்னும் நடந்துக்கிட்டே இருக்கு.

 இதனால் ஹேக்ளி பார்க்கை ஒதுக்கிட்டு உள்ளூரில் இருக்கும் சிட்டிக்கவுன்ஸில் ஸ்போர்ட்ஸ் சென்ட்டர் ஒன்னில் விழாவை நடத்த முடிவு செஞ்சாங்க. வெள்ளிக்கிழமை (இன்னிக்குதான்) பகல் பனிரெண்டு முதல் ஒன்னரை வரை விழா.

 கட்டாயம் போய்ப் பாருன்னு மகள் சொல்லிட்டு ரெண்டு முறை மின்மடலும் அனுப்பி நினைவூட்டினாள். தாய்க்கு, மேட்டர் தேத்தித்தர எவ்வளோ ஆர்வம் பாருங்களேன்:-))))

 பதினொன்னரைக்குக் கிளம்பிப்போனோம். பக்கத்துத் தெருவிலே கிடைச்ச இடத்தில் வண்டியை நிறுத்திட்டு ஓடுனோம். அஞ்சு நிமிச நடையில் திடலில் கால் பதிச்சோம். அழகான சின்ன நீரோடைக்கரையில் அமைஞ்சுருக்கு இந்த பயோனியர் ஸ்போர்ட்ஸ் சென்ட்டர். Pioneer Recreation and Sport Centre.

பச்சைக்கார்பெட் வரவேற்பு:-)




 நல்ல கூட்டம்.  இருபதாயிரம் இருக்குமுன்னார் கோபால். என் வழக்கபடி ரெண்டால் பெருக்கினேன்.  கூட்டிக்கழிச்சுப் பார்த்தால் எப்படியும் முப்பதாயிரம் வரும்! இன்றைய ஸ்பெஷலா வெளியே க்ரவுண்டில்  பிள்ளைகளுக்குப் பொழுது போக்க,விளையாட  ஏற்பாடுகள் செஞ்சுவச்சுருந்தாங்க.  ஓட்டம், சாக்குப்பை ரேஸ், வாலி பால், ஃபுட் பால் இப்படி.





 ஃபிட்னஸ் செஞ்சுக்க ரோயிங் சைக்ளிங் மெஷீன்களைப் போட்டு வருங்கால விளையாட்டுக்காரர்களை ஊக்குவிக்கும் வகை இன்னொரு இடத்தில்.



பெரிய திரை வச்சு நிகழ்ச்சிகள் ஓடிக்கிட்டு இருக்கு. உள்ளே செண்டரில் நடக்கும் நிகழ்ச்சிகள்தான். செண்ட்டர் உள்ளே வெறும் 700 பேர் மட்டுமே கொள்ளும் சின்ன இடம் என்பதால் இந்த ஏற்பாடு. நாம் கொஞ்சம் லேட்டாப்போயிட்டோம்:( உள்ளே ஹௌஸ் ஃபுல்!



 வரும் மக்களுக்கு இலவசத்தீனி ஏற்பாடு ஒரு பக்கம். சுடச்சுட சாஸேஜ்! இன்னொரு பக்கம் ரெண்டு காஃபி வண்டிகள்.

 பள்ளிக்கூடங்கள் பல, பஸ் ஏற்பாடு செஞ்சு பிள்ளைகளைக் கூட்டி வந்துருக்காங்க. பலவகை நிறங்களில் சீருடைகள்.


 பூம்பிஞ்சு முதல் மூத்தவர் வரை நிறைஞ்சு வழியும் கூட்டம். செல்லங்களுக்கும் குறைவில்லை.

 நியூஸிலாந்து ஆர்மி பேண்ட் ஒன்னு வாசிக்க ரெடியா இருக்கு. தூக்கமுடியாத அளவு பெருசா இருக்கும் ஒரு இசைக்கருவியை வாசிக்கும் பெண்கள் நம்ம கெமெராவுக்கு ஆகா போஸ் கொடுத்தாங்க. ஒரு சிறுவனுக்கு அதை எப்படித் தூக்கி வச்சு வாசிக்கணுமுன்னு தெரிஞ்சுக்கணுமாம். நோ ஒர்ரீஸ்:-)))) 


சரியா பனிரெண்டுக்கு செண்ட்டர் உள்ளே மவொரி வரவேற்பு கொடுத்து விளையாட்டுக் குழுவை மேடை ஏத்துனாங்க. பதக்கம் வென்றவர்கள் முன்வரிசையில் நிற்க மொத்தக்குழுவும் (சுமார் 100 பேர்) மேடையில். அஃபிஸியல் ஒலிம்பிக் ஸாங் பாடப்பட்டது. நகரத்தந்தை வரவேற்றுப் பேசுனார்.

 உள்ளூர் ரேடியோக்காரர்கள் நிகழ்ச்சிகளை நடத்திக்கிட்டும் பதக்கம் வென்றவர்களை நேர்காணல் செஞ்சுக்கிட்டும் இருந்தாங்க. முக்கிய கேள்வியா 'பதக்கம் வாங்க மேடையில் ஏறி நிற்கும்போது, நாட்டுக்கொடி கம்பத்தில் உயர்ந்து ஏறும்போதும் தேசிய கீதம் பாடும்போதும் எப்படி உணர்ந்தீங்க?'

 பதில் சொல்லிட முடியுமா? அப்போ எவ்ளோ எமோஷனலா இருந்திருக்கும்? டிவியில் மெடல் செரிமனி பார்க்கும் போதெல்லாம் நானே எப்படி உணர்ச்சிவசப்பட்டேன்! இதுக்காகவே ராத்திரி ரெண்டு மணி வரையெல்லாம் முழிச்சுருந்தோமே!

 உள்ளே நிகழ்ச்சி முடிஞ்சு வெளியே இருக்கும் நமக்காக விளையாட்டுக்காரர்கள் வெளிவரப்போவதாச் சொன்னாங்க. வாசிச்சுக்கிட்டு இருந்த நியூஸி ஆர்மி பேண்டை அம்போன்னு விட்டுட்டு இடப்பக்க வாசலுக்கு விரைந்தோம்.

 போன முறையும் இந்த முறையும் வெற்றி வாகை சூடிய தங்க மங்கை வேலரி ஆடம்ஸ் (Valerie Adams shot put) இன்னும் நியூஸி திரும்பலை. ஐரோப்பாவில் நடக்கும் வேறு போட்டிகளுக்காக ஸ்விட்ஸர்லாந்தில் பயிற்சி எடுத்துக்கிட்டு இருக்காங்க. அவுங்களை சந்திக்க முடியலையேன்னு எனக்குக் கொஞ்சம் வருத்தம்தான்.

 மார்க் டொட் (Mark James Todd,equestrian )தான் முதலில் வெளியே வந்தார். 56 வயசு. இது ஆறாவது மெடல். 1984 1988 ( லாஸ் ஏஞ்ஜலீஸ், ஸியோல்) ரெண்டு ஒலிம்பிக்ஸ்களிலும் தங்கம் வென்றவர். ரெண்டு தங்கம், ஒரு வெள்ளி, மூணு வெங்கலம் இதுவரை!

 பாராட்டிட்டு மெடலைத் தொட்டுப் பார்த்தேன். வெண்கலம்!

 அடுத்து வந்தவர் முகத்தைக்கூடக் கவனிக்க முடியாமல் அப்படிக்கூட்டம். என் கண்ணு மட்டும் தங்கத்துலேயே இருந்துச்சு. தொட்டுத் தூக்கிப்பார்த்தேன். யம்மா..... நல்ல கனம் 400 grams! அம்பது பவுனா???

 ஊஹூம்....உள்ளே பூராவும் வெள்ளி. ஆறு கிராம் தங்கத்தை மேலே பூசி இருக்காங்களாம்.

 வேடிக்கை பார்த்துக்கிட்டு இருந்த கோபாலிடம், மெடலைத் தொட்டுப் பாருங்கன்னேன். வாழ்க்கையில் இது போல இன்னொரு ச்சான்ஸ் கிடைக்குமா? தொட்டுப் பார்த்தார்.

 எங்கூர் மக்கள்ஸ் கொஞ்சம் வெகுளிகள்தான். தங்கம் ஜெயிச்சுட்டோம் என்ற மண்டைகனம்கூட இல்லை. நான் பதக்கத்தைத் திருப்பித்திருப்பிப் பார்க்கும் வரை அப்பாவியாக் காத்திருந்தார்.


இந்த நிகழ்ச்சி முடிவடைஞ்சதும்  வெற்றிபெற்ற ஆட்டக்காரர்களை சில குழுக்களாப் பிரிச்சு சில முதியோர் இல்லங்கள், சில பள்ளிக்கூடங்கள், எங்கூர் பொது மருத்துவமனை இங்கெல்லாம்  கூட்டிப்போறதா ஏற்பாடு.
வரமுடியாதவர்களை அப்படிக் கண்டுக்காம விட முடியுமா சொல்லுங்க? இதுகூட எனக்கு ரொம்பவே பிடிச்சுருக்கு பிடிச்சிருக்கு.



 மனசு பூரா மகிழ்ச்சியா அங்கிருந்து கிளம்பினேன். நீரோடையில் ஒரு வாத்து நீந்தும்போட்டிக்குப் பயிற்சி செஞ்சுக்கிட்டு இருந்துச்சு. ஃப்ரீ ஸ்ட்ரோக். கோ ஃபார் கோல்ட் ன்னு சொல்லிட்டு வந்தேன்:-)

போனால் வராது.... பொழுது போனால் கிடைக்காது..... (ப்ரிஸ்பேன் பயணம் 29)

$
0
0
ஆலையில்லா ஊருக்கு இலுப்பைப்பூ சக்கரையாமே! பனிவிழாத ஊரில் ஐஸ் ஸ்கேட்டிங் செஞ்சுக்க வேற வழி? கிங் ஜியார்ஜ் சதுக்கத்துலே விண்ட்டர் ஃபெஸ்டிவல் நடக்க ஏற்பாடாகுதுன்னு நேத்து பார்த்து வச்சுக்கிட்டதை ஞாபகமா கோபாலிடம் சொல்லி வச்சேன்.

 காலையில் வழக்கம்போல் எழுந்து கடமைகள் முடிச்சு காலை உணவுக்கு கீழே ரெஸ்ட்டாரண்ட் போய் வந்ததும் முதல் வேலையா பொட்டிகளை அடுக்கி வச்சோம். இன்னிக்கு மாலை ஃப்ளைட்டில் வீடு திரும்பணும்.


 ஆறுமணிக்குத்தான் விமானம் என்பதால் லேட் செக்கவுட்டு கேட்டு மதியம் மூணு வரை கிடைச்சது. பக்கத்து பேட்டையில் ஒரு மால் இருக்கு, அங்கே போகலாமுன்னு குவீன்தெரு மாலுக்கடியில் இருக்கும் பஸ் ஸ்டேஷனுக்குப் போனோம். ஜிலோன்னு கிடக்கு. தகவலில் பார்த்தால்.... நாம் போய் கொஞ்சம் சுத்தி வரவே குறைஞ்சது நாலு மணி நேரம் ஆகும்போல இருக்கு. இதே வெஸ்ட்ஃபீல்ட்ஸ் நம்ம ஊரில் இருக்கே. வேணாமுன்னு தோணுச்சு.

 பார்த்துவச்ச பையை வாங்கிக்கலைன்ற துடிப்பு கோபாலின் முகத்தில் தெரிஞ்சது. குவீன்தெரு மாலில்தானே இருக்கோமுன்னு மையர்ஸ் கடையில் போய் பையை வாங்குனதும்தான் புள்ளி முகத்தில் மகிழ்ச்சி. மடிக்கணினியும் ஒரு நாளுக்குள்ள துணிமணியும் வச்சுக்க வாகாய் இருக்காம்! சும்மாவே பை பைன்னு ஆடுவார்., இப்போ இந்த மடிக்கணினி தூக்கும் வழக்கமும் சேர்ந்துக்கிட்டதால் வகைவகையா இந்த ரகம் பைகள் சேர்ந்து கிடக்கு வீட்டுலே!

 விலை கொஞ்சம் கூடுதலுன்னு நானும், நியூஸியை விட விலை மலிவுதான். பத்து வருச இன்ட்டர்நேஷனல் கேரண்டீ வேற இருக்குன்னு அவருமா எண்ணம். ஆமாம்... பத்து வருசம் இந்தப் பையை வச்சுருக்கப் போறதுமாதிரிதான்......

 அப்படியே பார்த்து வச்ச ஷர்ட்ஸ்ம் வாங்கிக்கிட்டு காலாற நடந்து ஒரு ஆர்கேடுக்குள் நுழைஞ்சோம். கப் அண்ட் சாஸர்ஸ் விக்கும் கடையில் புது அலங்காரம் செஞ்சுக்கிட்டு இருக்காங்க. பூனை டீ ஜக் ஒன்னு நல்லா இருந்துச்சு.



 மால் கலகலன்னு இருக்கு. வீக் எண்ட் கூட்டம் வேற! பலூன்காரர் ரொம்ப மகிழ்ச்சியோடு இருக்கார். எங்க சாமிதான் ஒஸ்த்தின்னு சொல்லிக்கிட்டு இருந்தாங்க ஒருத்தர். இருந்துட்டுப் போகட்டும் எனக்கு பிரச்சனை இல்லை!


 கிங் ஜியார்ஜ் சதுக்கத்துக்கு வந்தோம். விழா ஆரம்பிச்சு ஃபுல் ஸ்விங்க்லே இருக்கு. 23 டாலர் டிக்கெட்டுலே 45 நிமிஷம் பனிச்சறுக்கு விளையாடிக்கலாம். ஸ்கேட்ஷூவும் தர்றாங்க. டவுன் கவுன்ஸில் முன்னால் இருக்கும் இடத்துலே தண்ணீரைத் தேக்கி Ice Skating Rink போட்டுருக்காங்க.

 Bobby is a seal skating aid ஒன்னு ஏழரைக்குக் கிடைக்கும். இது 12 வயசுக்குட்பட்ட பிள்ளைகளுக்கு மட்டும். ஆனா.... 2 டைம்ஸ் பன்னிரெண்டு வயசெல்லாம் அதுலே ஆட்டம் போட்டுக்கிட்டு இருந்தாங்க.. போனா வராது, பொழுது போனாக் கிடைக்காதுன்னு ...... கொண்டாட்டம்தான்.

 நமக்கோ........ ஐஸைப் பார்த்துப்பார்த்துப் போதுமுன்னு ஆகிருச்சு. எங்கூர்லே நம்ம வீட்டிலிருந்து ஒரு மணி நேர ட்ரைவ் போனால்.... முழுசா ஒரு ஏரியே உறைஞ்சு கிடக்கும். இலவச ஸ்கேட்டிங்தான். பக்கத்துலே இருக்கும் குன்றுச் சரிவில் கொட்டிக்கிடக்கும் பனியில் மெள்ள ஏறி ஒரு முப்பது மீட்டர் போனதும் ப்ளாஸ்டிக் விரிச்சு அதுலே உக்கார்ந்தால் சர்ருன்னு ஒரே சறுக்கு. சின்னப்பிஞ்சுகளையெல்லாம் கூட்டிவந்து அஞ்சாறு மீட்டர் சரிவில் உக்கார வைப்பாங்க. சறுக்கி வரும்போது சிரிப்பைப் பார்க்கணுமே!!!!

 பெரிய பெரிய ஸ்கீ ஃபீல்ட் இருக்குன்னாலும் அதுக்கெல்லாம் போய் ஆட நேரம் ஏது? ஒரு ஆசைக்கு இப்படி அநேகமா எல்லாக் குடும்பங்களும் வந்துரும். என்ன ஒன்னுன்னா..... முதல்நாள் நல்ல பனி பேய்ஞ்சு மறுநாள் நல்ல வெய்யில் இருக்கணும்!

 இங்கே வந்த புதுசில் நாங்க போடாத ஆட்டமா? இப்போ ஒன்னும் வேணாம். குளிர் குளிருன்னு கொஞ்சம் வெறுப்பாக்கூட இருக்கு. ஆனா இள ரத்தத்துக்குக் குளிர் தெரியாது.



 இங்கத்து மக்களுக்குக் குளிர்காலம் ரொம்பப் பிடிக்குமாம். ஈ ஒன்னும் இருக்காதே அப்போன்னு ஒரு சந்தோஷம். லிப்டன் சாய்க்காரங்க தனிக் கூடாரம் போட்டு உள்ளே ஃபயர்ப்ளேஸ், ஹீட்டர்ஸ் எல்லாம் வச்சு இருக்கைகள் போட்டு வச்சு அதிதி உபச்சாரம் செய்யறாங்க. இலவச ச்சாய் வேற! சூடாக் குடிச்சுக்கிட்டே ஸ்கேட்டிங் ரிங்க் பார்த்துக்கலாம்.

 ச்சாய் நல்லாத்தான் இருக்கு. ஆனால் பெரிய கப்! குடிச்சு முடிக்க நாலுநாளாகும் போல இருக்கு! வீட்டுலே போய் போட்டுக் குடிக்க இலவசப்பாக்கெட் நாலும் கொடுத்தாங்க. எல்லாம் அதுலே இருக்கு. கொதிக்கும் நீர் ஊத்துனால் போதும் ச்சாய் ரெடி!

 நல்லா ஹெவியா விளம்பரப்படுத்திக்கறாங்க லிப்டன் டீ நிர்வாகத்தினர்.


 எந்த ஊருக்குப் போனாலும் கிளம்பும் சமயம் வந்துட்டால்.... கொஞ்சம் ஃபீலிங்ஸ் ஆகிப்போகுதுல்லே? ஆன்ஸாக் சதுக்கம்வழியா அறைக்கு வந்துக்கிட்டு இருக்கோம். செயிண்ட் ஆண்ட்ரூஸ் சர்ச்சை உள்ளே போய்ப் பார்க்கலையேன்னு போனால்.... காலை 12 மணி வரைதான் திறந்திருக்குமாம் சனிக்கிழமைகளில்:( போயிட்டுப்போகுது. அடுத்த முறைக்கு வச்சுக்கிட்டால் ஆச்சு.

 எதிரில் ரயில் ஸ்டேஷனில் வண்டிகள் கிளம்ப ரெடியா இருக்கு. பேசாம ஏர்ப்போர்ட்டுக்கு ரயிலில் போகலாம். :"வேணாம்மா.... பெட்டிகளை உருட்டிக்கிட்டு தெருவிலே வரணும். " (வந்தால் என்ன ? )

 பகல் சாப்பாடு இப்போதைக்கு வேணாம். குடிச்ச ச்சாய் பசியைப் போக்கடிச்சுருச்சு:(   ஏர்ப்போர்ட் லவுஞ்சில் போய் (ஓசியில்) சாப்பிட்டுக்கலாம்.

 அறைக்கு வந்ததும் புதுப்பையிலே கொஞ்சம் பொருட்களை எடுத்து அடுக்கி அழகு பார்த்தார்! முகம் முழுசும் ஒரு பூரிப்பு! இப்போ நாம் போகப்போவது ஏர் நியூஸிலண்ட் விமானச்சேவை. அதுலே கோபாலுக்கு ரெண்டு கேபின் பைகள் அனுமதி உண்டு.

 சாமான்களை எடுத்துக்கிட்டு லாபிக்கு வந்தோம். கணக்கை முடிச்சுக்கிட்டு டாக்ஸிக்குச் சொன்னப்ப, அப்போதான் யாரையோ கொண்டு இறக்குன வண்டியே தயாரா இருக்குன்னாங்க.

 ஐயோ..... வேன்... வேணாமுன்னா.... ட்ரைவரைப் பார்த்துட்டு, இதுலேயே போலாமுன்னு கோபால் சொன்னார். ட்ரைவர் ஒரு இந்தியர். பஞ்சாப். லூதியானாக்காரர் வந்து ஒரு வருசம் ஆச்சாம். கொஞ்சம் கூட நளினமே இல்லாத சாரத்யம். நிதானமா போகச்சொன்னால்..... கேட்டுட்டாலும்.....

 சமையல் வேலைக்கு படிக்க வறேன்னு அளந்துட்டு விஸா வாங்கிக்கறாங்க. இங்கே வந்ததும் காசு சம்பாரிக்க எதாவது ஒரு வேலை கிடைச்சுருது..

 வடக்கே முக்கியமா தில்லி, சண்டிகர் பஞ்சாப் ஹரியானா பயணங்களில் எங்கே பார்த்தாலும் ஆஸி, நியூஸி, இங்கிலாந்து, அமெரிக்கா,கனடா போகணுமான்னு ஏகப்பட்ட விளம்பரங்களும் ஏஜன்ஸி ஆஃபீஸ்களும் பார்த்தோம். விஸா, டிக்கெட், படிக்கக் கட்டவேண்டிய ஃபீஸ், இங்கே வந்தால் தங்கவும் உணவுக்கும் ஆகும் செலவுக்குக் காசுன்னு எல்லாத்தையும் கூட்டிப்பார்த்தால் சில லட்சங்களுக்குக் குறையாது.. ஆனால் எப்படித்தான் சமாளிக்கலாம் என்ற தைரியத்தில் வர்றாங்களோ தெரியலை:(

 சென்னையில் இப்படி ஏஜன்ஸிகளின் விளம்பரம் பார்த்த நினைவில்லை எனக்கு. ஒருவேளை அந்த ஏரியாவுக்கு நான் போகலையோ என்னவோ!

 ச்சைனா டவுனைத் தாண்டும்போதுதான் .... அட இதை எப்படி மறந்தோமுன்னு நினைச்சேன். ப்ரிஸ்பேன் நதியையொட்டிப் போகும் சாலையில் பயணம். ஹொட்டேலை விட்டுக் கிளம்புன இருபத்தியஞ்சாவது நிமிசத்துலே ஏர்ப்போர்ட். வந்தோமுன்னா வேகம் எப்படி இருக்குமுன்னு பாருங்க.


ஆளரவம் இல்லாத விமான நிலையத்தில் எப்பவும்போல ஒரு கருப்புப் பசு நின்னுக்கிட்டு இருக்கு. நானும் ஒரு ஆறேழுவருசமாக் கவனிச்சுக்கிட்டுத்தான் இருக்கேன். இரத்தப்புற்று நோய்க்கு ஆளான சின்னஞ்சிறு சிறுவன் நாலுவயசு Lachlan வரைஞ்ச படங்களை,  தன் உடலெங்கும் தாங்கிப்பிடிச்சு நிக்கும் பசு. சிகிச்சை நடக்கும்போது ஏற்பட்ட பலவிதமான உணர்வுகளுக்கு வடிகாலா பெயிண்டிங் செஞ்சவைகள்.

 தூரத்தில் ப்ரிஸ்பேன் நகரின் வானளாவும் அடுக்குகள். 

செக்கின் செஞ்சுட்டு லவுஞ்சுப்போய் கொஞ்சம் சாப்பிட்டோம். அப்புறம் தமிழ்மணம் மேய்ச்சல். அஞ்சரைக்கு அறிவிப்பு வந்துச்சேன்னு நம்ம கேட்டாண்டை போனால்..... நம்ம டிக்கெட் ஆறரை மணி ப்ளைட்டுக்காம்.

 நாம் முதலில் செவ்வாய் மாலை மகளுடனே திரும்பிவர்றதாத்தான் திட்டம். அது இதே ஆறுமணி விமானம்தான். அதுக்குப்பிறகு கோபாலின் அலுவல் காரணம் எங்க ரெண்டு பேருக்கு மட்டும் இன்னும் நாலுநாள் கழிச்சு மாற்றி எடுக்கச் சொன்னப்ப, கோபால் ஆஃபீஸ்லே ட்ராவல் கவனிக்கும் நபர் செஞ்ச மாற்றம் இப்படி. ஜெட் ஸ்டாருக்கு ஏர் நியூஸிலேண்ட் தேவலைன்னு நினைச்சிருப்பார் போல!

 நல்லவேளை அரைமணி தாமதமானது. ஒருவேளை காலை ஃப்ளைட்டுக்கு மாற்றி இருந்தா? பொழுதன்னிக்கும் போறார் வாரார். அப்படி இருக்க ஏன் டிக்கெட்டை எடுத்துப் பார்க்கலைன்னா.......... ஙே..........

  'உன் கூட வரும்போது (பயத்தில்) உலகையே மறந்துடறேன்' னு சொல்லத் தெரியலை பாருங்க:-))))

 சரியா நடுராத்திரிக்கு விமானம் விட்டிறங்கி வர்றோம்.... எங்க முன்னாலே நடந்து போகும் பயணியின் ஜாக்கெட் பையில் ஒரு வாழைப்பழம் எட்டிப் பார்க்குது. அவரைக்கூப்பிட்டு பழமெல்லாம் கொண்டு போனால் 200 டாலர் ஃபைன், போர்டைப் பாருன்னா.... ஐயோ என்ன செய்யறதுன்னு முழிக்கிறார். பேசாம உரிச்சுத் தின்னுட்டுத் தோலை குப்பைத்தொட்டியில் போடு. ஆச்சு. ஒரு ஆஸி பயணியின் காசைக் காப்பாத்திக் கொடுத்த புண்ணியம் நம்ம கணக்குலே:-)

 சாப்பாட்டு ஐட்டம் இருக்குன்னு என் கார்டில் எழுதி வச்சுருந்தேன். என்னன்னு கேட்டப்ப ச்சாய் னு எடுத்துக் காமிச்சப்ப, அதிகாரியின் கண்ணில் மின்னல். அட சுடுதண்ணீ ஊத்துனாப் போதுமா!!!!

 ஆஹா.... அப்ப இன்னும் இது  நியூஸிக்கு வரலை போல!!!!

 டாக்ஸி பிடிச்சு வீட்டுக்கு வந்தப்ப மணி பனிரெண்டரை! வழியெங்கும் நாலுநாளைக்கு முன்னே விடாம ரெண்டு நாளாக் கொட்டுன பனி கெட்டிப்பட்டுக் கிடந்துச்சு.

 மறுநாள் 'ஞாயிறு' வீட்டின் புழக்கடைப் பனியைக் கரைக்க முயன்று கொண்டிருந்தது!

  கடைசியா ஒரு சேதி!  ' பயணம் முடிஞ்சு வந்து ஒரு மாசம் கழிச்சு கோபிட்வீன் ப்ரிட்ஜ் பாதையில் போனப்ப டோல் கட்டாம போயிட்டே. அதுக்கு 30 டாலர் அபராதம் கட்டணுமுன்னு நோட்டீஸ் வந்துருக்கு அதையும் உன் க்ரெடிட் கார்டுலே சார்ஜ் பண்ணிட்டோமுன்னு கடிதாசு போட்டுருக்கு வாடகைக்கார் நிறுவனம்! காரெடுக்கும் பயணிகளுக்கு எங்கெங்கே டோல் கட்டணுமுன்னு ஒரு விவரம் வச்சுருக்கக்கூடாதா?

 கண்ணுக்குப் புலப்படாத இடத்தில் டோல் பூத் வச்சுருந்தா நாம் என்ன செய்வது? இந்தியாவில் இருப்பது போல சாலையை வழிமறிச்சு வசூல் பண்ணத்தெரியலை பாருங்க:(

 போகட்டும் எல்லாம் நமக்கொரு படிப்பினைதான்.

 அதுக்காக பயணம் போகாமல் இருக்க முடியுமா?

 பயணம் உள்ளத்துக்கு நல்லது. ஆதலினால் பயணம் செய்வீர்!!! 



 பி.கு: எங்க ஊரில் டோல் ரோடு எதுவுமே இல்லை. இன்னும் சொன்னால் தெற்குத்தீவில் சாலைப்பயணம் முழுசும் இலவசமே! தைரியமா வாங்க:-))))

அத்தம் துடங்கி பத்தாம் நாள்.............

$
0
0
சரியாச் சொன்னால் இது கேரளா தசரா!! பத்து நாள் பண்டிகை இந்த ஓணம்.

 சிங்க மாசம்.... அட ..பயந்துட்டீங்களா? ஒன்னுமில்லைங்க. நாம் சித்திரை வைகாசின்னு ஆரம்பிச்சு பங்குனின்னு தமிழ் மாசப்பெயர்களைச் சொல்றோமில்லையா. இதுவே கேரளத்தின் மலையாள மொழியில் பனிரெண்டு ராசிகளை வச்சு மேஷம் முதல் மீனம் வரை. இங்கேயும் பாருங்க நாம் மேஷம் என்று சொல்றோம். அவுங்க மொழியில் அது மேடம்! (எஸ் மேடம்?)

 மேஷம் = மேடம் - சித்திரை
 ரிஷபம் = இடவம்-   வைகாசி
 மிதுனம் = மிதுனம்  -ஆனி
 கடகம்  =  கடகம் - ஆடி
 சிம்மம் =    சிங்கம் -ஆவணி
 கன்னி = கன்னி -   புரட்டாசி
 துலாம் =   துலா -   ஐப்பசி
 விருச்சிகம்  = விருச்சிகம் -  கார்த்திகை
 தனுசு = தனுர்  - மார்கழி
 மகரம்   =மகரம்  -  தை
 கும்பம்  = கும்பம்  - மாசி
 மீனம் =   மீனம் -பங்குனி.

 சிங்க மாசம் அத்தம் நாளில் ( ஆவணி மாச ஹஸ்தம் நட்சத்திரம் வரும் தினம்) ஓணத்திருவிழா ஆரம்பிக்குது. இன்றிலிருந்து பத்தாம் நாள் திருவோணம் நட்சத்திரம் வரும் தினம் ஓணப்பண்டிகை. மொத்தம் பத்து நாள் கொண்டாட்டம்.

நாள் நட்சத்திரமுன்னு சொல்றோம் பாருங்க.... இங்கே கேரளத்தில் இது ரொம்ப  முக்கியம். கொஞ்சம் வயசான பெரியவங்க  (முத்தச்சிமார்) நம்மை முதல்முதல் பார்த்துப் பரிச்சயம் செஞ்சுக்கும்போது , நாம் பேர் சொன்னதும் ,  'நாள் ஏதா?'ன்னு வாங்க.  விசாகம்ன்னு சொல்வேன்:-)

 மாவேலித் தம்புரான் தன் மக்களையெல்லாம் பார்க்க பாதாளத்திலிருந்து புறப்பட்டு வர்றார் என்பது ஐதீகம். ஏழு சிரஞ்சீவிகளில் மாவேலி(மஹாபலி)யும் ஒருவர் (மற்ற அறுவர்? வேத வியாஸர், பரசுராமர், அஸ்வத்தாமன், விபீஷணன், ஹனுமன், கிருபர். எட்டாவதா மார்க்கண்டேயன்கூட இந்த லிஸ்ட்டுலே சேர்ந்துக்கலாம். )

 மஹாவிஷ்ணு, தர்மசீலனாகிய அரக்க அரசர் மாவேலியை வஞ்சகமா 'கீழே' அனுப்பிய கதை உங்களுக்குத் தெரிஞ்சுருக்கும்தானே? மெய்யாலுமே தெரியாதுன்னா கொஞ்சம் இங்கே போய்ப் பாருங்க. நம்ம வீட்டில் எழுதிவச்சதுதான். உள்ளே வந்து பாருங்க.

  எண்டே பொன் ஓணம்

  மாவேலி வருந்ந திவசம்

  மாவேலி நேரத்தே வந்நூ

  மாவேலியை இங்கோட்டு வரான் பறயூ

  கண்ணீரு கொண்டொரு கறிவைப்பு.

 மகாபலியை வரவேற்க வீட்டு முற்றத்து வாசலில் போடும் பூக்களம்ன்னு சொல்ற அலங்காரம் பண்டைய நாட்களில் ஹஸ்த்தம் ( அத்தம்) நட்சத்திரம் வரும் நாளில் ஆரம்பிக்குமாம். விழாவின் முதல்நாள் இது. குடும்பத்திலே இருக்கும் ஆண்பிள்ளைகள் அத்தப்பூன்னு பூக்களை சேகரிச்சுக்கிட்டு வருவாங்களாம். அதைத்தான் பூக்களத்துலே முதல்லே வைக்கணும். அப்புறம் தினமும் வெவ்வேறு பூக்களைச் சேகரிச்சு அலங்கரிச்சுக்கிட்டே இருப்பாங்களாம்.இப்படியே 10 நாள் ஆனதும் அந்தக் கோலம் பிரமாண்டமாய் பெரூசா இருக்குமாம்.

 அடிக்கிற வெயிலுக்கு மொத நாள் வச்ச பூ வாடாம இருக்கணுமே!

 அந்தக் காலக் கொண்டாட்ட சமாச்சாரங்களைக் கொஞ்சம் பார்க்கலாம் இப்போ!

 அத்தத்தின் மறுநாள் சித்திர (சித்திரை நட்சத்திரம்) வீடெல்லாம் சுத்தப்படுத்தும் வேலை. பூக்களத்தில் இன்னும் ரெண்டு நிறமுள்ள பூக்கள் சேர்க்கப்படும்.

 மூணாம் நாள் சோதி (ஸ்வாதி நட்சத்திரம்) புதுத்துணி, நகை நட்டுன்னு ஷாப்பிங். பூக்களத்தில் இன்னும் நாலைஞ்சு பூ வகைகள்.

 நாலாம் நாள் விசாகம்(விசாகம் நட்சத்திரம்) பண்டிகைக்கு வேண்டிய புது அரிசி போன்றவைகளை வாங்கிக்கும் மார்கெட் டே! அறுவடை முடிஞ்சு உழவர், தங்கள் பொருட்களையெல்லாம் சந்தைக்குக் கொண்டு வரும்நாள் இது. பூக்களம் இன்னும் கொஞ்சம் பெருசாகும்.

 அஞ்சாம் நாள் அனிழம் (அனுஷம் நட்சத்திரம்) வள்ளம் களின்னு சொல்லப்படும் படகுப்போட்டிகளுக்கு தயாராகும் நாள். பூக்களத்துக்கு இன்னும் சில வண்ண மலர்கள் சேர்க்கை.

 ஆறாம் நாள் த்ரிக்கேட்ட ( கேட்டை நட்சத்திரம்) வெளியூரில் இருப்பவர்கள் எல்லோரும் வந்து சேரும் நாள். குடும்பமும் பூக்களம்போல் விரிவடையும்.

 ஏழாம் நாள் மூலம் (மூல நட்சத்திரம்) வீடுகளும் மற்ற ஸ்தாபனங்களும் விளக்குகளால் அலங்கரிக்கப்படும். குடும்ப அங்கத்தினர்கள் நிறையப்பேர் வந்துட்டதால் விசேஷ விருந்து சாப்பாடு. பாவம் அங்கே என்னத்தை சாப்பிட்டாங்களோ? எதெல்லாம் கிடைக்கலையோன்ற ஆதங்கம் பெரியவர்களுக்கு இருக்குமே! புலி வேஷம் போட்டு ஆடுதல், திருவாதிரக்களின்னு பெண்கள் வீட்டு முற்றத்தில் கூடி நிலவிளக்கு(குத்து விளக்கு) ஏத்தி வச்சு சுத்தி நின்னு ஆடுதல் எல்லாம் நடக்க ஆரம்பிக்கும் நாள்.
விழா களைகட்டத்  தொடங்கிரும்:-)


 எட்டாம் நாள் பூராடம் (பூராடம் நட்சத்திரம்) இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் யாராவது வீட்டில் இருந்தால் இன்று அவர்கள்தான் ஹீரோஸ். வீட்டில் உள்ள சிறிய மகாபலி, வாமனர் சிலைகளை நீராட்டி ஹீரோக்கள் கையால் அரிசி மாவு தடவி பூக்களத்தின் நடுவில் கொண்டு போய் வச்சு பூஜிக்கணும். இன்று முதல் அந்த சிலை(கள்) ஓணத்தப்பன். பூராட நட்சத்திரத்தில் பிறந்த யாரும் இல்லையா? நோ ஒர்ரீஸ்.... சின்னப்பசங்க எப்படியும் எல்லா வீடுகளில் இருப்பாங்கதானே? அவுங்களுக்குச் சான்ஸ் கொடுத்தால் ஆச்சு.

 ஒன்பதாம் நாள் உத்திராடம் (உத்திராடம் நட்சத்திரம்) ஓணத்தினு தலே திவசம். விருந்துக்கு வேண்டிய காய்கறிகள் வாங்கிக்கணும். பூக்களம் இன்னும் பெரூசா ஆகும். இந்த நாளை ஒன்னாம் ஓணம் என்று சொல்வாங்க.
 என்றும் சிரஞ்சீவியான மாவேலித் தம்புரான் பூமிக்குக் கிளம்பும் நாள்.

 பத்தாம் நாள் திருவோணம் (திருவோண நட்சத்திரம்) ரெண்டாம் ஓணமுன்னு சொன்னாலும் இன்னிக்குத்தான் மெயின் டே! ஓணசத்ய என்னும் ஓண விருந்து இன்னிக்கு குறைஞ்சது 21 அயிட்டத்தோடு தூள் பறக்கும். காணம் விற்றும் ஓணம் உண்ணனும் என்று பழஞ்சொல்லு.  விழா இத்தோடு முடிஞ்சுருச்சுன்னு நினைச்சுக்கப்பிடாது.

பதினொராம் நாள் அவிட்டம் நட்சத்திரம் மூணாம் ஓணம். இன்னிக்குப் பூக்களத்துலே நடுவில் இருக்கும் ஓணத்தப்பனை எடுத்து புழையில் நீராட்டி வீட்டுக்குக் கொண்டு வரணும். புலி டான்ஸ் எல்லாம் ஆடி முடிச்சு , பூக்களத்தையும் கலைச்சு எடுக்கும் நாள்.

 நாலாம் ஓணமான சதயம் நட்சத்திர நாள். பண்டிகைக்கு எடுத்த எல்லா சாமான்களையும் பாத்திரங்களையும் சுத்தம் செஞ்சு அடுக்கி வச்சுன்னு வீட்டு வேலை பெண்டு நிமிர்த்தும் நாள். இதுவும் ஒரு கொண்டாட்டமே! அப்பாடான்னு நிம்மதி கிடைக்கும் நாளாச்சே!

 திருவனந்தபுரம் அரசர் சம்பந்தப்பட்ட அரண்மனைக் கொண்டாட்டங்கள் எல்லாம் நாலாம் ஓணத்தோடு முடியும்.

 இதெல்லாம் இப்படி இருக்க நியூஸியில் நாங்க எப்படி இந்த வருச ஓணம் பண்டிகை கொண்டாடுனோமுன்னும் சொல்லணும்தானே:-)

 ஈஸ்ட்டரைத் தவிர எந்த விழான்னாலும் வார இறுதிக்குத்தான். எங்க மேல் பரிதாபப்பட்டு விழாநாள் சனிக்கிழமைகளில் அமைஞ்சா சந்தோஷம். முதல்நாள் இரவு ஒன்பது மணி போல் போய் சமையலுக்கு உதவி செஞ்சுட்டு வந்தோம். காய்கறிகளை வெட்டும் வேலை முடிஞ்சதும் ஒரு பத்தரை போல நாங்க திரும்பிட்டோம். ஆனால் சமையல் பொறுப்பு ஏத்துக்கிட்டவர் வேலைகளை முடிக்கும்போது நாலுமணியாம்.

 சுந்தரக்குட்டன்மார் பூக்களம் ஒருக்கான் தய்யாராயி:-)

 என் வகையில் ரசம் செஞ்சுக்கிட்டுப் போகணும். 120 பேருக்கு வர்றமாதிரி. காலையில் கொஞ்சம் சீக்கிரமா எழுந்து வேலையை ஆரம்பிச்சேன். பருப்பு ரஸம் கேட்டோ:-))))

 வேட்டியை  மடிச்சுக்கட்டு.....  தானாவே வந்துருது  பாருங்க:-))))

வண்டியில் வச்சுக் கொண்டு போகும்போதுதான் கொஞ்சம் பேஜாராப்போச்சு. தளும்பி விழாமல் கொண்டு போகணுமே! முப்பதுலே ஓட்டச் சொன்னால் பழக்க தோஷத்தில் ரெண்டே வினாடிக்குப்பிறகு அம்பதுக்குப் போயிடறார்:(

 பூக்களம் ஜொலிபோடு இருந்துச்சு. விளக்கை நடுவில் வைக்கலை. போயிட்டுப்போறது. விளக்கு உபயம் யாருன்னு விசாரிக்க மறந்துட்டேன். வழக்கமான வாழைப்பூ விளக்கில்லை:(

 எண்ணெய் ஊத்தித் திரியெல்லாம் போட்டு தயாராக்கினேன். நம்ம க்ளப்பில் இந்துக்கள் வகையில் ரெண்டு மூணுபேர்தான் இருக்கோம். விஐபி திரியைக் கொளுத்த ஒரு மெழுகுத்திரி வேணுமுன்னு தேடுனதில் நீளக்கேண்டில் ஒன்னை சர்ச் ஆல்ட்டரில் இருந்து அபேஸ் பண்ணினோம். கடன்தான். திருப்பி ஓசைப்படாம வச்சுட்டோமே!

 சுந்தரக்குட்டன்மார் ஒருக்கிய பூக்களம்:-))))) எங்கூர் ஸ்ப்ரிங் ஃப்ளவர்ஸும் தேங்காய்ப்பூவும்.

 இன்றைய முக்கிய விருந்தாளி நியூஸி பார்லிமெண்டின் உள்ளூர் அங்கம். நிக்கி வாக்னர் ( கிறைஸ்ட்சர்ச் செண்ட்ரல் தொகுதி) தாலப்பொலியொடு வரவேற்பு கொடுத்ததும் பிரமிச்சுப் போயிட்டாங்க:-)))))



 கம்பெனி கொடுக்க வேண்டியதாப் போச்சு. பூக்களம் பார்த்து இன்னொரு பிரமிப்பு. சின்னப்பேச்சில் கொஞ்சம் பண்டிகையைப் பற்றிச் சொன்னேன். சரியான அரசியல்வாதின்னு அடுத்த பத்தாவது நிமிசம் நிரூபணமாச்சு. குத்துவிளக்கை ஏத்தச் சொல்லி, எப்படின்னு காமிச்சுக் கொடுத்த சேஷம் மேடை ஏறினாங்க. சின்னப்பேச்சில் நான் சொன்னதெல்லாம் அப்படியே தன்வாய்மொழி!!!!!

 ஓணம் கதை சொல்லி வரவேற்பு முடிஞ்சதும் வழக்கம்போல் க்ளப் அங்கத்தினரின் நடனம் பாட்டுன்னு போனாலும் விசேஷ நிகழ்ச்சியா இருந்தவைகளை மட்டும் சொல்றேன்.

 மாவேலித் தம்புரான் தங்கக்குடை பிடிச்சு வந்தார். நாட்டுமக்களை விஸிட் செய்யும் திவஸமல்லே இது:-))))) அவரை மேடையில் இருத்தினோம். எங்க பசங்களுக்கு க்ரியேட்டிவிட்டி இருக்கு. ஆனால் அதை மிகச்சரியாக் கொண்டுவரத்தெரியலை:( ராஜாவு தானேவா குடைபிடிச்சுக்குவார்? ஆள் அம்போட வரவேணாமோ? அட்லீஸ்ட் குடை பிடிக்க ஒரு பணியாள்?

 இதே சென்னையா இருந்தால் ஒரு சிம்மாசனச்சேர் வாடகைக்குப்பிடிச்சு ராஜாவை உக்காரவச்சுருக்கலாம். (அதான் விழாக்களில் மந்திரிகளெல்லாம் ராஜாவாட்டம் போஸ் கொடுக்கறாங்களே ) இங்கே..... நோ சான்ஸ். உள்ளது கொண்டு ஓணம் என்றாச்சு.



திருவாதிரைக்களி, வள்ளங்களி பாட்டு, பரத நாட்டியம் இன்னும் சில பழைய பாட்டுகள் ஆனதும் மாவேலித் தம்புரானைக் கடத்திக்கிட்டுப் போயிட்டாங்க. ஒய்????? க்ரிஷ்ணனே அறியும்:-))))

 CKA Boys ( Christchurch Kerala Association) நிகழ்ச்சியில் கன்ஃப்யூஷன் தீர்க்கணுமேன்னு கிருஷ்ணன் வந்து கோபிகைகளுடன் ஆடினார்:-)))) உங்களுக்காக அது இங்கே:-))))

 க்ளப்புக்கு ஒருவெப்ஸைட்தொடங்கி இருக்கு.






பிள்ளைகளுக்கு மலையாளம் சொல்லிக்கொடுக்க வகுப்பு தொடங்கி இருக்காங்க.,. ஆசிரியருக்குப் பாராட்டுப் பத்திரம் வழங்கினார் மூத்த அங்கத்தினர்:-)))

 ஸ்போர்ட்ஸ் பிரிவில் (பேட்மின்ட்டன்) ஜெயித்தவர்களுக்கு தங்கப்பதக்கம்!!!! ஒலிம்பிக் சீஸனாச்சே:-))))


  'கிறைஸ்ட்சர்ச் கானகந்தர்வன்'  ஆலன் ஃபிலிப், சரியான வில்லனா மாறி இருக்கார். நடிப்பு ஏ ஒன், கிறைஸ்ட்சர்ச் சல்மான் கான், ஷான் இப்போ யூனி மாணவர். அவருடைய இயக்கத்தில் ஒரு குறும்படம் எடுத்து அதையும் மக்கள்ஸ்க்குப் போட்டுக் காமிச்சாங்க. படத்தின் பெயர் ப்ளாட்டர்.

 நடுவில் இருப்பவர் ஷான் த  இயக்குனர்:-)

ஒவ்வொன்னா நிகழ்ச்சிகள் முடிய ரெண்டேகாலாயிருச்சு. இலையில் விருந்து சாப்பாடு . கட்டாயம் இருந்து சாப்பிட்டுட்டுப் போங்கன்னு எம்.பியிடம் சொன்னதுக்கு சரின்னாங்க. இவ்ளோ நேரம் ஆகுமுன்னு எனக்குத் தெரியாதே:( ஒன்னரை ஆனப்போ பசிக்குதான்னு கேட்டேன். ஆமாம்ன்னு தலையாட்டுனாங்க. எனக்கே பாவமாப் போயிருச்சு.


கடைசி ஐட்டமா  எல்லா மொழிப்பாடல்களையும் கொஞ்சம் கொஞ்சம் கலந்துகட்டி மெட்லி மாதிரி ஒன்னு.   'அடி என்னடி ராக்கம்மா,   நான்தாண்டா பால்காரன், இப்படி.... அதுலே பாதி வரும்போதே  சபையில் உள்ள இளைஞர்களும் , இளைஞிகளுமா சேர்ந்து கூட ஆடி ஹால் முழுக்க ஓடின்னு ஒரே கலாட்டா.

திருதிருன்னு முழிச்ச  விஐபிக்கு  எங்க நாட்டுலே 22 அஃபிஸியல் லேங்குவேஜ் இருக்கு. அதனால்  வீ ஹேவ் மோர் ச்சாய்ஸ்ன்னதும் 22 ஆ...........  வாய் பிளந்தாங்க. நியூஸியில்  இங்லீஷ், மவொரின்னு  ரெண்டு இருந்து இப்ப சமீபமா மூணாவதா ஸைன் லேங்குவேஜைச்  சேர்த்துருக்காங்க.



 பாலடப்ரதமன், பருப்பு பாயஸம் சேர்த்து பதினாறு ஐட்டங்களோடு ஓண சத்ய.
 எதெது என்ன, எப்படி சாப்பிடணுமுன்னு சொல்லிக் கொடுத்துக்கிட்டே என் வேலையைக் கவனிச்சேன். ரொம்ப சமத்தா என்னைக் காப்பி அடிச்சாங்க. ஆனால் விரல்நுனி பளிச்சுன்னு இருந்துச்சு:( ஃபிங்கர் லிக்கிங் டேஸ்ட்:-))))

  ஓணம்  இன்னு வந்நல்லோ.......... எல்லாவர்க்கும் மங்களம் நேரிடுந்நு.

 பதிவுலக மக்கள் அனைவருக்கும் மனம் நிறைஞ்ச இனிய ஓணம் ஆசம்ஸகள்..

வசந்தம் வந்ததம்மா............

$
0
0
ஜாதகம் பார்த்ததுலே மூணு மாசமா ஆட்டிவச்சது இன்றோடு முடிஞ்சுருமுன்னு சொன்னாங்க. ரொம்பச்சரி! ஒரு வழியா குளிர்காலம் முடிவுக்கு வருது. நாளைமுதல் அஃபீஸியலா வசந்தம்.

 அப்ப அடையாளம் உண்டா? உண்டே! பல்புகள் எல்லாம் முளைக்கத்தொடங்கி ஹலோ நலமான்னு கேட்கும் விதமா புன்சிரிப்பைக்காட்டி முதலில் வந்தவை,  டாஃபோடில்கள்.

 நம்மூர்லே இந்த டாஃபோடில் பூக்களுக்கு இன்னொரு விசேஷ மரியாதை உண்டு. ஒவ்வொரு வருசமும் ஆகஸ்ட் மாசம் கடைசி வெள்ளி டாஃபோடில் டே! இந்த வருசம் இது இன்றைக்குத்தான்! மக்கள் கூடும் எல்லா இடங்களிலும் பரவலா உண்டியல் குலுக்கி வசூலாகும் தொகை முழுசும் கேன்ஸர் சொஸைட்டிக்குப் போகுது. நமக்கும் சட்டையில் குத்திக்க ஒரு (செயற்கை) பூ கொடுப்பாங்க. இந்த வருசம் 7000 வாலண்டியர்கள் உண்டியல் குலுக்க முன்வந்துருக்காங்க(ளாம்)

 இதுதான் எனக்குக் கொஞ்சம் பேஜாரு. இந்தப்பூவை செஞ்சு கொடுக்கும் கம்பெனிக்கு வசூலாகும் பணத்தில் ஒரு பகுதி போயிருதே. அதுக்குப் பேசாம இந்த ஊரில் கும்பல்கும்பலாப் பூத்திருக்கும் பூக்களையே ஒன்னு கொடுக்கலாம்.

 எங்க நியூஸிக்கு மேலே வானத்துலே பொத்தலாம். ஓஸோன் லேயரில் ஓட்டை! அதனால் வெய்யில் அடிக்கும் போது ( அடிச்சுட்டாலும்!) வெளிப்படும் UV Rays களினால் பாதிப்பு அதிகமுன்னு சொல்றாங்க. ஸ்கின் கேன்ஸர்தான் அதிகமாம். மூணு பேரில் ஒருத்தருக்கு கேன்ஸர்ன்னு இதுக்கான சொஸைட்டி சொல்லுது. இதைப்பற்றி இன்னொரு சமயம் விரிவாப் பார்க்கலாம். இப்போ..... டாபிக் வசந்தம்.

 எங்கூர் பொட்டானிக் கார்டனில் டாஃபோடில் லான் என்றே ஒரு பகுதி இருக்கு. அது பாட்டுக்குக் காடாய்ப் பூத்துக்குலுங்கும். இந்தப்பகுதியை ஒட்டியே சாலை இருப்பதால் போகும்போதும் வரும்போதும் கண்ணில் படாமப்போக நோ ச்சான்ஸ்:-)

 நல்ல மஞ்சள் நிறத்தில் ஆறு இதழ்கள் வெளிப்புற வட்டத்தில். நடுவில் இன்னும் கொஞ்சம் அழுத்தமான மஞ்சள் நிறத்தில் குட்டியா ஒரு கப். பார்க்க படு நேர்த்தி! நடுவில் மஞ்சளுக்குப் பதிலா ஆரஞ்சுகூட இருக்கும் சில வகைகள் உண்டு. வெளிவட்டம் முழுசும் வெள்ளை நிறமாவும் உட்புறம் நெளிநெளியா விளிம்பு வச்சக் குட்டிட் டம்ப்ளர் ஆரஞ்சு இல்லை மஞ்சளாகவும் பூக்கும் வகைகளும் உண்டு.

பெரிய பூக்கள் இல்லாமல் குட்டிக்குட்டிப் பூக்கள் உள்ள மினியேச்சர் வகைகளும் உண்டு, பொதுவா டாஃபோடில் செடிகள் லேசா விஷ குணமுள்ளது என்பதால் எந்தப் பூச்சிப்பொட்டும் விஷப்பரிட்சை செய்ய அண்டாது கேட்டோ! . நோ ஹனி டூ:( சுமார் அம்பது வகைகள் இருக்காமே இதுலே! ரோஜாப்பூவை காதலுக்கு அடையாளமாச் சொல்வதைப்போல டாஃபோடில்கள் நட்புக்கு அடையாளமாம். ஃப்ரெண்ட்ஷிப் டே க்கு ஒரு கொத்து டாஃபோடில்ஸ் இனி கொடுத்துடலாம் இல்லே?

 இந்த பூக்களில் ஹைப்ரீடு வகைகள் மட்டுமே பதிமூணாயிரம்வரை இருக்குன்னு டாஃபோடில் டாட்டா பேங்க் சொல்லுது!!!!

 ஸ்பெயின், போர்ச்சுக்கல், துருக்கி போன்ற பிரதேசங்களில் இருந்துதான் டாஃபோடிலின் மூத்தகுடி வந்திருக்குன்னு ஒரு ஆராய்ச்சி சொல்லுது. காலம் 2300 ஆண்டுகளுக்கு முன்பு!

 ரோமானியர்களும், கிரீஸ் நாட்டுக்காரர்களும் , மருத்துவ குணமிருக்குன்னு இதை நிறையப் பயன்படுத்தி இருக்காங்க. பதினேழாம் நூற்றாண்டின் ஆரம்பங்களில் இங்கிலாந்துக்கு இது போனது ரோமானியர்கள் தயவால்.

 இலை உதிர் காலக்கடைசியில் கொஞ்சம் பல்பு வாங்கி தோட்டதில் நட்டு வச்சால் போதும். வருசாவருசம் டாண்ன்னு தானே முளைச்சுக்கும். குளிர்காலத்தில் மனம் நொந்து கிடக்கும் மக்களுக்கு டாஃப் பார்த்தவுடன் மறு ஜென்மம் எடுத்தது போல் இருக்குமாம். வியாபாரத்துக்கு விளைவிக்கும் தோட்டங்களுக்கு அடிச்சது ப்ரைஸ். பத்துப்பூக்கள் இருக்கும் கொத்து எட்டு டாலர்கள்ன்னு பூக்கடைகளுக்கு ஆகஸ்ட் முதல் வாரமே வரத்தொடங்கும்

 சீஸன் சமயத்தில் அம்பது செண்டுக்கு அள்ளிக்கோ அள்ளிக்கோதான். கட் ஃப்ளவருக்காகவே அவதரிச்சது போல நீளமான தண்டுகளின் உச்சியில் பூ மலர்ந்து நிக்கும். பறிக்காமல் செடியிலேயே விட்டு வச்சால் குறைஞ்சது ரெண்டு வாரத்துக்கு ஜம்முன்னு நிற்பது கேரண்ட்டீ:-)

 வியாபாரநிமித்தம் வளர்க்கப்படும் செடிகள், பூத்து முடிச்சு ரெண்டு மூணு மாசத்துலே இலைகள் எல்லாம் பழுத்துக் காயத்தொடங்குனதும் செடிகளைத் தோண்டி அடியில் உள்ள கிழங்குகளை எடுத்துத் தனியா ஒரு காற்றோட்டமான இடத்துலே வச்சுக் காயவைப்பாங்க. அப்படியே ரெஸ்ட் எடுத்துக்கிட்டு இருக்கும் கிழங்குகளை மீண்டும் குளிர் காலம் வர ஒரு மாசம் இருக்கும்போது நட்டுவைப்பாங்க.

 கிழங்கின் உயரம் போல மூணு மடங்கு ஆழமான குழியில் நட்டுவைக்கணும். தண்ணிர் எதுவும் ஊத்த வேண்டிய அவசியமே இல்லை. அது பாட்டுக்குக் குளிர்காலம் முழுசும் வளர்வதற்கு ஆயுத்தம் செஞ்சுக்கிட்டே இருந்து வசந்தம் ஆரம்பிக்கும்போது தலையை வெளியே நீட்டிரும்.

 நம்மைப்போல இருக்கும் மக்கள்ஸ்க்காக பல்புகளே கடையில் விற்பனைக்கு வந்துருது. நோகாம நோம்பு கும்பிட்டுக்கலாம்.

 நம்ம பதிவில் இருக்கும் அத்தனை மலர்களையும் நண்பர்களுக்கு நட்பின் அடையாளமாகப் பகிர்ந்தளிக்கிறேன்.

 இணைய நட்புகளை இணைக்கும் பூ!!!!.

நோகாமல் வடை 'சுடுவது' எப்படி?

$
0
0
என் சொல்பேச்சு கேக்காத பலகாரங்களில் எப்பவும் முன்னுக்கு வந்து நிற்பது இந்த வடைதாங்க. அதிலும் உளுந்துவடைதான் சரியான தகராறு பிடிச்சது. 

நமக்கு ஃபேவரிட் சமாச்சாரம் மசால்வடைதான். போன ஜென்மத்தில் எலியாக இருந்ததன் விளைவு. அதுக்காக மத்த வடைகளைப்  புறம் தள்ளக் கூடுமா?

 உளுந்தை ஊறப்போட்டு எவ்வளவுதான் பக்குவமா அரைச்சாலும் சுடும்போது அது போண்டா! சரி...பதிவர் சந்திப்புக்கு ஆச்சுன்னு வச்சுக்கலாம்தான். ஆனால் சக பதிவருக்கு எங்கே போறது?

 நேயடுவுக்கு வடை மாலை போடணுமுன்னா கடைசியில் அது போண்டா மாலையாத்தான் முடியும்! அவர் கொடுத்து வச்சது அவ்ளோதான். அதுக்கு யார் என்ன செய்ய முடியும், சொல்லுங்க?

 வடைவரலைன்னு புலம்புனதைக்கேட்ட தோழி (இலங்கைத்தமிழர்) ஓசைப்படாம ஒரு நாள் வடைமாலை கொண்டுவந்து நம்ம அனுமனுக்குப் போட்டார். வடிவம் அளவு, நடுவில் உள்ள ஓட்டை எல்லாம் சரியாவே இருந்துச்சு. ஆனால் இது வடைமாலைக்கான (அப்ரூவ்டு )வடை அல்ல. ருசி அருமை. இதுக்குத்தான் நேயடு வீட்டில் இருக்கணும். அவர்தயவில் நமக்கு வடை கிடைச்சுருது பாருங்க;-)

 தோழியும் வடை ரகசியங்கள் பலதையும் சொல்லிக் கொடுத்தாங்க. மாவு அரைச்சு அதை ஃப்ரிஜ்ஜுலே ஒரு மணி நேரம் போல வச்சுட்டா கெட்டிப்பட்டுரும். வடை தட்ட எளிது.

 இன்னொரு சமையல் குறிப்பில் இருந்துச்சு, அரைமணி நேரம் மட்டுமே உளுந்தை ஊறவைக்கணும். இப்படி வடைக்குறிப்பை எங்கே பார்த்தாலும் ஆவலோடு படிச்சுருவேன். அப்படியாவது வடைகலை கைக்கு வருதான்னு.

 ஊஹூம்....... 

ஒரு சமயம் இங்கே புதுசா ஒரு இண்டியன் கடையில்( வந்து ரெண்டரை வருசமாச்சுதாம். ஆனால் அப்போ நான் நாட்டில் இல்லை!) ஃப்ரீஸர் செக்‌ஷனில் காய்களைத் தேடும்போது பளிச்ன்னு கண்ணில் ஆப்ட்டது ரெடி டு ஈட் உளுந்துவடை. ஆஹா...... இப்படியெல்லாம் வர ஆரம்பிச்சுருச்சா என்ன?

 அந்தப்பகுதியை நிதானமா ஆராய்ஞ்சதில் ஏகப்பட்ட சமாச்சாரங்கள் எனக்காகவே இருக்கு! பருப்பு வடை, உளுந்துவடைன்னு வடைகளில் ரெண்டு பிரிவு. கேரளாவில் இருந்து வரும் ஐட்டம்ஸ். சாம்பிள் பார்க்க ரெண்டும் வாங்கியாந்தேன்.

 உளுந்துவடையுடன் தேங்காய்ச் சட்டினி. பேஷ் பேஷ்! பேக்கெட்டில் ஆறு வடைகள். ஒவ்வொன்னும் குண்டு குண்டாய் பெரூசு! உறைஞ்சு போய் கிடக்கு. ஒரு மணி நேரம் வெளியில் எடுத்துவச்சு ரூம் டெம்ப்ரேச்சருக்கு வந்ததும் கொஞ்சம் எண்ணெயில் இன்னொருக்கா ஒரு ரெண்டு நிமிசம் பொரிச்செடுக்கணும். லேசா ஒரு கரகரப்போட வரும். இல்லைன்னா மைக்ரோவேவில் சூடாக்கலாம். க்றிஸ்ப்பா இருக்காது. வடிவம் எல்லாம் பொதிக்குள்ளே அமுங்கி கொஞ்சம் இப்படி அப்படின்னுதான் இருக்கு. ஆனால் ருசி ஓகே! கையால் கொஞ்சம் அமுக்கினால் எண்ணெய் கூடுதலா இருப்பது தெரியுது. இவ்ளோ எண்ணெய் எதுக்கு? உடம்புக்கு நல்லதில்லையே:( அடங்கு மனசே..... தினமுமா தின்னப்போறே? என்றைக்காவது ஒரு நாள்தானே? வடை ஆசையையும் ருசியையும் மறக்காமல் இருக்க ரெண்டு மாசத்துக்கு ஒருக்கா போதுமே!

 பருப்புவடை என்னவோ கொஞ்சம் மென்னியைப் பிடிக்குது. ஊஹூம்..... சும்மாத்தின்ன கஷ்டம். பேசாம மோர்க் குழம்புலே தூக்கிப்போட்டேன். அருமை!

 மற்ற அவைலபிள் ஐட்டம்ஸ் பற்றி அப்பப்பச் சொல்வேன் கேட்டோ! பதிவு சமாச்சாரம்:-)))

 நிலநடுக்கம் வந்து ஊர் அழிஞ்சபின் சிட்டியில் இருந்த வீட்டு உபயோகத்துக்கான மின்சார சாதனங்கள் கடைகள் எல்லாம் போயே போச். அதுக்காக வியாபாரத்தை மூட முடியுமா? தாற்காலிகமா ஒரு இடத்தில் கடை போட்டு இருக்கும் பொருட்களையெல்லாம் ஸேலில் வித்துக்கிட்டு இருக்கு ஒரு நிறுவனம். நாப்பது டாலர் சமாச்சாரங்கள் எல்லாம் பதினாலுக்குப் போட்டுருக்கு. இப்படியே மற்ற எல்லா பொருட்களும் நல்ல தள்ளுபடியில் 65 இஞ்சு டிவி ஒன்னு நல்ல மலிவு. அதுக்கு ஏற்ற சுவர் நம்மிடம் இல்லை:(



 டோனட் மேக்கர் ஒன்னு பார்த்தேன். நான் அதைக் கையில் எடுத்ததும் 'வடையா?' என்றார் கோபால். அப்பாடா..... வாங்கும் பொருளை நியாயப்படுத்த வியாக்கியானம் கொடுக்கும் வேலை மிச்சம்:-)

 முதலில் நோகாம ஒரு சொந்த சாஹித்த்யத்தில் செஞ்சு பார்த்துட்டு அப்புறமா பாரம்பரிய சமையலுக்குப் போகலாமேன்னு..........

 முயற்சி திருவினை ஆக்குமுன்னு சும்மாவாச் சொல்லி இருக்காங்க!!

 மகள் வந்ததும் ஓசைப்படாம எடுத்து நீட்டுனேன். மனசுக்குள்ளே மட்டும் திக் திக். கினிபிக்கை சமாளிச்சுடலாம். ஆனால் ஃபுட் க்ரிட்டிக்கை? ஒன்னும் சொல்லாம சாப்பிட்டு முடிச்சாள்.

 எப்படி இருந்துச்சு?

 வாட் ஸ்பெஷல் அபௌட் இட்? யூ ஆல்வேஸ் மேக்.

 ஆஹா....வெற்றியோ வெற்றிதான்.

 இன்னும் கொஞ்சம் dos and don'ts தெரிஞ்சுக்கணும் அனுபவம் பெரிய பாடம்:-)

 வாங்க, செய்முறை பார்ப்போம்.

 தேவையான பொருட்கள்:

 ஒரு கப் ரெடிமேட் உளு(த்தம்)ந்து மாவு.
 பெரிய வெங்காயம் 1 (பொடியா நறுக்கிக்கணும்)
 பச்சை மிளகாய் 4 ( பொடிசா அரிஞ்சது)
 கருவேப்பிலை 1 இணுக்கு ( இதயும் பொடியாவே அரிஞ்சுகுங்க)
 உப்பு முக்கால் டீஸ்பூன்
 பெருங்காயத்தூள் ரெண்டு சிட்டிகை
 எண்ணெய் அரைக் கப்

 ஆக்கம்:-)

 மேலே சொன்ன பொருட்கள் எல்லாத்தையும் ஒன்னாச்சேர்த்து தண்ணீர் விட்டு வடை மாவு பதத்துக்குக் கலக்கி வச்சுக்குங்க.

 நம்ம வடை மேக்கரை (?!!) ப்ளக்கில் பொருத்தி ஆன் செஞ்சுருங்க. டேஞ்சருன்னு சிகப்பு விளக்கு ஒளிரும்:-) அஞ்சு நிமிசத்தில் சூடாயிருச்சுன்னு விளக்கு அணைஞ்சுரும்.

 கலக்கி வச்சுருக்கும் வடை மாவை ஒர் ஸ்பூனால் கோரி வடைக்குழியில் ஊத்திட்டு மூடியை கவுத்துடலாம்.. அஞ்சாறு நிமிசங்களில் திறந்து பார்த்தால் டடா............ முக்கால்வாசி வெந்து மேற்புறத்தில் வெள்ளை மாவு தெரியும். லேசா திருப்பிப்போட்டு மூடியைக் கவுத்தால் போதும். நாலு நிமிசத்தில் இப்படி இருக்கும்.

 மேற்படி அளவு மாவுக்கு, பாந்தமா பனிரெண்டு வடைகள் வந்துச்சு. சுட்ட எண்ணெய் மீதியாகும் சங்கடம் ஒன்னும் இல்லையாக்கும் கேட்டோ:-)

கற்றதும் பெற்றதும்

$
0
0
கடந்துபோன (?) குளிர்காலத்தில் செய்த பரிசோதனைகளும் முடிவுகளும் என்னன்னு பார்க்கலாமா?

 தோட்டம்தான் பாடாய்ப் படுத்திருது. நம்ம ஊர்வேற பெண்களூருக்கு தங்கை என்ற உறவுமுறையில் இருப்பதால் தோட்டநகரம் என்ற பெயரைக் காப்பாத்த வீட்டுவீட்டுக்குக் கொஞ்சமாவது தோட்டப் பராமரிப்பு தேவைப்படுதே!

 முதலில் நம்ம தாமரைக்குளம். குளிர் காலம் வரும்போது டிவியில் வரும் வெதர் ரிப்போர்ட் பார்த்துட்டு ( இங்கே இதை 99% நம்பலாம்) பத்து டிகிரிக்குக் கீழே என்றால் ஒரு தெர்மாக்கோல் பலகை(??!!) போட்டு சாயங்காலம் அஞ்சு மணிக்கு மூடி வைக்கணும். காத்தில் பறந்து போகாமல் இருக்க நாலு மூலையிலும் ரொம்பகனமான ஒரு செங்கல்.(நைட் ஸ்டோரேஜ் யூனிட்டில் இருந்து எடுத்தது) வைக்கணும். காலையில் மறக்காமல் இதை அகற்றிடணும். திரும்ப மாலையில் இதுபோல......

 தண்ணீர் உறையும் குளிர்காலம் வந்துட்டால் புழக்கடைப்பக்கம் போகவே படு சோம்பல். ஆனாலும் தாமரையைக் காப்பாத்த அஞ்சு வருசமாப் படாத பாடு பட்டுட்டு, வீட்டை வாடகைக்கு விட்டுட்டு இந்தியா வந்தப்பக், குடித்தனக்காரர்கள் நமக்கு இனி தோட்ட வேலையே வேணாமுன்னு சுத்தமா எல்லாத்தையும் சாகடிச்சுட்டுப் போயிருந்தாங்க.

 எதையும் தாங்கும் இதயம் இதையும் தாங்குச்சு. வாட்டர்கார்டன் கடையில் சொல்லி வச்சு திரும்பத் தாமரைக்கிழங்கு வாங்கி சேவைகள் செய்து அதுலே மொட்டு வந்து மலர்ந்ததும்தான் மஹாலக்ஷ்மி வந்துட்டாடான்னு நிம்மதி.

 இந்த வருசக்குளிர் ஆரம்பிக்குமுன் பரிசோதனையா இருக்கட்டுமுன்னு ரெண்டு செடிகளையும் பக்கெட்களுக்கு இடம் மாற்றி கன்ஸர்வேட்டரியில் வச்சேன். மூணு மாசம் கப்சுன்னு இருந்தவை ஆகஸ்ட் கடைசியில் புது இலைகளை வெளியே கொண்டுவந்து காமிச்சது.


 எங்கூரில் செப்டம்பர் ஒன்று முதல் வசந்தம் என்பதால் (நம்பிக்கைதான் வாழ்க்கை) தாமரைகளை குளத்திற்கு மாத்துனேன். குட்டியா மூணு மொட்டுகள் அடிப்பாகத்துலே தலை நீட்டுது:-)

 போகைன்வில்லாச் செடியையும் கொய்யாமரத்தையும்(?) காக்டெஸ் கன்ஸர்வேட்டரியில் (ரெண்டு கன்ஸர்வேட்டரி இருப்பதால் வேறு படுத்திக்காட்ட இப்படி ஒரு அடையாளப்பெயர் கேட்டோ! )

 குளிர்கால இடமாற்றமுன்னு வச்சதால் அவை இரண்டும் தப்பிச்சது மட்டுமில்லாமல் காகிதப்பூ பூக்கத்தொடங்கி குளிர்காலமுழுசும் கலர் காமிச்சுக்கிட்டே இருந்துச்சு. கொய்யாவும் ஏற்கெனவே இருந்த பிஞ்சுகளையெல்லாம் கொட்டித் தீர்க்காம நிதானமா தினம் ஒன்னு என்று மூத்துப் பழுத்த பழத்தை சப்ளை செஞ்சது. ( தினம் ஃப்ரெஷ் ஃப்ரூட் சாப்பிடணுமுன்னு டாக்குட்டர் சொல்றாங்க)


 பாலியந்தஸ் என்று சொல்லப்படும் ப்ரிம்ரோஸ் செடிகள் வெளியில் தோட்டத்தில் போன சம்மருக்கு நட்டவைகள் குளிர் ஃப்ராஸ்ட் எல்லாத்தையும்தாக்குப்பிடிச்சு நின்னது இதுவரை நான் கவனிக்காத ஒரு விஷயம். குளிர்கால டிப்ரெஷனைப் போக்கவும் கலர் பார்க்கவும்(!) சில செடிகளை வாங்கியாந்து கன்ஸர்வேட்டரியில் வச்சுருந்தேன்.

 மருக்கொழுந்துச்செடி ( இங்கே இதுக்கு மார்ஜோரம் என்னும் பெயர்) கொஞ்சம் காய்ஞ்சமாதிரி இருந்தாலும் தப்பிப் பிழைச்சுருச்சு. லாவண்டரும் அப்படியே! இவையெல்லாம் வெளியில் இருந்தன.

 எலுமிச்சை மண்டையைப் போட்டுருச்சு:(

 நம்ம வீட்டுலே ஒரு ஆறுமாசமா புதுவரவு வெத்திலைச்செடி! எட்டு இலை வந்தாச்சு. இனி வெத்தலைபாக்கு வச்சு(ம்) அழைக்கலாம்.

 இம்பேஷின்ஸ் என்று ஒரு வகைச்செடி. இதுவும் பெயர் தெரியாத இன்னொரு செடியும் கன்ஸர்வேட்டரியிலே வச்சுருந்ததால் இன்னும் உயிரோடும் மலரோடும் இருக்கு:-)



 ஏதோ மீலி பக்ஸ் பீடிக்கும் நோய் வந்து சாகத்தெரிஞ்ச வாழையை மனசைக் கல்லாக்கிக்கிட்டு இலைகளைத் தரிச்சதால் ப்ளேகேர்ள் மாதிரி நின்னது இப்போ இன்னும் நாலு இலைகளோடு!

 காஃபிச் செடியும் இதே மீலிபக்கால் மண்டையைப்போட்டதால் சொந்தக்காஃபிக்கொட்டையில் காஃபி குடிக்கும் அதிர்ஷ்டம் கைநழுவிப்போயிருச்சு:( மொட்டை அடிச்சு வச்சுருக்கேன். வேரிலும் தண்டிலும் உயிர் உள்ள அடையாளம் தெரியுது. பார்க்கலாம்.

 கருவேப்பிலையும் நோயில் அடிபட்டு மீண்டு வந்துருக்கு.(டச் வுட்)

 ஏர்லி சியர்ஸ் என்று பெயர் உள்ள ஒரு வசந்தகாலப்பூக்கள் பல்பு நட்டதால் முளைச்சுவந்து மலர்களோடு நிக்குது. டாஃபோடில் குடும்பமுன்னு சொல்லிக்கலாம். ஒரு கொத்தில் நாலைஞ்சு வெள்ளைப்பூக்கள். பார்க்க நம்மூர் குண்டு மல்லிபோல இருக்கு. நல்ல மனசை மயக்கும் நல்ல நறுமணம்.

 ஹையஸிந்த Hyacinths மலர்கள் தானாகவே பூக்கத்தொடங்கியாச்சு. அஞ்சாறு வருசமாக் கடமை தவறாமல் செயல்படும் வகை!

 எல்லோரும் அவரவர் கடமையை மறக்கூடாதுன்னு செடிகள் நமக்குக் கற்பிக்கின்றனவே!!!! கடமை கடமைன்னதும் இன்னொரு முக்கிய விஷயம் நினைவுக்கு வருது. நமக்கு எழுத்து மட்டுமா கடமை? பயணம் கூடத்தானே?

 சனிக்கிழமை பயணம் போகணும். சிங்காரச்சென்னை அழைத்துவிட்டது.   துளசிதளம் மாணவக் கண்மணிகளுக்கு லீவு விட்டாச்சு.  இனி அடுத்த மாசம்தான் வகுப்புக்கு வரணும்,கேட்டோ!

டீச்சரைக்காணோமுன்னு யாரும் அழாதீங்க:-)

 ஆங்............... டீச்சர்ஸ் டே வேற இன்னிக்கு. யாருக்காவது நினைவிருக்கோ? அனுபவப்பாடம் சொல்லித்தரும் இயற்கையை விட மேலான ஆசிரியர்கள் உண்டோ?

 அகில உலக ஆசிரியர்களுக்கு இனிய வாழ்த்து(க்)கள்.

எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது......

$
0
0
முகம் ஏன் வாடி இருக்கு? சிரிப்பையே காணோம்? எதுக்கு இவ்ளோ டென்ஷன்? சந்தோஷமா சிரிச்சுக்கிட்டு இருங்க இப்படி ஆளாளுக்கு வந்து சொல்லிட்டுப் போறாங்க. வேர்த்து விருவிருத்துக் கிடக்குறேன்.... கண்ணில் திரையிடும் கண்ணீர் வேற! இருக்காதா பின்னே.... புருசனுக்குக் கல்யாணம் பண்ணி வைக்கறதுன்னா சும்மாவா?

 போதாக்குறைக்கு இன்னைக்கு பந்த் ன்னு ஒரு அறிவிப்பு. அழைப்பை ஏற்று வர்றோமுன்னு சொன்ன மக்கள்ஸ் வந்து சேரணுமே என்ற கூடுதல் கவலை வேற இப்போ...... காலையில் இருந்து செல்பேசி விடாம அலறிக்கிட்டே இருக்கு. உள்ளுர் தோழியிடம் என்னப்பா...உங்க ஊர்லே பந்துன்னு சொல்றாங்கன்னபோது.... நீ இதுக்கெல்லாம் கவலைப்படாதே பந்த் அது பாட்டுக்கு நடக்குமுன்னு சொல்லி இருந்தாங்க.

 நம்ம வீட்டில் ஒரு விழா கொண்டாடணும். கொண்டாடியே தீரணும் என்ற வெறியில் நான் இருந்தப்ப......... சொல்லிவச்சதுபோல் ஒரு பெரிய இழப்பு சம்பவிச்சுப்போனதும்..... மனசில் திகில்தான். வெறியெல்லாம் கலஞ்சு போய் நடத்தலாமா வேணாமான்னு ஒரு யோசனை. இவ்வளோ நடந்துருக்கு.... இப்பப்போய்..... பேச்சு வருமோன்னு கலக்கம்.

 ஆனால் மனுச வாழ்க்கையில் ஒருமுறை வரும் சமாச்சாரத்தை எதுக்காக வேணாமுன்னு விடணும். இதுக்காகவே இன்னொரு ஜென்மம் எடுத்து வரணுமா? அப்படியே வேற ஜென்மம் எடுத்து பிறக்கும்போது வேற ஒரு ஜீவராசியா இருந்துட்டா? சான்ஸே இல்லை.... ஊஹூம்..... பேசாம இப்பவே சின்ன அளவில் கொண்டாடிக்கலாம் என்ற முடிவுக்கு வந்தேன்.

 நல்லவேளையா இந்த விழாவுக்கு மட்டும் ஓராண்டு கெடு இருக்கு. அதுக்குள்ளே எப்பவாவது நடத்திக்கலாம் என்றதன் பேரில் கொஞ்சம் ஆறப்போட்டேன். பஞ்சாங்கத்தை எடுத்து வச்சுக்கிட்டு எப்போ வச்சுக்கலாம் எப்படி வச்சுக்கலாமுன்னு ஆராய்ச்சி ஒரு பக்கம்!

 பேசாம ஊர்லே கல்யாணம் வச்சோமுன்னா சொந்தபந்தங்களுக்கு லகுவா இருக்கும். நமக்கோ குடும்பம் ரொம்பப்பெருசு.. அவ்ளோபேரும் ப்ளேன்காரனுக்குக் காசைக்கொட்டணுமா?

 இந்தப் பக்கங்களில் நிகழ்ச்சிகளையோ விழாக்களையோ நடத்த ஒரு ஈவண்ட் ஆர்கனைஸரைப் பிடிச்சால் போதும். நம்ம விருப்பம் எல்லாத்தையும் கேட்டுட்டு, அவுங்க மனசு சொல்றதுபோல் அவுங்களுக்குத் தோதான முறையில் நிகழ்ச்சியை நடத்தி முடிச்சுடுவாங்க. எல்லாத்துக்கும் சேர்த்து ஒரு மால்(ஹிந்திச் சொல்) வெட்டணும். பட்ஜெட்டில் பாதி இதுக்கே போயிரும்:-( 

 நிற்க,

 நெருங்கிய நண்பர்களுடன் விவாதிச்சபோது பேசாமக் கிளம்பி வா. எல்லாத்துக்கும் நானாச்சுன்னாங்க ஒரு தோழி. ஆக்ச்சுவலா இவுங்களே ஒரு ஈவண்ட் ஆர்கனைஸர் என்றது முதலில் எனக்குப் புரிபபடலை. காலையில் கல்யாணம். மாலையில் ஒரு வரவேற்புன்னு முடிவாச்சு. ரெண்டு நிகழ்ச்சிக்கும் ஹால் புக் பண்ணிட்டேன்னு வயித்துலே பால் வார்த்தாங்க.

 வைதீகச் சடங்குகளுக்கு வாத்தியார் ஸ்வாமிகளையும் விருந்துக்கு கேட்டரரையும் ஏற்பாடு செஞ்சுட்டேன். நீ வந்ததும் மற்றவைகளை விவாதிச்சு முடிவு செஞ்சுக்கலாம். இன்னொரு டோஸ் பால்.

 மற்ற ஏற்பாடுகளை முக்கியமா ஷாப்பிங் எல்லாம் முடிக்கணுமேன்னு ஒரு பத்து நாள் இருக்கும்போதே கிளம்பிப் போய்ச் சேர்ந்தோம். ஆர்கனைஸர் ஏற்பாடு செஞ்சுருந்தபடி அவுங்க வீட்டிலேயே வாத்தியார் ஸ்வாமிகளுடன் ஒரு சந்திப்பு. சடங்குக்கு என்னென்ன சாமான்கள் நாம் வாங்கிவைக்கணும் என்றதுக்கான ஒரு பட்டியலை அவர் சொல்லச் சொல்ல, ஈவண்ட் ஆர்கனைஸர் எழுதிக்கிட்டே இருந்தாங்க. சின்னதா ஒரு ஹனுமன் வால்.

 விருந்து சமையலுக்கானவர் வந்து சேர்ந்தார். காலைவேளை நிகழ்ச்சி என்பதால் ப்ரேக்ஃபாஸ்ட்டும், மதியம் லஞ்சுக்குமான மெனு அவர் ஒப்பிக்க, அதில் சில திருத்தங்களோடு ஆரம்பிச்சு அதையும் ஈவண்ட் ஆர்கனைஸர் எழுதி முடிச்சாங்க. ரொம்பவே சிம்பிளான காலை உணவு போதுமுன்னு நினைச்சோம்.

 வைதீகப்பட்டியலில் உள்ள பொருட்களில் பூ, பழம், வெற்றிலை, வாழை இலை தவிர மற்றவைகளை புடவை, நகைன்னு  ஷாப்பிங் செய்யும் நாட்களிலே சைடு பை சைடா வாங்கிக்கிட்டே போகலாம். பேசாம கிரி ட்ரேடர்ஸ்லே லிஸ்டைக் கொடுத்தால் ஆச்சு. அதே போல் பட்டியலில் உள்ள பாதிக்கும் மேற்பட்டவை அங்கேயே கிடைச்சுருச்சு.

 கும்பம் வைக்கும் குடத்துக்குக் கொஞ்சம் அலைய வேண்டியதாப்போச்சு. மனசுக்குப் பிடிச்சமாதிரி ஒன்னும் மயிலையில் அமையலை. சரி. நாளைக்கு வேற இடத்தில் தேடலாமுன்னு, அதுவரை சேகரிச்ச பொருட்களைத் தோழியின் வீட்டில் வச்சுட்டு, அறைக்குத் திரும்பிக்கிட்டு இருக்கோம். அப்போதான் பார்க்கிறேன்.... கையில் இருந்த வளை ஸ்டைல் ப்ரேஸ்லெட்டைக் காணோம்...... மனசு திக்! தங்கம் விற்கும் விலையில் நாலு பவுனை இப்படித் தொலைச்சுட்டேனேன்னு பதைக்கிறேன். வண்டியில் விழுந்ததோன்னு சீட்டையெல்லாம் புரட்டிப் பார்த்தாச்சு. பாதி மயிலாப்பூர் சுத்துனதில் எங்கே விழுந்ததோ..... இப்படி கவனம் இல்லாம இருந்துட்டமேன்னு என்னையே நொந்துக்கறேன்.

 ஐயோ..... நேயுடு... நல்ல காரியம் நடத்த ஆரம்பிக்கும்போது இப்படி ஆகிப்போச்சே.... எப்படியாவது கண்டு பிடிச்சுக் கொடுப்பா. ..... 

 தோழி வீட்டுக்கு ஃபோன் பண்ணி சேதி சொல்லலாமுன்னா.... அந்த எண்ணுடன் தொடர்பு இல்லை. இந்த செல்லில் இருந்து லேண்ட் லைனுக்குப் பேசமுடியாது போலன்னு சொல்றார் இவர். (வெளியே காமிச்சுக்காட்டியும் மனப் பதற்றத்தில் தப்புத்தப்பா எண்களை அமுக்கிட்டு இப்படி.....)

 அறைக்குப்போய் அங்கிருந்து ஃபோன் செய்யலாமுன்னு கட்டிட வாசலில் இறங்கி வரவேற்பில் நுழையும்போதே..... " உங்க வளையல் அங்கெ இருக்குன்னு உங்க ஃப்ரெண்ட் ஃபோன் பண்ணினாங்க" வரவேற்பில் இருக்கும் பெண்ணின் குரல், பாலோடு தேனையும் சேர்த்து வார்த்தது.

 நேயுடு கண்ணா.....தேங்க்ஸ்டா,என் செல்லமே! அம்மாவை அழவைக்காமக் காப்பாத்திட்டே....

 " புதுப்புடைகள் நல்லா இருக்கான்னு இன்னொருமுறை பார்க்க வெளியில் எடுத்தப்ப.... வளையல் புடவைப் பைக்குள் கிடந்துச்சு. "  எப்படி? எப்படி? தோழி சொல்லச் சொல்ல ..... மிரக்கிள்!!!!

 காணாமப்போகணுமுன்னு கீழே விழுந்தது எப்படிச் சரியா புடவைப் பைக்குள் விழுந்துச்சுன்றது இந்த நிமிசம் வரை அதிசயமாத்தான் இருக்கு! சம்பவம் பற்றி இன்னொரு தோழியிடம் சொல்லி வியந்தபோது, நான் நல்லவள் என்பது உறுதியாச்சு:-))))

 "இதைத்தான் சூப்பர் ஸ்டார் அன்னிக்கே சொன்னார் - “கண்ணா, ஆண்டவன் நல்லவங்களை சோதிப்பான், ஆனா கைவிடமாட்டான். கெட்டவங்களுக்கு அள்ளிக் கொடுத்தாலும் கடைசில கைவிட்டுடுவான்” அப்படின்னு. :))))))))))) "

 நெருங்கிய உறவினர், நண்பர்கள் இப்படி நேரில் போய் அழைக்கவேண்டியவர்களை அழைப்பதிலும், மின்மடல், அலைபேசின்னு அழைப்பு அனுப்புவதும், மாலை விருந்துக்கான மெனுவை முடிவு செய்வதிலும், துணிமணி வாங்க, தைக்கக் கொடுக்க நம்ம தையற்கடைக்கு போய்வரவுமுன்னு ஒரு மாதிரி பிஸி. இதுக்கிடையில் விழாவுக்கு நாலுநாட்கள் இருக்கும்போது மகள் நியூஸியில் இருந்து வந்திறங்கினாள்.

பெரியவர்கள் வந்தால் பெருமாளே வந்ததைப்போல்.......

$
0
0
எங்க வீட்டு வேளுக்குடின்ற பட்டத்தை அடைஞ்சுருக்கும் எங்க பெரியத்தை வந்தவுடன் சபைக்கே ஒரு தெய்வீகக்களை வந்துருச்சு. எந்தக் கோவிலைப் பற்றிக் கேட்டாலும் அங்குள்ள தாயார், பெருமாள் பெயர்களுடன் கோவில் சரித்திரம், அதன் விசேஷம் எல்லாம் நாக்கு நுனியில் வச்சுருப்பாங்க. வயசு வெறும் எம்பத்தி மூணுதான்.

 அடுத்து திருமதி &; திரு சுந்தரராமன் வருகை. எனக்கு (இன்னொரு) அம்மா &; அப்பா. என் நெருங்கிய தோழி சிங்கை எழுத்தாளர் சித்ரா ரமேஷின் பெற்றோர். சதாபிஷேகம் முடிச்ச அன்புள்ளங்கள்.

 நம்ம பூனா எபிஸோடில் என்னை மகளா ஏற்றுக்கொண்ட கும்பகோணம் கோமளா மாமி & சாரி மாமா சார்பில் அவர்களின் மகன் பாபுவும் அவர் மனைவி ரேணுவும் மறுநாள் பத்ரிநாத் பயணம் புறப்படும் களேபரத்தின் இடையிலும் வருகை தந்தனர்.


நம்ம ஐயாக்கள் பாரதி மணி, சிவஞானம்ஜி, சுப்புரத்தினம், துளசியின் தேசிகியின் சார்பில் அவர் பெற்றோர் ஆகியோரும் குடும்பத்துடன் வந்திருந்தனர்.

நம்ம வகுப்புத்தலைவர் கொத்ஸின் சார்பாக அவருடைய அண்ணன் (எல் பி ரோடில் அரிக்காமேடு புகழ்) & அண்ணியும், அஸ்ட்ராலியா விஜயா அக்கா சார்பில் ப்ரமீளா அவர்களும், பதிவர்கள் சார்பில் மின்னல்வரிகள் கணேஷ், நம்ம லக்கிலுக், நம்ம உண்மைத்தமிழன், நாச்சியார் வல்லி சிம்ஹன், மலர்வனம் லக்ஷ்மி பாலகிருஷ்ணன், மரத்தடி மக்கள்ஸ் சார்பில் மகளிர் குழுவினர் (இவர்கள் பதிவர்களுமாவர்) அலைகள் அருணா ஸ்ரீநிவாசன், ஒலிக்கும் கணங்கள் நிர்மலா நிவேதிதா, விழா விபரம் தெரிஞ்சவுடன் பத்து நாட்கள் என்னோடவே இருக்கணுமுன்னு ராஜையிலிருந்து சென்னைக்கு வந்திருந்த கவிதாயினி காற்றுவெளி மதுமிதா, விழாவைப் பற்றிய அழைப்பு அனுப்பியவுடன், டிக்கெட் புக் செஞ்சுட்டேன்னு முதல் அறிவிப்பு செய்த மை.பா புகழ் திருவரங்கப்ரியா பெண்களூரு எண்ணிய முடிதல் வேண்டும் ஷைலஜா, பதிவுல வாசகர் சார்பில் சுபாஷிணி ஆகியோரும் (முடிந்தவரை குடும்பத்தினருடன்) கலந்துகொண்டு பிஸியாக இருந்தனர்.


 விருந்தினரை வரவேற்கும் பொறுப்பில் மகளிரணி இருந்ததால் விட்டுப்போன பெயர்களுக்கு அவர்களே பொறுப்பு:-)))))) (அப்பாடா.... தப்பிச்சேன்)

 ஹாலின் ஒரு பக்கம் மேடை. முன்புறம் ஒரு ஏழெட்டுவரிசை இருக்கைகள். அதுக்குப்பின் ரெண்டு வரிசையா மேஜைகள் போட்டு டைனிங் ப்ளேஸ். அளவான சின்ன ஹாலாக இருந்ததால் நடப்புகளை ஒரு பார்வை வீச்சில் கவனிச்சுக்க முடிஞ்சது.

 எங்கள் (நான் &கோபால்) புகுந்த வீட்டினரும் பிறந்த வீட்டினரும் வந்து விழாவை சிறப்பிச்சுக்கிட்டே இருந்தாங்க. இவுங்களுடைய உதவியுடன் நம்ம ஈவண்ட் ஆர்கனைஸர் பம்பரமாச் சுத்தி எதையும் விட்டுடாம வாத்தியார் ஸ்வாமிகளின் கட்டளைக்கெல்லாம் தலையாட்டியபடியே இருந்தாங்க. என் கண்ணே பட்டுருக்கும் !

 பெரியவர்களைப் பற்றிச் சொல்லும்போது இன்னொரு சமாச்சாரம் நினைவுக்கு வருது. மகளை அழைச்சுக்கிட்டு வர சென்னை விமான நிலையம் போயிருந்தப்ப, ராச்சாப்பாட்டுக்கு அங்கே இருந்த ஃபுட்கோர்ட்டில் (சங்கீதா) தோசை வாங்கி உள்ளே தள்ளும்போது தெரிஞ்சமுகமா ஒரு பெரியவர் வந்தார். பழகுன முகம். நம்ம சாலமன் பாப்பையா. அவர்கிட்டே போய் பேசணுமுன்னு ஆசை. வழக்கம்போல் கோபால் 'அதெல்லாம் வேணாம். சாப்பிடும்போது தொந்திரவு செய்யக்கூடாது. அவர்கூட இன்னும் ரெண்டு பேர் இருக்காங்க. அவுங்க வேலையைக் கெடுக்காதே' ன்னார். 

சரின்னு தலையாட்டிட்டு நான் போய்  'ஐயா வணக்கம்' ன்னு சொன்னதும் அவர் ரொம்ப மகிழ்ச்சியோடு நம்மைப்பற்றி விசாரிச்சார். நியூஸியில் இருந்து நாம் ஆத்தும் தமிழ்ச்சேவையைப் பற்றிக் கோடி காமிச்சதும் அவருக்கு இன்னும் மகிழ்ச்சியாப் போயிருச்சு. சென்னைக்கு வந்த விஷயத்தைச் சொல்லி அவரிடமும் ஆசி வாங்கிக்கிட்டேன். 

 சமயச்சடங்குகள் பாதி நடந்து முடிஞ்ச வேளையில் (என் முழங்கால் பிரச்சனையை ஏற்கெனவே வாத்தியார் ஸ்வாமிகளுடன் விவாதிச்சு இருந்ததால்....) நீங்க ரெண்டு பேரும் மேடையில் ஒரு பக்கம் நாற்காலிகளில் உக்கார்ந்துக்கலாம், இந்த ஹோமங்கள் முடியும்வரைன்னு அனுமதி கிடைச்சதால் எழுந்து வந்தோம். உங்ககிட்டே பவர் ஆஃப் அட்டர்னி வாங்கி உங்க சார்பில் நடத்தறோமுன்னு சொல்லி இருந்தார். பெரியத்தைக்கு இது புரிபடலை. அதெல்லாம் மணையை விட்டு எழுந்திரிக்கக்கூடாது. போய் மறுபடி உக்காருங்கன்னு எங்களை விரட்டிக்கிட்டே மந்திரங்கள் சரியாச் சொல்றாங்களான்னு கவனிச்சுக்கிட்டே இருந்தாங்க.

 நிகழ்ச்சிகளை படமாக்க மட்டுமே ஏற்பாடு செஞ்சுருந்தேன். வீடியோ வேண்டாம். முகத்தில் பளீரெனெ பாயும் ஒளி வெள்ளத்தில் வீடியோ கெமெரா நம்மைக் குறி பார்க்கும்போது நம்மில் பலரும் என்ன செய்யறதுன்னு திகைச்சு ஒளிவெள்ளம் நம்மை விட்டு அகலும்வரை அசட்டுத்தனமா திருதிருன்னு முழிக்கவேண்டி இருப்பதைப் பல நிகழ்ச்சிகளிலும் பார்த்து அனுபவிச்ச காரணத்தால் இந்த முடிவு. பதிவுலக நண்பர் உமாநாத் செல்வன் (விழியனின் ) பரிந்துரையில் ஜகதீஷ் (Jasan Pictures)என்பவருக்கு படம் எடுக்கும் பணியைக் கொடுத்திருந்தேன். தன்னுடைய குழுவினர் டில்லிபாபு, விக்ரம் ஆகியோருடன் சரியான நேரத்திற்கு வந்து படங்களை சுட்டுக் கொண்டிருந்தார். 

மகளும் அவளுடைய சாம்ஸங் கேலக்ஸியில் படங்களை எடுத்துக் கொண்டிருந்தாள், அவளை மேடைக்கு அழைக்கும்வரை. எனக்குத்தான் என் கெமெரா கையில் இல்லாம என்னவோ கை ஒடைஞ்சமாதிரி இருந்துச்சு:-)

 மண்டபம் வெறும் அரைநாளுக்கு மட்டுமே புக் செய்திருந்ததால் அபிஷேகம் வேண்டாமுன்னு முன்னாடியே தீர்மானிச்சு இருந்தேன். ஈர ப்ளவுஸைக் கழட்டிப்போட எனக்கு நாலைஞ்சு மணி நேரம் வேணும்.

 நம்ம சாஸ்த்திர சம்ப்ரதாயங்கள் இப்பெல்லாம் ரொம்பவே ஃப்ளெக்ஸிபிள். வேண்டாம் என்று (நாம்) நினைப்பதைச் சொல்லி அதுக்கு ஈடா வேறொன்னை நடத்திக்கலாம்.

 நடுவில் வைக்கும் கும்பத்துக்கு செப்புக்குடம் மீடியம் சைஸில் வேணுமாம். இது நமக்கே திரும்பக் கிடைக்கும் என்பதால் கொண்டு போக வாகான மீடியம் சைஸ் (??) தேடித்தேடி கிடைக்கலை. பேசாம வெள்ளியிலே வாங்கலாமுன்னு சொல்லி வாய் மூடுமுன் கோபால் உடம்பில் ஒரு கிடுகிடு! அச்சச்சோ.... கல்யாண வேளையில் அதிர்ச்சியும் காய்ச்சலும் தேவையான்னு தங்கக்குடமே வாங்கிக்க முடிவு செஞ்சுட்டேன்.

பாண்டி பஸார் பொன்னி பாத்திரக்கடையில் அஷ்டலக்ஷ்மி டிஸைனில் தங்கம்(போல) கிடைச்சது. பக்கத்துலே இருக்கும் கைராசி கட்பீஸ் கடைக்கு நவகிரக கலசங்களுக்கான ஒரு மீட்டர் அளவு துணிகள் வாங்கலாமுன்னு நுழைஞ்சு, லிஸ்ட்டை எடுத்துப் பார்த்து சிகப்பில் ரெண்டுன்னு ஆரம்பிச்சு வாய் மூடலை, கடைக்காரத்தம்பி வெள்ளையில் ரெண்டு, பச்சையில் ஒன்னு நீலத்தில் ஒன்னு, மல்ட்டிகலர் ஒன்னுன்னு சொல்லிக்கிட்டே பரபரன்னு தாமாய் எல்லாத்தையும் எடுத்து வச்சுட்டார். அடடா.... எள் என்றால் இப்படி எண்ணெயா இருக்காரேன்னு பெயர் கேட்டால் நல்லதம்பியாம்!

ஷார்ப் அண்ட் ஸ்மார்ட் தம்பி.  பொன்னி பாத்திரக்கடையிலும் இரண்டு  சின்னப்பெண்கள் பம்பரமாச் சுத்தி நமக்கு வேணுங்கறதை  மகிச்சியோடு எடுத்துக் கொடுத்தாங்க.  எனக்கென்னமோ .......   பெரிய கடைகளில் வேலை செய்யும்  சின்னப்பணியாட்களைவிட  சின்னக் கடையில் விற்பனையாளர்கள்  முகமலர்ச்சியுடன் வேலை செஞ்சதுபோல் படுது.

 கும்பத்து கங்கையை பெரியவர்கள் மாவிலையால் கோரி நம் தலைகள் மீது தெளிச்சாலே போதும் தானே? அதன்படியே ஆச்சு.
சின்ன அண்ணாமலை சமாச்சாரம் வேற நம்ம காதுகளுக்கு எட்டி இருந்துச்சே:( 
மங்கலநாண் பூட்ட கோபால் தயாரான நிமிசம் சின்னதா ஒரு தடங்கல். வேர்வை வெள்ளம் பெருக ஆரம்பிச்சது. (பவர் கட்டாம். ஏஸி நின்னு போச்சு) வில்லனா இருந்தது ஆடியோ. கெட்டிமேளம் கொட்ட அதுக்கு என்னமோ தயக்கம். உறங்கிக்கிடந்த அதை உசுப்பிவிட்டு உயிரூட்டி....... தாலி கட்டும்போது (தேவர்கள்) பூமாரி பொழிந்தனர்!
நாளாம் நாளாம் திருநாளாம் துளசிக்கும் கோபாலுக்கும் மணநாளாம்.... இசைக்குயில்கள் எல்லாம் ஒருசேர பாட ஆரம்பிச்சதும் நானுமே திகைச்சுப் போய்ப் பார்த்தேன்!!!!!

ஷைலூ, இது வழக்கமா நீங்க கல்யாணங்களில் பாடும் பாட்டுன்னு தெரியாமப் போச்சேப்பா!!!!


காலை நிகழ்ச்சிகள்  எல்லாம் பகல் விருந்தோடு நன்றாகவே நடந்து முடிஞ்சது. உண்மையைச் சொன்னால் இத்தனை பேர் வந்து ஆசி வழங்குவார்கள் என்று நான் நினைக்கலை.  சுமார் ஒன்னரை மணி அளவில் ஹாலை விட்டுக் கிளம்பினோம்.

எல்லாப்பெருமையும் நம்ம ஈவண்ட் ஆர்கனைஸருக்குத்தான் போய்ச்சேரணும்.  அருமையான ஏற்பாடுகளைச் செஞ்சுருந்த  நம்ம வல்லி சிம்ஹனுக்கு எங்கள் மனமார்ந்த நன்றிகள்.

இனி யாருக்காவது அறுபதாம் கலியாணம் நடத்தணுமுன்னா  என்னைத் தொடர்பு கொள்ளுங்கள்.  என் கைவசம் பக்காவான  வைதீக லிஸ்ட்டும் நடத்திக்கொடுக்க வல்லியம்மாவும்  ரெடி:-))))


குளக்கரையில் ஒரு பதிவர் குடும்ப நிகழ்ச்சி.

$
0
0
சம்பவத்துக்கு ஒரு ஆறுநாள் இருக்கும்போது விருந்தாவனில் பாபுவுடன் ஒரு டிஸ்கஷன். என்ன இது அநியாயம்? வடக்கின் ஆக்கிரமிப்பு தாளலை::( பேருக்கு ஒரு தமிழ் இருக்கவேணாமோ?

 "இருக்கே..... இங்க பாருங்க, லைவா !"

 அய்ய............தோசை.

 "அப்ப குழிப்பணியாரம், ஆப்பம் இப்படி எதாவது......"

 "மூச்!!! "

 "............இட்லி?"

 "பேசப்டாது"

 ஒரு பக்கம் வடக்கர்கள் வந்து தமிழ்நாட்டு வியாபாரங்கள் அத்தனையும் வழிச்சுத் தங்கள் பக்கம் இழுத்துட்டுக்கிட்டாங்கன்னு வயித்தெரிச்சல் படும் மக்கள், தங்களை அறியாமலேயே வயித்துலே(யும்) அவுங்களுக்கு இடம் கொடுத்துட்டாங்க பாருங்களேன்........... வியப்புதான்.

பட்டர் நான், பனீர் டிக்கா மசாலா, மலாய் கொஃப்தா, ஆலூமட்டர், நவ்ரத்தன் கொர்மா..........

 இதான் ஓசைப்படாம உள்ளே நுழையறதா? மக்கள் விரும்பறாங்கன்னு சினிமா நாயகி(??)களைக் கொண்டுவந்தது முதல், உடைகள், கல்யாணவீட்டுக் கலாச்சாரங்கள் இப்படி எல்லாச் சமாச்சாரங்களும் வந்துருச்சே! முந்தானையின் அழகுக்காகக் குஜராத்தி ஸ்டைலில் புடவைகட்ட ஆரம்பிச்சது கலியாண ரிசெப்ஷன்களில் தொடங்குச்சு!

 போதாக்குறைக்குப் பொன்னம்மான்னு எங்கெ சாப்பிடப்போனாலும் மெனுகார்டில் சீன சாப்பாடுகள்:( மஞ்சூரியன் மஞ்சூரியன்னு சொல்றமே... அது உண்மையான சீனத்துலே இல்லவே இல்லை(யாம்)! இங்கே எங்கூரில் அதென்டிக் சீன உணவு வகைகள் விற்கும் கடையிலே கேட்டால் பேய்முழி முழிக்கிறாங்க....அப்படி ஒன்னு கேள்விப்பட்டதே இல்லைன்னு!!!!

 தமிழ் சாப்பாடு குறைஞ்சபட்சம் ஒரு தென்னிந்திய மெனு........

 "அதைத்தான் தினமும் வீட்டுலே சாப்புடுறாங்களே. வெளியே போனாலும் அதேதானா? "

 என்ன லாஜிக்ன்னு புரியலையே:(

! "சரி. வடையை மட்டும் சேர்த்துருங்க. இல்லேன்னா பதிவர் சந்திப்புக்குப் பெருமை இருக்காது!"

 விழா நடக்கப்போகும் ஹாலை பார்த்துருங்கன்னு கூட்டிக்கிட்டுப்போனார் பாபு. நீச்சல்குளத்தையொட்டியே இருக்கு. அடடா....குளிக்கும் மக்கள்ஸ்க்கு தொந்திரவாப் போயிருவோமோன்னு ஒரு சந்தேகம்!

 "மாலை ஆறரைக்கு அப்புறம் நீச்சல் குளத்துக்கு அனுமதி இல்லை. உங்க விழா ஏழுக்குத்தானே.? அதுக்குள்ளே எல்லா இடத்தையும் சுத்தம் செஞ்சு சாப்பாடு ஐட்டங்களுக்கும், இருக்கைகளுக்கும் ஏற்பாடு செஞ்சுருவோம். குறைஞ்சபட்சம் 100 பேர்கள் வருவாங்கதானே"?

 சொல்ல முடியாது.... நமக்கேது அவ்ளோ நண்பர்கள்? அழைப்பு அனுப்பி இருக்கேன்னாலும் அன்று வேலைநாளாப் போயிட்டபடியால் அழைத்தவர்கள் அனைவருக்கும் வர இயலுமான்னு தெரியலையே.... ஒரு அறுபதுன்னு ஆரம்பிச்ச கோபாலை மடக்கி, 'நூத்தியம்பது லட்சியம் எண்பது நிச்சயம்'ன்னு சொன்னேன்.:-)

 விருந்தாவன் அடுக்களையில் இருந்துதான் சகலமும் என்பதால் , எண்பதுபேருக்கு எல்லாம் செட் செஞ்சுடறோம். மேற்கொண்டு மக்கள்ஸ் வரவர பதார்த்தங்களைக்கொண்டு வந்து நிரப்பலாமுன்னு சொன்னார் பாபு.

 நீச்சல்குளத்துக்குப் பக்கத்தில் பார்ட்டி என்றதும், ஸ்விம்மிங் ஸூட் கொண்டு வரணுமோன்னு நெருங்கிய தோழிகளுக்குக் கவலை! யாரையும் டார்ச்சர் பண்ணும் உத்தேசமில்லை என்று சொன்னேன்:-)))))

 பெங்களூருவிலிருந்து முதல் நாள் வரும் மச்சினர் குடும்பத்துக்கு இதே ஹொட்டேலில் ஒரு அறை புக் செய்யும்போதே இன்னொரு அறையையும் புக் செஞ்சோம். காலை விழாவுக்கு வந்துட்டு, மறுபடியும் மாலை நிகழ்ச்சிக்கு வரும் தோழிகள், மற்ற உறவினர்கள், சென்னை ட்ராஃபிக்கில் மாட்டிக்கிட்டு மறுபடி வீட்டுக்குபோய்வரணுமுன்னா கஷ்டம்தானே? பேசாம மாற்று உடைகளைக் கையோடு கொண்டு வந்துட்டால் மதிய உணவு முடிஞ்சதும் இங்கே வந்து கொஞ்சம் ஓய்வெடுத்துக்கிட்டு மாலை விழாவுக்கு ரெடி ஆக லகுவாக இருக்காதா? முன்னேற்பாடுகளை தோழிகளுக்கும் உறவினர்களுக்கும் சொல்லியாச்சு:-)

 காலைச் சடங்குகள் முடிஞ்சதும் பகல் 2 மணி அளவில் நாங்கள் மகளுடன் அறைக்குத் திரும்பினோம். மறுநாள் இரவே அவள் நியூஸி திரும்புவதால் முடிச்சுக்கொடுக்க சில வேலைகள் இருந்தன. மாலை ஒரு ஆறரைமணி அளவில் ஹொட்டேல் நியூவுட்லேண்ட்ஸ் அறைக்குப் போனால், அண்ணனும் அண்ணியும் விழாவுக்குத் தயாராகி ரெடியா இருந்தாங்க. மற்ற தோழிகள் எல்லாம் வந்துருந்து கதையும் பேச்சுமா பொழுது போயிருக்கு! அட...... நான் ரொம்ப மிஸ் பண்ணிட்டேனே..... 

ஹாலுக்குள் நுழைஞ்சப்ப அங்கங்கே சிலர்! நம்ம விருந்தினர்கள் வரத்தொடங்கி இருந்தாங்க. நான்தான் ஸோ அண்ட் ஸோன்னு தன் பேரைச் சொல்லி அறிமுகப்படுத்திக்கிட்டவரை எங்கியோ பார்த்த நினைவு. அவருடைய இருக்கைக்குப் பின் இருக்கையில் நம்ம நுனிப்புல் உஷா, அப்துல் ஜப்பார் ஐயாவிடம் பேசிக்கிட்டு இருந்தவங்க, முன் இருக்கைக்குக் கீழே கையைக் காமிச்சாங்க. ஒரு மோதிரம்! யானைவால் முடிவச்ச தங்க மோதிரம்.

 யானைக்காரிக்குப் பரிசா யாராவது கொண்டு வந்துருக்கலாம் என்ற சம்ஸயத்துடன் அதை எடுத்து, யாரோடதுன்னு ஏலம் போட்டேன். லதானந்த் கூடப்பேசிக்கிட்டு இருந்த தெரிந்த முகத்துக்காரர் தன்னோடதுன்னு வாங்கிக்கிட்டார். விரலில் இருந்து நழுவி இருக்கு:( அப்பவும் அவரை சட்ன்னு நினைவுக்கு வரலை.

 சபையில் நண்பர்கள் கூடி கலகலப்பான சமயம், என் அருகில் இருந்த நம்ம காவேரி கணேஷிடம், அவரைக் காமிச்சு யாருன்னு தெரியுதான்னா... அவருக்கும் யாருன்னு புரிபடலை. நான் விசாரிச்சுச்சொல்றேன்னவர் வந்து சொன்ன பெயரைக்கேட்டு அப்படியே ஆடிப்போயிட்டேன்:( நம்ம டோண்டு!!!!!


டோண்டு, நீங்கள் உடல்நலக்குறைவில் இருந்து மீண்டுவர எம்பெருமாளை மனதார வேண்டுகின்றோம்.



 உணவுக்கான ஏற்பாடுகள் எல்லாம் ரெடின்னு வந்து சொன்ன மேனேஜர் பாபுவிடம், கேக் வெட்டிட்டுச் சின்னதா ஒரு ஸ்பீச் முடிச்சு சாப்பிடத்தொடங்கலாமுன்னு சொன்னதும்..... கேக்கான்னு முழிக்கிறார். மெனு ஐட்டங்கள் முடிவு செஞ்சபோது அந்த லிஸ்ட்டில் கேக் என்று பார்த்ததாக என் நினைவு.

 இல்லீங்களேன்னு சொன்ன பாபுவிடம் கேக்குக்கு ஏற்பாடு செஞ்சுருங்கன்னதும்.... 'எங்க ரெஸ்ட்டாரண்டில் பேக்கரி இல்லை. வெளியே இருந்து வாங்கிக்கலாம். ஆனால் இன்னிக்கு பந்த். கடைகள் இருக்குமான்னு தெரியலையே. என்ன கேக் வேணும்' என்றவரிடம் முயற்சி செஞ்சு பாருங்க கிடைக்கலைன்னா..... வெறும் பேப்பரில் கேக் என்று எழுதி வெட்டிக்கலாம்!

 அடுத்த இருபதாவது நிமிஷம் ரெண்டு கேக்குகளோடு பாபு ஆஜர்.!!! உடனடி ஏற்பாடு செஞ்சு உதவின பாபுவுக்கு என் நன்றியை இங்கே(யும்) பதிவு செய்கிறேன்.

 இரண்டு பக்கக் குடும்பத்தினரும் வந்துருந்தனர் எங்களை மகிழ்வில் ஆழ்த்த!

 பொன்னாடைகள் போர்த்தி வாழ்த்தியவர்களும், பாமாலை பாடி வாழ்த்தியவரும் எதிர்பாராத இன்ப அதிர்ச்சியில் எங்களை முக்கி எடுத்தனர். . 'அன்றொருநாள்' படம் ஒன்றைப் பரிசாகக் கொடுத்து கொசுவத்தி ஏத்திவச்சார் மோகன்குமார்.

 பெண்களூரில் இருந்து புறப்பட்டு வந்த ஷைலஜா, வாழ்த்துக் கவிதை வாசிச்சப்ப, நானும் மரபு வழுவாமல் வா ....வா.....(ஹிந்தியில் பாராட்டு) சொன்னேன், கேட்டோ:-))))

 பதிவுலக நண்பர்கள் தல பாலபாரதி & குடும்பத்தினர், டாக்டர் புரூனோ, லக்கிலுக், அதிஷா, கேபிள் சங்கர், காவேரி கணேஷ், பாலகணேஷ், மோகன் குமார், ஸாதிகா, டி ஆர் சி, மரபூர் சந்திரசேகர், மா.சிவகுமார், சிமுலேஷன் சுந்தரராமன் & திருமதி சுந்தரராமன், அண்ணாகண்ணன், உண்மைத்தமிழன் சரவணன், செந்தில், பட்டர்பஃப்ளை சூரியா, எறும்பு ராஜகோபால், பலாபட்டறை ஷங்கர், ஆன்மீகச் செம்மல் ஜி ராகவன், டோண்டு ராகவன், வடுவூர் குமார் &திருமதி குமார், பதிவர் நானானி சார்பில் அவரது அன்புக் கணவரும் மகளும் பேரன் ஷன்னு த க்ரேட்,

 பண்புடன் குழும நண்பர்கள் சா.கி.நடராஜன், மோர் சுப்ரா, உதயன், ஸ்நாபக் விநோத், அச்சு சுதாகர் கார்த்திக், மரத்தடி குழுமத் தோழிகள், ஹோப் ஃபவுண்டேஷன் குழுவினர் சார்பில் டாக்டர் அஷோக், சந்தோஷ் ஆகியோர் குடும்பங்கள், விழாவுக்காகவே வெளியூர்களில் இருந்து நேரில் வந்து வாழ்த்திய அன்புள்ளங்கள் சீனா&செல்வி தம்பதியர், திருப்பூர் ஜோதி கணேசன், அவர் நண்பர் ராஜராஜன், அன்று காலையில்தான் அமெரிக்காவை வென்று(???) தாய்நாடு திரும்பிய (தூக்கக் கலக்கக் கண்களுடன்) புதுகை அப்துல்லா, தலைநகரில் இருந்து (மத்திய அரசின் சார்பில் பங்குபெற்ற (??!!!! இருக்குமோ ) நம்ம வெங்கட் நாகராஜ். எழுத்தாளர்கள் ஷங்கரநாராயணன், லதானந்த், முனைவர் இரா.வாசுதேவன், புத்தக வெளியீட்டாளர் சந்தியா பதிப்பகத்தின் திரு & திருமதி நடராஜன்,

 பாரதி மணி ஐயா, க்ரிக்கெட் போட்டிகளின் நடுவிலும் நமக்காக நேரம் ஒதுக்கிய நண்பர் அப்துல் ஜப்பார் ஐயா, கல்பட்டு நரசிம்ஹன் & சாந்தா தம்பதியினர், பேராசிரியர் சிவஞானம் ஐயா&குடும்பத்தினர், சிங்கை சித்ரா ரமேஷின் பெற்றோர்&குடும்பத்தினர் (மற்றபடி எவர் பெயராவது விட்டுப்போயிருந்தால் தயவு செய்து சொல்லுங்கள்.என் கவனக்குறைவுக்கும் ஞாபகமறதிக்கும் மன்னிக்கணும்.)இப்படி அனைவரின் அன்பும் ஆசிகளும் வாழ்த்துகளும் நிறைந்து வழியும் நாளாக அமைஞ்சுபோனது எங்கள் பாக்கியம்.

எல்லோரையும் குளக்கரையில் நிறுத்தி பெரிய க்ரூப் ஃபோட்டோவா ஒன்னு எடுத்துடலாமுன்னு ஃபொட்டோக்ராஃபர் சொன்னது அருமையான ஐடியாவா இருந்தாலும் விருந்துக்கு நடுவில், அப்படியே தட்டை வச்சுட்டு இப்படி வரிசையில் நின்னு போஸ் கொடுங்கன்னு சொல்ல இயலுமா?????

 வல்லி சிம்ஹன் வரலை. காலையில் ஓடுன ஓட்டத்துக்குக் கால் வலி வந்துருக்கு:(      பாவம்....      எல்லோருக்கும் இந்த பதிலைச் சொல்லியே நேரம் போக்கினேன்.

 மனம் நிறைஞ்சு போயிருந்ததால் வயிற்றுப்பசி அறவே இல்லை. ஒன்னுமே சாப்பிடலையே நீங்கன்னு சொல்லிக்கிட்டே 'லைவாப்' போட்டு எடுத்துவந்த தோசையை எனக்கு விளம்பிட்டுப் போனார் பாபு!

 கூடியிருந்து குளிர்விக்க வந்திருந்த நண்பர்கள், சரியாச் சாப்பிட்டாங்களான்னு கூட கவனிக்க முடியலை. இடம் சின்னது என்பதால் நல்ல கூட்டம்போல ஒரு தோற்றம்!!!!

 தொலைபேசி, மின்மடல்கள் மூலமாக வாழ்த்திய அன்பர்களுக்கும், நேரில் வந்து எங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்திய அன்புள்ளங்களுக்கும் , வர நினைத்து வரமுடியாமல் போன நட்புகளுக்கும் , பதிவின் மூலம் சேதி அறிஞ்சு வாழ்த்திய பதிவர் குடும்ப மக்கள் அனைவருக்கும் எங்கள் மனமார்ந்த நன்றிகளை இப்பதிவின் மூலம் தெரிவித்து மகிழ்கின்றேன்.




 படங்களை ஆல்பத்தில் போட்டுருக்கேன். கீழே இருக்கும் சுட்டிகளில் எதாவது ஒன்னு வேலை செய்யும் என்ற அதீத நம்பிக்கை:-)

 படத்தொகுதி சுட்டி 1

 அது இல்லைன்னா இது

 படத்தொகுதி சுட்டி 2

 இவ்ளோ உற்சாகமும் அன்பும் இருக்கே...பேசாம சதாபிஷேகத்தை அடுத்த வருசமே வச்சுக்கலாமா ஷைலூ?

லட்டு திங்க ஆசையா கண்ணா?

$
0
0

நேரவித்தியாசத்தில் தூக்கம் கலைஞ்சு போனதும் ரெண்டு பேருக்கும் ஒரே ஐடியா! பேசாம எழுந்து குளிச்சுட்டுக் கோவிலுக்குப்போய் வரலாமா? இங்கேயே காலை ப்ரேக்ஃபாஸ்ட் இருக்கு. ஏழரை தொடங்கி பத்தரை வரையாம். போயிட்டு வந்து சாப்பிட்டால் ஆச்சு.

வாசலில் ஆட்டோ. அறுவது கேட்டு அறுவதுக்கு பேரம் படிஞ்சது. பெட்ரோல்விலை எல்லாம் ஏறிப்போச்சு சார்..........  ம்ம்ம்  ஒன்னும் சொல்றதுக்கில்லை. அதுவும்  முதல்நாளே வாக்குவாதம் வேணாம்

(இல்லேன்னா மட்டும் நாம் ஜெயிச்சுருவோமாக்கும்?)


ரெண்டே கி,மீட்டர் தூரத்தில் இருக்கும் கோவில் வாசலில் போய் இறங்கியாச்சு. வெங்கடேசன். ஆஃப் வெங்கடநாராயணா ரோடு, தி.நகர்.  காலை ஏழுமணிகூட ஆகலை. கோவில் சந்நிதி மூடி இருக்கு! ஏழரைக்குத்தான் திறப்பாங்களாம். இதென்ன புதுப்பழக்கம்?
பிரபந்தம் படிக்கறதுக்காக.....  அட ராமா?  அதை மக்கள்ஸ் நாலு பேர், காதாரக் கேட்டா.... தமிழ் வளராதோ? நாலாயிரம் எல்லாம் தமிழில்தானே?

வாசல் கேட்டையொட்டி பூவிற்கும் கூட்டத்தை சற்றே ஒதுங்கி இருக்கச்சொல்லி இருக்கு நிர்வாகம். ஆரவாரம் அவ்வளவா இல்லை.

வாசலில் தேவுடு காக்கணுமா/ பேசாம பக்கத்துலே இருக்கும் சரவணபவனுக்குள் நுழைஞ்சு ஒரு காஃபியாவது குடிச்சுட்டு வரலாமேன்னு போனோம்.

வடை ஒன்னு இருபத்தியஞ்சு ரூபாய்ன்னதும் ஆடிப்போயிட்டேன்.  அப்ப....ஆட்டோவுக்கு அறுவது நியாயமோ!!!!!

கையோடு காலைஉணவை முடிச்சுக்கலாமா?. (வடை ஆசை யாரை விட்டது?) எனக்கொரு மினி டிஃபன், நுரை ததும்பும் காஃபி ருசி நல்லாவே இருக்கு.

கோயிலுக்கு மீண்டு வந்தால் பெரிய வரிசை. ஆனால் நகருது. நாமும் வரிசையில் நின்னு உள்ளே போறோம்.   "யம்மா நல்லா இருக்கீங்களா? துளசி கொண்டாந்து தரட்டா?"  துளசிக்கே துளசியான்னு திரும்பிப் பார்த்தால் நமக்குப் பரிச்சயப்பட்டபூக்காரம்மா சாமுண்டீஸ்வரி!   வேணாம். நான் திரும்பி வரும்போது வாங்கிக்கறேன்.   'அந்தாண்டை கடை போட்டுருக்குமா' ன்னு சொல்லிப்போனதும் உள்ளே போய் நம்ம கன்ஸர்ன் தாயாரையும் சிரிக்கும் பெரும் ஆளையும் வணங்கினோம்.சாமிக் காசை ஆசாமி கையில் கொடுக்காதேன்னு அறிவிப்புகள் அங்கங்கே இருந்தாலும் சனம் தனி கவனிப்புக்காக நோட்டை நீட்டுவதும் கவனிப்பு(ம்) கிடைப்பதுமாத்தான் இருக்கு.

முந்தியெல்லாம்  தரிசனம் முடிஞ்சு வலப்பக்கம் திரும்பி சந்நிதித் தடுப்புக்குப்பின்னால் போய் சாமிக்கு நேரா ஹாலில் உக்கார்ந்துக்க முடியும். கொஞ்சநேரம் தியானம்கூட செஞ்சுக்க வழி இருந்துச்சு. இப்ப?  நேரா பின்வாசலுக்கு விரட்டப்படுகிறோம். புன்சிரிப்போட பார்த்துண்டே இருக்கன்:( ஹூம்... நல்லா இரும்! அநியாயம் பார்க்க பார்க்க, பொம்பளை மனசு பொங்கும். தாயாரின் முகமே சாட்சி.

பின்கதவு வழியா வெளியே வந்து கம்பிக்குப்பின் துயில் கொள்ளும் ரங்கனை சேவிச்சப்ப புதுசா ரெண்டு ஆண்டாள்கள். பஞ்சலோகமா இருக்கணும். மின்னறாள்!

இடப்பக்கம் மூலையில் மூடி இருக்கும் கவுண்டர்.  அதன் முன்னே வரிசையில் காத்து  'இருக்கும்'  சனங்கள். அந்தப் பக்கத்துச் சுவரில் அழகான ஓவியங்கள்.  எல்லாம் இவனைப்பற்றித்தான். போனமுறை பார்த்த நினைவு இல்லை. அழகாத்தான் வரைஞ்சுருக்கார் ஆர்ட்டிஸ்ட். அலுவல அறைக்குள் எட்டிப்பார்த்து, படம் எடுக்க அனுமதி கேட்டப்ப, சந்நிதியை விட்டுட்டு எடுத்துக்குங்கன்னார் ட்யூட்டியில் இருந்தவர்.

திருமலைதிருப்பதி தேவஸ்தான ஆஃபீஸா தொடங்குன இடம். சாமியோட  அலுவலகமுன்னு பக்கத்துலே சாமி சிலை ஒன்னு வைக்கப்போக இப்ப இதே ஒரு பெரிய கோவிலா ஆகி இருக்கு! இன்னும் ஸ்பெஷல் தரிசன டிக்கெட் வரலையே தவிர மற்ற எல்லாமும் வந்தாச்சு, தாயார் உள்பட.  மலையில் தனியா நின்னவர் இங்கே துணைக்கு வீட்டம்மாவை பக்கத்துலே உக்கார்த்திவச்சுருக்கார். சனிக்கிழமைகளிலும், புதுவருசதினத்திலும் பண்டிகை நாட்களிலும் கூட்டம் அம்முது!

படங்களை எடுத்துக்கிட்டே வாசல்வரை போயிருக்கேன்.  கேட்டில் இருந்த நாட்டாமை லபோதிபோன்னு கூவிக்கிட்டே ஓடிவந்து படம் எடுக்கக்கூடாதுன்னார்.  அனுமதி வாங்கி இருக்குன்னதும்  'ஸார்...படம் எடுக்கறாங்க ஸார்' ன்னு கூவுனார். அலுவலக வாசலில் நின்னுக்கிட்டு இருந்தவர்,  .எடுத்துக்கட்டும், நான்தான் சொன்னேன்னதும் கப்சுப். கொடுத்த வேலையைச் சரியாச் செய்யறார்தானே?

நடந்தது நடப்பது எல்லாத்தையும் வேடிக்கை பார்த்துக்கிட்டு நின்ன கோபாலின் கையில் லட்டு! அட! கொடுத்துட்டானா......
அங்கேன்னு கண் போன திசையில் பார்த்தால் பக்தர் ஒருவர் ஏதோ வேண்டுகோளுக்காக பெட்டிநிறைய லட்டோடு நமக்காக காத்திருக்கார்.

கோவிலில் இருந்து அறைக்கு வர அதே ரெண்டு கிலோமீட்டருக்கு  நாற்பது கேட்டார் ஆடோக்காரர். கெஸ்ட் ஹவுஸ் வாசலில் ஆட்டோ பிடிக்கக்கூடாது (பாடம் 1)

என்கூட ஒரு பத்து நாளாவது இருக்கணுமுன்னு ரெண்டு வாரத்துக்கு சென்னைக்கு வந்துட்டாங்க நெருங்கிய தோழி, கவிதாயினி. ட்ராவல்ஸில் சொல்லி வச்சுருந்த வண்டி வந்ததும் ரெண்டு மணிக்குக் கிளம்பிப்போய்  தோழி மதுமிதாவின் வீட்டுக்குப்போய்  அவர் குடும்பத்தோடு  கொஞ்ச நேரம் பேசிட்டு நாங்க மூணுபேருமா வல்லியம்மா வீட்டுக்குப் போனோம்.,

அங்கே இன்னொரு கலைஞருடன் சந்திப்பு.  ஆர்ட்டிஸ்ட்! ஸ்கல்ப்சர், ட்ராயிங்.....மட்டுமா? பிலீவ் மீ.........  ரிப்ளீஸ் பிலிவ் இட் ஆர் நாட் போல(வே) அந்தரத்துலே இருக்கும்  குழாயில் இருந்து தண்ணீர் கொட்டுது. ஆஹா.... வீட்டம்மாவின் கொலுவுக்கு வருசாவருசம் புதுப்பொம்மை ரெடி!

ட்ராயிங் நோட்புக் என் கைக்கு வந்துச்சு. அடடடா.......  நம்ம  யானை!
படங்களையெல்லாம் க்ளிக்கிட்டு, சக கலைஞரை பாராட்டிட்டு, கேசரியும் மசால் வடையுமா ஒரு வெட்டு வெட்டிட்டு வந்தோம். இதுக்கிடையில் விழாவுக்கான ஏற்பாடுகள் சிலவும்.


சென்னையில் சில கோவில்களில்....... நம்முடைய இப்போதைய அனுபவம் கொஞ்சம் (?) பார்த்துட்டு நகரைவிட்டுக் கிளம்பி  ஒரு சுற்றுலா போய் வரலாம்.  அஞ்சாறுநாட்கள் பயணம்தான். ரெடியா?




நவராத்ரி 2012

$
0
0
அனைவருக்கும் வணக்கம்.

 வழக்கம்போல் அஞ்சே படிகள். கலிகாலத்துலே கைவிடப்பட்டவைகளைக் கொண்டு படிகள் ஒரு மேடையில்!


 பிஹைண்ட் த ஸீன்ஸ்........ இவை.





கட்டியவருக்கு நன்றிகள்.



 வீட்டுப்பொண் ரெடியாகிட்டாள். அவளுக்கான நகைநட்டுக்கள்(???) எல்லாம் வாங்கியாந்தேன் இந்த பயணத்தில். புடவைதான் குவாலிட்டி சரி இல்லை. எல்லாத்திலும் போலி வந்தது போல் இதிலும்:(


முதல்படி: தாயார் பெருமாள் (மரப்பாச்சிகள்) கணக்குப்புள்ளையார்,  ஆனந்தநிலையம், கண்ணப் புள்ளையார்.

இரண்டாம் படி:  கண்ணன்ஸ் ஒன்லி:-)  வெண்ணைத்தாழிக் கண்ணன், மாடு மேய்க்கும் கண்ணன், உரலில் கட்டுண்ட கண்ணன்.

மூன்றாம் படி:  குகனின் படகில் கங்கையைக் கடக்கும் ஸ்ரீ ராமன், சீதை & லக்ஷ்மணன்.  குகனின் மெய்க்காப்பாளர்கள் , வனத்தில் சில (நியூஸி) பறவையினம்.

நாலாம் படி: ( இந்திர லோக)நாட்டியம். கச்சேரி, மாட்டுவண்டியில் வந்த புதுக் கல்யாண ஜோடி.

அஞ்சாம் படி:  யானைப்படை, குதிரைப்படை & பூனைப்படைகள்!

மத்ததெல்லாம் எக்ஸ்ட்ரா ஃபிட்டிங்க்ஸ்:-)))))

கோலம்: கிரி ட்ரேடர்ஸ் புதுவரவு!


பிரசாதம் : இன்னும் வெந்துக்கிட்டு இருக்கு. முடிஞ்சதும் படம் வரும்:-))))

(போட்டாச்சு. போனமுறை சரியாக வேகலைன்னு கீதா சாம்பசிவம் சொன்னதால் இந்தமுறை ரொம்பநேரம் வேகவிட்டுட்டேன்:-)

அனைவருக்கும் நவராத்ரி விழாவுக்கான இனிய வாழ்த்து(க்)கள். கட்டாயம் வந்து ஒரு பாட்டுப் பாடிட்டு, சுண்டல் வாங்கிப்போகணுமுன்னு தாழ்மையுடன் வேண்டுகின்றேன்.




இஷ்ட தெய்வம் இருக்கும், இஷ்டக் கோவில்!!

$
0
0

"ரொம்பப் பணக்காரக்கோவிலு போல! நவகிரஹம்கூட தங்கக் கவசம் போட்டுருக்கு "

ஒரு மூணு வருசத்துக்கு முன்னே  இதே சமயம் பெரியத்தை சொன்னது மனசில் வந்துபோச்சு.

எல்லாக் கோவிலும் பணக்காரக்கோவில்தான். என்ன ஒன்னு.... சாமிக் காசை முழுங்காம இருக்கும் நிர்வாகம் அமையணும்.  இங்கே அமைஞ்சுருக்கு! அடையார் அநந்தபத்மநாபன் கோவில்.

இந்தப் பயணத்தில் ஊனுடம்பில் ஒரு மூணுமுறை போய்வந்தேன். ஆனால் கடந்த மூணு வருசத்தில் தினம் ஒருமுறையாவது உள்ளே போய்  சுத்தாமல் வந்ததில்லை.  ஞானக்கண் இருக்கே! இஷ்ட தெய்வங்கள் வரிசையில் பெருமாள்தான் இருக்கார் ஆனால் இஷ்டக்கோவில் வரிசையில் முதலிடம் இதுக்குத்தான். ரெண்டாவது இடம் நம்ம சிங்கைச் சீனு.  இந்த ரெண்டு இடங்களிலும் நிம்மதியா சந்நிதிக்கு எதிரில் ஒரு பக்கம் உக்கார்ந்து மனசு போதுமுன்னு சொல்லும்வரை எம்பெருமாளைக் கண் எதிரில் பார்த்தபடியே இருக்க தடை ஏதும் இல்லை.  ஒரு ஜருகோ.... இல்லை போ போ என்ற கூச்சலோ இல்லாத இடங்கள்.

கோவிலுக்கு வயசு இப்போ அம்பது. பொன்விழா ஆண்டு நடக்குது.  போனமாசம் கும்பாபிஷேகம் நடந்து எல்லாமே பளிச் பளிச்.  கேட்டைக் கடந்தால் தங்கக்கொடி மரம் ஜொலிக்கும் வளாகம். நமக்கிடது பக்கம் புள்ளையார். இஷ்ட சித்தி விநாயகர். இவருக்கு ரெண்டு அவுட்ஃபிட் இருக்கு. தங்கக்கவசம் ஒன்னு. வெள்ளை சிகப்பு பச்சைன்னு தகதகன்னு வெளிச்சம்போடும் கல்வச்ச கவசம் ஒன்னு. நாளின் முக்கியத்துவத்துக்கு ஏத்தபடி போட்டுக்குவார். தெருவில் இருந்து பார்த்தால்கூட கண்ணுக்குப் புலப்படுவார். அதுக்கேத்தபடி சுத்துச்சுவரில் இவருக்கு முன்னால் மட்டும் கம்பிகள் . புதுசா கம்பிக்கு இந்தாண்டை தெருவில் சின்னதா ஒரு தொட்டி! உள்ளே கருங்கல் பதிச்சு இருக்கு. சிதர்தேங்காய் உடைக்க உண்டாக்கிய ஏற்பாடு. அப்பாடா.... இப்பவாவது தோணுச்சே!  (செட்டி நாடு கோவில்களில்தான் முதல்முதலா இப்படி ஒன்னு பார்த்து , ஐடியா சூப்பர்ன்னு அதிசயிச்சேன்) 

நம்ம புள்ளையாருக்குக் கவசம் போரடிச்சால் சந்தனக்காப்பு!  அதுலேகூடப் பாருங்க அநந்தபத்மநாபனைப்போல ஒரு ஸ்டைல் காமிக்கிறதை!!!!

வலது பக்கம் நவகிரகங்களுக்கான தனிச் சந்நிதி.  எல்லோருக்கும் தங்கக் கவசங்கள். சுற்றி வந்து கும்பிட,  ஆள்போகும் அளவில் குட்டிப்பிரகாரம். கொடிமரத்துக்கு அந்தாண்டை கைகூப்பிய நிலையில் நிற்கும் பெரிய திருவடி. அவர் கண் எதிரில் ஒரு நாற்பதடி  தூரத்தில் கருவறை. அநந்தன் மேல் பள்ளி கொண்ட பரந்தாமன் பதுமநாபன்.

ரொம்பப்பெரிய பிரமாண்டமான கோவில் கிடையாது. கோட்டைவாசல் கதவுகளைக் கடந்தால் உட்ப்ரகாரத்துக்குள் இருப்போம்.  உள்ளதே ஒரு பிரகாரம்தான்.  நடுவில் கருவறை. தலை, மார்பு, திருவடித்தாமரைன்னு மூன்று வாசல்களில் பரமனை சேவிக்கலாம்.  அச்சு அசலா திரு அநந்தபுரம் டிஸைனே!

கோவில் அடையாறுக்கு வந்ததில் திருவாங்கூர் மகாராஜா சித்திரைத்திருநாளின் பங்கே முழுக்க முழுக்கன்னு சொல்லலாம். மதராஸில் இருக்கும் அரசரின் சொந்த இடத்தில் கோவில் கட்டலாமா என்று ஆலோசனைகள் வந்தப்ப.... மக்கள் வந்து போக ஏதுவா உள்ள பொது இடத்தில் கட்டலாமுன்னு சொல்லி அதுக்கான ஏற்பாடுகளையும் செஞ்சு நிலம் வாங்கித்தந்ததும்  இவரே!  கார்னர் சைட் ஆனது இன்னும் விசேஷம்.

 வாசல் கடந்து ஒரு அடி உள்ளே வச்சு பெருமாளைப் பார்த்தபடி நிற்கிறோம். பிரகாரத்தின் முன்பகுதியில் இரண்டு மூலைகளிலும் நமக்கு வலப்பக்கம் ஹனுமனுக்கும் இடதுபக்கம்  கருடருக்கும் தனித்தனியாக சந்நிதிகள். மூணடி உயரம் உள்ள சிலைகள்.

கருவறையின் வெளியே ஒரு பத்தடி அகல முன்மண்டபம். கூடவே ஒரு நாலடி உசரக்  கம்பித்தடுப்பு. பட்டர்கள் நடமாட்டம் நம் பார்வையில் குறுக்கிடுவதில்லை. நிம்மதியாக தரிசனம் செய்யலாம். அடியும் முடியும் நடுவில் உடலுமாக் காண்பிக்கிறான். ஆனால் தேடிவரும் மக்களைத் திரும்பிப் பார்க்கக்கூடாதோ?  அலட்சியமா வானம் பார்த்த பார்வை. வலது கை நீட்டி தாழே இருக்கும் சிவனுக்கு ஒரு தடவல்.

முன்பக்கம்  தரையில் பக்கத்துக்கொன்றாக தேவியர் இருவரும், முனிவர்கள் இருவரும்.  நடுவில் சின்ன மரமேடையில் உலோகச்சிலைகள். (உற்சவர் என்று சொல்ல இயலாது. )ஆரத்தியும் தீர்த்தமும் சடாரியும்  அப்பப்ப லபித்துக்கொண்டே இருக்கு.


இந்தக் கருவறை முன்மண்டபத்துக்கு தரைக்கும் சுவர்களுக்கும் டைல்ஸ் மாற்றும்வேலை போன வருசம்(2011) ஆரம்பிச்சுருந்தாங்க. நியூஸி திரும்புமுன் சென்னை போனபோது பார்த்தது. இப்போ எல்லா வேலைகளும் முடிஞ்சு பொன்வண்ண டைல்ஸ்களும், பொற்தகடு போர்த்திய  மூன்று செட் கதவுகளும், மேலே வரிசைகட்டி நின்னு  மின்னும் மணிகளுமா  கண்ணை அப்படியே இழுத்துவச்சுக் கட்டிப்போடுதே!!!!



சந்நிதிகளை வலம்வரலாம் என்று இடப்பக்கம் பெரியதிருவடியைச் சுற்றிவந்து வணங்கி  நேராக நடக்கிறோம்.  கோவில் வாகனங்கள் ஹனுமன், பெரிய திருவடி, வெள்ளையானை, சிங்கம் எல்லாம் தூசி புகாமல் பத்திரமாக அததுக்குரிய  ஸீத்ரூ ப்ளாஸ்டிக் மூடிகளுக்குள் ! நமக்கு இடது பக்கத்தில் மடைப்பள்ளி.
மடைப்பள்ளிச் சுவரில் கொஞ்சம் உசரத்தில் புதுசா ஒரு அன்னபூரணி! சமீபத்திய வரவு. புடைப்புச் சிற்பம். கையில் கலசமும் கரண்டியுமா இருக்காள்.  முகத்தில் பெருசா ரெண்டு முட்டைக் கண்கள்.  அதுலே லேசா ஒரு கோபம் தெரியுதோ?  ஏய்.... சத்தம் கித்தம் போடாம லைனில் வரிசையா வந்தாத்தான் சோறு..... முக சாடையும் லேசா ஆணைப்போல இருக்கே! அன்னபூரணிக்குக் கண்களில் கனிவும், லக்ஷ்மீகரமான களையுள்ள முகமும் இருக்கவேணாமா? கருணைதெய்வமா இருக்கவேண்டியவளை இப்படிச் செஞ்சது யார்?


வலப்பக்கம் கருவறைச்சுவரில் ஸ்ரீ சுதர்சனர். இவருக்கு நேரெதிரா இப்ப ஒரு புது வாசல் வந்துருக்கு! வெளியே எட்டிப் பார்த்தால் உணவுக்கூடம் கட்டும் ஏற்பாடு. கூடவே கழிப்பறைகள்.  அவசியமானவைகள்.  ரொம்ப நல்லது.

பிரகாரத்தில் மேற்கொண்டு காலை வீசிப்போட்டால் மூலையில் பெரிய கண்ணாடி அறை அமைப்பில் தங்க ரதம். கோவிலுக்கு ஒரு தொகை கட்டினால்  நாம் குறித்த நாளில் ஜொலிக்கும் தங்கரதத்தை நாமே உள்பிரகாரத்தைச் சுற்றி இழுத்து வலம் வரலாம்.

இது இல்லாமல் கோவிலுக்கு ஒரு பெரிய தேரும் உண்டு. எல்லா மாசங்களிலும் திருவோணம் நட்சத்திர தினங்களில் வீதியுலா கோவிலையொட்டி இருக்கும் நாலுவீதிகளிலும் சுற்றிவரும். இதுக்கும் விருப்பம் இருந்தால் நாம் ஒரு தொகை கட்டி ஸ்பான்ஸார் செஞ்சுக்கலாம். வருசத்துக்கு பனிரெண்டு நாட்கள் மட்டுமே என்பதால் ஏகப்பட்ட டிமாண்ட். இதைத்தவிர விசேஷ நாட்களிலும் ப்ரம்மோத்ஸவ காலங்களிலும் பெரியதேர் புறப்பாடு உண்டு. ரொம்ப சிஸ்டமேடிக்கா உற்சவர்களை ஆடாமல் அசையாமல்  ஃபோர்க்லிஃப்டில் வச்சு  தேரில் ஏத்தறதும் இறக்குறதும் எனக்கு ரொம்பவே பிடிச்சுப்போச்சு.




தங்கத்தேரைப் பார்த்துட்டு .இப்ப வலப்பக்கம் திரும்பறோம். அலர்மேல்மங்கைத்தாயாரும் ஸ்ரீநிவாஸனுமா பெரிய படங்கள்.  கீழே சின்ன மண்டபத்தில் குழலூதும் ஸ்ரீவேணுகோபாலன். பெருசு ஒன்னும் சிறிசு ரெண்டுமா மூணு சிலைகள்.  நமக்கு வலப்பக்கம் கருவறையின் பின்புறச்சுவர். மாடத்தில் லக்ஷ்மிநரசிம்மர். அவருக்கு நேரெதிரா கோவிலின் பின்வாசல். பிரகாரத்துலேயே கோவிலின் தலவிருட்சம்.மரத்தின் உடல்மட்டும் காமிக்குது. தலைப்பக்கம் மேற்கூரைக்கு வெளிப்பக்கம்!

இன்னும் நாலடியில் எதிர்மூலைக்குப்போயிருவோம். அழகான ஒரு அறை. கோவிலில் உள்ள எல்லா மூலவர்களுக்கான உற்சவர்களின் கூட்டம்! எனக்கு ரொம்பவே பிடிச்ச இடம். மினுமினுன்ற ஜொலிப்பில் தகதகன்னு கண்ணைப்பறிக்கும் அழகு!  ரெண்டு படி ஏறிக் கம்பிக்கதவுக்குப்பின்னே பார்க்கலாம். படிகளின் ஓரம் ரெண்டு யானைகள்.  புறப்பாடு தினங்களில் உற்சவர்களை வெளியே கொண்டுவந்து வச்சு அலங்கரிக்கிறாங்க. கண்கொள்ளாக் காட்சி.

இந்த அறைக்கு நேரெதிரே எதிர் மூலையில் ஆஞ்சநேயர் சந்நிதி வந்துருது,  மற்றபடி நமக்கு வலப்பக்கம் கருவறை வெளிச்சுவர் மாடத்தில் ஸ்ரீ விஷ்ணுதுர்கை.  இவளுக்கு நேரெதிரில் பிரமாண்டமான கதவு.  சொர்க்க வாசல். கருவறையைச் சுற்றி இருக்கும் நாலு வாசல்களுக்குமே பெரிய பெரிய கதவுகள்தான். நாலு நாலரை மீட்டர் உசரம் இருக்கும்! (இருக்குமோ???)

இந்த சொர்க்கவாசல் கதவு(ம்) இப்போ தங்கமே தங்கம்!!!!  அழகழகான  சின்னச் சின்ன தங்கப்படங்களை வச்சு அடுக்குனதைப்போல விஷ்ணுவின் பல அவதாரங்களையும் லீலைகளையும் விளக்கும் அமைப்பு! கவனிக்க வேண்டிய இன்னொரு அம்சம். முழுக்கதவுக்கும் ஒரு கண்ணாடிச் சட்டம். டபுள் கதவு! நம்மாட்களைப் பற்றி முழுசும் தெரிஞ்சுவச்சுருக்கும் நிர்வாகத்தினரை என்ன சொல்லி பாராட்ட?  ஹ...ங்.... முழுசும் தங்கமா...... தொட்டுப்பார்க்கத் துடிக்கும் கைகளைப்பற்றி .....

கைகள் வெறுமையாப்போயிருதேன்னு பக்கத்துலே ஒரு மேசை அமைப்பில் பெருமாளுக்குச் சாத்திய மலர்களும் துளசியும், ஒரு அகலமான பாத்திரத்தில் குங்குமம். சில நாட்களில் சந்தனமும் உண்டு. இதெல்லாம் சந்தனக்காப்பு போட்ட மறுநாள் ஸ்பெஷல்.

ஆஞ்சநேயனை வணங்கி வலம் வந்து மறுபடியும் பெருமாளை ஒருமுறை ஸேவிச்சுக்கிட்டு  ஒரு அரைமணி முகமோ இல்லை மலரடிகளோ பார்த்துக்கிட்டே தூணோரம் சாய்ஞ்சுக்கலாம். விசேஷ நாட்களில்  கருவறை சமாச்சாரங்கள் எல்லாம்  ரெண்டு CCTV யில் நேரடி ஒளிபரப்பு. நல்லவேளை கேமெராவை கடவுளுக்குக் காமிக்கக்கூடாதுன்னு  யாரும் தடை சொல்லலை!

வெளியே போய் இடக்கைப் பக்கமுள்ள நவகிரகங்களைச் சுற்றி வணங்கிட்டு  தொட்டடுத்துள்ள ஹாலைக் கட்டாயம் எட்டிப் பார்ப்பேன். எதாவது நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகளோ இல்லை விசேஷங்களோ நடந்துக்கிட்டுத்தான் இருக்கும் முக்கால்வாசி தினங்களில்.,ஏகப்பட்ட கச்சேரிகளும் கலை நிகழ்ச்சிகளுமா..... எல்லாமே  இலவசம்!  நவராத்ரி சமயமானால்  கோவில் கொலு இங்கேதான். கூடவே கலைநிகழ்ச்சிகளும் அமர்க்களப்படும். நல்ல பெரிய ஹால். நாற்காலிகளும் ஏராளம். இந்த ஹாலை கல்யாணம், நிச்சயதார்த்தம், சஷ்டியப்த பூர்த்தி, சதாபிஷேகம் போன்ற தனிப்பட்ட நிகழ்ச்சிகளுக்கும் ஒரு தொகை கொடுத்து, வாடகைக்கு எடுத்துக்கலாம்.  மாடியில் பெரிய டைனிங் ஹாலும் உண்டு.



நவகிரக சந்நிதிக்கு முன்புறம் யாகசாலையும் தொட்டடுத்து பெரிய தேர் நிற்க ஷெட் ( இது தெருப்பக்கம் திறப்புள்ளது) இப்படி சகல வசதிகளோடு  எல்லாமே அம்சமா அமைஞ்சுருக்கு இங்கே!

நவகிரக சந்நிதிக்கும் ஹாலுக்கும் இடைப்பட்ட ஒரு எட்டு/ஒன்பது அடி அகல பாதை ஒன்னு நம்மைக் கொண்டுப்போய்ச் சேர்க்குமிடம் அரசமரத்தடி சிவன் சந்நிதி. நல்ல பெரிய மேடையில் மரமும் அதைச்சுற்றி நாகர்களும், பிள்ளையாரும் அபிஷேகப்பிரியனுக்கு தண்ணீர் தலையில் சொட்டிக்கொண்டே இருக்கும்படியான கலச அமைப்புமா இருக்கு. கூடவே ஒரு துளசி மாடமும்!

பாதை முழுசுக்கும் இப்போ அருமையான டைல்ஸ் பாவி இருக்காங்க. பாதையின் இரண்டு பக்கங்களிலும் வரிசையா பெஞ்சுகள்.  கோவிலுக்குப் போனால் கொஞ்ச நேரம் உக்கார்ந்துட்டு வரணும் என்ற சாஸ்த்திர சம்ப்ரதாயப்படி ஒரு அஞ்சு நிமிசம் உக்கார்ந்து ஆனந்திக்கலாம்.
பாதையின் நடுப்பகுதிக்குக்கிட்டே சொர்க்கவாசலின் வெளிப்புறக் கதவு இருக்கும்!

நாம் ஒரு நாள் போனது சனிக்கிழமையாக இருந்துச்சு. புரட்டாசி சனிக்கிழமை என்பதால் பெருமாள் முன்னே  பிரபந்தம் சொல்லிக்கிட்டு இருந்தாங்க. தமிழ் ஓசை கேட்டு அவன் முகம் திரும்பாதான்னு  எனக்கொரு நப்பாசை இருந்ததென்னவொ நிஜம்.











நவராத்ரிக்கு நட்ட நடுவில் ஒரு தீவாலி!!!!

$
0
0


" ஏய்...யாரங்கே... நாளைக்கு தீவாலி கொண்டாடிக்கோ."

"என்னங்க ஏமான்... இப்பதான் நவராத்ரி ஆரம்பிச்சுச் சரியா அஞ்சாம் நாள் விழா நடந்துக்கிட்டு இருக்கு. இப்பப்போய்.... இன்னிக்கு பஞ்சமி. அடுத்த அமாவாசை வரைக்கும் காத்திருக்கலாமே..."

"ஏய்.... காசு தர்றவன் நான். உதவிக்கு(??) ஒரு ஆள் தர்றவன் நான். உனக்கு பண்டிகை கொண்டாடிக்கணுமா வேணாமா? நல்லா யோசிச்சு சட்னு பதில் சொல்லு."

"அது இல்லைங்க ஏமான்.... பண்டிகைக்கு சில சாஸ்த்திரம் விதிகள் இப்படி இருக்குல்லே......."

"உங்க ஆளுங்க மட்டும் கொண்டாடிக்கிட்டாப் போதுமுன்னா அது சரி. இப்ப நாடே கொண்டாடப்போகுது. மத்த ஊர்களில்  கொஞ்சம் சீக்கிரமா முடிச்சுடறோம். போனாப்போகுதுன்னு  இந்த ஊருலே  ரெண்டு வாரம் பிந்தி வச்சுருக்கேன். என்ன சொல்றே? வேணுமா வேணாமா?"


குபேரன் சொல்லைத் தட்ட முடியுதா?

 "  சரிங்க ஏமான். எல்லாம் உங்க விருப்பம் போலவே செஞ்சுறலாம்."

நியூஸிலாந்து தொழிலாளர் தின அரசு விடுமுறை எப்பவும் அக்டோபர் மூணாவது வாரக்கடைசியில் லாங் வீக் எண்டா வரும். அன்னிக்கு வச்சுக்கலாம் விழாவைன்னுட்டாங்க.

" அக்டோபர் முதல்வாரக்கடைசியில் ஆக்லாந்து நகரிலும், ரெண்டாவது வாரக்கடைசியில் வெலிங்டன் நகரிலும் கொண்டாடறாங்க.  உங்க அதிர்ஷ்டம் லாங்வீக்கெண்டா கிடைச்சுருச்சு!!!!"

"சரிங்க ஏமான். சரிங்க ஏமான்."


நாலு மாசத்துக்கு முன்னே (22 ஜூலை 2012)  'மீட்டிங் வச்சுருக்கு  வா' ன்னதும் போனோம். நல்ல மழையும் குளிருமான மாலை நேரம். எங்களுக்கு இங்கே விண்ட்டர் சீஸன். அதுவும் மிட் விண்ட்டர்.  சிட்டிக் கவுன்ஸில் ஏற்பாடு செஞ்ச ஈவண்ட் மேனேஜர், மீட்டிங் நடக்கப்போகும் ஹால் சாவியைக் கொண்டு வர மறந்துட்டேன்னு அசட்டுச் சிரிப்பு சிரிச்சதும்....

அபுக்ன்னு இருந்துச்சு. கிழிஞ்சது போ....முதல்நாள் அழகே இப்படீன்னா.... நாங்கெல்லாம் அப்போதான் ஜுரத்தில் விழுந்து எந்திரிச்ச ஆளுங்க.  ரெண்டு மணி நேரம் மழையில் நிக்க யாராலே முடியும்? நீங்களே பேசிட்டு மெயிலில் சேதி அனுப்புங்கன்னுட்டு எல்லோரும் கிளம்பிப் போயாச்சு.

1997 வது வருசம் இன்டியன்  சோஸியல் அண்ட் கல்ச்சுரல் க்ளப் ஆரம்பிச்சதுலே இருந்து  சிட்டிக்கவுன்ஸில் தீபாவளி கொண்டாட ஃபண்டிங் கொடுத்து வருது. தலைமை மாறி மாறிப்போய் கடைசியில் தேசிய குணத்தைத் தூக்கிப்பிடிக்கும் மக்கள் ஆட்சிக்கு வந்து ......  போதுண்டா சாமின்னு ஆனதெல்லாம் இங்கே பார்த்துக்குங்க.  

காசுன்னதும் ஆட்டையைப்போட்டாங்கன்னு புகார் எல்லாம் கொடுத்து வக்கில் நோட்டீஸ் கொடுக்கும் அளவுக்கு ஆட்டையைப்போடாத(?) மக்கள் பிரிவு ஜரூராச்சுன்னதும் சிட்டிக் கவுன்ஸில்  நாங்களே ஒரு ஈவண்ட் மேனேஜரை ஏற்பாடு செய்யறோம். அவுங்க பேச்சையாவது கேட்டு நடங்கன்னுருச்சு.


இவ்ளோ கலாட்டாக்களுக்கு நடுவுலே நிலநடுக்கம் வந்து,  ஊரே பாதிக்கும் மேலே காணாமப்போனக்  காரணத்தால் 2010, 2011 வருசங்களில் தீபாவளிக் கொண்டாட்டம் ஒன்னும் நடக்கலை:(

அப்புறம் இன்னொரு மீட்டிங். இது GOPIO வுக்காக. Global Organaisation of people of Indian Origin. (இப்படித்தான் ஆளாளுக்கு ஒன்னு தொடங்கிருவாங்க)

என்னென்ன செய்யலாமுன்னு ஐடியா கொடுங்கன்னதும் தீபாவளிக்குக் கோலம் போடலாம். அதையே சில்ரன்ஸ் ஆக்டிவிட்டியா வச்சுக்கலாமுன்னு  வாயை விட்டது தப்பாப் போயிருச்சு. ஆமாமாம். நல்ல ஐடியான்னு ஊக்குவிச்சு அதுக்கு என்னென்ன பொருட்கள் வேணுமுன்னு லிஸ்ட் கொடுங்க. வாங்கிறலாமுன்னாங்க.

நிறைய மீட்டிங்ஸ் அந்த ஈவண்ட் மேனேஜரோடு நடந்துச்சு. க்ராஃப்ட் ஸ்டால், சாப்பாட்டுக்கடைகள், இந்திய சமாச்சாரங்கள் விற்பனை செய்யும் கடைகள் இப்படி (வடநாட்டு வழக்கப்படி மேளா) அததுக்கு உண்டான ஏற்பாடுகள், கடை போட கட்டணம் எல்லாம் முடிவு செஞ்சாங்க.

நிலநடுக்கம் வந்தால் மக்கள் தப்பிச்சு ஓட வசதியான இடம் வேணுமேன்னு தேடுனதிலே எங்கூர் CBS Arena முதல்முறையா பப்ளிக் ஃபங்ஷன் நடத்திக்க இடம் (வாடகைக்குத்தான்) தரேன்னுச்சு. இண்டோர் ஸ்டேடியம் என்பதால்  குளிர் வாட்டாதுன்னு  எங்களுக்கு (அல்ப )சந்தோஷம் வேற! நாலாயிரம் சதுர மீட்டர் பரப்பளவு இருக்கே!

இந்த வருசம் நம்ம குடும்ப விழா சம்பந்தமா பயணம் இருந்ததால் நீங்க செய்யறதை செஞ்சுக்குங்க. கொண்டாட்ட சமயத்துலே வந்து கலந்துக்கறோமுன்னு சொல்லி இருந்தோம்.

வந்து பார்த்தப்ப தீவாலி 2012 என்ற பெயர்  Abacus Institute of Studies - Diwali 2012.ன்னு மாறி இருக்கு. ஸ்பான்ஸார்களை தேடுனப்ப இவுங்க பெயர் ரைட்ஸ் கொடுங்கன்னு சொல்லி நல்லதா ஒரு தொகை கொடுத்தாங்கன்னு விவரம் கிடைச்சது. உள்ளுர் வங்கி, ட்ராவல் பிஸினெஸ் இப்படி இன்னும் சில பேர்  ஸ்பான்ஸார் லிஸ்ட்டுலே ஒரு பக்கமா சேர்ந்துக்கிட்டாங்க.கூடுதலா  காசு வந்தா சிட்டிக் கவுன்ஸில் வேணாமுன்னா சொல்லும்.

கல்ச்சுரல் டெமோ ஸ்டாலுக்கு பொறுப்பு ஏத்துக்கிட்டவங்க  ஒரு நாலைஞ்சு முறை ஃபோன் செஞ்சு  கோலத்துக்கு தயாரான்னு விசாரிச்சாங்க. ரங்கோலி போட ஒரு வட இந்தியத் தோழி கிடைச்சாங்க. நானும் இன்ஸ்ட்டண்ட் ரங்கோலி அச்சுகள் சில கிரியிலே இருந்தும், வள்ளுவர் கோட்டத்துலே சில வருசத்துக்கு முன்னே நடந்த ஓணத்திருவிழாவிலும் வீட்டு உபயோகத்துக்காக வாங்கி வச்சுருந்தேன். நம்ம வீட்டுலே ரெண்டு மூணு கோலப்புத்தகங்கள் வேற இருக்கே!!! சமாளிச்சுடலாம்.

கலர்ப்பொடிகள், அரிசிமாவு, பிள்ளைங்க கோலம் போட்டுப் பழக வெள்ளைத்தாள் ஒரு ரீம், கலர்க்கலரா ஃபெல்ட் பேனாக்கள் வேணுமுன்னு சொன்னேன். ஹோலி கொண்டாட வாங்குன கலர்ப்பொடிகள் இருக்கு. அரிசிமாவு வாங்கியாறேன்னு சொல்லி ஒரு நாள் பேப்பர் அண்ட் ஃபெல்ட் பேனாக்களைக் கொண்டுவந்து கொடுத்துட்டு அப்படியே கோலம் போட்டு வைக்க பலகைகள் நாலைஞ்சு கொடுத்துட்டுப் போனாங்க. கலர் பவுடர்?

வோ தோ ஹோ  ஜாயேகா......

கொண்டாட்ட நாள் வந்ததும்  போய்ச் சேர்ந்தோம்.  கோபால்  வரவர முன் ஜாக்கிரதை முத்தண்ணா ஆகிட்டார்.  கோலம், தென்னிந்திய கலைகள்ன்னு கொஞ்சம் வலையில் தேடி நாலைஞ்சு கோலப்படங்களும், பரதநாட்டியக் கலைஞர், கதகளி ஆட்டக்காரர், தஞ்சைக்கோவில், மீனாட்சி அம்மன் கோவில் இப்படி  ஏழெட்டுப் படங்களை ஏ3 யில் ப்ரிண்ட் எடுத்து வச்சதையும் எடுத்துக்கிட்டார்.

மதியம் மூணு மணிக்கு விழா தொடங்குது. பகல் பனிரெண்டரைக்கே வந்துருங்கன்னு தகவல்.  அவசரக்கோலம் அள்ளித் தெளிசாலாகாதா?  சாப்பாட்டுக்கடைன்னா முன் ஏற்பாடுகள்  அதிகம். நம்மது வெறும் டெமோதானே?  ரெண்டு மணிக்குப்போய்ச் சேர்ந்தோம்.  கூடாரம் கூடாரமாப்போட்டு  பாதி ஸ்டேடியத்தை நிரப்பி இருந்தாங்க. எல்லாம் ஓப்பன் கூடாரவகைகள்.

வெறும் டெமோவுக்குன்னு நம்ம ஸ்டால் மட்டும் இல்லாம, புடவை கட்டுவது எப்படி? தலையில் டர்பன் சுற்றுவது எப்படின்னு  சிலதும் ஒடிஸ்ஸி  நடனம், பரதநாட்டியம் இப்படி ரெண்டு மூணுக்கும் இடம் ஒதுக்கி இருந்துச்சு. இந்திய உடை வகைகள்ன்னு ஒரு நிகழ்ச்சி வேற வச்சுருந்தாங்க.  பாவாடை தாவணி வேணுமுன்னதால் மகளுடையதைக் கடன் கொடுத்தேன்.

எங்களுக்கு ஒதுக்கி இருந்த கூடாரத்துலே கொண்டு போன கோலவகைகளை மேசையில் பரப்பி, கோல பார்டர்கள் வச்சு அலங்கரிச்சு,  கோபால் கொண்டுவந்த போஸ்ட்டர்களை வச்சு அலங்கரிச்சுட்டோம்.  வட இந்தியத்தோழி  மோனிகா,  பலகையில்  சாக்பீஸால் வரைஞ்சுகிட்டு வந்துருந்தாங்க.  அதுலே கலர்ப்பொடி போட்டு நிரப்பணும்.

பனிரெண்டரைக்கே வந்துருவேன். நீங்களும் வந்துருங்கன்னு சொன்ன  நம்ம ஏற்பாட்டாளர் ஆளையே காணோம். ரெண்டரைக்கு  வந்தவங்க அவுங்க பாட்டுக்கு  நம்ம ஸ்டாலைக் கடந்து  மேடை ஏற்பாடுகள் நடக்கும் இடத்துக்குப் போறாங்க. பவுடர் பவுடர்ன்னு  கூவறோம்.  என்ன பவுடர்ன்னு திருப்பிக் கேக்கறாங்க.  நான் தென்னிந்தியக் கோலம். கையால் வரைஞ்சு காமிச்சுருவேன். நார்த் இந்தியா ரங்கோலி?  பாவம். மோனிகா..........  பயந்துபோய் நிக்கறாங்க.

 "நானா கொண்டு வரணும்?  "

அடப்பாவி............. சொன்னது ஒன்னும் நினைவில்லையா? 

 "வோ தோ ஹோ  ஜாயேகா...... "

 "கபி?  தின் கதம் ஹோனேகே பாத்?  "

" ஓ.....  ஹோ  ஜாயேகா...... "

ரெண்டரைக்கே மக்கள்ஸ் வர ஆரம்பிச்சுட்டாங்க.  நம்ம ஸ்டால் பக்கம் ஆட்கள் பார்வையிட வர்றாங்க.  கோலம்போடு கோலம் போடுன்னு கோபால் கூவ.... பரபரன்னு ஒரு அஞ்சாறு  வெள்ளைப் பேப்பர்களில்  சின்னச்சின்னக் கோலமா வரைஞ்சு தள்ளிட்டேன்.  சின்னப்புள்ளைகளை வாவான்னு கூப்பிட்டு கோலம் போட்டுப்பாருங்கன்னு ஊக்கு விக்கறார் கோபால். அதுகள் முழிக்க,  சுலபமான கோலம் சொல்லித் தரேன்னு , ரெண்டு புள்ளி, மூணு புள்ளி வகைகளில் ஆரம்பிச்சேன். ஒரு புள்ளின்னா இன்னும் சுலபமா இருந்துருக்கும்!!




 எங்க பேட்டை பார்லிமெண்ட் அங்கம் மீகன் வுட்ஸ் வந்துருந்தாங்க. கோலம் போட வராதாம்!!!! சரி... அப்ப போஸ் கொடுத்துட்டுப் போங்க:-))))



அங்கே  இங்கேன்னு பாய்ஞ்சு இண்டியன் கடை போட்டுருக்கும் அஷோக்கிடம் சொல்லி அவர் கடையிலிருந்து  கலர் வருமுன்னு சொல்லிட்டு போயிட்டாங்க.  இண்டியன் க்ளப் தலைவி கலர் போட்ட அரிசிகளை நாலைஞ்சு கிண்ணங்களில் கொண்டு வந்ததும் கொஞ்சம் உசுரு வந்துச்சு.  மோனிகாவிடம் கொடுத்தேன்.  பிள்ளைகளும்  அரிசியை எடுத்து  ரங்கோலி போட ஆரம்பிச்சு பலகை கொஞ்சம் கொஞ்சமா  அழகாகிக்கிட்டே இருந்துச்சு.



இதுக்கிடையிலே   இந்தப் பகுதியிலேயே ஒரு ஓரமா  சின்னதா ஒரு மேடையில்  புடவை ஷோ, பரத நாட்டியம் ஷோ, பாலிவுட் டான்ஸ்,பாங்ரா டான்ஸ்ன்னு   நடக்குது.  மக்கள் கூட்டம் மேடையைச் சுத்தி. நமக்கோ...பாட்டுச் சத்தம் கேக்குதே தவிர  ஒன்னுமே தெரியலை.  தெரிஞ்சதெல்லாம்  பார்வையாளர் முதுகுகளே!

நம்ம ஸ்டாலில் மட்டும் கூட்டம் குறையவே இல்லை. பசங்களுக்கு ஆக்டிவிட்டி ஒருத்தர் மாத்தி ஒருத்தர்ன்னு என்பதால்  வந்துக்கிட்டே இருக்காங்க.  நானும் கோலம் சொல்லிக்கொடுத்து அவுங்களையே வரையவிட்டு  அந்தக் காகிதத்தை அவுங்களுக்கே கொடுத்துக்கிட்டு இருந்தேன்.  மூணு முதல் அஞ்சு வரைதான் நமக்கு டெமோ என்பதால்  அப்புறம் பார்த்துக்கிட்டாப் போச்சுன்னு தோணல்.



கேரளா கிளப் # 2  ஸ்டாலில் புதுசா இருந்த ஆப்பச் சட்டி!!!

என்னால் ஸ்டாலை விட்டு நகர முடியலைன்னு கோபால் போய் படங்கள் எடுத்துக்கிட்டு வந்தார். அவருக்கு நன்றிகள்.,

பதிவின் நீளம் கருதி, மீதி நாளை:-)



கல்யாண 'மாலை'

$
0
0

இது யோகாதானே?

ஙே....   ஒரு விநாடிக்கும் குறைவா முழிச்சாலும் சட்ன்னு சுதாரிச்சுக்கிட்டு ஆமாம்  இது ஒரு வகை யோகாதான்.  ரொம்பவும் கவனமா மனசை ஒருமுகப்படுத்திச் செய்யவேண்டிய விஷயம்.

ஏம்மா....ஒரு வெள்ளைக்காரம்மா கேட்டதுக்கு இப்படிச் சொல்லிட்டேனேன்ன  கோபாலைக் கொஞ்சம் பெருமையோடு பார்த்தேன். சும்மாச் சொல்லக்கூடாது!  மனுசர் அடிச்சு விட்டாலும்.....

எப்படிங்க? எப்படி இப்படியெல்லாம்....?

அது தானே வருதும்மா.......  சரியா நாஞ்சொன்னது?

ரொம்பச் சரி. கவனம் பிசகாமல்  ஒரு காரியத்தில் ஈடுபட்டால் அது ஒரு வகை தியானம். தியானம்  இஸ் பார்ட் ஆஃப் யோகா. (எனக்கு மட்டும் சமாளிக்கத் தெரியாதா?)

ஆனா சும்மாச் சொல்லக்கூடாது.  வரவர இவர் நல்லாவே தேறிட்டார்!!!!!

நிறையப்பேர்....  கோலத்தைப்பற்றி நாம் எடுத்து வச்சுருக்கும் ப்ரிண்ட் அவுட்லே  இருப்பதைக் கவனமா வாசிக்கிறாங்க.


சாப்பாட்டுக்கடைகளில்  கூட்டம் அம்முதுன்னு ரிப்போர்ட் வருது. நம்ம கோபால்தான் ஊருளவாரம் போய்ப்பார்த்து வந்து சேதி சொல்றார். ரங்கோலித்தோழி புடவை ஷோ, சாப்புடப்போறேன், டீ குடிச்சுட்டு வரேன்னு நாலைஞ்சு முறை இடத்தைவிட்டு  எஸ் ஆகிக்கிட்டு இருக்காங்க.  அந்த சைடு போற பசங்க போற போக்குலே கொஞ்சம்  கலர் அரிசி எடுத்து காலி இடத்தில் நிரப்பிக்கிட்டுப் போறாங்க. நரி வலம் போனால் என்ன இடம் போனால் என்ன ? மேலே விழுந்து எல்லாத்தையும் கொட்டி வச்சு வாறாமல் இருந்தால் போதாதா???

' சாப்புட எதாவது வாங்கியாரட்டுமா ?'ன்னு தனக்குத் தேவையானதையெல்லாம் பட்டியல் போட்டுக்கிட்டே இருக்கார் நம்ம கோபால். டெமோ முடியட்டும். ஸ்டாலில் வேற ஆளில்லை. விட்டுட்டுப்போக முடியாது.  ஒருவழியா அஞ்சேகாலுக்கு ரங்கோலி திரும்பி வந்தாங்க. அட ! அழகா எல்லாம் செஞ்சுருக்காங்களேன்னு பாராட்டு வேற!

காஃபி கிடைக்குதான்னு பார்க்கலாமா?  போய்ப் பார்த்தா  எல்லாம்  உள்ளுரில் இருக்கும் இந்தியச் சாப்பாட்டுக்கடைகளே.  உலகப்பொதுவான இண்டியன் மெனு(??)  பட்டர் சிக்கன் ரோகன் ஜோஷ், நான், நவ்ரத்தன் குர்மா, மட்டர் பனீர் ..... போதுண்டா சாமி:(

உள்ளுர்லே சுமார் 42 இந்திய சாப்பாட்டுக்கடைகள்  இருக்கு,  அஞ்சாறு ரெஸ்ட்டாரண்டும்  மீதி எல்லாம் டேக்கவே கடைகளுமா.  அதுலே பாதி எண்ணிக்கை இங்கே ஸ்டால் போட்டுக்கிட்டு அதே சமாச்சாரங்களை அயராமல் விக்கறாங்க.

வேற எதாவது கிடைக்குமான்னு தேடுனால் கிறைஸ்ட்சர்ச்  கேரளா அசோஸியேஷன் ஸ்டால் கண்ணில் பட்டது.  கிட்டப்போனதும் மேங்கோ லஸ்ஸியை எடுத்துக் கையில் கொடுத்த ஜஸ்டின் ( இப்போதைய ப்ரெசிடெண்ட்) என்ன சாப்புடறீங்கன்னார்.  பெரிய  ஹாட் ப்ளேட் வச்சு தோசையும் ஆப்பமும் பக்கத்துலே பக்கத்துலே போட்டுக்கிட்டு இருக்காங்க. திருப்பிப்போட்டா தோசை. போடலைன்னா ஆப்பம்.ரொம்ப ஈஸி:-))))  ஆனால்  வேற வேற மாவு கேட்டோ!

ரெண்டு பேருக்கும் ஆப்பம் சொன்னதும் காசு வாங்கிக்க மாட்டேன்றார்.  ஏன்? நான் கல் கொடுத்த கருணை மாதா!!  மாவு அரைக்க  வெட் க்ரைண்டர் நாந்தான் நேத்து கடன் கொடுத்துருந்தேன்:-)
 இலவசமா? அதெல்லாம்  தேவை இல்லை. காசு வாங்கிக்கலைன்னா எனக்கு ஆப்பம் வேணாம். வேற எங்கியாவது சாப்புட்டுக்கறேன்னதும்  சரின்னு காசை வாங்கிக்கிட்டார்.  லாபநோக்கு இல்லாம (அவுங்கவுங்க) சமூகத்துக்கு எதாவது  சேவை செய்யும்  சங்கங்கள்  ஃபண்ட் ரெய்ஸிங் & நாமும் இருக்கோமுன்னு சமூகத்துக்கு அறிவிப்பு  செஞ்சுக்க இங்கே ஸ்டால்ஸ் போட்டுருக்காங்க.  பதிவு செஞ்சுக்கிட்ட சங்கங்களுக்கு மட்டும்   குறைந்த தொகைக்கு இடம் கொடுத்துருக்கு.  மற்ற ஸ்டால்களுக்கு  400ன்னு சொன்னாங்க.

தீபாவலி விருந்துன்னு  தனி ஏற்பாடு ஒன்னும் இல்லை. இது பப்ளிக் ஃபங்ஷனா போயிருச்சுல்லே? ஊருக்கே  சோறு போட முடியுமா சிட்டிக் கவுன்ஸில் கொடுக்கும் ஃபண்டிங்லே?  ஃபுட் ஸ்டால்களில்  அவுங்கவுங்க காசு கொடுத்து வாங்கிக்கணும்.

ஒரு செட்லே தடிதடியா ரெண்டு ஆப்பம்.  சைட் டிஷ்ஷா கோபாலுக்குக் குருமா. எனக்கு தேங்காய்ச் சட்டினி.  தின்ன முடியாமத் தூக்கிக் கடாசவேண்டியதாப்போச்சு எனக்கு:( ப்ச்.... வேற கடையில் அட்லீஸ்ட் இன்னொரு கேரளாக் கடை இருக்கே அங்கே என்னன்னு பார்த்திருக்கலாம்.!  அங்கெதான் எலக்ட்ரிக் ஆப்பச் சட்டி இருந்துச்சு!

அஞ்சரைக்கு மெயின் ஸ்டேஜ்லே நிகழ்ச்சிகள்ஆரம்பிக்குது.  வந்தே மாதரம்.......... கூடவே நியூஸி நேஷனல் ஆந்தம் காட் ஆஃப் நேஷன்ஸ் பாட்டும் முழங்குது. எங்களுக்கு மகள் வீட்டில் சின்னதா ஒரு  கடமை இருக்குன்னு  ஸ்டாலை அப்படியே விட்டுட்டு(அதான் அஞ்சுமணியோடு டெமோ முடிஞ்சுருச்சுல்லே)  மகள் வீட்டுக்குப்போனோம்.  அங்கே ஜூபிடருக்கு சாப்பாடு கொடுத்துட்டு மறுபடி விழாவுக்கு  போறோம்.  கார் உள்ளே நுழையும்  வாசலில்  பார்க்கிங் சார்ஜ் வசூல் பண்ணிக்கிட்டு இருக்காங்க.  அஞ்சு டாலராம்!  நாங்க ஸ்டால் ஆளுங்களாச்சே. அதனால் எங்களுக்கு சார்ஜ் இல்லை.

ஆனால்....   எனெக்கென்னமோ இது கொஞ்சம் அநியாயமா இருந்துச்சு.  சிட்டிக் கவுன்ஸில்  நடத்தும் விழாவுக்கு பப்ளிக் காசு கொடுத்து வரணுமா?  டூ பேட்:(  வரவர எங்கூர் கவுன்ஸில் அல்பமாப் போய்க்கிட்டு இருக்கு:(

ஸ்டேஜ் லே ஒருத்தர் தப்லா வாசிச்சுக்கிட்டு இருந்தார்.  அதுக்குப்பிறகு  ஒரு ஜோடி வந்து ரெண்டு ஹிந்திப்பாட்டு பாடிட்டுப்போனாங்க.  இந்த விழாவின் ஹைலைட் ரங்கஷ்ரீ  டான்ஸ் க்ரூப்.  பதினைஞ்சு பேர் கொண்ட ஒரு குழு நியூஸிக்கு வந்துருக்காங்க.  குஜராத் மாநிலத்தில் ஆமடாவாத்(அஹமதாபாத்) நகரில் இருந்து. இந்தியப்பண்பாட்டுக் கலைக்கழகம் ஏற்பாடு செஞ்சுருக்கு. நியூஸியின் முக்கிய நகரங்களில் நடக்கும் தீவாலிக் கொண்டாட்டத்துலே ஆடி மகிழ்விக்கன்னாலும் நவராத்ரி  கர்பா ஸ்பெஷலிஸ்ட் இவுங்க.  குஜராத் நாட்டுப்புறக் கலைகளை படிப்பிக்கும் Rangashree School of Fine Arts, பள்ளி. 15 வருசம் ஆச்சு இதை ஆரம்பிச்சு.  1987 வது வருசம் குஜராத் பஞ்ச நிவாரண  நிதிக்காக, கலைநிகழ்ச்சிகள் நடத்த ஆரம்பிச்சு இன்னிக்கு  நாட்டுப்புறக் கலைகளை பயிற்றுவிக்கும் கல்விக்கூடமா ஆகி இருக்கு!  துபாய், மஸ்கட்ன்னு  வெளியே போய் நிகழ்ச்சிகள் நடத்தி  அதுக்கப்புறம் யூரோப், அமெரிக்கான்னு விஜயம் செஞ்சு இப்போ  நியூஸிக்கு இந்த வருசம் வந்துருக்காங்க.

சும்மாச் சொல்லக்கூடாது .... அட்டகாசமான நடனங்கள்.  அறுவடை முடிஞ்சு தானியம் சுத்தம் செய்ய  வட்டமான முறம் வச்சுக்கிட்டு ஆடுனதும் மண்குடங்களைத் தலையில் சுமந்து கையில் தீபங்களுடன் ஆடுனதும் பெண்கள்  இரண்டு கைகளையும்  மாற்றிக் கோர்த்துப் பிடிச்சுக்கிட்டு (வலது கையால் இடது பக்கம் உள்ளவரையும் இடது கையால் வலது பக்கம் உள்ளவரையும் கைகோர்த்துப்பிடிச்சு கடைசிவரை கைகளை விலக்காமலேயே ஒரு முழு நடனம் ஆடுனது எனக்கு ரொம்பவே பிடிச்சுருந்துச்சு.

மூன்று நடனங்களில் ஆண்கள். ஒன்று ஆண்கள் மட்டும், மற்ற இரண்டிலும்  பெண்களுடன் சேர்ந்து  ஆடுனாங்க. கடைசிப்பாட்டா வந்தேமாதரம் பாடி ஆடுனது நல்லாவே இருந்துச்சு.  இந்தக்குழு மொத்தம் எட்டு வகை நடனங்கள்  ஆடுனாங்க.  இடையிடையே உள்ளூர் கலைஞர்களியும் ஊக்கு விக்கணுமேன்னு  ஏற்பாடு. ஃபிஜி இந்தியர்கள்  குழு, இந்திய இந்தியர்கள் குழு, கேரளா பாய்ஸ்,  இலங்கைத் தமிழர் நடத்தும் பரதநாட்டியப் பள்ளி மாணவிகள், கேரளப்பெண்மணி நடத்தும் பரதநாட்டியப்பள்ளி மாணவிகள் இப்படி ரெண்டு பரத நாட்டிய நிகழ்ச்சிகள், கேரளா அசோஸியேஷன் பெண்களின் திருவாதிரக்களி, பஞ்சாபி மாணவர்களின் பாங்க்ரா நடனம் இப்படி  கலந்துகட்டி ஏராளமான ஐட்டங்கள். எல்லாத்துக்கும் திருஷ்டி பரிகாரமா பாலிவுட் ஒர்க்ஸ்ன்னு  பாலிவுட் பாட்டுக்கு தேகப்பயிற்சி(மாதிரி) ஒன்னு.  நல்லவேளை... எங்க பாட்டி எப்பவோ காலமாயிட்டாங்க.  ஒருவேளை மேலுலகத்தில் இருந்து பார்த்துட்டு 'நிப்பு தொக்கின கோத்திலாக'ன்னு (தெலுங்குப் பழமொழி) சொல்லி இருக்கலாம்.  உண்மைதான் விலுக் விலுக்ன்னு என்னமோ வலிப்பு வந்தது போல....... என்னமோ போங்க:(

பாங்க்ரா டான்ஸ்க்கு மேடை ஏறுனதும் இங்கே யாராவது பஞ்சாபிகள் இருக்கீங்களான்னு  வந்த அறிவிப்புக்கு , சொன்னா நம்ப மாட்டீங்க..... அரங்கத்துலே இருந்தவர்களில்  95 சதமானம்  கைதூக்கிட்டு மேடைக்குக்கீழே போய் ஆட்டத்தில் கலந்துக்கிட்டாங்க!!!! பல்லே பல்லே பல்லே........  போற போக்கைப் பார்த்தா சீனர்களைவிட வேகமா வந்திறங்குறாங்க போல!

சண்டிகர் வாழ்க்கையில் கண்கூடாப் பார்த்தது..... எங்கே பார்த்தாலும்  'இங்கிலாந்து , கனடா, நியூஸிலாந்து, அஸ்ட்ராலியாவுக்கு  போகணுமா?  போகணுமா? போகணுமா?' ன்ற அறிவிப்புகள். படிக்க வர்றோமுன்னு விசா வாங்கிடறாங்க. இங்கே வந்து அதைத்தவிர மற்ற எல்லாமும் நடக்குது:(  பல்கலைக்கழகத்தில் முக்கிய பொறுப்பில் இருக்கும் நண்பர் சொன்னது.....  இவுங்க கொண்டுவரும்  கல்வி சம்பந்தமான அத்தாட்சிகள் முக்காலே மூணு வீசம் பொய்!!!!  எல்லாத்துலேயும் போலிகள் உருவாகாதா என்ன? என்னமோ போங்க......

ஒன்பது மணி அளவில் நிகழ்ச்சிகள் முடிஞ்சாலும்   கொண்டாட்ட மூடில் இருந்த சனம்  பாங்க்ராவைத் தொடர்ந்துக்கிட்டே இருந்துச்சு. நாங்க கிளம்பி நம்ம ஸ்டால் எந்த கதியில் இருக்குன்னு போய்ப்பார்த்தால்  எல்லா கலர் அரிசிகளையும் ஒன்னாச்சேர்த்து  ஒரு மாதிரி கருப்பு நிறமாக்கி ஒரு பாத்திரத்துலே போட்டு வச்சுருக்காங்க யாரோ.  அதையும் எடுத்து  சிலர் சொந்த டிஸைனில்  அங்கங்கே ரங்கோலி  போட்டுப்பார்த்துக்கிட்டு இருந்தாங்க.

பேப்பர்களையும் ஃபெல்ட் பென்களையும் வச்சுட்டு வந்துருந்தேன். அதுலே பசங்க கோலம் வரைஞ்சும் படங்கள் வரைஞ்சும் பொழுது போக்கி இருக்கு.  ஒரு பொடியன் தன்னுடைய படத்தை வரைஞ்சு  எனக்கு ப்ரபோஸ் பண்ணி இருக்கான்.  செல் நம்பரெல்லாம்  கொடுத்துருக்கு! அதுலே அவுங்கப்பாவோ அம்மாவோ ஒரு நோட் போட்டு வச்சுருக்காங்க. நிறைய மாடுகள் இருக்குன்னு.


என்ன சொல்றீங்க?  கல்யாணம் பண்ணிக்கவான்னு கோபால்கிட்டே கேட்டதுக்கு,  வேணாம். நிறைய மாடுகள்ன்னா  பண்ணையில் எக்கச்சக்க வேலை இருக்குமேம்மா...... உன்னால செய்ய முடியாது(நான் ஒருத்தன் படறபாடு போதாதா? அவன் பாவம். பொழைச்சுப்போகட்டும் )ன்னார்!!!!!!!!!

நான் கஷ்டப்பட்டால் இவருக்குத் தாங்காது கேட்டோ!!!!

ஹாஹாஹாஹா..

நம்ம ஸ்டால் மட்டும்தான் எல்லோருக்கும் இலவசம். மற்ற சிலர்  காசு வாங்கிக்கிட்டுத்தான்  ஆக்டிவிட்டீஸ் செய்யவிட்டாங்க.

கேரளா அசோஸியேஷன் ஸ்டாலில் செஞ்சு வச்சுருந்த சமோசாக்களையும் வடைகளையும்  யாரும் வாங்கலை. எல்லோரும் தோசையும் ஆப்பமுமா  வெட்டி இருக்காங்க.  மாவெல்லாம் காலி!   பாக்கியைப் பங்கு வச்சதிலே நமக்கு ரெண்டு சமோஸாவும் ரெண்டு வடைகளுமா கொண்டு வந்து கையில் திணிச்சாங்க.  கோலக் கடையைக் கட்டிட்டு,  வடையை ருசிச்சுக்கிட்டே வீடுவந்து சேர்ந்தோம்.

ஆச்சு, இனி நவம்பர் 10  தேதிக்கு ஃபிஜி இந்தியர்களுடனும்  13 தேதிக்கு நம்ம துளசிவிலாஸிலும் தீவாலி கொண்டாடணும். செஞ்சுருவோம்.....

அனைவருக்கும் முன்கூட்டிய தீபாவளி வாழ்த்து(க்)கள்.



பின்குறிப்பு:  படங்கள் உபயம் கோபால். புதுக்கெமெரா ஒன்னு  Canon1100D வாங்கி இருக்கு. இவரையும் பிட் வகுப்புலே சேர்த்துவிடணும்:-)








ஜெய் ஜெய் ராம் க்ருஷ்ண ஹரி.... ஜெய் ஜெய்.....

$
0
0
ஒரு ரெண்டு வருசத்துக்கு முன்னே சண்டிகரில் இருந்தப்போ, காலையில் காஃபி டிகாஷன் இறங்கக் காத்திருந்த ஒரு நன்னாளில் தற்செயலா டிவியை ஆன் செஞ்சப்ப.... ஒரு சின்னக்குழு '  ஜெய்ஜெய் ராம் க்ருஷ்ண ஹரி'ன்னு பாடிக்கிட்டே போகுது. வீடுதேடிவருவான் விட்டலன் என்ற ஆன்மீகத்தொடராம்.

போக நினைச்ச ஊராச்சே இந்த பண்டரிபுரம்! நினைவு வரும் நாட்களில் தொடர்ந்து பார்க்க ஆரம்பிச்சேன். டிவி பார்க்கும் வழக்கம் இல்லாததால்.... டிவியை ஆன் செய்யணும் என்ற நினைவு அறவே இருக்காது. வீட்டு ஃபர்னிச்சர் மாதிரி அது ஒரு பக்கம் இருந்துட்டுப் போகட்டுமே!

ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகள் கோவில்கதை சொல்வார். ரொம்பவே எளிமையா பாமரர்களுக்கும் (!!!) புரியும்படியாச் சொல்றார்ன்னு கோபாலுக்கு ஒரு அபிப்ராயம்.  'அழைக்கின்றான் அரங்கன் 'என்ற தலைப்பில்   ஸ்ரீரங்கநாதனைப்பற்றிச் சொன்னதை இப்போ கொஞ்சநாள் முந்தி தொடராக் கேட்டோம். அதான் 40 ஜிபி கிடைக்குதே! பக்தி செய்ய சுலபமான வழி நாம சங்கீர்த்தனம். அதிலும் ஹரே ராம ஹரே ராம ராமராம ஹரே ஹரே, ஹரே க்ருஷ்ண ஹரே க்ருஷ்ண க்ருஷ்ண க்ருஷ்ண ஹரே  ஹரே    என்னும்  ஈஸியஸ்ட் மஹாமந்த்ரம், எண்ணி ரெண்டே வரிகள்தான்   எப்பவேணுமுன்னாலும் மனசுக்குள் சொல்லிக்கிட்டே இருக்கலாம் என்றது எனக்கு ரொம்பவே பிடிச்சுப்போச்சு. இந்த  அவசரயுகத்தில்   விஸ்தரிச்சு பூஜை புனஸ்காரங்கள் செய்ய எங்கே  நேரம் இருக்கு?

 நான்  சில சமயம் வேளுக்குடி அவர்களின் உபந்நியாஸம் கேட்பேன்.  கிஞ்சிதம் ட்ரஸ்ட்டில் இருந்து  ஒரு சிடி வாங்கி வந்து வச்சுருக்கேன். 'கொஞ்சம் விவரம் தெரிஞ்சவங்களுக்குத்தான் வேளுக்குடி. என்னை மாதிரி பாமரனுக்கு  முரளீதரஸ்வாமிதான் சரி' ன்னு  கோபால் சொல்லும்போது.........  ஆஹா...விவரம் தெரிஞ்ச பட்டியலில் நம்மை ஏத்தி வச்சுருக்காரேன்னு ஒரு அல்ப சந்தோஷம்தான் கேட்டோ:-))))))

முந்தி ஒரு சமயம்கூட  முரளீதர ஸ்வாமிகள் ஆஸ்ரமத்துக்குப் போகணுமுன்னு நினைச்சப்ப நேரம் சரிப்பட்டு வரலை. ஃபோன் செஞ்சப்ப காலை 11 வரைதான் னு சொல்லிட்டாங்க. அங்கே ஒரு பெரிய நேயுடு இருக்காராம். அவரைப் பார்க்கணுமுன்னு எனக்குக் கொள்ளை ஆசை.  டிவியில்  சிஷ்யப்பிள்ளைகளும் குருவுமா, அழகான தோட்டப்பாதையில் வந்து  ஆஞ்சநேயரை சேவிப்பதைப் பார்த்ததில் இருந்துதான்  இப்படி...........

தாம்பரத்தில் இருக்கும் பெரியத்தை வீட்டுக்குப்போய் நம்ம விசேஷத்துக்கு முறைப்படி அழைக்கணும். அப்போதான் ஏன் அப்படியே ஆஞ்சநேயரைப் பார்த்துவரக் கூடாதுன்னு தோணுச்சு. முதலில்  அவரைப் பார்த்துட்டு அப்புறம் அத்தைன்னு முடிவாச்சு.

எட்டுமணிக்குக் கிளம்பிட்டோம்.  அண்ணாசாலையில் இன்னும்  போக்குவரத்து நெரிசல் தொடங்கலை.  சாலை நெடுக  ஒரு பக்கம் மதில் சுவர்களில்  ரொம்ப அழகான  படங்களை வரைஞ்சு வச்சுருக்காங்க.   யார் வரையறாங்க இதையெல்லாம்? சூப்பர் ஸீன்கள்!  ப்ளாட்ஃபாரங்களை  அங்கங்கே தோண்டி வைக்காமல் சீர்படுத்தி,  இதைநடக்க மட்டுமே பயன்படுத்தினா,  சென்னை கொஞ்சம் அழகாவே மாறிடும் அபாயம் இருக்கு!




தாம்பரம் கடந்து படப்பை தாண்டி, ஸ்ரீபெரும்புதூர் சாலையில் போறோம்.  சந்தடிகள் எல்லாம் அடங்கி  ஒரே பொட்டல் காடு. சரியான வழியில் போறோமான்னு சம்ஸயம்.  வழி கேக்க யாரும் கண்ணுலே படலை. கிஷ்கிந்தா  போற வழிதான்னு சொல்லிக்கிட்டே வண்டியை ஓட்டுறார் ட்ராவல்ஸ் ஸ்ரீனிவாசன்.   மேடும் பள்ளமுமான கிராமச்சாலையில்  வீடு கட்டிக்கிட்டு இருக்காங்க யாரோ. செங்கல் சுமக்கும்  பணியாளர் ஒருவரிடம் விசாரிச்சால்  இன்னும் கொஞ்சதூரம் போய் லெஃப்ட்லே திரும்புங்கன்னார்.  அப்படியே செஞ்சதில்  கொஞ்சம் நல்லதாவே தார் ரோடு.  வலப்பக்கம் ஒரு பெரிய ஏரி ஒன்னு கூடவே வருது.




திருக்கோயில்களுக்குச் செல்லும் வழின்னு அம்புக்குறியோடு சின்னதா ஒரு போர்டு. அதில்  ஸ்ரீ கல்யாண சீனிவாச பெருமாள். ஸ்ரீ  ஜய ஹனுமான்னு  ரெண்டு படம்.  மண்பாதைக்குள்ளே வண்டியை செலுத்திப்போனால்..... நமக்கு வலப்பக்கம் ஒரு குளம்.  தண்ணீர் கொஞ்சமா இருந்தாலும் குப்பைகள் ப்ளாஸ்டிக் எல்லாம் இல்லாமல் சுத்தமாவே இருக்கு. பரவாயில்லையே!!!




சின்ன வளைவு திரும்பி பாதையில் போனதும்  நமக்கு வலப்பக்கமாவே  ஹனுமன் தெரிஞ்சார். பெரிய கேட் போட்டு, உள்ளே கொஞ்சதூரம் ஒரு அம்பது அறுவது மீட்டர் இருக்கும் தொலைவில் உயரமா நிக்கறார். படியேறிப்போகணும்.  திருமஞ்சனம் செய்விக்கும் வசதிக்காக அவரைச்சுத்தி ஸ்டீல் ஃப்ரேம் போட்டு வச்சுருக்காங்க.பார்த்தால்.........பாவமா ஜெயிலில் இருப்பதைப்போல்...........

அன்பென்னும்  சிறையில் அகப்பட்ட ஆஞ்சநேயர்!

அடுத்த கேட்டுதான் பெருமாளுக்கு!  ஸ்ரீ கல்யாண ஸ்ரீநிவாசன்.  சின்னக்கோவில்தான். வாசலில் சுவற்றில் அறிவிப்புகள்.  உள்ளே படம் எடுக்க அனுமதி இல்லை:(  தனியார் சொத்து.  அவுங்க உரிமைகளை நாம் மீறக்கூடாது. கோவிலுக்கு வயசு பத்து!

நடுவில் கருவறை. சுற்றி மண்டபம். ஒரே ஒரு பிரகாரம். மண்டபத்துக்கு வெளியே கருடாழ்வார் சந்நிதியைப் பார்த்து நிக்கறார். மூலவரைத் திரை போட்டு மறைச்சுருந்தாங்க.  அலங்காரம் நடக்கிறது. நீங்கள் சந்நிதியை வலம் வந்துருங்கோன்னார்  பட்டர். சரின்னு வலம் வந்தோம்.  வலது பக்கமூலையில் ஹனுமனுக்குத் தனியா ஒரு சின்ன மேடை. அதுலே  ஒரு  கற்பலகையில் செதுக்கிய  அனுமன் சிற்பம்.  திரும்பி வந்தால் பிரசாதத்துடன் ரெடியா இருக்கார் பட்டர்.  கோவிந்தான்னு சொல்லி ,ரெண்டு கையையும் குவிச்சு வாங்கிக்கணும். அத்தனாம் பெரிய உருண்டை! புளியோதரையாக்கும் கேட்டோ! சாப்பிடமுடியுமான்னு பிரமிப்பு வந்தது நிஜம். வேணுமா வேணாமான்னு நாக்கு தீர்மானிக்கணும். அதுவோ.... வேணும் என்றது. மண்டபத்தில் ஒரு ஓரத்தில் உக்காந்து  விழுங்கினோம்.  பக்கத்தில் ஒரு அலுவலக அறையும்  கை அலம்பிக்க சௌகரியமும்  இருந்தன.வளாகத்தில் கோவிலைச் சுற்றி நிறைய மரங்கள்.

மதுராபுரி  ஆஸ்ரமம்.  மஹாரண்யம் கிராமம். (மஹா ஆரண்யம்= பெரிய வனம்/காடு) மலைப்பட்டு. ஸ்ரீபெரும்புதூர் தாலுகா.  தாம்பரத்தில் இருந்து  15 கிலோமீட்டர் தூரம்தான்.  இடப்பக்கம் கோவிலுக்குத் திரும்பாமல் நேராப்போனால் பத்தே கிலோமீட்டரில் ஸ்ரீபெரும்புதூர் போயிறலாம்.

இந்த மஹா ஆரண்யத்துக்கும் ராமாயணத்துக்கும் சம்பந்தம் இருப்பதாகச் சொல்றாங்க. சீதையைத் தேடிக்கிட்டு தென்திசை நோக்கிப்போன ராமனும் லக்ஷ்மணனும் இங்கே மூணுநாட்கள் தங்கிப்போனதாகச் சொல்றாங்க.  அந்தக் காலத்துலே ஏது  சென்னை, தாம்பரம்  எல்லாம்? பாரத நாட்டில்  முக்கால்வாசியும் பெரிய காடாத்தானே இருந்துருக்கணும் . சபரி மலையில்  பக்தசபரியின் ஆஸ்ரமத்துலே  தங்கி, சபரி கடிச்சுக்கொடுத்த இலந்தப்பழத்தை ராமன் ருசித்ததாகவும்,  நம்ம சென்னை கோயம்பேடில்தான்  வால்மீகி ஆஸ்ரமம் இருந்துச்சுன்னும் அங்கேதான் ,பாவம் புள்ளைத்தாய்ச்சி சீதைகுசலவர்களைப் பெற்று வளர்த்ததாயும் எத்தனை கதைகளைக் கேட்டுருக்கோம் . அதையெல்லாம் நம்புனமாதிரி இதையும் நம்பிக்கலாம்.  ராமாயணம் வடக்கத்திகளுக்கு மட்டும் இல்லை நமக்கும் அதுலே பாகம் இருக்குன்னு  (அல்ப) சந்தோஷப்பட்டுக்கலாம்.  அதுலே என்ன தப்பு?
 ஆஸ்ரம சைட்டில்  சுட்ட படம்


சும்மா உக்காந்து சிந்திச்சுக்கிட்டு இருந்த நேரத்துக்கு  அடுத்த பக்கம் இருந்த இன்னொரு கேட்டுக்குள்ளே போய் ஆஸ்ரமத்தையும் தோட்டத்தையும் பார்த்துருக்கலாம். தோணாமப் போச்சு.  வேற  பக்தர்கள் யாரும் வரலையேன்னு நினைச்சுக்கிட்டே  ஏகாந்த சேவைன்னு  இதோ இப்ப சந்நிதி திறந்துருமுன்னு  விஸ்ராந்தியா  இருந்துட்டோம்.  ஒருமணி நேரம் ஓடியே போச்சு.   திரை திறந்தாங்க. உள்ளூர் மக்கள் போல ஒரு  மூணுபேர் சரியான நேரத்துக்கு  வந்துட்டாங்க. தரிசனம் நல்லபடியா ஆச்சு.  இன்னிக்கு ஸ்ரீ ராமர் அலங்காரமாம்!!! தனியார் கோவில் என்பதால் உண்டியல் ஒன்னும் இல்லை. ஒரு பெரிய பாத்திரம் சந்நிதி வாசலில்.  பக்தர்கள் விருப்பம்போல்  காணிக்கை செலுத்தலாம் போல! உள்ளுர் ஆட்கள் செய்கையில் இருந்து தெரிஞ்சது.

ஹனுமனை தரிசிக்கப்போனால் ......  கேட் மூடிட்டாங்க.  அடடா.... உக்கார்ந்துருந்த நேரத்துக்கு இங்கியாவது வந்துருக்கலாம்,இல்லே? கோட்டை விட்டுட்டேனே.......:(

இவருக்கு வயசு மூணு. 2009 வது ஆண்டு மஹாசிவராத்ரியன்னிக்குத்தான் பிரதிஷ்டையாம்.  24 படிகள் ஏறி இவர் பாதத்தாண்டை போகலாம். இவருடைய உயரமும் 24 அடிகள்.  வால்மீகி ராமாயணத்தில் 24 ஆயிரம் செய்யுள் என்பதால் ஆயிரத்துக்கு ஒன்னு என்ற கணக்கில் 24 அடின்னு கேள்வி.   சகல தோஷங்களையும் நிவர்த்தி  செய்யும் வகையில் ஒரு அபூர்வ யந்த்ரத்தை இவர் காலடியில் பிரதிஷ்டை சமயம் வச்சுருக்காங்க என்பதால் இவரை வணங்கினால் நவகிரகக்கோளாறு முதல் சகல கஷ்டங்களும் நீங்கும் என்ற நம்பிக்கை. அதுவும் ஏகாதசியன்னிக்கு விசேஷ பூஜைகள் உண்டாம். வெற்றிலை மாலை, வடை மாலை என்று  ஆனந்தமாப் போறது !  ஜய ஹனுமன்!

நவீன யுகத்துக்கு ஏத்தமாதிரி ஆஸ்ரமத்துக்கு அழகான வெப்சைட் கூட இருக்கு. இங்கே இருந்துதான் விலாசம்  கண்டுபிடிச்சேன்.

ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் கூட ஏகாதசியன்னிக்குத்தான்  மக்களை சந்திப்பாராம்.  கதையெல்லாம் கேட்டுட்டு கிளம்பி அரைமணியில்  தாம்பரம் அத்தை வீட்டுக்குப் போனோம். அவுங்கதான் சொன்னாங்க.... 'ஆஸ்ரமத்துலே அற்புதமான துளசிவனம் இருக்கு. மரங்கள் அடர்ந்து  சோலைகளா குளுகுளுன்னு இருக்கும் கோசாலை இருக்கு. உள்ளே போய் பார்க்காம வந்துட்டியே'ன்னு.

துளசியா?  ப்ச்.... விட்டுப்போச்சு.............

ஆனால் ஒன்னு.....  இனி டிவியிலே பார்த்ததை வச்சு ஏகப்பட்ட எதிர்பார்ப்போடு  எங்கேயும் போகக்கூடாதுன்னு நல்லாப் புரிஞ்சு போச்சு.




Viewing all 1428 articles
Browse latest View live


<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>