Quantcast
Channel: துளசிதளம்
Viewing all 1457 articles
Browse latest View live

ஓ மரியா ஓ மரியா...... ( மூன்று மாநிலப் பயணம்- தொடர் : 34)

$
0
0
செங்கண்ணூரில் இருந்து புலிக்குன்னு போகிறோம்.   என்ன விசேஷமாம்? புலிகள் வசிக்கும் குன்றா? ஆமாமாம்..... புலிகளை வச்சுக் காப்பாத்திட்டாலும்....    அங்கேதான் இன்றைக்கு ராத்தங்கல். முதலில் நம்ம திட்டத்தின்படி  ஆலப்புழாவில் படகு வீட்டில் ஒருநாள் என்று நினைத்திருந்ததை, மாத்திக்கும்படி ஆச்சு. ஏற்கெனவே எங்கேயுமே ஹொட்டேல் ஒன்னும் நியூஸியில் இருந்து புக் பண்ணிக்காமத்தான் இந்தப்பயணம் தொடங்கியது.

ஒவ்வொரு இடத்திலும் இரவு தங்கும்போது அடுத்த நாளுக்கான இடத்தை வலையில் தேடி செல்லில் கூப்பிட்டு புக் பண்ணிக்கிட்டே போறோம். அதன்படி பார்த்தால் படகு வீட்டுக்குப்போனால் அங்கேயே ஒருநாள் முழுக்கத் தண்ணீரில் இருக்கணும்தான். ஹொட்டேல் அறைபோல  நினைச்சபோது அக்கம்பக்கம் போய் கோவில்கள் பார்த்தெல்லாம் திரும்ப முடியாது.   'ரிலாக்ஸா உக்கார இப்போ நேரமில்லை.  பின்னே ஒருக்கில் ஆகட்டே'
ன்னு  ஹொட்டேல்களைத் தேடுனப்ப  கண்ணில் பட்டது மரியா!

வலையில் படங்களைக் காமிச்சார் கோபால். காதலில் விழுந்தேன்:-)

செங்கண்ணூரில் இருந்து வெறும் 32 கிமீ தூரம்தான்.  பகவத் கார்டனில்  இருந்து வண்டியைக் கிளப்பி மெயின் ரோடு வர்றோம். எதிரில்  கட்சி ஊர்வலம் ஒன்னு வருது.  ஆர் டி ஓ. ஆஃபீஸ் பிக்கெட்டிங், சி பி ஐ நடத்துதாம்.  நேதாவு சதாசிவன் எம் எல் ஏ  ஆரம்பிச்சு வைக்கிறார். அதானே... வந்து முழுசா ஒருநாளாச்சு. இதுவரை  கம்யூனிஸ்ட் பார்ட்டி  ஊர்வலம் கண்ணில் படலையே! கேரளாவில் முந்தியெல்லாம்  கொடிபிடிச்சுக்கிட்டுக் கட்சி ஊர்வலம் போகும்போது  ஒத்தையாளா வரிசையில் கடந்து போவாங்க. அனுமன் வால் போல் நீளமாப் போய்க்கிட்டு இருக்கும். இப்ப மக்கள் தொகை கூடிப்போச்சு. மேலும் கொஞ்சம் பெரிய ஊராவும் இருக்கே.

காலையில் நாம் திருவல்லா வரை போனோம் பாருங்க  அதே ரோடுதான். ப்றாவடியைத் தாண்டும்போதுதான்  இது மனஸிலாச்சு. அங்கேயும் ஒரு  கட்சி ஊர்வலம் ஆரம்பிக்க மக்கள் கூடிக்கிட்டு இருக்காங்க. இது எதுக்குன்னு தெரியலை. சில காவிக்கொடிகளும் செங்கொடிகளுமா இருக்கு.


திருவல்லா ஜங்ஷன்  கடக்கும் இடத்தில் கட்சி மீட்டிங் நடக்குது. பி எஸ் என் எல் கட்டிடத்துக்கு முன்னாலே!  நல்ல கூட்டம். மைக் பிடிச்சவர் ஆவேசமா வெல்லு விளிக்கிறார்.  22  நிமிசப் பயணத்துலே மூணு இடங்களில்  போராட்டம்.  ஆஃபீஸ்களில் வேலை நடந்த மாதிரிதான்:(






திருவல்லா- செங்கணாஞ்சேரி ரோடு. நாம் அதுவரை போகவேண்டியதில்லை. பெருந்துருத்தி கடந்து பெருந்நா என்ற இடத்தில் வந்து சேரும் ஆலப்புழை செங்கணாஞ்சேரி ஹைவேயில் (ஸ்ட்டேட் ஹைவே 11) லெஃப்ட் எடுத்துக்கணும்.  கூகுள் மேப் பார்த்து , சீனிவாசனுக்கு வழிசொல்லிக்கிட்டே வர்றார் கோபால்.

ஹைவே இடதுபக்கம் திரும்பியதும் கொஞ்சதூரத்தில்   எனக்கிடதுபக்கம் பெரிய ஆறு போல் அகலமா  இருக்கு. அடுத்த கரையில் வீடுகள். இங்கிருந்து அங்கு போக  உயர்த்திக் கட்டிய பாலங்கள்!  ஏன் இவ்ளோ உயரத்தில் பாலங்கள்? அடியிலே படகு (வீடு) போகணுமே!  ஏஸி கனால் (Aleppey Canal) என்ற இதுதான் கீழைநாட்டு வெனிஸ்! காயல்! The backwaters of Kerala.    ஆலப்புழையில்  படகுவீட்டில் தங்கினோமானால் இங்கெல்லாம்தான் கொண்டு வருவார்கள்.


இக்கரையில்  ஹைவே பயணிகளுக்காக  எல்லா மரங்களிலும்காய்க்காமல் தொங்கும்  இளநீர்க்குலைகள்:-)  நமக்கும் தாகசாந்தி ஆச்சு.  புளிக்குன்னு போர்டு பார்த்ததும் ஆஹா... இது புலி இல்லை. புளின்னு புரிஞ்சது.  இதுவரை சரியான வழிதான். இனி போகும் வழி விபரத்துக்கு, உடனே மரியாவுக்கு  செல்லடிச்சால் எங்கே இருக்கீங்கன்னு கேட்டாங்க. இப்ப  குருசடிகிட்டே  வந்தாச்சுன்னேன்.  ரொம்ப நல்லது. அதே இடம்தான். ரைட் எடுத்துக்கிட்டு நேரே வாங்க. ஒரு டெட் எண்ட் வரும். அங்கே இடது பக்கம் திரும்பிருங்கன்னு பதில்.


இந்தக் குருசடி என்பது என்னன்னா.... நம்மூர் சாலைகளில்  கிராமதேவதை, மாரியம்மன் , புள்ளையார்ன்னு  அங்கங்கே தெருவோரக் கோவில்கள் இருக்கும் பாருங்க. அதைப்போலத்தான்.  கொஞ்சம் பெருசா நவீனமாக் கட்டி அதன்மேல் யேசு, சிலுவை , மாதா  இப்படி சிலைகளை  வச்சுருப்பாங்க. இங்கே சிலுவையும்  இருக்கு, உள்ளே சிலைகளும்  இருக்கு. குரிசு = சிலுவை. குரிசடி  என்றுதான் சரியாச் சொல்லணும். ஆனா பேச்சு வழக்கில் குருசடி ஆகிப்போச்சு.

 ஆக்ஞை அனுசரிச்சு வலதுபக்கம் திரும்பிப்போறோம்.  குட்ட நாடு பகுதி இது.  அறுவடை முடிஞ்சு நீர் தேங்கி நிற்கும் நிலங்கள்,  அதுலே புழு பூச்சி, சின்ன மீன்கள் பிடிச்சுத்தின்னு பசியாற இறங்கி இருக்கும் நாரைகள், அழகழகான பங்களாக்கள், எங்கே பார்த்தாலும் பசுமையும் அதில் தெங்குகளுமா.....  ஜோரா இருக்கு! கிட்டத்த மூணு கிமீ தூரம் இந்த தெவிட்டாத அழகு!



இந்தத் தெரு போய் முடியும் இடத்தில் தண்ணீர்!  ஆறு பெருக்கெடுத்து ஓடுது. இடது பக்கம் திரும்பணுமேன்னு பார்த்தால்  எங்கே பார்த்தாலும் தண்ணீர்தான்.  எதிர்க்கரையில் இருந்து மக்கள் இங்கே வர படகு சர்வீஸ் வேற!  ஆட்களை இறக்க, ஆட்களை  ஏத்த கம்பி ஏணியைப் படகுக்கும்  கரைக்கும் பாலமா வச்சுருக்காங்க.

படகுலே வந்திறங்கும் மக்களை ஏத்திக்கிட்டுப்போக பஸ்  நிக்குது.
அங்கிருந்த ஆட்களிடம் மரியான்னதும் இடத்துன்னு தண்ணியிலே  கை காமிக்கறாங்க. இது என்னடா நமக்கு வந்த சோதனைன்னு  ஒருவேளை  பின்பக்கத்து வழி இருக்குமோன்னு  போன வழியிலே கொஞ்சூண்டு திரும்பி வந்து  பார்த்தால்  வழி ஒன்னும் இல்லை. அங்கே  பஸ்ஸுக்குப் பக்கம் நின்னவரிடம் கேட்டால்   '100 மீட்டர் இடத்துவசம்'என்றார்.

திரும்பிப்போய்  தண்ணீரைப் பார்த்து நிக்கும்போது , மரியாவில் இருந்து கூப்பிட்டு  என்ன ஆச்சுன்னாங்க.  வெறும் தண்ணீரா இருக்கு.  எப்படி வரன்னால்.... தண்ணீரிலேயே வாங்கன்னு பதில். போச்சுரா.... ஒருவேளை படகில் போகணுமோ?

அதுக்குள்ளே ஒரு  மோட்டர்சைக்கிள்காரர் இடதுபக்கம் தண்ணீரிலேயே  வண்டியை ஓட்டிக்கிட்டுப்போறார். 'ஙே'ன்னு பார்க்கிறோம்.  தெய்வம் வழி காட்டுவதைப்போல் ஒரு கார் இடத்துவசம் திரும்புச்சு.  கவனிச்சுப் பார்த்தால்.... காம்பவுண்டு சுவரை ஒட்டியே  கார் போகுது.  ஓஹோ... தண்ணியிலேயே  ஓட்டிப்போகணும் போல!  பெருமாளே காப்பாத்துன்னு நாமும் அந்தக் காரை பின் தொடர்ந்தோம்.  இடது பக்கம் இருக்கும் பெரிய பங்களாவுக்குள்ளே முன்னாலே போன கார் நுழைஞ்சது.  சின்னதா ஒருமேடு நமக்கு முன்னால். அதுலே ஏறி இறங்கினதும்  இடத்துவசம் நாம் தேடி வந்த மரியா!

உள்ளே போய் வண்டியை நிறுத்திட்டு இறங்கிபோனோம்.  ரெமா நமக்காகக் காத்திருந்தாங்க.

நமக்கான அறையைக் காமிச்சதும் அங்கே பெட்டிகளைக் கொண்டு வந்து வச்சார்  பணியாளர். இடத்தைச் சுத்திப் பார்க்க நினைக்கும்போது மகளிடமிருந்து ஒரு டெக்ஸ்ட் மெஸேஜ், கூப்பிடச் சொல்லி.  உடனே  கூப்பிட்டோம்.  போனில் ஒரே அழுகை. என்ன ஏதுன்னு விசாரிக்கிறோம். விக்கிவிக்கி வரும் அழுகையைத்தவிர வேறொன்னுமில்லை:(  நான் ரொம்பவே பயந்து போயிட்டேன். கோபால்  திகைச்சு நிக்கிறார்!

இன்றைக்கு கொஞ்ச நேரம் அழவிட்டுட்டு,(அப்பதான்   அவள் மனசுக்கு ஆறுதல் கிடைக்கும்)   என்ன ஆச்சுன்னு கேட்டேன். செத்துப்போயிட்டான்னு சொல்லி திரும்பவும் அழ ஆரம்பிச்சாள். ப்ச்.... எனக்கே அழுகை வந்து இந்தப் பக்கத்தில் இருந்து நான் அழறேன்:(

நாங்க நியூஸியிலிருந்து கிளம்பறதுக்கு மூணு நாளைக்கு முன்னால் அவளுடைய கடவுளரில் ஒன்னு காணாமப்போயிருச்சு.  அக்கம்பக்கம் போயிருக்கும் திரும்பி வந்துருமுன்னு சொன்னேன். அப்புறமும் காணோம் என்றதும் கொஞ்சம் கவலையாத்தான் இருந்துச்சு. எதுக்கும் RSPCA க்கு ஃபோன் செஞ்சு கேட்ருக்காள்.  யார் வீட்டுக்காவது போயிருந்தால் அவுங்க ரிப்போர்ட் செஞ்சுருப்பாங்கதானே?

இதுலே  என்னன்னா  Zeus  ரொம்பவே ஃப்ரண்டிலியானவன். நல்லா கம்பீரமாகவும் இருப்பான். அவன் வகை அப்படி. தெருவிலே போகும் யாராவது  'கேட்நாப்'பண்ணிருப்பாங்களோன்னும் ஒரு எண்ணம் எனக்குள். அவளும் அவன் படம் ,விவரம் எல்லாம் ப்ரிண்ட்  எடுத்து அக்கம்பக்கம்  அவுங்க பேட்டையில் எல்லா வீட்டு மெயில்பாக்ஸிலும்போட்டுட்டு வந்துருக்காள்.

நாங்கள் பயணத்திலும் தினமும்  அவளிடம் பேசும்போது கிடைச்சானான்னு கேட்டுக்கிட்டே இருந்தோம். இல்லை இல்லை என்பதே பதில். நானும் ஒவ்வொரு கோவிலிலும்  தரிசனம் செய்யும்போது இவனுக்காகவும் வேண்டிக்கிட்டே இருந்தேன்.


அவன் எதோ வண்டியில் அடிபட்டு, நாலாவது வீட்டுத் தோட்டத்தில் புதருக்குள் கிடந்துருக்கான்.  எத்தனை நாள் இருந்தானோ யாருக்குத் தெரியும்?  இப்பதான் கொஞ்ச நேரத்துக்கு முன்னால் அந்த வீட்டுவாசி வந்து , 'ப்ளையர் பார்த்தேன்.  உங்க பூனை காணாமப் போயிருச்சா'ன்னு கேட்டுருக்கார்.  ஆமான்னதும், எங்க தோட்டத்தில் ஒரு புதருக்குள்ளே ஒரு பூனை இருக்கு. வந்து பாருங்கன்னதும் இவள் ஓடி இருக்காள்.  அது நம்ம பையன்தான். கழுத்துலே காலர் இருக்குல்லே!

உடனே வீட்டுக்கு ஓடி வந்து நமக்கு டெக்ஸ்ட் செஞ்சுருக்காள்.  பூனை எங்கேன்னால்.... அங்கேதான் இருக்காம். 'ஒரு அட்டைப்பொட்டி கொண்டு போய் எடுத்துக்கிட்டு  வா'ன்னேன்.  ஐயோன்னு மீண்டும் அழுதாள். ப்ச்.....

அவனை என்ன செய்யணுமுன்னு கேட்டதுக்கு,  'பெட் க்ரெமேஷன்  சர்வீஸுக்கு போன் பண்ணி வரச்சொல்லு. அவுங்க  வந்து கொண்டு போய்  எரிச்சு சாம்பல் தருவாங்க. வாங்கி வை. நாம் திரும்பி வந்ததும் மேற்கொண்டு யோசிக்கலாம்'என்றேன். நம்ம பசங்க  அஸ்தியை கங்கையில் கரைச்சது நினைவுக்கு வந்து ஒரு பாட்டம் அழுது ஓய்ஞ்சேன்.

மனசே சரியில்லை. என்னடா பெருமாளே இப்படிப் பண்ணிட்டே?

 அடிபட்டவன் பேசாம நம்ம வீட்டுக்கே வந்துருந்தால் அவனை நம்ம வெட்னரி க்ளினிக் கொண்டுபோய் காப்பாத்தி இருக்கலாமுல்லெ?  பாவம்....குழந்தை. இப்படி ஒரு முடிவு வந்துச்சே:(

தொடரும்..........:-(





வெஜிடேரியன்னதும் வெலவெலத்துப் போனால் எப்படி? ( மூன்று மாநிலப் பயணம்- தொடர் : 35)

$
0
0
அறைக்கதவைத் தட்டிய ரெமா (இவுங்கதான் இங்கே மேனேஜர்)  பகல் சாப்பாட்டுக்கு என்ன வேணுமுன்னு கேட்டாங்க. சிம்பிளா கொஞ்சம் பருப்பும் சாதமும் என்றேன். 'மீன் கறி இங்கே  நல்லா இருக்கும். வைக்கட்டுமா'ன்னாங்க.  அடராமா......  வெஜிடேரியன் சாப்பாடுன்னதும் முகம் கொஞ்சம் வாடிப் போச்சு. வெள்ளை அரிசியா இல்லை சிகப்பா?  வெள்ளைன்னேன். பச்சரின்னும் சொல்லி வச்சேன்.  இன்னும் ஒரு மணி நேரத்தில்  சாப்பிடலாமுன்னு சொல்லிப் போனாங்க.

வைஃபை இருக்குன்னதும்  நாங்க  கொஞ்ச நேரம் மெயில் பார்த்துட்டு,மகளுக்கு ஆறுதலா ஒரு கடிதம் அனுப்பினேன். ஒரு ஏழெட்டு மெயில் இங்கும் அங்குமாப் போச்சு. ஜூபிட்டர் எப்படி இருக்கான்னதுக்கு அவன் கொஞ்சம் சோகமா இருக்கறமாதிரி இருக்குன்னாள். 'அவனுக்கு  இவனைக் காமிக்கலைதானே? ஆமாம்.  நல்லது,  அவன் மனசில் இவன் காணாமப் போனதாகவே இருக்கட்டும்.'

க்ரெமெடோரியம் ஆள்  வந்து கொண்டு போயிட்டாராம். அஸ்தியை,  மகளின் வெட்னரி க்ளினிக்குக்கு அனுப்பிருவாராம். 'அங்கே இருந்து கூப்பிடுவாங்க'ன்னு சொல்லிப் போனாராம்.  கவலைப்படாதே. Zeus க்கு  நல்ல கதி கிடைக்கும்.  அவன் ஆயுசு அவ்ளவுதான்.  நான் பெருமாளிடம் நல்லபடி வேண்டிக்கறேன்,  என்றேன்.

மரியா ஒரு  அழகான நாலுகெட்டு வீடு. கேரள பாரம்பரியத்தில்  ரொம்பவே பிரஸித்தி உள்ளது இந்த நாலுகெட்டு டிஸைன்கள். வாசலில்  வருபவர்கள் உக்கார  சுற்றிலும் அகலக்குறைவான  திண்ணை போல் ஒரு அமைப்பு இருக்கும். இங்கே திண்ணைச்சுவருக்குப் பதிலா  மரத்தில் பெஞ்சு போல ரெண்டு பக்கங்களிலும் அமைச்சு இருக்கு.



வாசலைக் கடந்தால் அகலமான வெராந்தாக்கள் நாலுபுறமும்  ஓட நடுவில் ஒரு திறந்த வெளி முற்றம், பளபளக்கும் நாலு தூண்களுடன்.வலது பக்கத்தில் வெராந்தாவில் (இது   ஒரு ஹாலின் அளவில் இருக்கு)  ஸிட்டிங்ரூம் பர்னிச்சர்களா   மூணு  மூங்கில் ப்ளாச்சுகள் பின்னிய  ஆசனங்கள்.

 முற்றத்தையொட்டி ஊஞ்சல். இது சதுரப்பலகை!   முற்றத்தின் பக்கம் காலைத் தொங்கவிட்டும் உட்காரலாம்.  முற்றம் நிறைய கூழாங்கற்களை நிரவி வச்சு, ஓரம் முழுசும் மணி ப்ளாண்ட் செடிகள். பார்க்கவேஅழகு!
இதுக்கு நேர் எதிரா இருக்கும் வெராந்தாவில் சாப்பாட்டு மேஜை. பத்து நபர்கள் சேர்ந்து சாப்பிடலாம்.



வாசக்கதவுக்கு நேரா முற்றத்தைக் கடந்தால்  பின்கட்டுக்குப் போகலாம். இங்கேயும் உம்மரத்தில் உள்ளதுபோல்  திண்ணைபெஞ்சுகள். சாரு கஸேரைகள் (ஈஸிச்சேர்)போட்டு வச்சுருக்காங்க. எதிரே அழகான தோட்டம். தெங்குகள் எல்லாம் பதினெட்டாம்பட்டை வகை. தென்னங்கன்னு வளர்க்கும்போது  பாளை ஒவ்வொன்னா வருது பாருங்க. அதுலே பதினெட்டாவது முளைச்சு வரும்போது, தெங்கு காய்க்கத் தொடங்கிரும்.




தோட்டத்துக்கு அந்தப்பக்கம் பாடங்கள் (வயல்கள்).  குட்டநாடு நெல்வயல்கள். இப்போ கொய்த்து முடிஞ்சு அடுத்த நடவுக்குக் காத்திருக்கு நிலம்.




மற்ற இரண்டுவெராந்தாக்களிலும்  அலங்காரப்பொருட்கள். ஒரு பழையகால மரத்தொட்டில் கூட இருக்கு. வெராந்தாக்கள் சேரும் நாலு மூலைகளிலும்  படுக்கை அறைகள். ஒரு மூலையில் மட்டும் அறைக்குப் பதிலாக அடுக்களை!
அறையும் நல்லாப் பெருசாதான் இருக்கு. இதுக்குள்ளேயேபெட்டிகள் வச்சுக்க ஒரு சின்ன அறை.  பக்கத்தில் குளியலறை. இங்கேயும்  ஷவருக்கு அப்புறம் கூழாங்கல்போட்டு மேற்புறம் மூணு பட்டைகளாகத்  திறந்த அமைப்பு. மழை வந்தால் அது உள்ளேயும் வரும் வகை:-)

படுக்கை அறைப்பகுதியில்  எழுதும் மேஜை, நாற்காலிகள். டிவி, ஏஸி எல்லாம்  அதது வேண்டியபடி. பின்பக்கக் கதவைத் திறந்தால்  நல்ல சைஸில் சிட் அவுட்.  எனக்குப் பிடிச்ச திண்ணைபெஞ்சு. ஐ சிம்ப்ளி லவ் திஸ் ப்ளேஸ்!
வெயில் கண்ணை உறுத்தாமலிருக்க  சின்ன மூங்கில்பட்டைகளால் ஆன திரை! ப்ரைவஸிக்கும் ஆச்சு,  இல்லையோ!


முன்வாசலுக்கு வெளியே எட்டிப் பார்த்தால்  காம்பவுண்ட் சுவருக்கு  அந்தப்பக்கம் அகலமாக ஓடும் ஆறு! பம்பா நதி! மணிமாலா ஆறு என்ற ஒன்னு  பம்பாவின் துணையாறு போல்  பம்பாவில் வந்து சேர்ந்துருது. அதனால் எல்லாமே பம்பா பம்பாதான். காசிக்கு கங்கை எப்படியோ அப்படி இந்தப் பக்கங்களில்  இதுவும் ஒரு புனிதம் என்பதே!  சேரநாட்டு மலைகளில் மழை பெய்ய ஆரம்பிச்சவுடன், நீர்வரத்து அதிகமாகி  பொங்கிப்பெருகி பாதைகளைக்கூட மூடிருது. அதான் நாம் வழி தெரியாமல் முழிச்சதன் காரணம்.

வீட்டின்ற உடமஸ்தர்  துபாயில் இருக்காராம். அவரது பலநாள் கனவாம் இப்படி ஒன்னு அமைக்கணும் என்பது. பலநாடுகளில் இருந்தும் மக்கள் வந்து தங்கிட்டுப் போறாங்களாம். இப்போதான்  முதல்முறையா நியூஸி மக்கள் வந்துருக்காங்க:-)   இந்த வீட்டைத் தவிர்த்து தோட்டத்தில் தனித்தனியா நாலு காட்டேஜ்கள் இருக்கு.  முக்கியப்பட்ட பல சினிமா தாரங்கள் மோகன்லால், மம்மூட்டி போன்றோர்  பத்துநாளைக்கு  வந்து தங்கி ஓய்வெடுத்துக்கறது  பதிவு.  ( பதிவு = வழக்கம்)  இங்கேயே ஆயுர்வேத மஸாஜ், போட் ஹவுஸ் அனுபவிக்கணுமென்றால் அதற்கான ஏற்பாடுகள், ஊரைச் சுற்றிப்  பார்க்கணும் என்றால்  அதுக்குத்தகுந்தபடின்னு  எல்லா வசதிகளையும் செஞ்சு தர்றாங்க. காட்டேஜ்களில் இப்ப யாரும் இல்லை. உள்ளே பராமரிப்பு வேலைகள் நடக்குதுன்னு சொன்னாங்க. டிசம்பர் சீஸனுக்கு ரெடியா  இருக்கணுமாம்.

நமக்கு என்னென்ன தேவைன்னு கேட்டு செஞ்சு தற்றாங்க. நாங்க சிம்பிளான வெஜிடேரியன் சாப்பாடுன்னதும் ரெமா கொஞ்சம் வெலவெலத்துப் போயிட்டாங்க:-) மீன்கறின்னு சொல்லி இருந்தால் வாசலில் ஓடும் நதியிலேயே மீன்  பிடிச்சுச்  சமைச்சுருவாங்களாம்!

சமையல் ஆகும்வரை கொஞ்சம் வாசலுக்கு வந்து க்ளிக்கிட்டு இருந்தேன். வாசலில் நின்னு பார்த்தப்ப இடதுபக்கம்  கொஞ்சதூரத்தில் அழகான ஒரு சர்ச்!  நதியின் வளைவில் இருப்பதால் தண்ணிக்குள்ளே நிற்பதுபோல் இருக்கு. அக்கரைக்குப் போனால் பார்க்கலாம். போயிருக்கலாமேன்னு இப்பத்தோணுது எனக்கு. தனியார் படகுகள் இங்கே அங்கேன்னு  நதியைக் கடக்கப் போய் வருதுதான். இதைத்தவிர  புளின்குன்னு வெலியநாடு ஃபெர்ரி சர்வீஸொன்னு இக்கரைக்கும் அக்கரைக்கும் போய் வருது.


அந்த அழகான சர்ச் ஒருசினிமாவில் நடிச்சுருக்காமே!   சிம்புவின் படம் என்றார்கள். 'விண்ணைத்தாண்டி வருவாயா'ன்னு நினைக்கிறேன் என்றார் , சினிமாப்ரேமியான நம்மவர். ஸெயிண்ட் மேரீ'ஸ் ஃபோரேன் சர்ச்.வலியபள்ளி  (St.Mary's Forane Church, Valiyapally)


ஒன்னேகாலுக்கு சாப்பாடு ரெடி. பருப்பு, முட்டைக்கோஸ்  தோரன், பீட்ரூட் தயிர்பச்சடி, ரஸம், சோறு, கடுமாங்கா அச்சார்.  நமக்கு இது யதேஷ்டம். சமையலுக்கும் மற்ற வேலைகளுக்கும் பணியாளர்கள்  இருக்காங்க. இப்போதைக்கு  அங்கே கெஸ்ட் நாம் மட்டும் என்பதால் மற்ற ஆட்கள் வீடுவரை போயிருக்காங்களாம்.  ஃப்ரான்ஸிஸ், ஸோஸம்மா ரெண்டு பேரும் சேர்ந்து சமையல் செஞ்சாங்களாம். நம்ம ஸ்ரீனிவாசனுக்கு  அடுக்களையில் இருக்கும்  ஊணுமேசையில் சாப்பாடு பரிமாறினாங்க.

ராத்திரிக்கு என்ன வேணும்? சப்பாத்தி செய்யட்டுமான்னு கேட்டாங்க. ஆய்க்கோட்டே!

சாப்பாடு ஆனதும் ரெண்டு மணிக்கு நாம் கிளம்பி வெளியே போறோம். ரெடியா இருங்க.

தொடரும்.....:-)




சேஷன்களே இல்லாத ஊருக்கு சேஷன் வர்றானாமே!

$
0
0

ஆஹா....அப்படியா?  விடக்கூடாது. கட்டாயம் போகணும். அன்றைக்கு வேற வேலை எதுவும் வச்சுக்காதீங்கன்னு சேஷபயக்காரரை மிரட்டி வச்சேன்.
எங்கூர் ஹரே க்ருஷ்ணா கோவிலில் இருந்துதான்  அழைப்பு வந்துருக்கு.

 நிலநடுக்கத்தில் ஏற்பட்ட  அழிவுகளில்  வெறும் சர்ச்சுகளே மட்டும் இடிஞ்சு விழுந்தால் எப்படி?  உலகெங்கும்   கடவுள் ஒருவரே என்பதைக் காமிக்க வேணாமா? அதனால் இருந்த ஒரே ஒரு ஹிந்துக்கோவிலும் போயே போச்.



அந்தப்பக்கம் போகும்போதெல்லாம்  இடிஞ்சு கிடக்கும் கோவிலைப் பார்க்கும்போது  மனசுபூராவும் ஒரே வலி.


இப்ப இப்படி எழுதறேனே தவிர,  கோவிலில் இருந்த தெய்வச்சிலைகள்  விழுந்து நொறுங்கிய படங்களைப் பார்த்துக் கண்ணீர் விட்டழுதது  உண்மை. இந்த நொறுங்கல்களில் இருந்து தப்பியது பிரபுபாதா சிலையும்,  சின்ன சைஸில் இருக்கும் Sri Sri Gaura Nitai   உலோக விக்கிரகங்கள்    மட்டுமே!  உடனே இவர்களை  அங்கிருந்து அகற்றி ஒரு பக்தர் வீட்டில் கொண்டுபோய் வச்சாங்க.



(மேலே உள்ள படங்கள்  ஃபிப்  22   2011 நிலநடுக்க தினத்தில்:(  இஸ்கான்  பக்கத்தில் இருந்து  எடுத்தவை)

நமக்குத்தான்  அழுகையும் புலம்பலுமா இருந்ததே தவிர  இஸ்கான் பக்தர்கள் எல்லாம்  ரொம்பவே மன உறுதியோடு , எல்லாம்  கண்ணனின் விருப்பம். இப்படி ஆனதுக்கும் ஒரு காரணம் இருக்கணும் என்றெல்லாம் சொல்லும்போது , பூரண சரணாகதி  தத்துவம் லேசாப் புரிஞ்சது,

இதுக்கிடையில் தாற்காலிகமா  ஒரு கம்யூனிட்டி ஹாலில் ஞாயித்துக் கிழமைகளில்  மாலையில் மட்டும் சின்ன விக்ரகங்களை அங்கே கொண்டுபோய் வச்சு  கொஞ்சம் பஜன்ஸ் பாடி  ஆரத்தி எடுப்பாங்க. சமையல் அவரவர் வீட்டில் எதாவது செஞ்சு கொண்டு போனோமுன்னா அங்கே வச்சுக் கும்பிட்டுவிட்டு  ப்ரஸாதமா எல்லோருக்கும் பகிர்ந்து கொடுப்பதுதான்.  நாங்க ஒரு முறைதான் அங்கே போனோம்.  கொஞ்சம் தூரத்தில் இருக்கு என்பதால்   போய்வர சௌகரியப்படலைன்னு கோபால் சொல்லிக்கிட்டு இருந்தார்.


பிரபுபாதா சிலையை வீட்டில் வச்சுருந்த இஸ்கான் பக்தர் நமக்குத் தோழி என்பதால் அங்கே எதாவது விசேஷ வழிபாடுன்னால்  போய் வருவோம்.
கொஞ்சம் கொஞ்சமா இடிபாடுகளை அகற்றி  நிலத்தை சமன் செஞ்சு வச்சுட்டுப் புதுக்கோவில் அதே இடத்தில் கட்ட ஏற்பாடுகளைத் தொடங்குனாங்க. என்னென்ன  செஞ்சுக்கிட்டு இருக்காங்கன்ற தகவல் மட்டும் நமக்கு  வந்துக்கிட்டே இருந்துச்சு.  இன்ஷூரன்ஸ் கிடைக்கும்வரை  ஒன்னும் செய்யமுடியாதுன்னாலும்  புதுக்கோவிலுக்கான  ப்ளான் பண்ணிக்கலாமேன்னு   ஆர்க்கிடெக்ட் ஒருவரை வரையச்சொல்லி (இவரும் இஸ்கான் பக்தர்தான்) ப்ளானை சிட்டிக் கவுன்ஸிலுக்கு அனுப்பி அது ஒருவழியா அப்ரூவ் ஆச்சு.  எல்லாப் படங்களும் நமக்கும் வந்து சேர்ந்தன.




நம்மூர்போல் கோபுரம் எல்லாம் வச்சுக் கட்ட முடியாது. நகர மையத்திலிருப்பதால்  ( நாலு அவென்யூக்கள்)  அதுக்கு ஏராளமான கட்டுதிட்டம்  உண்டு. (சர்ச்சுக்கு ஸ்டீப்பிள் அனுமதிக்கும்போது குட்டியா ஒரு சின்ன கோபுரத்துக்கு  அனுமதி கேட்டுருக்கலாம்! ப்ச்...)

ஜனவரி பத்தாம் தேதிக்கு பூமி பூஜைக்கு ஏற்பாடாச்சு.  மார்கழி மாசம் என்பதால் நல்லதுன்னு எனக்கு மகிழ்ச்சியே!  மாதங்களில் அவன் மார்கழியாமே!  வந்த அழைப்பிதழில்  Bhumi Puja / Vastu Puja (installation of Ananta sesa) என்று பார்த்ததும் ஆவல் அதிகரிச்சது.  நியூஸியில் சேஷன்களே கிடையாது, தெரியுமோ!

ஜனவரி பத்தாம்தேதி சனிக்கிழமையாவேற அமைஞ்சுபோச்சு. புத்தாடைகள்   அணிஞ்சு பரவசத்தோடு புறப்பட்டேன்.  சரியான நேரத்துக்குப்போய்ச் சேர்ந்தோம்.   குழி வெட்டி வச்சுருந்தாங்க:(

அங்கே சின்னதா  ஒரு பூஜைக்கு ஏற்பாடு நடக்குது. ஹரேக்ருஷ்ணா பண்டிட் கிஷோர் (தமிழ்காரர்தான்)  வாங்கம்மா,  ஹேப்பி நியூ இயர்  சொல்லி வரவேற்றார்.

ஆதிசேஷன் எங்கேன்னு ஆவலாக் கேட்டதுக்கு பூஜைசாமான்கள் பெட்டியில் இருக்கு என்றார். பிரதிஷ்டை பண்ணப்போகும் சிலை பெட்டிக்குள்ளா?

சின்ன காஃபி டேபிள் மாதிரி இருந்ததில்  கௌரா நித்தாய் விக்கிரகங்களுடன், யோக நரசிம்ஹரின் செப்புச்சிலையும்,  லக்ஷ்மி ஹயக்ரீவர் படமும், சாளக்ராமம் ஒன்னும் இருந்தது.  பொதுவா இப்படிப் படங்கள் வைக்கறதில்லையேன்னு இருந்தாலும்  இப்பவாவது வச்சாங்களேன்னு மகிழ்ச்சிதான்.

இன்னிக்குப் பார்த்து வெய்யில் சுள்ளுன்னு சக்கைப்போடு போடுது. பக்தர்கள்  குடும்பங்கள்  வந்து சேந்தாங்க. ஆளுக்கொரு வேலையா  பூஜை சாமான்களைப் பிரிச்சு  அடுக்கி வச்சாங்க. ஹோமம் செய்யறதுக்கு  செங்கல்கள் மேல் ஒரு  சதுர ட்ரே வச்சு அதில் அரிசிமாவைப் பரத்தி, வண்ணப் பொடிகளால் கோலம் போட்டு,  வெளியே சுற்றிலும் பழவகைகளை அடுக்கினாங்க.  மூணு செப்புக் கலசம் தேங்காயுடன்.



வெயில் தாங்காமல் பக்கத்து வேலியோரம் கிடைச்ச கொஞ்சூண்டு நிழலில் எல்லோரும் போய் தஞ்சம் அடைஞ்சோம்.  ஒரு ஷாமியானா போட்டு வச்சுருக்கலாம்!  இங்கேதான்  டெண்ட் கிடைக்குதே.  நமக்கு ஒரு குடை வண்டியில் இருப்பது  நினைவுக்கு வர கோபால் போய் அதைக் கொண்டுவந்து கொடுத்தார். அதானே...ஃபொட்டோக்ராஃபர்  ஒரு இடத்துலேயே உக்காரமுடியுமா?

மாங்கட்டைகளை அடுக்கி  ஹவனுக்கு ரெடியானார் கிஷோர். ஹரேக்ருஷ்ணா பஜன்பாட,  ம்ருதங்கமும்  ஜால்ராவுமா  சிலர். இவுங்களும் வேலிக்கருகில்தான்.

பஞ்சகச்சம் கட்டிய குட்டிப்பையனை  ஃபென்ஸ்க்கும் மேல் ஏத்திவிட்டார் கோபால்:-)

ப்ரபுபாதாவும் வந்து சேர்ந்தார். ஹோமகுண்டத்துக்கு முன்னால்  உக்கார்ந்தார். பாண்டுராணி அவருக்குக் குடை பிடிச்சாங்க.  இங்கே தீட்சை வாங்குனவங்களுக்கு  கோவில் பெயர் ஒன்னும் இருக்கு. அப்புறம் அவரை இடம் மாற்றி கொஞ்சம் பூஜை விக்ரகங்களுக்குப் பக்கத்தில் உக்காரவச்சாங்க:-)


இன்றைய சூப்பர் ஸ்டார் ஒருவழியா வந்து சேர்ந்தார். எல்லோருக்கும், முக்கியமா சின்னக்குழந்தைகளுக்கு ஒரே குஷி. இவருக்காகத்தான் இவ்ளோ நேரம் காத்திருந்தோம். இன்னும் பால்குடி மறக்கலை.  பாட்டிலில் பால். சிட்டிக்குள்ளே  இவருடைய ஜாதிக்கு அனுமதி இல்லை .என்பதால் , விசேஷ அனுமதி வாங்கி  சிட்டிக்கு வெளியில் இருந்த  பண்ணையில்  (இதுவும் இஸ்கானோடதுதான்) இருந்து கொண்டு வந்தாங்க.





இவர் வரவுக்குப்பிறகு யாரும் பூஜையைக் கவனிச்சமாதிரி தெரியலை:-)  நிழலுக்காக எங்க பக்கத்தில் வந்தவருக்கு ராஜ உபசாரம்.  கீழே இருந்து புற்களைப் பிடுங்கி ஊட்டிவிட்டுக்கிட்டு இருந்தார்  நம்ம கோபால். பெயர் ராசிக்குள்ள குணம்:-)  நானோ க்ளிக்குவதில் மும்முரமா இருந்தேன்.



பூஜையின் ஒரு பகுதியாக மாடுபாப்பாவை  பூஜை நடக்கும் இடத்துக்குக் கூட்டிப்போனாங்க. அவருக்கு கோ பூஜை நடத்தி, அவரையே சாட்சியாக வச்சு நவதானியங்கள், நவரத்தினங்கள் , மஞ்சளும் குங்குமமும் சார்த்திய செங்கற்கள் இப்படி எல்லாம்  நவநவமா  குழிக்குள் வச்சாங்க. சின்ன மண்குடத்தில் சேஷன் இருந்தார் . அவரையும் குழிக்குள் இறக்கினாங்க.  பக்தர் ஒருவர் மோதிரம் ஒன்னு  குழியில் போட்டார்.  நாங்கெல்லாம்  ஒரு டாலர் ரெண்டு டாலர்  (தங்கக்காசுகளை ) போட்டோம்.  கிஷோர், 'தங்கம் போடுங்கம்மா'ன்னார் என்னிடம்:-)




தரையில் குழிச்சிட்டால் பலன் ஏது?  கோவில் கட்ட ஒரு நல்லதொகை நம்ம பங்காகக் கொடுக்கப் போறோம்  என்பதால்  தலையை ஆட்டி வச்சேன்.
பால்,பழங்கள் மலர்கள், தூபதீபங்களால்  சேஷனுக்கு  உபசாரங்கள்  ஆனதும் குழிக்குள் மண்ணை நிரப்பினோம். ஆளுக்கு ஒரு  ஷவல் அளவு:-) ஒரு சாஸ்த்திரத்துக்குத்தான்!

அதுக்குப்பிறகு  ஹோமம் ஆரம்பமாச்சு.  வெயிலில்  நெருப்புக்குப் பக்கம் நிற்பது ரொம்பக் கஷ்டம்:(

யோகநரசிம்மரைக் கூர்ந்து கவனிச்சால், அவர் மடியில் ப்ரஹலாதன் உட்கார்ந்துருக்கான்! இப்படி ஒரு 'விக்கிரகத்தைப் பார்ப்பது' எனக்கு புதிய அனுபவம்!



மணியும் பனிரெண்டரையாகி இருந்துச்சு.   கோவில் நல்லபடியா எழும்பி வரணுமுன்னு மனமாற வேண்டிக்கிட்டு வீடு திரும்பினோம். எப்படியும் இன்னும் ஒரு வருசம் ஆகலாம்.


சேஷன்தான்  பெருமாள் எங்கே போனாலும் கூடவே போவானாமே!   இங்கே சேஷன் முதலில் வந்துட்டான். படுக்கை வந்தாச்சு.   இனி வரவேண்டியது  பெரும் ஆள்தான் இல்லையோ?

பெருமாளே  பார்த்துச்  செய்!


PINகுறிப்பு:   அனைவருக்கும்  ஈஸ்ட்டர் விழாவுக்கான இனிய வாழ்த்து(க்)கள். எங்களுக்கு நாலுநாள் லீவு.  அதில் மூன்று நாட்களுக்குச் சிறு பயணம் போகின்றோம்.   அடுத்த வெள்ளிக்கு விவரம் சொல்றேன்:-)


ரெவியிண்டெ ஸ்வந்தம் ம்யூஸியம் போகாம், வரூ ( மூன்று மாநிலப் பயணம்- தொடர் : 36)

$
0
0
இந்தியா வந்துட்டோமுன்னா நம்ம நித்தியப்படி சமாச்சாரங்களில் ஒன்னு  அண்ணனுக்கு தினமும் ஃபோன் பண்ணுவது. நாம் பத்திரமா இருக்கோமுன்னு  சொல்லிக்கிட்டே,  ஊர் சுத்துவோம். அநாவசியக் கவலையை அவுங்களுக்கு  ஏன் கொடுக்கணும், இல்லையா?

மரியா வந்து சேர்ந்ததையும், அம்முவின்  பூனை சமாச்சாரத்தையும் சொன்னேன். அண்ணனும் அண்ணியும்  Zeus விவரம் கேட்டு  ரொம்ப வருத்தப்பட்டாங்க. சரி நடந்தது நடந்துபோச்சு அதுக்கு அவ்ளோதான் ஆயுசுன்னு  ஆறுதல் சொன்னகையோடு,  'கருணாகரன் ம்யூஸியம் கட்டாயம் போய்ப் பார். உனக்கு ரொம்பவே பிடிக்குமு'ன்னதும், அதைப் பற்றிய விவரம் கேட்டுக்கிட்டேன். அங்கேதான் போறோம் இப்ப.


காம்பவுண்டை விட்டு வெளியே வர்றோம். தண்ணீரெல்லாம் வடிஞ்சுபோய் பாதை கண்ணுக்குத் தெரிஞ்சது!  படகுத்துறை கடந்து குரிசடி வரை வந்துட்டு  வலக்கைப் பக்கம் திரும்பணும்.



மரியாவில் இருந்து ஆலப்புழாவுக்கு வெறும் 20 கிமீ தூரம்தான்.  ஊருக்குள்ளே வந்ததும்  வழியை விசாரிக்கலாமுன்னு ஒரு பைக் நபரிடம் கேட்டதுக்கு, நான் அந்த வழிதான் போறேன். பின் தொடர்ந்து வாங்கன்னார்.  ஃபாலோ மி பிஹைண்ட்:-)))


சரியா அங்கே கொண்டுவிட்டதும் நன்றிகள் சொன்னோம்.  தெரு என்னவோ சாதாரணமாத்தான் இருக்கு.  கம்பி கேட்டுக்கு அப்புறம்  வெள்ளை அன்னம் போல் பெரிய கட்டிடம்!  வாசலில் சின்னதா ஒரு தோட்டம்.  ஆறு இத்தாலிய மங்கைகளின்  பளிங்குச் சிலைகள் தாங்கி நிற்கும் ஒரு  கூடார மண்டபம். சின்னதுதான்.




அதுக்கு அந்தாண்டை ஒரு அல்லிக்குளம். நடுவில் ஒரு சிலை. தகப்பனும் மகனுமா! பைபிள் கதையில் வரும்  மந்தையில் இருந்து பிரிந்துபோன ஆடு, மறுபடி வந்ததுபோல்  வீட்டையும் தகப்பனையும் விட்டுப்போன மகன், பாகம் பிரிச்சுக்கொண்டு போன காசு அத்தனையும் தொலைச்சுட்டு வீடு திரும்பின சம்பவம். தகப்பன்,  செல்வம் போனால் போகட்டும். நீ திரும்ப வந்ததே பெரிய சொத்து என்று அணைச்சு வரவேற்கிறார். ஏழடி உசரத்தில் இந்த வெண்கலச் சிலை, 1400 பவுண்ட் கனம்  உள்ளதாம்.  உலகப்புகழ் பெற்ற சிற்பி ஸாம் ஃபிலிப்  இந்தச் சிலையை (The Prodigal Son)  செஞ்சுருக்கார்.



ஆறு பெரிய தூண்கள் அணிவகுத்து நிற்கும் முகப்புக் கட்டிடம்.  பக்கவாட்டுஅறையில்   அனுமதிச்சீட்டு வாங்கிக்கணும்.  150 ரூபாய் ஒரு ஆளுக்கு.  நாங்க மூணு டிக்கெட் வாங்கிக்கிட்டோம்.  தனியார்  சேகரிப்பு இந்த ம்யூஸியத்தில் இருக்கு. நம்மை உள்ளே அழைச்சுக்கிட்டுப் போறார்  ம்யூஸியத்து வழிகாட்டி.


படங்கள் எடுக்க அனுமதி இல்லை. மனசு சோக கீதம் பாடியது உண்மை. ஆனால்இவுங்க வலைப்பக்கத்துலே  கொஞ்சம் படங்கள்  போட்டு வச்சுருக்காங்க. கூடவே தகவல்களும்.


கிருஷ்ணன் முதலாளி  என்பவர்தான்  கேரளாவில்  தேங்காய் நார் பயன்படுத்தித் தயாரிக்கும் தொழிலுக்கு (Coir products) முதல் தொழிற்சாலை  ஆரம்பிச்சவர்.  இதுக்கு முன்னே இந்தத் தொழில்  ஐரோப்பியர்  கைவசம் இருந்தது. கைத்தறி நெசவு போல் ஆரம்பத்தில் இருந்த  தொழிலை,  நவீனமயமாக்குனது இவரது மகன் கருணாகரன்.  இவர் முதலில்  இங்கிலாந்து (Birmingham University)  படிச்சு முடிச்சு மேற்படிப்புக்காக ஜெர்மனி போனார். அங்கே படிப்புமுடிஞ்சதும், ஒரு ஜெர்மானியப்பெண்ணைக் கல்யாணம் செஞ்சுக்கிட்டார். இவருக்கு ஆணும் பெண்ணுமாய் ரெண்டு மக்கள்.  ரெவி,லீலா.

தகப்பனின்  மறைவுக்குப்பிறகு  தொழிற்சாலை ரெவியின் கைகளுக்கு வந்தது. தொழிலை இன்னும் நல்லா விரிவு படுத்தி ஓஹோன்னு இருந்துருக்கார். மனைவியின் பெயர்  Betty. இவருக்கு ஒரே மகள்,  Lullu.

தொழில் சம்பந்தமா பலநாடுகளுக்குப்போய் வர்றார். கலைப்பொருட்கள் மீதுள்ள ஆசையால் ஒவ்வொரு பயணத்திலும் பொருட்கள் சேர்ந்துக்கிட்டே வருது.  தன்னுடைய 72 ஆம் வயசில்  (2003) ரெவி காலமாகிட்டார்.

கடைசியில் இவ்வளவையும் வீட்டுலே வச்சுக்கிட்டு என்ன பண்ணறது?  நாலு பேர் பார்த்து சந்தோஷப்படட்டுமேன்னு  அவருடைய மனைவி Bettyயும் மகளுமா  திட்டம் போட்டு, தனியா ஒரு கட்டிடம் கட்டி  மக்கள் பார்வைக்கு வச்சுருக்காங்க. 2006 ஆம் ஆண்டு மேகாலயா கவர்னர்  வந்து திறந்து வச்சுருக்கார்.




கீழ்தளத்தைப் பார்த்து முடிச்சதும், மாடிக்குக் கூட்டிப் போனார் வழிகாட்டி. விளக்கைப் போட்டதும்.....   கண் எதிரில் ஒரு மாயாலோகம்! க்றிஸ்டல், பளிங்கு, தந்தம், போர்ஸலீன், வெள்ளி  இப்படி பலவகைகளில்  சின்னச்சின்ன சிற்பங்கள். எல்லாம் அழகா கண்ணாடிப் பொட்டியில் தூசு படாமல் வச்சுருக்காங்க. பார்வையாளர்கள் ஒரு கஷ்டமும் இல்லாமல் நிம்மதியா சுத்திச்சுத்திப் பார்க்கும் வகையில் அமைப்பு. நம்ம சீனிவாசன்  ஒரு சுத்துப் பார்த்துட்டு  கீழே  போறேன்னு சொல்லிட்டுப் போயிட்டார்.


நாங்க  இந்த மாடியில் ஒவ்வொரு  கண்ணாடிப்பொட்டிக்கு முன்னும் நின்னு  ஆஹா...ஓஹோன்னு  சொல்லிக்கிட்டு இருக்கோம்.

ஒவ்வொன்னும் அப்படியே அள்ளிக்கிட்டுப்போகுது!  எதைச் சொல்ல எதை விட?  வெண்ணையில் செய்ததைப்போல தந்தத்தில் அப்படியே இழைச்சு வச்சுருக்காங்க. ஒரு அலமாரியில்  கஜுராஹோ சிற்பங்களைப்போல் முழுசும் தந்தத்தில்!  இத்துனூண்டு சிற்பங்களில் என்ன ஒரு வேலைப்பாடு!
கடவுளர் சிலைகளுக்குக் கணக்கு வழக்கே இல்லை!  அவதார் என்ற பெயரோடு ஒன்னு இருக்கு பாருங்க..... ஹைய்யோ!!!!!



நம்ம கோபால் எப்பவும், நான்  சின்னச்சின்ன பொம்மைகளையும் பொருட்களையும்  சேகரிப்பதைப் பார்த்து,  எவ்ளோ ஜங்க்(!) சேர்த்து வச்சுருக்கேன்னு சொல்வார்.  இதெல்லாம் அவர் பார்வைக்கு ஜங்க்காமே ஜங்க். பேசாம என் காலத்துக்குப் பிறகு இப்படி  அழகா டிஸ்ப்ளே செஞ்சுருங்க. உங்களுக்கு வருமானமுமாச்சுன்னு  சொன்னேன். பொழுதும் போனமாதிரி இருக்குமே!  ஜஸ்ட் ஒரு டாலர் தான் எண்ட்ரி ஃபீ:-)

இந்த மாடியின் பின்பகுதியில்   கேரளா  ஹால் ஒன்னு  இருக்கு. பொதுவா கேரளத்தைப் பற்றி இதுவரை தெரிஞ்சுக்காதவங்களுக்காகன்னு வச்சுக்கலாம். தரை முழுக்க  பாலீஷ் செஞ்ச டெர்ரகோட்டா டைல்ஸ் போட்டு  உள்கூரை நல்ல தேக்குமரத்தில் பாரம்பரிய வேலைப்பாடுகளோடு  அழகோ அழகு!   இதற்கடுத்து இதை ஒட்டினாப்போல ஒரு பெயிண்டிங் கலெக்‌ஷன். ஓவியங்கள் ப்ரமாதம்.

இதே கட்டடத்தின்  பின்பகுதியில்  ரெவி கருணாகரனின்  குடும்பம் வசிக்கிறாங்க. ஒரே மகள்தானே.  ஆனால் அவுங்களுக்கு  ஒரு விதமான   உடல்நிலைக் கோளாறு. நெருங்கிய உறவினரின் கவனிப்பில் இருக்காங்களாம். தன்னுடைய  சொத்து சுகங்களோ, இத்தனை அபூர்வமான  கலைச்செல்வங்களோ  இருக்கு  என்ற விவரம் கூடப் புரிந்துகொள்ள முடியாத  ஒருநிலை.ப்ச்.... எனக்கு  ஐயோன்னு  இருந்தது:(

லீலா பேலஸ் ரிஸார்ட்டுகள் உட்பட ஏகப்பட்ட  பெரிய பெரிய நிறுவனங்களை ஏற்படுத்திட்டுப் போயிருக்கார் ரெவி.

ம்யூஸியம் பார்க்க  உள்ளூர்க்காரர்கள்  வருவது அபூர்வமாம். ஆனால் வெளிநாட்டினர் அநேகர் வருவதுண்டாம்.  இங்குள்ள தந்த சிற்பங்களின்  விவரம் எல்லாம் அரசாங்கக் கணக்கெடுப்புக்கு  உட்பட்டதுன்னார்.

வார விடுமுறையாக  திங்கட்கிழமை  லீவு .பார்த்து வச்சுக்குங்க. மற்ற நாட்களில் தினமும் காலை 9 முதல் மாலை 5 வரை திறந்துருக்கும்.


ஒன்னேகால் மணி நேரம்போனதே தெரியலை. கீழ்தளத்தில் ரெஸ்ட் ரூம்  நல்ல வசதிகளோடு நீட்டா இருக்கு!



வெளியே தோட்டத்திலும் சில சிற்பங்களை  வச்சுருக்காங்க.ஒரு அம்மிக்கல்லும் ஆட்டுக்கல்லும் கூட இருக்கு. பழையகால சாமான்களை இனி இப்படிப் பார்த்தால்தான் உண்டு.


சரி கிளம்பலாமுன்னு காருக்கு வந்தா....சீனிவாசன் நல்ல தூக்கத்தில்!
இனி ஒரு   அரைமணிக்கூர்  பயணம் செஞ்சு கோவிலுக்குப் போறோம்.
எண்டே க்ருஷ்ணா.... இதா வருந்நு...

தொடரும்........:-)

PINகுறிப்பு: நாம் ரவி, ரமா என்பதை,  ரெவி, ரெமான்னுதான்  கேரளத்தில் சொல்றாங்க.

சொல்ல மறந்துட்டேனே.......   'உள்ளே 'படங்கள் எல்லாம் இவுங்க பக்கத்தில் சுட்டது!  வேற வழி இல்லை.  மாப்பு ச்சோதிக்குந்நு   ரெவிமுதலாளி!





அம்பலப்புழா ஸ்ரீ க்ருஷ்ணன் ( ( மூன்று மாநிலப் பயணம்- தொடர் : 37)

$
0
0
ஆலப்புழாவில் இருந்து அம்பலப்புழா வந்து சேர,  சரியா   அரைமணி நேரம் ஆச்சு. தெக்கோட்டு ஒரு பதினாறு கிமீ பயணிக்கணும்.  ரொம்பவே பிஸியான ட்ராஃபிக். பள்ளிக்கூடம் விட்ட நேரம் என்பதால் கடந்து வந்த சிற்றூர்களில் எல்லாம்  பள்ளிக்கூடச் சீருடைகளுடன்  பிள்ளைகளின் கூட்டம்.
ஸ்ரீ க்ருஷ்ணன் கோவில் வாசலுக்கு வந்து சேர்ந்தோம்.


இங்கேயும்  பள்ளிக்கூடப் பசங்கள்தான். மணி இப்போ நாலரை. அஞ்சு மணிக்குத்தான் கோவில் திறக்கறாங்க.  கோவிலுக்கு ஒரு  அலங்காரவாசல் போல் இருக்குமிடத்தில் உள்ளே போனால் ரெண்டு பக்கங்களிலும் ஏகப்பட்ட கோவில் கடைகள்.


இந்தப்பக்கம்  வெளியேயும்  கடைகளோ கடைகள், கலகலன்னு இருக்கு. இன்னும் அரைமணி நேரம் இருக்கேன்னு பார்த்தால்.... அங்கே ஒரு டீக்கடை. நாயர் கடை டீயும்  பருப்பு வடையும் நமக்கு இங்கேதான் போலன்னு  ஒரு கடைக்குப்போனோம். வெளியே நின்னுதான்  டீ குடிக்கணும்.  பெட்டிக் கடையாட்டம்தான் இருக்கு:-)

பளபளக்கும்   செம்பு பாய்லர் காலம் எல்லாம் போச்சு. காஸ் அடுப்பு வச்சு வேலை நடக்குது. வடையைக் காணோம்.மூணுபேரும் ஆளுக்கொரு டீ வாங்கிக்கிட்டோம். குடிச்சு முடிச்சுட்டு கோவில்கடைகளை ஒரு பார்வை பார்க்கலாமுன்னு போனால்.... ஏகப்பட்ட க்ருஷ்ணன்கள்.

 ஆவலோடு ஓடிய என்னைத் தொடரும் மிரட்டும் குரல்.

 "ஏற்கெனவே வெயிட்  அதிகமா இருக்கு!"

ஹாஹா...


அதுக்குள்ளே  கோவில் திறந்து மக்கள்ஸ் உள்ளே போறாங்க. நாலே முக்கால்தான். அஞ்சு மணிக்கு நடை திறப்பாங்களாம். சரி.பார்க்கலாமுன்னு  கோவிலுக்குள்ளே போறேன். லக்ஷார்ச்சனை  தொடங்குச்சு
."நீபாட்டுக்கு ஏகப்பட்ட சாமான்களை வாங்கிக் குவிச்சுக்கிட்டே போறே. (?!) ஏற்கெனவே மீனாக்ஷி வாங்கிட்டு ஏகப்பட்ட கனம். உனக்கு புத்தகங்கள் வேற வாங்கிக்கணும் என்றால்...இப்ப ஒன்னும்  வாங்காமல் இருந்தால்தான் நல்லது..........."

"ஏன் உங்க முப்பது கிலோ சும்மாத்தானே கிடக்கு?  அதுலே...."

"தைக்கக் கொடுத்த துணிகளை  எப்படிக் கொண்டு போவே?  அந்த முப்பதெல்லாம் எப்பவோ  முடிஞ்சாச்சு. சரி, எதாவது ஒன்னு மட்டும் வாங்கிக்கணும். இதுதான் கடைசிப் பர்ச்சேஸ். "

ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்....(இந்தக் கோவிலுக்குக் கடைசின்னு மனசில் சொல்லிக்கிட்டேன்)



கூடாதுகள் எழுதிப் போட்டுருக்காங்க. நிறைய தமிழர்கள் வர்றாங்க போல! தமிழிலும்  கையால் எழுதிப்போட்டுருக்கே:-)

ஓலை வேய்ந்த ஒரு மண்டபம் கடந்து போறோம். இடதுபக்கம் கம்பீரமா ஒரு யானை! ஸ்ரீ க்ருஷ்ணனுக்குச் சேவை செய்து, கடைசியில் வைகுண்டம் போனவன்.




ஒரு பெரிய வெண்சங்கு!   பாஞ்சஜன்யம்!




வெளிப்பிரகாரத்தில்  ஒரு சுத்து நமக்கு. இடப்பக்கமெல்லாம்  ஓடுகள் போட்ட தனித்தனி கட்டிடங்களும் அதில் சின்னச்சின்ன வாசல்களுமா இருக்கு.






கோவிலுக்குப் பின்பக்கம் அட்டகாசமான குளம். அதுக்கு அந்தாண்டை யானைக்கொட்டில்.  இளவயசுக்காரன்  ஒருவன் அங்கே!  கிட்டப்போய்ப் பார்க்கலாமுன்னா, கோவில் மணி முழங்க ஆரம்பிச்சது. நடை திறந்துட்டாங்கன்னு ஜனங்க பாயறாங்க.
  கெமராவில் Zoom செய்து அவனைக் கிட்டக்கக் கொண்டு வந்து பார்த்தேன். மிடுக்கன். ஒரு 25 வயசு இருக்கும்!



சரி,  தரிசனம் முடிச்சுட்டு வந்துடலாமுன்னு போறோம். வலப்பக்கமாவே போறோம். தேவஸ்தான கவுண்ட்டரும், தொட்டடுத்து  அடைச்சுப்பூட்டி இருக்கும் பால்பாயாஸம் கவுண்ட்டரும்.  ஏற்கெனவே  சொல்லி வச்சால்தான் கிடைக்கும். அதுவும் அதிர்ஷ்டம்  இருந்தால்தான் என்று கேட்டுட்டுண்டு.


பாயஸம் கழிச்ச  ஆயாஸமாணோ  ஈ  பூச்சைக்கு?

தேவஸ்தான கவுண்ட்டர் திறந்து இருக்கு. அங்கே இருந்த கோவில் ஊழியரிடம், 'பாயஸம் கிட்டுமோ'ன்னால்  'நூறு ருப்யா 'என்ற பதில். 'ஆஹா......தராம்.  பாயஸம் உண்டோ?'ன்னு  திரும்பவும்  கேட்டதும் உவ்வு ன்னு ஒரு தலயாட்டல். காசை வாங்கியவர்  உள்ளே போன சிலநொடிகளில்,

எங்க அதிர்ஷ்டத்தைச் சொல்லிச்சொல்லி மாய்ஞ்சு போய் நிக்கறேன். துளிப் பாயஸம்தான் வரும். சட்னு கை நீட்டி வாங்கி குடிச்சுட்டு(!) அப்புறம் க்ருஷ்ணனை தரிசிக்கலாமுன்னு சொல்லி வாய் மூடலை.... ஒரு  பெரிய ப்ளாஸ்டிக் கண்டெய்னரில் பாயஸம் வருது! ஒரு லிட்டர் இருக்கும்!
உடம்பெல்லாம் பதற  கைநீட்டி வாங்கிக்கிட்டேன். சின்ன தொன்னையில் வருமுன்னு பார்த்தால்.....

எப்ப உண்டாக்கியதுன்னு கேட்டதுக்கு 'உச்சைக்கு'என்றார். அதுதான் கடைசி பாட்டிலாம். எண்டே க்ருஷ்ணா....   என்ன மனசுடா உனக்கு!   வீட்டுக்கு எடுத்துப் போகலாமுன்னதும் சீனிவாசன் ஓடிப்போய் காரில் வச்சுட்டு வந்தார்.

பால்பாயஸத்துக்கு  இங்கே  கதை(யும்) உண்டு. இதுலேயும் பல வகைகள் உண்டு, கேட்டோ!   இப்ப ஒரு ரெண்டண்ணம் காணாம்.

அதுக்கு முன்னே ஸ்ரீ க்ருஷ்ணன் இங்கே வந்த விவரம் சொல்லணுமே!

வில்வமங்களம் ஸ்வாமிகள் ன்னு ஒரு  பக்தர் இருந்துருக்கார். அவருக்குக் குருவாயூரப்பன்  'கண்கண்ட'தெய்வம். நினைச்சப்பல்லாம்  இவருக்குப் பிரத்யக்ஷமாவானாம்! ஒரு சமயம் இவரும், இந்தப் பகுதியை அரசாண்ட  செம்பகஸேரி ராஜாவும் ஒரு ஆற்றிலே படகில் போய்க்கிட்டு இருக்காங்க.  கரைக்குப் பக்கமா  தண்ணீரில் இருக்கும் ஒரு ஆலமரத்தைக் கடக்கும் சமயம் காதுக்கு இனிய புல்லாங்குழல்  இசை  கேக்குது அப்போ!  என்ன ஏதுன்னு சுத்தும்முத்தும் பார்க்கும்போது ஆலமரத்தின் ஒரு கிளையில் க்ருஷ்ணன்  உக்கார்ந்து  குழலூதிக்கிட்டு இருக்கான். இந்தக்  காட்சி வில்வமங்கலம் ஸ்வாமிகளுக்கு மட்டும் தெரியுது. 'அதோ க்ருஷ்ணன்'னு சொல்றார். ராஜாவுக்கு  ஒன்னுமே புலப்படலை. தனக்கும்  காட்சி கொடுக்கணுமுன்னு வேண்டியதும்  அவருக்கும் தரிசனம்  கிடைச்சது.

உடனே அங்கே  க்ருஷ்ணனுக்கு ஒரு கோவில் கட்டலாமுன்னு  அந்தப் பகுதி நிலத்துக்குச் சொந்தக்காரரிடம் ஒரு தொகை கொடுத்து நிலத்தை வாங்கி அங்கே கோவில் ஒன்னு கட்டிட்டார். புழைக்குப் பக்கம் அம்பலம்!  அம்பலப்புழா!  (புழை = ஆறு.அம்பலம் = கோவில்)  இந்த ஆலமரம் இன்னும் கோவிலுக்குப் பின்புறம் 'கணபதி ஆல்'என்ற பெயருடன் இருக்கு.

சம்பவம் நடந்தது பதினேழாம் நூற்றாண்டில். மாடு மேய்க்கும்  கண்ணன்  சிலையை உள்ளே ஸ்தாபிக்கலாமுன்னு  சிலை செய்யறாங்க.  சிலை செஞ்சு முடிஞ்சபிறகு  ஒரு நம்பூதிரி வந்து பார்த்து, சிலையில் குறைபாடு இருக்குன்னு சொல்றார்.  "என்ன குற்றம் கண்டீர்?  நிரூபியும்!"  இதோன்னு  ஒரு கைப் பக்கம் லேசா விரலால் தட்டியதும், அந்தச் சிலையின் கை உடைஞ்சு விழுந்துருது:(

இன்னொரு புதுச்சிலை இப்போ வேணுமே! குறிச்சி என்னும் பகுதியில் சிலை கிடைக்கும் என்று தகவல். அங்கத்து ராஜாவுக்கும் செம்பகஸேரி ராஜாவுக்கும் எதோ விரோதம். பேச்சு வார்த்தை கிடையாது. பணிக்கர் ஒருவர்  அங்கிருந்து  சிலையைக் கடத்திக்   கொண்டு வந்துடறார். ஆனால் மாடு மேய்க்கும் கண்ணனா இல்லாமல் பார்த்தஸாரதியா இருந்துருக்கு ! பகல் நேரத்தில் சிலையை யாருக்கும் தெரியாமல்  எங்கேயாவது  ஒளிச்சு வச்சுக்கணுமேன்னு பார்த்தால் 'இட்டித் தோமன்'என்ற கிறிஸ்தியானி வீட்டில்  இடம் கிடைச்சுருக்கு. இப்பவும்  அந்த வீட்டில் க்ருஷ்ணன் ஒளிஞ்சுருந்த அறையைப் புனிதமாகக் கருதி தினமும்  அங்கே  தீபம் ஏற்றி வைக்கிறாங்க(ளாம்)

பணிக்கர் குடும்பத்துக்கு கோவிலில் தனிப்பட்ட  மரியாதையும் கோவிலுக்குத் தலைமைப் பொறுப்பான கொய்மா என்னும் பதவியும்  கிடைச்சு, அவர் வாரிசுகளுக்கு  இப்பவும்  தொடர்ந்தே வருதுன்னு கேள்வி.

கோவிலுக்கு தரிசனம் செய்ய வந்த செம்பகஸேரி ராஜா, வில்வமங்கலம் ஸ்வாமிகளிடம் 'க்ருஷ்ணனை தனக்கும் காமிக்கணும்'என்று விண்ணப்பிக்க, 'என் கையைப் பிடிச்சுக்கோ'ன்னாராம். கையைப் பிடிச்சதும் கண்ணன் தெரிஞ்சானாம். உடனே தன் அரசு முழுவதும்  ஸ்ரீ கிருஷ்ணனுக்கே  சொந்தமுன்னு அறிவிச்சு, அவன் பிரதிநிதியா 'தேவ நாராயணன்'என்ற பெயரைத் தன் பெயருக்கு முன்னால் சேர்த்துக்கிட்டு ஆட்சி செய்யறார்.  இப்பவும் அவர் வாரிசுகளில் முதல் மகன்கள்,  தேவநாராயணன் என்ற பெயரோடுதான் இருக்காங்க. (திருவனந்தபுரம்  அரச வம்சமும் பத்மநாப தாஸர் என்னும் பெயரோடு இருப்பது நினைவுக்கு வருது)

சிலையை பீடத்தில் வைக்கும்போது  சமநிலை இல்லாமல் ஒரு பக்கம் சாயுது. அப்போ அங்கே வந்த  முனிவர் ஒருவர்  ஒரு வெத்திலையை அடிப்பாகத்தில் வச்சதும்  சிலை ஆடாமல் அசையாமல் பொருந்தி நின்னுருக்கு. அதனால்  இந்தக் கோயிலுக்குத் தாம்பூலப்புழான்னு பெயர்  ஏற்பட்டு அது மரூவி  அம்பலப்புழான்னு  வந்துருச்சுன்னும் ஒரு கதை உண்டு.

சாக்ஷாத் ஸ்ரீ கிருஷ்ணனே, அர்ஜுனனுக்குக் கொடுத்த மூணு சிலைகளில்  இதுவும் ஒன்னு என்றும் கேள்வி. கோவில்களில் கதைக்குப் பஞ்சமா என்ன?

சரி.இப்போ பால்பாயஸத்தைப்  பார்க்கலாம். தினமும் 100 லிட்டர் பாயஸம் செஞ்சு  ஸ்ரீகிருஷ்ணனுக்கு நிவேதனமாப்  படைச்சுட்டு, அப்புறம் பிரஸாதமா பக்தர்களுக்கு விநியோகம் செய்யறாங்க. ஆதிகாலத்தில் ரொம்ப முக்கியப்பட்டவர்களுக்கு மட்டுமே கிடைச்சுக்கிட்டு இருந்த  இந்தப் பால்பாயஸத்தை 1959 ஆம் ஆண்டு முதல் பக்தர்களுக்கு ஒரு சிறிய தொகைக்கு விற்பனை செய்ய ஆரம்பிச்சுருக்கு தேவஸ்தானம். ஆரம்பத்தில் 32  ரூபாய்க்குக் கிடைச்சுக்கிட்டு இருந்தது இப்போ  விலைவாசி காரணம் 100க்கு வந்துருக்கு.

பால்பாயஸத்தினு காத்திரிக்கும்  மனுஷ்யர்!  இப்படி இல்லாமல் நாம் போன நேரம் கவுண்ட்டர்  காலி!  இது சுட்டபடம்.

இந்தப் பாயஸத்தின் சுவைக்காகவே ஸ்ரீ குருவாயூரப்பனும், திருவார்பு  ஸ்ரீ க்ருஷ்ணனும்  தினமும்  உச்சி பூஜை சமயம் இங்கே வந்து போறாங்கன்னு ஒரு ஐதீகம்!

தினமும் காலையில் குளிச்சு முடிச்சு வெண்ணிற ஆடைகள் அணிஞ்ச  பெண்கள் , கோகுலத்தின் கோபிகைகள் போல பால்குடங்களை ஏந்தி  கோவிலுக்குக் கொண்டுவந்து தர்றாங்க.

கோவிலுக்குள் மணிக்கிணறு ஒன்னு ப்ரகாரத்தில் இருக்கு.பாயஸத்துக்குத் தண்ணீர் இதுலே இருந்துதான். பாலின் அளவைப்போல் நாலு மடங்குத் தண்ணீரைச் சேர்த்து , ஒரு பிரமாண்டமான வெங்கல உருளியில் வச்சு விறகடுப்பு மூட்டி  காய்ச்சறாங்க. அஞ்சு மணி நேரத்தில் எல்லாத் தண்ணீரும் வத்திப்போய் பால்மட்டும் மீந்துருக்கும் சமயம் நல்லாக் கழுவி வச்சுருக்கும் அரிசியைப்போட்டு வேகவைக்கணும். முக்கால் மணிக்கூறு ஆனதும்  'வாசுதேவா'ன்னு  பெருமாளைக் கூப்பிட்டபடி கண்டசாரி சக்கரையை (இது ஒருவிதக் கல்கண்டுன்னு நினைக்கிறேன்) சேர்த்து  பாயஸம் செஞ்சு முடிக்கறாங்க.  மொத்தம்  6 மணி நேரமாகுதாம்.

 சமீப காலமா விறகடுப்புக்குப் பதில் கேஸ் அடுப்பில்  பாயஸம் செய்யறாங்கன்னு சொன்னாங்க.

PIN குறிப்பு: பதிவின் நீளம் கருதி  நம்ம க்ருஷ்ணனை ரெண்டாப் பிரிச்சுட்டேன்.  அடுத்த பகுதியை நாளைக்கே  போட்டால் ஆச்சு. ஸ்பெஷல் க்ளாஸ்:-)

தொடரும்...........:-)




சின்னக்கண்ணன் சிரிக்கிறான்! ( மூன்று மாநிலப் பயணம்- தொடர் : 38)

$
0
0
அம்பலப்புழா ஸ்ரீ க்ருஷ்ணன் :   தொடர்ச்சி............

ஆமாம்... அது என்ன பால்பாயஸம் இங்கே  ஃபேமஸ் ?  திருப்பதி லட்டு மாதிரியா?  கதை  இருக்கணுமே? இருக்கோ?  இருக்கே:-) அதுவும் ரெண்டு வகை!

ஒரு சமயம் பஞ்சம் வந்து தவிக்கும்போது,   செம்பகசஸேரி  ராஜா,   வேற ஒருவரிடமிருந்து  ஏகப்பட்ட  நெல்லைக் கடனா வாங்கிக்கிட்டார்.  அப்புறம் ரொம்ப நாளுக்கு அதைத் திருப்பித்தர  முடியலை.  பொறுத்துப் பார்த்த கடன்கொடுத்தவர்  ஒருநாள் கோவில் முற்றத்தில் நின்னுக்கிட்டு,  ஸ்வாமி தரிசனத்துக்கு  வந்த ராஜாவிடம் 'என் கடனை உடனே திருப்பித்தரணும். இல்லாட்டி கோவிலுக்குள் போய்  சாமி கும்பிட விடமாட்டேன்'றார். ராஜாவுக்கோ அப்போ நிலமை சரி இல்லை. வாங்குன கடனைத் திருப்பிக்கொடுக்க ராஜாவுக்கே கஷ்டமுன்னா பாருங்க!


மந்திரி 'பாறையில் மேனோன்'ஆலோசனைப்படி தன் குடிமக்களில் எல்லோரும்  தங்களிடம் இருக்கும் நெல் சேமிப்பைக்  கொடுக்கணும்  என்று உத்தரவாச்சு.   கொஞ்ச நேரத்துலே நெல்மூட்டைகள் வந்து கோவில் முற்றத்தில் இறங்குது. மூட்டைகளைப் பிரிச்சு கொட்டறாங்க.


யானைக்கொட்டில்  வரைக்கும்  நெல்லோ நெல்லு! மொத்தம்  முப்பத்தி ஆறாயிரம்  மரக்கால் நெல்லு. இங்கே பற என்று ஒரு அளவை. (நிறபறயும் நிலவிளக்கும் மங்கலச் சின்னங்கள். மரியாவில்  கூட முற்றத்தின் ஓரத்தில் ஒன்னு இருக்கே!)

இவ்ளோ நெல்லையும்  பகல் உச்சிப்பூஜை நேரத்துக்குள் கொண்டு போயிடணும், இல்லைன்னா பெரிய தண்டனை  கிடைக்கும் என்று கடன் கொடுத்தவரிடம் சொன்னாங்க. அவருக்கு உதவி செய்யவும் யாரும் முன்வரலை. நேரமோ போய்க்கிட்டே இருக்கு.  என்ன செய்யறதுன்னு திகைச்சவர்,  எல்லா நெல்லையும் கோவிலுக்கே தானம் செஞ்சுட்டார்!  அவ்ளோ நெல்லைக் கோவிலும்தான் என்ன செய்யும்? அதான் தினமும் பால்பாயஸமா  நிவேத்தியம்  செய்ய ஆரம்பிச்சாங்க(ளாம்)


அந்த ராஜா ஒரு அப்பாவி போல! இப்பக் காலமுன்னா...  ஜனநாயக ராஜாக்கள், அடியாட்களை அனுப்பிக் கடன் கொடுத்தவரை மேலே அனுப்பி இருப்பாங்க.

அடுத்த வெர்ஷன் கதை இது:

செம்பகஸேரி ராஜாவுடன்,  ஒரு முனிவர்  சதுரங்கம் விளையாடப் பந்தயம் கட்டறார். பந்தயப்பொருளை நீங்களே சொல்லுங்கன்னு ராஜா கேட்க, நானே ஒரு சாமியார். எனக்கெதுக்கு  விலை உசந்த பொருள்? நெல்மணிகளே போதும். சதுரங்கப் பலகையில் முதல்கட்டத்துக்கு  ஒரு நெல், ரெண்டாம் கட்டத்துக்கு  முந்திய கட்டத்தில் இருப்பதைப்போல் ரெண்டு மடங்கு . இப்படியே ஒவ்வொரு கட்டத்துக்கும் ரெட்டிப்புன்னு சொன்னதும் ராஜா சம்மதிச்சு ஆட்டம் தொடங்குது. ராஜா தோற்றுப்போறார்.

நெல்மணிகளைக் கொண்டுவந்து அடுக்கறாங்க. ஒவ்வொரு கட்டத்துக்கும் ரெட்டிப்புன்னு போகுது. கடைசியில் கட்டங்கள் பாக்கி இருக்க  அரசாங்கத்தில் இருக்கும் நெல் இருப்பு தீர்ந்து போயிருது. அப்பதான் ராஜாவுக்கு  இந்த சாமியார் மனுஷனில்லைன்னு தோணுது. அதுக்கேத்தபடி  வந்தவர் ஸ்ரீ க்ருஷ்ணனாக இருக்கார்!!!

தோற்றுப்போன ராஜாவிடம், 'உடனே நெல்மணிகளைத் தரணுமுன்னு நிர்பந்தமில்லை.  பால்பாயஸம் தினமும் எனக்கு நிவேத்யம் செஞ்சு அதை  கோவிலுக்கு  வரும் யாத்ரீகர்களுக்கு இலவசமாக் கொடுத்துரு. இப்படியே கடன் தீரும்வரை செய்'யுன்னு சொல்லி மறைஞ்சாராம்.

எப்படி வசூலிக்கணுமுன்னு அவனுக்குச் சொல்லியா கொடுக்கணும்:-)  நான் நினைக்கிறேன்...... அந்த இலவசமே  கூட  இப்பக் கட்டுப்படி ஆகலைன்னு.  போகட்டும்.....

பாயஸம் கிடைச்சதே அதிர்ஷ்டம்.  அதைப் பாராட்டாம இப்படிச் சொல்ல வந்துட்டான்னு  க்ருஷ்ணன் நினைச்சுக்கப் போறான்!

கருவறைக்கு முன் நின்னு  பார்த்தஸாரதியை நல்லா தரிசனம் செஞ்சுக்கிட்டோம். குடும்ப நலன், பதிவர் நலன்,  மகளின் செல்லம்  இப்படி  எல்லோருக்காகவும்  ப்ரார்த்திச்சேன். என்னுடைய  உபிச இரா முவை அந்த விநாடி  நான் நினைச்சுக்கிட்டேன் என்பதே உண்மை.  எண்டே க்ருஷ்ணா....  ரக்ஷிக்கணே! அவருடைய  விஸ்வரூபம் ( நாவல்  ) இந்தக் கிருஷ்ணன் சந்நிதியில் இருந்துதான் தொடங்கும்! அரசூர் வம்சத்தின்  ரெண்டாம் பாகம் என்றாலும் தனி நாவலாகவும் வாசிக்கலாம்!   என்ன ஒரு எழுத்துன்னு  அதிசயப்பட்டு நிற்கத்தான் முடியுது என்னால்!

தினமும் அதிகாலை மூணு மணிக்குக் கோவிலைத் திறந்துடறாங்க. பகல் பனிரெண்டே கால் முதல் பனிரெண்டரைவரை  உச்சிகால பூஜை.பால்பாயஸ நிவேத்யம். பனிரெண்டே முக்காலுக்கு நடை சாத்தல்.  திரும்பவும் மாலை அஞ்சுக்குத் திறந்து  இரவு எட்டு அம்பத்தியஞ்சுக்கு நடை சாத்தல்.  அது என்ன....ஒன்பதுன்னு வைக்கக்கூடாதா? என்னமோ போங்க.

செம்பகஸேரி ராஜா வம்சம் 450 ஆண்டுகள் ஆட்சியில் இருந்துருக்காங்க. அப்புறம் பதினெட்டாம் நூற்றாண்டின் நடுவில் மார்த்தாண்டவர்மா  படையெடுத்து வந்து  நாட்டை திருவாங்கூரோடு சேர்த்துட்டார்.

திப்பு சுல்தான்  காலத்துலே  கோவில்களுக்கு ஆபத்துன்னு  நம்ம குருவாயூரப்பனே இங்கே அம்பலப்புழா கோவிலில் வந்து  அடைக்கலமாகத் தங்கி இருந்தானாம். அதனால் இந்தக் கோவிலுக்கு தென் குருவாயூரென்ற சிறப்பும் இருக்குது.

வருசத்தில்  துலா மாசம் (ஐப்பசி) தவிர மற்றெல்லா மாசங்களிலும்  எதாவது ஒரு  உற்சவம் நடந்துக்கிட்டே இருக்கு. துலா வர்ஷம் (ஐப்படி அடைமழைக் காலம்) தான் காரணமுன்னு நினைக்கிறேன்.

கோவிலின் வெளிப்ரகாரத்தில் இருக்கும் ஓலைக்கூரை மண்டபத்தின் நடுவில் ஒரு  பெரிய கடம் போன்ற மிழவு வச்சுருக்காங்க.இது குஞ்சன்றே மிழவுன்னு எழுதிப்போட்டுருக்கு. பெரிய பானை வடிவில் இருக்கும் இதன் சின்ன வாயிலே  மேளம் போல் தோல் கொண்டு செஞ்ச இழுத்துக் கட்டிய  மூடி!


கிபி 1705 ஆண்டு முதல் 1770 வரை வாழ்ந்திருந்த குஞ்சன் நம்பியார், கோவிலில் நடக்கும் சாக்கியார் கூத்து என்ற  புராணக்கதைகளைச் சொல்லும் கூத்தில் முதல்முதலாக 'துள்ளல்'என்ற வகையை அறிமுகப்படுத்தினவர்.  நகைச்சுவையோடு இருக்கும் இந்தவகை, மக்களால் அதிகமாக விரும்பிப் பார்க்கப்பட்டது  உண்மை!  இப்ப நடக்கும் 'ஓட்டம்துள்ளல்(வாசுதேவன் நாயர்)' பார்த்திருந்தாலும் இந்த துள்ளல் பார்க்கலையேன்னு இருக்கு எனக்கு:(



தேனியைச் சேர்ந்த  பெரியவர் குமாரன் அடிக்கடி இங்கே வர்றாராம்.   வந்தால் ஒரு  ரெண்டு மாசம் தங்கல். சொந்தம் ஊர் இதுதானாம். சின்ன வயசில்  ஏலத்தோட்ட வேலைக்குப் போனவர். அவரிடம் கொஞ்சநேரம் கதை பேசிக்கிட்டு சில விவரங்கள் தெரிஞ்சுக்கிட்டேன்.  அசப்பில் எங்கப்பா ஜாடை இருக்குன்னு ஒரு தோணல்,கேட்டோ!




  கோவில் கருவறை வெளிப்புறச்சுவர்களில் வச்சுப் பிடிப்பிச்சு இருக்கும் பித்தளை அகல்களில்  சாயரக்ஷைப் பூஜைக்குமுன் எண்ணெய் ஊற்றும் வேலை ஆரம்பிச்சு இருந்தது. எல்லா விளக்குகளும் எரியும்போது ஜகஜ்யோதியா இருக்கும். கொஞ்ச நேரம் காத்திருந்து பார்த்திருக்கலாம்.  ஆனால்  மணி இப்போ அஞ்சரை.  ரொம்ப இருட்டுமுன் மரியா போய்ச் சேரலாமுன்னு எண்ணம். இன்றைக்கு ரொம்பவே சுத்தியாச்சு.   புது இடம்வேற!  சீனிவாசனுக்கு ஓய்வு கொடுக்க வேணாமா?


கோவில் கடைகளுக்கு வந்தோம்.  எதை வாங்கன்னு மனசுக்குள் ஓயாத போராட்டம். நமக்கு எடையும் குறைவா இருக்கணும், விலையும் குறைவா இருக்கணுமே:-)  கொஞ்சம் பெரிய சிலைகள் என்றால் மூக்கும் முழியும் அழகா இருக்கும்.  சின்னதில் அந்த அழகு வருமா?  தேடித்தேடி ஒரு க்ருஷ்ணனைக் கண்டுபிடிச்சேன்.  ஒரு அடி உசரம். களிமண் பொம்மை இல்லை. ஃபைபராம்.  காத்துப்போல் லேசு!



பச்சை முகம் =  சாத்வீகம். எனிக்கு இது  இஷ்டப்பெட்டூ:-)

இப்ப இது  காத்தாகிப்போனதால்  கொஞ்சம் வெயிட் இருக்கட்டுமேன்னு ஒரு ஆடும் கதகளி.  நல்லா பொதிஞ்சு கொடுத்தாங்க. படங்கள் எல்லாம் ரொம்பவே அழகு.

  இடப்பிரச்சனை இருக்கே நமக்கு:( ஃப்ரெம் போடாமல் கிடைக்கும்தான்.  இங்கே நியூஸியில்   ஃப்ரேம் போட்டுக்க வீட்டை வித்தால்தான்   முடியும்.
அரைமணியில் ஆலப்புழா வந்து சேர்ந்தோம். ஏடிஎம் தேடி ஒரு பத்து நிமிச அலைச்சல். அதென்னவோ பத்தாயிரம்தான் லிமிட்டாமே:(   கொஞ்சம் கூடக்கொடுத்தால் என்ன?  மரியா வந்து சேர்ந்தபோது  இன்னொரு அரை மணி ஆகி இருந்துச்சு. ஆறே முக்கால்.

'பால்பாயஸம் கிட்டியோ, கிட்டியோ'ன்னு ரெமாவுக்கு   ஆச்சரியம்!  லேசாச் சுடவச்சு எல்லோரும் எடுத்துக்கலாமுன்னு சொன்னேன்.  'வீட்டுக்குக் கொண்டு போகலையா'ன்னாங்க? இன்றைக்கு இதுதானே நமக்கு வீடு இல்லையோ!

பாயஸம் சாப்பிடும்போது நண்பர்கள் உறவினர்கள் பதிவுலக மக்கள்  இப்படி எல்லோரையும் நினைச்சுக்கிட்டேன். கூடவே நம்ம இராமுவையும்தான்.
கொஞ்ச நேரம் ரெமாவை ஃபொட்டாக்ராஃபர் ஆக்கினேன்:-)  கொஞ்சநேரம் அவுங்களோடு பேசிக்கிட்டு இருந்தோம்.


அத்தாழத்தினு சப்பாத்தி,கூடவே  கொஞ்சம் சோறும் பருப்பும். உருளைக்கிழங்கும் பீன்ஸும் போட்டு ஒரு ஸ்ட்யூ. (தேங்காப்பால்  சேர்த்த வகை)  தயிர்பச்சடி (அத்தாழம்= டின்னர்)


நாளைக் காலைக்கு என்ன ப்ரேக்ஃபாஸ்ட்ன்னு கேட்டாங்க.  தோசை உண்டாக்கட்டே?  வேண்டாம். புட்டு மதி. புட்டும் கடலையும்  சரியா?

"வேணவே வேணாம். புட்டும் பழமும் ஓக்கே!  யார் இந்த புட்டும் கடலையும், அடையும் அவியலும் எல்லாம்  காம்பிநேஷன்  போட்டு வச்சது?  ரொம்ப  ஹெவியா  இருக்காதா என்ன? "

'எட்டரைக்கு  ரெடியாகிருமுன்னு சொன்னாங்க. சமையல் ஆள் வீட்டுக்குப் போயிட்டு காலையில் வருவாங்களாம்.  ரெமா இங்கேயே தங்குறாங்க.  ரெண்டு வாரத்துக்கு ஒருநாள்  வீட்டுக்குப்போய் வருவாங்களாம். ஒரே மகள்.  கல்லூரியில் கடைசி வருசப் படிப்பு.
வலை மேய்ஞ்சு , மெயில் பார்த்துட்டு, மகளுக்கு  மெயில்கள் அனுப்பின்னு  நேரம் போயிருச்சு.


காலையில் சீக்கிரமா எழுந்தால்  நல்லது. நம்ம 108 லிஸ்ட்டுலே இருக்கும்  கோவிலுக்குப் போகலாம். அம்பலப்புழா ஸ்ரீ  க்ருஷ்ணனும், அவன் பாயஸமும்  இவ்வளோ புகழ்பெற்றவை  என்றாலுமே   இந்தக் கோவில் திவ்யதேசக் கோவில்கள் பட்டியலில்  கிடையாதாக்கும், கேட்டோ!

தொடரும்.......:-)

PINகுறிப்பு: கோவில்  படங்களை  அங்கங்கே போட்டு வச்சுருக்கேன். பார்த்துக்குங்க.

இப்படி ஒரு பாச மழையா? என்ன ஆச்சு இவுங்களுக்கு?

$
0
0
பயணம் உடலுக்கும் உள்ளத்துக்கும் நல்லது. ஆதலினால் பயணம் செய்வீர்  என்பது துளசிதளத்தின்  கொள்கைகளில் ஒன்னு:-)  ஏற்கெனவே சொல்லி இருக்கேன், ஞாபகம் இருக்கோ?  ஆனால் அது பெரூசா இருக்க வேண்டிய அவசியமே இல்லை.  ஜஸ்ட் காலையில் போய் மாலையில் திரும்பும் டே ட்ரிப் (Day Trip) ஆகவும் இருக்கலாம். முக்கிய நோக்கம் இடமாற்றம். ஒரே இடத்துலேயே எப்பவும் இருக்க நாம் என்ன மரமா?

எங்களுக்கு ஈஸ்ட்டர் சமயம் எப்பவும் நாலுநாள் லீவு  கிடைக்கும்.  இந்த ஈஸ்ட்டர் வேற, எப்பப் பார்த்தாலும்  ஞாயித்துக்கிழமையே வருது பாருங்க:-) அதனால்  அந்த ஞாயிறு வழக்கமான வார விடுமுறையா ஆகிப்போகுதேன்னு  அதுக்குப் பதிலா இன்னொருநாள் சேர்த்து திங்களுக்கும் அரசு விடுமுறை தர்றாங்க.

சம்மர் முடிஞ்சு  ஆட்டத்தில் (Autumn)இருக்கோம். தோ.....குளிர் வந்துக்கிட்டே இருக்கு.  அதைத் தாங்கறதுக்குச் சார்ஜ் ஏத்திக்கணும் இப்போது:-)  எங்காவது போகலாமான்னு  பார்த்தப்ப  'ஏர் நியூஸீலாந்து  மலிவு விலையில் டிக்கெட் தர்றோம்.  உள்நாட்டுலேயே ஊருக்குப் போங்க'ன்னு தினமும்  வந்து சொல்லிக்கிட்டே இருக்கான்.  கணினி திறந்தால் போதும்.... 'ஊருக்குப்போ....ஊருக்குப்போ.'


நம்மகிட்டே வேற ஏர் பாய்ண்ட்  கொஞ்சம்  இருக்கு. அதை எங்கே  பயன்படுத்தாமக் காலாவதி ஆகிடப் போகுதோன்னு  ஒரு சின்னப்பயணத்துக்கு ரெடி ஆனோம்.  வெள்ளிக்கிழமை  முதல்  திங்கள் வரை லீவுதான் என்றாலுமே....  குட் ஃப்ரைடே  கடைகண்ணிகள் எல்லாமே மூடிக்கிடக்கும் என்பதால்  சனிக்கிழமை காலை போயிட்டு திங்கள் இரவு  திரும்பலாமுன்னு  முடிவு செஞ்சோம். குட்ஃப்ரைடே அன்னிக்கு எங்கூர் டிவியில்  விளம்பரம் கூட வராது! வியாபாரம் எந்த வழியிலும் கூடவே கூடாது:-)

தலைநகரத்துக்குப் போகலாம்.  வெறும் 49 டாலருக்கு ஒன் வே   டிக்கெட் கிடைச்சது.  இது ஆளுக்கு மட்டும்.  பொட்டி கொண்டு போகணுமுன்னா இன்னொரு 20 டாலர் தரணும்.  ஓக்கே. ரெண்டு பேருக்கு ஒரு பொட்டி போதுமுன்னு  முடிவு செஞ்சோம்.

ச்சும்மாச் சொல்லக்கூடாது, ஏர் நியூஸீலண்ட் சர்வீஸ்  அட்டகாசம்.  டிக்கெட் புக் பண்ண நாளில் இருந்து  வாரம் ஒருக்கா இமெயில் அனுப்பிடுவாங்க.  'போற இடத்துலே  எங்கே தங்கப் போறே?  இன்னின்ன  இடம் நல்லா இருக்கு.  புக் பண்ணிக்கோ....   போற இடத்துலே  நடந்தா ஊர் சுத்துவே? கார் வாடகைக்கு எடுத்துக்கோ. இன்னின்ன கம்பெனி  உனக்கு சஸ்தாவா  கார்  கொடுக்கும், பார்த்துக்கோ.....'

"ஈஸ்ட்டர் விடுமுறைக்குப் போறயே... பொன்னுத்தாயி. அப்ப பள்ளிக்கூட லீவு வேறவருதே. உனக்குத் தங்க இடம் கிடைக்காமக் கஷ்டப்படப் போறே.  சீக்கிரம்  தங்க இடம் பார்த்துக்கோ."

சொந்தக்காரங்க கூட இவ்ளோ கரிசனமாக் கவலைப்பட்டுக் கேக்கமாட்டாங்க! இப்படி ஒரு பாச மழை  பொழியறாங்களே!    என்ன ஆச்சு இவுங்களுக்கு?

பிடுங்கல் தாங்காம வலையிலே தேடி   ஹொட்டேல் அறை, வண்டி ரெண்டும் ஏற்பாடு செஞ்சோம். ஏர்ப்போர்ட்டுலே காரை பிக் பண்ணிக்கிட்டு திரும்பி வரும்நாள்  அங்கே ஏர்ப்போர்ட்டிலேயே  வண்டியைக் கொண்டுவந்து சேர்த்துடறதுன்னு ஏற்பாடு. என்ன வண்டி வேணுமுன்னதுக்கு  இப்ப நம்ம கிட்டே இருக்கும் இதே மாடல் வண்டியே போதுமுன்னு  சொன்னோம்.  தெரிஞ்ச பேய், பெட்டர் இல்லையோ?

கிளம்ப ஒரு வாரம் இருக்கும்போது , நம்ம ஃப்ளைட் விவரங்கள் (எல்லாம்  ஏற்கெனவே அனுப்பி இருந்த  ஐட்டினரியை)  திரும்ப ஒருவாட்டி அனுப்பினாங்க.  கிளம்ப  மூணு நாளிருக்கும்போது ஊருக்குப்போக மறந்துடாதே. காலை இத்தனை மணிக்கு  உனக்கு  ஃப்ளைட். அங்கே நீ தங்கும் நாட்களில் இன்னின்ன மாதிரி காலநிலை இருக்கப்போகுது, அதுக்குத் தகுந்தாப்புலே  உடைகளைக் கொண்டு போய்க்கோன்னு  மூணுநாளைக்கான  வெதர் ஃபோர்காஸ்ட் வேற  வந்துச்சு. Travel Tips!

 உடனே குடையை எடுத்துப் பொட்டியில்  வச்சோம்:-)

கிளம்பறதுக்கு முதல்நாள்....  'ஆன்லைன் செக்கின் ஓப்பன் ஃபார் யூ.   இப்பவே செக்கின் பண்ணிக்கோ'. பயங்கர  சர்வீஸால்லே இருக்கு:-)  வெத்தலை பாக்கு மட்டும் இங்கே  கிடைக்கும் பக்ஷத்தில்  வீட்டுக்கு வந்து  எழுப்பி, குளிப்பாட்டிவிட்டு,   அழைச்சுப்போய்  ஏர்ப்போர்ட்லே ப்ளேன்லே ஏறுமுன் ஆரத்தி எடுத்துருப்பாங்க போல!

இங்கே நம்மூரில் இப்பெல்லாம் செக்கின்கூட செல்ஃபீ ஆகிருச்சு.  அது ஒன்னும் ப்ரச்சனையே இல்லை. நாளைக்குப் பார்த்துக்கலாமுன்னு இருந்தோம்.


ரஜ்ஜுவை வீட்டுலேயே விட்டுட்டுப் போறதாகவும், மகள்  ரெண்டு நேரம் வந்து சாப்பாடு கொடுத்துடணும் என்ற ஒப்பந்தம். அதேபோல நம்மை ஏர்ப்போர்ட்டுக்குக் கொண்டு போய் விட்டுட்டு, திரும்பி வரும் நாளில்  பிக்கப் செஞ்சுக்கணுமுன்னு துணை ஒப்பந்தம் போட்டாச்:-)

சனிக்கிழமை பயணநாளும் வந்தாச்சு. நம்ம ரஜ்ஜுவுக்கு மட்டும் என்னமோ சந்தேகம். வீட்டுலே என்னவோ நடக்குதுன்னு. தயாரா எடுத்துவச்ச பொட்டிக்குப் பக்கத்தில் போய்  உக்கார்ந்துக்கிச்சு. பாவம்....  குழந்தை!

காலை எட்டே  முக்காலுக்கு மகள்  வந்து கூட்டிப்போய்  விமானநிலையத்தில் இறக்கிவிட்டாள். பத்தே நிமிச ட்ரைவ்தான்.  செல்ஃப் செக்கின் செஞ்சபின், நம்ம கோபால் தயவில் கோரு க்ளப் லவுஞ்சில் (ஏர் நியூஸிலாண்ட் Koru Club Lounge ) போய்  காலை ப்ரேக்ஃபாஸ்ட் முடிச்சுக்கிட்டு விமானம் ஏறினோம்.

புது விமானம். கால் நீட்டிக்க நிறைய இடம் விட்டு, இருக்கைகளை அமைச்சுருக்காங்க. மொத்தம் 52 விமானங்கள்  ஏர் நியூஸிலேண்ட்  வச்சுருக்கு. இன்னும் ஒரு 13  வாங்கும் திட்டமும் இருக்காம்.  இந்த வருசம்  இவுங்க 75 வது ஆண்டுவிழாவைக் கொண்டாடுறாங்க.  அதிக பட்சமா  விமானத்தை  ஒன்பது வருசத்துக்குமேல் வச்சுக்கறதில்லைன்னு பேச்சு.

வெளிப்புற டிசைனைக்கூட  மாத்திக்கிட்டு இருக்காங்க. பழைய நீலம்   ஒன்னோ ரெண்டோதான்.

 சரியான நேரத்துக்குக் கிளம்புன விமானத்தில்  வழக்கமா காமிக்கும் பயணிகள் பாதுகாப்பு குறிப்புகளைக் காமிக்க, ஹாபிட் (Hobbits) மக்கள்ஸ் வந்து, ஆக்ஸிஜன் மாஸ்க்,  லைஃப் ஜாக்கெட்ன்னு    சமாச்சாரம் எல்லாம் சொல்றாங்க. கடைசியில் 'எல்லாம் கவனிச்சுப் பார்த்துவச்சுக்கிட்டீங்கதானே?  உங்கள்  பயணம் சிறக்கட்டுமு'ன்னு வந்து சொன்னது எங்க பீட்டர் ஜாக்ஸன்:-)

எங்கூரைக் கீழே விட்டுட்டு நாங்க மட்டும் மேலே  போறோம்:-)

உள்ளூர் பெரிய ஆறு,  கடலில் கலக்கும்  இடம்!

அரைமணி நேரம் பறக்கிறோம். ஏத்தி இறக்கன்னு எல்லாம் சேர்ந்து ஒரு முக்கால்மணிநேரம்.


மிடில் ஆஃப் த மிடில் எர்த்!  இது வெலிங்டன் விமான நிலையத்தின் பெயர்!  உலக அரங்கில்  இந்நாட்டுக்குப் பெயர் வாங்கித் தந்த படைப்பு!   கோஷம் போட்டுக்கறேன்....லார்ட் ஆஃப்  த ரிங்ஸ், புகழ் ஓங்குக!!!! ஹாபிட்ஸ் புகழ்  இன்னும் ஓங்குக!!!!

 அரசியல்வியாதிகளின் பெயர்கள் வைக்கும் கலாச்சாரம் நல்லவேளையா இந்த நாட்டுக்கு இன்னும் வரலை!  பொதுமக்கள் காசுலே ஒருவியாதி கட்டுனதுக்கு  ஒரு வியாதியின் பெயரை வைப்பது. அடுத்த வியாதி வந்தால் பொதுமக்கள் காசுலே கட்டுனது என்றதை  வசதியா மறந்துட்டு,  அதைப் புறக்கணிச்சு  தங்களுக்குப் பிடிச்ச வியாதியின் பெயரை  வச்சு  அடாவடி செய்வது என்ற வம்பெல்லாம் இல்லையாக்கும், கேட்டோ!

சின்ன விமானநிலையம்தான். இடப்பற்றாக்குறை இருக்கே!   ஓடுதளம்கூடச் சின்னதுதான். சுத்தி இருக்கும் குன்றுகளுக்கும், அதைத் தொட்டடுத்து இருக்கும்  கடலுக்கும் இடையில்  இருக்கு! இப்பதான் கொஞ்சம் விரிவாக்கிக் கட்ட ஆரம்பிச்சுருக்காங்க.  உழக்கிலே கிழக்கு மேற்கு பார்த்தாப்போல:-)


காத்திருப்புப் பகுதியிலே தலைக்கு மேல் பறக்கும் ராக்ஷஸ  கருடன்கள்!   அநேகமா உங்களுக்கு ஏற்கெனவே பரிச்சயமானவைகள்தான்.


ஏற்பாடு செஞ்சுருந்த வண்டிச்சாவியை வாங்கிக்க  ரெண்டல் கார் பகுதிக்குப்போகும்போது....  செல்லில் சேதி வந்தது.  "வருக வருக.  நான்   விமானநிலையம் வந்து  அழைத்துப்போகவா?"


வடக்குத் தீவின் ஒரே தமிழ்பதிவர், தெற்குத்தீவின் ஒரே பதிவரை வரவேற்கிறார்!!!

தொடரும்...........:-)



அற்புத நாராயணர்! ( மூன்று மாநிலப் பயணம்- தொடர் : 39)

$
0
0
பறவைகளின் ஒலி கேட்டு வழக்கத்தைவிட சீக்கிரமாவே முழிப்பு வந்துருச்சு. கோவிலுக்குப்போய் வந்து  ப்ராதல் (ப்ரேக்ஃபாஸ்ட்) கழிச்சால் ஆச்சு. சட்னு குளிச்சு முடிச்சுக் கிளம்பிட்டோம்.  கூடத்தில் யாருமே இல்லை. அதனால் யாரிடமும் சொல்லிக்காமலே கிளம்பவேண்டியதாப் போச்சு.  அக்கரையில் இருந்து வந்துகொண்டு இருக்கும் பெரிய படகின் பக்கவாட்டில் ட்ரெய்லர் போல் ஒரு மிதவை அமைப்பும்  ஒட்டிக்கிட்டே வருது.  ஏகப்பட்ட சனம் அதுலே!   மக்களை இறக்க  ஏணிப்பாலங்கள் சில தயாராக் கரையிலே கிடக்கின்றன.  தனிப்பட்ட படகிலும் சிலர் வந்துக்கிட்டு இருக்காங்க.



இங்கிருந்து  கோவில் சரியா ஒரு 18.5 கிமீ இருக்கும். நேற்றைக்குப் பகல் செங்கண்ணூரில் இருந்து  மரியா வந்தோம் பாருங்க அதே ரோடில் போய்   செங்கனாச்சேரி பைபாஸ் எடுத்தால்  அங்கிருந்து  2.7 கிமீயில் திருக்கடித்தானம். குரிசடி வரை வந்து  லெஃப்ட் எடுக்கணும். காலை நேரம். ஆறரை மணிதான்.  சூரிய உதயமாகி இருந்தாலும் மேகமூட்டமிருப்பதால்   இதமான  காலநிலை. ரோட்டிலும் கார் நடமாட்டம் அத்தரைக்கு இல்லை. சுகமான  ஓட்டத்தில் அரைமணிக்கூறு.

'த்ருக்கொடித்தானம் மஹாக்ஷேத்ரம்'அலங்கார நுழைவு வாசலுக்குள்ளே போறோம். அலங்கார வாசலின் மேல்பாகத்தில் கருட வாகனத்தில் பெருமாளும் தாயாரும் நடுவில் இருக்க  வலக்கைப்பக்கம் புள்ளையார். இடக்கைப்பக்கம் யார்?  உருட்டு விழிகளும் மீசையும்  நீல உடலும்...  புரியலை. ஆனால் தலையில் இருக்கும் பிறைநிலாவைப்  பார்த்தால்.........  ஒரு வேளை...சிவனோ?  இருக்கலாம்.


அக்கம்பக்கம் ஒன்னும் பார்க்காம ச் சட்னு கோவிலுக்குள் நுழைஞ்சோம். ரெண்டடுக்கு முகப்பும் ரெண்டு பக்கமும் திண்ணைகளுமா இருக்கு.எதோ படங்கள் கூட வரைஞ்சுருக்காங்க. திரும்பி வரும்போது பார்த்துக்கலாம். கொடிமரத்துக் கிட்டே ரெண்டு கோவில் ஊழியர்கள் இருந்தாங்க.  நம்ம கோபால் இதுக்குள்ளே நல்லாவே தேறிட்டார், ஷர்ட்டை க் கழட்டிக் கையில் வச்சுக்கிட்டார்:-) வேட்டியை வண்டியிலே விட்டுருக்காரு போல!



வாசல் கடந்து முன்மண்டபத்து வலப்புறத் திண்ணையிலே  தங்கப் பாவாடை கட்டிய  க்ருஷ்ணன்கள்! குத்துவிளக்கு ஒன்னு அமைதியா எரியுது இவர்கள்முன்னால்.

 வெளியே இருந்து பார்த்தால் சின்னதாத் தெரிஞ்சதே தவிர உள்ளே போனாட்டுப் பார்த்தால் நல்ல பெரிய வளாகம்தான். தங்கக்கொடிமரம் தகதகன்னு ஜொலிக்குது. கொடிமரத்தின் அடிப்பாகத்தில் சுத்திவர கடவுளர்களின் சின்னச்சின்ன  விக்கிரகங்கள் திருவாசியோடு!




பளிச்ன்னு டைல்ஸ் போட்டு  இருக்கும் முன்மண்டபத்தில்  கேரள ஸ்டைல் வாழைப்பூ விளக்கு.தேய்ச்சு மினுக்கிப் பளபளன்னு  இருக்கு! அப்படியே தரையைக் கொஞ்சம் துடைச்சிருக்கக் கூடாதோ?  எறும்புக்கூட்டம் ஏராளம். நெய்விளக்கு காரணமோ என்னவோ?


இன்னொரு சின்ன தீபஸ்தம்பம்  சூப்பர். இதுலே மட்டும் திரிகள் போட்டு விளக்கேற்றினால்  அதி சூப்பரா இருக்கும்.  சாயரக்ஷை பூஜை சமயம்  அடுக்குவிளக்கு  தீப ஆரத்தி எடுக்கும்  அமைப்பு.  ஆனால் பெருசு. கையில் தூக்க முடியாதுன்னு நினைக்கிறேன். பழயகாலத்துப்பொருட்கள்தான் கனம் கூடியதாச்சே! இப்போ போல் தளுக்கா பண்ணிக்க அப்போ யாருக்கும் தெரிஞ்சுருக்காது:-) இந்தச் சதுர பீடத்தில் நாலுபக்கமும் நாகர்கள்!


த்ரிக்கொடித்தானம் கோவில் சங்கணாச்சேரி என்ற ஊரில்தான் இருக்கு. ஆனால் டவுன் வரை போக வேணாம். பைபாஸ் ரோடிலேயே வந்துருது. அடுத்த மாசம் நவம்பர் 27  முதல்  ஆரம்பிச்சு  டிசம்பர் 6 வரை தீபமஹோத்ஸவம் நடக்கப்போகுதுன்னு போர்டு வச்சுருக்காங்க. 10 நாள் உற்சவம்.  நவம்பர் 27 கொடியேற்றம். நாலாம் நாள்  கிழக்கு வாசலில் எழுந்தேல்ப்பு.  பெருமாள்  வந்து  தரிசனம்  கொடுப்பார். கடைசிநாள்  காலை 5 மணிக்கு தீபம் .  10 மணிக்கு ஆராட்டு.

இது என்ன  தீப உற்சவம் என்று கொஞ்சூண்டு ஆராய்ஞ்சால் கிடைத்த விவரம் ஆஹா போட வச்சது உண்மை. ஒரு சமயம் சிவன் , தீப்பிழம்பாக  இந்தப் பகுதியில் தோன்றி இருக்கார். வெப்பம் தாங்காமல்  எல்லா ஜீவராசிகளும் உட்பட  இந்தப்பகுதியே அழிஞ்சு போயிருமோன்னு பயந்த  ப்ரம்மாவும், விஷ்ணுவும்  சிவனை வழிபட்டு வேண்டி நின்னதும்,  தன்னுடைய ஆகிருதியைக் குறைச்சுக்கிட்டு சிறிய தீபமாக ஒளிவிட்டுப் பிரகாசித்தார்.  மனம் மகிழ்ந்த  ப்ரம்மாவும் விஷ்ணுவும் அந்த தீபத்தை வணங்கி ஆசி பெற்றார்கள். இந்த சம்பவம் நடந்த தினம் திருக்கார்த்திகை நாளாக  இருந்தபடியால், கார்த்திகை தீப விழாவை இங்கே இந்தக் கோவிலில் ரொம்பவும் விமரிசையாகக் கொண்டாடறாங்க.

ஒன்பதாம் நாள் உற்சவத்தில் இதுக்கு (சங்கேதம் என்று பெயர்)மாலை தீபங்களை ஏற்றி விட்டால்   மறுநாள் காலை வரை அப்படியே எரிஞ்சுக்கிட்டே இருக்குமாம். அஞ்சு மணிக்கு நடை திறந்தவுடன் பக்தர்கள்  ஏராளமாக தீப தரிசனம் காண வந்து கூடுவார்களாம். டிசம்பர் 6 தீபமுன்னு போஸ்ட்டர் இருக்கேன்னு  அப்புறம்  தினமலர் பஞ்சாங்கம் பார்த்தால்  அன்னிக்குத்தான் பௌர்ணமி. கார்த்திகை தீபம்! கணக்கு சரியாத்தான் இருக்கு:-)

பெருமாள் கோவிலில் கார்த்திகை தீப விழா நடப்பது  இங்கே மட்டும்தான் என்கிறார்கள்.

உள்பிரகாரத்துக்குள் நுழைஞ்சோம். வழக்கமான  குட்டித்தூண்களும் தாழ்வான கூரையுமா ஒரு மண்டபம்.  அதுக்கு அந்தாண்டை  அஞ்சு படிகளேறிப்போகும் உயரத்தில்  கருவறை.

 கருவறை முன் யாருமே இல்லை !  பட்டரும் உள்ளே பூஜை செஞ்சுக்கிட்டு இருந்தார்.. இங்கே காலை அஞ்சு மணிக்கே கோவில் திறப்பதால்  தினப்படி வரும் பக்தர்கள் வந்து போயிருக்கலாம். மனம் நிறைஞ்சு வழிய  தரிசனம் ஆச்சு.  அப்போதான்  உஷத் பூஜை முடிச்சு ஆரத்தியை வெளியே கொண்டுவந்து வச்சார்  பட்டர் . நாங்க ஜோதியைத் தொட்டுக் கும்பிட்டோம். எங்களை ஏறிட்டுப் பார்த்தவர் , 'அர்ச்சனை செய்யணுமா/'ன்னு கேட்டார்.  இதுவரை வேறெங்கும்  யாரும் இப்படிக்  கேக்கலையேன்னு நினைச்சாலும்  கிடைச்ச வாய்ப்பை எதுக்கு விடுவானேன்னு  தலையாட்டினேன். கோபால்  ஒரு அம்பது எடுத்து படியில் வச்சார்.  ஊஹூம்னு  தலையை ஆட்டிய பட்டர், ஆள்காட்டி விரலை  நீட்டி  அங்கே கொடுக்கணும் என்றார்.  அவர் காட்டிய திசையில்   தேவஸ்தான ஆஃபீஸ்!   அங்கே யாரையுமே காணோம். கோவில் உண்டியலில் கொண்டு போய் போட்டுட்டு வந்தார் நம்ம கோபால்.

குடும்ப நபர்களின் பெயர் ,  நாள் (நக்ஷத்திரம்)  எல்லாம்  விவரமாக் கேட்டு, சங்கல்பம் செஞ்சு  அருமையாக அர்ச்சனை செஞ்சு சந்தனம், பூ , பிரஸாதங்கள்  கொண்டுவந்து கொடுத்தார். ஏனோ தானோன்னு இல்லாமல்  கால்மணி நேரம்!  அதுவரை அங்கே வேற யாருமே வரலை!  ஏகாந்த தரிசனம்.  இப்படியும் உன் அருளான்னு பரவசம் எனக்கு. அதென்னமோ சொல்லி வச்சாப்லெ...  நாங்க  உள்ப்ரகாரம் கருவறை வலம் வர நகரும்போது  இன்னொரு குடும்பம் உள்ளே வருது!

கேரளக் கோவில்கள் வழக்கம்போல் சின்ன  உருவம்தான். கிழக்கு பார்த்து நின்ற கோலத்தில் ஸேவை சாதிக்கிறார். தாயார் பெயர்  கற்பகவல்லி நாச்சியார்.

இங்கேயும் வட்டக் கருவறைதான்.  கும்பிட்டுக்கிட்டே போனால் வட்டத்தின் நேர் பின்புறம் இன்னொரு சந்நிதி!  உள்ளே நரசிம்ஹர்!  மேற்குபார்த்த திசையில் அமர்ந்த கோலத்தில்!  இவருக்கும்  வெளிப்ரகாரத்தில்  மேற்கு வாசலில் ஒரு கொடி மரமிருக்கு. இவர்  பிற்கால வரவு. இவருடைய உக்ரம் தணிக்க, தினமும் இங்கே பால்பாயஸம்  நிவேதிக்கறாங்களாம்.   ஆஹா....  எண்டே க்ருஷ்ணா, நேத்துதான்  அங்கே பால்பாயஸம்  கொடுத்தாய். இங்கேயும் பாயஸமுன்னா என்ன கணக்கு?  தினமும் இங்கே பூஜையின்போது நாராயணீயம் சொல்வது  உண்டு. வலம் முடிச்சு மீண்டும் பெருமாள் முன்னால் வந்து நின்னோம்.

பெருமாள் இங்கே அற்புத நாராயணராக இருக்கார்!  அம்ருத நாராயணர் என்றும் இன்னொரு பெயர் உண்டு. ஆயிரத்தெட்டு பேர்கள் உள்ளவனுக்கு இதெல்லாம் எம்மாத்திரம்?

என்ன அற்புதம் செஞ்சார்?  பாண்டவர்களில் சகாதேவன்  இந்தக் கோவிலைக் கட்டியதும், உள்ளே பிரதிஷ்டை செய்யப் பொருத்தமான சிலையைத் தேடிப்பார்த்தும் சரியா ஒன்னும் அமையலை. மனம் உடைந்த சகாதேவன்,  அக்னிப்ரவேசம் செய்ய முடிவு செய்து தீ வளர்த்தப்ப,  சுயம்பூவாக  தானே அங்கே  இந்தச் சிலை தோன்றியதாம். இந்த அற்புதத்தைச் செஞ்சவரை அற்புத நாராயணரா ஆக்கிட்டாங்க. அப்ப அம்ருதத்துக்கு என்னன்னு  கேக்கணுமா?  எதுக்கு? பெருமாளே அம்ருதம் போன்றவன் இல்லையோ!

ஒவ்வொரு அறுபது வருசம் முடியும்போதும்  மூலவருக்கு அற்புத சக்தி கூடிக்கூடி வருதுன்னு  கோவில் தகவல்கள் சொல்லுது. கலியுகம் முடியும்போது ஒளியாக மாறி  விண்ணில் கலந்துவிடுவார்  என்றும்  ஒரு தகவல்!.அதனாலும் இவர் அற்புத நாராயணராக  இருக்கார்.

ஒரு காலத்தில் இங்கே ருக்மாங்கதன் என்ற ராஜா ஆட்சி செஞ்சுருக்கார். இவர் சூரிய வம்சம். ரொம்ப பக்திமான். ஏகாதசி விரதம் தவறாமல் கடைபிடித்தவர். இவருடைய பூந்தோட்டத்தில் ரொம்பவே அரிய வகை மலர்கள் பூக்கும் செடிகளை  வச்சுருந்துருக்கார்.   நேத்து மொட்டா இருக்கும் பூக்களை மறுநாள்  பறிக்கப்போனால் அங்கே ஒன்னுமே இருக்காது!  பூக்கள் இப்படித் திருடு போவதைப் பார்த்த காவலாட்கள் மன்னனிடம் போய் சொல்லவும், கண்காணிப்பா இருந்து கள்ளர்களைப் பிடிக்க உத்தரவாச்சு.
ஒருநாள் பூப்பறிக்கும் நபர்களை வளைச்சுப் பிடிச்சு,  ராஜாவுக்கு முன் கொண்டு போய் நிறுத்திடறாங்க. விசாரிக்கும்போதுதான் தெரியுது, அவுங்க தேவலோகத்தைச் சேர்ந்தவர்கள் என்னும் சமாச்சாரம். இங்கே இருந்து பூக்களைப் பறித்துப்போய் பெருமாளுக்குச் சூட்டிக்கிட்டு  இருந்துருக்காங்க.

(அதென்ன சாமிக்குத் திருட்டுப் பூக்கள்தான் பிடிக்குமோ என்னவோ? 
நம்ம சென்னை வாழ்க்கையில்  ஆரம்பத்தில் சிலநாட்கள் அதிகாலை எழுந்து  வாக்கிங் போக ஆரம்பிச்சுருந்தோம். அப்போ கையில் பையுடன்  நடக்கும் ஆட்கள்  அங்கங்கே வீடுகளில் இருக்கும் பூக்களை ஓனருக்குத் தெரியாமல் பறிச்சுப் பையில் போட்டுக்குவாங்க. இன்னும் சிலர் ஒருபடி மேலேயே... கையில் வாக்கிங் ஸ்டிக் போல்  வச்சுருக்கும் தொறட்டிக் கோலால்  கொஞ்சம் உசரத்தில் பூத்து நிற்பவைகளை  வளைச்சுப் பிடிச்சுப் பறிச்சுப் போவார்கள்.  நம்ம வீட்டுக்குள்ளும்  கேட்டைத் திறந்து, ஒருத்தர் வந்து செம்பருத்திகளை  வேகவேகமாப் பறிச்சுக்கிட்டு இருந்ததை ஒருநாள் பார்த்துட்டு விசாரிச்சால்.... சாமிக்குப் போடப் பூப்பறிக்கிறாராம். நல்லா இருக்கே! சாமிக்குத் திருட்டுப்பூதான் பிடிக்குமான்னு கேட்டேன்.  இனிமேல் காம்பவுண்டுக்குள்  வரக்கூடாதுன்னு எச்சரிக்கை செஞ்சுட்டு, கூர்க்காவுக்கும்   கொஞ்சம் அர்ச்சனை செய்யும்படி ஆச்சு.)

சரி. போங்கன்னு ராஜா அவுங்களை  விட்டுட்டாலும்  மனிதரிடம் மாட்டிக்கிட்டதால் அவுங்களால் தேவலோகத்துக்குத் திரும்ப முடியாமப்போச்சு. திரும்பிப்போக வழி என்னன்னு பார்த்தபோது, ராஜாவின் ஏகாதசி விரத பலன்களை  இவுங்களுக்குத் தாரை வார்த்தால்  தேவலோக எண்ட்ரி கிடைச்சுரும் என்பது தெரிய வர, ராஜா இந்தக் கோவிலுக்கு வந்து , அற்புதநாராயணரின் சந்நிதி முன்னால் நின்னு  அவருடைய விரதபலன்களை, பிடிபட்ட   தேவர்களுக்குத் தாரை வார்த்துக்கொடுத்தார். அவுங்களும் தேவலோகத்துக்குத் திரும்பினாங்க. இதெல்லாம் ஒரு கடிகை (நாழிகை) நேரத்துக்குள் நடந்ததால்.... இந்த இடம் கடிகை ஸ்தானம் என்றாகி, பின்னர் காலப்போக்கில்  கடித்தானம், கொடித்தானம் ஆகிப்போய் இப்போ திரு என்னும் அடைமொழியுடன் திருக்கொடித்தானம் என்றாச்சு.  மலையாளத்தில் சொல்லும்போது இது த்ருக்கொடித்தானம்!

யம்மா....  என்னென்ன கதைகள் பாருங்களேன்!

 வெளிப்புறம் ப்ரகாரம் சுத்தலாமுன்னு வந்தால்    சின்ன காம்பவுண்ட் சுவருக்குள்   இன்னொரு தனிக்கோவிலா  குடிகொண்டிருக்கார் முருகன்!  அப்பதான் நினைவுக்கு வருது இன்னிக்கு சஷ்டி!  கந்தசஷ்டி!  காக்கக் காக்கக் கனகவேல் காக்கன்னு  ரெண்டு வரி சொல்லிக்கிட்டே உள்ளே போய்  நிம்மதியா ஸேவிச்சேன்.


அஞ்சுபடி ஏறிப்போகும் கருவறைன்னு எப்பவும்சொல்றேன் பாருங்க. அது இப்படித்தான் இருக்கும்:-)

அஞ்சாறு பேர் தொடர்ந்து இங்கே முருகனைக்கும்பிட வந்துக்கிட்டே இருக்காங்க. இன்னிக்கு அவன் டே இல்லையோ! அதிலும் பெண்கள்தான் அதிகம்!

கோவில் குளம்  பார்த்தாலே பழசுன்னு தெரியுது. ஆனால் சுத்தமா இருக்கு.

பெருமாள் கோவில் முகப்பு வாசலுக்கு முன்  ஒரு  ஆள் உசரக் கல்கம்பத்தில் ஒரு மனுஷன் நடுமுதுகுக்கு மட்டும் சப்போர்ட் வச்சு  விறைத்த நிலையில் கால்நீட்டிக் கிடக்கிறான். இது கழுவேற்றம் கூட இல்லையே.... என்ன ஆச்சோன்னு விசாரிச்சதில் ஒரு கதையும் கிடைச்சது:-)

ஒரு சமயம் நடை சார்த்தி இருந்த நேரம் ராஜா கோவிலுக்கு வர்றார். அவரிடம்(அவரிடமே!) கைக்கூலி (லஞ்சம்) வாங்கிக்கிட்டு, கோவிலைத் திறந்து விட்டானாம் காவலாளி. அதற்கான தண்டனையா அவனைக் கொன்னு கோவில் முன்னாடி வச்சுருக்காங்களாம்.

எல்லோருக்கும் சட்டம்/விதிகள் ஒன்னுபோல இருக்கணும்.  லஞ்சம் வாங்குனா இதுதான் கதி!  சூப்பர்  ஐடியா! இது இப்போதும் இருந்தால் எவ்ளோ நல்லா இருக்கும் என்று தோணுச்சு.  ஆனால்.... கோவில் முழுக்க சவக்காடாக ஆகிருமுல்லே?  

கோவில்  வெளிப்புறத் திண்ணைச்சுவர்களில்  சித்திரங்கள்  வரைஞ்சு வச்சுருக்காங்க.  சமீபத்திய சமாச்சாரம் 2012. நேத்து மாலை அம்பலப்புழாவில் பார்த்த வகை ஓவியங்கள்! எல்லாம்  ஸ்ரீ க்ருஷ்ணர் சம்பந்தம் உள்ளவைகள் என்றாலும் அதில் ஒரு சிவன் குடும்பம்  முழுசும்  இருக்கு. இந்தப்பக்கத் திண்ணையில்  நரசிம்ம அவதாரம் சூப்பர்!  பச்சைமுக ஹிரண்யகசிபுவும் ப்ரஹலாதனும்! என்ன வகை ஓவியங்கள் இவை?


கோவில் காலை அஞ்சு முதல் பதினொன்னு வரை,மாலை அஞ்சு முதல் எட்டுன்னு திறந்துருக்கும். நேத்து செங்கண்ணூரில் இருந்து மரியா வரும்வழியில் பார்த்திருக்க வேண்டியது. அந்த நேரம் ஆரண்முளா போயிட்டதால்  விட்டுப்போச்சு. அதனால் என்ன இன்றைக்கு  அர்ச்சனை செஞ்சுக்க முடிஞ்சதே அது  ஒரு பாக்கியமல்லோ!

நூற்றியெட்டு திவ்யதேசக்கோவில்களில்  இதுவும் ஒன்னு. நம்மாழ்வார் வந்து பாடி மங்களாசாஸனம் செஞ்சுருக்கார்.

     கோயில் கொண்டான் திருக்கடித்தானத்தை
     கோயில் கொண்டான் அதனோடு என்னெஞ்சகம்
     கோயில் கொள் தெய்வமெல்லாம் தொழ வைகுந்தம்
     கோயில் கொண்ட குடக் கூத்த அம்மானே.

திருக்கடித்தானம்  என்றுதான் அவர் சொல்லி இருக்கார். இங்கெ மலையாளத்தில் எழுதும்போது அது த்ருக்கொடித்தானம் !

தமிழில் கோவில் கதைகளை சுவரில் எழுதிப்போட்டுருப்பதுதான்  அதிசயம் ,அற்புதம் என்று நினைச்சுக்கிட்டேன்!

அற்புத நாராயணரின் கருணையே கருணை!  ஓம் நமோ வாசுதேவாய!

தொடரும்........:-)






மன்மதன் வந்தானடி.........

$
0
0

இந்த வருசத் தமிழ்ப் புத்தாண்டுக்கு மன்மதன் வந்துருக்கான்.  ஒரு வருச ராஜாங்கம்!  நம்ம கேரளா அசோஸியேஷனில்  மூணு நாளைக்குமுன்னே  சனிக்கிழமை  கடந்துபோன ஈஸ்ட்டருக்கும், வரப்போகும் விஷுவுக்கும் சேர்த்து விழா கொண்டாடினோம்.



எப்பவும் இது ரெண்டையும் சேர்த்தே கொண்டாடும் வகைதான். அடுத்தடுத்து  வரும் பண்டிகைகளுக்குத் தனித்தனிக் கொண்டாட்டம் செஞ்சுக்க முடியாது, பாருங்க. அதனால் கூடி இருந்து கொண்டாட வீக்கெண்டா வரும்  ஒரு நாளும்,  அவரவர் வீட்டுச் சொந்தக் கொண்டாட்டங்களுக்கு  பண்டிகை வரும் அதே நாளுமா வச்சுக்கிட்டோம். இதுவும் சௌகரியமாத்தான் இருக்கு!




 ஐஸ்வரியம் உள்ள விஷுக்கணி ஒருக்கி வச்சுருந்தாங்க. எல்லாப் பொறுப்புகளையும்  சிறுப்பக்கார் வசம் கொடுத்தாச்சு.  அவுங்களும் நல்லாவே செய்யறாங்க. நாங்க முதியோர்  வழிகாட்டுனாப் போதும்!

சங்கத்துக்குப் பெயர் சூட்டி  ரெஜிஸ்ட்டர் செஞ்சு ஆச்சு  வருசம் பத்து! அதற்கான  விழாவையும் இதுலே சேர்த்துக்கிட்டோம். சங்கம் நிறுவனர்  என்ற கணக்கில் ஒரு பதினைஞ்சு பேருக்கு  மரியாதை செய்யணும். அதுலே  எண்மர் நாட்டைவிட்டு வேறு நாடுகளுக்குப் போயாச்சு. பாக்கி இருக்கும் எழுவருக்குப் பூங்கொத்தும்,  சேவை பிழிஞ்சதுக்கான பாராட்டுப் பத்திரமும் கிடைச்சது. நமக்கும்தான்னு  தனியாச் சொல்லணுமாக்கும்:-))))


புதுசா இங்கே ஆரம்பிச்சுருக்கும் இண்டியன்  ரெஸ்ட்டாரண்டில் சாப்பாட்டுக்கு ஆர்டர் கொடுத்தாச்சு.  வெஜிட்டேரியன்களை காயப்போடாதீங்க மக்களேன்னு  உரப்பிச்சுச் சொன்னேன். எப்பவும் எனக்கு ஒரு ச்சன்னா கறிதான்  கிடைக்கும்  வேறே ஏற்பாடு செய்யறேன்ன  இளைஞர் ஜஸ்ட்டின். வீட்டுக்கு வந்து மெனு சொல்லிட்டுப் போனார்,






வெஜிட்டபிள் ப்ரைடு ரைஸ்,  சிக்கன் கறி, மலாய் பனீர்,  பப்படம், ஊறுகாய்  இவைகளோடு விஷூ என்பதால் ஒரு பாயஸம்.

பிங்க் சட்டை செயலாளர், நீலம் தலைவர் (இந்த ஆண்டுக்கு)

ஹாலில் குடி இருக்கும்  Fan Tail பறவை ஒன்னு பயந்து போயிருக்குக் கூட்டத்தைப் பார்த்து:(  படபடன்னு பயத்துடன்  மேலேசுத்தி சுத்தி வந்ததைப் பார்த்துக்கிட்டே இருந்தேன். கதவைத் திறந்து வச்சாலும் வெளியே போகலை. பாவமா இருந்துச்சு.



கலைநிகழ்ச்சிகள்  அதிகம் இல்லாமல்  இருந்தது  அருமை. ஜஸ்ட் ஒரு டான்ஸ், ரெண்டு பாட்டு. போதும் யதேஷ்டம்!

ஆச்சு.... இன்றைக்கு மன்மதன்  வந்தே வந்துட்டான். ச்சும்மா வரப்டாதா? ஏகத்துக்கும்  ஜில்லுன்னு குளிரைக் கூடவே கூட்டி வந்துருக்கான். வெறும் 10 டிகிரி. கூடவே மழை!   சாமிப் பாட்டுகள் ஒலிக்க  குளிருக்கு இதமா  ஹீட்டர் போட்டுக்கிட்டு,  வலையில்  மேயோ மேய்ன்னு மேய்ஞ்சுக்கிட்டு   சித்திரை திருநாளைக் கொண்டாடிக்கிட்டு இருக்கேன்!

வருசப்பிறப்பு ஸ்பெஷலா நம்ம வீட்டுக்கு  ஃபைபர்  ஆப்டிக் அல்ட்ரா ப்ராட்பேண்ட் வந்தாச்! வந்த விவரம் இன்னொரு பதிவில்:-))))

இதுதான் நமக்குப் புதுவருசப் பரிசு.

டௌன்லோட் ஸ்பீடு 31.40 Mbps
அப்லோட் ஸ்பீடு  11.06 Mbps.

நம்ம வீட்டு வருசப்பிறப்பு மெனு:  கேஸரி,  வடை,  நம்மாத்து மாங்காய்ப் பச்சடி,  சுரைக்காய் கூட்டு, பருப்பு  ரஸம், தயிர்.



சாயங்காலம் கோவிலுக்குப் போய் வரணும்.

நண்பர்கள் அனைவருக்கும்  தமிழ்ப்புத்தாண்டுக்கான இனிய வாழ்த்து(க்)கள்.  நல்லா இருங்க!

விஷூ ஆசம்ஸகள்.  பகவானோடு ப்ரார்த்திக்குந்நு.  ஈ கொல்லம் நன்னாயி வரட்டே!  மங்கலம்  அனுக்ரஹிக்குனே!



கஞ்சி ஊத்துனவரை, இப்படிக் கழுவித் துரத்துனா எப்படி? ( மூன்று மாநிலப் பயணம்- தொடர் : 40)

$
0
0
அற்புத நாராயணரின் தரிசனம் முடிச்சுச் சரியா எட்டேகாலுக்கு  மரியாவுக்குத் திரும்பி இருந்தோம்.  எட்டரை  வரை கொஞ்சம் க்ளிக்ஸ். அப்புறம் பெட்டிகளை  ரெடி பண்ணி வச்சுட்டு  இருக்குபோது   காலை உணவு தயார்ன்னு ரெமா வந்து சொன்னாங்க.  சாப்பிட்டதும் கிளம்பறோமுன்னு  சொன்னேன்.

 கொன்னை பூத்துக்குலுங்குது.  அதுலே  முருங்கைக்காய் போல ஒரு காய் வருதே!

புட்டு வந்தது.  இத்திரி நெய் உண்டோன்னதும் இன்னொரு வெலவெல! பட்டர் இருக்குன்னாங்க. சரி போகட்டும் அதையே கொண்டு வாங்கன்னேன்.  ஏத்தப்பழம் கூட வாங்கிக்கலையாம். சாப்பாட்டு மேஜையில் இருந்த பழக்கூடை வாழைப்பழம்  எடுத்துக்கிட்டேன்.  பஞ்சஸார வேணுமுன்னதும் ஓடிப்போய்க் கொண்டு வந்தாங்க.  புட்டு, பழம், பட்டர் , சீனி சேர்த்து சாப்பிட்டு முடிச்சோம். அடுப்பில் வச்சு சுட்ட நேந்திரம்பழம் புட்டுக்குச் சரியான கூட்டு!  கடைக்குப் போய்வர  ஆளில்லையோ என்னவோ?

உண்மையைச் சொன்னால்....புட்டுகூட ரொம்ப சுமாராத்தான் இருந்தது. ம்ருதுவாக இல்லை. இதைவிட நானே அட்டகாசமா மென்புட்டு செய்வேன்,கேட்டோ! எப்பவாவது  சமோவாத்தீவில்  இருந்து இங்கே வரும் நேந்திரங்காயைப் பழுக்க வச்சு  அதை மைக்ரோவேவ் அவனில் மூணு நிமிசம் வச்சு எடுத்தால் புட்டும் பழமும் காம்பினேஷன் சூப்பரா அமைஞ்சுரும் நம்ம வீட்டில்.  பழம் பழுத்த மறுநாள் புட்டுன்றது  நம்ம வீட்டு சமாச்சாரம்.

மரியாவை விட்டுக்கிளம்பும்போது இன்னும் ரெண்டுநாள் தங்கலையே என்ற ஏக்கமும்,   நல்லவேளை  ஒருநாள் மட்டும் தங்கினோம். ரெண்டுமூணு நாளுன்னால்...சாப்பாட்டுக்குக் கஷ்டமாகி இருக்குமோன்னும்  ஒரே சமயம் இரு வேறு தோணல்கள்! (மனுச மனசு! )


இந்த ஏரியாவில் இருக்கும் 108 களில் ஆறு  இதுவரை பார்த்தாச்சு. இனி  அடுத்த  அஞ்சுக்கு போகவேணாமா?  பம்பா நதிக்கு பைபை சொல்லிட்டுக் குருசடிவரை வந்து ரைட் எடுத்தோம்.  ஆலப்புழா வழிதான் போகணும். அதுக்குமுன்னே படகு வீட்டை ஒரு தடவை கண்ணாலாவது பார்த்துக்கலாமேன்னு காயல்வரை போனோம்.

சாலையில் வரும்பெரிய பாலத்தைக் கடந்து   சைடில்  கீழே  இறங்கும் பாதையில் போனால் படகுவீடுகள் ஏராளமா  இருக்கு. இங்கிருந்துதான்   போட்ஹவுஸ் புக் பண்ணிக்கணும். இது ஒரு பெரிய வியாபாரமா வளர்ந்துருக்கு!  பயங்கர டிமாண்ட் இருப்பதால் எல்லா சீசனிலும்  படகுவீடுகள்  வியாபாரம்  ஓஹோன்னு நடக்குதாம்!  அங்கிருந்த ஆஃபீஸில் ச்சும்மாக் கேட்டு வச்சோம்.  ரெண்டு நாளுக்குப்பிறகு தான் கிடைக்குமுன்னு சொன்னாங்க. பள்ளத்துருத்தின்னு பெயர் இந்த ஏரியாவுக்கு.



இதுலேயும் வெஜிடேரியன் என்றால்  கொஞ்சம் கஷ்டம்தான் போல:( போறபோக்குலே மீன் பிடிச்சு சமைச்சுத் தர்றதா  ஒரு பதிவில் வாசிச்ச நினைவு இருக்கே!  ஆனா ஒன்னு பார்க்கவே அட்டகாசமா இருக்கு!  மாடி வச்ச வீடு கூட இருக்கு!  சின்னதும் பெருசுமா வகைவகையா!   சூப்பர்!


ஆசைக்கு  ஒரு வீடு வாங்கிக்கலாமுன்னு  லேசா கோடி காமிச்சேன். பத்தாயிரம் டாலர்(வரை) என்றார் கோபால். கப்சுப்! படகு செஞ்சுருக்கும் மரமும், ஓலை முடைஞ்சு போட்டுருக்கும் கூரையும்  நாட்டுக்குள்ளே  விடமாட்டாங்க. இல்லைன்னா  100 டாலர்கள் அழுது ஃப்யூமிகேட் பண்ணிக்கணும்.  போகட்டும் போ....  சீச்சீ.... ரொம்பப் புளிக்குது!


ஒன்னரை மணி நேரப்பயணத்தில்  (78 கிமீ)  எரணாகுளம் வந்துருந்தோம். ஊருக்குள் நுழையுமுன் ஒரு  டோல் கேட்.  அப்பதான் கேரளாவில் நுழைஞ்சதில் இருந்து  இதுவரை எங்கேயும் டோல் கட்டலையேன்னு  நினைவுக்கு வந்தது.  கேரள அரசே நல்ல சாலைகளாத்தான் போட்டு வச்சுருக்கு போல!  இது கொச்சி  துறைமுகத்துக்குப் போகும் ரோடு. இங்கே இன்னும் ஒரு நாலு கிலோ மீட்டர்  போனால் இன்னொரு கோவில் இருக்கு. ஆனால் இப்போ மணி  பதினொன்னரை. கோவில் மூடி இருக்கும். மாலையில் வரணும்.  அதுக்குள்ளே இன்றையத் தங்கலுக்கு அறையைத் தேடிக்கணும்.
 சாலையோரக் காந்தி எதுக்கு இந்த முழி முழிக்கிறார்?

நேற்று இரவே  ஆலுவா என்ற ஊரில் தங்கலாமுன்னு முடிவு செஞ்சதுதான்.  எரணாகுளம்  பரபரப்பான பெரிய நகரம். இங்கே நம்ம நோக்கம்  ஒரே ஒரு கோவில்தான். அதனால் ஆலுவா என்றால் பயணம் தொடர எளிதுன்னு நினைச்சோம்.  வலையில் பார்த்து வச்ச ஒரு ஹொட்டேலுக்கு ஃபோன் செஞ்சு  அறை இருக்குன்னு உறுதிப் படுத்திக்கிட்டார் கோபால்.

நாலுகிலோ மீட்டர்தானே.... எதுக்கும் கோவில் திறந்திருக்கான்னு ஒரு பார்வை பார்த்துக்கிட்டே போகலாமுன்னு கோபால் சொன்னதால்  கோவிலைத் தேடிப்போனோம். கவனமாப்போயும்  வழியைத் தவற விட்டுருந்தோம்.  நாங்க போன சின்ன ரோடு கடைசியில் மெயின் ரோடில் போய் சேருது. சாலை முனையில் இருந்த கடையில், கோவிலுக்கு வழி கேட்டால், நீங்கள் வந்த வழியிலேயே 2 கிமீ திரும்பிப்போகணும். ஆனால் கோவில் 11 மணிக்கு நடை சாத்திருவாங்கன்னார்.

சரி. போகட்டும் . சாயங்காலம் வரலாமுன்னு   அதே மெயின் ரோடில் சேர்ந்துக்கிட்டோம். 'சேலம், கொச்சி, கன்யாகுமரி ஹைவே 'இது. நமக்கு ஒரு பத்து கிமீ இதில் பயணம் செய்தால் போதும் ஆலுவா.  ஊருக்குள் நுழைஞ்சு  வலையில்  பார்த்த ஹொட்டேலைத் தேடிக்கிட்டே போகும்போது  வலப்பக்கம் இன்னொரு பெரிய வெள்ளைக் கட்டிடம் அன்னப்பறவை போலக் கண்ணில் பட்டது.

ஹொட்டேல் ஏர்லிங்க் காஸில்.   இடப்பக்கம்  கொஞ்சதூரத்தில் நாம் வலையில் பார்த்தது  இருக்கு.  பார்வைக்கே நல்லா இல்லை. ஏர்லிங்கில்  அறை இருக்கான்னு கேட்கலாமுன்னு  யூ டர்ன் எடுத்து அங்கே போனோம்.
அறை இருக்கு. கடந்த சிலநாட்களில்  இதுக்கு  அஞ்சு நட்சத்திர அந்தஸ்த்து கிடைச்சிருக்குன்னு  உள் அலங்காரம் மாற்றுதல், இன்னும் சில வேலைகள்ன்னு பரபரப்பாக வேலை நடக்குது.  பெஸ்ட் ப்ரைஸ் என்னன்னு சொல்லுங்கன்னு கேட்டுக்கிட்டு இருக்கும்போதே... அங்கே வந்த  இளைஞரை பார்த்த வரவேற்பாளர், மேனேஜரே வந்துட்டார்ன்னு எழுந்து நின்னார்.

சிரிச்ச முகத்தோடு நம்மைப் பார்த்த மேனேஜர், நாம் சென்னையில் இருந்து வந்துருக்கோமுன்னதும்  சரளமாத் தமிழில் பேச ஆரம்பிச்சுட்டார்.  கல்பாக்கத்தில் வளர்ந்தவராம். அப்பாவுக்கு  அங்கே  வேலை. எஞ்சீனியர் ஆக தொழிலை ஆரம்பித்த அப்பா,  இப்போ ஒரு பகுதிக்கு மேலதிகாரியாக இருக்காராம். மகனுக்கு வீடு, படிப்பு எல்லாம் சென்னைதான்.  இவர் இப்போ இங்கே மேனேஜரா வந்து ஒரு மாசம்தான் ஆச்சுன்னார்.   பெயர் அபிமன்யூ!

 அடடா..... இப்பதானே மஹாபாரதம் தொடரில்  பார்த்துக்கிட்டு இருந்தோம்!
எத்தனை நாள் தங்க உத்தேசமென்றார். ஒருநாள்தான் என்றோம். வேறு எந்த உதவி வேணுமானாலும் செஞ்சு தரேன்னார். 38 வருசங்களுக்கு முன் இங்கே இந்த ஏரியாவில்தான் ஒன்னரை வருசம் குப்பை கொட்டினோம் என்றேன்.   நல்ல டிஸ்கவுண்ட்டுடன்   அட்டகாசமான அறை  கிடைச்சது!

பகல் சாப்பாட்டுக்கு  வெளியே எங்காவது போய் சாப்பிடும் சாக்கில் ஊரைப் பார்க்கலாம் என்று கிளம்பினோம். சரியா 38 வருசங்களுக்குப்பிறகு வந்துருக்கோம். முதலில் ஆலுவா ஊரே அடையாளம் தெரியாமத்தானே கிடக்கு!  எங்கே பார்த்தாலும் புதுசு புதுசா சர்ச்சுகள்! ஒவ்வொன்னும் பெரிய பாஸிலிக்கா போலல்லே  நிக்குது!


எக்கச்சக்கமான கடைகளும், ஏகப்பட்ட  வாகனங்களும் அகலமான சாலைகளுமால்லே கிடக்கு! கொஞ்ச தூரத்தில் கார்னிவல் கோர்ட்ன்னு ஒரு கட்டிடம்.  உள்ளே ஃபுட் கோர்ட்.  போய்ப் பார்க்கலாமுன்னு  போனால்.... வரிசையா ஏழெட்டுக் கடைகள். சிம்Bப்ளி சௌத் அய்க்கோட்டே!


கோபாலுக்கும் சீனிவாசனுக்கும் தாலி மீல். எனக்கு ஆப்பம், தேங்காய்ப்பால்.
அறைக்கு வந்து அடுத்த திட்டம் என்னன்னு  யோசித்தால்....


 சாலக்குடிக்குப்போயிட்டு வந்துடலாமுன்னு கோபால் சொன்னார். நாளைக்கு அந்த வழியாத்தானே போகணும் என்றால்,  கோவில் திறக்க  மாலை அஞ்சு ஆகிருமே.  அதுவரை என்ன  செய்ய?

38 வருசங்களுக்குப்பிறகு  நாங்க சுற்றித் திரிஞ்ச ஏரியாவுக்குப் போறோம்.  அங்கமாலி, கருகுட்டி, கொரட்டி, முரிங்கூர், சாலக்குடி!

அங்கமாலியில் மெயின் ரோடுக்குப் பக்கத்திலேயே ஃபிஜித் தோழி வீடு கட்டி இருக்காங்கன்னு தெரியும். அடையாளம்  சொல்லி படமும் அனுப்பி இருந்தாங்க. அதைப் பார்க்கணுமுன்னு கேமெராவும் கையுமா கண்ணை நட்டு வச்சேன் வலப்பக்கம்.கண் பூத்தது மிச்சம். சாலை ஓரங்கள் பூராவும் ஏகப்பட்ட கட்டிடங்களும் கடைகளும்.

அடுத்து  கருகுட்டி என்னும் ஊரைச் சமீபிக்கிறோம்.  கோபால் பரபரப்பா இருக்கார்! கருகுட்டி கேபிள்ஸ் என்று மக்கள்ஸ் செல்லமாச் சொல்லும் ப்ரீமியர் கேபிள் கம்பெனி வரப்போகுது. இங்கேதான்  எலக்ட்ரிக்கல் கேபிள் & ஒயர் செய்யும்  ஃபேக்டரியில் இவர் பயிற்சி எடுத்தார்.  ஆச்சு அது ஒரு 38 கொல்லங்களுக்கு முன்பு. இப்பவும் நமக்குச்  சோறு போடும் அன்னதாதா இந்தத் தொழில்தானே!



கம்பெனி இருந்த இடம் இருக்கே தவிர   தொழிற்சாலையைக் காணோம்! நாங்க  அந்த ஊரைவிட்டு வந்த ஒரு பத்து வருசத்துக்குள்ளே தொழிற்சங்கப் பிரச்சனைகளால்  இழுத்து மூடிட்டாங்கன்னு தெரியும்தான்.  ஆனா அடையாளமே இல்லாமப்போயிருமுன்னு கொஞ்சம்கூட  எதிர்பார்க்கலை:(

 ராஜஸ்தான் முதலாளியால் தாக்குப்பிடிக்க முடியலை. முன்னூறுபேருக்கு வேலை போச்:( செங்கொடி பிடிச்சே, வயித்துலே ஈரத்துணி போட்டுக்க வச்சுட்டாங்க. இப்பெல்லாம் கேரளாவில் எதாவது தொழில் தொடங்கணும் என்ற நினைப்பே யாருக்கும் வராமப் பார்த்துக் கிடறாங்க.:(

இப்ப அங்கே வேறெதோ ஷாப்பிங் செண்ட்டர் வரப்போகுதாம்!

தொடரும்..........:-)



டௌன்லோட் ஸ்பீடு 31.40 Mbps . அப்லோட் ஸ்பீடு 11.06 Mbps.

$
0
0
வருசப்பிறப்பு ஸ்பெஷலா நம்ம வீட்டுக்கு  ஃபைபர்  ஆப்டிக் அல்ட்ரா  ஸ்பீடு ப்ராட்பேண்ட் வந்தாச்!  நாடு முழுசுக்கும்  தெருத்தெருவா வீட்டு வாசல்கள் வரை  அரசாங்கம்  லைன் போட்டுக் கொடுத்துக்கிட்டு இருக்கு.

 போன டிசம்பர்  நம்ம தெருவில் வாசல் வேலைகள் முடிஞ்சது. நடைபாதையில் நம்ம காம்பவுண்டு எல்லைக்கு அருகில்  ரெண்டு வீடுகளுக்கு இடைப்பட்ட இடத்தில்  சின்னதா  பள்ளம்தோண்டி அதுவழியா டைரக்‌ஷனல் ட்ரில்லிங் மெஷீனை அனுப்பி தரைக்கடியில் பூமியை ஒரு அஞ்சு செமீ  விட்டம் இருக்கும் குழாயைப் புதைத்து இழுத்துக்கொண்டு போனாங்க.  இந்தவகை ட்ரில்லிங் மெஷீனில் சின்ன Sensor  இருக்காம். அது போறபோக்கில் குறுக்கே  வரும் தண்ணீர்க்குழாய், பவர் லைன்  இதையெல்லாம் காமிச்சு அவற்றை சேதப்படுத்தாமல்  மேலேறித் தாண்டியும் போகுமாம். தகவல் உதவி: நம்ம கோபால். நன்றிகள்.

வேலை முடிந்த அடுத்தநாளே தோண்டியவைகளை நிரப்பிவிட்டு, தார் ஸீல் போட்டு,  புல்லிருக்க வேண்டிய இடமானால், புல்விதைகளைத் தூவி, தினமும் வந்து தண்ணீர்  ஊற்றின்னு எல்லா வேலைகளையும் ஒரு குற்றம்குறை இல்லாமல் நிறைவாச் செஞ்சு முடிச்சுட்டுப்போனாங்க.







இங்கே எனக்கு ரொம்பவே பிடிச்ச விஷயமுன்னா....  தெருவில்  வேலை செய்யவரும் தொழிலாளிகளுக்கான  வசதிகள் முதலில்  செஞ்சுருவாங்க.  கெமிக்கல் டாய்லெட்  கொண்டு வந்து வச்சுட்டுத்தான் மற்ற வேலைகள்.  தெருவையோ நடைபாதைகளையோ அசிங்கப்படுத்துவதில்லை. எதுக்காவது பள்ளம் தோண்டினால்  வேலைமுடிஞ்ச உடனே  அதை நிரப்பிருவாங்க.






 ஒருநாளைக்கு மேற்பட்டு நடக்கும் வேலைகள் என்றால்  அதைச் சுற்றி போதிய தடுப்புகள்,  இரவு நேரப்போக்குவரத்துக்கான எச்சரிக்கை ரிஃப்லெக்டர்கள் , ட்ராஃபிக் கோன்கள் எல்லாம்  வச்சு ஒரு  பூனைகூட  குழிக்குள்ளே விழாத வகையில் பாதுகாப்பு நடவடிக்கைகள்  எடுப்பாங்க. எடுக்கணும்.

இப்பப் பாருங்க எதிர்வரிசையில் குடிநீர் மெயின் குழாயை அகலப்படுத்திக்கிட்டு இருக்காங்க. அங்கே கட்டிமுடிச்ச ஒரு புதுவீட்டுக்கு  தண்ணீர் இணைப்பு  ரெண்டு நாளைக்குப்பின் கொடுக்கப்போறாங்களாம். அதனால்  இந்தத் தேதியில்   இந்த மணிமுதல்  இந்த மணிவரை உங்க வீட்டுக்கு தண்ணீர் சப்ளை மூணு மணிநேரத்துக்கு நிறுத்தப்படும். தேவையான தண்ணீரைப் பிடிச்சு வச்சுக்குங்கன்னு சொல்லி தபால்பெட்டியில் தகவல் போட்டுட்டுப் போயிருக்காங்க. காஃபி டீ குடிப்பதுதான் தலையான சமாச்சாரம் போல்!  ஃபில் த கெட்டில்னு போட்டுருக்கு!

அந்த நாள் இந்த நாள்!  தண்ணி இல்லைன்னு சமைக்கலைன்னு  கோபாலுக்கு மெயிலனுப்பிட்டு  உக்கார்ந்து எழுதறேன்:-)

மெயின் எக்ஸ்சேஞ்சு பாக்ஸில்  தொடர்பு பூர்த்தியானதும், நம்ம வீட்டுக்கு  ஒரு மடல். உங்க வீட்டாண்டை வேலை முடிஞ்சு  வீட்டுக்குள் தொடர்பை அனுப்ப நாங்கள் ரெடி. அதை வாங்கிக்க நீங்க ரெடியா?  கரும்புத் தின்னக் கசக்குதா? நாங்கள்  டபுள் ரெடின்னோம்.

"இணைக்கும் வேலைகள் முழுவதும் இலவசம்! ஆனால் மோடம் மட்டும் காசு கொடுத்து வாங்கிக்கணும். பத்து டாலர் காசு தந்தால் உடனே மோடத்தை அனுப்பிடுவோம், மேடம்"

"ஏம்ப்பா ,அதை கனெக்ட் செய்ய ஆள்வருமே அவராண்டை தரப்டாதா?"

"அய்ய....   அது வேற ஆளுங்க. மோடம் சப்ளை வேற ஆளுங்க மேடம்.
அதுக்குக்  காசு வாங்கிக்கும் நாங்க வேற ஆளுங்க. கூரியர்லே மோடம் வந்துரும் மேடம். ஓக்கேவா?"

"ம்...அனுப்புங்க."

மூணாம் நாளிலேயே வந்துருச்சு. அடுத்த வாரத்தில் ஒருநாள் தொலைபேசியில் கூப்புட்டு,  இந்தவாரம் இன்னின்ன நாளிலே இன்னின்ன நேரம் இருக்கு. எது  வசதிப்படும் என்றொரு கேள்வி. இந்த நாள், இந்த நேரம் என்றேன்.  அன்றைக்கு  பூர்வாங்க வேலைக்கான திட்டம் தீட்ட  ஆள் வரும். நீங்க வீட்டுலே இருப்பீங்கதானே?  இருக்கேன். ஒருத்தர் வந்து பார்ப்பார்.

இது  விஸிட் நம்பர் ஒன். அதன்பின் அடுத்த வாரம்   ஈஸ்டர் ஹாலிடே முடியும் வாரம் என்பதால் அதுக்கு அடுத்த வாரம் ஏப்ரல் 13  விஸிட் நம்பர் 2 ஓக்கேவான்னார்.  அப்போ என்ன வேலையாம்?  மொத்த வேலையும் அன்றைக்குத்தான். நாலுமணி நேரம் எடுக்கும். காலை எட்டரையா இல்லை பகல் பனிரெண்டரையான்னு  கேட்டு பனிரெண்டரைன்னு சொன்னேன். இன்னொரு வேலையும் இதுக்கிடையில் இருக்கு. அதுக்கு நீங்கள் வீட்டில் கட்டாயம் இருக்கணும் என்றில்லை. வெளிவேலைதான். செஞ்சுட்டுப்போயிருவாங்கன்னார். ஸோ மூணு  விஸிட் உண்டு.

சொன்னபடி ஒருத்தர் வந்தார்.  எந்த இடத்தில் போடலாமுன்னு பார்த்தார். இப்ப இருக்கும் லைனுக்கு நேரெதிரா அடுத்த கேட்டுக்குப் பக்கம். அங்கேதான் Bப்ளோன்  ஃபைபர்   ட்யூப்  வச்சுட்டுப்போயிருக்காங்களாம்.  அதுக்குண்டான  ரோட் சைட் கேபினட் 200 மீட்டர் தூரத்தில் இருக்காம். அங்கிருந்து  வந்து நம்ம வீட்டுக்குள் வரணும். வெளிப்புறத்தில் ஒரு  ஹௌஸ் என்ட்ரி பாய்ண்ட்க்கு  சுவரில் ஒரு பெட்டி வச்சு அதன் மூலம் கூரைக்குள் வந்து   வீட்டு உட்புறத்துக்கு வரும்  தொலைபேசி லைனுக்குக் கொண்டு வந்துருவாங்களாம். அதன்பின் மோடம், ரௌட்டர் எல்லாம்  வீட்டுக்குள்  ஃபோன் ஜாக் ,பவர் பாய்ண்ட் இருக்குமிடத்தில் வச்சுருவோமுன்னு சொல்லி  விளக்கினார். நாங்களும் வீட்டுக்குள் வரும் இடம்  எங்கிருக்கணும் என்று சொன்னோம். எதாவது வீட்டுக்கு டேமேஜ் ஆனால் ரிப்பேர் செலவு  அவுங்களுதுன்னார்.  அதுக்காக ஒன்னயும் உடைச்சுடாதீங்கன்னேன். ஒப்பந்ததில்  கையெழுத்தாச்சு.







எதாவது  கேள்வி இருக்கா?ன்னார்.  உடனே கேட்டுட்டேன். "ஏற்கனவே ப்ராட்பேண்ட் கனெக்‌ஷன் போட்டுருக்கோமே... அதுலேயே இதையும் சேர்க்கப்டாதா?  நூறு இடத்துலே தோண்டணுமா? அதுவும் நம்மூட்டு எல்லைக்குள்!"

"முடியாதுங்களே. அது காப்பர். இது ஃபைபர் க்ளாஸ். "


ஏப்ரல் பத்து, வெள்ளி  காலை ஒருத்தர் வந்து வாசல் கேட் பக்கம்  ட்யூப் வச்சுருக்கும் இடத்தில் இருந்து  வீட்டின் வெளிப்புற சுவரில்  வைக்கப்போகும்  ஹௌஸ் எண்ட்ரி பாக்ஸ் வரை இருக்கும் இடத்தில் ஒரு ட்ரெஞ்ச் வெட்ட ஆரம்பிச்சார். எவ்ளோ ஆழம் என்றேன்.  300  எம் எம். ஓக்கே ஒரு அடின்னேன்.  நியர்லி ஒரு  அடி இருக்கலாமென்றார்.   ஹாஹா..... 300  ஒரு அடிதான் என்றதும்  ஒரு பத்துவிநாடி யோசிச்சவர் இருக்கலாம் என்றார்!





பள்ளம்தோண்டி ட்யூப் ஒன்றை புதைச்சு வச்சுட்டுப்போனார். இங்கெல்லாம் வேலையை செஞ்சு முடிச்சு  அந்த இடத்தை முன்பிருந்தது போலவே வச்சுட்டுப்போகணும். போனார்.



கடைசி விஸிட்  ஏப்ரல் 13..  காலை ஒரு பத்துமணி அளவில் ட்ராஃபிக் மேனேஜ்மெண்ட் ஆட்கள் வந்து  தெருவெங்கும்  ட்ராஃபிக் கோன்களை வச்சுட்டு  ஸ்டாப், கோ  சிக்னல் வச்சு  வண்டிகளை ஒழுங்குபடுத்த ஆரம்பிச்சாங்க. ஒரு நாலைஞ்சு ட்ரக், டிக்கர்  எல்லாம் வந்து நின்னதும்  ஒரு ப்ராட்பேண்ட் போடவா இவ்ளோ  அமர்க்களமுன்னு ஆயிருச்சு. வெளியே போய் விசாரிச்சால்.....  எதிர்சாரிக்குப்போகும்  தண்ணீர் பைப்லைன் சின்னதா இருக்குன்னு பெரிய குழாய் மாத்தறாங்களாம்.

பனிரெண்டே காலுக்கு  ஒரு வண்டி வந்து வீட்டின் முன் நின்னது.  உள்ளே இருக்கறவர் நிதானமா  ஸாண்ட்விச் மென்னுக்கிட்டு உக்கார்ந்துருக்கார்.  தெருவில்200 மீடர் தாண்டி  இருக்கும்  ரோடு ஸைட் கேபினெட்ட்டில் இருந்து  ஒயர் ஊதும் Bப்ளோயராம்.  லஞ்சு டைமுன்னு  சொன்னார்.


கோபாலுக்கு ஃபோன் செஞ்சு  வந்தாச்சுன்னேன். கிளம்பி வந்தார்.  அதுக்குள்ளே இன்னொரு வண்டியும் வந்தது.  இவர்தான்  நம்ம வேலை செய்யப்போறார்.  அவரிடம் போய் பேசிய கோபால் உள்ளே வந்து,  வந்தவர்  ஒரு தமிழ்க்காரர் என்றார்!  பேர் என்னவாம்? 'ஜே'ன்னார்.


அப்ப சாட் லைனில் நம்ம கொத்தனாரோடு பேசிக்கிட்டு  இருந்தேன். வேலை நடக்குது. வந்தது  தமிழ்க்காரர் என்றதும்.... 'உங்களுக்குன்னு  வர்றாங்க பாருங்க. இன்ட்டர்வ்யூ எடுக்கலையா'ன்னார். தோ....போறேன். பதிவுக்கான மேட்டர் இல்லையோ!

உடனே போய்ப் பார்த்தேன்.விவரம் எல்லாம் சேகரிச்சாச்சு.  பெயர் பூவண்ணன் . அப்பா பெயர் ஜெயராமன்.  வெள்ளைக்காரனுக்கு  பெயர் சொல்லக் கஷ்டம் என்பதால்  ஜே ஆகிட்டார்!   நல்ல வேளை 'பூ'ன்னு வச்சுக்கலை:-))))))  தப்பிச்சார்!
 சிங்காரச் சென்னையில் சாலிகிராமம் வீடு. ஆக்லாந்தில்  சிலவருசம் வேலை செஞ்சுட்டு (அக்கா இருக்காங்களாம்)  இப்போ ஃபைபர் போடும் கம்பெனியில் ஒப்பந்தம் கிடைச்சுருக்கு.  மனைவியும் மகளும் வந்து எட்டு மாசமாறது.12 வயசு  மகளை இங்கே பள்ளிக்கூடத்தில் சேர்த்தாச்சு.  ஒருநாள் கூட்டிட்டு வரச்சொன்னேன்.

ரோடு சைடில் இருக்கும்  டிஸ்ட்ரிப்யூஷன் கேபினெட்டில் இருந்து  ஃபைபர் ஆப்டிக் ஒயரை  Bப்ளோ பண்ணி நம்மூட்டு கேட்டுக்கருகே வச்சுருக்கும்  சின்ன ட்யூப் மூலம்  வீட்டு எல்லைக்குள் அனுப்புனாங்க. அங்கிருந்த ஊதுனது மெதுவா....இங்கே  அடுத்த முனையில்  இணைச்சுருந்த ஒரு சாஃப்ட் ட்ரிங்க் பாட்டிலுக்குள் முளைச்சு வந்துச்சு:-)  தூசி தும்பு படக்கூடாதோ?







இதுதான் அந்த ஃபைபர்னு காமிச்சார் கோபால். பூவண்ணனோடு பேசிக்கிட்டே சித்தாள் வேலை செய்வதைப் பார்த்தேன்:-)   உபகாரி! அப்புறம் நம்ம  கூரைக்குள்  போய்  ஒயரை இழுத்து  வூட்டுக்குள்ளே அனுப்பி, மறுபடி வீட்டுக்குள் வந்து  இணைப்பு கொடுத்தாச்சு. முந்தி ஒரே  ஒரு மோடம் மட்டுமே. இப்ப  ஒட்டைக்கூத்தனுக்கு ரெட்டைத்தாப்பாள் என்றமாதிரி ரெண்டு  சமாச்சாரம் . 24 மணி நேரமும் மினுக்மினுக்ன்னு பச்சை விளக்குகளின்  ஆட்டம்.  நைட் லேம்ப் !




எல்லாம் முடிஞ்சதும்  செக் பண்ணிப்பார்த்து ஓக்கே சொன்னார் பூவண்ணன்.
டௌன்லோட் ஸ்பீடு 31.40 Mbps
அப்லோட் ஸ்பீடு  11.06 Mbps.

அப்பதான் இன்னொரு இளைஞரும்  வந்து சேர்ந்தார். நம்ம  பூவண்ணனிடம் வேலை கற்றுக்கொள்ளும் அப்ரண்டீஸாம். வேலை முடியும் சமயம் டான்னு கரீட்ட்டா வந்தால்....வெளங்கிரும். பெயர்  மைக். அயர்லாந்துக்காரர். எங்கூரில் நகர நிர்மாணம் நடப்பதால்  ஸ்கில்டு ஆட்களுக்கு வேலை வாய்ப்பு  இப்போ அதிகம்.  வேலை கத்துக்க வந்தாலும்  வரவேற்புதான்.

சாயா குடிக்கிறீங்களான்னா.... மைக் பயந்த முகத்தோடு வேணாமுன்னார்:-) இங்கெல்லாம் வீட்டுலே எதாவது வேலைக்கு வரும் நபர்களுக்கு நாம் ஒரு உபசாரமும் பண்ணத்தேவை இல்லை. எங்கும் எதுக்கும் டிப்ஸ் கூட கொடுக்க வேணாம். Tips இல்லாத நாடுகள் நியூஸியும் ஆஸியும். அதனால் யாரும் தலையைச் சொறியக்கூட மாட்டாங்க.

நம்ம  ப்ரேயர் ரூமைப் பற்றி முதலில் வந்து பேசிட்டுப் போனவர் பூவண்ணனுக்கு இங்கே அஸைன்மெண்ட் ஆனதும்,  'மைண்ட் ப்ளோயிங் ப்ளேஸ். யூ வில் லவ் இட் 'என்று சொன்னாராம். கூட்டிப்போய் காமிச்சேன்.  பெருமாளுக்கு  தண்டனிட்டு வணக்கம் செஞ்சார்.

'தமிழ்க்காரர் வீட்டுக்குத் தமிழ்க்காரர்தான்  அல்ட்ரா ப்ராட்பேண்ட் போட்டுத்தரட்டுமுன்னு ஆளை அனுப்பினேன்'னு  பெருமாள் சொன்னமாதிரி இருந்துச்சு.

இனி மொத்த நாட்டுக்கும் போட்டுமுடிக்கணும். 2017 இல் முடிஞ்சுருமாம். அதுவரை  வேலை உறைப்பு!  வேறெந்த நாட்டில் ஃபைபர் ஆப்டிக் அல்ட்ரா ப்ராட்பேண்ட் , நாடு முழுசும் போட்டுருக்காங்கன்னு பார்த்தால்  முதலிடம் சிங்கைக்கு! நம்பர் ஒன்!

சரி...போய் தண்ணி வருதான்னு பார்த்துட்டு எதாவது ஆக்கி வைக்கிறேன்.

PIN குறிப்பு: தொழில்நுட்ப சமாச்சாரமெல்லாம் புரியற மாதிரி
 எனக்குச் சரியா எழுதவரலை. முடிஞ்சவரை செஞ்ச முயற்சி. 

அரைமுட்டை போடும் அதிசயக்கோழி! (தலைநகரத்தில்: பகுதி 2)

$
0
0
'ரொம்ப நன்றி கிவியன். நாங்க  கார் ஏற்பாடு செஞ்சுருக்கோம். ஹொட்டேலுக்குப் போனதும் பேசறேன்'னு  சொன்னேன். நமக்கு வண்டி சாவி கிடைக்க ஒரு காமணி காத்திருக்க  வேண்டியதாப் போச்சு.

கார்பார்க் போய் வண்டியைக் கண்டுபிடிச்சுக் கிளம்பினோம். நம்ம கோபால் அடிக்கடி வேலை விஷயமா வந்துபோகும்போது  இப்படி கார் ஏற்பாடு செஞ்சுக்கறது வழக்கம் என்பதால் பாதை எல்லாம் நல்லாவே தெரிஞ்சுருக்கு(ம்)  என்றாலும்...........  கூட நாம் எதுக்கு இருக்கோம்? அப்பப்ப  ரைட் லேனுக்கு  போங்க. இன்னும் கொஞ்ச தூரத்துலே லெஃப்ட் எடுக்கணும் என்றெல்லாம்  வாயால் ஓட்டிக்கிட்டே  வந்தேன்.  எத்தனைமுறை வந்தால்தான் என்ன? அது ஆஃபிஸ்  & ஏர்ப்போர்ட் தானே?  சிட்டிக்குள்ளே இருக்கும் ஹொட்டேலுக்கு  வர்றாரா என்ன?


விமான நிலையத்தில் இருந்து  நகர மையத்துக்கு  அஞ்சு கிமீ தூரம்தான். வழியில் ஒரு  சுரங்கப்பாதையைக் கடக்கணும். ஊரைச்சுத்தி ஏகப்பட்ட மலைகளும் குன்றுகளுமா இருக்கு. அதுலே மலை ஒன்னைத் துளைத்து  பாதை போட்டுருக்காங்க. இந்த மலைக்குப்பெயர்  மவுண்ட் விக்டோரியா.

 வெள்ளையர் நியூஸி வந்து இறங்குன  சமயம்  இங்கிலாந்தை ஆண்டு கொண்டிருந்தவங்க மாட்சிமை பொருந்திய மஹாராணி விக்டோரியா அவர்களே! உடனே மலைக்கு  மஹாராணியம்மா பெயரை இவுங்க வச்சுட்டாலும், உள்ளூர் மவோரிகள் ஏற்கெனவே வச்ச பெயர் ஒன்னுமிருக்கு. Tangi Te Keo.  தமிழில் சொன்னாச் சரியா வரலைப்பா:(

மவுண்ட் விக்டோரியா டன்னல்! அறுநூற்று இருபத்திமூணு மீட்டர்  (623 ) நீளம். ரெண்டே லேன்.  ஒரே நிமிசத்தில் கடந்து போயிரலாம்.

 196 மீட்டர் உயரமான மலைக்கு ரெண்டு பக்கத்தில் இருந்தும் ரெண்டு குழுவினர்  துளைக்க ஆரம்பிச்சு  நடுவில் ஒரே இடத்தில் சந்திச்சது சரித்திர சம்பவம். கொஞ்சூண்டு தடம் மாறி வெவ்வேற திசையில் போயிருந்தால்  கதை கந்தல்!  சீச்சீ..... ரெண்டு சுரங்கம் கிடைச்சிருக்கும்:-)

ஒன்னேகால்  வருசத்துலேயே துளைச்சுக் கட்டும் வேலை முடிஞ்சு 1931 ஆம் ஆண்டு உள்ளூர் மேயரைக் கொண்டு  திறந்துருக்காங்க.ஸோ அண்ட் ஸோவால் கட்டப்பட்டதுன்னு  சலவைக் கல்வெட்டு வைக்கத் தெரியலை பாருங்க:(

இந்த இடத்தில் எங்கூர் பெருமையைச் சொல்லாட்டி எனக்குத் தலை வெடிச்சுரும், ஆமா.  எங்கூர்லே ஒரு டன்னல் இருக்குன்னு முந்தி எழுதினது யாருக்காவது நினைவு இருக்கோ? 

போர்ட் ஹில்ஸ் என்ற 330 மீட்டர்  உசரமான மலையை துளைச்சு போட்டுருக்கும் லிட்டில்டன் டன்னல் , இதைப்போல மூணு மடங்கு நீளம். கிட்டத்தட்ட  ரெண்டு கிலோ மீட்டர்! சரியாச் சொன்னால் 1970 மீட்டர். இதுதான் நியூஸியிலேயே நீளமான சுரங்கப்பாதை!  நம்ம வீட்டு விருந்தினரா வெளிநாட்டு மக்கள் யார் வந்தாலும்  சுரங்கப்பாதையைக் கொண்டுபோய் காமிக்காமல் இருக்கமாட்டொம்லெ:-) என்னமோ நாங்களே கடப்பாரையைப் பிடிச்சு தோண்டுன பெருமை!

போனவருசம்தான் (2014)  பொன்விழா கொண்டாடுனோம்.  கட்டுனகாலத்தில்  இதுக்குள்ளே போக சுங்கவரின்னு  20 செண்ட் கொடுக்கவேண்டி இருந்துச்சாம். 15 வருசத்துலே கட்டுன  செலவுக்கு சரியாப்போச்சுன்னு  1979 லே  சுங்கம் வாங்கறதை  நிறுத்திட்டாங்க. (சுங்கம் தவிர்த்த சோழனிடம்.........  வசனம் நினைவுக்கு வருது.... எப்பப்பார்த்தாலும்  சினிமா சினிமா, இந்த பாழாப் போன சினிமா ....)

முந்தி ஒரு காலத்தில் க்ரிக்கெட் விளையாடும் இடமா இருந்த பேஸின் ரிஸர்வ் ( இப்ப இங்கே க்ரிக்கெட் ம்யூஸியம் இருக்கு) தாண்டி நகர மையத்துக்கு வந்து சேர்ந்தோம். ஏற்றமும் இறக்கமுமா சாலைகள்.

 (என்னதான் சொன்னாலும் எங்கூர் மாதிரி வருமா? கேண்ட்டர்பரி ப்ளெய்ன்ஸ்ன்னு சமதளமாவே இருக்கும் ஊர்ப்பா நம்மது. அதான் சைக்கிள் ஓட்டுவது சுலபமுன்னு சைக்கிளுக்குன்னே சாலையில் தனி லேன் போட்டு வச்சுருக்கொம்லெ!)

சிட்டிமேப்பைக் கையில் வச்சுப் பார்த்துக்கிட்டு சாலைகளில் எங்கெங்கெ திரும்பணுமுன்னு வழி சொல்லிக்கிட்டே  (யாரோ சொன்னாங்களே... பெண்களுக்கு  மேப் பார்த்து வழிசொல்லத் தெரியாதுன்னு.... நெசமாவா?) நாம்  ஹொட்டேலைக் கண்டுபிடிச்சோம். சரியாச் சொன்னால்...ஹொட்டேல் பெயர் போட்ட அடுக்குமாடி கார் பார்க்கை:-)  கிடைச்ச இடத்தில் வண்டியை  நிறுத்திட்டு எங்கே இருக்கோமுன்னு பார்த்தால் ஒன்பதாம் மாடி. நினைவு வச்சுக்கணும்.

லிஃப்ட்கிட்டேவரும்போது, கார்பார்க் ஊழியர் ஒருத்தர்  அங்கே இருந்த பார்க்கிங் மீட்டர் மெஷீனைக் காமிச்சு  'இதுலே  காசு போட்டு ச்சீட்டு எடுத்து அதை வண்டி டேஷ் போர்டில் வச்சுருங்க'ன்னார். அதான் நம்மூர்லேயும் இருக்கே!  வீக் எண்ட் ஸ்பெஷலா ராத்திரி 11 வரைக்கும்  மூணு டாலர்னு எழுதி இருக்கேன்னு காசைப்போட்டால்  அது  காசைத் துப்பிருச்சு. இன்னொரு முறை போட்டாலும் அதே!

அந்த ஊழியர் வந்து 'காசு ஏன் எடுக்கலைன்னு தெரியலை. க்ரெடிட் கார்டுலே போட்டுருங்க'ன்னார். கார்டுலே  போட்டால்  தண்டனையா ஒரு அம்பது செண்ட்  எடுத்துக்குமாம். தொலையுது போன்னு  சீட்டு வந்ததும்  காரில்  வைக்கத்திரும்புனா.... அதே ஆள் திரும்ப வந்து 'நீங்கஹொட்டேல் விருந்தினர் என்றால்  காலை எட்டுவரை வண்டியை இங்கேயே நிறுத்திக்க  வசதி இருக்கு'ன்னார்.  அரைத்தூக்கத்துலே எழுந்து வரவேணாமேன்னு அந்த நபர்  பட்டனை அழுத்த நாங்க இன்னொரு முறை கார்டு  மெஷீனுக்குள் போட்டோம். இன்னொரு மூணரை.  ஒரு டாலர் தண்டம்.  ரெண்டு சீட்டையும் வெளியே தெரிவது போல் வச்சுட்டு  வந்தார் கோபால்.  இது  இங்கே முதல் கொள்ளைன்னு அப்போ தெரியாது நமக்கு!

பொட்டியை இழுத்துக்கிட்டு லிஃப்ட்டுக்குள் நுழைஞ்சால் ஹொட்டேல் லாபி எந்த மாடின்னு  தெரியலை. எழுதிப்போடக் கூடாதோ? எப்படியும் தரைத்தளமா இருக்குமுன்னு  கீழேவந்தால் அதுவும் கார் பார்க். அப்புறம் ஒவ்வொரு மாடியாப் போறது, வெளியே எட்டிப் பார்த்தால் கார் பார்க் என்னும் விளையாட்டில் எட்டாவது மாடி வந்துச்சு .  இவர் பெட்டியோடு  உள்ளே இருந்து லிஃப்ட் கதவை  ஓப்பன்  மோடில் வச்சுருப்பார். நான் வெளியே ரெண்டெட்டு வச்சு  பார்த்துட்டு வருவேன்:-) இங்கேயும்  கார் பார்க். என்னடா கதை? நாம் ஒன்பதில்தானே  வண்டியை விட்டுருக்கோமேன்னு ...  நினைச்சுக்கிட்டே திரும்பிப்பார்த்தால்  வலப்பக்கம்  ஒரு ஆங்கிளில் ட்ராவல் லாட்ஜ் பெயர் தெரிஞ்சது.  அட ராமா......  ஒரு போர்டு வச்சுருக்கப்டாதோ?

வரவேற்புக்குப் போனோம். வழக்கமான பதில்.  செக்கின் டைம் பகல் 2 மணி.  இன்னும் உங்க அறை தயாராகலை. அடிஷனல் நியூஸ்: இப்ப  ஈஸ்ட்டர்  ஹாலிடேஸ் பாருங்க. அதனால்  வேலையாட்கள் குறைவு.

யம்மாடி.... நான் என்னான்னு  சொல்வேன். இப்ப மணி  பதினொன்னே முக்கால். ரெண்டு மணி வரை தெருவுலே சுத்தச் சொல்றியா?  எங்கேன்னு போவேன்?

"பெட்டியை அங்கேயே  க்ளோக் ரூமில் வச்சுட்டு  நீங்க  வெளியே போய் எதாவது பார்க்கணுமுன்னா பார்த்துட்டு வாங்களேன்.  உங்களுக்காக அறையை ஒரு ஒன்னரை  மணிக்குத் தந்துடறேன்."

மகராசி. நல்லா இரு.

எதிர்ப்பக்கம் கை  காமிச்சு 'அந்த லிஃப்ட்டுலே கீழே போங்க. இது  தெருப்பக்கம் கொண்டு விட்டுரும். வரவேற்புக்கு எண் ஏழை  அழுத்தவும்!'

கீழே போறோம். கதவைத் திறந்து வெளியே வந்தால்  நிறைய படிகள் இறங்கிப்போனால்தான் தெருவே வருது!  போதுண்டா சாமி! தெருவுக்குப் போய் சேரும் வழியில்  எஜமானரும் அவருடைய செல்லமும்  இருக்காங்க. பெயர் சொல்லிக் கூப்பிடவரை நோக்கி  ஆவலுடன் தரையில் 'கால்கள் பாவாமல்' தாவிக் குதிக்கும் செல்லம்! வெங்கலச்சிலை!

படத்தைப் பாருங்க...... இவுங்களுப் பின்னாலே ஹொட்டேலுக்குப்போகும் படிகளையும் பாருங்க:(

நகரின் முக்கியமான தெரு இது.  Lambton Quay. பெரிய பெரிய கடைகளும்  வங்கிகளும் ரெண்டுபக்கமும் நிறைஞ்சு இருக்கு.  எங்கூர் கணக்கில் இதுதான் எங்க கொழும்புத் தெரு:-) திரும்பிவர ஒரு அடையாளம் வேணுமேன்னு பார்த்தால் எதிரில் ஸ்டார்பக் காஃபிக் கடை!  வலமா இடமான்னு பார்த்து இடம் எடுத்தோம்.  இன்றைக்கு  சனிக்கிழமை. வீக் எண்ட் சனிக்கிழமைதான். நேற்றைய குட் ஃப்ரைடே போலவோ, நாளைய ஈஸ்ட்டர் போலவோ  ரிலிஜியஸ் முக்கியம் இல்லாதது.  கொஞ்சம் கடைகள் திறந்து வச்சுருக்காங்க.

இங்கெல்லாம்  பெரிய கடைகள்  நாடு முழுசுக்குமான செயின் ஸ்டோர்ஸ் என்பதால் அவ்வளவா ஆர்வமில்லை. இதே பொருள்  இதே கடையில்  நம்மூரிலும் இருக்குதானே? கடைகளில் பொம்மை மனிதர்கள் வரப்போகும் குளிர்கால ஃபேஷன் உடைகளை  அணிஞ்சு தரிசனம் கொடுத்துக்கிட்டு இருக்காங்க.  ஒருமாதிரி  எலுமிச்சை நிறம் கலந்த இளம்பச்சையாம் இந்த வருசக் கலர்.

ஊரூலகமெல்லாம்  இவுங்க சொல்ற வண்ணத்தைத்தான் போட்டுக்கிட்டு அலையும். இல்லைன்னா ஜாதிப்ரஷ்டம் ஆகிடாதோ? (வீட்டுக்குப்போய் நம்ம உடுப்புகளில்  இந்த நிறம் இருக்கான்னு பார்க்கணும். இருக்குமுன்னு தோணுது. எதாயிலும் பச்சை வகைதானே:-))))

நடைபாதையில்   பஸ்க்கர்ஸ் எனப்படும் ஆட்கள் அங்கங்கே உக்கார்ந்துருக்காங்க. ஜக்ளிங், கிதார் வச்சுக்கிட்டு பாட்டு,  சீன ஸ்டைல் கொட்டாங்குச்சி வயலின் இப்படிக் கலைகளைக் காமிச்சு மனசை மகிழ்விக்கும் மக்களாம்.  எங்க ஊரில் இப்படி எல்லாம் இல்லவே இல்லை. இந்தக் கூட்டத்தில் ஒன்னுமே செய்யாம ஒரு நாற்காலியைப்போட்டு உக்கார்ந்திருக்கும் சிலரும் இருக்காங்க. 'தருமம் போடுங்க ஐயா' என்ற குரல் மட்டும் இல்லை.  'எதாவது வேலை இருந்தால் சொல்லுங்க'ன்னு கூட எழுதி வச்சுக்கிட்டு ஒரு பெண்மணி.  படமெடுத்தால் நல்லா இருக்காதுன்னு  ச்சும்மா இருந்துட்டேன்.

ஒரு அரைக்கிலோ மீட்டர் வரை  வேடிக்கை பார்த்துக்கிட்டே நடந்து போனோம்.  போதுமுன்னு  சாலைக்கு எதிர்பக்கம் போய் திரும்பி  நடந்தோம். என்னென்ன எந்தப்பக்கம் என்ற விவரங்கள் எல்லாம் பக்காவா எழுதி வச்சுருக்காங்க.  இந்த நாட்டில் இதுதான் ஒரு கஷ்டம், வேணுமுன்னு விரும்பினாலும் காணாமப்போக முடியாது. வசதியான இடம் இருக்கேன்னு ஒரு  பய  நோடீஸ் அடிச்சு இதன்மேலே  ஒட்டிற மாட்டான்:(

இந்த ஊரும் நிலநடுக்கத்துக்குப்பேர்  போனது! இப்போ ரெண்டு வருசத்துக்கு முன்னே  வெலிங்டன் நகரிலிருந்து  பதினோரு கிமீ தூரத்தில் நடந்த பூகம்பத்தால் இதே தெருவில்  முப்பத்தி அஞ்சு   பெரிய கட்டிடங்கள் இடிஞ்சு சாலை முழுசும் கண்ணாடித்துண்டுகள் சிதறிக் கிடந்துச்சாம். இதை நினைவூட்டுவது போல்  ஒரு அமைப்பு  தெருவில்  கிடக்கு .

1855 வது ஆண்டு  ஒரு பெரிய நிலநடுக்கம் வந்து போனதுன்னு  ஆவணங்கள் சொல்லுது.  வெள்ளையர் வந்தபின் வந்த முதல் நடுக்கம். அப்போ அவ்ளோ பெரிய கட்டிடங்களோ, நிறைய மக்கள் தொகையோ இல்லாததால்  உயிர்ச்சேதம்  ரொம்ப இல்லை.  அஞ்சு முதல் ஒன்பது பேர் மரணமாம்.  எப்படி  இப்படி ஒரு கணக்கும் இல்லாமன்னா....   அந்தப்பகுதியில் இருந்த மவோரிகள் சிலர் இறந்த விவரம் சரியானபடி கிடைக்கலைன்னு சொல்றாங்க.

வெலிங்டன் நகரம் நிறுவி பதினைஞ்சு வருசம் ஆனதையொட்டி ரெண்டுநாள் விடுமுறை  இருந்துருக்கு.  ரெண்டாம் நாள்  இரவு  ஒன்பது மணிக்குத்தான் பூமாதேவி ஆடத்தொடங்கி இருக்காள்:(   ஆஃப்டர்ஷாக் மட்டுமே மாசக்கணக்கில் இருந்துருக்கு.  இந்த ஃபால்ட் லைன் சமாச்சாரங்கள் எல்லாம் கண்டுபிடிக்கப்படாத காலக் கட்டம் அது! நகரம் என்னன்னா.... அதே ஃபால்ட்லைன் மேலே உக்கார்ந்துருக்கு:(

சிப்பிகள் என்றொன்னு செஞ்சு வச்சுருக்காங்க. கலைக்கண்ணோடு பார்க்கணும்! இந்த முக்கிய சாலையில் அங்கங்கே சிற்பங்களுக்கும்  சிலைகளுக்கும் பஞ்சமே இல்லை! உலோக  உடுப்பில் ஒரு பொண்ணு நல்லாவே இருக்காள். மிட்லேண்ட் பார்க் என்ற ஷாப்பிங் செண்டர் வளாகத்திலொரு  முட்டை வச்சுருக்காங்க.  இது எங்கூர் ஒட்டைச்சிவிங்கி போல!  பல இடங்களில்  இருக்காம்.  இதுக்கு ஒரு apps வேற  வச்சு  நகரம்முழுசும் அங்கங்கே வச்சுருக்கும் ஈஸ்ட்டர்  முட்டைகளை வேட்டையாடணுமாம். இதுலே கடைசியில் கிடைக்கப்போகும் வருமானம்  ஆக்லாந்து நகர் குழந்தைகள் மருத்துவமனைக்குப் போகுதாம்.








புல்வெளிகளில் புறாக்கூட்டங்கள். இதுலே ஒன்னு மட்டும்  வேறு நிறத்தில்! கண்ணில் பட்டவைகளை க்ளிக்கிக்கிட்டே ப்போறோம்.

ஒரு கடை மட்டும்  எங்க ஊரில் இல்லாதது.  கிர்க்கடேல் & ஸ்ட்டெய்ன்ஸ் லிமிட்டட்.  1863 இல் ஆரம்பிச்சது.  நியூசியில்  வெள்ளையர் வந்து செட்டில் ஆகத் தொடங்குன  சமயம். உள்ளே நுழைஞ்சோம். ஏகப்பட்ட நல்ல நல்ல பொருட்கள். விலையும் அதைப்போலவே. கடைக்குள்ளேயே போய் விண்ட்டோ ஷாப்பிங் மட்டும்தான் செய்ய முடியும்:(  ஆனா சும்மாச் சொல்லக்கூடாது.... அட்டகாசமான  பொருட்கள்.


கிளிக்கூண்டுலே இருக்கும்  கிளியை வெளியே எடுத்தவுடன், கீ கீன்னு மெல்லிசா கூப்புடுது. உள்ளே திரும்ப வச்சுட்டால்  சைலண்ட் ஆகிரும்.  இந்தப் பறவை ஒரு டீ வடிகட்டி!  இதை மட்டும் வாங்கினோமுன்னா.... அப்புறம் வாழ்க்கையில் டீ குடிக்கக் காசே இருக்காது:-)

இதுக்குள்ளே ரெண்டு முறை நம்ம கிவியன் செல்லில் கூப்புடுட்டார்.  'எங்கே இருக்கீங்க?  நான் வந்து உங்களை வீட்டுக்குக் கூட்டிப்போறேன். சாப்பாடு இங்கே'ன்னார்.

'நாங்க ச்சும்மா ஊர்ச்சுத்திக்கிட்டு இருக்கோம்.  (கன்னத்தைத் தடவியபடி) அறை இன்னும் கிடைக்கலை. ஒன்னரைக்குக் கிடைக்கும். சாப்பாடு ப்ரச்சனையே இல்லை.  இங்கேயே எதாவது பார்த்துக்கறோம். நோ ஒர்ரீஸ் . அறைக்குப் போனதும் தாக்கல் விடறோம்.'

ஈஸ்ட்டர் ஷாப்  என்று மூன்றாம்  மாடியில்  தனி இடம். எட்டிப்பார்த்தோம். கோழி ஒன்னு  உக்கார்ந்துருக்கு. அதுக்குப் பக்கத்தில் இருக்கும் குழாய் உண்டியலில் ஒரு டாலர் நாணயத்தைப் போட்டால்... கொக் கொக் என்று சின்னக்குரல் கொடுத்துக்கிட்டே மெள்ள எழுந்து  உடம்பை ஒரு ஆட்டு ஆட்டி, பிரஸவ வலியில்  சின்னக் கூப்பாடுபோட்டு உக்கார்ந்து க்ளக்ன்னு ஒரு முட்டை போட்டு  அடுத்துள்ள வாளிக் கிண்ணத்தில் வெளியே தள்ளுது.  மார்ஷ்மல்லோ எக்ஸ். அதுவும்  முட்டையை  நெடுக்குவாக்கில் ரெண்டாப் பிளந்து ஒவ்வொரு பாகத்தையும் தனித்தனியா  ஃபாயிலில் சுற்றிவேற தருது!   க்ரேட் கோழி!   நானும் ஒரு டாலரைப்போட்டு கோழி இட்ட முட்டைத் துண்டுகள் வாங்கிக்கிட்டேன். சின்னப் பசங்க கூட்டம் முழுசும் இங்கேதான்:-)


ஆளுக்கு அரை முட்டையைத் தின்னபடியே இன்னும் கொஞ்சம் நடந்து, நம்ம ஹொட்டேலையும் கடந்து போனால்  குறுக்கே இன்னொரு சாலை. வில்லீஸ் தெரு. முனையிலேயே  'டேஸ்ட் ஆன் வில்லீஸ்'என்று ஒரு ஃபுட் கோர்ட். கட்டிடத்தின்   அடியில் பேஸ்மெண்டில்  கட்டி விட்டுருக்காங்க.

இதைப்போன்ற இடங்களைப்  பார்க்கும்போதெல்லாம்  சென்னை மெரினாவில்  காந்தி சிலைக்குப் பக்கத்தில் அலங்காரத் தோட்டம் போட்டுருக்காங்களே... அதுக்கடியில் இதைப்போல ஒன்னு கட்டி விட்டு, தீனிக்கடைகளை இதுக்குள்ளே அனுப்பி இருந்தால்  கடற்கரையாவது  சுத்தமா இருக்குமே என்ற ஏக்கம் வழக்கம்போல் வந்து தொலைச்சது:(

உள்ளே நமக்கான உணவு எதுவும் இல்லை. துள்சியும் மூடிக்கிடக்கு.   வீக் எண்ட் விடுமுறை. சிட்டிக்கு ஆட்கள்  வரமாட்டங்களாமே! கஸ்ட்டமர்ஸ் முழுக்க முழுக்க CBDயில் வேலை செய்யும் மக்கள்ஸ்தானாம்!  வெளியே வந்து எதிர்வாடையில் இருக்கும் ஸப்வேயில்  ஆளுக்கொரு  ஆறு இஞ்ச்  வெஜிடபிள் ஃபில்லிங்ஸ் வச்ச ப்ரெட்டைக் கையில்  வாங்கிக்கிட்டு ஹொட்டேலுக்குத் திரும்பிப் போனோம். மாடி எண் ஏழு!

அறை ரெடி. இப்ப அதே லிஃப்ட்டில்  பத்தொன்பதாம்  மாடிக்குப்போகணும். அறை எண் 1903:-)

சாண்ட்விச் தின்னுக்கிட்டு இருக்கும்போது மறுபடியும் கிவியனின் கால். வந்துட்டாராம்.   கீழே இருக்கேன்னதும் அறைக்கு வரச்சொல்லி  எண்களை ஒப்பிச்சாச்சு.  காமணி நேரமாச்சு ஆளைக் காணோம்! சரி நாமாவது போய்ப் பார்க்கலாமுன்னு நினைக்கும்போது அழைப்பு மணி. வந்துட்டார்! போனமுறை பார்த்ததுக்கு ரொம்பவே இளைச்சுப்போய் இருந்தார். பயங்கர  எக்ஸர்சைஸ் போல!

 ஹொட்டேலுக்கு வழி தெரியாமல் சுற்றிக்கிட்டு இருந்தாராம். போச்சுரா! ரெண்டு நிமிசப் பேச்சுக்குப் பின்  'தங்க்ஸ்'காரில் வெயிட்  செய்யறாங்கன்னதும்,  'அக்கா'வைத் தூக்கி அவர் கையில் கொடுத்துட்டு,  கீழே போனோம்.


ஒல்லி உடம்போடு விடுவிடுன்னு நடக்கும் அவர் பின்னால் ஓடறோம். ஹொட்டேலை வலம் வர ஏதோ வேண்டுதல் போல!  படிகளில் மளமளன்னு ஏறிப்போறார். லிஃப்ட் இருக்கான்னு ஒன்னுரெண்டு முறை அங்கங்கே கட்டடத்துக்குள் போய் எட்டிப் பார்த்துட்டு,  இங்கேவழி கொஞ்சம் குழப்பம்தான். பேசாம நான் வந்த வழியிலேயே போயிடலாம் என்றார்.

ஏத்தத்தில் ஏறிப்போக முடியாமல் மூச்சு இறைக்க , நெஞ்சு தடதடக்க  , ஆஸ்மா வரட்டுமான்னு எட்டிப் பார்க்க  துவண்டுபோய் பின்னால் போறேன். அவரைப் பார்த்து ஒரு ஒன்பதரை வருசமாகுது . இவ்ளோ நாள் காத்திருந்தது போல  பழி வாங்கிட்டாருபா!

தொடரும்...........:-)


கொரட்டி முத்தி என்னும் கன்னிமேரி மாதா ( மூன்று மாநிலப் பயணம்- தொடர் : 41)

$
0
0
  கருகுட்டியில் இருந்து  அடுத்த   ஊர் நோக்கிப் போகிறோம். கொரட்டி முத்தி   என்னும்  மாதாவின் க்ஷேத்ரம் உள்ள ஊர் இது.  ஊருக்குப்பெயரே கொரட்டிதான். நாங்க  இந்த ஊரிலும் ஒரு வருசம் இருந்துருக்கோம்!  எப்படிடா இவ எல்லா ஊர்லேயும்  இருந்தான்னு வியப்பா இருக்கா?  இங்கே வந்ததுக்குக் காரணம் ஒரு மூணரை கிமீ தூரத்தைக் குறைக்கவே!

இதுக்கு முன்னால் இருந்த முரிங்கூரில்  (!)  இருந்து கோபாலின் ஃபேக்டரிக்கு 10 கிமீ தூரம். அப்போ இதுக்குப் பயண நேரம்  அரை மணியா இருந்துச்சு.  பஸ்ஸில் போறதுதான். ட்ரெய்னிகிட்டே சொந்த வண்டிக்கெல்லாம் காசு ஏது?  அதுவும் அங்கிருந்து போகும் பஸ் எப்பவும் மூச்சுவிட இடமில்லாம அடைச்சுக்கிட்டு இருக்கும். காரணம் ஜமுனா கோட்ஸ் நூல் ஆலை.  இது மதுரா கோட்ஸ் நடத்தும் மில்தான். மில் தொழிலாளிகள் அனைவரும் கொரட்டியில் இறங்கிருவாங்க. அதுக்குப்பிறகு பஸ் கொஞ்சம் காலியா இருக்கும்.

கொரட்டியில்  வீடு  கிடைக்குமுன்னு தெரிஞ்சதும்  முரிங்கூரில் இருந்து  வீடு மாத்திக்கிட்டு வந்துட்டோம். போல் (Paul)மாஸ்ட்டர் வீடுன்னு  இதுக்கு ஒரு பெயர்.  ட்யூப்லெக்ஸ் மாடல். ஒரு வீட்டிலே  மதுரா கோட்ஸ் ஆலையில் வேலை செய்யும்  சகோதரர்கள்  குடும்பம். ஒரு ஜோடி மில்லில். இன்னொரு ஜோடியில்  அண்ணன்  போல்ஸன் டிஸ்டிலரியிலும், அண்ணி  காலடியில் ஒரு பள்ளிக்கூடத்தில்  டீச்சராகவும் இருந்தாங்க.

இந்த வீட்டு வாசல் இருக்கும் தெருவின்  இடப்பக்கம் ஒரு அஞ்சு நிமிட் நடையில் ஒரு சர்ச் இருக்கு. வலப்பக்கம்  ரெண்டு நிமிட் நடந்தா மெயின் ரோடும் அதுலே இருக்கும் பஸ் ஸ்டாப்பும் . நமக்கு  நல்ல வசதி!
கோபாலின் ஃபேக்டரியில் வேலை செய்யும் ஒருவர், அங்கே  வீடு காலி இருக்குன்னதும் போய்ப் பார்த்தோம். வாடகை என்னவோ  அப்போ கொடுத்துக்கிட்டு இருந்ததைவிட பத்து ரூ அதிகம்தான். ஆனால் வேலைக்குப் போக வர  கொஞ்சம் எளிது. பத்து நிமிச நேரமும்  கூடவே நாப்பது  காசும்  (போகவர) மிச்சப்படுத்தலாம்:-)

ஞாயித்துக்கிழமைகளில்  கொஞ்சம் லேட்டா எழுந்து கையில் காப்பியோடு வாசத்திண்ணையில் உக்கார்ந்தால்  மின்னலடிக்கும் வெள்ளை உடுப்போடு பள்ளிக்கு (சர்ச்சுக்கு)  சாரிசாரியாப் போகும்  அம்மச்சிகளைப் பார்க்கலாம்.
ஞாயித்துக்கிழமைக்குப் போகறதுக்கு வார மத்தியிலேயே ஒரு நாள், பள்ளிக்குன்னு மட்டுமே உடுத்தற வெள்ளை முண்டு, மேல்சட்டை ரெண்டையும் வாஷிங் சோடா, சவக்காரம் எல்லாம் போட்டு ஊறவச்சு அலக்கி விருத்தியாக்குவாங்க. சனிக்கிழமைஅதைப் பொட்டி போட்டுத் தேச்சு, ச்சின்னச்சின்ன ஃப்ரில் கொசுவம் வச்சு நேர்த்தியா மடிச்சு வச்சுருவாங்க.

ஞாயிறுகாலையிலே அந்தக் கொசுவம் பின்பக்கம் வரும்படியா அந்த முண்டு உடுத்து, மேல் சட்டை அணிஞ்சு ,மேல் காதுலே எப்பவும் போட்டுருக்கற 'மேக்க மோதரம்''பளிச்'ன்னு காதுலே ஆடக் கிளம்பிருவாங்க. ச்சுண்டுவிரல் தடிமனா இருக்கற இந்த மேக்க மோதரம் பார்க்கத்தான் குண்டா இருக்கே தவிர, உள்ளே 'Bபோல்'தானாம். கனமே இல்லாமத்தான் இருக்குமாம். இதை 'குனுக்கு'ன்னு சிலபேர் சொல்றாங்க. இப்ப இது ஃபேஷன் இல்லையாம். கொஞ்சம் கொஞ்சமா அழிஞ்சுக்கிட்டு வர்ற நகையாம்.

நாங்க இங்கே எங்க கேரளா சங்கத்தில்  இதையெல்லாம் சொந்தமா தயாரிச்சு (!) ஒருநிகழ்ச்சிகூட  2005 கிறிஸ்மஸ்  விழாவுக்கு நடத்தி இருக்கோம்.   

மேக்க  மோதிரம் எப்படி இருக்குமுன்னு போட்டுப் பார்த்தேன்:-)


இவ்ளோ சொல்றேனே தவிர அப்பெல்லாம்  இந்தச் சர்ச் வரை  வாக்கிங் போறதோடு சரி. ஒருநாளும் உள்ளே போய்பார்க்கத் தோணலை:(
போல்  மாஸ்ட்டர் வீட்டை விற்கப் போட்டதும்,  அடுத்த வீட்டு மக்கள் அவுங்க இருந்த வீட்டையே வாங்கிக்கிட்டாங்க. நாங்க ? வீடு வாங்கும் நிலையிலா இருந்தோம்?  வேற ஒருத்தருக்கு  விற்க முடிவு செஞ்சதும் வீடு தேடவேண்டியதாப்போச்சு. அப்பவும்  நம்ம கோபாலின்  கேபிள் ஃபேக்டரியில் வேலை செய்யும் ஒருத்தர்தான்  உதவிக்கு வந்தார்.  இந்த வீட்டுக்குப் பின்பக்கமிருக்கும் தெருவில் அவருடைய  அக்கா வீடு வாடகைக்கு தயாரா இருக்குன்னதும் போய்ப் பார்த்தோம். இந்த வீட்டில் இருந்து பார்த்தாவே தெரியும் வீடுதான். ரெண்டு தெருவுக்கும் இடையில் ஒரு அகழி (!) இருந்துச்சு.
உடனே அங்கே போயிட்டோம். நல்ல ஜாலியான  குட்டி மக்கள்ஸ் உள்ள வீடு அது.  அன்னம்மா ச்சேச்சிதான் வீட்டு உடமஸ்த்தர். கணவன் மனைவி  கோர்ட்ஸில்தான் வேலை. மூணு பிள்ளைகள். ஜோஷி,ஜோஜோ மின்னி. இதுலே ஜோஜோ பள்ளிக்கூட வயசு ஆகாததால் என் சங்காதியாக எப்போதும் என்னுடன்.  சுருக்கத்தில் அவன் ஒரு ரஜ்ஜூ:-)

அவர்களையெல்லாம் பார்க்கப்போகும்  மகிழ்ச்சியை கோபாலுடன் பகிர்ந்துகிட்டே அந்த 6.5  கிமீ பயணித்தோம். இப்ப இந்த சாலை  ஹைவே ஆனதால் கொரட்டிக்குப் போகும்  எக்ஸிட் இருக்கான்னு கவனிச்சுப் பார்த்ததில் வழி  தெரிஞ்சது. அதுவே ஒரு மேம்பாலத்துலே போறமாதிரி இருக்கேன்னு பார்த்தால் வண்டிபோய் நின்னது ஒரு பெரிய தேவாலயத்துக்கு முன்னே!

சட்னு பார்த்தால் 'பள்ளிவாசல்'போல் தெரிஞ்சது. ஆனால் சிலுவை கண்ணில் பட்டதே!   இந்தப்பக்கம் பளபளன்னு உசரமா ஒரு கொடிமரம். அதன் உச்சியிலும் ஒரு சிலுவை!  இங்கே கொரட்டி முத்தி பள்ளின்னு  விசாரிக்கறதுக்குள்ளே  கைகூப்பி நிற்கும் மாதா கண்ணாடிக் கூண்டுக்குள் இருப்பதைப் பார்த்துட்டேன்.

கோவில் பரிசரம்(சுற்றுப்புறம்)எல்லாம் கொம்ப்ளீட்டாச் சேஞ்சாகிக்கிடக்கு! ஏகப்பட்ட கடைகள். பார்த்தால் திருவிழாக் கடைகளைபோல் தெரியுது. சட்ன்னு நினைவுக்கு வந்தது இது அக்டோபர் மாசமில்லையோன்னு. 'அக்டோபர்  8 கழிஞ்சுவருன்ன  ஞாயறாழ்ச்ச'ன்னு   38 ஆண்டுகளுக்கு முன் பார்த்த தகவல் பலகை நினைவுக்கு வந்துச்சு. காலப்போக்கில்  ஞாயிறு மட்டும் நடந்த திருவிழா இப்போ அக்டோபர் 8 முதல் 26 வரை இந்தவருசம் நடந்துருக்கு.  அடடா.... ரெண்டுமூணு  நாளைக்கு  முன்பே  வராமப் போயிட்டோமேன்னு  இருந்தது உண்மை.

கொரட்டி முத்தின்னு சொல்லும் இந்த மாதாவை  கொரட்டித் தம்புராட்டின்னும் சொல்வாங்க. கிறிஸ்துவர்கள் மட்டுமில்லாமல் ஏராளமான ஹிந்துக்களும்  பள்ளிக்கு வந்து போவது உண்டு. அதுவும் திருவிழாக் காலத்துலே  வேண்டுதல்கள் செலுத்த வருவாங்க. இப்ப இதுக்குப் பேரு செயிண்ட் மேரீஸ் ஃபோரேன் சர்ச்!  (St Mary's Forane Church, Koratty) வேளங்கண்ணி மாதா,  ஃப்ரான்ஸ்லே இருக்கும்  லூர்து மாதாவைப்போல்  நம்ம கொரட்டி முத்தி மாதாவும்  சிலபலருக்குக் காட்சி கொடுத்துருக்காங்கன்னு  சொல்றாங்க.  ஹிந்துமதத்திலும் சில சாமிகள் சிலருக்கு ப்ரத்யக்ஷம் என்று  கேள்விப்பட்டுருக்கேன். அந்த சிலரில் நான் இல்லையாக்கும், கேட்டோ!

கோவிலுக்குள்ளே போனோம். நடந்து முடிஞ்ச  திருவிழாவின் அலங்காரங்கள் இன்னும் அப்படியே இருக்கு!  ஆல்ட்டரின் அலங்காரங்கள் ப்ரமாதம்!   பழையபள்ளியில் இப்படி இருந்திருக்க வாய்ப்பே இல்லை.  மாதாவின் சிலையே அப்போ முக்கியமா இருந்துருக்கணும்.


பக்கவாட்டில் இருந்த கதவின் வழியாக உள்ளே நுழைஞ்சால்.......எவ்ளோ பெரிய ப்ரமாண்டமான ஹால்!  பளபளன்னு படுசுத்தமான பளிங்குத்தரை! கோவிலின் கருவறை பீடம் நமக்கு வலதுபக்கம். இதுக்கு நேரா ரொம்ப தூரத்தில் கோவிலுக்கான வாசல். எப்படி..... வாசல்பக்கம் நாம்  பார்த்த கட்டிடத்தின் சுவருக்கு நேர்ப்பின்னம்பக்கம்தான்  கருவறை பீடமா இருக்கு!  ஆனால் கொடிமரம்  சாமிக்கு முன்புறமா  இல்லை!
ஆல்ட்டருக்கு  நேரா இருக்கும் வாசலை நோக்கிப்போனால் அங்கே ஒரு  கல்லில் வடிச்ச சிலுவை!

அந்த வாசலில் இருந்து நுழையும் பக்தர்கள் , குறிப்பாகப் பெண்கள், முழங்காலிட்டபடி முட்டியால் நடந்தே ஆல்ட்டர் வரை வர்றாங்க.  படம் எடுக்கலாமான்னு தயக்கம் ஒருபக்கம் இருந்தாலும்  அங்கே சுவரோரமாப் போட்டுருக்கும் இருக்கைகளில் அமர்ந்து பேசிக்கிட்டு இருந்த ரெண்டு கன்யாஸ்த்ரீகளிடம் போய்ப் படம் எடுக்க அனுமதி வாங்கினேன்.

உடலை வருத்திக்கிட்டு சாமி கும்பிடுவதில் இவர்களும் இந்துக்கள் போலவே!  அங்கப்ரதக்ஷணம், அடிப்பிரதக்ஷணம், அலகு குத்திக்கறது, நெருப்பில் நடக்கறது, பரிக்ரமான்னு கோவிலை வலம் வரும்போது பாதையெல்லாம் கீழே விழுந்து கும்பிட்டு, எழுந்து கும்பிட்டுன்னு  பல கிலோமீட்டர்கள் போவதுன்னு எத்தனை  எத்தனை வகை இருக்கு  ஹிந்துக்களுக்கு!

ஆல்ட்டரின் ஒரு குத்துவிளக்கு  நடுவே இருக்கும் பாதை முடிவில்!  உச்சியில் இருக்கும் சிலுவையை மறந்துட்டால்.... அப்படியே நம் வீடுகளில் இருக்கும் விளக்கு வகைதான்!

கற்சிலுவை இருக்கும் வாசலுக்கு திரும்பவும் வந்து  பார்த்தேன். கண்முன்னே நேரே தெரியும் மண்சாலை... ஒருவேளை  இதுதான்  நாம்  இருந்த போல்  மாஸ்ட்டர் வீட்டுக்குப் போகுதோ !

கோவில் வளாகத்தில் இன்னொரு அழகான கட்டிடத்தில் துலாபாரம் என்று எழுதி வச்சுருக்காங்க.  அடுத்த பக்கம் அலங்கார வாசலுடன்  ரோஸரி வில்லேஜ் இருக்கு.  இப்ப இந்தப்பள்ளி விரிவடைஞ்சு இருப்பதோடு,  ஒரு பில்க்ரிம் செண்ட்டராகவும் மாறி இருக்கு. வில்லேஜ் வாசல் முகப்பில்  பெரிய கருப்புக் கல்லின் மேல் இருந்து  பிதாவை நோக்கி  ஜெபம் செய்யும் யேசுவும்,  யூமுறைப்படி இருக்கும்   ஏழுகிளை விளக்கும் புடைப்புச் சிற்பமா வச்சுருக்காங்க.

உள்ளே மகதலேனா மேரி, சிலுவையில் இருந்து இறக்கிய யேசுவின் உடலை  தன் மடியில் கிடத்தி வச்சுருக்கும் மைக்கேல் ஏஞ்சலோவின் புகழ் பெற்ற சிற்பம் Pieta வின்  நகலை வச்சுருக்காங்க.

மேலே இருப்பது அசல்!

ஒரிஜினல் சிற்பத்தை  வாடிக்கன் சிட்டி போனபோது செயின்ட் பீட்டர்ஸ் பாஸிலிகாவில் பார்த்துருக்கேன். அது ஆச்சு 16 வருசம். ப.மு.காலம்!

தமிழ்நாட்டு மக்களும்  இங்கே தீர்த்தயாத்திரைக்கு  வர்றாங்க போல!

தொடரும்............:-)

பள்ளி = சர்ச்

PINகுறிப்பு:  பதிவின் நீளம் கருதி மீதி நாளை!


தங்கப்பழத்தைத் திங்கவா முடியும்? ( மூன்று மாநிலப் பயணம்- தொடர் : 42)

$
0
0

அதிசயம் காமிச்ச அற்புத மாதா கொரட்டி முத்தி  விஷயம் கொஞ்சம் விவரம் கேக்கலாமுன்னு  ஓஃபீஸ் கட்டிடத்துக்குள் போனால்.... அங்கே ரெண்டு மூணு  பதின்மவயதினர்,   ஒரு 200 மில்லி  கொள்ளளவு இருக்கும் சின்ன பாட்டிகளில்  தண்ணீர் ரொப்பி அடுக்கி வச்சுக்கிட்டு இருந்தாங்க. என்னன்னு விசாரிச்சால் தீர்த்தமாம். அடுத்த விநாடி நடந்ததுதான், இதுவும்  ஒரு இந்துக்கோவில் என்ற எண்ணத்தை நிரூபிக்கும் சமாச்சாரமாகிருச்சு.  இன்னொரு பையன் அங்கிருந்த குழாயில் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் பிடிச்சுக்கொண்டு வந்து  தீர்த்தம் ஃபில்லிங்  ஏரியாவுலே வச்சதும், அதுலேஇருந்து சின்ன டம்பளராலே மொண்டு பாட்டில்களை நிரப்ப ஆராம்பிச்சாங்க. காலியான பாத்திரத்தை  எடுத்துக்கிட்டு திரும்ப குழாயாண்டை போனார் பையன். அப்ப, நான்   என்னன்னு கேட்டதுக்கு சரியாத்தான்  பதில் சொல்லியிருக்காங்க. தீர்த்தம்!!!!

'அச்சனைக் காணேணும்'என்று சொன்னப்ப.... 'அச்சன்  அடுத்துள்ளஒரு ஸ்தலத்திலேய்க்குப் போயிட்டுண்டு.  வைகிட்டு மடங்கும்'என்றதால் சரின்னு தலையாட்டிட்டு வந்துட்டேன்.

ஹிந்துக்கோவில்களில் நடக்கும் எல்லா விசேஷங்களும் இங்கேயும் நடக்குது. கோவில் திருவிழாவுக்குக் கொடி ஏற்றுதல், குழந்தைகளுக்கு முதல்முதலில் சோறு கொடுக்கும் அன்னப்ராஸனம்,  விஜயதசமிக்கு வித்யாரம்பம்  இப்படி அவர்களுக்குள்ள  சடங்குகள் படி.






ஆகக்கூடி  மனுஷ்யர் எல்லாம் ஒன்னுபோலவே! மதச்சடங்குகள் மட்டுமே  அந்தந்த மதங்களின் விதி அனுசரிச்சு.  இந்த ஏற்பாடு நல்லாத்தானே இருக்கு! பின்னே  எதுக்காக சண்டை போட்டுக்கறோம்?:(

இந்தப் பள்ளியில் பூவன்பழக்குலை நேர்ச்சையாகக்  கொண்டுபோய் கொடுக்கறது  ஒரு சிறப்பு வழிபாடு. இதுக்கு ஒரு 'புராணக் கதை'யும் உண்டு.  ரொம்ப காலங்களுக்கு முந்தி கொரட்டியிலிருந்து 10 கிமீ தூரத்தில் இருக்கும் மேலூர்  என்ற  கிராமத்திலிருந்து பக்தர் ஒருவர், தன் தோட்டத்தில் விளைஞ்ச பூவன்பழக்குலை ஒன்னைத் தூக்கிக்கிட்டு  கொரட்டிமுத்திக்குச் சமர்ப்பிக்க நடந்து வந்துக்கிட்டு இருந்தார். முரிங்கூரைக் கடந்துவரும் சமயம், அங்கே  தன் வேலையாட்களுடன் ஒரு தோட்டத்திலிருந்த நிலச்சுவான்தார் ஒருவர்,  பழக்குலையைக் கண்டதும் அதுலே ரெண்டு பழம்கொடுத்துட்டுப்போன்னு இவரிடம் கேட்க, பக்தர்சொல்றார்,'இல்லைங்க. இது பள்ளிக்குக் கொண்டு போகும் நேர்ச்சை.'

அடுத்தவன் கொண்டுபோறதைக் கேட்க அவமானமா இருக்காதோ? அல்பம்:(

இப்படி அவர் மறுத்ததும்,  சுத்தி நின்னுக்கிட்டு இருந்த வேலையாட்கள் முன்னால் தனக்கு மானக்கேடு ஆகிருச்சு நினைச்ச முதலாளி,  பழக்குலையில் இருந்து தானே ரெண்டு பழம் பறிச்செடுத்து தின்றார். பக்தருக்கோ,  பணக்காரர் அதிகாரத்தின் முன்னால் என்ன செய்வதுன்னு தெரியாம கண்ணீரோடு அந்த இடத்தைக் கடந்து போறார். அவர் போனதும்  முதலாளிக்கு வயித்துவலிஆரம்பிச்சது.

எத்தனையோ மருத்துவர்களிடம் போய் சிகிச்சை செய்தும் வயித்து வலி குணமாகலை. அப்பதான்   பள்ளிக்குக் கொண்டுபோன பழத்தை எடுத்துத் தின்னதன் பலன் இதுன்னு அவருக்குத் தோணுது. உடனே  முத்தியிடம் தன்னை   மன்னிக்கச்சொல்லி பிரார்த்தனை செஞ்சு,  தன்னிடம் இருக்கும் நிலங்களில் பாதியை பள்ளிக்கு எழுதிக் கொடுக்கறார். வயித்துவலி போயேபோச்!

அதுக்குப்பிறகு  பள்ளியில் ப்ரசாதமா பூவன்பழம் கொடுப்பது  ஆரம்பிச்சு இருக்கலாம்.  பூவன்குலை நேர்ச்சை வந்துருச்சு.  யாரோ ஒரு பக்தர் தங்கக்குலை செஞ்சு கோவிலுக்கு  சமர்ப்பிச்சு இருக்கார்!  இந்த பூவன்பழத்தை வீட்டுக்குக் கொண்டுபோய் நல்லா காயவச்சு பொடி பண்ணி வச்சுக்கிட்டு  வயித்துவலி யாருக்காவது வரும்போது ஒரு சிட்டிகை வாயில் போட்டுக்கும்  அருமருந்தா ஆகி இருக்கு! நம்புனாதான் தெய்வம்!

அதிசயம் என்று சொல்லும் இன்னும் சில சமாச்சாரங்களும்  இருக்கு கேட்டோ!   நான் ஆரம்பத்தில் ஜமுனா கோட்ஸ் நூல் ஆலைன்னு சொன்னேன்  பாருங்க..... ஆக்ச்சுவலா அந்த ஆலை இன்று இருக்குமிடத்தில்  ஒரு  படை வீரர்களுக்கான  விமானதளம் ஒன்னு Military Air Base கட்டணும் என்பது ஆரம்பகால  ஏற்பாடாம். ஒவ்வொருமுறை வேலை ஆரம்பிக்கும்போதும் எதாவது தடை ஏற்பட்டு வேலை நின்னு போயிருமாம். ஒரு வயசான பெண்மணி, கையில் குழந்தையோடு  அங்கே வந்து நின்னு, கட்டிடம் கட்டாதீங்கன்னு  கண்ணீர் விட்டு அழுவாங்களாம். பலமுறை இப்படி ஆனதைப் பார்த்த ஒப்பந்தக்காரர், கொரட்டி முத்திதான் கையில் பிள்ளை யேசுவோடு வர்றாங்கன்னு நினைச்சு, வெள்ளியில் கடப்பாரை, மண்வெட்டின்னு கட்டடம் கட்டும் கருவிகளைச் செஞ்சு  கொட்டுமுழக்கோடு பெரிய  ஊர்வலமாக் கொண்டுபோய்  பள்ளியில் சமர்ப்பிக்கிறார். அப்படியும் அவர் முயற்சி நிறைவேறலை.

ஏர் பேஸ் வர்றது நின்னு போச்சு. அந்த இடத்தில்தான்  ஜமுனா கோர்ட்ஸ் ஆலை வந்து சுமார் மூவாயிரம் பேர்களுக்கு வேலை கிடைக்கக் காரணமா இருந்துச்சு. இந்த ஆலை அப்புறம்  மதுரா கோட்ஸ் கம்பெனிக்குக் கைமாறிட்டாலும்,உள்ளூர் மக்கள் ஜமுனான்னுதான் இன்னும் சொல்லிக்கிட்டு இருக்காங்க.

ஆயிரம் தொழிலாளர்கள்தான் அங்கே வேலை செஞ்சாங்கன்றது  ஒரு தகவல். மனுஷ குணாதிசயப்படி   மூணாம் வாய்ப்பாடு எளிதாக எல்லோருக்கும் வந்துருக்கு:-)


அங்கேயும்  எண்பதுகளில் தொழிலை நடக்கவிடாம அரசியல் புகுந்து  கொடி பிடிச்சுக்  குழப்ப ஆரம்பிச்சதுன்னு   ஒரு சமயம் ஹிந்து பத்திரிகையில் வாசிச்ச  நினைவு.

ஒரிஜினல் கோவில் ஆறு நூற்றாண்டுகளுக்கு  முன்பே  இருந்துருக்குன்னு  ஆவணங்கள் சொல்லுதாம். 14 ஆம் நூற்றாண்டு.  15 ஆகஸ்ட்  1381 கட்ட ஆரம்பிச்சு  செப்டம்பர்  8 , 1382லே முடிச்சுருக்காங்க.!

அப்ப அந்தக் காலக்கட்டத்தில் ஏகப்பட்ட சிற்றரசர்கள் இந்தப்பகுதிகளில்  ஆண்டுக்கிட்டு இருந்துருக்காங்க.  அதுலே அடுத்துள்ள இரு நாட்டு அரசர்களுக்குள்  சண்டை வந்துருது. கொரட்டி கைமல்,கொடஸேரி  கர்தா என்ற பெயருடையவர்கள். இவர்கள் வம்சாவழியினர் இப்பவும் இங்கே வாழ்ந்துகிட்டு இருக்காங்க என்பதால் சம்பவத்துக்கு நம்பகத்தன்மை கொஞ்சம் கூடுதல்! சண்டையில் ரெண்டு பக்கத்து வீரர்கள் பலரும் செத்துடறாங்க.  கொரட்டி கைமலின் வலக்கை போல் இருந்த தளபதி  கவலக்காடன் கொச்சு வரீதும் இறந்துட்டார்.

அப்பல்லாம் இந்தப் பகுதிகளில்  இருந்த ஒரே சர்ச் அம்பழக்காடு பள்ளிதானாம். இதைக் கட்டுனது  மூணாம் நூற்றாண்டாம்.  செயிண்ட் தாமஸ் இந்தியாவுக்கு வந்த காலத்தில் கட்டுனதாக சிலர்சொல்றாங்க. எல்லாம் கேள்வி ஞானம்தான்.  ஆதாரமெல்லாம் கிடையாது.  அங்கே கொண்டு போய்  மதச்சடங்குகள் செஞ்சு ராணுவ மரியாதையோடு  தன் படைத்தலைவனை புதைக்கணுமுன்னு  கொரட்டி கைமல்  ஏற்பாடுகள் செஞ்சு , சவப்பெட்டியை   ஊர்வலமா எடுத்துக்கிட்டு அம்பழக்காடு கொண்டு போறாங்க.

'எங்க எல்லோருக்கும் பொதுவான பள்ளி  இது. இங்கே புதைக்க விடமாட்டோமு'ன்னு  கொடஸேரி கர்தா தகராறு செஞ்சதால்  சவப்பெட்டியை எடுத்துக்கிட்டுத் திரும்பி வர்றாங்க. கொரட்டிப்பகுதிக்கு வந்துக்கிட்டு இருக்கும்போது ஒரு அஞ்சு நிமிச ஓய்வுக்குச் சவப்பெட்டியை கீழே வச்சுட்டு, மீண்டும் தூக்கும்போது பெட்டி,  எடுக்க வரலையாம்!

சரி, கொச்சு வரீதுக்கு இங்கே இருக்க விருப்பமுன்னு அங்கேயே   புதைச்சுட்டாங்க. தம்புராட்டி(அரசி) இங்கே  ஒரு நினைவுச்சின்னம் இருக்கணுமுன்னு  நினைச்சு  20 அடிஉயர கற்சிலுவையைச் செய்ஞ்சு  (க்ரானைட் கல்லாம்)  கொச்சு வரீதைப் புதைத்த இடத்தில் நட்டு வச்சுருக்காங்க.  அதைத்தான் கோவிலின்  'பின்பக்க முன்வாசலில்'பார்த்தோம். கொஞ்சநாள் கழிச்சு தம்புராட்டி,  இங்கே  சின்னதா  ஒரு பள்ளியையும்  கட்டுனாங்களாம்.



காலப்போக்கில் கிறிஸ்துவ மத சம்ப்ரதாயங்கள் ஏகத்துக்கும் மாறிவந்துருக்கு. மலபார் கரையோரம் இருக்கும்  செயிண்ட் தாமஸ்  குழுவைச் சேர்ந்த பழைய கிறிஸ்த்தியானிகளையும் உதயம்பேரூர்  கவுன்ஸில் என்ற  Diampher Synod  ஒன்னு சேர்த்து சிலபல மாற்றங்களைச் செஞ்சுருக்காங்க. அதன்பின் போர்த்துகீஸியர்கள் வரவால்  பள்ளிகள் கட்டும் விதத்திலும் சில மாற்றங்கள் வந்துருக்கு. gothic style அனுசரிச்சு உசரமான சுவர்களும் ரொம்பவே உசரத்தில் இருக்கும் மேற்கூரைகளுமான சர்ச் கட்டிடங்கள்.

1790 இல் திப்புசுல்த்தான் படையெடுப்பு. திருவாங்கூர் கொச்சின் பகுதிகள் தாக்கப்பட்டு  திப்புவின்  படைகள் பள்ளிக்குத் தீ வச்சுட்டாங்க. கூரையும் அப்போ இருந்த ஆல்ட்டரும்  தீயால் அழிஞ்சு போச்சு. நல்லவேளையா சுவர்களுக்கு ஒன்னும் ஆகலை. அதையே வச்சுத்தான்  மேற்கூரையும்  கருவறை மேடையும் திரும்பக் கட்டினாங்க.

நாங்க அங்கே இருந்த காலக்கட்டத்தில் (1976 - 1977) அந்தப்பள்ளி இப்படித்தான் இருந்துச்சு.  நம்மகிட்டே அப்போ ஏது கெமெரா என்னும் ஆடம்பரம்!  ஸோ இது சுட்ட படம்:(
அப்போ.....


இப்போ....

1985லே இந்தப்பள்ளியின்  ஆல்ட்டரை மட்டும் தனியா எடுத்து வச்சுட்டு,   முழுசுமா இடிச்சுட்டு  நவநாகரீக ஸ்டைலில் கட்டி இருக்காங்க.  ரெண்டே வருசம், 8 செப்டம்பரில்  கிறிஸ்தியானி ஸ்டைலில் கும்பாபிஷேகம் நடந்துருச்சு. அதே ஆல்ட்டரில் இன்னும்கொஞ்சம் அலங்காரங்கள், அப்போஸ்தலர்களின் சொரூபங்கள் எல்லாம்  சேர்த்துருக்காங்க. நடுவில் யேசுவின் தாய் கன்னிமரியாள், அவருக்குக் கீழே யேசு. இவருக்கு  ஒரு பக்கம்  தாய் கொரட்டி முத்தி, இன்னொரு பக்கம் தந்தை ஜோஸஃப்  குழந்தையை ஏந்தியபடி  நிக்கறாங்க.

ஓபெரா நாடகம் பார்க்கும் தியேட்டர்களில் இருக்கும் பால்கனி போல  ஒன்னு!  அங்கே யேசுவின் வாழ்க்கையின் முக்கிய நிகழ்வுகள் சித்திரங்களாக!

மதராஸ்- கொச்சி  ரயில்பாதைகள் போட்ட பிறகு  ஒருநாள்  கொரட்டி வந்த  ரயில் அங்கிருந்து கிளம்பாம ஏதோ எஞ்சின் தகராறு ஆகிப்போச்சாம். ரயிலில் இருந்த மக்கள்ஸ் வண்டியை விட்டுக் கீழே இறங்கி நின்னப்ப கொட்டுமுழக்கு சப்தம் கேட்டு என்னன்னு போய்ப் பார்த்திருக்காங்க. பள்ளியில் பெருநாள் ஆகோஷம்(சர்ச்சில் திருவிழாக் கொண்டாட்டம்) நடக்குது.  மக்கள்ஸ் அதுலே கலந்துக்கிட்டு  சாமி கும்பிட்டுவிட்டு திரும்ப ரயிலாண்டை வந்ததும்  எஞ்சின் தன் ஸ்ட்ரைக்கை முடிச்சுக்கிட்டு சட்னு கிளம்புச்சாம். கேரளம் என்றாலே  வேலை நிறுத்தம்தான் போல:-))))

இப்படி  இங்கேயும் கதைகளுக்குப் பஞ்சமே இல்லை!!!!!

மாதாவின் அருள் அனைவருக்கும் கிடைக்கட்டும்.  ஆமென்!

நன்றி நவிலல்: படங்கள் தந்துதவிய  கொரட்டி மாதாவுக்கு என்  மனம் நிறைந்த நன்றிகள். 

கொசுவத்திக்கே கொசுவத்தி ஏத்தும்படியாப்போச்சே:-) ( மூன்று மாநிலப் பயணம்- தொடர் : 43)

$
0
0
எல்லாமே புதுசாத் தெரியும் இந்த ஏரியாவில்  வீட்டைக் கண்டுபிடிப்பது கஷ்டம் என்று கோபால் சொன்னதைக் கேட்டவள் சோகமாப்போய் வண்டியில் உக்கார்ந்தேன்.  விசாரிச்சுப் பார்க்கலாமுன்னா கண்ணில் பட்டவர்கள் எல்லாம்  நாப்பது வயசுக்குட்பட்ட மக்களாகவே இருந்தாங்க. கொஞ்சம் வயசன்மார் கண்ணுலே ஆப்டலை:(

இந்தப் படம் மட்டுமே அவர்கள் நினைவாக என்னிடம் இருக்கு.  அதுவும் நாங்கள் ஊர்மாறி வரும்போது, ஜோஜோ ஏங்கிப்போயிருவானேன்னு  அன்னம்மாச் சேச்சி வற்புறுத்தி நம்மை ஸ்டூடியோவுக்குக் கூட்டிப்போய் எடுத்த படம்.  இப்ப எல்லோரும் எப்படி உருமாறி இருப்பாங்களோ!!!!

சரின்னு அடுத்த வேட்டையை ஆரம்பிச்சோம். முரிங்கூர் போறோம்.  அங்கேதான்  நாம் கேரளா வந்திறங்கி குடிவந்த முதல்வீடு இருக்கு.

 கோபால் கேபிள் ஃபேக்டரிக்கு ட்ரெய்னிங் எடுக்க வந்துட்டார்.  நான் சென்னையிலே இருக்கேன். நமக்குத் தெரிஞ்சவங்க எல்லோரும், தனியாவா கேரளாவுக்கு அனுப்பிட்டேன்னு  என் தலையைத் தின்னதுமில்லாமல்  மலையாளியோ  **யாளியோன்னு ரைமிங்கா பழமொழி சொல்லிப்பயமுறுத்திக்கிட்டே இருக்காங்க. ரெண்டு வாரம் கூட என்னை நிம்மதியா இருக்க விடலை.

இந்த அழகிலே  எனக்கொரு ஆசை என்னன்னா எனக்கு மணி ஆர்டர்  வந்து, அதைக் கையெழுத்துப்போட்டு வாங்கிக்கணும். அதனால் கேரளா கிளம்பும்போது பத்து ரூபாயைத் தனியா இவரிடம் கொடுத்து போனவுடன் எனக்கு மணி ஆர்டர் பண்ணுங்கன்னு சொல்லிட்டு, தினமும்  மணி ஆர்டர் வரும் வருமுன்னு  பார்த்துக்கிட்டு இருக்கேன். இன்னமும்தான்:-))))


அப்பெல்லாம் செல்ஃபோன்  என்ற சமாச்சாரமே தெரியாத காலக்கட்டம். வீட்டுலே பண்ண அமர்க்களத்துலே ....   நான் நாளைக்குப் புறப்பட்டு வர்றேன்னு ஒரு தந்தி கொடுத்துட்டு மறுநாள் கிளம்பிட்டேன். சின்னதா ஒரு  அட்டைப்பொட்டியில்  ஒரு ப்ரெஷர் குக்கர், கொஞ்சம் பாத்திரங்கள். ஒரு சின்ன ஸூட்கேஸில் துணிமணி.

ரயில் திருச்சூர்  ஸ்டேஷனில் நிற்கும்போதே  அங்கமாலியில் இறங்கணுமுன்னு  சீக்கிரமாத் தயாராகிட்டேன். அடுத்து இரிஞ்ஞாலகுடா கடந்து சாலக்குடி ஸ்டேஷனில் வண்டி நிக்குது. இவர்  பெட்டிபெட்டியா தலை நீட்டிக்கிட்டு என்னைத் தேடிக்கிட்டு இருக்கார். எனக்கோ ஆச்சரியப்படணும். ஆனா  அதுக்கு இப்போ நேரமில்லை.'சடார்னு இறங்கு'ன்றார். உள்ளே வந்து சாமான்களை எடுத்துக்கிட்டதும் இறங்கிட்டோம்.


பார்த்திருக்கும் வீடு இங்கே பக்கத்தில்தான் இருக்கு. சாலக்குடின்னா  ப்ரோப்பர் ச்சாலக்குடி இல்லையாக்கும். தொட்டடுத்து ஒரு குக்கிராமம்!  முரிங்கூர் என்னானு  பெயர். அதான் காலையில் கிளம்பி  இங்கேயே உன்னை இறக்கிடலாமுன்னு வந்துட்டேன் என்றார்.  இவர் கூடவே ட்ரெய்னியா இருக்கும் இன்னொரு  இளைஞர். ரூம் மேட். திருவனந்தபுரத்துக்காரர்.  ஒருவழியா வாடகைக்குப் பார்த்திருந்த வீட்டுக்குப்போய்ச் சேர்ந்தோம்.

வீட்டுக்காரம்மா.... அவ்ளோ சீக்கிரம் குடிவருவோமுன்னு எதிர் பார்க்கலை. வீடு இன்னும் சுத்தப்படுத்தலைன்னு  தொட்டடுத்து இருக்கும் மகள் வீட்டில் எங்களைக் கொஞ்சநேரம் இருக்கச் சொன்னாங்க.

புது இடத்திலே திருதிருன்னு முழிச்சுக்கிட்டு  உக்கார்ந்திருக்கோம்.  வீட்டுக்காரம்மா பெயர் மீனாட்சி அம்மா.  மகள் பெயர்  மணிச்சேச்சின்னு மட்டும் தெரிஞ்சுக்கிட்டேன். குளிமுறி காமிச்சுக் கொடுத்ததும் குளிச்சுட்டு  உடை மாத்திக்கிட்டு  பத்து எட்டு நடந்து   மீனாட்சியம்மா வீட்டுக்குப் போனோம். வீட்டுப்பணி செய்யும் பெண்  மாடியைச்  சுத்தப்படுத்தினதும்  அங்கே போய்  எதெதை எங்கே வைக்கலாமுன்னு  யோசனை.  இருக்கும் நாலைஞ்சு பாத்திரங்களை எங்கே வச்சால் என்ன?
 ( மாடி இப்படி இருக்கும். சுட்டபடம்.  பட ஓனருக்கு நன்றி.)


 பெரிய தரவாடு  வீடு இது.  வாசல் முற்றத்தில் ஒரு துளசிமாடத்தில்  நான். அதைக்கடந்து  வீட்டு முன்கதவை நோக்கிப்போனால்  சின்னத் திண்ணைகளுடன்  முன்பக்க ஹால். சிமெண்ட்பால் போட்டு கண்ணாடி போல் மின்னும் தரை.ஹாலில் ஒரு சாமானும் இல்லை.  ஜஸ்ட் ஹால்!  மின்னும் ரெண்டு பெரிய மரத்தூண்கள் மட்டுமே! நடுவில் வாசக்கதவுக்கு நேரா இன்னொரு உள்வாசல் கதவு. அதைக் கடந்தால் அங்கேயும் ஒரு ஹால். ஆனால் அளவில் சின்னது. இடது கைப்பக்கம் இன்னொரு அறை. சின்ன ஹாலில் ஒரு பக்கமா கட்டில் எதிரே ஒரு மேசையில் ரேடியோ.

இங்கேயும் எதிர்ப்புறச்சுவரில் கட்டிலை ஒட்டியே  ஒரு வாசல். அதைக்கடந்தால்  வராந்தா. இடதுபக்கம்  மாடிக்குப்போகும் மரப் படிக்கட்டுகள். மாடிக்குப்போனால் மூணுபக்கம் விசாலமான வெராந்தாவும் நட்ட நடுவில் ஒரு பெரிய ஹாலும்.  ஹாலின் ஒரு பக்கம் வெராந்தாவுக்கு பதிலா ஒரு நீள அறை. நாலாவது பக்கத்துக்குள்ள வெராந்தாவைத்தான் அறையா வச்சுருக்காங்க போல!  ஹாலுக்கு ரெண்டு பக்கமும் நேருக்கு நேரா கதவு. வீட்டின் முன்பக்க வெராந்தாவுக்குப்போகும் வழி ஒன்னுன்னா இன்னொண்ணு வீட்டின் பின்பக்கத்து தோட்டம் பார்க்குது. முன்பக்கம் நின்னு பார்த்தால்  கீழே  துளசி மாடம் அதுக்குப்பின்னே போகும் அகலமான மண்பாதை. தூரக்கே ஒரு கம்பி கேட்!  இடதுபக்கம் மணிச்சேச்சி வீடு. காங்க்ரீட் கட்டிடம்.

கதவில்லாத சுவரில் பெருசா ரெண்டு ஜன்னல்கள்.  வெராந்தாவுக்கு சுற்றிவர கைப்பிடிச்சுவர்கள்  அழகான மண்கூஜாக்களை வரிசையா வச்சதுபோல். நல்ல அகலமான  கட்டைச்சுவர். நாம் ஏறி, தூணில் சாய்ஞ்சுக்கிட்டுக் காலை நீட்டி உக்கார்ந்துக்கலாம்.  வீட்டைச் சுத்தி மரங்கள். பலாப்பிஞ்சுகள் தொங்குது! ஹைய்யோ!!! இன்னொரு மரத்தில் மாம்பிஞ்சுகள்.  இது ஃபிப்ரவரி மாசம்! தென்னையும் கமுகுமா  கண்னைக் கட்டுது.மாடிஹாலில் காத்து அப்படியே பிய்ச்சுக்கிட்டு போகுது.

ஆஹா என்ன ஒரு அருமையான வீடு ! கண்டதும் காதலில் விழுந்தேன் என்றுதான் சொல்லணும். என் வரவை முன்னிட்டு கோபால் அன்றைக்கு லீவு எடுத்துக்கிட்டார்.  கம்பெனிக்கு அறைத்தோழரிடம் சமாச்சாரம் சொல்லி அனுப்பிட்டார். இப்ப குடித்தனம் ஆரம்பிக்க  மளிகை சாமான்களும்  முக்கியமா சமைக்க ஒரு அடுப்பும் வேணும்.

இந்த வீடு இருக்கும் தெருவின் வலதுபக்கம் போனால்.... ரயில்பாலம் வரும். இடதுபக்கம் போனால்  நாலு வீடுகள். அதைக் கடந்தால் போகும் பாதை ஒரு சின்ன ஏற்றத்தில் போய்  மெயின் ரோடில் சேருது. இங்கே இடது பக்கம் திரும்பினால் ஒரு பாலம்.  சாலக்குடி புழை பாலத்தினடியில் ஓடுது.  வலப்பக்கம் திரும்பினால்  அது  கொச்சி வரை போகும்  நெடுஞ்சாலை. கோபாலின்  ஃபேக்டரிக்கு  இதில்  போகணும்.

பாலம் தாண்டி நேராப்போனால் கொஞ்ச தூரத்தில் சாலக்குடி  டவுன்!  2.8 கிமீ தூரம். நாங்க பேசிக்கிட்டே நடந்து போனோம்.  அங்கே டவுனில் ஒரு  ஹொட்டேலில்   தோசையும் காஃபியும் முடிச்சுக்கிட்டு,  அடுப்பு, அரிசி பருப்பு, சில காய்கறிகள், முக்கியமா மண்ணெண்ணெய்  எல்லாம் வாங்கிக்கிட்டு  ஒரு ஆட்டோ புடிச்சு வீடுவரை வந்து சேர்ந்தோம்.  முரிங்கூரில் எங்கேன்னு கேட்ட ஆட்டோக்காரருக்கு  பாலத்தைக் கடந்து  கீழே ரயில்பாலம் போகும் வழி என்றதும்   அங்கே யார் வீடுன்னார்.  உப்பத்துன்னு சொன்னதும்  மறு பேச்சில்லாம நேராக் கொண்டுவந்து இறக்கி விட்டுட்டார்.  சின்ன ஊரா (அப்போ) இருந்தபடியால்  வீட்டுப்பேரைச் சொன்னதும் எல்லோருக்கும் வழி தெரிஞ்சுருது.  கடைக்காரர்களும் புது ஆட்களைப் பார்த்ததும் என்ன ஏது எங்கிருக்கோமுன்னு தீர விசாரிக்காம  இருப்பதில்லை.  இப்படியாக நம்ம கேரள வாழ்க்கை ஆரம்பிச்சது.

நமக்கு மலையாளம் புரியுமுன்னாலும் சரியாப் பேசவராது. அதனால் வீட்டு ஆட்களோடு இங்லீஷூதான். வீட்டு ஓனர் மீனாட்சியம்மா அருமையா ஆங்கிலம் பேசறாங்க. அவுங்க வீட்டுக்கு வேலைக்கு வரும் விமலாவையே நமக்கும் வேலைக்கு ஏற்பாடு செஞ்சுட்டாங்க. நம்ம வீட்டுக்குப் பின்புறம்தான் சாலக்குடி புழை ஓடுது. அங்கேதான் காலை மாலை இருவேளைக் குளியல்.

புழைக்கும் வீட்டுக்கும் இடையில் இன்னொரு  சின்ன வீடு. தரவாடு இருக்கும் பரம்பு  ஒருகாலத்தில் புழை வரை இருந்ததாம். அதுலே  கொஞ்சூண்டு இடத்தை வித்துருக்காங்க. அதுலே  அந்தப்பன் என்றொருத்தர்,  மனைவி,மூணு பெண்மக்களுடன்  இருக்கார்.   ரெண்டு பசுக்களை வச்சுப் பால்வியாபாரம். அவர்தான் நமக்கு பால் சப்ளை!

கோபால் காலை ஏழரைக்கெல்லாம் கிளம்பிப்போயிருவார்.  அவருக்கு எதாவது கலந்த சாதம் கட்டிக்கொடுத்தால்  என் வேலை ஆச்சு.  அவரை வழி அனுப்ப கீழே துளசிமாடம் வரை வந்து டாட்டா காமிச்ச கையோடு  மீனாட்சியம்மா வீட்டு மேலடுக்களைக்குள் போனால்.......... அவ்ளோதான். அங்கே இருக்கும் சாப்பாட்டு மேசை ஸ்டூலில் உக்கார்ந்திருக்கும் அம்மா மாத்ருபூமி  தினசரியை வாசிச்சுக்கிட்டு இருப்பாங்க. கையில் ஒரு கட்டன் காஃபி.

என்னையும் காஃபி குடிக்கிறயான்னு கேப்பாங்க..... நம்ம நாக்கு  வணங்கிட்டாலும்.........  எல்லாம் காலையில் ப்ரேக்ஃபாஸ்டோடு ஆச்சுன்னுட்டு  தினசரியைப் படிக்க ஆரம்பிப்பேன். நம்ம க, ம, வ, எல்லாம் அதுலே இருக்கும். ஆனால் சிலவற்றின் உச்சரிப்புகள் வேற. ன ண எல்லாம் சுழிக்காமல் இருக்கும் அப்படியும் எது என்னன்னு கொஞ்சம் கொஞ்சமா பெரிய எழுத்துகளில் இருப்பதை மட்டும் வாசிக்கத்தொடங்கி ஒரு வாரத்திலே பிடி கிட்டிப்போயி!

மீனாட்சி அம்மாவையும் விட்டு வைக்காம எழுதி இருக்கேன். பார்த்துக்குங்க.



கொரட்டியில் இருந்து புறப்பட்டு சாலக்குடி போகும் சாலையில் வர்றோம். பாலம் தூரக்கே கண்ணில் பட்டது.  அடுத்து வரும்போதே  லெஃப்ட்டுலே  இறக்கத்துலே போயிருங்கன்னு சீனிவாசனிடம் சொன்னார்.  இது இல்லையோன்னு எனக்கு ஒரு சம்ஸயம். இதுதான்னு இவர் சாதிக்கிறார். அந்த மண் ரோடில் ஒரு பக்கம் மட்டுமே நாலைஞ்சு வீடுகள் இருக்கும். அதில்  நம்ம தரவாடைத்தவிர  மற்றவை காங்க்ரீட் கட்டிடங்கள்தான்.  இப்ப என்னன்னா....   கசகசன்னு   சின்னச்சின்னதா  ஏழெட்டு  வீடுகள் ரெண்டு பக்கமும்.


உத்தேசமா  ஒரு இடத்தில்  காரை நிறுத்தச் சொல்லி இறங்குன கோபால்,  கீழே கொஞ்சம் பள்ளத்தில் இருக்கும் சின்ன வீட்டு  வாசலில் நின்னுக்கிட்டு இருந்த பெண்ணிடம், உப்பத்து வீடு எவிடேன்னு  கேட்டதும்,  மேலேறி வந்து எதிரேன்னு கை காமிச்சாங்க.



பார்த்தால் தரவாடு வீட்டைக் காணோம்!  பச்சை வண்ணச் சுவருள்ள ஒரு காங்க்ரீட்  வீடு  அங்கே!   வலப்பக்கம் இருந்த இன்னொரு வீட்டின் பின்புறம் இருக்கும் கிணத்தடியில் ஒரு  வலியம்மா (மூதாட்டி)  தண்ணி இறைச்சுக்கிட்டு இருந்தாங்க. இவர் வேகமா அங்கே போய்  என்னவோ கேட்டுட்டு,  இங்கே சீக்கிரம் வான்னு கை ஆட்டினார்.  ஓடிப்போய்ப் பார்த்தால் அந்த  முத்தச்சிதான்  நம்ம மணிச்சேச்சி!

கூர்ந்து கவனிச்சால் முகத்தில் பழைய அடையாளம் எஞ்சி இருப்பது தெரிஞ்சது. தொடை வரை தொங்கும் நீளக் கூந்தலை  கேரள ஸ்டைலில் காதோர முடியிழைகளை  மட்டும் சேர்த்து முடிபோட்டு,  அப்படியே விரிச்சு விட்டுட்டு, எளிமையான காட்டன் புடவையில்  கையில் ஒரு சின்ன பர்ஸும் வச்சுக்கிட்டு, விசுக் விசுக்ன்னு நடந்து போன சேச்சியா இது! சேச்சியும் ஜமுனாவில்தான் வேலை செஞ்சுக்கிட்டு இருந்தாங்க.  முதலில் அவுங்களுக்கு  நம்மை அடையாளம் தெரியலை.

மணிச்சேச்சியின் கணவர் சந்த்ரச்சேட்டன் எப்படி இருக்கார்னு கேட்டால்  ச்சேட்டன் இவிடெல்லா,  பெரும்பாவூர் தரவாட்டிலேயான்னு  சொன்னது  சட்னு மனஸிலாகாம, எப்போ வருவார்னு கேட்டுட்டேன்.   இனி  இவிடே வரில்லைன்னதும் மனசுக்குக் கஷ்டமாப்போச்சு. பிள்ளைகள்  எங்கே இருக்காங்கன்னா...  ஒரு மகன் தில்லி, இன்னொரு மகன் பாம்பே!  இங்கே சேச்சி ஒற்றைக்கா.....தாமஸம்.  மணிச்சேச்சின்னு கூப்பிடுவோமே தவிர அவுங்க பெயர் இந்துமதி. கணவர் சரத் சந்த்ரன்.  என்ன பொருத்தமான பெயருன்னு அப்பெல்லாம் சொல்லிச்சொல்லி சந்தோஷப்பட்டுருக்கேன்.

தரவாடு வீடு என்னாச்சுன்னு கேட்டால்....  தம்பி அதை இடிச்சுட்டுத்தான்  அந்த வீட்டைக் கட்டிட்டாராம்  பாஸி  என்னும் பாலபாஸ்கரன். சின்ன வீடாகப் போனதால் பின்னால் இருக்கும் பரம்பையும் வித்துட்டாங்களாம். அட ராமா......:(

சின்னப்பறம்பிலும்  நிறைய மரங்கள்  இருக்கு என்பதே மகிழ்ச்சி.




பாஸி எங்கே? வீட்டுக்கதவு சாத்தி இருக்கேன்னால்....  பாஸி மகனுக்குக் கல்யாணம் அடுத்த வாரம். மற்ற சொந்தங்களுக்குக்  கல்யாணப்பத்திரிகை கொடுக்கப்போயிருக்காங்க. கதவு சும்மாத்தான் சாத்தி இருக்கு. வீடு எப்படி இருக்குன்னு உள்ளே போய்ப் பாருங்கன்னு சொன்னாங்க.  வேணாம்  என்றேன்.  என் மனசில் உள்ள தரவாடுவீடு அப்படியே இருக்கட்டும் கனவைக் கலைக்க விருப்பமில்லை:(

வீட்டுப்பின்பக்கம் ஏறக்கொறைய இப்படி இருக்கும்.  சுற்றிவர வெராண்டா உண்டு.  ச்சும்மா ஒரு  சாம்பிளா இதை வலையில் சுட்டேன்.  அந்த வீடுபோல வேறெதுவுமே ஆப்டலை:(  அது ஒரு ப்யூட்டி கேட்டோ!


அப்போ.... அந்தப்பன்?

இவுங்க வித்த பரம்பை வாங்கினது அந்தப்பன்தானாம். பின்னால் நல்ல வீடு கட்டியிருக்காராம். தனியா  ஒரு கேட் போட்ட பாதையைக் காமிச்சு அதுவழியாப் போகணுமுன்னு சொன்னாங்க.

உடம்பெல்லாம்  எண்ணெய் தேய்ச்சுக்கிட்டு குளிக்கப்போகும் நேரத்தில் நாம் போயிருக்கோம். கேரளாவில் இந்தப் பழக்கம் எனக்கு ரொம்பப்பிடிக்கும். நமக்குத்தான்  எதுக்குமே நேரம் இருப்பதில்லை:(  குளிச்சுட்டு வந்து வீட்டைக் காமிக்கவான்னாங்க. எதுக்கு? நமக்குத்தெரியாத இடமா என்ன?

கேட்டைத்திறந்து உள்ளே  கொஞ்சதூரம் போனதும் அழகான வீடு!  கதவெல்லாம் திறந்தே இருக்கு.  இங்கெல்லாம் எப்பவுமே இப்படித்தான்.  காலையில் திறக்கும் வாசக்கதவை இரவு படுக்கப் போகுமுன்தான்  அடைப்பது  வழக்கம். கதவைத்தட்டினதும்  வாசலுக்கு வந்து பார்த்து அந்தப்பனேதான். முதலில் நம்மை அடையாளம்  தெரியலை.  உப்பத்து வீட்டு மோளில் என்று ஆரம்பிச்சதும்  ஆச்சரியம்தான் முகத்தில்.  கோபால் அப்படியேதான் இருக்காராம். நாந்தான் ஏகத்துக்கும் மாறி இருக்கேன். தடிவச்சுப் போயல்லோ என்றார்! நல்லாவே எங்களை நினைவுக்கு  வந்துருச்சு:-)

சாய எடுக்காம்னு கிளம்பின அந்தப்பன் மனைவி  ரீத்தாவிடம் அதொக்க  வேண்டா,  இரிக்யூ,  நமக்கு சம்ஸாரிக்காமுன்னு  கொஞ்சம் பழங்கதைகள் பேசினேன்.  பெரியவள் மேரி, கல்யாணம்  பண்ணி குடும்பத்தோடு ஆலுவாவில்  இருக்காளாம்.  ரெண்டாமவள் பெட்டி, லண்டனில்.  மாப்பிள்ளைக்கு அங்கே வேலை!   மூன்றாமவள் மேகி, கன்யாஸ்த்ரீ  ஆகிவிட்டாராம். தங்கல் ஒரு மடத்தில்.

பால்வியாபாரம் ஒன்னும் இப்போ இல்லை. மகள்கள்  இனி ஓய்வெடுத்தால் போதுமுன்னு கண்டிப்பாகச்  சொல்லிட்டாங்களாம்.  மூவரும் பண உதவி செஞ்சு (முக்கியமாக மூன்றாமவள்) இந்த பரம்பு  பாஸியிடமிருந்து  வாங்கி, வீட்டையும் கட்டிக் கொடுத்துருக்காங்க.  வீட்டு செலவையும்  மூணு பொண்ணுங்களே பார்த்துக்கறாங்கன்னார்.

இருங்க. இன்றைக்கு சாப்பாடு இங்கேன்னார்.  இல்லை வேற வேலை இருக்குன்னு கிளம்பினதும்,  அதொக்க கழிஞ்சுட்டு இவிடே வந்நால்  நமக்கொன்னு கூடாமல்லோ என்றார்.  அந்த அன்பு ஒன்னு போதாதா?


 வண்டிக்குத் திரும்பும்போது ரெண்டு பேரும்கூடவே வந்தாங்க. அடுத்த பக்கம் இருக்கும் இன்னொரு  வீட்டில் இருக்கும், தேவகியைக் கூப்பிட்டு, இது யாரா பறயூன்னதும்  கொஞ்சம் முழிச்சவங்க, உப்பத்து மாடின்னதும்  இப்ப ஓர்ம வந்நுன்னு சந்தோஷப் பட்டாங்க. அதுவரை நான் தேவகியைக் கொம்ப்ளீட்டா  மறந்துருந்தேன் என்பதே உண்மை:(


மூணுபேரும்  வண்டிவரை வந்து வழிஅனுப்புனது   மனசிலேயும் கேமெராவிலேயும் சித்திரமா பதிவானதே  நிஜம்:-)

எல்லோர் முகத்திலும்  உண்மையான மகிழ்ச்சி!

தொடரும்............:-)







ரெவியிண்டெ ஸ்வந்தம் ம்யூஸியம் போகாம், வரூ ( மூன்று மாநிலப் பயணம்- தொடர் : 36)

$
0
0
இந்தியா வந்துட்டோமுன்னா நம்ம நித்தியப்படி சமாச்சாரங்களில் ஒன்னு  அண்ணனுக்கு தினமும் ஃபோன் பண்ணுவது. நாம் பத்திரமா இருக்கோமுன்னு  சொல்லிக்கிட்டே,  ஊர் சுத்துவோம். அநாவசியக் கவலையை அவுங்களுக்கு  ஏன் கொடுக்கணும், இல்லையா?

மரியா வந்து சேர்ந்ததையும், அம்முவின்  பூனை சமாச்சாரத்தையும் சொன்னேன். அண்ணனும் அண்ணியும்  Zeus விவரம் கேட்டு  ரொம்ப வருத்தப்பட்டாங்க. சரி நடந்தது நடந்துபோச்சு அதுக்கு அவ்ளோதான் ஆயுசுன்னு  ஆறுதல் சொன்னகையோடு,  'கருணாகரன் ம்யூஸியம் கட்டாயம் போய்ப் பார். உனக்கு ரொம்பவே பிடிக்குமு'ன்னதும், அதைப் பற்றிய விவரம் கேட்டுக்கிட்டேன். அங்கேதான் போறோம் இப்ப.


காம்பவுண்டை விட்டு வெளியே வர்றோம். தண்ணீரெல்லாம் வடிஞ்சுபோய் பாதை கண்ணுக்குத் தெரிஞ்சது!  படகுத்துறை கடந்து குரிசடி வரை வந்துட்டு  வலக்கைப் பக்கம் திரும்பணும்.



மரியாவில் இருந்து ஆலப்புழாவுக்கு வெறும் 20 கிமீ தூரம்தான்.  ஊருக்குள்ளே வந்ததும்  வழியை விசாரிக்கலாமுன்னு ஒரு பைக் நபரிடம் கேட்டதுக்கு, நான் அந்த வழிதான் போறேன். பின் தொடர்ந்து வாங்கன்னார்.  ஃபாலோ மி பிஹைண்ட்:-)))


சரியா அங்கே கொண்டுவிட்டதும் நன்றிகள் சொன்னோம்.  தெரு என்னவோ சாதாரணமாத்தான் இருக்கு.  கம்பி கேட்டுக்கு அப்புறம்  வெள்ளை அன்னம் போல் பெரிய கட்டிடம்!  வாசலில் சின்னதா ஒரு தோட்டம்.  ஆறு இத்தாலிய மங்கைகளின்  பளிங்குச் சிலைகள் தாங்கி நிற்கும் ஒரு  கூடார மண்டபம். சின்னதுதான்.




அதுக்கு அந்தாண்டை ஒரு அல்லிக்குளம். நடுவில் ஒரு சிலை. தகப்பனும் மகனுமா! பைபிள் கதையில் வரும்  மந்தையில் இருந்து பிரிந்துபோன ஆடு, மறுபடி வந்ததுபோல்  வீட்டையும் தகப்பனையும் விட்டுப்போன மகன், பாகம் பிரிச்சுக்கொண்டு போன காசு அத்தனையும் தொலைச்சுட்டு வீடு திரும்பின சம்பவம். தகப்பன்,  செல்வம் போனால் போகட்டும். நீ திரும்ப வந்ததே பெரிய சொத்து என்று அணைச்சு வரவேற்கிறார். ஏழடி உசரத்தில் இந்த வெண்கலச் சிலை, 1400 பவுண்ட் கனம்  உள்ளதாம்.  உலகப்புகழ் பெற்ற சிற்பி ஸாம் ஃபிலிப்  இந்தச் சிலையை (The Prodigal Son)  செஞ்சுருக்கார்.



ஆறு பெரிய தூண்கள் அணிவகுத்து நிற்கும் முகப்புக் கட்டிடம்.  பக்கவாட்டுஅறையில்   அனுமதிச்சீட்டு வாங்கிக்கணும்.  150 ரூபாய் ஒரு ஆளுக்கு.  நாங்க மூணு டிக்கெட் வாங்கிக்கிட்டோம்.  தனியார்  சேகரிப்பு இந்த ம்யூஸியத்தில் இருக்கு. நம்மை உள்ளே அழைச்சுக்கிட்டுப் போறார்  ம்யூஸியத்து வழிகாட்டி.


படங்கள் எடுக்க அனுமதி இல்லை. மனசு சோக கீதம் பாடியது உண்மை. ஆனால்இவுங்க வலைப்பக்கத்துலே  கொஞ்சம் படங்கள்  போட்டு வச்சுருக்காங்க. கூடவே தகவல்களும்.


கிருஷ்ணன் முதலாளி  என்பவர்தான்  கேரளாவில்  தேங்காய் நார் பயன்படுத்தித் தயாரிக்கும் தொழிலுக்கு (Coir products) முதல் தொழிற்சாலை  ஆரம்பிச்சவர்.  இதுக்கு முன்னே இந்தத் தொழில்  ஐரோப்பியர்  கைவசம் இருந்தது. கைத்தறி நெசவு போல் ஆரம்பத்தில் இருந்த  தொழிலை,  நவீனமயமாக்குனது இவரது மகன் கருணாகரன்.  இவர் முதலில்  இங்கிலாந்து (Birmingham University)  படிச்சு முடிச்சு மேற்படிப்புக்காக ஜெர்மனி போனார். அங்கே படிப்புமுடிஞ்சதும், ஒரு ஜெர்மானியப்பெண்ணைக் கல்யாணம் செஞ்சுக்கிட்டார். இவருக்கு ஆணும் பெண்ணுமாய் ரெண்டு மக்கள்.  ரெவி,லீலா.

தகப்பனின்  மறைவுக்குப்பிறகு  தொழிற்சாலை ரெவியின் கைகளுக்கு வந்தது. தொழிலை இன்னும் நல்லா விரிவு படுத்தி ஓஹோன்னு இருந்துருக்கார். மனைவியின் பெயர்  Betty. இவருக்கு ஒரே மகள்,  Lullu.

தொழில் சம்பந்தமா பலநாடுகளுக்குப்போய் வர்றார். கலைப்பொருட்கள் மீதுள்ள ஆசையால் ஒவ்வொரு பயணத்திலும் பொருட்கள் சேர்ந்துக்கிட்டே வருது.  தன்னுடைய 72 ஆம் வயசில்  (2003) ரெவி காலமாகிட்டார்.

கடைசியில் இவ்வளவையும் வீட்டுலே வச்சுக்கிட்டு என்ன பண்ணறது?  நாலு பேர் பார்த்து சந்தோஷப்படட்டுமேன்னு  அவருடைய மனைவி Bettyயும் மகளுமா  திட்டம் போட்டு, தனியா ஒரு கட்டிடம் கட்டி  மக்கள் பார்வைக்கு வச்சுருக்காங்க. 2006 ஆம் ஆண்டு மேகாலயா கவர்னர்  வந்து திறந்து வச்சுருக்கார்.




கீழ்தளத்தைப் பார்த்து முடிச்சதும், மாடிக்குக் கூட்டிப் போனார் வழிகாட்டி. விளக்கைப் போட்டதும்.....   கண் எதிரில் ஒரு மாயாலோகம்! க்றிஸ்டல், பளிங்கு, தந்தம், போர்ஸலீன், வெள்ளி  இப்படி பலவகைகளில்  சின்னச்சின்ன சிற்பங்கள். எல்லாம் அழகா கண்ணாடிப் பொட்டியில் தூசு படாமல் வச்சுருக்காங்க. பார்வையாளர்கள் ஒரு கஷ்டமும் இல்லாமல் நிம்மதியா சுத்திச்சுத்திப் பார்க்கும் வகையில் அமைப்பு. நம்ம சீனிவாசன்  ஒரு சுத்துப் பார்த்துட்டு  கீழே  போறேன்னு சொல்லிட்டுப் போயிட்டார்.


நாங்க  இந்த மாடியில் ஒவ்வொரு  கண்ணாடிப்பொட்டிக்கு முன்னும் நின்னு  ஆஹா...ஓஹோன்னு  சொல்லிக்கிட்டு இருக்கோம்.

ஒவ்வொன்னும் அப்படியே அள்ளிக்கிட்டுப்போகுது!  எதைச் சொல்ல எதை விட?  வெண்ணையில் செய்ததைப்போல தந்தத்தில் அப்படியே இழைச்சு வச்சுருக்காங்க. ஒரு அலமாரியில்  கஜுராஹோ சிற்பங்களைப்போல் முழுசும் தந்தத்தில்!  இத்துனூண்டு சிற்பங்களில் என்ன ஒரு வேலைப்பாடு!
கடவுளர் சிலைகளுக்குக் கணக்கு வழக்கே இல்லை!  அவதார் என்ற பெயரோடு ஒன்னு இருக்கு பாருங்க..... ஹைய்யோ!!!!!



நம்ம கோபால் எப்பவும், நான்  சின்னச்சின்ன பொம்மைகளையும் பொருட்களையும்  சேகரிப்பதைப் பார்த்து,  எவ்ளோ ஜங்க்(!) சேர்த்து வச்சுருக்கேன்னு சொல்வார்.  இதெல்லாம் அவர் பார்வைக்கு ஜங்க்காமே ஜங்க். பேசாம என் காலத்துக்குப் பிறகு இப்படி  அழகா டிஸ்ப்ளே செஞ்சுருங்க. உங்களுக்கு வருமானமுமாச்சுன்னு  சொன்னேன். பொழுதும் போனமாதிரி இருக்குமே!  ஜஸ்ட் ஒரு டாலர் தான் எண்ட்ரி ஃபீ:-)

இந்த மாடியின் பின்பகுதியில்   கேரளா  ஹால் ஒன்னு  இருக்கு. பொதுவா கேரளத்தைப் பற்றி இதுவரை தெரிஞ்சுக்காதவங்களுக்காகன்னு வச்சுக்கலாம். தரை முழுக்க  பாலீஷ் செஞ்ச டெர்ரகோட்டா டைல்ஸ் போட்டு  உள்கூரை நல்ல தேக்குமரத்தில் பாரம்பரிய வேலைப்பாடுகளோடு  அழகோ அழகு!   இதற்கடுத்து இதை ஒட்டினாப்போல ஒரு பெயிண்டிங் கலெக்‌ஷன். ஓவியங்கள் ப்ரமாதம்.

இதே கட்டடத்தின்  பின்பகுதியில்  ரெவி கருணாகரனின்  குடும்பம் வசிக்கிறாங்க. ஒரே மகள்தானே.  ஆனால் அவுங்களுக்கு  ஒரு விதமான   உடல்நிலைக் கோளாறு. நெருங்கிய உறவினரின் கவனிப்பில் இருக்காங்களாம். தன்னுடைய  சொத்து சுகங்களோ, இத்தனை அபூர்வமான  கலைச்செல்வங்களோ  இருக்கு  என்ற விவரம் கூடப் புரிந்துகொள்ள முடியாத  ஒருநிலை.ப்ச்.... எனக்கு  ஐயோன்னு  இருந்தது:(

லீலா பேலஸ் ரிஸார்ட்டுகள் உட்பட ஏகப்பட்ட  பெரிய பெரிய நிறுவனங்களை ஏற்படுத்திட்டுப் போயிருக்கார் ரெவி.

ம்யூஸியம் பார்க்க  உள்ளூர்க்காரர்கள்  வருவது அபூர்வமாம். ஆனால் வெளிநாட்டினர் அநேகர் வருவதுண்டாம்.  இங்குள்ள தந்த சிற்பங்களின்  விவரம் எல்லாம் அரசாங்கக் கணக்கெடுப்புக்கு  உட்பட்டதுன்னார்.

வார விடுமுறையாக  திங்கட்கிழமை  லீவு .பார்த்து வச்சுக்குங்க. மற்ற நாட்களில் தினமும் காலை 9 முதல் மாலை 5 வரை திறந்துருக்கும்.


ஒன்னேகால் மணி நேரம்போனதே தெரியலை. கீழ்தளத்தில் ரெஸ்ட் ரூம்  நல்ல வசதிகளோடு நீட்டா இருக்கு!



வெளியே தோட்டத்திலும் சில சிற்பங்களை  வச்சுருக்காங்க.ஒரு அம்மிக்கல்லும் ஆட்டுக்கல்லும் கூட இருக்கு. பழையகால சாமான்களை இனி இப்படிப் பார்த்தால்தான் உண்டு.


சரி கிளம்பலாமுன்னு காருக்கு வந்தா....சீனிவாசன் நல்ல தூக்கத்தில்!
இனி ஒரு   அரைமணிக்கூர்  பயணம் செஞ்சு கோவிலுக்குப் போறோம்.
எண்டே க்ருஷ்ணா.... இதா வருந்நு...

தொடரும்........:-)

PINகுறிப்பு: நாம் ரவி, ரமா என்பதை,  ரெவி, ரெமான்னுதான்  கேரளத்தில் சொல்றாங்க.

சொல்ல மறந்துட்டேனே.......   'உள்ளே 'படங்கள் எல்லாம் இவுங்க பக்கத்தில் சுட்டது!  வேற வழி இல்லை.  மாப்பு ச்சோதிக்குந்நு   ரெவிமுதலாளி!





ஹாலிவுட், பாலிவுட், கோலிவுட், வரிசையில் வெல்லிவுட் வைக்கலாமா :-))) (தலைநகரத்தில் ! பகுதி 3)

$
0
0
எங்களைப் பார்த்ததும்  காருக்குள் இருந்த  கிவியனின் தங்க்ஸ் ஓடி வந்து என் கையைப் பிடிச்சுக்கிட்டாங்க.  ஆள் கொஞ்சம் கூட மாறலை.  உருவம், உள்ளம் எல்லாமே  முன்பிருந்ததைப்போல!  ஒன்பதரை வருசத்தைத் தூக்கிக் கடாசிட்டு,  அப்போ விட்டுப்போன எங்கள் பேச்சைத் தொடந்தோம்.

சாப்பிட்டீங்களா என்பதே முதல் கேள்வி!  ஆச்சு ஆச்சு. இந்தியாவின் விசேஷமே இதுதான்!  விருந்தோம்பல்!  ஒரே பார்வையில் ஊர் முச்சூடும் பார்க்கக் கூட்டிப் போனாங்க. அதே மவுண்ட்  விக்டோரியாதான்.  உச்சிவரை போகக்  கார்ப்பாதை இருக்கு.  நான்  ஒரு 22 வருசங்களுக்கு முன் வந்துருக்கேன்.  நம்ம விஜயா அக்கா வீட்டுக்கு விருந்தாளியாப் போயிருக்கோம் நானும், மகளும்.  அப்போ  மாமா கொண்டுபோய் காமிச்சார். ஸோ எனக்கு இது இரண்டாம்முறை. நம்ம கோபாலுக்கு இது முதல்:-)

பயணிகள் தவறாமல் வந்து போகும் இடம்.  காசிக்குப்போய் கங்கையைப் பார்க்காமல் வருவார் உண்டோ?   ரொம்பப் பெரிய மலை இல்லைன்னாலுமே ஊரைப் பறவைப் பார்வை பார்க்க இதைவிட வேற ஒரு சிறந்த இடம் கிடையாது.  196 மீட்டர் உயரம்தான். அடிகளில் மாத்தினால்  நிறைய உசரமாப்போயிரும்:-)

என்ன ஒன்னு.... இங்கே வருமுன் கால்களில் பாறாங்கல்லைக் கட்டிக்கணும். கொஞ்சம் ஏமாந்தால் பறந்துருவோம். 'விண்டி வெலிங்டன் 'என்றும் சொல்லலாம்.  ஏற்கெனவே  பயங்கர காத்தடிக்கும் ஊர். இதுலே கொஞ்சமே கொஞ்சம் உசரமான இடமுன்னாலும் கேக்கவா வேணும்?

உச்சிக்குப்போய்ச் சேர்ந்தோம்.கார்பார்க்கில் வண்டியை நிறுத்திட்டு இறங்கலாமுன்னு பார்த்தால்  கார்க்கதவைத்  திறக்க முடியாமல் காத்து தள்ளுது.  கண்ணுக்கு முன்  ஒரு டைல்ஸ் பதிச்ச கூடாரம்.  இந்தவகைக் கூடாரங்கள் அன்ட்டார்க்டிக் பகுதிகளில்  பயன்படுத்துவது. அங்கேயும் பனிப்புயல் கடுமையா வீசுமே!


Byrd Memorial என்று சொல்லும் இது ஏன் இங்கே?  இவர்தான் Richard E. Byrd.அமெரிக்கர்.  முதன்முதலில்  தென் துருவத்துக்கு  விமானத்தில் போய்ப் பார்த்தவர். செல்ஃப் ட்ரைவிங்!  இதுக்கு முன்னாலும் ரெண்டு முறை கப்பலில்  தென்துருவம் போய் வந்தவர்.  அமெரிகக் கடற்படை உத்தியோகஸ்தர்.  ரியர் அட்மிரல்  பதவி!  நியூஸியை  அடித்தளமா வச்சுக்கிட்டு  தென் துருவத்தை ஆராய்ஞ்சவர்.



தென் துருவத்துக்கு மிகவும் அருகில் இருக்கும் நாடு இது என்பதால்  இப்பவும்  அன்டார்க்டிக்  ஆராய்ச்சிக்கும்,  அங்கு போய்வரவும், தங்கி இருப்பவர்களுக்கு  தேவையான உணவு,மருந்து,  உடைகள், கருவிகள் இப்படி சப்ளைகள்  செய்யவும் நியூஸிதான்  பெஸ்ட் ப்ளேஸ்.  அதிலும்  எங்க ஊர் கிறைஸ்ட்சர்ச் (தெற்குத்தீவு) விமான நிலையத்தில்தான்  இதுக்கான  விசேஷ ஏற்பாடுகள்  இருக்கு.  எங்கூர் துறைமுகத்தில் இருந்துதான்  தென் துருவ ஆராய்ச்சிக்குக் கப்பல்களும் போய்  வருது. ஏற்கெனவே சொல்லி இருக்கேனோ? அப்படியெல்லாம்  விட்டு வச்சிருப்பேனா என்ன:-)




கூடார நினைவுச் சின்னத்தில்,  தென் துருவத்தில் இருந்து கொண்டு வந்த கற்களையும் பதிச்சு வச்சுருக்காங்க. பக்கத்துலேயே  அந்தக் காலக்கட்டத்துலே இங்கிருந்த  மவோரியர்களின் சமூக அமைப்பைக் கோடிகாட்டும் சில குறிப்புகள். சரித்திரம் முக்கியம் அமைச்சரே!
நியூஸியின் வடக்குத்தீவு முடிவில் இருக்கும் வெலிங்டனுக்கும், தெற்குத்தீவின் ஆரம்பத்தில் இருக்கும்  பிக்டன் என்ற  ஊருக்கும்  இடையில்தான்  வடக்கு தெற்கு போய் வரும் கடல்பாதை!  குக் ஸ்டெர்ய்ட். முப்பது கிமீ  இடைவெளிதான் .  ஆனால்  கொந்தளித்துப் பொங்கும் கடல்பகுதி.  அதனால் எப்பவும் வெலிங்டனில் வீசும் கொடும்காற்றுக்கு  இதுதான் காரணமுன்னு  சொல்லலாம்.   40 knot காற்றே போதுமாம் ஆளைத் தூக்க!


அக்கம்பக்கம் எல்லாம் கொஞ்சம் க்ளிக்கிட்டு அருகில் இருக்கும் லுக்கவுட் மேட்டுக்கு  ஏறினோம்.  ஒரு அம்பதறுவது படிகள் இருக்கு. என் தடுமாற்றம் பார்த்த கிவியன், இங்கிருந்தே பார்க்கலாமா இல்லை  மேலே போகலாமான்னார்.  அஞ்சாநெஞ்சள்  சும்மா இருந்ததா சரித்திரம் உண்டோ?

முதல்  செட் ஆஃப் படிகள் ஏறுனதும்  பீரங்கி ஒன்னு ரெடியா இருக்கு!  உலகப்போர் நடந்த சமயம்  எங்கே எதிரி இங்கே இந்த நாட்டுக்கு வந்துருவானோ என்ற பதற்றத்தில் வருபவனை ஓட்ட  அங்கங்கே பீரங்கிகளைக் கொணாந்து நிப்பாட்டி வச்சவங்க நாங்க.  இதைவிட பெரிய சைஸ் பீரங்கி தளம் கூட தென்கோடிப் பயணத்துலே பார்த்தது நினைவிருக்கோ?


எதிரியும்  வந்து, போர்க்கைதிகளை ஒருவேளை பிடிச்சுட்டோமுன்னா அவுங்களை   அடைச்சு வைக்க முன்னேற்பாடா  சிறைச்சாலை கூட கட்டி வச்சொம்லெ:-)  கடைசியில் வராம ஏமாத்திப்பிட்டானே!!!!

அட... இதுதான்  பிக்டனில் இருந்து ஃபெர்ரி வரும் வழி.  தூரக்கப்பாரு....ஒன்னு வந்துக்கிட்டு இருக்கு!

அதுதான் பழைய க்ரிக்கெட் ஸ்டேடியம்.  விளையாடிக்கிட்டு இருக்காங்க பாருங்க. ஸ்லிப்புலே நாலுபேர்  என்றார்  கிவியன்.

இந்தப்பக்கம்  இருக்கே  இதுதான் வெஸ்ட்பாக் ஸ்டேடியம்.  உலகக்கோப்பையில்  பார்த்தீங்கதானே?

ஆமாம். இது புத்தம் புதுசாச்சே!
அதையொட்டுனாப்போல  போர்ட்.கண்டெய்னர்  டெர்மினல் போல இருக்கே!




360 டிகிரி  வ்யூ!  எதுவும் மறைக்காது.  இங்கிருந்து  பவுர்ணமி நிலா,  முக்கியமாக க்ரஹணக் காலங்களில்  சந்திரனை பாம்பு விழுங்குவதை பார்க்கவே  கூட்டம் வருதாம்!




தூரக்கே   வெல்லிவுட்   என்று ஒரு ஸைன்  போர்டு வச்சாக் கொள்ளாம் என்ற பேச்சு  எழும்புது. நாட்டின் புகழை உலகநாடுகளில் பரப்பிய சினிமாத் தொழிலால்  இங்கே வருசத்துக்கு  285 மில்லியன் டாலர்கள் தலைநகரத்துக்குள் வந்துக்கிட்டுருக்கு!  சினிமா எடுத்ததோடு நிற்காமல்,  படப்பிடிப்பு நடந்த இடங்களையே ஒரு ஷோவா ஆக்கிட்ட திறமையை என்ன சொல்றது!  அந்த இடங்களைப் பார்க்கணுமுன்னே  உலக மக்கள் பலர் சுற்றுலா வர்றாங்க.  வந்திறங்கும் விமான நிலையத்தில்  ஊரின் முக்கியத்துவம் காமிக்க இப்படி ஒரு  விளம்பரப்பலகை வைக்கணும்.  விமானத்துலே வந்து இறங்கும்போதே கண்ணில் பளிச்ன்னு படணும் என்பதுதான் ஐடியா.

நகரமக்களும் நாட்டு மக்களுமா இதுக்கு ஆதரவையும் எதிர்ப்பையும் காமிச்சாங்க.  விமான நிலையத்துக்கு பெரிய பாகஸ்த்தர்  வெலிங்டன் சிடிக்கவுன்ஸில்தான்.  ஊருக்கு வரும் வருமானத்தை வேணாமுன்னு தள்ள மனசு வருமா?  பொதுமக்களிடம்  வாக்கெடுப்பு நடத்தினாங்க.   வெல்லிவுட் தோத்துப்போச்சு.

மேலே தோல்வி  , கீழே வெற்றி:-)
கடைசியில்  2012  ஜூலை மாசம், 'அடிக்கும் காத்து  ஊரையேத் தூக்கிட்டுப் போயிரும்  என்ற உண்மை நிலையை  உரப்பிக்கும் விதமா  வெலிங்டன் ப்ளோன் அவே'ன்னு குறிப்பால் சொல்லும் விதம் இப்படி ஒன்னு  வச்சாங்க. வேட்டா தான் தயாரிச்சுக்கொடுத்துச்சு. செலவு எம்பதினாயிரம் டாலர்:(   இப்பக் காத்துலே உண்மையாவே பிய்ச்சுக்கிச்சுன்னு  சொன்னாங்க.




இன்னொரு பக்க மலை அடிவாரத்தைக் காமிச்சு அங்கேதான் ஃபால்ட் லைன் ஓடுதுன்னார் கிவியன். பெருமாளே....  ஆபத்து ஒன்னும் இல்லாமக் காப்பாத்துன்னு  வேண்டிக்கிட்டேன்.  ரொம்பவே நெருக்கமான  கட்டிடங்கள் அதுவும் ஒவ்வொன்னும்  20, 25 மாடிகள்!   அழிவைக் கண்ட கண்ணுக்கு இதையெல்லாம்  நினைச்சாவே நடுக்கம்தான்:(

எங்கூர்லே ரெண்டே ரெண்டுதான் ஒரு ஆசைக்குக் கட்டுனோம். அதில் ஒன்னு நிலநடுக்கத்தில் போயிருச்சு.  இப்ப கண்ணே கண்ணு ஒன்னே ஒன்னுதான்.

நம்மைப்போல் வந்த பயணிகள் கூட்டம் இங்கே அதிகம்தான்.  ஒரு இருபது ஆட்களுக்கு மேலேயே!

சுற்றுலாப்பயணிகளைச்சுமந்து வந்த  பஸ் ஒன்னு வந்து நின்னதும் வெள்ளை உடுப்பு மக்கள்ஸ்  இறங்கினாங்க.  ப்ரம்மகுமாரிகள் சங்கமாம்.




சுத்துமுத்தும் பரந்து விரிஞ்சு போகும் ஊர். மலைகளிலும் குன்றுகளிலும்   ஏகப்பட்ட வீடுகளும் கட்டிடங்களும்.  இரவு நேரத்தில் பார்த்தால் கார்த்திகை தீபம் ஏத்துனாப்போல வெளிச்சம் மின்னும், இல்லே?

மேலே இருந்து பார்க்கும்போது ஒரு சர்ச்சின் தலை தெரிஞ்சது. அப்புறமா கீழே இறங்கி  அதே சர்ச் 'பார்த்துக்கிட்டு'இருக்கும் பீச்சுக்குப் போனோம். குட்டியூண்டு பீச்!




பிய்ச்சுக்கிட்டுப்போகும் கடற்காற்றில் எதிர்நீச்சல்போட்டு சிறகுகள்  ஓய்ஞ்சு போன நிலையில் கடற்காக்கைகள் எனும் ஸீகல்ஸ்  எல்லாம் சொல்லி வச்சமாதிரி வரிசையில் அடங்கி உக்கார்ந்து இருந்தது சூப்பர்! கண்ணு முழிச்சுருக்கே தவிர அசைவொன்றுமில்லை!


ஹொட்டேலில் நம்மை சந்திக்க வந்தவரிடம்  மாலையில் கோவிலுக்குப்  போகணும் என்றதோடு எங்களை முழுசுமா கிவியன் தம்பதிகள் வசம் ஒப்புக்கொடுத்துட்டதால் கவலை இல்லாமல் இருந்தோம்.  அடுத்த திட்டத்தைச் சொன்னாங்க.


நேரா கிவியனின் பெற்றோர்களைப்போய்ப் பார்த்துட்டு அப்படியே  கோவிலுக்குப் போறோமாம். அறைக்கு வந்து விஷ்ணு சகஸ்ரநாமம் புத்தகங்களை எடுத்துக்கலாமுன்னு  ஹொட்டேலுக்கு வந்தோம். கூட வந்தா எங்கே நடக்க வச்சுருவாரோன்னு  கிவியனை வண்டியிலேயே விட்டுட்டு நாங்க மூணுபேர்  மட்டும் வழி தேடிப்போறோம்:-)  முதலில் கண்ணில்பட்ட ஒரு  லிஃப்ட்க்குள் போய் 19 அமுக்கிட்டு ஒரு வெற்றிப்பார்வை பார்த்தார் கோபால். லிஃப்ட்  கிளம்பவே இல்லை! 26 மாடின்னு காமிக்குதே தவிர எந்த  எண்ணைத் தொட்டாலும் அசையலையே!

சரிதான். இது ஆஃபீஸ்களுக்கு மட்டும் இருக்கும். இப்போ வீக் எண்டில்லையோன்னு  அடுத்த பக்கம் எதாவது இருக்கான்னு எட்டிப் பார்த்தால்  எட்டாவது  மாடி ஹொட்டேல் லாபிக்குப்போகும்  கண்ணாடிக்கதவு!  அதன்வழியாப்போய்  இன்னொரு லிஃப்ட்லே 19க்கு ஏறியாச்.  புத்தகங்களை எடுத்துக்கிட்டுப் போனவழியாகவே  கார்பார்க் பக்கம் வந்துட்டோம். அஞ்சே நிமிசம்!  ஆச்சரியப்பட்ட கிவியனிடம்  ......    அதெல்லாம் ஈஸி வழி கண்டுபுடிச்சுருவொம்லெ !

 தன்னுடைய  வலைத்தலைப்பை மட்டும் அனுசரிக்கிறாரேன்னு 'ஏன் இப்பெல்லாம்  எழுதறதில்லை?'ன்னு கேட்டதுக்கு, எழுதணுமுன்னு தோணலைங்கறார்.  பத்து வருசமா பதிவர். கடைசிப்பதிவு போட்டு ஒரு வருசமாகுது !   மௌனம் காத்தால் எப்படி?  ட்விட்டர், ஃபேஸ் புக் இப்படி அடிச்சு ஆடிக்கிட்டு இருப்பதுகூட காரணமா இருக்கலாம்!

வாசகர்கள் சந்திப்பு நடக்கப்போகுதுன்னு அப்ப எனக்குத் தெரியாது!

தொடரும்............:-)




ஓணம் ஆரம்பிச்சது இங்கே இருந்துதானாக்கும், கேட்டோ! ( மூன்று மாநிலப் பயணம்- தொடர் : 44)

$
0
0
எளிய மனிதர்களுக்குள் எத்தனை அன்புன்னு  மாய்ஞ்சு மாய்ஞ்சு பேசிக்கிட்டே  திரும்பி  ஆலுவா  ஹொட்டேலுக்கு வர்றோம். 31 கிலோ மீட்டர் கடந்ததும் தெரியலை. அறைக்குப்போய்  கொஞ்சம் ஃப்ரெஷப் செஞ்சுக்கிட்டு  இதோ காக்கரையப்பனைக் காணான்  புறப்பட்டு. காலையில் வரும்போது பார்த்து வச்சுக்கிட்ட இடம்தானேன்னு கொஞ்சம் மெத்தனம். குள்ளர் ஒரு போடு போட்டார் நம்ம அகம்பாவத்தில்!

வழியைத் தவறவிட்டு ஒரு சுத்து சுத்தினதும்  அட  இந்தக் கட்டிடத்தைப் பார்த்த நினைவு இருக்கேன்னு  சீனிவாசனைக் கொஞ்சம் மெதுவாப் போகச் சொன்னேன். ஆ.....  கிடைச்சுடுத்து! இதையொட்டியே இருக்கு கோவில் வளாகம். கொஞ்ச தூரம் போய் இடது பக்கம் திரும்பிக்கணும்.
திருவோணம் ஓடிட்டோரியத்தைத் தொட்டடுத்தா ஈ க்ஷேத்ரம்!

தெருவுக்கு ரொம்பவே கீழே இருக்கு. அதான் நேர்ப்பார்வையில்  கண்களில் படலை!  படிகளிறங்கிப் போறோம். வளாகம் ரொம்பவே பெரூசு. கீழே கோவில் வாசலுக்கருகில் வண்டி ஒன்னு நிக்குது.  அப்ப  கார் உள்ளே வர ஒரு பாதை இருக்கணும்தான்.  சீனிவாசன் கண்டுபிடிச்சு நிறுத்திட்டு வருவார்தானே?



திட்டிவாசல் போல் ஒரு சின்னக் கதவு.  கொடிமரத்தின் உச்சி கண்ணில் பட்டது. கடந்தால்  காம்பவுண்டு சுவருக்குள் அங்கங்கே  சந்நிதிகள்.  முதலில் அப்பனை தரிசிக்கலாமுன்னு போனோம். கோவில் முகப்பிலேயே  உள்ளே இருப்பது யார்ன்னு தெரிஞ்சு போகுது!  கையில் கிண்டி ஏந்தி நிற்கும்  வாமனர்!  கொடிமரம் கடந்து  முன்னே இருக்கும்  உம்மரத்தினுள்ளில் தகதகன்னு பிரகாசத்தோடு பலிபீடம்(!)



கேரளப் பாரம்பர்யம் அனுசரிச்சு  உள்பிரகாரம் போகும் வழியில்  ரெண்டு பக்கங்களும் திண்ணை வச்ச  நடை.  இங்கேயும் வட்டமா இருக்கும் கருவறைதான். ஆனால் சின்ன  சைஸ்.  வாமனரின் அளவுக்கேத்தபடி வச்சுருக்கார்,  கோவிலைக் கட்டிய  பரசுராமர்.

வாமன அவதாரம் நடந்த இடமே இதுதான் என்கிறார்கள்.  உங்களுக்கு மாவேலியைத்தெரியுமோ?

சுருக் என்று சொல்லிப்போகவா....

அந்தக் காலத்துலே மகாபலி ன்னு ஒரு அசுர ராஜா நாட்டை ஆண்டுக்கிட்டு இருந்தார். ரொம்பவே நல்லவர்.அசுரனா இருந்தாக் கெட்டவனாத்தான் இருக்கணுமா என்ன? நாட்டுமக்களைக் கண்போல காத்துவந்தார்.வாரி வழங்குறதுலே அவர் கர்ணனைப் போலவே இருந்தார்.

(அட, இது என்ன? அப்போ கர்ணன் பிறந்திருக்க வழியே இல்லையே? இது நடந்தது கிருஷ்ணாவதாரம் நடக்கறதுக்குக் கனகாலம் முந்தியாச்சே. கொடைன்னதும் கர்ணன்தான் நினைவுக்கு வர்றான். புரிஞ்சுக்கிட்டீங்கெல்லெ) 

அவருடைய பெருமையையும் புகழையும் பார்த்த தேவர்களுக்குப் பொறுக்கலே. மஹா விஷ்ணுகிட்டே போய் போட்டுக் குடுத்தாங்க.'இப்படி இவர் புகழும், பெருமையும்கூடிக்கிட்டே போகுது. நாளைக்கு அவரே நம்மையெல்லாம் தள்ளிட்டு மூணு லோகத்துக்கும் அதிபதியா வந்துட்டாருன்னா நமக்கெல்லாம் கஷ்டம்'னு! ( சரியான பொறாமை பிடிச்ச கூட்டம்?)

மஹாவிஷ்ணு பார்த்தார், என்ன செய்யலாமுன்னு. அப்ப மகாபலி ஒரு யாகம் செய்யத் தீர்மானிச்சு அதை நடத்திக்கிட்டு இருந்தார். பொதுவா ஒரு யாகம் செஞ்சு முடிச்சவுடனே, அதுலே பங்கேத்து அதை நடத்திவச்ச அந்தணர்களுக்கும்,மற்றபடி யாசகம் பெறவந்தவங்களுக்கும் செல்வங்களை வழங்கறது பதிவு. அதிலும் இவர் வாரிவாரி வழங்கறதுலே மன்னராச்சே! எப்பவும் இல்லை என்ற சொல்லே இவர் வாயிலே இருந்து வராது. இதை நல்லாப் புரிஞ்சுக்கிட்ட மஹாவிஷ்ணு, ஒரு ச்சின்ன அந்தணச் சிறுவனா உருமாறி அங்கே யாகம் நடக்குற இடத்துக்குப் போனார்.

அப்ப கேட்டவங்களுக்கெல்லாம், கேட்டது கேட்டபடி தானம் நடந்துக்கிட்டு இருக்கு. ச்சின்னப்பையன் தானம் வாங்கவந்ததைப் பார்த்த மகாபலிச் சக்ரவர்த்திக்கு சந்தோஷம் தாங்கலே. குழந்தைப் பையன் முகத்துலே ஒரு வசீகரம் இருக்கு.இருக்காதா பின்னே? வந்திருக்கறது யாரு? ஈரேழு பதினான்கு லோகத்துலேயும் செல்வத்துக்கு அதிபதியான மஹாலக்ஷ்மியோட கணவனாகிய மஹாவிஷ்ணுவாச்சே!

என்ன வேணுமுன்னு பவ்யமாக் கேட்டாரு ராஜா. ச்சின்ன உருவமான 'வாமனர்'சொன்னார், பெரூசா ஒண்ணும் வேணாம். என் காலடிஅளவுலே ஒரு மூணடி மண் தானம் வேணுமுன்னு. ஆஹா..அப்படியே தந்தேன்னு சந்தோஷமாச் சொன்னார் மகாபலி. அப்ப அவருடைய ஆச்சாரியனான சுக்ராச்சாரியாருக்கு வந்திருக்கறது சாதாரணச் சிறுவன் இல்லேன்னு தெரிஞ்சு போச்சு. 'இது நல்லதுக்கில்லே. வேணாம்'னுராஜாகிட்டேத் தனியாப் பேசித் தடுக்கப் பார்த்தார். ராஜா சொல்லிட்டார், கொடுத்தவாக்கு கொடுத்ததுதான். வந்தவர் விஷ்ணுன்னா எனக்கு இன்னும் சந்தோஷம்தான். எங்க தாத்தாவோட இஷ்ட தெய்வமாச்சே மஹாவிஷ்ணு. அவரே வந்து என்கிட்டே தானம்கேக்கறாருன்னா அதைவிட எனக்கு வேற பாக்கியம் வேணுமா'ன்னு சொல்லிட்டார்.

 ராஜாவோட தாத்தா யாரு தெரியுமா?ஹிரண்யகசிபுவோட மகன் பிரஹலாதன். 'நாராயணா நமஹ'ன்னு எப்பவும் சொல்லிக்கிட்டு இருந்தாரே, அவர். அப்பதான்அவருடைய அப்பாவான ஹிரண்யனைக் கொல்ல மஹாவிஷ்ணு நரசிம்ஹ அவதாரம் எடுத்தது! இப்படி ஒவ்வொண்ணாச் சொல்லிக்கிட்டே போகலாம். இருக்கட்டும், இப்ப நடக்குற விஷயத்துக்கு வாரேன்.

அந்தக் கால வழக்கப்படி தண்ணி ஊத்தக்  கெண்டியைக் கொண்டுவரச் சொன்னார். தானம் வாங்கறவங்க கையிலே, கொஞ்சம் தண்ணி ஊத்திட்டு நீங்க கேட்டதைக் கொடுத்தேன்னு சொல்லணும்.  சுக்ராச்சாரியாருக்குப் பொறுக்கலை. அரசனுக்குஆபத்து வருதேன்ற பதைப்புலே என்ன செய்யலாம் இதைத்தடுக்கன்னு யோசிச்சு, ஒரு வண்டு ரூபம் எடுத்து,அந்தக் கெண்டியிலே இருக்கற மூக்கு ஓட்டையை அடைச்சுக்கிட்டு உக்காந்துட்டார்.

ராஜா தண்ணி ஊத்தக் கெண்டியைச் சரிக்கிறார். வாமனர் கையை நீட்டிக்கிட்டு இருக்கார். தண்ணி வரலை. அதான் அடைபட்டுப் போச்சே! அப்ப ஏதோஅடைச்சுக்கிட்டு இருக்குன்னுட்டு, அங்கே யாகம் செஞ்ச இடத்துலே இருந்த தர்ப்பைப்புல் ஒண்ணு எடுத்து அந்த வளைஞ்ச கெண்டிமூக்கு ஓட்டையிலே குத்துறார் ராஜா. அது ஆச்சாரியருடைய கண்ணுலே குத்தி ரத்தமா வருது. திடுக்கிட்டுப் போய் உள்ளெ என்னன்னு பரிசோதிக்கிறாங்க. வெளியே தொப்புன்னு விழுந்த வண்டு பழையபடிஆச்சாரியனா உருமாறிடுது. ஒரு கண்ணுலே ரத்தம் வழியுது.

( அதுக்குத்தான் பெரியவுங்க சொல்றது, யாருக்காவது எதாவது தானம் கொடுக்கறப்ப அதைத் தடை செய்யக்கூடாதுன்னு! நீ கொடுக்கலேன்னாப் போ. அடுத்தவன் கொடுக்குறதை ஏன் தடுக்கறே?)

அப்புறம் வேற கெண்டி கொண்டுவந்து தண்ணி ஊத்தி தானத்தை வழங்கிடறார் மகாபலி. மூணே மூணு அடி!  இதோ தந்தேன்!

வாமனர் உருவம் விஸ்வரூபம் எடுக்குது. வளர்ந்து வளர்ந்து ஆகாயத்துக்கும் பூமிக்குமாய் நிக்கறார். முதல் அடி இந்த பூமி முழுசும். ரெண்டாவது அடி அந்த ஆகாயம் முழுசும் ஆச்சு. இப்ப மூணாவது அடி எங்கே வைக்கறது?மஹாவிஷ்ணுவோட விஸ்வரூப தரிசனம் லேசுலே கிடைக்கிற சமாச்சாரமா? ஆனா அன்னிக்கு அங்கே இருந்த எல்லாருக்கும் லபிச்சது. 'ஆ'ன்னு வாயைப் பொளந்துக்கிட்டு எல்லோரும் மெய்மறந்து நிக்கறாங்க. அப்ப ராஜா மகாபலி , மூணாவது அடி என் தலையிலே (சிரசில்)வையுங்கன்னு பணிவாச் சொல்றார்.

( வீடுங்களிலே எப்பவாவது  கைவேலையா இருக்கறப்ப  , சில சாமான்களை எங்கே வைக்கறதுன்னு, நாம  யாராவது கேட்டாங்கன்னா,'ஏன், என் தலையிலெ வையேன்'ன்னு சொல்றோமே இதுகூட இந்த சம்பவத்தாலே வந்ததுதானோ?)

அப்ப மஹாவிஷ்ணு கேக்கறார், 'உன்னுடைய கடைசி ஆசை என்ன?'ன்னு.ஒரு உயிரைப் பறிக்கிறதுக்கு முன்னே கேக்கவேண்டிய நியாயமான கேள்வி. அப்ப ராஜா வேண்டுறார்,'நான் என் நாட்டு மக்களை ரொம்ப நேசிக்கிறேன்.அதனாலே வருசத்துக்கு ஒருமுறை இந்த நாளில்              ( அன்னைக்கு நட்சத்திரம் திருவோணமா இருந்தது)ஜனங்களை வந்து பார்த்துட்டுப் போறதுக்குஅனுமதி தரணும்'ன்னு. அப்படியே ஆகட்டும்னு சொல்லிட்டு அவர் தலைமேலே மூணாவது அடியை வச்சு அப்படியே அவரை பாதாள லோகத்துக்கு அனுப்பிட்டார் மஹாவிஷ்ணு.

அதுக்கு அடுத்த வருசத்துலே இருந்து சம்பவம் நடந்த சிங்கமாசம் ( நம்ம தமிழ்மாசம் ஆவணி), திருவோண நட்சத்திர நாளிலே மகாபலி பூலோகம் வந்து தன்னுடைய ஜனங்களைப் பார்த்துட்டுப் போறாருன்னு ஒரு ஐதீகம்.  ஓணம் பண்டிகையின் ஆரம்பம் இங்கே இதே இடத்தில் இருந்துதான்!

 அவரை வரவேற்கறதுக்காக ஒவ்வொருத்தரும்அவுங்கவுங்க வீட்டு வாசலிலே கோலம் போட்டு, அதை பூக்களாலேயே அலங்கரிக்குறாங்க. அதுதான் பூக்களம்னு சொல்றது.எல்லோரும் நல்ல புது ஆடைஆபரணங்கள் எல்லாம் அணிஞ்சு, அருமையான விருந்து சாப்பாடு தயாரிச்சு வச்சுஅவுங்களோட இஷ்ட ராஜாவான மகாபலிச் சக்ரவர்த்திக்கு அர்ப்பணிக்கிறாங்க. திருவோணத்தன்னிக்கு இது நடந்ததாலே இந்தப் பண்டிகைக்குப் பேரே 'ஓணம்'னு ஆகிருச்சு.

இந்தக்கோவிலில்  ஓணம் பண்டிகையை விசேஷமாக்  கொண்டாடுறாங்க. ஆதி காலத்தில் 28 நாட்கள் நடந்த விழா இப்போ பத்து நாள் பண்டிகையா ஆகி இருக்கு. இப்பெல்லாம் வீடுகளில் மூணுநாள் பண்டிகையா சுருங்கிட்டாலும்  இங்கே கோவிலில் பத்து நாட்களுமே கொண்டாட்டம்தான். வீடுகளிலும் பூக்களத்தில் மரத்தினால் செஞ்ச த்ருக்காக்கரையப்பன் சிற்பத்தை வச்சுக்கும்பிடுவது வழக்கம்தான்.

இது நம்ம கேரளா க்ளப்பில் ஓணசமயத்து  வச்சுருந்த ஓணத்தப்பன்,  த்ருக்காக்கரையப்பன்

வட்டக் கருவறைக்குள்ளே   சங்கு சக்கரம், தாமரை, கதாயுதம்  ஏந்திய நாலு கைகளுடன்  தெற்கு நோக்கி நின்ற கோலத்தில் ஸேவை சாதிக்கிறார்  வாமன மூர்த்தி,  திருக்காட்கரை அப்பன். (த்ருக்காக்கரையப்பன் என்று கேரள மக்கள்ஸ்க்கு)
கருவறையை வலம் வர்றோம். முக்கால் வாசி சுத்தி கிழக்கு வாசலுக்கு வரும்போது,  நடுவிலே சின்ன சங்கிலியில் ஒரு தடை! திரும்ப வந்த வழியே இடம் வந்து  மீண்டும்  பெருமாள் சந்நிதியில்  முடிக்கணுமாம்.!   ஆகட்டும் அப்படியே!


சந்நிதிதான் சிறுசே  தவிர  கோவில் ரொம்பவே பெருசுதான். வெளிப்ரகாரத்தில் சட்டத்தில் பிடிப்பிச்சுருக்கும் பித்தளை அகல்களில் விளக்கேற்றினால்   எவ்ளோ ஜ்வலிப்பாக இருக்குன்னு  தோணுச்சு. வலம் வர்றதுக்கு எளிதாக நல்ல காங்க்ரீட் பாதை போடு வச்சுருக்காங்க. கல்லிலும் மண்ணிலும் நடக்க வேணாம்!  மற்ற சந்நிதிகளுக்குப் போகவும் பாதை போட்டு வச்சுருப்பது விசேஷம்.

தாயாருக்குத் தனி சந்நிதி.  வாத்ஸல்யவல்லி  என்னும் பெருஞ்செல்வ நாயகி.
நம்மாழ்வார் வந்து பெருமாளை ஸேவித்து, பாடல்கள் பாடி மங்களசாஸனம் செய்த  108 திவ்யதேசக் கோவில்களில் இதுவும்  ஒன்னு.   நடை திறந்திருக்கும் சமயம்  எல்லாம் பதிவுபோல! காலை 5  முதல் 11, மாலை 5 முதல் எட்டு.




 வாமனமூர்த்தியின் திருக்கோவிலுக்குப் பக்கத்திலேயே  ஒரு சிவன் சந்நிதி!   மகாபலி சக்ரவர்த்தி வழிபட்ட  லிங்க ரூப சிவன் இவர்.  பிறை நிலா ஏழு ஒன்றின் கீழ் ஒன்றாய்  சிவலிங்கத்தின்  இருக்கும் அலங்காரம். இங்கேயும் போய் ஸேவிச்சுக்கிட்டோம்.


கோவில் தீர்த்தம் என்ற போர்டு போட்ட சின்னக்குளம் கபில தீர்த்தம்.  கபில மகரிஷிக்கு  இங்கே காட்சி கொடுத்தாராம் வாமனர்.கோவிலில் பூஜை செய்பவர்களைத்தவிர வேற யாரும் இறங்கக்கூடாதுன்னு  எழுதிப் போட்டுருக்காங்க. இந்தத் தீர்த்தத்தைக் கெண்டியில்  முகர்ந்து அதைக் கொண்டுதான்  நீர் கேட்ட மூன்றடி நிலம் தந்தேன்னு மாவேலி  தாரை வார்த்ததாக ஐதீகம்!



திருவாங்கூர் தேவஸ்வம் போர்டு, போர்டு வைப்பதில் மட்டும்  எவ்ளோ கெட்டிக்காரத்தனம்   காமிக்குது பாருங்க. தேவையான ஒரு வரி மட்டும் தமிழில்!

ப்ரம்ம ராக்ஷஸனுக்கு ஒரு சந்நிதி ! கோவிலுக்குள் ராக்ஷஸன் எப்படி வந்தான்?  கதை இருக்கான்னு  கேட்டால்   இருக்கு!



இந்தப் பகுதியில்  ஒருத்தர் வாழைத்தோட்டம் வச்சுருந்தார். இலைகள் பெருசாவும் செழிப்பான மரங்களுமா இருந்துச்சே தவிர  எதுவும் குலை தள்ளவே இல்லை. மனம் உடைஞ்சு போனவர்,  பெருமாள் சந்நிதியிலே வந்து  பிரார்த்திச்சு வேண்டிக்கறார்.  பெருமாள் கருணைக்கண்களை  (நேத்ரம்) அவர்மீது  திருப்பினார். அவர் பார்வை பட்ட தோட்டம்  இன்னும் செழிப்பா வளர்ந்து பெரிய  பெரிய காய்களோடுள்ள குலைகளைத் தள்ளுச்சு.
பெருமாளின் நேத்திரம்  அருளிச்செய்ததால்   இதுக்கு நேத்திரவாழைன்னு பெயர்!  காலப்போக்கில் நேந்த்ரம்  என்றாச்சு:-)

 நன்றிக்கடனா  பெருமாளுக்கு  தங்கத்திலே ஒரு வாழைக்குலை செஞ்சு கொண்டு வந்து சமர்ப்பிக்கிறார்.

மேலே:  கோவிலில் அன்னதானம் நடக்கும் ஹால்  

கொஞ்சகாலத்துக்குக்கப்புறம்,  யோகி ஒருவர்  வந்து கோவிலில்  தங்கி பெருமாளை  வணங்கி வர்றார்.  நாட்கள்  கடந்து போகுது. ஒருநாள் தங்கப்பழக்குலை  காணாமப்போச்சு. அரசருக்கு சேதி  போனதும்,  அவர் வந்து பார்த்துட்டு,  தீர விசாரிக்காமல்  யோகிதான் திருடி இருக்கணுமுன்னு தண்டனையா சிறையில் அடைச்சுச்  சித்திரவதைகள்  செய்யச் சொல்லிட்டார்.
சிலநாட்களில் வாழைக்குலை சந்நிதியிலேயே  ஒருபக்கம்  இருக்குன்னு தெரியவருது. இதுக்குள்ளே  அவமானம் தாங்காத யோகி ,  சாபம் கொடுத்துட்டுத் தற்கொலை செஞ்சுக்கிட்டார். செத்துப்போனதும் ப்ரம்மராக்ஷஸனாக  ஊருக்குள்ளே  உலவறார்.  மனம் கலங்கிய அரசனும் ஊர்மக்களும்  சேர்ந்து சாபம் நீங்கறதுக்காகக் கோவிலுக்குள்ளேயே அவருக்கு ஒரு தனிச்சந்நிதி கட்டி தினமும் விளக்கேற்றி, நைவேத்யம் செஞ்சு பூஜிக்கறாங்க.



கோவிலில்  நேந்திரப்பழக்குலையை  சமர்ப்பிக்கறது  இப்ப வழிபாட்டில் ஒன்னு. அதுவும் ப்ரத்யேகிச்சுப் பத்து நாள் கொண்டாடும்  ஓணப்பண்டிகையில் திருவோண நக்ஷத்திர திவஸம்  வாழைக்குலை சமர்ப்பணம் செய்ய  மக்கள் கூட்டம் முண்டியடிக்குமாம். கோவில்  கூரையில்  கட்டித் தொங்க விடுவாங்களாம்! ஹைய்யோ!!!



ஒருமணி நேரத்தில் நல்லாச் சுத்தி தரிசனம்  ஆச்சு.  ஆறரை கூட ஆகலை அதுக்குள்ளே  இருட்டு வந்தாச்சு.  கிளம்பலாமுன்னு  வெளியே வந்தால் நம்ம சீனிவாஸன் வண்டியைக் கொண்டுவந்து  பரம்பிலேயே இடம் பார்த்து நிறுத்தி இருந்தார். திருவோணம் ஓடிட்டோரியத்தை அடுத்தே  பள்ளமா கீழே இறங்கும் வழி இருந்துருக்கு. நாம்தான்  கவனிக்கலை.




மேலே போகும் ரோடில் எதுத்தாப்லெ ஒரு  டீக்கடை இருக்கேன்னு  போனோம். இப்ப டீக்கடைகளின்  ஒப்பனைகள் மாறிப்போயிருக்கே!  பேக்கரி கம் டீக்கடை.  மூணு சாய்!  சூடாக் குடிச்சுட்டு  ஆலுவா அறைக்குத் திரும்பிட்டோம்.

இன்னிக்கு ரொம்பவெ சுத்தியாச்சு. ராச்சாப்பாட்டுக்கு ரூம் சர்வீஸ்தான். ஃப்ரைடு ரைஸ்.

தொடரும்...........:-)



கிருஷ்ணனின் பூஜையில் லக்ஷ்மணன் ( மூன்று மாநிலப் பயணம்- தொடர் : 45)

$
0
0
வழக்கம்போல் எழுந்து மெயில் பார்த்து, குளிச்சுக் கிளம்பி காலை ஆகாரத்துக்குக் கீழே போனோம்.  அறைவாடகையில் இது சேர்த்தி. பஃபேதான். உள்நாடு வெளிநாடுன்னு ரெண்டு வகைகளையும் வச்சுருந்தாங்க.  இட்லி வச்சுருந்த இட்லிப்பாத்திரம் எனக்கு ரொம்பப்பிடிச்சது.




எத்தனை வகை இருந்தால்தான் என்ன? நமக்கு வழக்கமான இட்லி வடைதான்:-) சாப்பிட்டு முடிச்சு, ஒரு கோவிலுக்குப் போறோம்.  நமது பட்டியலில்  இந்தப் பகுதியில் தரிசிக்க வேண்டிய கோவில் இப்ப இது ஒன்னுதான்.

  அட!  பாயஸம் இருக்கே! காலங்கார்த்தாலை வேணாம்,போ........


திருமூழிக்களம். ஸ்ரீ லக்ஷ்மணப்பெருமாள் மஹாக்ஷேத்ரம்.  108 திவ்ய  தரிசனக்கோவில்களில்  ஒன்னு. ஏர்லிங்க் ஹொட்டேல் பணியாளரிடம்  வழி கேட்டோம்.  அங்கமாலி  வருமுன் ஒரு சர்ச் இருக்கும். அதுலே லெஃப்ட் எடுத்துப்போனால் அத்தானி, மெலக்காடு, எலாவூர் ரோடு. அதிலேயே போனால்  கோவில் வந்துரும்.  ஏகதேசம் ஒரு எட்டுகிலோ மீட்டர் என்றார்.

 ஐயோ.... எந்த சர்ச்?  வழியெல்லாம் சர்ச்சுகள்தானே?  செயிண்ட் ஜோஸஃப்னு உண்டாகும் என்றார். லக்ஷ்மணப்பெருமாள் என்னு சோதிச்சால்  மதி.

பெருமாள் மேலேயே பாரத்தைப்போட்டுட்டுக் கிளம்பிட்டோம். செங்கமநாடு பஞ்சாயத்துப் பள்ளிக்கூடம் வரை சரியா வந்தபின்  திருப்பத்துலே  ரைட் எடுக்காம கொஞ்சம் தூரம் போனபின்,  எட்டுகிமீக்கு மேலேயே  ஆச்சேன்னு  வழியில் இருந்த ஒருவரிடம் கேட்டு சரியான வழி பிடிச்சுக் கோவிலுக்கு வந்து சேர்ந்துட்டோம். திருமூழிக்களம்  ஸ்ரீ லக்ஷ்மணப்பெருமாள் க்ஷேத்ரம் என்ற அலங்கார வளைவின் முகப்பில்  நடுவிலே ராமலக்ஷ்மணர்கள் சீதையுடன். ரெண்டு பக்கமும் புள்ளையாரும், ஐயப்பனும்.


சட்னுபார்க்கத்  திண்ணைகள் வச்ச சாதாரண வீடு போலத்தான் கோவில்முகப்பு இருக்கு.  ஆனால் உள்ளே  ரொம்பவே பெருசுதான்.  திருவாங்கூர் தேவஸ்வம் போர்டு,   அவுங்க ஆட்சியின் கீழ் உள்ள எல்லாக் கோவில்களுக்கும்  ஒரே டிஸைனில்  தரையில் டைல்ஸ் பதிச்சுருக்காங்க.

 மேலும்  வட்டக் கருவறைகள்,  முன்மண்டபங்கள், திண்ணைகள்,  உம்மரம் எல்லாம்  ஒன்னுபோலவே இருப்பதாலும்  கோவில் கட்டிடத்தைப் பார்க்கும்போது வரம் பரவசம் மிஸ்ஸிங்.  கொஞ்சூண்டு  போரடிக்குதுன்னும் சொல்லலாம்.    ஆனால் 108 தரிசிக்கணும் என்ற ஆவல்தான் என்னை இழுக்குது.  நல்லவேளை....  பெருமாளுக்கு வெவ்வேற பெயர்களும் கதைகளும் இருப்பதால் கொஞ்சம் சுவாரசியம்  ஒட்டிக்கிட்டு இருக்கு.






இங்கேயும் துலாபார வழிபாடு விசேஷம்.  கோவிலுக்குள் நுழைஞ்சவுடன் பெரிய தூண்களுடன் இருக்கும் மண்டபத்தில் தராசு வச்சுருக்காங்க.  அதுக்குப் பக்கத்தில் ஒரு   ஏழடுக்கு தீபம். வெண்கலம்.  ஆனால் காலப்போக்கில் களிம்பேறிக்கிடக்கு. அதுலே உச்சியில் இருக்கும் பெரிய திருவடி அட்டகாஸம்!  அந்த மூக்கு ஒன்னே போதும்!  ஹைய்யோ!  அதைப்போல ஒன்னு கிடைச்சால்....   கிடைச்சால்?  எனக்கு அதிர்ஷ்டம்தான்!  என்ன மூக்குமா!

அதுக்கப்பால் கொடிமரம், பலிபீடம் அதைக்கடந்தால் கோவில்  உள்ப்ரகாரம்போகும் நடை!

இந்தப்பக்கம் இதுவரை நாம் பார்த்து தரிசிச்ச கோவில்கள் எல்லாம் கிருஷ்ணாவதார காலம் என்றால் இந்தக் கோவில் அதுக்கும் முந்தின ராமாயணகாலத்துக்குக் கொண்டு போயிருது!


ராமனை காட்டுக்கு அனுப்பியாச்சு.  மகனுக்குப் பட்டம் கட்டப்போறாங்கன்னு மனசு நிறைய மகிழ்ச்சியா இருக்காள்  கைகேயி.  மகிழ்ச்சியை முழுசுமாக் காமிச்சுக்க முடியாத நிலை. ஒரு பக்கம்  கணவர் இறந்து போயிருக்காரே:(  தாத்தா  வீட்டுக்குப்போயிருந்த  பரதன் அவசரச் சேதின்னு  தகவல் வந்ததும்  அவசரமா அயோத்திக்குத் திரும்பறான். வந்ததும்தான்    தாய் செஞ்ச களேபரம் புரியுது.

தகப்பனுக்குரிய ஈமக்கடன்களைச் செஞ்சு முடிக்கிறான்.  மகன் பட்டம் கட்டி அரசாளப்போகிறான் என்று கனவு கண்ட கைகேயியின் தலையில் இடி விழுந்தாப்போல.....  'இப்பவே போய் அண்ணனைக் கூட்டி வந்து அவரையே பட்டம் சூட்டிக்கச் செய்யறேன் பார்'ன்னு ராமனைத்தேடி காட்டுக்குப் போறான் பரதன்.

அரசமரியாதையுடன்  ராமனைக்கூட்டி வரணும்  என்று பெரும்படையுடன்  வந்த பரதனை, தூரக்கே இருந்து பார்த்த லக்ஷ்மணன்,  ராமனுடன் போர் புரிய வந்துருக்கான் இவனென்று தவறுதலா நினைச்சுக்கிட்டு,  பரதனை இப்பவே கொல்லப்போறேன்னு கிளம்பறான்.  அண்ணன் ராமன் விடுவானோ?  அப்படியெல்லாம் இருக்காதுன்னு  சமாதானப்படுத்தறான்.  உண்மையில் அப்படித்தான் இல்லையாக்கும்.

ராமாயணமுன்னு ஒரு சொல் சொன்னதுக்கே கதை எப்படி நீண்டுபோகுது பாருங்க:-)

14 வருஷம் முடிஞ்சு  ராமலக்ஷ்மணர்கள்  அயோத்யா திரும்பி ராமர் பட்டாபிஷேகம் எல்லாம் நடந்து நல்லாட்சி செய்யும்போது, பரதனை இப்படித் தப்பா நினைச்சுட்டோமேன்னு மனம் வருந்திய லக்ஷ்மணன்,  திருமூழிக்களம் என்ற பெயரில் இப்ப இருக்கும் இந்த க்ஷேத்ரத்துக்கு  வந்து  பெருமாளை சேவித்து மன்னிப்பு கேட்டான்.  ப்ராயச்சித்தமா  கோவிலை நல்லா கட்டிக் கொடுத்துருக்கான். அப்போதிருந்து  இங்கே மூலவருக்கு லக்ஷ்மணப்பெருமாள் என்ற பெயர் வந்தது.

அதே சமயம் பரதன் இங்கே வருகை தந்து லக்ஷ்மணனைத் தழுவி அன்புமொழிகள் பேசினார்.  அவர்  ராமாவதாரத்தில்  சங்கு (பாஞ்சஜன்யம்)  அம்சம் என்பதால் ,   அவர் நினைவாக  இங்குள்ள தீர்த்தம்  சங்கு தீர்த்தம் என்ற பெயரை க் கொண்டிருக்கு.  (லக்ஷ்மணன்  ஆதிசேஷனின் அம்சம்)

மூலவருக்கு  திருமூழிக்களத்தான்  என்ற பெயரும் உண்டு.  ஆனால் லக்ஷ்மணப்பெருமாள் என்னும் பெயரே எல்லோருக்கும் தெரிஞ்சுருக்கு.   தாயார் பெயர்   மதுரவேணி நாச்சியார்.  தாயாருக்குத் தனி சந்நிதி கிடையாது.  பெருமாள் திருமார்பில் இருக்கிறாள் என்றே நினைச்சுக்கணும்.

 வட்டக்கருவறையில் பெருமாள் நின்ற கோலத்தில் கிழக்குநோக்கி ஸேவை சாதிக்கிறார்.  நான்கு கைகள். சங்கு சக்கரம் கதை தாமரைப்பூ!  பூ இருக்கும் கை இடுப்பில் இருக்கு!

ஒரு சமயம் ஹரித மகரிஷிக்கு இங்கே தரிசனம் கொடுத்த பெருமாளிடம், மக்கள்  அனைவரும்  உன்னிடம் வந்து சேர எளிய வழியைச் சொல்லணுமுன்னு  விண்ணப்பிக்க, அவர்  ஸ்ரீ ஸூக்தியை என்னும் திருமொழியை  வழங்கினாராம்.  அதான் ஊருக்கு திருமொழிக்களம் என்று பெயர் வந்து அது காலப்போக்கில் திருமூழிக்களமா ஆகிக்கிடக்கு.

ஆழ்வார்கள்  வந்து பாடி மங்களசாஸனம் செய்த  108 திவ்ய தேசக்கோவில்களில்  இதுவும் ஒன்னு.  நம்மாழ்வாரும், திருமங்கை ஆழ்வாரும்  வந்து தரிசனம் செஞ்சு  மங்களசாஸனம் செஞ்சுருக்காங்க.

கோவில் காலை 5 முதல் 11 வரையும், மாலை   5 முதல் எட்டுவரையும் திறந்துருக்கும்.  இங்கெல்லாம் இதுவரை கவனிச்சதில் மாலை கோவில்திறக்கும் நேரம் அநேகமா அஞ்சு முதல் எட்டு. காலை நேரம்தான்  கோவிலுக்குக்  கோவில் மாறுபட்டு இருக்கு. பயணம் போகுமுன் பார்த்து வச்சுக்கிட்டால் நல்லது.

த்வாபர யுகத்தில் ஸ்ரீ க்ருஷ்ணன்,பூஜித்து வந்த  ராமர் அண்ட் ப்ரதர்ஸ்  சிலைகள்  , த்வாரகையைக் கடல்கொண்டபோது நீரில் முழுகிப்போனது,  பின்னொரு காலத்தில் வாக்கேல் கைமல் என்ற மகரிஷிக்குக் கிடைத்தன.  தனக்குக்கிடைச்ச பாக்கியத்தை நினைச்சுக்கிட்டே  அன்றைக்கு  இரவு தூங்கும்போது கனவில் வந்த  பெருமாள், இந்தச் சிலைகளை பாரதப்புழாவின் கரையில்  பிரதிஷ்டை செய்யும்படிச் சொல்லி இருக்கார்.

சரின்னு கொண்டு போன மகரிஷி,  ஒரு இடத்தில்  அவைகளைச்சேர்த்து வைக்காமல்  நாலு சிலைகளையும் நாலு இடத்தில் பிரதிஷ்டை செய்துட்டார்.  ஒன்னு சொன்னா  நாலாச் செய்யறவர் போல! த்ருப்பறையாரில் ஸ்ரீ ராமன்,   திருமூழிக்களத்தில்  லக்ஷ்மணன், இரிஞ்ஞாலகுடாவில் கூடல்மாணிக்யம் கோவில் பரதன்,  பயம்மல் (Payammal ) என்ற ஊரில்  சத்ருக்னன்  என்ற இந்த நான்கு கோவில்களைத்தான் நாலம்பலம் என்று  சொல்றாங்க.  இன்னும்  யாரும் ஆரம்பிக்கலை போல..... இந்த நாலு கோவிலையும் ஒரே நாளில் தரிசனம் செஞ்சா இன்னின்னது கிட்டும் என்று.

நாம் வேணுமானால் ஆரம்பிச்சு வைக்கலாம்.  மூழிக்களம்  லக்ஷ்மணப்பெருமாள் கோவிலில் இருந்து கிளம்பினால் 27.7 கிமீ  சத்ருக்னன்  கோவில், அங்கிருந்து  ஒரு 6 கிமீ பரதன்,   பின்னே த்ருப்பறையார்  ஸ்ரீராமன் ஒரு 15.3 கிமீ.  ஆக மொத்தம்  49  கிமீதான்.  தமிழ்நாட்டுலே கோவையில் ஆரம்பிச்சு வச்சாப்போதும். பக்தர்களை திரிஸ்ஸுர்   கொண்டு வந்து நாலம்பலம் வழிபாடு கொண்டுபோய் தரிசனம் செய்ய வச்சுட்டு நேரா குருவாயூர்கொண்டுபோய் அங்கே  நைட் ஹால்ட். காலையில்  க்ருஷ்ணனை ஸேவிச்சுக்கிட்டு மதியம் கிளம்பினால் நேரா கோவை!  ப்ளான் நல்லா  வொர்க்கவுட் ஆகுமுன்னு நினைக்கிறேன்.  அதுக்குமுன்னே நாம் செய்ய வேண்டியது ஒரு ஏழெட்டு டெஸ்ட்டிமனி செட் செஞ்சுக்கணும். பிரபலமான(!)  ஒரு ஜோஸியரோ, இல்லை ஸ்வாமிகளோ  நாலம்பலம் ஒரே நாளில் தரிசனம் செஞ்சா  பலன்கள் இதிதுன்னு  சொல்லணும்.  பிரச்சனை இல்லை.சொல்லுவாங்க.

இல்லைன்னா பேசாம நாம் ஆரம்பிக்கப்போகும் ஆஸ்ரமத்தில்,  துளஸியானந்தமயா  சொல்வாங்க பாருங்களேன்!


ஒரு முக்கால்மணிக்கூறில் தரிசனம் நல்லபடியா நமக்குக் கிடைச்சது. ஏகாந்த தரிசனம்தான், இங்கேயும்!  காலை நேரப்பூஜைகள் முடிஞ்சு  பெருமாளும் பட்டரும் விஸ்ராந்தியா இருந்தாங்க.   மற்ற கோவில்களில்  பூஜை நேரத்துலே  வாத்தியங்கள் முக்கியமா இடைக்கா  வாசிப்பதைப்போல்  இங்கே இல்லையாம்.  ஸ்வாமிக்கு சப்தம் வேணாமுன்னு இருக்கு போல!  சைலன்ஸ் ப்ளீஸ்.......

வெளிப்ரகாரம் சுத்தும்போது நமக்கு வலது  பக்கம் வரும் கோவில்  சுவரில்(!)  மரச்சட்டங்களில்  கேரளத்துக்கே உரிய பித்தளை அகல்கள்.   கூரையும் சுவரும் தொடும் இடத்தில் இருக்கும் யாழிகள்தான்  வேறமாதிரி ! அசப்பில் வரிக்குதிரை:-)





அலங்காரவளைவின் அருகில் ஒருகடையில் பழுத்த நேந்திரம்.  இதுவரை  இங்கே  சாப்பிடலையே. அப்புறம் கேரளம் வந்து என்ன பயன்? மூணு பழங்களை வாங்கி  ஆளுக்கொன்னா உள்ளே தள்ளிட்டுக் கிளம்பி  ஆலுவா அறைக்கு வந்தோம். இப்போ சரியான வழி தெரிஞ்சுட்டதால்  பதினைஞ்சே நிமிசம்தான் ஆச்சு.

நம்மைப் பார்த்தவுடன்  ஏர்லிங் பணியாளர்  விஜய் , ஓடிவந்து  அம்பலம் கிட்டியோன்னார்.  நல்லோணம் கிட்டின்னு சொல்லிட்டு  அடுத்த  ஊருக்குப்போக மூட்டையைக் கட்டுனோம். சரியா பத்துமணி!  அபிமன்யூவும்   வரவேற்பினருகில் இருந்தார். அஞ்சு நிமிசப்பேச்சோடு  முடிச்சுக்கிட்டோம். இந்த  இடுகைகளின்  லிங்கை அவருக்கு அனுப்பணும். அனுப்பறேன்னு சொல்லிட்டு வந்துருக்கேன்:-)


தொடரும்..........:-)



ஒரே கூரையின்கீழ் மூணு வாசகர்களும் ஏகப்பட்ட சாமிகளும் (தலைநகரத்தில் ! பகுதி 4)

$
0
0
கதவைத் தட்டிட்டு காத்திருக்கும் ஒரு நிமிஷமே போதும்போல, காத்து தூக்கிக்கிட்டுப் போக!  கதவைத்திறந்த  கிவியனின்  'அக்கா''வெஜிடேரியன்னதும் வெலவெலத்துப் போச்சு'ன்னாங்க:-)

ஸோ, துளசிதளம் எல்லாம் அப்டுடேட்!  வீட்டுக்குள்ளேபோய்  கிவியனின் பெற்றோர்கள், அக்காவின் மகள் அனைவரையும் பார்த்ததும் பேச ஆரம்பிச்சாச்சு. அறிமுகம் எதுக்கு நமக்கெல்லாம்:-)

எப்படி சம்பவங்களை எல்லாம் ஒன்னு விடாம நினைவில் வச்சுக்கிட்டு எழுதறீங்கன்னு ரெண்டு மூணுதரம் கேட்டுட்டாங்க.  நமக்கு எப்பவுமுள்ள ஒரே பதிலைத்தான் சொல்லவேண்டியதாப் போச்சு.  'யானை' !

அக்கா, அம்மா, அப்பான்னு ஒரே கூரையின் கீழ் மூணு வாசகர்கள் எனக்கு! இப்ப கோபாலையும் சேர்த்துக்கிட்டால் அங்கே நாலுபேர்!  எனக்குமே புது அனுபவம்! கோபால் இப்போ சிலவருசங்களா என் தீவிர வாசகரா இருக்கார்! ப்ரிவ்யூ காட்டச்சொல்லி தினமும் தொந்திரவு. என்னமோ  ஆசையாக் கேக்கறாரேன்னு முந்தி ஒரு சமயம் ரெண்டு மூணு ப்ரிவ்யூ காட்டப்போய் அவருடைய கமெண்ட்(எல்லாம் இதை ஏன் எழுதறே, அதை ஏன்சொல்றேன்னு குற்றப்பத்திரிகை) சொல்ல ஆரம்பிச்சதும்  ப்ரிவ்யூ தியேட்டரை இழுத்து மூடிட்டேன். 'எதாக இருந்தாலும் இனி  (கணினி) திரையில் காண்க'தான்:-)

  அம்மா, இப்பெல்லாம் கோவில் வேலைகளில்  முழுகிப்போயிட்டாங்க(ளாம்). அவுங்க இல்லாமக் கோவிலில்  வேலையே நடக்காது!  அன்றைக்கு  பௌர்ணமி பூஜை இருப்பதால் கொஞ்சம் சீக்கிரமாகவே போகப்போறாங்க. அவுங்களைக் கோவிலுக்குக்  கூட்டிப்போக நண்பர்களும் வந்துட்டாங்கன்னு  எனக்கு  மஞ்சள் குங்குமம் சில பரிசுப்பொருட்கள் எல்லாம் 'வச்சுக்கொடுத்துட்டு'க் கோவிலில் பார்க்கலாமுன்னு கிளம்பிப் போனாங்க.

எங்களுக்கு காஃபி & ஸ்நாக்ஸ் வந்தது.  உள்ளே தள்ளிக்கிட்டே விட்ட பேச்சைத் தொடர்ந்தோம். விட்டுருந்தா....  அது இழுத்துக்கிட்டே போயிருக்கும் அபாயத்தை உணர்ந்த கோபால் சாட்டையைச் சுழற்றினார்.  "அஞ்சு மணிக்குக் கோவிலில் விஷ்ணுசகஸ்ரநாமம் இருக்கே, கிளம்பலையா?"

கிறைஸ்ட்சர்ச்சிலிருந்து கிளம்புமுன் கோவில் நேரம் விவரம், நண்பரிடம் கேட்டுருந்தேன். நீங்க வரும்நாள் சனிக்கிழமையாக இருப்பதால்  விஷ்ணு சகஸ்ரநாமம்  அஞ்சு மணிக்குச் சொல்ல ஆரம்பிப்போம் என்றார்.  இவர் என்னுடைய மரத்தடிகால இனிய தோழி அலைகள் அருணாவின்  உறவினர்.  ஒரு கோடி காமிச்சா அப்படியே சொந்தக்காரரா ஆக்க நமக்குத்தெரியாதா:-)

இன்றைக்குப் பகல் அறை((!) கிடைச்சதும், இவருக்கும் செல்லில் சேதி சொன்னேன். இவருடைய மனைவி (இப்போ இவுங்களும் தோழிதான்!)  மாலை கோவிலுக்குக் கூட்டிப்போறேன்னு சொன்னாங்க.  வேணாங்க. நம்ம சுரேஷ் வந்து கூட்டிப்போறேன்னு சொல்லி இருக்கார் என்றதும் ஒரே வியப்பு.  என்ன... சுரேஷைத் தெரியுமா?  கிடைச்ச சான்ஸை விடமுடியுமோ?  கதையைச் சொன்னேன்.  அப்புறம் சுரேஷ் குடும்பத்துக்கு  கதையின் வேறொரு வெர்ஷனைச் சொல்லவேண்டியதாப்போச்சு.  எப்படி  எனக்கு  இந்த ரெண்டு குடும்பமும் தெரிய வந்துச்சு?

சிம்பிள்.  இரண்டு பேரின் மகர்களும் நம்ம கேண்டர்பரி யூனியில்தான் படிக்கறாங்க! பிள்ளைகளின் அப்பாக்கள்  நமக்கு உறவு:-)

அம்மா கிளம்பிப்போனபிறகுதான்  முழிச்சுக்கிட்டேன். வாசகர் சந்திப்பின் இனிமையில் கேமெராவைக் கிளிக்க மறந்துபோயிருந்தேன் :(  மற்றவர்களை மட்டும்  நாலைஞ்சு முறை க்ளிக்கினதும்,  கிவியனும் அவர் தங்கஸும் நம்மைக் கோவிலுக்குக் கூட்டிப்போனாங்க.  அக்காவும் மற்றவர்களும்  கொஞ்ச நேரத்தில் வந்து சேர்ந்துக்குவாங்க போல!

ஊரே  குறிஞ்சி நிலமாத்தான் கிடக்கு. சின்னதும் பெருசுமா குன்றுகளும் மலைகளும். முருகன் குன்றைக் கண்டால் விடமாட்டாந்தானே?  குன்றுதோறும் நின்றாடுபவன் இல்லையோ? அஞ்சு நிமிட் கூட இல்லை கோவிலுக்கு வந்திருந்தோம்.  வாசக்கதவைப்பார்த்தால் பக்ன்னு இருந்துச்சு.  சின்ன ஷாப்பிங் காம்ப்ளெக்ஸ்க்குப் பின்புறமாக  பெரிய ஷெட்டில் கோவில். முகப்பில்  ஒரு  படம். வேலும் மயிலும் கொண்ட முருகன்.  குறிஞ்சிக் குமரன்!   கோவில் வாசல் ஃபிஷ் & சிப்ஸ் ஷாப்பைப் பார்த்தமாதிரி!  வள்ளிக்காக இருக்கலாம்.வேடுவர்கள்  நான் வெஜிட்டேரியன்ஸ் தானே?

பக்கவாட்டுக்கதவு வழியாக உள்ளே நுழைஞ்சோம்.  மூச்சு நின்னு போச்சு!
பெரிய ஹாலின் நடுவில்  மூன்று சந்நிதிகளுடன் அம்சமான சின்ன கோவில்.  நடுவில் வள்ளிதேவஸேனா சமேதராக முருகன். அவருக்கு வலப்பக்கம் புள்ளையார். இடப்பக்கம் அரவக்குடையின் கீழ் அரன், லிங்க ரூபமாக!
அதுக்குள்ளே நண்பர் ராம் (நம்ம  சமீபத்திய சொந்தக்காரர்) மனைவியுடன் வந்துட்டார்.  கேட்ட முதல் கேள்வியே  ஃபோட்டோ எடுக்கலாமா?   அப்புறம் நலம் விசாரிச்சாலாச்சு, இல்லையோ:-))

அட!  முருகனுக்கு  Beer keg  என்னாத்துக்கு?  அது உண்டியல். பார்த்துக்குங்க.  ஊருக்கேத்தமாதிரி வச்சுட்டாங்க:-)




சரின்னு தலையாட்டியதும், க்ளிக்க  ஆரம்பிச்சுட்டேன்.  மணி  அஞ்சே கால்.'கொஞ்சம் லேட்டாத்தான் போச்சு,  வாங்க சகஸ்ரநாமம்  சொல்லலாமு'ன்னு  அவர் சொன்னதும்தான் பெருமாள் இருக்காரான்னு அசட்டுத்தனமா ஒரு கேள்வி . நாந்தான் வேற யாரு? அதோன்னார். பார்வையை அங்கே துரத்தினா குட்டியூண்டு சந்நிதியில் எம்பெருமாள் நின்ற கோலத்தில் ஸேவை சாதிக்கிறார்.

சீக்கிரம் வாங்கோ......


அந்த சந்நிதிக்கு முன்  பந்திப்பாய்கள் போல்  மெத்தைகள் . ஏற்கெனவே சிலர்  உக்கார்ந்து ரெடியா இருக்காங்க. நாமும் அங்கே ஐக்கியமானோம். எங்கள் கைகளில் பெரிய எழுத்து ஸ்ரீ விஷ்ணு சகஸ்ரநாமம். அரைமணிக்கூறு.  எத்தனையோ முறை   நாமம் சொல்லி  இருந்தாலும்  பார்த்துத்தானே படிக்க முடியுது:(





ஊஹூம்... பக்தி   போதாது.... (பெருமாள்  சொல்றார்)  

மன்னிச்சுக்கோ.... மனசு அலையறதே... அதான்....(நான் பதில்  சொன்னேன்.) 

எனக்கு முன்வரிசையில் இருந்தவர்கள்  சொல் தப்பாமல் தபதபன்னு அருவி கொட்டறமாதிரி  மனப்பாடமாச் சொல்லிக்கிட்டே போறாங்க!

நாமம் சொல்லி முடிச்சுட்டு தீபாராதனை காமிச்சு  சடாரி ஸேவித்தோம். சந்நிதிக்குப் பொருத்தமா சின்ன விமானம். இரு கைகளில் சங்கு சக்கரம் ஏந்தி, மூணாவது கையில் கதையுடன் ஒரு காலை மடிச்சு   அபயஹஸ்தம்  காண்பிக்கும் நாலாவது  கையோடு ராஜா மாதிரி சிம்மாசனத்தில் உக்கார்ந்துண்டு இருக்கார்!!  தேவிகள் இருவரும் பக்கத்துக்கொன்றாக.  எல்லாம் ஃபைபர் சிற்பங்களாம்!   ஹைய்யோ!!!!

முழுக்கோவிலுமே  ஃபைபரால் ஆனது. இந்தியாவில் செஞ்சு இங்கே கொண்டுவந்து இணைச்சுருக்காங்க.   விமானத்திலிருக்கும்  சிற்பங்கள்  எல்லாமே  மூக்கும் முழியுமா என்ன அம்சம்!

எர்த்க்வேக்  ஏரியாவா நியூஸி இருக்கே:( அதான்  ஃபைபர் என்றால்  நிலநடுக்கம் வந்தாலும் அவ்வளவாப் பிரச்சனை இல்லை என்பதே முதல் காரணம்!  எங்களுக்கும் ஃபைபர் டபுள் ஓக்கே!

மூலவர்கள் எல்லோருமே விக்கிரகங்கள்தான். பெரிய அளவில் இருப்பதால்  அழகோ அழகு!  ஐம்பொன்னாக இருக்கலாம். ஒருவேளை  வெங்கலமோ?  ஒரே பளிச் பளிச்தான்.




பெருமாளுக்கு  இடதுபக்கத்தில் இருக்கும் சுவரையொட்டிக் கூப்பிய கைகளுடன்  நம்ம ஆஞ்சி!

ஆதிசேஷ வாகனம்  இந்தாண்டை சுவருக்குப் பக்கத்தில்  'எப்போ வருவாரோ!' ன்னு காத்துக்கொண்டிருக்கிறது:-)
 கஜபீடத்தின் மேல் கருவறைகள்!  சூப்பர்!!!!

வலம் போறோம்.  சிவன் சந்நிக்கு நேரே பின்புறம் சண்டிகேஸ்வரர்.   ஹாலின் நடுசெண்ட்டர் சந்நிதிகளுக்குப் பின்பக்கம்  இடது பக்கம் பெருமாள் என்றால்  வலது பக்கம்  த்ரிசூலம் ஏந்திய  சக்தி!  சூலத்தில்  குத்தி இருக்கும் எலுமிச்சங்காய், எனக்கென்னமோ க்ரீன்   ஆப்பிள் மாதிரியே இருந்துச்சு.  போகட்டும் ரெண்டுமே புளிதான்:-)






இந்தப்பக்கம் உற்சவர்களுக்குத் தனி மாடம்.  கூடி இருந்து  களிக்கும் இடம்!  எல்லோரும் சிரிச்ச முகங்களோடு ஜொலிச்சுக்கிட்டு இருக்காங்க.  அடுத்து  விழா மண்டபம் போல் சின்ன இடம். அந்தந்த சாமிகளுக்கான ஸ்பெஷல் தினங்களில்   அலங்காரத்தோடு அங்கே   இருந்து  மக்களை  மகிழ்விக்கலாம்.  அதுக்கடுத்து நவக்ரஹ மண்டபம்.  ரொம்பவே அழகு!



சிவன் சந்நிதிக்கு இடப்பக்கம் அம்பாள். இல்லே...தக்ஷிணாமூர்த்தியோ?  அங்கேதான் பவுர்ணமிபூஜை நடந்துக்கிட்டு இருந்தது.  இலங்கைத் தமிழ்ப்பெண்மணிகள்  முன்னின்று நடத்திக்கிட்டு இருந்தாங்க. இவர்களில் ஒருவர்  டீம் லீடர்!  அனுபவம் அதிகமுள்ளவர்.  அவரிடம்கொஞ்சம் பேசணும் என்று இருந்தேன். பூஜை  ஏற்பாடுகளில்  பிஸியாக இருந்தாங்க.  அப்புறமப்புறமுன்னு  சந்தர்ப்பம் வாய்க்கலை:(  எலுமிச்சை மாலைகள் தயாராகத் தட்டில் காத்திருக்கு!   குங்கும  அர்ச்சனைக்கு  இன்னும் சில  பெண்கள் இருந்தால் கொள்ளாம்தான். எனக்கும் ச்சான்ஸ் கிடைச்சதுன்னாலும்  பூஜைகள் எல்லாம் முடிய  எட்டரை ஒன்பது ஆகிரும் என்பதால் எஸ் ஆக வேண்டியதாப் போச்சு.



முழுக்க முழுக்க வாலண்டியர்கள்  உதவியால்தான் கோவிலின்  மொத்த சமாச்சாரமும்.  வழக்கமா  வாலண்டியர்களில் ஒருவர் வந்து பூஜைகள்  செய்வார். எல்லாம் முறைபோட்டு வச்சுக்கிட்டுத்தான். இன்றைக்கு ரெண்டுபேர்  இருந்தாங்க. ரெண்டு சந்நிதிகளில் விசேஷம் இருக்கு என்பதாலோ!

நம்ம ராம்ஸ் கூட புதன்கிழமைகளில் பூஜை செய்ய வருகிறார்.  ஒரு சமயம்  பூஜை செய்ய யாரும்   கிடைக்காமல் போனதால் நம்ம கிவியன் கூட இன்ஸ்டண்ட் குருக்களா  மாற்றப்பட்டாருன்னா பாருங்க.!

கோவில் திறந்திருக்கும் நேரம் பொதுவாக   மாலை 7 முதல் 8 வரை.  சனிக்கிழமைகளில் காலை சுப்ரபாதம் சொல்ல  8 மணிக்குத் திறக்கிறார்கள்.

ஞாயிறுகளில் காலை 10 முதல் 12. பகவத் ஸேவைகள்.  கோவிலைச் சுத்தப்படுத்தும் பணி.

பூஜாரிகள் (!) உட்பட அனைவரும் தன்னார்வலர்களே என்பதால் அனைவரும்  ஆஃபீஸ் வேலைகளை முடிச்சுட்டு, இங்கே வர்றதுக்காக டைமிங்  கொஞ்சம்   அனுசரணையாகத்தான் வச்சுருக்காங்க.

சமீபத்துலெ கும்பாபிஷேகம் நடந்துருக்கு.  அப்போ போய்க் கலந்துக்க முடியாமல் போனதுக்கு இப்போ வருந்தினேன்!

இந்தக்கோவில் ரொம்ப வருசத்துக்கு முன்னே  வெலிங்டன் சிட்டிக்குள்ளேயெ நியூடவுனில் ஒரு வாடகை வீட்டில் இருந்துச்சு.  அப்போ  பிள்ளையாரும், அம்மனும் மட்டுமே.  பூஜை செய்ய மலேசியாவில் இருந்து ஒரு குருக்களை வொர்க் பர்மிட்டில்  கூட்டிவந்துருந்தாங்க. நான் சொல்வேன் பாருங்க  விஜயா அக்கா, ரங்காமாமான்னு,  அவுங்களும் கோவில் அமைப்பதில் முக்கிய பங்கு ஏத்துக்கிட்டவங்கதான். அங்கே ஒருமுறை மகளும் நானும்  போயிருந்தப்ப  அக்காவும் மாமாவும்  கூட்டிப்போய் காமிச்சாங்க.  அதன்பின் கோவிலுக்கு ஒரு  கிருஷ்ணர் விக்கிரகம் வந்து, கோவிலில் ப்ரதிஷ்டையாகும் வரை அக்காவீட்டில்தான் இருக்குமுன்னு சொல்லி படமும் அனுப்புனாங்க.(படம் கீழே!)

இந்த விக்கிரகம் கோவிலில் இருக்கான்னு தேடிப் பார்த்தேன்.  காணோம்:(  இந்தக் கோவில்  1999லே  புதுசாக் கட்டுனது  என்பதால்.... முழுவிவரம் எனக்குத் தெரியலை.  மாமா இறந்தே 20 வருசமாச்சு. அதன் பின் அக்கா  அஸ்ட்ராலியா போயிட்டாங்க.

எங்க ஊரில் கோவில் ஒன்னு கட்டணுமுன்னு ரொம்பநாளா ஆசை ஒன்னு இருக்கு.  ஆசைப்பட்டால் மட்டும் போதுமா?  சாமிக்கு இங்கே வர அதிர்ஷ்டம் வேணாமா? கிபி 2000 வருசத்துலே கோவில்கட்டும் எண்ணம் சம்பந்தமா  ஒரு மீட்டிங் ஏற்பாடு செஞ்சு  இங்கே இருக்கும் அனைத்து  இண்டியன் கம்யூனிட்டிகளையும் , இலங்கைத் தமிழர்களையும் கூப்பிட்டிருந்தோம் நானும் கோபாலும். ஒரு பள்ளிக்கூட ஹாலில் மீட்டிங்.  நிறையப்பேர் வந்துருந்தாங்க. கோவில் வரணும் என்பதில் யாருக்கும்  மாற்றுக் கருத்து இல்லை.  எந்த சாமின்னதுக்கு  முதலில் புள்ளையார், பெருமாள் ,சிவன். அப்புறம்  ஒவ்வொரு சாமிகளா சேர்த்துக்கிட்டால் ஆச்சுன்னேன். ஆனால் என்ன மொழியில் பூஜைகள் நடக்குமுன்னு  அப்பவே ஆரம்பிச்சுட்டாங்க. ஒவ்வொருத்தரும் தங்கள் மொழியே இருக்கணுமுன்னு ஆரம்பிச்சு பெரிய சண்டையாக உருமாறும் சமயம், இதெல்லாம்  உனக்குத் தேவைதானான்னு எங்க  மண்டையில் நாங்களே  குட்டிக்கிட்டு,  ஒரு மாதிரி மீட்டிங்கை முடிச்சு வைச்சோம்:(   அதுக்கப்புறம் இந்த எண்ணம் கிடப்பில் போடப்பட்டது. சாமிக்கு லக் இல்லை. அதுக்கு நானென்ன பண்ணுவது?

இப்ப இந்தக் கோவிலைப் பார்த்ததும்  மீண்டும் துளிர்விடும் ஆசைதான்.  ராம்ஸ் கிட்டே செலவு விவரம் கேட்டதும்,  யார் தயவும் வேணாம். பேசாம நாமே ஆரம்பிச்சுடலாமான்னு  தோணுச்சு.  ஆரம்பிக்கறது பெரிய விஷயமில்லை.  ஆனால் தினப்படி பூஜைகள் முடங்காமல் நடக்க நம்மாட்கள் உதவி வேணுமா இல்லையா?

முதல்லே இடம் ஒன்னு பார்க்கணும்.  முந்தியெல்லாம் இருந்த விலை, நிலநடுக்கம் ஆனபின் தாறுமாறா எகிறிக்கிடக்கு. அதுவும் ஊருக்குள் இனி இடமே இல்லை:( கொஞ்சம் வெளியே தள்ளிக்கட்டலாம். ஊரில் பாதி, இனி வீடு கட்ட லாயக்கில்லாத பூமியாப் போயிருச்சுன்னு  சிட்டி லிமிட்டுக்குச் சுத்துப்புறமெல்லாம் புதுசு புதுசா ஸப்டிவிஷன் வரத்தொடங்கி வீடுகள் கட்டிக்கிட்டு இருக்காங்க. அதெல்லாம் ரெஸிடன்ஷியல் ஏரியா. அங்கே கோவில்....  ஊஹூம்... சரிப்படாது. பார்க்கிங் வசதிக்கே ஏராளமான இடம் வேணும் முதலில்.

உக்கார்ந்து யோசிக்க வேண்டிய விஷயம் இது! யோசிக்கலாம்........
ராம்ஸின் மனைவி, வாங்க  எங்க வீட்டுக்குக் கூட்டிப்போறோம் சாப்பிடன்னாங்க.  அடடா.... மன்னிக்கணும். இன்றைக்கு  சுரேஷ் வீட்டுலே சாப்பாடு. அதுக்காக  கிடைத்த அழைப்பை மறுக்க முடியுமா? இல்லே அவுங்களும்தான்  விருந்தோம்பலை மறந்துருவாங்களா?  அப்ப  நாளைக்கு.....   அடடா....  நாளைக்கு வேற ஒரு ப்ரோக்ராம் வச்சுக்கிட்டோமே....  ஓக்கே. திங்கக்கிழமை வர்றீங்க!  அன்றைக்கு வேலை நாள் இல்லையோ?  என்னங்க இப்படி? லாங் வீகெண்ட் மறந்து போச்சா?  அடடே.... லஞ்சுக்கு வந்துடறோமுன்னு  வாக்குக் கொடுத்தேன்:-)

எங்களைக் கோவிலில் கொண்டு வந்து விட்டுட்டு  கிவியனின் தங்க்ஸ்  வீட்டுக்குத் திரும்பிப் போயிருந்தாங்க. எதாவது ஆகாதுன்னு இருக்கா என்ற கேள்விக்கு  'வெஜிடேரியன் இருந்தாப் போதும் 'என்றார் கோபால்:-)))))
அதுக்குள்ளே  'அக்கா'வந்துட்டாங்க. சாமி நமஸ்காரம் ஆனதும் கிளம்பலாமான்னு  கேட்ட  கிவியன்,  இன்றைக்குப் பூஜை முடிய  ஒன்பது மணி ஆகிடும் என்றார். அம்மா, பொதுவா பூஜை முடியும் வரை இருப்பாங்கதான்.  ஆனால் இன்றைக்கு ஸ்பெஷல் டே!  பவுர்ணமி மாசாமாசம் வரும்.  ஆனால்.... துளசி? சரின்னு அவுங்களும் கிளம்பிட்டாங்க.

எதுக்கு இப்படி  ஷெட் முகப்பு?  கோபுரம் ஒன்னு இருந்தால்  எவ்ளோஅழகா இருக்கும் என்று கேட்டதற்கு,  கொஞ்சம் அடக்கி வாசிக்கணும் என்பதாலென்றார் ராம்ஸ்.  லோ கீ.....  நியாயம்தான்.  கோபுரத்திலும் முகப்பு வாசலிலும் க்ராஃபிட்டி போட்டு வச்சுட்டுப் போனால் நமக்குத்தானே கஷ்டமும் நஷ்டமும், இல்லையோ?

சின்னச்சின்ன காம்ப்ரமைஸ்  பண்ணிக்கத்தானே வேணும்.  அம்மாவை வீட்டில் விட்டுட்டு நாங்க கிவியன் வீட்டுக்குப் போய்ச் சேர்ந்தோம். அஞ்சே நிமிசத்தில்  சமையல் ரெடின்னுட்டாங்க  அவர் தங்க்ஸ்.

ப்ரொக்கொல்லி  ஃப்ரை, மிக்ஸட் வெஜி குருமா(மாதிரி), (எங்கூரில் விலை மதிப்பு அதிகமுள்ள )கத்தரிக்காய் வத்தக்குழம்பு ,ரஸம், பப்படம், தயிர்,  ஊறுகாய் , சாதம் இப்படி அந்தக் குறைஞ்ச நேரத்துலே ஜமாய்ச்சுட்டாங்க! ஒரு பிடி பிடிச்சோம்.  டிஸ்ஸர்ட்டுக்கு கேஸரி மாதிரி  ஒன்னு!

உடல்கள் வேறு, உள்ளம் ஒன்று என்பதைப்போல்  ஒரே பேச்சு, எங்களுக்கு:-)

கொஞ்சநேர அரட்டைக்குப் பின் எங்களை ஹொட்டேலுக்குக் கொண்டு வந்து விட்டாங்க.  அவ்வளவா ட்ராஃபிக் இல்லை. 20 நிமிட் தான் ஆச்சு. மறுநாளைக்கு நாங்க சாப்பாட்டுக்கு என்ன செய்வோமோன்னு  அவுங்களுக்கு ஒரே கவலை.

"ஈஸ்ட்டர் என்பதால் கடைகள் ஒன்னும் இருக்காது. பகல் சாப்பாட்டுக்கு வந்துருங்க."

"என்னங்க இது?  எதாவது கிடைக்காமலா போயிரும் நோ ஒர்ரீஸ்.  "

"அப்ப இட்லி பண்ணிக்  கொடுத்தனுப்பவா?"

 "சரியாப்போச்சு.  கவலையை விடுங்க. நாங்க சமாளிச்சுப்போம். மணி பத்தாகுது. பத்திரமாத் திரும்பிப் போங்க"

கவலையோடுதான் அவுங்களை அனுப்ப வேண்டியதாப் போயிருச்சு. நமக்கும் நாளை ரொம்ப பிஸியான நாள்தான்.

படுக்கையில் விழுந்தோம்.  வாட் அ லாங் டே இட் வாஸ்!!!!

தொடரும்...........:-)









Viewing all 1457 articles
Browse latest View live


<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>