Quantcast
Channel: துளசிதளம்
Viewing all 1429 articles
Browse latest View live

கொஞ்சம் அக்கம்பக்கம் பார்க்கலாம்:-)

$
0
0

" போனவாரமே உங்களைப் பார்த்தேன். உங்ககிட்டே வந்து பேச ஆசையா இருந்தது.வேணாம் அவுங்க பிஸியா  இருக்காங்கன்னு தடுத்துட்டார். (வீட்டுவீட்டுக்கு இப்படி ஒருத்தர் இருப்பாரே!)தினம்  நாங்க ப்ரேக்ஃபாஸ்ட்க்கு வரும் சமயம்  நீங்க கிளம்பிப் போய்க்கிட்டு இருப்பீங்க.   எங்கே மகளை காணோம்?  எப்பவும் மூணு பேரா வருவீங்க? எங்கே இருக்கீங்க?  அடிக்கடி வருவீங்களா? எப்பவும் இங்கேதான் தங்குவீங்களா?  சொந்த ஊர்  எது? சென்னைதானா?"

சபாஷ்! சரியான போட்டி:-) என்னை வாயைத் திறக்கவிடாம படபடன்னு  வார்த்தைகள் வந்து விழுது!  ஆஹா....வல்லாளுக்கு வல்லாள்,  வையகத்தில் உண்டு!!!!

" இங்கேயா தங்கி இருக்கீங்க? போனவாரம் உங்களைப் பார்க்கலையே:( எந்த ஊர்?"

' மெல்பர்ன்! ஆஸி!'    இன்னொரு அதிர்ச்சி.  அட! நம்ம பக்கத்தூரு மக்கள்ஸ்.

"அம்மாவும் பொண்ணுமா  பட்டுபுடவையில் அன்னிக்கு  ரொம்ப நல்லா இருந்தீங்க. கல்யாணத்துக்கு போனீங்களா?"

"ஆமாம். அன்னிக்குதான் எங்களுக்குக் கல்யாணம்!"

அரண்டு போன  முகத்தை ரசிச்சேன்.  'அறுபதாங் கல்யாண'முன்னு குறுக்கே பாய்ஞ்சார் கோபால்:-)

அவுங்களுக்கும் சென்னைதான் சொந்த ஊர் என்றாலும் 'வசதிகளை' முன்னிட்டு கெஸ்ட் ஹவுஸில் தங்குவாங்களாம்.  ஸேம் ப்ளட்:-)

'சுருக்கமா' ஒரு அரைமணி நேரம் பேச்சில் போனது. நம்ம தொழில் எழுத்துன்னதும் இன்னுமொரு அதிர்ச்சி அவுங்களுக்கு:-)  விடமுடியுமா? நம்ம வாசகர் வட்டத்துலே சேர்த்துவிட்டேன்!

நம்ம சீனிவாசனை வீட்டுக்குப்போயிட்டு வரச்சொல்லி இருந்தோம்.  அவர் திரும்பி வந்தவுடன் தி நகர் ரவுண்டு கிளம்பினோம். பயணங்களில் செக்கு மாடு போலத்தான்  போன இடங்களுக்கே போகவேண்டியதாப் போகுது.  தைக்கக் கொடுத்துருக்கும்  உடைகளை வாங்கிக்கணும். மங்கேஷ் தெருவுக்குப்போய்  சீனிவாசன்  ஆசாரி செஞ்சு வச்சுருக்கும் மோதிரத்தையும் வாங்கிக்கணும். தோழி வீட்டுக்கு ஒரு எட்டு.  இன்றைக்கு இதோடு சரின்னு திட்டம்.

1994 லே அண்ணன் மகள் கல்யாணத்துக்குப் போயிருக்கோம். அன்னிக்குன்னு பார்த்து ப்ளைட் லேட்.  எல்லா ஃபார்மாலிட்டியும் முடிஞ்சு  வீடுப்போய்ச் சேரும்போதே ராத்திரி மணி 12. அண்ணன் வீடு அப்போ அண்ணாநகரில் :-) . பொழுது விடிஞ்சதும் பந்தக்கால்.  நிகழ்ச்சி முடிஞ்சதும் பத்து மணிக்கு மற்ற பூஜைகள் ஆரம்பம்.  எதுக்கும் நிக்க நமக்கு நேரமில்லை.  வீட்டுலே புடவைகள் எடுத்து வச்சுருந்தாலும் அதுக்கு  ப்ளவுஸ் தைச்சுக்கணும் உடனடியா! மகளுக்குப் பட்டுப்பாவாடைகள் வேற எடுத்து உடனடியா தைச்சு வாங்கணும்.

ஏழுமாடி சரவணா ஸ்டோர்ஸ், போத்தி'ஸ், சென்னை  ஸில்க்ஸ் எல்லாம் அப்போ கிடையாது. நல்லி, அதை விட்டா குமரன் சில்க்ஸ் !  குமரனுக்கு ரெண்டு கடைகள்!   பர்ச்சேஸ் முடிஞ்சது.  வெளியூர்வாசின்னு நெத்தியில் எழுதி இருந்ததைப் படிச்ச  கடைப்பையன் ஒருவர், 'உடனே தச்சுக்கொடுக்க இங்கெ ஒரு டைலர் இருக்காரு. வாங்க , நான் இடம் காமிக்கிறேன்'னு ஒரு ஆட்டோ புடிச்சாந்து நம்மைக் கூட்டிக்கிட்டுப் போனார்.  கிட்டேதான். பனகல் பார்க்குக்கு எதுத்த பக்கம் . ராம்ஸ் பஸார்.

அங்கே ஏகப்பட்ட டெய்லர்ஸ் இருக்காங்க. பையன் கொண்டு போய் விட்ட  கடையில்  இருந்தவர்  மறுநாளே  தர்றதாச் சொன்னார். அளவு  கொடுத்துட்டு  வந்தோம். மறுநாள்  மாலை ரிஸப்ஷன். கிளம்பிக் கல்யாண மண்டபம்  போகும்போதே  டெய்லர் கடைக்குப்போய்  உடைகளை வாங்கிக்கிட்டோம்.  மகளுடைய  சட்டையில்  கொஞ்சம் குழறுபடி.  கோபால் எடுத்துக்கிட்டு ஓடினார். மீண்டும் சீர்படுத்தியெடுத்துக்கிட்டு  நல்லவேளையா ரிஸப்ஷன் ஆரம்பிக்கும் முன்  வந்து சேர்ந்துட்டார்.

அதுக்குப்பிறகு  இன்னொரு பயணத்தில்  இன்னொரு கடையில் துணிகளை வாங்கியதும்  தைக்கக்கொடுக்க விசாரிச்சதில் இன்னொரு இடத்தைக் காமிச்சாங்க. அங்கே போனால்  அதே டெய்லர் இருக்கார்.  பெயர் மொஹம்மத் முஸ்தாஃபா.  இதுக்குப்பிறகு அவர் எங்கே கடை போடறாரோ அங்கே போய் கொடுக்கும்படியா ஒரு வழக்கம் ஏற்பட்டுப்போச்சு. அவரும் விடாம பனகல் பார்க்கைச் சுத்தியேதான் கடைகளை மாற்றிக்கிட்டே இருக்கார்.  இப்ப வியாபாரம் ரொம்பவே பெருகி இருக்கு.  இடம் பழைய ராம்ஸ் பஸாரேதான்! 


ஒரே ஒரு சின்னக் கஷ்டம்தான் நமக்கு.  பொய் ஒன்னு சொல்லணும். ஆபத்தில்லாத பொய் என்பதால் நானே என்னை மன்னிச்சுக்குவேன்.  துணிகளைத் தைக்கக் கொடுத்துட்டு  உண்மையில் ஊருக்குக் கிளம்பும் நாளுக்கு ஒரு நாள் முன்னதான  தேதியில்  கிளம்பறேன் என்று சொல்ல ஆரம்பிச்சேன்.  உண்மை விளம்பியா இருந்த காலக்கட்டத்தில்  கடைசி நிமிசம் வரை   இதோ அதோன்னு  லேட் பண்ணி பேஜாராப் போயிருக்கு. அட்ரஸ் கொடுங்கம்மா. பையன்கிட்டே கொடுத்தனுப்பறேன்னு சொல்லி ஒரு பயணத்தில்  ஊருக்குக் கிளம்பும் நாள், காலையில்  ஆறுமணிக்குப் பையன் வந்தார்!

ஆனால் ஒன்னு சொல்லணும்,  ஒருதடவையாக் கொண்டுபோய்க் கொடுக்காம  பயணத்தில்  தினசரி ஊர் சுற்றும்போது , நல்லதாக் கண்ணில் படும் துணிகளை வாங்கிக்கிட்டே இருப்பேன்.  பாவம் கோபால். போதும் போதுமுன்னு  அலறுவார்.  இனிமேல் கொடுத்தால் டெய்லருக்குத் தைக்க நேரம் இருக்காதுன்னெல்லாம் சொல்லி பயமுறுத்துவார். பாவம்:-)))  நம்ம முஸ்தஃபா மாஸ்டர் அதெல்லாம்  பொருட்படுத்தாமத் தைச்சுக் கொடுத்துருவார். சிலசமயம் கோபால் தனியா  பயணம் செஞ்சாலும்  நம்ம கடையில்  எங்களுக்கான துணிகளைத் தைக்கக்கொடுத்து வாங்கியாந்துருவார்.   எங்கள் அளவுகளை  எழுதி வாங்கியாந்துருக்கேன்.  அதைக் கொடுத்தனுப்பினால் போதும்.

அவர் தைப்பது நமக்கும்  இந்த 19 வருசமாப் பிடிச்சுப்போச்சுன்னும்  வச்சுக்கலாம். நானே ஒரு தைய்யல்காரிதான் என்றாலும்  இங்கே கொண்டு வந்து தைச்சுக்க இப்பெல்லாம் சோம்பல் அதிகம். மேலும் இங்கே ஒரு மேட்சிங் கலர் நூல்கண்டு வாங்கும் விலையில் சென்னையில் உடையே தைச்சுக்கிட்டு வந்துடலாம்,பாருங்க.

 சிட்டி டெய்லர், ஃபேஷன் டெய்லர், க்ளாஸிக் டெய்லர்ஸ்ன்னு  பல பெயர்கள் எல்லாம் மாறி இப்போதைக்கு 'ஷிபி டெய்லர் லேடீஸ் ஸ்பெஷலிஸ்ட்'  என்ற பெயரில் கடை இருக்கு.  கடை எண் 8, ராம்ஸ் பஸார். பிரகாசம் ரோடு தி. நகர்.  இந்த பிரகாசம்ரோடுக்கு வர்றதுதான் கொஞ்சம் ட்ரிக்கியா இருக்கும்.  ஏழுமாடி  சரவணா ஸ்டோர் தாண்டியதும்  ரைட்லே பிரியும்  ரோடு. அந்த குறிப்பிட்ட இடம்  மட்டும் ஒன்வே என்பதால்  முதலில்  ட்ரைவர்களுக்குக் குழப்பம் வந்துரும்! பனகல் பார்க்கின் காம்பவுண்ட் சுவரை ஒட்டியே  இருக்கும் ரோடுதான் இது.  காம்பவுண்டு சுவர் முடிஞ்சதும் இது ஜி என் செட்டி ரோடில் போய்ச் சேர்ந்துருது. பாவம்  (அந்த)பிரகாசம்:(

வழக்கம் போலவே தைச்சு முடிச்சதையெல்லாம் அயர்ன் செய்ய அனுப்பி இருக்கேன். இன்னும் ஒரு மணி நேரத்தில் வந்துருமுன்னு  சொன்னார்:-)

மோதிரம் ரெடியா இருந்துச்சு. நல்லாவே செஞ்சுருக்கார். நன்றி சொல்லிட்டு,அங்கிருந்து  மயிலை சரவணபவன்.  கடைசி முறையா வெங்காய பஜ்ஜி.  அடுத்து  விஸிட் தோழி வீடு.  மீண்டும்  டெய்லர் கடை.     எட்டு மணிக்கெல்லாம்  அறைக்கு வந்து  பேக்கிங் ஆரம்பிச்சோம்.

ஆங்...    சொல்ல மறந்துட்டேனே......... கிராண்ட் ஸ்வீட்ஸ் வேணுமுன்னா இனி அடையாருக்கு  ஓட வேணாம்.  செயின் ஸ்டோர்ஸ் போல  மயிலை, அண்ணாநகர் . தி.நகர்ன்னு  ஒன்பது  கிளைகள் உருவாகி இருக்கு.    தி நகரில்   டாக்டர் நாயர் ரோடில் ஒரு கிளை திறந்துருக்காங்க,  கீழேயும் மாடியுமா இருக்கு.  கீழே  இனிப்பு காரம் விற்பனை. அஞ்சாறு இருக்கைகள் போட்டு வச்சுருக்காங்க.


மாடியில்  ரெஸ்ட்டாரண்ட்.   அதுக்கும் மேல் இன்னொரு மாடியில்  ஃபங்கஷன்  ஹால். நூறு பேர்வரை  கொள்ளுமிடம்.  விழாவுக்கு  ஹால் வாடகை கிடையாது.  சாப்பாடெல்லாம் கீழே இருந்து வரவழைச்சுக்கணும்.  குறைஞ்சது 100 பேருக்கான உணவுவகைகளை ஆர்டர் செஞ்சுறனுமாம். மேனேஜர்  ஸ்ரீதர்  மாடிக்கு அழைச்சுக்கிட்டுப்போய்  எல்லாம் விளக்கினார்.



ரெஸ்டாரண்டில்  தாலி மீல்ஸ் ரெண்டு வகையாக் கிடைக்குது. நார்த் அண்ட் சௌத் இண்டியன் வகைகள். இது இல்லாம , மற்ற உணவு வகைகள் எல்லாமே  சமைச்சுப்போடறாங்க:-) இப்போதைக்கு நல்ல சுத்தமான இடமாகவும்  பார்க்க நீட்டாகவுமிருக்கு. இப்படியே மெயிண்டெய்ன் ஆனா மகிழ்ச்சியே!  நம்ம கெஸ்ட் ஹவுஸுக்கு சமீபத்தில்  இருப்பதால் நாங்களும் ஒரு நாலுமுறை போயிட்டோம்.

100 மீட்டர் நடக்க சோம்பலா இருந்தால்   ஒரு  ஏழெட்டு மீட்டரில்  Suswaad  என்றொரு  உணவுக்கடை. அங்கேயே சாப்பிடும் வசதி இருந்தாலும்..... வீட்டுக்கு வாங்கிப் போகும் மக்கள்தான் நிறைய.  சாயங்காலமாப்போனால் புட்டு கிடைக்குது. நல்ல மிருதுவா தொண்டையை அடைச்சுக்காம அட்டகாசமா இருக்கு.  இங்கே சுவை சூப்பர்னு சொல்லணும். வீட்டுச் சாப்பாடு மாதிரியே!  வயித்துக்கும்கேடு வரலை.  மாலை வேளைகளில் சப்பாத்தி, பருப்பு விசேஷம்.  பிள்ளையார் சதுர்த்தியன்னிக்கு  கொழுக்கட்டை வாங்கிக்கலாமுன்னு போனால்   பயங்கரக்கூட்டம்.  வீட்டுலே சாமி கும்பிட நைவேத்யங்களை  இங்கே இருந்து வாங்கிப்போகும்  கும்பல் அது!  செல்ஃபோனில் தங்ஸ் போடும்  ஆர்டர் படி இங்கே ஆர்டர் கொடுத்துக்கிட்டு இருந்தார் ஒருத்தர். '

 "வடை இன்னும் பத்து நிமிசமாகுமாம் இருந்து வாங்கவா? "

ஹைய்யோ!!!  லைஃப்  எவ்ளோ ஈஸி பாருங்க. பேசாம இந்தியாவுக்கு வந்துறலாமா?

தொடரும்.......:-)







மறந்தே போச்சு...ரொம்பநாளாச்சு......

$
0
0
கடைசியா எப்போப் பார்த்தேன்னே நினைவில்லை. ஆனால் கண்டதும் கண்கள் விரிஞ்சதென்னவோ உண்மை! நீலமும் வெள்ளையுமா அழகோ அழகு!  இறைவன்/இயற்கை படைப்பில்தான் எத்தனையெத்தனை அற்புதங்கள்!!  சங்கு புஷ்பம்! இதுக்கு மட்டும் பூன்னு சொல்லாம ஏன் புஷ்பம் என்கிறோம்?

பூவை மட்டும் ரசிச்சால் போதுமா? எங்களையும் கொஞ்சம் பாரேன்னு அவுங்க மொழியில் கீக்கீ..... கீக்கீன்னு கூப்பிட்டன காதல் பறவைகள்.  ஹைய்யோ!!!! இத்தனையா?  வாங்குனது  நாலே நாலுன்னு நினைக்கிறேன். குடும்பம் பல்கிப்பெருகி இருக்கு!  ஒரு விநாடி ஒரு இடத்துலே நின்னு போஸ் கொடுக்குதுங்களா? ஊஹூம்......

வீடுகளில் இப்போ வெற்றிலை வளர்ப்பு வேற!  ஹப்பாடா..... நமக்கும் சொல்ல ஒரு சங்கதி கிடைச்சுருச்சு. நானும் வெற்றிலை (கொடிக்கால்) வச்சுருக்கேன்னு  சொல்லி மகிழ்ந்தேன், எட்டு இலைதான்  என்பதை கவனமா மறந்துட்டு :-)



போயிட்டு வாறோமுன்னு சொல்ல அப்போ மச்சினர் வீட்டுக்குப் போயிருந்தோம்.  வீட்டு வாசலில் நாம்  மணி ப்ளாண்டுன்னு சொல்வோம் பாருங்க அந்தக்கொடி  அழகா ஒரு மரத்தைப் பிடிச்சுக்கிட்டு மேலே போகுது!  இவ்ளோ நல்ல பெரிய இலைகளை ப்ரிஸ்பேனில்தான் பார்த்திருக்கேன்.  இந்தப் பக்கங்களில்   இதுக்குப்பேரு டெவில்'ஸ் ஐவி.  பணத்துக்கும் பேய் பூதத்துக்கும் ஒரு சம்பந்தம் வச்சுட்டாங்க பாருங்க!!!

செடிகளையும் பறவைகளையும் பார்க்கும்போது திடீர்னு நம்ம 'வீடு திரும்பல் மோகன் குமார் 'வீட்டுத் தோட்டம் நினைவுக்கு வந்துச்சு.

இனி நெருங்கிய தோழிகளையும் ஒரு முறை சந்திச்சுட்டுக் கிளம்பணும். வெளியே போய் சாப்பிடலாமுன்னு கூப்பிட்டேன்.  மனசில் இருந்தது அடையார்  மண்வீடு. இன்னொரு தோழியையும்  கூப்பிட்டால் அவுங்க அருணாஸ்லே சாப்பிடலாமுன்னு தீர்மானமாச் சொல்லிட்டாங்க. புது வீடு வாங்கி இருக்காங்க அவுங்க. ஆனால் வீடு இன்னும் ரெடியாகலை. அடுத்தமுறை நான் வந்தால் கண்டுபிடிக்க  சௌகர்யமா இருக்கணுமேன்னு  இப்பவே வீட்டைக் காமிக்கப்போறேன்னு  மிரட்டுனதால்  ஓக்கேன்னுட்டேன்:-)

கிளம்புமுன் 'பெரிய ஆள்'கிட்டேயும் விடை பெறணுமே எனக்கு. அனந்தபத்மநாபன் சந்நிதியில்  சந்திக்கலாமுன்னு  சொல்லிட்டுக் கிளம்பினேன். போகும் வழியிலேயே நம்ம நாச்சியார் வீட்டுக்குப்போய் அவுகளையும் கூட்டு சேர்த்துக்கிட்டே போனோம்.  அருணா'ஸ்லே சாப்பாடுன்னதும்  சிங்கம் பதுங்கிட்டார்:-)

கோவிலுக்குள்ளில் நுழைஞ்சால் நிம்மதியாப் படுத்தபடி  'வா' ன்னான்.  'இப்படிக்கிடந்தால் நல்லதுல்லை. பெட்ஸோர்தான் வரப்போகுது'ன்னு மிரட்டியபடி பெரிய திருவடி, புதுசா வந்துருக்கும் அன்னபூரணி, சக்ரத்தாழ்வார், தங்கத்தேர், திருப்பதி வெங்கடாசலபதி ஃபேமிலி, தஞ்சாவூர்  பெயிண்டிங் கிருஷ்ணன், ஸ்ரீ லக்ஷ்மிநரசிம்மன்  எல்லோருக்கும்  கும்பிடு போட்டு,  நாடுவிடும் சமாச்சாரம் சொல்லிக்கிட்டே   உற்சவர்கள் அறைக்குப்போனால்  தாயார்களுடன்  பிரமாதமான அலங்காரத்தில்  அறைக்கு வெளியே வந்து காத்துக்கிட்டு இருக்கார்  நம்ம பெரும் ஆள்!

என்னடா ஆச்சு? இன்னிக்கு திருவோணம்  நட்சத்திரம் கூட  இல்லையே.... ன்னால் எல்லாம் உனக்காகத்தான்னு சொல்லிச் சிரிக்கிறான் கள்ளன்! இரு மனசில் புடிச்சு வச்சுக்கிறேன். அடுத்த ட்ரிப்வரை தாங்கணுமேன்னு  க்ளிக்கினேன்.   இந்தப்பக்கம்  நேயுடு  வெற்றிலைமாலையோடு  நிக்கறார்.   பெரிய கோவில் இல்லைன்னாலும் எல்லாம் அம்சமா அமைஞ்சுருக்கு இங்கே!  சென்னையில் எனக்கு ரொம்பப்பிடிச்ச கோவில்  லிஸ்டில்  இதுக்குத்தான் முதலிடம். கோவிலில்  சிலபல இம்ப்ரூவ்மெண்ட் வேலைகள் நடந்துக்கிட்டு இருக்கு.  நல்ல மேனேஜ்மெண்ட் அமைஞ்சது  பப்பனின் பாக்கியம்!

என்ன  ரொம்பநாளாக் காணோமே? ன்னு விசாரிச்சார்கள் கோவில் ஃப்ரெண்ட்ஸ்.  சென்னை வாழ்க்கையில்  அநேகமா தினம்தினம் பார்த்த முகம், சட்னு நினைவுக்கு வந்துஇருக்கும்:-)

அதுக்குள்ளே சந்திக்கறேன்னு சொன்ன எழுத்தாளர் தோழி அலைகள் அருணா வந்துசேர்ந்தாங்க. எல்லோரையும் அறிமுகப்படுத்திட்டு மீண்டுமொருமுறை வலம் வந்து  'கிடப்பவனிடம் 'சொல்லிவிட்டுக் கிளம்பி  அருணாவின் புது வீட்டுக்குப் போனோம்.  எப்படியும் ஒரு மூணுமாசமாவது ஆகும் போல இருக்கு வேலைகள் முடிய.  நான் திடீர்னு போனாலும்   எனக்கு புடவை பரிசளிக்க நல்ல சௌகரியம், நல்லி சில்க்ஸ் ரொம்பப் பக்கத்தில்  இருக்கு.

எல்லோருமாக் கிளம்பி  அருணாவின் (பழைய) வீட்டுக்குப் போனோம்.  சூப்பர் சாப்பாடு. வாழைத்தண்டு பச்சடி....  ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்  நல்ல காரம்!

இன்னும் கடைசி நேர வேலைகள் ரெண்டு இருக்கு.  அப்புறமுன்னு தள்ளி வைக்கக் கூடாதது.  அடையார் நேரு நகர் தெருக்கள் எல்லாம் சரியா இருக்கான்னு  நாலைஞ்சு ரவுண்டு போய்ப் பார்த்தோம். ஒரு விலாசம் கண்டு பிடிக்கறதுக்குள்ளே தாவு தீர்ந்துடுது.  இத்தனைக்கும்  நாலைஞ்சு தடவை போய்வந்த இடம்தான்.  லேண்ட்மார்க்கா இருந்த கடையை  இப்போக் காணோம்!  எல்லாம் நம்ம  ஹோப் ஃபவுண்டேஷன் ஆஃபீஸைத் தேடித்தான்  அலைஞ்சோம்.   வரப்போகும் கிறிஸ்மஸ் விழாவுக்குக் குழந்தைகள் செலவுக்கு ஒரு தொகை கொடுக்கணும்.   நமக்குப் பரிசாக அருமையான படம் ஒன்னு  எடுத்து வச்சுருந்தாங்க.  கொஞ்சம் பெரிய சைஸ்னு  கண்ஜாடை காமிக்கிறார் கோபால்:-)  அன்புக்கு நன்றின்னு படத்தை ஒருபடம் எடுத்துக்கிட்டேன்.

Mrs. Malarvili Prabath Exec. Officer-Women & Children Programs. அவர்களுடன்  சந்திப்பு.  ஹோப் பள்ளிக்கூடம் ரொம்ப நல்லா நடக்குது!



அடுத்த ஸ்டாப் இன்னொரு பதிவர் வீடு. பத்து நிமிசம்  NineWest நானானியோடு  பேச்சு.  பாவம், நாச்சியார்!!  இழுத்த இழுப்புக்கு  வாயைத் தொறக்காம வந்தாங்க  கூடவே!   முகத்தில் கொஞ்சம்  களைப்பு தெரிஞ்சது.  அவுங்களைக் கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கவிடேன்னு  கோபால் (ரகசியமா) என்னிடம் சொன்னார்.:-)  கூடவே இருந்து கொடுமைகளை அனுபவிக்கறவராச்சே!

நாச்சியாரை வீட்டில் விட்டுட்டு  விஷ்ராந்தி அலுவலகத்துக்குப் போனோம். நம்ம அதிர்ஷ்டம் பாருங்க. மாடியில் இருக்கும் ஃப்ளாட், கதவு பூட்டி கிடக்கு. பக்கத்து ஃப்ளாட்டுலே ஒரு மரணம். அதனால்  சீக்கிரம் பூட்டிட்டாங்கன்னு துக்கத்துக்கு வந்திருந்த ஒருத்தர் சேதி சொன்னார்.  பேசாம ஒரு செக் எழுதி அவுங்க  மெயில் பாக்ஸ்லே போட்டுடலாமேன்னு பார்த்தால் கைவசம் என்வலப் ஒன்னும் இல்லை.  ஹேண்ட்பேகில் இருந்த எதோ கடை ரசீதின் பின்புறம் நம்ம விலாசமும் அமௌண்டும் குறிப்பிட்டு செக்கையும் அதுலேயே வச்சு மடிச்சு  கீழ்தளத்தில் இருக்கும் மெயில்பாக்ஸ்களில் இவுங்க பெயருள்ளதைத் தேடிப்போட்டோம்.  க்ராஸ்டு செக் என்பதால்  பரவாயில்லைன்னு  நினைப்புதான்.

நேரா  தி.நகர் ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ்.கல்யாணச் ச் சீர்வரிசைக்கு வேண்டியவைகளையெல்லாம் கூட செஞ்சு கொடுக்க ஆரம்பிச்சுட்டாங்க. குட்டிக்குட்டி ஜாங்கிரி வேணும் நமக்கு.   கிடைக்கலை.  கொஞ்சம் இனிப்புகளும் காரவகைகளும் வாங்கிக்கிட்டு நேரா திநகர் சரவணபவன். அங்கே  மினி வகை கிடைச்சது. இன்னும் கொஞ்சம் உப்புச் சமாச்சாரங்கள்.  இன்னும் வேற வகை இனிப்புகள் எல்லாம் வாங்கினோம்.  பால் சேர்த்த இனிப்புகள் , வட இந்தியவகைகள் ஒன்னும் வாங்கிக்கலை.  மேட் கௌ டிஸீஸ்  பயத்தால் நியூஸியில் இவைகளை அனுமதிப்பதில்லை:(

அப்படியே கடைக்குள் நுழைஞ்சு கடைசி முறையா ஒரு காஃபி! இனிப்பு வாங்க ஆரம்பிச்சதுமே இதுதான் பயணத்தின் கடைசி ஷாப்பிங், இனி கிளம்பிருவோம் என்பது உறுதியாகிரும்.  என் மனசில்  லேசா ஒரு சஞ்சலமும் ஆரம்பிக்கும்.

பயணங்களில் காணாமப்போகும் சமாச்சாரங்களில் ஒன்னு சாவிகள். குட்டியூண்டு சாவிகள் என்பதால் எங்கே வச்சோமுன்னு  அல்லாடணும். இதுலே ஆயிரத்தெட்டு  ஸிப் வச்ச அறைகள் இந்தப் பொட்டிகளுக்கு.  இப்பெல்லாம் யாராவது  எதையாவது நம்ம பொட்டிகளில் திணிச்சு அனுப்பிட்டால்..... என்ற பயம் வேற இருக்கே.  ஜஸ்ட் ப்ளெயினா ஒரே  ஓப்பனிங்  இருக்கும் பெட்டிகளா  விக்கக்கூடாதா?   அக்கம்பக்கத்துக் கடையில்   ஒரு அஞ்சாறு நம்பர் லாக்குகள்  வாங்கிக்கிட்டோம். ப்ளாட்பாரப் புத்தகக் கடை, ஒன்னும் வாங்கிக்கலையான்னது.  அங்கே ரெண்டு புத்தகங்கள்.  வெயிட் வெயிட் னு அலறின கோபாலை, வெயிட் வெயிட் இது  கையிலே வச்சுக்கும் ரீடிங் மெடீரியல்ஸ்ன்னு சொல்லி சாந்தப்படுத்தினேன்:-)

ஏழுமணிக்கு அறைக்கு  வந்ததும் பெரிய வண்டி  மாத்தி எடுத்துக்கிட்டு  எட்டரைக்குள்ளே வந்துருங்கன்னு சீனிவாசனை அனுப்பிட்டு  ஃபைனல் பேக்கிங் முடிச்சுக் கீழே போய் அக்கவுண்ட் செட்டில் செஞ்சு முடிக்கும்போது சீனிவாசன் வந்துட்டார்.

ஏர்ப்போர்ட் போய்க்கிட்டு இருக்கோம்.  மனசுக்குள்ளே சின்னதா  ஒரு ஏக்கம். இதுலே பாருங்க... நியூஸியில் இருந்து இந்தியா வரும்போது மனசு பூராவும் மகிழ்ச்சியா இருக்கும்.  இந்தியாவுக்குப் போகாம வேற இடங்களுக்குப் போகும்போதும் மனசுலே  ஏக்கம் கலக்கம் இப்படி ஒன்னும் இருக்காது. ஹாலிடே போறோம் என்ற உணர்வு மட்டும்தான்.  இதே... இந்தியாவிலிருந்து கிளம்பும்போது வீட்டுக்குப் போறோம் என்ற மகிழ்ச்சி இருந்தாலும் கூடவே  ஒரு ஏக்கம், ' இனி எப்போ?'ன்னு வந்துருது.

 இந்தியாவிலேயே  வந்து இருந்துடலாமுன்னா.... இப்போ அங்கிருக்கும் சிஸ்டத்துக்கு  நான் லாயக்கில்லைன்னு  ஆகிருச்சு.  அதிகபட்சம் ஒரு மாசம் தாக்குப்பிடிக்கலாம். அம்புட்டுதான்.  நடக்கும் அட்டூழியங்களைப் பார்த்து 'எப்படா ஊருக்குப் போய்ச்சேருவோமு'ன்னு தோணிப்போகும்.  கிளம்பும்போது ....  மறுபடி....   என்னவோ  இது  ஒரு மாதிரி  'லவ் அண்ட் ஹேட்' உறவு!

முக்கால் மணியில் ஏர்ப்போர்ட் வந்து சேர்ந்து ட்ராலியில் பெட்டிகளை அடுக்கிக்கொடுத்த  சீனிவாசனுக்கு நன்றி சொல்லிட்டு ட்ராவல்ஸ்க்கான பில்லை செட்டில் செஞ்சுட்டு உள்ளே போனோம்.

செக்கின் செய்யும் இடத்துலேயே  ஏக்கம் காலி:-)

லவுஞ்சில் போய் உக்கார்ந்ததும்  மறுநாள் செய்யவேண்டியவைகளை லிஸ்ட்போட ஆரம்பிச்சார் கோபால்.

தொடரும்........:-)





சிங்கைப்பெருமக்கள்ஸ்:-)

$
0
0
இந்தமுறை சிங்கையில் அறை எடுக்கப்போவதில்லை. இன்னிக்கு மாலையே நியூஸி ஃப்ளைட் பிடிக்கணும்.  எப்பவும் ஒரு 'டே ரூம் 'புக் பண்ணிட்டு காலையில் அங்கேபோய்ச் சேர்ந்தால்  ரூம் ரெடியாகலை. பத்து மணிக்குத்தான் கிடைக்கும். அதுவரை பெட்டிகளை  இங்கே வச்சுட்டு நீங்க ஸ்விம்மிங்பூல் பக்கம் இருக்கும் பாத்ரூம் வசதிகளைப் பயன்படுத்திக்கலாம்னு  சொல்வாங்க. ஒவ்வொரு பயணத்திலும் அவுங்களோடு சண்டைபோட்டு 'அறை' வாங்குவதற்குள் போதும்போதுமுன்னு ஆகிரும்:(

ஏர்ப்போர்ட்லேயே  அம்பாஸிடர் லவுஞ்சில்  போய் குளிச்சுட்டு(ஆளுக்கு 8 டாலர் சார்ஜ்) எம் ஆர் டி எடுத்து நேரா செராங்கூன் ரோடு சீனுவைப் பார்க்கப் போயாச்சு. நேத்து சென்னையிலேயே எல்லாப் பெட்டிகளையும் நியூஸிவரை  செக்த்ரூ பண்ணிட்டு  ஒரே ஒரு  தோள்ப்பை மட்டும் கையில். அதுலேயும்  சிங்கை நண்பர்களுக்குக் கொண்டு போகும்  இனிப்புகளும்  ஒரு செட்  மாற்றுடைகளும்தான். காலை நேரம் என்பதால் ரயிலில் கூட்டம் இல்லை.




சீனுவை முதலில் கண்டுக்கணும்.அப்புறம் கோமளாஸ்னு பக்காவா ப்ளான்.  ஆனால் அவன் வேற மாதிரி திட்டம் போட்டு நமக்கு  விருந்து வச்சுட்டான். கோவிலில் நல்ல கூட்டம். அன்னதானம் நடக்குது.உள்ளே நுழைஞ்சதும்  வாங்க வாங்கன்னு சாப்பிடக் கூப்புடறாங்க. கொஞ்சம் பொறுங்க.சாமி தரிசனம் முடிச்சுக்கிட்டு வந்துடறோமுன்னு கெஞ்சவேண்டியதாப்போச்சு:-)



இப்பெல்லாம் சனிக்கிழமைகளில் கூட்டம் அம்முதாம்.  சனீஸ்வரனின் கொடுமைகளில் இருந்து தப்பிக்க எள் விளக்கு போட்டால்  நல்லதுன்னு  கருப்புத்துணியில் எள்ளை முடிஞ்சு தீபமேற்றத்தோதாக  அடுக்கி வச்சுருக்காங்க.   வாங்கி தீபமேற்றி சனியை மகிழ்விக்கலாம். கருப்பு மூட்டையை எடுத்துட்டால் ஜஸ்ட் எண்ணெய் விளக்கு இப்படி 2 இன் 1. கண்ட இடத்தில் கொளுத்தி வச்சு,  இடத்தை மாசுபடுத்தாமல் இருக்க  ஒரு இடத்தில்  பெருமாள் ஓவியத்தின் திரைச்சீலையைத்  தொங்கவிட்டு அடுக்குப்படிகள் அமைச்சுருக்கு நிர்வாகம்.









இன்னும் ரெண்டு தனித்தனிக் கூடாரங்களில்  ஸ்ரீநிவாசனின் மூர்த்திகளை வச்சு விசேஷ பூஜைகள் நடந்துக்கிட்டு இருக்கு.  இந்த முறைதான் சனிக்கிழமை காலை வேளைகளில், இந்த நேரத்துக்குச் சிங்கைச்சீனுவின் கோவிலுக்குப்போக எனக்கு அமைஞ்சுருக்கு. இதுதான் முதல்முறைன்னு நினைக்கிறேன். மத்தபடி சிங்கையில் தங்க நேரும் சனிகளில் அதிகாலை 6 மணிக்குக் கோவிலுக்குப்போயிட்டு வர்ற வழக்கம்தான்.  கொடிமரத்துக்கு  இந்தாண்டை வெளிமண்டபத்துத் தூண்களில் கூட நம்ம தூண் என்று ஒரு இடம் புடிச்சு வச்சுருக்கேன். எப்பவும் அங்கேதான் உக்காருவோம். இந்த முறையும் தூண் நமக்காகக் காத்திருந்தது:-)

கோவிலை வலம் வந்து மூலவரைக் கும்பிட்டு நம்ம தூணருகில்  கொஞ்ச நேரம்  உக்கார்ந்து  நடப்புகளைப் பார்த்துக் க்ளிக்கிட்டு இருந்தேன்.  இங்கே மூலவரைக்கூடக் கிளிக்கலாம். பிரச்சனை இல்லை. இதனால் கோவிலுக்குள்ள புனிதம்,ஐஸ்வர்யம் இதுக்கெல்லாம் குறைபாடொன்னும் இல்லை.  ஒவ்வொரு முறை போகும்போதும்  இன்னும் ஜ்வலிப்பாத்தான் இருக்கு கோவில்.  எப்போதும்போல் படு சுத்தம்.










கோவில் வளாகத்தில் இருக்கும்  ஃபங்க்‌ஷன் ஹாலுக்கு முன்புறமும்  வெயில் தாக்காமல் இருக்க நாகரிகக் கொட்டாய் போட்டுருப்பதால் பிரசாதம்(சக்கரைப்பொங்கல், வெண்பொங்கல் சுண்டல்) ஜூஸ், குடி நீர், பாயஸம்போல ஒரு சமாச்சாரம் எல்லாம்  அவுங்க அடுக்கி வைக்க வைக்க  மக்கள்ஸ் எடுத்து சாப்பிடச் சாப்பிடன்னு எல்லாம் அமோகம். ஜோதியில் நாங்களும் கலந்தோம்.  நமக்கு ப்ரேக் ஃபாஸ்ட் ஆச்சு.  லஞ்சுக்கு  இருந்துட்டுக்கூடப் போகலாம்:-)  வெவ்வேற குழுக்களா வந்து  பிரசாத விநியோகம் பண்ணிக்கிட்டே இருப்பாங்களாம். (அடடா....இது தெரியாமப்போச்சே!)

பெருமாள் இதையெல்லாம் கண்டுக்காம 'நின்னமேனி'க்கு  இருக்கார். அவருக்கு இன்னொரு கும்பிடு போட்டு தேங்க்ஸ் சொல்லிட்டுக் கிளம்பினோம். கோவிலுக்குப் பக்கம் இருக்கும் ஃபேர்ரர் பார்க் ஸ்டேஷன் . வந்து போக நல்ல வசதி.

ரொம்ப நெருங்கிய நண்பர்களில்  மூன்று பேரை (மட்டும்) இந்த முறை சந்திச்சுட்டு திரும்பி ஏர்ப்போர்ட்டுக்கு  மாலை ஆறரைக்குள் ஓடணும். ரெண்டு தோழிகள் புது வீடு வாங்கி இருக்காங்க. முதல்முறையாகப் புது வீட்டுக்குப் போறோம். புது ஏரியா என்பதால்  ரெண்டு மூணு முறை செல்லில் கூப்பிட்டு வழியைத் தெரிஞ்சுக்கிட்டோம்.

முதல் விஸிட் எழுத்தாளர் ஜெயந்தி சங்கர் வீட்டுக்கு.  வீடு அருமையா  பளபளன்னு இருக்கு. ஒரு மணி நேரம் போல இருந்து  விட்டுப்போன கதைகளை அளந்துக்கிட்டு இருந்தோம்.  பகல் சாப்பாட்டுக்கு  நிக்கலைன்னு அவுங்களுக்கு  கொஞ்சம் வருத்தம்தான்.  சாமி வயிறு நிறைய  போட்டு அனுப்பிட்டாருன்னு சொன்னேன்.

அங்கிருந்து  கிளம்புபோது மழை!  சிங்கப்பூரில் நாள் தவறினாலும் மழை வரத் தவறாது. எல்லாம் சட் சட்னு வந்துட்டு ஓடிப்போயிரும். சுருக்கமாச் சொன்னா எங்கூர் நிலநடுக்கம் போல! தினம் குறைஞ்சது மூணு. சின்ன ஆட்டம்தான். நடுக்கம் அளக்கப் புதுக் கருவிகளும் வந்தாச்சு. தனியா வலைப்பக்கம் போட்டுருக்கு அரசு.  காலையில்  இமெயில் செக் பண்ணுவது போல  இதையும் ஒரு முறை பார்த்துக்கும்  பழக்கம் எங்களுக்கு. உண்மையைச் சொன்னால்  (நில)நடுக்கம் இல்லேன்னா நாங்கள் நடுங்கிருவோம். அன்றிலிருந்து இன்று வரை 13 376 ஆகி இருக்குன்னா பாருங்க.

ஜெயந்தி வீட்டில் இருந்து கிளம்பி ஒரு டாக்ஸி எடுத்துக்கலாமுன்னா.....  அரைமணி நேரமா நின்னும் ஒன்னும் அகப்படலை. சமீபகாலமா சிங்கையில் கவனிச்ச ஒன்னு இது.  வாடகைக்கார்களின் எண்ணிக்கை குறைஞ்சு போச்சா இல்லை   செராங்கூன் ரோடு , விமானநிலையம் இப்படி  எப்பவுமே பிஸியா இருக்கும் பக்கங்களில் மட்டும் இவுங்க சுத்தறாங்களா?  ஒருவேளை பப்ளிக் ட்ரான்ஸ்போர்ட் அருமையா  அமைஞ்சுட்டதால்  டாக்ஸிக்காரர்களுக்கு வருமானம் குறைஞ்சு போய்.... வேற வேலைக்குப் போயிட்டாங்களா?

காருக்குக் காத்திருந்து கண்கள் பூத்தபின் பஸ் ஒன்னு பிடிச்சு  ஒரு எம் ஆர் டி ஸ்டேஷன் போய் அங்கிருந்து சிங்கை எழுத்தாளர் சித்ரா ரமேஷ் வீட்டிற்கு ரயிலில் போனோம். வரும் விவரம் சொன்னதும்  ஸ்டேஷனுக்கு வந்து கூப்பிட்டுப் போனார் ரமேஷ். இவுங்க ரெண்டு பேருமே எழுதுவாங்க. மரத்தடி கால நண்பர்கள். ரமேஷ்  ஏனோ இப்பெல்லாம் எழுதுவதில்லை:(
சித்ரா உள்ளூர் பத்திரிகையில்  சிங்கப்பூர் சரித்திரம் தொடர் எழுதிக்கிட்டு இருக்காங்க இப்போ. சிங்கை எழுத்தாளர் சங்கத்தின் முக்கிய அங்கம்  நம்ம சித்ரா.

அஞ்சு நிமிஷ ட்ரைவ்தான் வீட்டுக்கு. நான் இப்போதான் முதல்முறையா வர்றேன். உண்மையைச் சொன்னால் கோபால்தான் நம்ம வீட்டுலே அதிகம் பயணிக்கிறவர்.  அவர் பயணக்கதை எழுதக்கூடாதான்னு நான் நினைப்பேன்.  எப்பேர்ப்பட்ட இடமானாலும்   ஒரே ஒரு வரியில்  சொல்லிருவார்:-) கோபாலுக்குச் சிங்கை வழியாகவே அநேகமா நிறைய பயணங்கள் அமைஞ்சுருது. அவர்  ஏற்கனவே சிலமுறைகள்  சித்ரா ரமேஷின் புது வீட்டுக்குப் போயிருக்கார்.  அருமையான  வீடு. சிங்கையில் அடுக்குமாடிகள்தானே எங்கே பார்த்தாலும்!  இவுங்க கட்டிடத்துக்குப் பக்கத்தில்  அரைவட்டத்தில் அழகான  பழைய கட்டிடங்கள் சில அட்டகாசமா இருக்கு! தரைத்தளத்தில் இருந்து பார்த்தால் இந்த அழகு கண்ணில் பட்டுருக்காது!



பால்கனியில் குட்டியா ஒரு தோட்டம்!  அடிச்சுப்பிடிச்சு அந்தக்கூடத்தில் நானும் இருக்கேன்:-)

ஊர்க்கதைகளையெல்லாம் பேசி நிதானமா சாப்பிட்டுக்கிட்டு இருந்தபோதே  'காலம்' கோவி கண்ணன் , நண்பர் வெற்றிக்கதிரவனோடு  வந்துட்டார் எங்களைக் கடத்திப்போக:-)  அவர்களையும்  சாப்பிடச்சொன்னால்..... லஞ்சு முடிச்சாச்சுன்னாங்க. எல்லோருமாச் சேர்ந்து  பதிவர் மாநாடு ஒன்னு நடத்தி முடிச்சதும்  கண்ணனோடு கிளம்பினோம்.

பழையபடி வாடகைக்கார் கிடைப்பதில்  தாமதம்.  பஸ் ஸ்டாப் வரை போகலாமுன்னு  நடந்து நடந்தே பாதி தூரம் போயிருந்தோம். பேச்சு சுவாரஸியத்தில் களைப்பு தெரியலை.  கண்ணன் இன்னும்  மெலிஞ்சு போயிட்டார்.  அதனால் நடையில் வேகம் இருந்துச்சு.  முயலும்  ஆமையுமாப் போனபோது  வாடகைக்கார் கிடைச்சுருச்சு. நாலு நிமிசத்தில் வீடு.

கண்ணனின் அழகிய குடும்பம் பார்த்து மகிழ்ச்சி அடைந்தோம்.  சிவ செங்கதிர் வளர்ந்துருந்தார். ஆறுமாசக் குழந்தையா இருந்தப்போ பார்த்தது. இப்போ 25 மாசம்! பேசும் கண்கள்!  அப்படியே கிருஷ்!  (சுவரில் யசோதாவும் கிருஷ்ஷுமாய் ஒரு அழகான ஓவியம்) மகளும் வளர்ந்துவிட்டாள். தம்பிப்பயலைக் கண் போல் பார்த்துக்கும் குணம்!

ஏன்தான் 'காலம்' இப்படிப் பறக்குதோன்னு  நினைச்சேன்.  பேச்சு இன்னும் முடியலை. தொடரும் போட்டுட்டுக் கிளம்ப வேண்டியதாப் போச்சு.  வாரவிடுமுறை என்பதால்  நண்பர்கள் அனைவரையும் பார்க்க முடிஞ்ச திருப்தி எங்களுக்கு.

விமானநிலையம் போக மறுபடி வாடகைக்கார் கிடைப்பதில் சுணக்கம்.  நாங்களே போயிருவோமுன்னா கேட்டால்தானே? கண்ணனும் வெற்றிக்கதிரவனும் கூடவே  வண்டியில் ஏறுனதும், செங்கதிருக்கு அழுகை.  அப்பா கூடப்போனால் நல்லா இருக்குமே! அம்மா வேடிக்கை காமிச்சு ஏமாற்றி உள்ளே கொண்டு போயிட்டாங்க:(

விமானநிலையத்தில் நாங்க எல்லோருமா ஒரு பத்து நிமிசம் 'பேச்சு எங்கள் மூச்சு 'என்ற நம் தேசிய குணத்தைக் கடைப்பிடிச்சுட்டு  அங்கே  தரை முழுசும் வரைஞ்சு வச்சுருக்கும்  3D படத்தையும்  ரசிச்சுட்டு நண்பர்களுக்கு  டாடா  பிர்லா சொல்லிட்டு  உள்ளே போனோம்.

தொடரும்.............:-)





சும்மாச் சொல்லக்கூடாது !!!

$
0
0
சாங்கி விமான நிலையம் வழக்கம்போல் சூப்பரா இருக்கு. எப்பப்போனாலும் புதுசா ஒரு அழகு. பயணிகளின் மனச்சோர்வு நீங்க அங்கங்கே புதுசுபுதுசா எதாவது  செஞ்சுக்கிட்டே இருக்காங்க.





 ஒவ்வொன்னும் கண்ணை இழுக்குது. எதை விட எதைப்போட?????? நான் பெற்ற இன்பம் வகையில் 35 படங்கள் தாளிச்சுருக்கேன்:-))))


ஆர்க்கிட் மலர்களும், பெரணிச்செடிகளும், சின்னதா மூங்கில் குத்துகள் இருக்கும்  அமைப்புமா அங்கங்கே வச்சுருப்பாங்க.  தொட்டிகளில் மீன் வைக்காமல் குளம் (Koi Pond )கட்டிவிட்டு அதில்  ஓயாம இங்கும் அங்குமா பயணம் போகும் மீன்கள் எல்லாம்  பார்க்கவே அருமையா இருக்கும். நமக்கு  இந்தியா வரணுமுன்னா சிங்கை வழிதான் எப்போதும். எங்கூரிலும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் மட்டுமே தனியாட்சி நடத்திக்கிட்டு இருக்கு. அதனால் டிக்கெட் எப்பவுமே கூடுதல்தான்.  போட்டியே இல்லைன்னா ........  எப்படி விலை குறைப்பாங்க? ஏன் குறைக்கணும் என்ற எண்ணம் வந்துருதே!

டைரக்ட்டா கிறைஸ்ட்சர்ச் வரணுமுன்னா  எங்களுக்கும் இதைவிட்டா வேற வழி இல்லை. முனகிக்கிட்டே  டிக்கெட் புக் பண்ணுவோம். ஆனால் ஒன்னு  பயணம் ரொம்ப போரடிக்காம இருக்கும்படி பார்த்துக்குவாங்க. நமக்குத்தான் பத்து மணி நேரம்   ஹவுஸ் அரெஸ்ட் மாதிரி இருக்கும்:-)


இந்த Bபோரடி எங்கே ஏர்ப்போர்ட்லேயே ஆரம்பிச்சுருமோன்னு  நினைச்சு அவுங்களே பயணிகளுக்கு  மனமகிழ்ச்சிதரும் சமாச்சாரங்களா ஏகப்பட்டவைகளைக் கவனிச்சுச் செஞ்சுக்கிட்டு இருக்காங்க.

இப்போ புதுசா இன்னும் சில ஏற்பாடுகள். அவைகளை எங்கே கோட்டை விட்டுருவோமோன்னு தனியா ப்ரோஷர் ஒன்னு போட்டு விளம்பரப்படுத்தி இருக்காங்க.  Garden Trail @ Changi.  இப்ப மூணு டெர்மினல் ஆகிருச்சு பாருங்க, அதனால் குறைஞ்சபட்சம் டெர்மினலுக்கு  ரெண்டு அமைப்புகள். நேரம் அதிகம் இருந்தால்  ஸ்கை ட்ரெய்னில் இங்கேயும் அங்கேயுமாப்போய்ப் பார்த்துட்டு வரலாம். எதுக்கும் எக்ஸ்ட்ரா காசு செலவு செய்யவேணாம் என்பது கூடுதல்  கவர்ச்சி:-)


டெர்மினல் மூணு:  ஃபெர்ன் கார்டன்  பழசு.  அதுவுமில்லாமல்  ஏற்கெனவே  நிறைய படங்களை நம்ம தளத்தில் போட்டுருக்கேன். சாம்பிளுக்கு ஒன்னு இங்கே:-)

புத்தம்புதுசுன்னு  சொன்னால்  பட்டாம்பூச்சித் தோட்டம்.  சங்கிலித் திரை கடந்து உள்ளே போகணும்.


நல்லா இயற்கை அழகு மாதிரி(!) செஞ்சு வச்ச அலங்காரச்செடிகள். கற்பாறைகள்.ஆறு மீட்டருயர நீர்வீழ்ச்சின்னு மாடியும் கீழேயுமா ரெண்டடுக்கு.  பூக்களுக்கு எப்படி சீஸன் இருக்குதோ அதே போல பட்டாம்பூச்சி வகைகளுக்கும் சீஸன் இருக்குதாமே!!!  அந்தந்தக் காலத்தில் பிறக்கும் வகைகளைக் கொண்டு வந்து  வைக்கிறார்களாம்.  இப்ப நாம் பார்த்தவைகள் ஒரு நாலஞ்சு வகைகள்.







முட்டை, புழு, கூட்டுப்புழு , பட்டாம்பூச்சி என்ற நாலடுக்கு பரிணாமம் எப்படி ஆகுதுன்னு விளக்கப்படங்களும் தகவல்களுமாக் கொட்டிக்கிடக்கு. வேடிக்கையோடு கொஞ்சம் கல்வி அறிவும் கிடைச்சுருது!  ப்யூப்பாக்கள்  (Pupae)தொங்குறதைச் சட்னு பார்த்தால்  ஃபேஷன் ஜூவல்லரிகடைகளில் தொங்கவிட்டுருக்கும்  ஆட்டுக்கம்மல்கள் ( ட்ராப்ஸ்க்கு  சின்னக்குழந்தையா இருந்தபோது மகள் வச்ச பெயர்) நினைவுக்கு வருது:-)



Gerbera மலர்களையே பட்டாம்பூச்சி டிஸைனில்  அடுக்கி வச்சுருக்காங்க. எப்படி வாடாம இருக்குன்னு  பார்த்தால்  ஒவ்வொன்னும் தனியா தண்ணீரில் நிக்குது. உண்மையில் இவை சூரியகாந்திக் குடும்பத்தைச் சேர்ந்த ரகம்தான்.

T3 டெர்மினலில்  எப்பவுமெ கூட்டம் அவ்வளவா இல்லை.  'ஹோ'ன்னு பரந்து கிடக்கு.  Han Meilin   என்ற பிரபல சீன ஆர்ட்டிஸ்ட்டின்  மதர் அண்ட் சைல்ட் சிற்பங்கள்  (வெங்கலம்) வச்சுருக்காங்க இங்கே. இவர்தான்  பீய்ஜிங் ஒலிம்பிக்ஸ் mascot வடிவமைச்சவர்.

இன்னொன்னு சூரியகாந்தி தோட்டம். இது ரெண்டாவது டெர்மினலில் இருக்கு.  இங்கே எப்பவுமே கூட்டம் அதிகம்.  சுருக்கமாச் சொன்னா மூணாவது டெர்மினல் நியூஸி. ரெண்டாவது இந்தியா:-) அப்படி ஒரு ஃபீலிங்ஸ் வந்துரும். ஸ்கை ட்ரெய்ன் சர்வீஸ்கள்   இந்த மூணு டெர்மினல்களுக்கும் சுத்த வசதியா இருக்கு.  காலையில் அஞ்சு மணிக்கு  ஓட ஆரம்பிக்கும் ரயில்கள்  ராத்திரி ரெண்டரைவரை ஓடிக்கிட்டேதான் இருக்குதுகள்.



போனபதிவில் சொன்ன அம்பாஸிடர் லவுஞ்சுக்குப் பக்கத்தில்தான் சூரியகாந்தித் தோட்டம். பெரிய பெரியவட்டத் தொட்டிகளில்  வளர்ந்து நின்னு சிரிக்குது பூக்கள். மொட்டைமாடி என்பதால்  கொஞ்சநேரம் ஓய்வா விளக்கு மேலே (!)உக்கார்ந்து இயற்கைக் காற்றை சுவாசிக்கலாம்.   அமைதியான அலங்கார விளக்குகள் இருப்பதால் இரவு நேரத்திலும்   ரிலாக்ஸ் செய்ய முடியுது.  இவ்வளவு பிஸியான ஏர்ப்போர்ட்டில் இருக்கோம் என்பதே  மறந்து போகுது  கண்ணாடித் தடுப்பு மூலம் எட்டிப்பார்க்கும்வரை:-)

பயணிகள் மனதைக் கவரும் வண்ணம் எல்லாம் பார்த்துப்பார்த்து  வடிவமைச்சு இருக்கும் அழகைப் பாராட்டத்தான் வேணும். எழுபதாயிரம் சதுர அடிகள் அளவில் ஷாப்பிங் ஏரியா.  பொதுவா எல்லா விமானநிலையங்களிலும் இருப்பது போல் 'தீ பிடிச்ச விலை'  என்றாலும் நாம் என்ன வாங்கவா போறோமுன்னு சும்மா விண்டோ ஷாப்பிங் செய்வதுதான். ஆனால் பொருட்கள் தரமானவைகளா இருக்கு என்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேணும்.

நிறைய இடங்களில்   வலை மேய்ஞ்சுக்க ஏராளமான கணினிகளும், குழந்தைகளுக்கு வீடியோ கேம்ஸ், கார்ட்டூன்ஸ் ன்னு வசதிகளும் இருக்கைகளுமா இருக்கு. ஜங்கிள் ஜிம் கூட ஒன்னு பார்த்தேன். நம்முடைய சொந்த மடிக்கணினின்னா  இன்னும் சௌகரியம். இலவசமா  வலையில் மேயலாம்.  நெட் கனெக்‌ஷன் ஃப்ரீ.

எதுவும் வேணாமுன்னா.... ச்சும்மாவே  சுத்திவரலாம்.  அஞ்சு கிலோமீட்டர் நடைப்பயிற்சி கிடைச்சுரும். ஷாப்பிங் ஏரியா தவிர்த்து  விமானம் ஏறும் கேட்டுகளுக்குப்போக ட்ராவலேட்டர்ஸ் ஏராளம். அதுலே  ட்ராவல் பண்ணிக்கிட்டேகூட பொழுது போக்கலாம்.

விமானநிலையத்துலேயே உக்கார்ந்து போரடிக்குது. போதும் வேடிக்கைன்னு நினைச்சால்  சிங்கப்பூரை ரெண்டு மணி நேரம் இலவசமாச் சுத்திப்பார்க்கும் ஏற்பாடு ஒன்னும் செஞ்சுருக்காங்க  இங்கே.  தினமும் நாலு முறை பகல் பொழுதிலும் ரெண்டு முறை .இரவு நேரத்திலும்  டூர்கள் உண்டு. இதுக்கு பதிவு செஞ்சுக்க  தனி கவுன்ட்டர் வச்சுருக்காங்க. ஒரே ஒரு கண்டிஷன்  உங்களுக்கு அடுத்த ப்ளேன் பிடிக்க குறைஞ்சது 5 மணி நேரம் இருக்கணும்.

ரெண்டு மணி நேரம் சுத்திட்டு வரலாம்.  ஹெரிடேஜ் டூர்னு முக்கிய இடங்களைக் காமிச்சுட்டு, திரும்ப ஏர்ப்போர்ட்டுக்குக் கொண்டு வந்து விட்டுடறாங்க. ஹெரிடேஜுன்னதும்  மெர்லயன் நினைவுக்கு வருது. போனவருசம் அதுக்கு  வயசு 40! ஸ்பெஷல் கொண்டாட்டங்கள் நடக்குது!




முதலாம் டெர்மினலில் ஒரு  காக்டெஸ் கார்டனும், ஹெலிகோனியா கார்டனும் வச்சுருக்காங்க. இன்னும்  அவைகளை நான் பார்க்கலை.  காக்டெஸ்ஸில் நூறு வகை இருக்காம் அங்கே. அடுத்தமுறை அதைக் கண்டுக்கணும் என்பது இப்போதைய ப்ளான்.

தனி உலகமா இருக்கும் இடங்கள்ன்னு நான் எப்பவும் நினைச்சு அதிசயப்படுவது  விமானநிலையங்களும், மருத்துவ மனைகளும்தான்.  ரெண்டு இடங்களிலும் ஒரு எதிர்பார்ப்போடுதான் இருப்போம். புது அனுபவங்கள் கிடைக்கும். மருத்துவ மனைகளுக்கும் நோயாளியாப் போககூடாது. பார்வையாளராப் போக வேணும் கேட்டோ!

எங்க நேரம் வந்ததும் விமானத்துக்குள்ளே   பத்து மணி நேரம் அடைஞ்சு கிடந்து ஊர் வந்து சேர்ந்தோம்.  நம்ம சென்னை, சிங்கைப்பயணம் இனிதே முடிஞ்சது. அடுத்து  எல்லாம் வழக்கம்போலே!


கூடவந்த அனைத்து நண்பர்களுக்கும் வாசகப்பெருமக்களுக்கும் மனம் கனிந்த நன்றிகள்.



பயணம் செய்வது உடலுக்கும் உள்ளத்துக்கும் நல்லது. நெடுந்தூரப் பயணமா இருக்கணும் என்ற அவசியம் இல்லை. பக்கத்து ஊருக்குக்கூடப் போய்வரலாம். ஆனால் அங்கே இருக்கும் புராதனச்சின்னங்களையோ, மற்ற இயற்கைக் காட்சிகளையோ கண்ணையும் மனசையும் திறந்து வச்சுப் பார்த்து அனுபவிக்கணும்.

ஆதலினால் பயணம் செய்வீர்!




டென் கமாண்ட்மெண்ட்ஸ்!

$
0
0
நான் நினைச்சுக்கூடப்பார்க்கலை எனக்கொரு பத்துக் கட்டளைகள் கிடைக்குமுன்னு!! சூரியன் எட்டிப் பார்க்கிறான். வீணாக்கவேணாமுன்னு அகில உலக அன்னையர் தின கொண்டாட்டத்தின் ஒரு பகுதியா இன்னிக்கு மார்கெட் போயிருந்தோம். பகல் சமையலுக்கு வீட்டில்  விடுமுறை.  அப்பாவும் மகளுமா என்னை வெளியில் சாப்பிடக்கூப்பிட்டுப் போறேன்னு சொல்லி இருந்தாங்க.

ஒரு  இடத்தில்   succulents வகை Echeveria  செடி ஒன்னு கிடைச்சது. இது மார்கெட் என்பதால்  பேரம் பேசலாம்.  எட்டை ஆறுக்குக் கேட்டு பிறகு ஏழுக்கு முடிவாச்சு:-)  ரொம்பவே ஆரோக்கியமா இருக்கு செடி. அதை  வச்சுருக்கும்  பாட் கூட  க்ளேஸ்ட் வகை. அதிலும் காக்டெஸ் படம் போட்டுருக்கு. ஆனால் பளிச்ன்னு இல்லை:-(

சட்னு பார்த்தால்ப்ளாஸ்டிக் செடி போலவே இருக்கு.  ஒரு இதழ்  கொஞ்சம் உடைஞ்சுருந்ததால் ரியல் என்ற உண்மை புரிஞ்சது.  ரொம்பவே திக்கான இதழ்கள் என்பதால் கவனமாக் கொண்டு போகணும். ஸ்நாப் ஆகிரும் அபாயம் இருக்கு. இடுப்பிலே வச்சுக்கிட்டேன்.


இன்னொரு இடத்துலே ஒரு ப்ரேயர் ப்ளாண்ட் கிடைச்சது.  இதுக்கு இன்னொரு பெயர் டென் கமாண்ட்மெண்ட்ஸ்!!!  பத்து சொல்லி எட்டு:-)  இதன் இலைகள்  இரவில்  கைகள் கூப்பிக் கும்பிடுவதுபோல் ஆகுமாம். ஒளி குறைவால் இப்படி ஏற்படுமுன்னு அப்புறம் வலையில் பார்த்துத் தெரிஞ்சுக்கிட்டேன்.

எப்படிக் கும்பிடுதுன்னு சிலர் யூ ட்யூபில் போட்டுருக்காங்க.



வட அமெரிக்காவைச் சேர்ந்ததாம் இது.  இலைகளில் பட்டை பட்டையா  இலை போல ஒரு டிஸைன். முக்கால் வாசிகளில் பத்து பட்டை. இதுதான் டென் கமாண்ட்மெண்ட்ஸ் போல!  காலத்துக்கேற்றபடி இது  14, 16 கமாண்ட்மெண்ட்ஸாகவும் வந்துருக்கு. இதன் தாவரப் பெயர் Marantaceae. நிறைய வகைகள் உண்டு. சின்னதா பூவும் வரும். ஆனால் அதுக்கு ஆயுள் கம்மி.



மதர்ஸ் டே கிஃப்ட் போதுமுன்னு  வீட்டிலே கொண்டு வந்து வச்சேன்.  மகளும் வீடு வந்தாள். புதுசா வீட்டுலே எதாவது வந்தால் அது என்னன்னு தெரிஞ்சுக்காட்டி ரஜ்ஜுவுக்கு தலை வெடிச்சுடும். ஆராய்ஞ்சு பார்த்துட்டு அடச்சீன்னான்:-))))



மணி பனிரெண்டே முக்கால். சாப்பிடக் கிளம்பினோம்.  போற இடம் வேற புதுசு. தேடணும்.

இருக்கைக்கு  புக் பண்ண  ஃபோன் செஞ்சப்ப காலை 11.30 இடம் இருக்குன்னாங்க.  ஆனா.... நமக்கு வயித்துலே இடம் இருக்கணுமில்லையா?  ரெண்டுங்கெட்டான் நேரமா இருக்கேன்னு வேற டைம் கொடுங்கன்னால் ஒன்னே கால்  இருக்குன்னாங்க.  ரெண்டரை வரை நமக்கான நேரம்.

இது ஒரு பஃபே ரெஸ்ட்டாரண்ட். எப்படியும் நமக்கு  எதாவது கிடைச்சுருமுன்னு நம்பிக்கை.  ரெட்வுட் ஹொட்டேலின்  ஒரு பகுதியா Sequoia 88 என்ற பெயரில் நடக்குது.  இந்தப்பெயர் என்னன்னு கொஞ்சூண்டுஆராய்ஞ்சதில்  Sequoyah (1767–1843), inventor of the Cherokee syllabary என்று  ஒரு தகவல்.  ஓக்கே... ஒரு சரித்திரத்தோடு தொடர்பு ஏற்பட்டுப்போச்சு நமக்கு:-)


இன்னொரு பொருள் என்று பார்த்தால்  செக்கோயான்னு ஒரு வகை மரங்கள் இருக்காம். சைப்ரஸ் குடும்பத்தைச் சேர்ந்தவை. இதுக்குப் பொதுவான பெயர்  coast redwood, California redwood, and giant redwood. ஓக்கே ஓக்கே ஓக்கே...... ரெட்வுட் ஹொட்டேல் என்ற பெயர்க்காரணமும், செக்கோயா ரெஸ்ட்டாரண்ட் பெயர்க் காரணமும் புரிஞ்சே போச்:-))))

இந்த ரெட்வுட் ஹொட்டேல் எங்கூரின் மிகப்பழைய ஹொட்டேல்களில் ஒன்னு. வயசு நூத்துக்கும் மேலே.

ஒன்னு பத்துக்குப் போய்ச் சேர்ந்தோம்.  கவுண்ட்டர் முன்னால் பெரிய க்யூ!  கையிலே காசு வாயிலே தோசை என்பது இவுங்க பாலிஸி! மதர்ஸ் டே ன்னு கூட்டம் அம்முது.  வரிசையில் நின்னு பணம் கட்டிட்டு வந்தார் கோபால். நாங்கள்  உள்ளே போனதும் உக்காரவைக்கப்பட்டோம். இதுக்கே  நேரமாகிருச்சு. 30 நிமிச  டிலே:(

கிவி ஃபேர், ஏஷியன்  டிஷ்ஷஸ், ஹாட் வெஜ்ஜீஸ், ஸூப்,  ஸாலட் பார் டிஸ்ஸர்ட்ஸ் இப்படி ஆறு வகையிலே  ஏராளமான ஐட்டம்ஸ் இருக்கு. ஒருபட்டர் சிக்கன்கூட கண்ணில் பட்டது. பயங்கரக்கூட்டம்.  நாலுபேருக்கு மேல் உள்ள  அளவெல்லாம் இல்லை.  டைனிங் ஹால்முழுசும் ஃபுல் ஆகிருச்சு.  அடுத்த விங்கிலும் இன்னொரு டைனிங் ஏரியா இருக்கு. அங்கேயும் கூட்டமோ கூட்டம்.

ஃபேமிலி ரெஸ்ட்டாரண்ட் , விலை (யும்) மலிவு என்பதால் உள்ளூரில் ஓரளவு புகழ் பெற்று இருக்கு போல. புக்கிங் செய்யும்போது  ஒன்னேகால் மணி நேரம்  ஒருவருக்கு ஒதுக்குனா அதுக்குள்ளே சாப்பிட்டு முடிச்சுடணுமா?  எக்ஸாம் ஹாலைப்போல  ஸ்டாப் ஈட்டிங், புட் டௌன் யுவர்  ஃபோர்க்ன்னு சொல்வாங்களோ:-))))







சாப்பாடு நல்லாதான் இருந்துச்சு.  டிஸ்ஸர்ட்லே ஸ்வீட் ரைஸ் ஒன்னு,  அக்காரவடிசில் போல!!!

நாங்கள் கிளம்பும்போது ரெண்டே முக்கால். அப்பவும் இன்னொரு கூட்டம் சாப்புட வந்தாங்க. நாலு வரை லஞ்ச் டைம்  என்பதால் அவுங்களுக்கு(ம்) ஒன்னேகால் மணி நேரம்:-)


அங்கிருந்த வெள்ளைச்சிங்கம்!

அனைவருக்கும்  அன்னையர் தின வாழ்த்து(க்)கள்.






இதுக்கு என்ன செய்யலாம்???????

$
0
0

பதிவர்கள் பதிவு எழுதி வெளியிடுவதோடு நின்னுடாமல் வாசகர்களாகவும் இருக்கணுமுல்லையா? இந்த நியதியை அனுசரிச்சு  நேரம் கிடைக்கும் போதெல்லாம் தமிழ்மணத்துக்கு வந்து நாட்டு நடப்பைத் தெரிஞ்சுக்கிட்டுப் போவேன். நீங்களும் அப்படித்தானே?


இப்படி இருக்கும் ஒரு நாளில் தமிழரின் பெருமை-கம்போடியாவில் என்று ஒரு பதிவு கண்ணில் பட்டுச்சு. அடடா..... நாம் போய் வந்த இடமாச்சே. நாம் கோட்டை விட்ட விஷயம் எதாவது  இருக்குமோ? அவர்கள் பார்வையில்  என்னசொல்றாங்க?  என்ற ஆவலில் எட்டிப் பார்த்தேன். ரொம்ப ஒன்னும் இல்லை.  கொஞ்சம் படங்கள் இருந்தன. அதுக்காக ச்சும்மா விடமுடியுதா?  இப்படி ஒரு பின்னூட்டம் போட்டுட்டு வந்தேன்.


கருத்து:
 துளசி கோபால் சொன்னது…
http://thulasidhalam.blogspot.com/2010/08/2.html

http://thulasidhalam.blogspot.com/2010/08/3.html

இன்னும்கொஞ்சம் படங்களும் விவரங்களும் இந்தச்சுட்டிகளில்.
4/12/2013 1:49 AM


எங்கியோ பார்த்தமாதிரி இருக்கும் படங்களை இன்னொருமுறை பார்க்கலாமுன்னு மறுபடி அங்கே போனால்.... எல்லாம் நம்ம அங்கோர்வாட்  கம்போடியாப் பயணக் கட்டுரைகளில் இருந்தவை. முதலில் புரியலை.  டூரிஸ்ட் போற இடங்கள் ஒரே மாதிரிதானே இருக்கும்  என்ற நினைப்பு.  அதுக்காக நாம் படம் எடுத்தபோது இருந்த சுற்றுலாப் பயணிகள் அதே உடுப்பில் அதே இடத்தில் இன்னுமா நின்னுக்கிட்டு இருப்பாங்க?  இவைகளில் பல நம்ம கோபால் எடுத்தவை!!!

ஆனால் அதுலே படத்துலே வாட்டர்மார்க் ஒன்னு சேர்த்துருக்காங்க.
பதிவின்   பெயர் அந்திமாலை. உரிமையாளருக்கு  ஒரு மடல் அனுப்பினேன்.
அது இங்கே:

சொல்லவே இல்லை!!!!

வணக்கம். உங்கள் கம்போடியா பதிவில்  உள்ள படங்கள் எல்லாம் துளசிதளத்தில் வெளிவந்தவை.  அதுலே உங்க அடையாளம் வச்சு வெளியிட்டு இருக்கீங்க?

முன்னாலேயே கொஞ்சம் சொல்லி இருக்கலாமே?
​ என்னதான் பொதுவெளியில் இருக்கும் படம் என்றாலும் அனுமதி பெறாமல் உங்கள்  தளத்தில் சேர்ப்பது முறையா?​

என்றும் அன்புடன்,\
துளசி


மறுநாளே அங்கிருந்து ஒரு பதில் வந்துச்சு.

அன்பான சகோதரிக்கு வணக்கம்.

எங்கள் இணையத்தில் பல ஆக்கங்களை வேறு சில இணையத் தளங்களில் இருந்து எடுத்து வெளியிடுவது வழக்கம். இவ்வாறு செய்கையில் மேற்படி ஆக்கம் எந்த இணையத்தில் வெளியானது என்பதை ஆக்கத்தின் அடியில் 'நன்றி' எனும் இடத்தில் குறிப்பிடவது வழக்கம். சில இணையங்களில் வெளியாகும் ஆக்கங்களுக்கு இணைப்பு( link) மட்டுமே கொடுப்போம். அந்த ஆக்கங்களுக்கு மேற்படி இணையமே பொறுப்பாகும்.நீங்கள் குறிப்பிட்ட 'கம்போடியா' பற்றிய ஆக்கத்திற்கு 'தமிழ்க் கதிர்' எனும் இணையமே பொறுப்பாகும். உங்கள் புகைப் படங்களை அவர்கள் பயன்படுத்தியிருப்பதாக நீங்கள் கூறுகிறீர்கள். ஆனால் அவர்கள் மேற்படி புகைப் படங்களை www.dreamstime.com மற்றும் www.sangathie.com போன்ற இணையத் தளங்களில் இருந்து எடுத்துள்ளார்கள் என்பதைப் பார்த்தாலே தெரிகிறது.ஆகவே நீங்கள் தொடர்பு கொள்ள வேண்டியது மேற்படி இரண்டு இணையத் தளங்களும் ஆகும். அவர்களுடைய ஆக்கத்திற்கு நாங்கள் இணைப்பு மட்டுமே கொடுத்துள்ளோம். என்பதை நீங்கள் அறிவீர்கள். இந்த விடயத்தில் நாங்கள் தவறு ஏதும் செய்யவில்லை என்றே நம்புகிறேன். உங்களது மின்னஞ்சலை மேற்படி 'தமிழ்க் கதிர்' இணையத்திற்கு அனுப்ப முயற்சி செய்தோம். ஆனால் அவர்களின் மின்னஞ்சல் முகவரி எங்களுக்குக் கிடைக்கவில்லை. முடிந்தால் நீங்கள் முயற்சியுங்கள்.

"ஒன்றுபட்டு உயர்வோம்"

அன்புடன்
இ.சொ.லிங்கதாசன்
ஆசிரியர்
அந்திமாலை
www.anthimaalai.dk


நல்லபடியாத்தான் பதில் போட்டுருந்தார். அவர் சொன்ன சுட்டிகளில் போய்ப் பார்த்தால் ஒரு கோடியே எழுபது லட்சம் படங்கள் வச்சுருக்காங்களாம். வலையில் கிடைப்பதையெல்லாம் எடுத்து அவுங்க அடையாளம் போட்டு வச்சுக்குவாங்க போல!!!!


அந்திமாலைக்காரர், நம்ம தளத்தில் அவை வெளிவந்த (நான் பின்னூட்டத்தில்)அனுப்பின) சுட்டிகளில்  போய்ப் பார்த்திருப்பார் போல. இப்போ அவரது கம்போடியா இடுகையில்  இருந்த நம்ம படங்களைக் காணோம்!  தூக்கிட்டார் .


என்னுடைய மனக்குறை என்னன்னா..... பொதுவில் போட்ட படங்களை மற்றவர்கள் பயன்படுத்தும்போது  இன்னாரின் பதிவிலிருந்து எடுத்தவை என்றோ அல்லது குறைஞ்சபட்சம்  வலையில் கிடைச்சவை என்றஓரு வரி சொல்லலாம். நான் சிலசமயம் இப்படி எதாவது படம்  சேர்த்தால் 'சுட்டபடம்' என்றாவது  குறிப்பிடுவேன்.

இதை விட்டுட்டு படங்களை எடுத்ததுமில்லாமல்  அவர்களுடைய அடையாளம் போட்டு வைப்பது என்ன நியாயம்?

Over 17,000,000
Royalty Free Stock Photos
Our collection of images grows by the day. We have
the perfect images & illustrations to suit your specific needs!

Download Royalty-Free stock photos, illustrations & images
for as low as NZ$0.25 / image or free



இதுலே இப்படிவேற போட்டுக்கிட்டுஇருக்காங்க.


முதலில் இதைப்பற்றி எழுதணுமான்னு நினைச்சேன்தான்.  அப்போ நம்ம பதிவர்  எஸ். ஹமீது பதிவுத் திருட்டு குறித்து ஒரு இடுகை போட்டுருந்தார்.  இதேபோல  நானும் சிலமுறை பாதிக்கப்பட்டு இருக்கேன் என்றாலும்  பதிவில் உள்ள படத்திருட்டு சமாச்சாரத்தை சொல்லாமப்போக மனசு வரலை.

சம்பவம் நடந்து ஒரு மாசமாச்சு.  மனசு ஆறலை. அதான் உங்களிடம்கொட்டிட்டேன்.

இப்பச் சொல்லுங்க..... இதுக்கு என்ன செய்யலாம்?



ஆயிரம் உண்டிங்கு........

$
0
0

வேலியில் போற ஓணானை மடியில் எடுத்துக் கட்டிக்கிட்டால்..........  இப்படித்தான் இருக்கும்போல. தினம் குறைஞ்சபட்சம் 30 நிமிசம் நடக்கணுமுன்னு டாக்குட்டர் சொல்லி இருக்காங்க. இந்தக்குளிரில் எங்கேன்னு  நடக்கப்போறது? அதனால் மால் வாக்கிங் போறது உண்டு.  முந்தி இருந்த வீட்டுக்கு எதிர்ப்புறம் ஷாப்பிங் செண்டர் ஒன்னு இருந்ததால் எல்லாம் வசதி.  இதுவே என் கோவில். ஒவ்வொரு கடைக்கும் ஒவ்வொரு சந்நிதியின் பெயர்.  ஒரு  டிபார்ட்மெண்ட் ஸ்டோருக்கு   நவகிரக  சந்நிதின்னு பெயர் வச்சுருந்தேன். எல்லா சந்நிதியிலும் போய் சுற்றிவந்து ஸேவிச்சுக்கிட்டு வர  (விண்டோ ஷாப்பிங் உட்பட) 40 நிமிஷம் ஆகும்!  '

இந்த வீட்டுக்கு வந்ததும் நடை குறைஞ்சுதான் போச்சு.  இதுக்குள்ளே த வேர்ஹௌஸ் என்ற பெயரில் ஒரு பெரிய கடை வந்துருச்சு. ஷாப்பிங் மால்களில் லேட் நைட்ன்னு வாரம் ஒருநாள்தான் இரவு 9 வரை திறந்திருக்கு. ஆனால் இங்கே வாரம் ஏழுநாள் லேட் நைட் தான். கோபால் ஆஃபீஸில் இருந்து வந்ததும் வாக் போக வேர்ஹௌஸ் போவோம்.


இங்கே வழக்கமான ஸேல் ஐட்டங்கள் இல்லாம ஏற்கெனவே ஸேலில் இருந்து விற்கப்படாமல் மீந்து போன  சமாச்சாரங்களை  ஃபர்தர் டிஸ்கவுண்ட்ன்னு  நாலைஞ்சு Bபின்களில் போட்டு வைப்பாங்க. ஆரம்பத்தில் 10க்கு விற்ற பொருள் 7 ஆகி அப்புறம்  5, 3ன்னு  இறங்கி வந்துக்கிட்டே இருக்கும். நானும் பார்க்கிறேன் 100% டிஸ்கவுண்ட் மட்டும் வரவே மாட்டேங்குது:(

இந்த ஸேல் Bபின் சண்டிகேஸ்வரர் சந்நிதி(மாதிரி) கடைக்கு வந்தேன்னு  அங்கே போய் ஆஜர் கொடுக்கலைன்னா சரிப்படாது எனக்கு:-)

இப்படியாப்பட்ட ஒரு நாளில்  அங்கே Jigsaaw Puzzle item   ஏழெட்டு கிடந்துச்சு. எனக்கு நேரம் சரியில்லைன்னு அப்போ தெரியாது. கையில் எடுத்துப் பார்த்தேன்.  ஒவ்வொன்னும் ஒரு டிஸைன் என்றாலும் மனசை இழுத்தது ஒரு மயில்! நம் தேசியப்பறவை! விட முடியுதா?  அதுவும்ஸேலில் கிடக்கு.  வாங்கும்போதே கோபால் அஸ்து போடப்பார்த்தார். மயில் கொள்ளை அழகுன்னேன். ஆயிரம் துண்டுகள். அம்மாடியோ!!  ஆயிரமா?


ஏகப்பட்டது பண்ண அனுபவம் இருக்குன்னு ஒரு மெத்தனம். எங்கே வச்சுப் ப்ண்ணன்ற யோசனையில்  ரெண்டு வாரம்போச்சு.  நல்லதாஒரு பலகையை கார்டன் ஷெட்டில் இருந்து தேடி எடுத்துச் சுத்தம் பண்ணிக் கொடுத்தார் கோபால். எல்லாம் தன்னைப்பிடுங்காமல் இருந்தால் சரி என்ற எண்ணம்தான்.  ரெண்டு நாற்காலியின் மேல் வச்சு சரியா இருக்குன்னுட்டார்.


அட்டைப் பெட்டியைப் பிரிச்சேன். உள்ளே ஆயிரம் துண்டுகள் அடங்கிய பொதி! குனிஞ்சு குனிஞ்சு அடுக்க முடியுமா?  உயரக்குறைவா இருக்கே:(  அடுக்கி முடிச்சதும் அளவு  29 X 23 அங்குல அளவு வருமாம். அதனால் பலகையை அப்படியே டைனிங் டேபிளுக்கு மாத்தினேன்.  இந்த வேலை முடியும் வரை  சாப்பாடு துளசிவிலாஸ் கையேந்தி பவனில்தான்.

முதலில்  ஓரப்பகுதிகளைத் தனியாப் பிரிச்சுக்கணும். (அனுபவம்) செஞ்சேன். அப்புறம் மீதி இருப்பவைகளை  நிறப்ரகாரம் பச்சை, ப்ரவுண், நீலம்னு பிரிச்சு, அப்புறம்  அதுலேயே  கரும்பச்சை இளம்பச்சை, கடும் நீலம், இளநீலம் இப்படி வகைகளைப்பிரிச்சு வச்சுக்கவே  ஒன்னரை நாளாச்சு.

முதலில் பார்டர்களைப் போட்டுட்டால் மத்ததெல்லாம் ஜுஜுபி இல்லையோ!!!   முக்கி முனகி ஒரு பக்க பார்டர் சரியா வந்துருக்கு(அப்படீன்னு நினைக்கிறேன்!) நடுவிலே பார்த்தால்  எந்தத் துண்டைக் கையிலெடுத்தாலும்  ரொம்பத் தெரிஞ்சமாதிரி இருக்கே தவிர  ஒன்னும் சரியா பொருத்த முடியலை.  மயிலை உத்து உத்துப்பார்த்து கண்வலியும் தலைவலியும் மிச்சம். அப்படியும்  ஒரு மாதிரி தப்பும் தவறுமா மற்ற மூணு பக்க பார்டர்களை அமைக்கப் போராடிக்கிட்டே இருக்கேன், இன்றுவரை.


மயிலின் தலைப்பகுதி கொஞ்சம் தனித்துவமாத் தெரிஞ்சது . அதை அடுக்க ஆரம்பிச்சு ஓரளவு வெற்றி!


மகள் இந்த Puzzles செய்வதில் கெட்டிக்காரி. வீட்டுக்கு வரும்போதெல்லாம் ஹெல்ப் மீ  ஹெல்ப் மீன்னு வேண்டுவேன்.  கிட்டே வந்து பத்து நிமிசம் கண்கொட்டாமல் பார்த்துட்டு, இட்ஸ் டூ காம்ப்ளிகேட்டட் என்று  திருவாய் மலர்ந்தாள். உடனே அப்பா.....  'நான் அப்பவே சொன்னேன் ஆயிரம் வேணாம். நூறு இருந்தாப்பரவாயில்லைன்னு ...... கேக்கலையே...... கேக்கலையே....':(   இன்னும் ஒரு அஞ்சு நிமிசம்  பார்த்துக்கிட்டே இருந்து  நான் போட்ட பார்டரில்  இருந்து நாலைஞ்சு துண்டுகளை எடுத்துட்டு வேற நாலைஞ்சை  வச்சு நிரப்பினாள். அட!  இப்போ சரியா இருக்கே!

அதுக்குப்பிறகு  வீட்டு வந்தாலும் இந்த மேஜைக்கு எட்டியே  உக்கார்ந்துட்டுப் போறாள்.
 பார்டருக்கு ரெண்டு டிஸைன் மாறிமாறி இடம் பிடிக்குதுன்னா... நடுவில் உள்ள அனைத்துக்கும் ஒரேமாதிரிதான்:( மெஷீன் வெட்டிப் போட்டுருக்கும்!


வலையில் இருக்கு வழின்னு  மேய்ஞ்சதில் ரெண்டு இடுகைகள் கிடைத்தன, முதலாவதைத் திறந்தேன். அதுலே போட்டுருப்பது ரொம்பச்சரி.

முதலில் அட்டைப் பொட்டியைத் திறந்து உள்ளே இருக்கும் பொதியை எடுத்து வெளியில் வைக்கணும். அப்புறம் கன்னத்துலே பளார் பளார்ன்னு  ரெண்டு அறை கொடுத்துக்கணும். நம்ம கன்னத்துலேயேதான்!  முதலாவது  இப்படிக் குட்டிக்குட்டியா ஆயிரம் துண்டுகளை வாங்குனதுக்கு. அடுத்த அறை  இந்த ஆயிரத்தைப் பார்த்த அதிர்ச்சியில் இருந்து  முழிச்சுக்க.  வெள்ளைக்காரப் பதிவர் என்பதால் நாசுக்கா கன்னத்துலே அறை என்று சொல்லிட்டார். உண்மையில்  இது நம் காலில் இருப்பதைக் கழட்டி நாமே நம்மை  அடிச்சுக்கவேண்டிய வகை:-)


அதிர்ச்சி விலகுனதும் பொதியைத் திரும்ப அட்டைப்பொட்டிக்குள்ளே வச்சு மூடி  கண்காணாத ஒரு இடத்துலே எடுத்து வச்சுரணும்.  ஸ்ப்ரிங் க்ளீனிங் சமயம் இது கண்ணில் படும் வரை. இந்தப் பதிவருக்கு  ஆறு வருசம் கழிச்சுக் கண்ணில் பட்டதாம்.  வேலை போய்விட்ட ஒரு நன்னாளில் அழுது முடிச்சுட்டு, பார்க்காம போட்டு இருக்கும் டிவிடிகள், வாசிக்காமல் விட்டுவச்ச புத்தகங்கள்  எல்லாம்  பார்த்து,வாசிச்சுத் தீர்ந்த ஒரு நன்னாளில் வீட்டையாவது துடைச்சுச் சுத்தப்படுத்தலாமுன்னு கிளம்புனப்போ கண்ணில் பட்டுருக்கு. இப்பதான் வேலை வெட்டி இல்லையேன்னு அதை மறுபடி பிரிச்சு வச்சு எத்தனையோ போராட்டங்களுக்குப் பிறகு  ஒரு 200 துண்டுகளை அடுக்கிட்டார். இதுக்குள்ளே அட்டைப் பொட்டியில் இருக்கும் படத்தை உத்துப் பார்த்துப்பார்த்து மனசுலே அப்படியே பதிஞ்சு போச்சு. கொஞ்சம் ஷேப் வர ஆரம்பிச்சதும்  மனசுலே ஒரு உற்சாகம் வந்து மெள்ள மெள்ள அடுக்கி முடிச்சே முடிச்சுட்டார். அப்பதான் தெரியுது இதுலே ஒரு துண்டு மிஸ்ஸிங்ன்னு! போகட்டும் போ 999 துண்டு Puzzle!


இந்தமாதிரி விளையாட்டு விளையாடும் ஆட்கள் மனம் சோர்ந்து போகாமல் இருந்தால் எப்படியும் ஒரு அஞ்சு முதல் எட்டு வருசத்துக்குள்ளே விளையாடி முடிச்சுடலாமுன்னு கடைசியில் டிப்ஸ் வேற கொடுத்துருக்கார்!


இன்னொருத்தர்  ஆறே மணி நேரத்தில் செஞ்சு முடிச்சுடலாமுன்னு சொல்லி முதலில் பார்டரை அடுக்கிட்டால் மற்றதெல்லாம்  சுலபமுன்னு அஸால்ட்டாச்  சொல்லிப்போயிருக்கார்.  ஊஹூம்.... இது .... இப்படித்தானே  நானும் ஆரம்பிச்சேன். அப்புறம் அந்த ஆறு மணி நேரம்.... ஒரேதா ஆறு மணி நிக்க நம்மாலே ஆகாது. ஏன் ? உக்கார்ந்தா துண்டுகளை அடுக்க  எப்படி பலகை முழுசையும் பருந்துப்பார்வை பார்ப்பது?


நானோ ரெண்டுங்கெட்டானாக் கிடக்கேன்.  இதுக்குன்னே உக்காந்து யோசிச்சு ஒரு ஐடியாக் 'கண்டு பிடிச்சேன்'!!  பொதுவாப்பார்த்தால் எல்லாமே கண்ணுக்குப் புலப்பட்டு குழம்பிப்போயிருதுல்லே?  சர்ஜரி நடக்கும்போது  எந்தப்பகுதியில் வெட்டணுமோ அது மட்டும் தெரிவது போல ஜன்னல் வச்ச துணியை மேலே போர்த்திவிடறாங்க பாருங்க..... அதே தான்:-)

ஒரு அட்டையில்  சின்னதா ஜன்னல் வெட்டிக்கிட்டு  அதை அட்டைப்பொட்டியில் இருக்கும் டிசைனில்  கொஞ்சம் கொஞ்சமா நகர்த்திவச்சு கட்டத்துக்குள் இருக்கும் பகுதிகளை மட்டும் அடுக்குவது. இது எப்படி இருக்கு? வொர்கவுட் ஆகுமா? necessity is the mother of invention என்று சொன்னது சும்மானாச்சுக்குமில்லே கேட்டோ:-)

இப்படியெல்லாம் 'சிந்திச்சு  மூளை கலங்கிக் கிடக்கும்போது, 'அங்கென்னவோ ஆடுதுன்னு' நம்ம ரஜ்ஜு மேசைமேல் தாவிக்குதிச்சு நோட்டம் விடறான்.  ஐயோ.... இதுவரை அடுக்குனதைக் கலைச்சுடப்போறானேன்னு கலங்கினேன். ஆனால்.... சும்மாச்சொல்லக்கூடாது  மெத்து மெத்துனு நோகாம அடி எடுத்து வைக்கிறான் ,செல்லம்!




ஆரம்பிச்சு மூணு வாரம் ஆன நிலையில் இப்படி இருக்கு. எப்படியும்  ஒரு 257 வாரத்தில் முடிச்சுருவேன்.  இதுக்காக எட்டு வருசமெல்லாம் டூ மச்:-)

நம்ம கை அசைஞ்சால் அவனுக்குத் தாங்கலை கேட்டோ.... ஓரு தாவல். லேப்டாப் மேலே வந்து உக்காரும்போது..... ஸ்க்ரீனிலுள்ளது அப்படியே இருக்குன்னா பாருங்க!!!!


தலைவலி நீங்கிப் புத்துணர்ச்சியுடன் துண்டுகள் அடுக்க அப்பப்போ ஒரு காஃபியோ டீயோ குடிச்சுக்கட்டுமுன்னு  கோபாலும் மகளுமா  ரெண்டு மக்
வாங்கிக் கொடுத்துருக்காங்க மதர்ஸ் டே கிஃப்ட்டாக !


தோழி ஒருநாள் வந்துருந்தாங்க.  மேஜையில் இருக்கும் புதிர்க்கடையைப் பார்த்துட்டு  ஒரு நிமிஷம் ஆடாம  அசையாமநின்னு யோசிச்சவுங்க கேட்டது.........  'இதை அடுக்கிமுடிச்சதும்  என்ன செய்வீங்க?'


ஙே............





இப்படி புல்லு முளைச்சுப் போச்சுதே....:(

$
0
0
க்ரிக்கெட்  ரசிகர்களுக்கு  லங்காஸ்டர் பார்க்  என்ற பெயர் ரொம்பவே பரிச்சயமானதா இருக்கும் ஒரு காலத்துலே! பெஞ்சமின் லங்காஸ்டர் என்பவரிடமிருந்து  பத்து ஏக்கருக்கும் கொஞ்சம் கூடுதலான  ஒரு நிலத்தை 1882 வது வருசம் வாங்குச்சு,  ரெண்டே வயசான  க்ரிக்கெட் அண்ட் அதெலெடிக்ஸ் ஸ்போர்ட்ஸ்  கம்பெனி. நிலச்சொந்தக்காரரரை மறக்காம அவர் பெயரையே வச்சுக்கிட்டாங்க  லங்காஸ்டர் பார்க் என்று.

இது நடந்து 29 வருசம் கழிச்சு  நீங்க ஒரு பக்கம் ஆடுங்க, நாங்க ஒரு பக்கம் ஆடிக்கறோமுன்னு பங்குதாரராச் சேர்ந்துச்சு கேண்டர்பரி ரக்பி  யூனியன்.  அரசாங்கமும்  சிலபல வருசங்கள் கழிச்சு  பார்லிமெண்டுலே புது விதி ஒன்னு போட்டு விக்டரி பார்க் போர்டு இதைப் பராமரிக்குமுன்னு சொல்லி தாராள மனப்பான்மையைக் காமிச்சது.  நாட்டுக்காக ஆடறாங்களே!!!

விளையாட்டு மைதானத்தை பராமரிப்பது லேசுப்பட்ட விஷயமா?  புல்லுகூட  இவுங்க சொல்றாப்படி முளைக்கணுமே!   பார்வையாளர்கள் ஆட்டம் பார்க்க வரும்போது  மொய்க்கும் கூட்டத்துக்கு வேண்டிய வசதிகள் எல்லாம் தவறாமச் செஞ்சாங்க. எல்லாம்நல்லபடியாப் போய்க்கிட்டு இருந்துச்சு.

1989 வது வருசம் ஃபிப்ரவரி மாசம். இந்திய க்ரிக்கெட் டீமுலே குட்டியா ஒரு பையர் விளையாடப் புகுந்துருக்கார். முதல் இண்டர்நேஷனல் போட்டின்னு  இவர் விளையாடியது  பாகிஸ்தானில். இது என்ன பெரிய  வெளிநாடு?  இந்தியாவில் இருந்த ஒரு பகுதிதான். தனியாப் பிரிஞ்சு தனி நாடானதும் வெளிநாடு அந்தஸ்து கிடைச்சுருச்சு. சண்டிகரில் நாம் இருந்த சமயம் மூணு மாசத்துக்கொரு முறை பக்கத்து நாட்டு மக்கள் இங்கே வந்து கடை போட்டுருவாங்க. எல்லாம் மேற்கு பஞ்சாபா முந்தி இருந்ததுதானே?  அதனால்  இதை வெளிநாடுன்னு லேசுலே மனம் ஒத்துக்காது. எல்லாம் நம்மாட்கள்தான்.


அதுக்குப் பிறகு  வெளிநாட்டில் விளையாடப்போறேன்னு வந்தது  (நியூஸிக்கு. 1990 ன்னு நினைக்கிறேன். இல்லே 1991 ஆ?) மொத்த டீமுக்கும்  ஒரே  ஒரு குழந்தைப் பையன். டீமில் இருந்த  மற்ற எல்லாருமே தனிப்பிரியத்தோடுக் கவனிச்சுக்கிட்டாங்க. அப்பதான் நம்ம இந்திய நண்பர் ஒருத்தர்  தொலைபேசி, அவருடைய  மருமான் சந்திர சேகர்  நம்மூருக்கு க்ரிக்கெட் ஆட வரப்போறாருன்னும், கொஞ்சம்  அவரை நாம் சாப்பாட்டு விஷயத்தில் கவனிச்சுக்கணுமுன்னும்  சொல்லி இருந்தார்.  வெங்காய சாம்பாரும் உருளைக்கிழங்கு கறியும் பண்ண எனக்குத் தெரியாதான்னு  இருந்தேன்.


தெரிஞ்சவங்க, நண்பர்கள் வீட்டுக்கெல்லாம் அப்போ போய்வரவும் சாப்பிடவும் ஆட்டக்காரர்களுக்கு  எந்த ஒரு தடையும் இல்லாத காலம்.  அவுங்களும் நாட்டுக்காக மட்டுமே விளையாடுனாங்க.  காசுக்காக மேட்ச் ஃபிக்ஸ் செஞ்சுக்கும் காலம் வரப்போகுதுன்னு நாங்க கனவிலும் நினைக்கலை., அவுங்களும் நினைச்சே இருக்கமாட்டாங்க(ன்னு நம்பறேன்)

நியூஸி நாட்டு மதம் என்னன்னு கேட்டால் சுலபமா  ஸ்போர்ட்ஸ்ன்னு சொல்லிறலாம். அந்த அளவுக்கு விளையாட்டுப் பைத்தியங்கள்.  குளிர்காலத்துக்கு ரக்பி,கோடைகாலத்துக்கு  க்ரிக்கெட் என்று பாகம் பிரிச்சு வச்சுருக்காங்க.  நானும் ஒரு காலத்துலே க்ரிக்கெட் (அரை)பைத்தியமா இருந்துருக்கேன்.  இங்கே  வந்த புதுதில்,  ஆட்டக்காரர்கள்   எந்தவிதமான  க்ரீடமும் சூட்டிக்கொள்ளாமல்  சூப்பர்மார்கெட் உள்பட  எல்லா இடங்களிலும் சகஜமாய் மக்களோடு மக்களாக  இருப்பதைப் பார்த்து அதிசயிச்சு நின்னுருக்கேன்.  ஒவ்வொரு வருசமும் ஆட்ட சீஸன் தொடங்கும்போது  பள்ளிக்கூடங்களுக்கு அதிலும் முக்கியமா ஆரம்பப்பள்ளிக்கூடங்களுக்கு மொத்த குழுவே விஜயம் செய்யும்.


 இது போதாதுன்னு  நாட்டு மக்களுக்கு  நாங்களும் இருக்கோமுன்னு  காமிச்சுக்க  மால்களுக்கும் மற்ற ஷாப்பிங் செண்டர்களுக்கும்  விஜயம் செய்வாங்க.  என்னிக்கு, எங்கே, எப்போ என்றதெல்லாம்  உள்ளூர் ரேடியோவில் சொல்றதுதான். அப்படிப்பட்ட சமயத்தில்  நியூஸி குழுவினரின் ஆட்டோக்ராஃப் எல்லாம் மொத்தமா வாங்கிக்கலாம்.

இந்தியாவில் இருந்து ஆட வந்த குழுவில் கபில் இருக்காருன்னதும்  கட்டாயம் அவரைச் சந்திச்சுப்பேச (?) ஆவல்.  நம்மவருக்கோ.... சின்னப்பையரைப் பார்க்கும் ஆவல். அவரவர் மனம்போல் தரிசனம் கிடைச்சது.


மகள் அப்போ சின்னக் குழந்தை.  அவள் நியூஸி கலாச்சாரப்படி வளர்ந்து விளையாட்டே கதின்னு  இருந்தாள். ப்ரைமரி  ஸ்கூலிலேயே  ஆட்டம் ஆரம்பிச்சுரும்.  அப்புறம் அவள்  ஒருமுறை ஸ்கூல் ப்ராஜெக்டுக்காக  ஒரு ப்ரோஷர் தயாரிச்சபோது  சச்சின் டென்டுல்கரை மையமா வச்சுத்தான்  செஞ்சாள். அதுலே  அவர் கையெழுத்தையும் வாங்கிக்கிட்டு அப்போ அந்த டீமுக்குக் கேப்டனா இருந்த அஸாருத்தீனிடமும்  (சாட்சி?)கையெழுத்தை வாங்கிக்கிட்டாள்.  ரொம்ப நல்ல பெயர் அப்போ பள்ளியில் கிடைச்சது:-)














1998 வது வருசம்  ஜேட் சாஃப்ட்வேர் கார்பொரேஷன் லிமிட்டட் என்ற கம்பெனி  ஸ்டேடியத்துக்கு தங்கள் பெயரை வச்சுக்கணும் என்ற ஆர்வத்தில் ஒரு பெரிய தொகையைக் கொடுத்து  நேமிங் ரைட்ஸ் வாங்கிக்கிட்டு ஜேட் ஸ்டேடியம்  என்று தங்களை பிரபலப்படுத்திக்கிச்சு. காசேதான் கடவுளடா என்ற வழி தெரிஞ்சு போனதும் 2007 வது வருசம் ஏ எம் ஐ என்ற இன்ஸூரன்ஸ் கம்பெனி  இன்னும் கொஞ்சம் ரேட்டைக் கூட்டி  ஏ எம் ஐ ஸ்டேடியம் என்று பெயர் சூட்டியது.


ஸ்டேடியத்துக்கு வருமானத்தைப் பெருக்கும் வழியில் புதுப்புது ஐடியாக்கள் முளைச்சது.  கார்பொரேட் பாக்ஸஸ். பெரிய கம்பெனிகள் எல்லாம்  தங்களுக்குன்னு தனியா ,  பொதுவா இருக்கும் ஸ்டாண்டுகளுக்கு மேலே  உச்சாணிக்கொம்பில் அறைகளை  பணம்கட்டி  எடுத்துக்கிட்டதுகள்.  இதுலே கோபாலின்  கம்பெனியும் ஒன்னு என்பதால்  நமக்கும்  பல சமயங்களில்  கொம்புமேலே ஏறி உக்கார்ந்து ஆட்டத்தை  ரசிப்பதோடு மட்டுமில்லாமல்   நொறுக்குத்தீனிகள், பானங்கள், சாப்பாடு வகைகள் எல்லாம் ருசிச்சு ரசிப்பதோடு கொண்டாட்டம்தான்.


இதுக்கிடையில்  (வருசம் 2000 என்று நினைப்பு) மேட்ச் ஃபிக்ஸிங்  என்ற  ஒன்னு விளையாட்டுலகில் விளையாட ஆரம்பிச்சு  என் க்ரிக்கெட் ஆர்வத்தை 'ச்சீ' ன்னு ஒரேடியாப் போட்டுத் தள்ளிருச்சு. அன்னிக்கு ஆட்டம் பார்க்கும் ஆசையை விட்டவள் நான்.


ரேடியோவில்  கமெண்டரி மட்டும் கேட்டுக்கிட்டு தங்கள் வேலைவெட்டிகளை செஞ்சுக்கிட்டு இருந்த மக்கள்  தொலைக்காட்சியில் ஆட்டம் பார்க்கும் வசதி எல்லாம் வந்ததும் வேலைவெட்டியை எல்லாம் விட்டுட்டு  டிவி பொட்டி முன்னால் தவம் கிடக்க ஆரம்பிச்சுருந்தப்ப படிப்படியா வந்த பெயர் மாற்றங்களை ஒரு வேளை கவனிச்சு இருக்கலாம்.


ரெண்டேகால்   வருசங்களுக்கு முன்னால்  வந்த நிலநடுக்கம்  ஜேட் ஸ்டேடியத்தையும்  விட்டுவைக்கலை.  பிட்ச் எல்லாத்தையும் கொத்திப்போட்டு வச்சு liquefaction  என்ற மணல் ஊற்று விளையாட்டு ஆட ஆரம்பிச்சுருச்சு:(  மொத்த இடமும் பாழ்!  இனி பயன்படுத்தவே முடியாது என்ற நிலமை.  அதுக்காக ரக்பி விளையாடாமலும், பார்க்காமலும் இருக்க முடியுமா?   நகரம் சீராக இன்னும் எவ்ளோ நாள் செல்லுமுன்னு தெரியாத நிலை!   சிட்டிக் கார்பொரேஷனுடன்  சேர்ந்து தாற்காலிக ஏற்பாடா  ஒரு ஸ்டேடியம் அமைச்சாங்க ஏ எம் ஐ காரர்கள். இதன்  திறப்பு விழாபற்றி எல்லாம்  அப்பவே எழுதி இருக்கேன்.  ஆர்வமுள்ளவர்கள் இங்கே க்ளிக்கலாம்:-)


கடந்த ரெண்டு வாரமா  ஐபிஎல்  அநியாயங்களையும், அசிங்கங்களையும் பார்த்து ஊர் உலகமெல்லாம்  காறித் துப்பிக்கிட்டு இருக்கும் நிலையில்  எங்கூர் டிவி சேனல்கள்மட்டும் சும்மா இருக்குமா?   டிவியில்  இதைப்பற்றிச்  சொல்லும்போதெல்லாம்  நாட்டுக்காக விளையாடுன கூட்டம் இப்போ  காசுக்கா விளையாட ஆரம்பிச்சு  இப்படிக் கீழிறங்கிக் கிடக்கேன்னு  மனம் நினைப்பதை  நிறுத்த முடியலை:(

இந்திய நாட்டுலே தப்பித்தவறி ஏதாவது நல்லது நடந்தால்  அதைச் சட்டைசெய்யவே செய்யாத டிவி சேனல்களுக்கு  கெட்டது நடந்தால் கேக்  கிடைச்சாப்புலெதான்.  ஒரு வாரம் விடாமல் தில்லி சம்பவத்தைச் சொல்லிக்கிட்டு இருந்தாங்க. இப்ப இது......  உலகமெங்கும் ஊடக தர்மங்கள் இப்படித்தான் போல:(







எத்தனையோ  அருமையான  ஆட்டங்கள் நடந்த ஜேட் ஸ்டேடியம் மட்டுமா  இப்படிப்  புதைஞ்சு புல்லு முளைச்சுக் கிடக்கு?  நம் நாட்டோட மானமும்தான்:(







தோட்டநகரத்தில் மலர்த்திருவிழா

$
0
0
கார்டன் சிட்டி ஆஃப் நியூஸி என்ற பெத்த பெயர் இருக்கு நம்மூருக்கு! அதை நியாயப்படுத்தணுமுன்னு  சிட்டிக் கவுன்ஸில் ரொம்பவே மெனெக்கெடும். நாங்க மட்டும் சும்மா இருப்போமா.....  வீட்டுவீட்டுக்கு  சின்ன அளவிலாவது ஒரு தோட்டம் போட்டு வச்சுருவோம். எப்படியும்  நம்ம வீட்டு மனையில் 40% இடத்துலேதான் கட்டுமானம் இருக்கணும். மிச்சம் இருக்கும் 60% க்கு தோட்டம் என்பது  நகர சபையின் விதி.  தோட்டம் போடவோ, செடிகள் வைக்கவோ பராமரிக்கவோ முடியலைன்னா குறைஞ்சபட்சம் புல்லாவதுபோட்டு இருக்கணும்.  வெறும் புல்லுதானேன்னு  அலட்சியமாவும்  இருக்கமுடியாது. லான்  மெயின்டனன்ஸ் ஒன்னும் லேசுப்பட்டதில்லை. புல்லு வெட்டி முடிச்ச மறுநாளே மழை வந்து அடுத்த ரெண்டு வாரத்துக்குள்ளே வீசிவீசியா வளர்ந்து நிக்கும். இதே வேகத்துலே மற்ற பூச்செடிகள் வளரக்கூடாதோ?  ஊஹூம்.....





மவொரி மொழியில் கடவுள்  (ATUA) இங்கே!

வருசாவருசம்  கோடை முடியப்போகும்  கடைசி மாசத்தில் (ஃபிப்ரவரியில்) பூத்திருவிழா கொண்டாடுவது இங்கே  வழக்கம். நகரம் 'இருந்த' காலத்தில் (ஐயோ.... எப்படிச் சுத்தினாலும் பேச்சு இப்படி நகர அழிவில் வந்து நிக்குதே)  எங்க கதீட்ரலுக்கு உள்ளே நடைபாதையில் ஃப்ளோரல் கார்பெட், வெளியே சதுக்கம் முழுசும் மலர் அலங்காரங்கள், தொட்டடுத்து  இருக்கும் விக்டோரியா சதுக்கத்தில்  இன்னும் அமர்க்களமான அலங்காரங்கள், இதையொட்டியே ஓடும்  ஏவான் நதியில் (!)  மிதக்கும் பூ அலங்காரப் படகுகள் இப்படி ஒரே ஜாலியா  இருக்கும்.



நியூஸி நாட்டுக்குன்னே  வருசம் ஒரு முறை  சர்வதேச  மலர்க்கண்காட்சி Ellerslie International Flower Show ஒன்னு  நடந்துக்கிட்டு  இருந்துச்சு,  ஆக்லாந்து நகரிலே!  இங்கிலாந்துலே  வருசாவருசம் நடக்கும் Chelsea Flower Showதான் ரோல்மாடல். பொதுவா அங்கே ஒன்னு நடந்தால்  அதே போல ஒன்னு இங்கேயும் நடக்கணும் என்பது  எழுதப்படாத விதி!  நாங்க இன்னும் மாட்சிமை தாங்கிய மஹாராணியின் ஆட்சிக்குட்பட்ட நாடு என்பதுடன்  அதுவும் (இங்)லாந்து நாங்களும் (நியூஸி)லாந்து என்பதால் வந்த பாசப்பிணைப்பு!


1994 வது ஆண்டு முதல்  ஆக்லாந்து  நகரில் நடந்துக்கிட்டு இருந்ததை எப்படியாவது  பெயர்த்தெடுத்து  கிறைஸ்ட்சர்ச் நகரத்துக்குக் கொண்டு வந்துரணுமுன்னு  2007 வது வருசம் ஆட்சிக்கு வந்த எங்க ஊர்  நகரத் தந்தைக்கு  (மட்டுமே) பேராசை.  ஊரே தோட்டங்களும் மலர்களுமா நிறைஞ்சு இருந்த காரணத்தால்  ஊர் மக்களுக்கு  இது ஒன்னும் முக்கியமாப் படலை.


அங்கங்கே சில  விலங்குகள். நம்மாளு ஜோரா இருக்கார். போனவருசம் இவரைத்தேடி அலைஞ்சேன்.



சிட்டிக்கவுன்ஸில்  தேர்தல் முடிஞ்சு புது நகரத் தந்தை வந்ததும்  இருக்கற வேலையை எல்லாம் பின்னுக்குத் தள்ளிட்டு  Ellerslie International Flower Show வை இங்கே கடத்துவதை  கவனிச்சார்.  ஏலம் விடுவது போல எந்த நகரம்  ஏலத்தில் எடுக்குதோ அங்கே கண்காட்சி நடத்துவாங்க.  நியூஸியைப் பொறுத்தவரை  ஆக்லாந்துதான் மிகப்பெரிய நகரம். கூட் டமும் அதிகம். ஒரு மில்லியன் மக்கள்ஸ் இருக்காங்க.  நகர சபைக்கு வருமானம் கூடுதல்.  இவுங்களோடு போட்டிக்கு  நிக்கணுமான்னுத்தான் மற்ற எல்லா நகரங்களும் நினைக்கும்.  விழாவை முன்னிட்டு ஏராளமான சுற்றுலாப்பயணிகள் வருவாங்க(ளாம்)  எல்லோரும் தங்க வசதியான இடங்கள்,ஹொட்டேல்கள், மோட்டல்கள் எல்லாம்  வேணுமுல்லையா?


 வருசா வருசம் எதாவது ஒரு தீம் வச்சுக்குவாங்க நம்மூரில் கொலு வைக்கிறவங்க செய்வதைப்போல.  இந்த வருசம் 1830-1901,  1910. 1920, 1930 இப்படி  2000 வருசம் வரும் ஒரு நூற்றாண்டு காலக்கட்டத்தை நினைவுபடுத்தும் விதமாம்!

நம்ம மேயர்தான் கங்கணம் கட்டிக்கிட்டாரே......  ஏலத்தில்  மூணு  மில்லியன் டாலருக்கு  கண்காட்சி நடத்திக்கும்  உரிமையை  வாங்கிக்கிட்டார்.  யார்  வீட்டுக் காசுலே?  நாங்கள் எல்லோரும் கட்டும் வீட்டுவரிக் காசுலே!  இந்த ஷோ 14 மில்லியன் டாலர் மதிப்பு  வாய்ந்தது.  எக்கச்சக்கமான  சுற்றுலாப்பயணிகள் நம்மூருக்கு வருவாங்க .  இதனால் நம்மூர் வியாபாரம் பெருகும்.  நகரின் பொருளாதாரம் மேம்படும். போட்ட காசை  ஒன்னுரெண்டு வருசத்துலேயே எடுத்தறலாம்,  அப்படி இப்படின்னு  பேசினார். அரசியல்வியாதிகளுக்குப் பேசத்தெரியாதா? அதுவும் இவர் ரேடியோ ஹோஸ்ட்டா இருந்து பேசிப்பேசியே  நகர சபைத் தேர்தலில் போட்டியிட்டு ஜெயிச்சவர்.


இங்கே  எங்கூருலே மலர்க்கண்காட்சி நடந்த முதல் வருசம்(2009)  எழுபத்தியஞ்சாயிரம் பேர் பார்வையிட்டுருக்காங்க.  ரெண்டாவது வருசம்(2010) அம்பத்தியஞ்சாயிரம் பேர்கள்.  மூணாவது வருசம் (2011) நிலநடுக்கம் வந்து ஊரே அழிஞ்சுகிடந்த நிலையில் கண்காட்சி ஒரு கேடான்னு  கேன்ஸல் ஆகிருச்சு.   சமாளிச்சு  எழுந்தபின்  போனவருசம் (2012)  கண்காட்சியை நடத்துனாங்க. வந்த சனம் நாப்பத்தியஞ்சாயிரம்.   கழுதை தேய்ஞ்சு கட்டெறும்பா ஆகுதோ?


மக்கள் கூடுமிடத்துக்கு  அவசியமான  சில !  பொழுது போக்கு அம்சமும்  மற்றதும்!


அடடடா......  இதுவரைக்கும்  இதைப்போய்ப்  பார்க்கலையே.... இந்த வருசமாவது கட்டாயம் போகலாமுன்னு நினைச்சேன். அப்பத்தான் ஞாபகம் வந்துச்சு.... நாம் வீட்டுவரி  கட்டுறோமுல்லே.... அதுக்குண்டான ரஸீது மூணு மாசத்துக்கொருமுறை அனுப்பும்போது  மலர்க்கண்காட்சிக்கான தேதிவிவரமும்  வீட்டுவரிகட்டும் உள்ளூர்  மக்களுக்குக் கொஞ்சம் டிஸ்கவுண்ட்  விலையில்  கண்காட்சிக்கான டிக்கெட்  உண்டு என்ற விவரமும்  சேர்த்து அனுப்பறாங்களே என்பது.  வந்த லெட்டர் எங்கே போச்சோ? தேடிப்பார்க்கணும்.


தேடுனதில் ஒருவழியா ஆப்ட்டது.  வீட்டுவரி கட்டுபவர்களுக்கு  அனுமதிச்சீட்டு விலை  நபருக்கு  22$.  கண்காட்சி  நடக்கும் நாட்கள்  2013 மார்ச் 6 முதல் 10 வரை.  சரி.  அஞ்சு நாளில் ஒருநாள் போகலாம் .
எங்கூர் வருசாந்திர  ஃபெஸ்டிவல் ஆஃப் ஃப்ளவர்ஸ்  இந்த வருசம் கொஞ்சம் தாமதமாத்தான்  ஆரம்பிச்சது.  ஃபிப்ரவரி 16 முதல்  மார்ச் 4வரை  . வழக்கம்போல்  ரெண்டு வாரமும் ஒரு வீக் எண்டுமா  16 நாட்கள்.   கடந்த ரெண்டு வருசமா நம்மூர் பொட்டானிக் கார்டனில் நடக்குது. அதான் நகரமே இல்லாமப்போயிருச்சே:(

பீன்ஸ் செடிகளில் அலங்கார வளைவு :-)

திருவிழா பார்க்கப்போனபோது  ஹேக்ளிபார்க்கின் ஒரு பகுதியில் வரப்போகும் மலர்க்கண்காட்சிக்கான ஏற்பாடுகள் நடந்துக்கிட்டு இருப்பதைக் கவனிச்சேன்.  காட்சி வெளியே இருந்து ஒன்னுமே தெரியக்கூடாது.  கையிலே காசு கண்ணுலே காட்சின்னு , காசு கொடுத்து உள்ளே காலடி எடுத்து வச்சால்தான் கண்களுக்கு விருந்து.  போயிட்டுப்போகுது. நாம்தான் வரப்போறோமே அப்போ இதையும் பூத்திருவிழாவையும் சேர்த்தே ஒரு பதிவு எழுதலாமுன்னு  இருந்தேன்.  இருந்தேனா........


Labyrinth  with message for Christchurch people!

கோபால் ரொம்பவே பிஸியா இருப்பதால்  என்றைக்கு ஷோ போகலாமுன்னு  முடிவு செய்யக் கொஞ்சம் தாமதமாச்சு. எப்படியும் வீக் எண்டுலே இருப்பார்தானே?  சனிக்கிழமைக்கு டிக்கெட் வாங்கிக்கலாமுன்னு   ஃப்ளவர் ஷோ ஆன்லைனில் டிக்கெட் புக் பண்ணலாமுன்னா.... அதுக்குத் தனி சர்வீஸ் சார்ஜ்  கொடுக்கணுமுன்னு போட்டுருக்கு.  இந்த 22 கூட அதிகமுன்னு  முணங்கிக்கிட்டே, சிட்டிக்கவுன்ஸில் கிளை ஆஃபீஸ் ஒன்னு இங்கே பக்கத்துலேதானே இருக்கு  அதுலே நேரில் போய் டிக்கெட் வாங்கிட்டு எனக்கு சேதி சொல்லுங்கன்னு  இவர் பகல் சாப்பாட்டுக்கு வந்தப்பச் சொல்லி அனுப்பினேன்.

ஃபோன் வந்துச்சு.  டிக்கெட் விலை 35 டாலராம்.  நம்ம டிஸ்கவுண்டு கூப்பனை  அக்டோபர் /நவம்பரில்  பயன்படுத்தி இருக்கணுமாம்.  மார்ச் மாசம் நடக்கும் ஃப்ளவர் ஷோவுக்கு நாலைஞ்சு மாசத்துக்கு முன்னே புக் பண்ணனுமா?  நல்லா இருக்கே கதை?  இது ஏர்லைன்ஸ் டிக்கெட்டா என்ன?


என்ன, வாங்கிறவான்னு கேட்ட கோபாலுக்கு 'நோ' சொன்னேன்.  அஞ்சு டாலர் கார் பார்க்கிங் சார்ஜையும்  சேர்த்து  75 டாலர் என்பது அநியாயமா இருக்கே!  கார்டன் செண்டர் எதுக்காவது போனால்கூட விதவிதமான  பூக்களையும் செடிகளையும் பார்க்கலாம் என்றுள்ள ஊரில்....



CERA  (Christchurch Earthquake Recovery Authority)  இனிமேல் கொடுக்கும் காசுலே இப்படித்தான் வீடு கட்டிக்க முடியுமாம்!!!  ஆனாலும் அதுலே ஒரு பூனையை வச்சுக்குவோம்:-)

டிக்கெட்டு விவகாரம் என்னன்னு மறுநாள் அவுங்க  வெப்ஸைட்டில் போய்ப் பார்த்தால்  நாள் முழுதுவதும், அரைநாளுக்கு , மாலை  4 முதல் ஆறுவரை  இப்படி பல விதமா இருந்துச்சு.  நமக்குச் சுத்திப் பார்க்க ரெண்டு மணிநேரம் போதுமுன்னு  அதுக்கு எவ்ளோன்னு கேட்டால்  அதுக்கும் 35 தானாம்.  வேறவேற டைமிங் , ஆனால் எல்லாத்துக்கும் ஒரே சார்ஜ்!  இப்படி ஒரு கொள்ளையை நான் கேட்டதே இல்லை:(


அஞ்சாம் நாள் மாலை 6 மணிக்கு வெற்றிகரமாக  ஃப்ளவர் ஷோ நடந்து முடிஞ்சதுன்னும்  நாப்பத்தி நாலாயிரத்து  தொள்ளாயிரம் பேர் வருகை தந்தாங்கன்னும்  நியூஸ்.  44,902 என்று இருந்திருக்க வேண்டிய அது,  ஜஸ்ட் மிஸ்டு:-)


வாவா என்று கூப்பிடும் ரோஸ் கார்டன்.


சிட்டிக்கவுன்ஸில் ஒன்னும் பணம் பண்ணுவதுபோல் தெரியலை. எல்லாம் பெருமைக்கு மாவு இடிக்கும் கதை!

வேற ஏமாளி நகரம் இதை நடத்தறேன்னு ஏலத்தில்  எடுத்தால் நாங்க தப்புவோம்.  மக்கள்ஸ் ஏமாறுவாங்களான்னு தெரியலையே....  யானையைக் கட்டித்தீனி போடும்படி ஆயிருச்சு இப்போ!


சிரிக்கும் டாலியாப் பூக்கள்

உண்மையைச் சொல்லணுமுன்னா.....  நடந்து போன நிலநடுக்க அழிவுகளைப் பார்க்க வரும் டூரிஸ்ட்டுகள் கூட்டம்  இதையெல்லாம் விட ஏராளம்!  அதுக்கடுத்து  நகரத்தை மீண்டும் நிர்மாணிக்கவும் இடிபாடுகளை அகற்றவும் வேலை செய்ய வந்த  இண்டர்நேஷனல் ஒர்க்கர்ஸ்  அதை விட ஏராளம்.  ஒரு மோட்டல் கூட காலியா இல்லைன்னா பாருங்க!

கடந்த  ஒன்னரை நூற்றாண்டில் பொட்டானிக்கல் கார்டனின் வளர்ச்சி (Down the memory lane)

வழக்கம்போல் நடக்கும்  பூக்கள் திருவிழாவே நமக்குப் போதும். திருவிழாவின்   படங்களை அங்கங்கே போட்டு வச்சுருக்கேன்.


மொத்தப் படங்களும் பார்க்க விருப்பம் இருப்பவர்களுக்காக   கூகுள் ஆல்பத்தில்  போட்டு வைக்கவா?





கண்களுக்கு...........

$
0
0







நம்ப  கூவம் எப்போ இப்படி ஆகும்?





 குழந்தைகளின்  கைவண்ணம்!






 ஐ ஸோர் :(  மாடர்ன் ஆர்ட் என்ற வகையில் இப்படி ஒன்னைக்கொண்டு வந்து இயற்கையின் அழகையே கெடுத்து வச்சவர்  மட்டும்.... இப்போ  கண்ணுலே ஆப்டணும்.....  விக்டோரியா சதுக்கத்தில் வைக்கணும் என்று  ஏற்பாடு செய்திருந்த இந்த 'ஆர்ட்'  நிலநடுக்கம் வந்து  சதுக்கம் முழுசுமே பாதிக்கப்பட்டதால்  இங்கே வந்துருச்சாம்:(  கெட்ட சகுனமுன்னு நினைச்சுத் தூக்கிப் போட்டுருக்கக்கூடாதா?  அழகான குளத்தைக் கெடுத்த பாவம்  போய்ச் சேரட்டும்......... 


 

பூத்திருவிழாவுக்காக  ஒரு 13 தனிப்பட்ட அலங்காரங்கள் செஞ்சு வச்சு, விழா முடிஞ்சதும் அகற்றிடுவாங்க.


 மற்றபடி   தோட்டம் முழுசும் எப்போதும் அலங்காரமாகவே இருக்கும்.
 கோடை காலங்களில்   அழகு கூடுதல் என்பது என் எண்ணம்.  இங்கொருவர் அங்கொருவர்  என்று மக்களைப் பார்க்கலாமே தவிர ஏகாந்தமாக  இருக்கவும் சிந்திக்கவும் அருமையான  இடமிது.  நம்பலைன்னா கீழே உள்ள  படங்களே சாட்சி:-)))






















ஏறக்குறைய பாதித்  தோட்டம்  நிலம் ஆடுனதில்   அழிஞ்சு போச்சு. அதனால் புதுசா அமைக்கப்போகும் பகுதியில்  என்னென்ன வரப்போகுதுன்னு   விளக்கி இருக்காங்க. ரொம்ப மகிழ்ச்சியான சமாச்சாரம், தோட்டத்துக்குள்ளே ஒரு நூலகம்! ஏகாந்தமா இருந்து வாசிக்கலாம்!



வெயிலின் அருமை குளிரில் தெரியும்!

$
0
0
அதிகாரபூர்வமான குளிர்காலம் ஜூன் முதல்தேதிதான் ஆரம்பிக்குது நியூஸியில். ஆனா குளிருக்கு இதெல்லாம் தெரிய வாய்ப்பில்லை. அதுக்கு வலையா, இணையமா கூகுளா? ஊருக்குமுன்னால் வந்து உக்கார்ந்துருக்கு :( இந்த வருசம், போனவருசத்தைவிட குளிர் அதிகமா இருக்குன்னு வழக்கம்போல் சொல்வது உண்மை:-)

உடலுக்கும் உள்ளத்துக்கும் குளிரைத் தாங்கும் சக்தி குறைஞ்சுருக்கு போல..... வயசாகுதுல்லெ.....

அதான் கொஞ்சநாள் குளிர்விட்டுருக்கலாமுன்னு ஒரு பயணம் போறோம்
வெயிலை நோக்கி.

 வெயிலின் அருமை குளிரில்தானே தெரியுது, இல்லீங்களா? அதுவரை துளசிதளத்தின் கண்மணிகளும் வாசகப்பெருமக்களும், நிம்மதியாக இருப்பார்கள் என்ற நம்பிக்கையுடன் பள்ளிக்கூடத்துக்கு லீவு விட்டுருக்கேன்.  கோடை விடுமுறை!

சிங்கிள் டீச்சர் ஸ்கூலுன்னாலே இப்படித்தாம்ப்பா:-)

மீண்டும் சந்திக்கும் வரை வணக்கம் கூறி விடைபெறுவது உங்கள் டீச்சர்:-)

அதுவரை படம் பார்க்கலாம்!






39

$
0
0

சரியா போனவாரம், இதே புதன் கிழமை.  நம்ம முப்பத்தியொன்பதுக்கு  பத்துமலை முருகனைப் பார்க்கப்போனால்...... வெங்கியும் அம்லுவும்  'வா இங்கே'ன்னு கூப்பிட்டு ஏகாந்த சேவை  சாதிச்சுட்டு, மருமகனைப் பார்க்கப்போன்னு  சொன்னாங்க.



முருகனின் அழகை விவரிக்க வார்த்தை இன்னும் அகப்படலை!!!!

தோழி நாச்சியார் போனவாரம் பதிவு போட்டு சிறப்பிச்சுருக்காங்க.நெஞ்சம் நிறைந்த நன்றி. அவர்களின் அன்புக்கு சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.


'நுப்பத்தியொம்போது'  வருசம் தொல்லைகளைப் பொறுத்துக்கிட்டக் காதல் கணவருக்கு எப்படி , என்னன்னு நன்றிசொல்வது?????

பொழைச்சுக்கிடந்தால்  அடுத்த வருசம் ரூபி:-)





பாலி நீ வாழி!

$
0
0
மனுசனைச் சும்மா இருக்க விடுதா விதி? ட்ராவல் எக்ஸ்போ என்ற பெயரில் கூப்பிட்டது. போனோம். சிங்கப்பூருக்கு ஸ்பெஷல் ஒன்னு போட்டுருந்தாங்க. கிட்டத்தட்ட 35 சதம் கழிவு. கண்டிஷன் என்னன்னா செப்டம்பருக்குள் போய் வந்துறணும். ரெண்டே வாரம் அதிக பட்சம். இன்னிக்கே டிக்கெட்டு வாங்கிறணும்.   இந்தக் கையிலே காசு  அந்தக் கையிலே டிக்கெட்.

ரெண்டு வாரம் சிங்கையில் எதுக்கு? விஷ் லிஸ்ட்டைக் கையில் எடுத்துப் பார்த்தால் பாலி வாவா என்றது. அங்கேயும் ரெண்டு வாரம் என்னத்துக்கு? நாலுநாள் போதாதா? பேசாம ஒன்னு செய்யலாம். போக வர ஒவ்வொன்னுன்னு ரெண்டு நாள் போக பாக்கி இருப்பதை மூணால் வகுத்து பாலி, மலேசியா சிங்கைன்னு நவ்வாலு ஓக்கேன்னு முடிவாச்சு.

இங்கே நியூஸியில் பொதுவா 'எங்க திருமணநாளுக்கு'  பொதுவிடுமுறை உண்டு!!!! மாட்சிமை தாங்கிய மஹாராணியின் பொறந்தநாள் அப்போ வருதே! அதையும் வீக் எண்டுகளையும் சேர்த்துக் கணக்குப் போட்டால் கோபாலால் அட்ஜஸ்ட் பண்ணிக்கிட்டு 8 நாள் ஆஃபீஸைப் பிரிஞ்சு இருக்க முடியும். அவசர வேலைக்கு இருக்கவே இருக்கு ப்ளாக்பெர்ரி.

பாலிக்கு ஷார்ட் கட் நமக்கு சிங்கை வழிதான். இல்லைன்னா எங்கூரில் இருந்து சிட்னிக்குப்போய் அங்கிருந்து ஏர் ஏஷியா எடுக்கலாம். சிட்னி போக ஒரு நானூறாவது அழணுமே:( எங்கூருக்கு ஏர் ஏஷியா வர்றதில்லை. சிங்கை -பாலி-கே எல் -சிங்கைன்னு ஒரு முக்கோணத்தைத் தனியாக ஏர் ஏஷியாவில் புக் செஞ்சோம். அங்கங்கே தங்குமிடங்களை கோபால் தெரிவு செஞ்சார். சுதந்திரமா செயல்பட அப்பப்ப விட்டுருவேன்:-)

ஜூன் அஞ்சாம் தேதி சிங்கை இருந்தால் தேவலை. இல்லைன்னா மலேசியா பத்துமலை என்ற என் விருப்பத்தை மட்டும் மனசுலே வச்சுக்கிட்டு பயணத்திட்டம் தீட்டினார்.

சிம்பிளா ரெண்டே பெட்டிகளுடன்  சுபயோக சுப தினத்தில் வழக்கம்போல் சிங்கப்பூர் ஏர்லைன்ஸில் காலை 10.50க்குக் கிளம்பிப் போயாச்சு. விமானம்புறப்பட்ட இருவது இருவத்தியஞ்சு நிமிசத்தில் எங்கூர் சதர்ன் ஆல்ப்ஸ் தலையில் இட்லி மாவோடு ஜொலிச்சது. மலை கடந்து கடல் வந்த பத்தரை மணி நேர (போரிங்) பயணம்.


 தமிழ் படங்கள் பீட்ஸா, கண்ணா லட்டு தின்ன ஆசையா ? ஹிந்தியில் Ohmy God, Burfi..... லட்டு பர்ஃபி பீட்ஸான்னு எல்லாம் திங்கற சமாச்சாரமா இருக்கேன்னு தேடுனதில் ஹிமாவாரி கிடைச்சாள். ஜப்பான் படம்.


 குழந்தைகுட்டிகளுடன் இருக்கும் ஹிமாவாரியின் ஆயுசு இனி 7 நாட்கள் மட்டுமே. கெடு வச்சுட்டாங்க. அதுக்குள்ளே அவளை யாராவது பவுண்டிலே இருந்து கொண்டு போவாங்களா? திக் திக் என்னும் மனசோடு பார்த்தேன். ஹப்பாடா..... கடைசியில் எல்லாம் சுகமே! அவளை உலகை விட்டு அனுப்பும் வேலையை செய்யும் உத்யோகஸ்தரே வீட்டுக்குக் கூட்டிப் போயிட்டார். ஆமாம்.... என்னென்னவோ படங்களைக் காப்பி பண்ணும் தமிழ்சினிமா இதையெல்லாம் ஏன் கண்டுக்க மாட்டேங்குது? ஹிமாவாரி ஃபாரின்லே டூயட் பாடி ஆட மாட்டேன்னா 'லொள்'வாள்? என்னவோ போங்க.

மேற்கு நோக்கிப் பயணத்துலே ஒரு வசதி நேரம் மிச்சம். மாலை அஞ்சரைக்கு சிங்கையைத் தொட்டோம். மழை! மறுநாள் மாலை பாலி ஃப்ளைட்டு. ஸ்டாப் ஓவர் என்று சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் மலிவு விலையில் ஹொட்டேல் கொடுத்துச்சு. கூடவே ட்ரான்ஸ்பர்ஸ் உண்டு. எதுக்கு விடுவானேன்? ஆனால் காத்திருக்கணுமுன்னு கவுண்ட்டர் பொண்ணு சொன்னதால் ஒரு இடத்தில் குழுமி இருந்த கூட்டத்தில் கலந்தோம். எங்க ஊரில் இருந்து இதே ஃப்ளைட்டில் மூணு லேடீஸ் வந்துருந்தாங்க. இதே ட்ராவல் எக்ஸ்போ ஸ்பெஷல் டிக்கெட். ரெண்டு நாள் சிங்கையில் தங்கிட்டு வியட்நாம் போறாங்களாம். வியட்நாம் கோபால் ஞாபகத்துக்கு வந்தார். கூடவே சாருவும்:-)))) வியட்நாம் கோபால் நம்மையும் வா வான்னு கூப்பிட்டு இருக்கார். பார்க்கலாம், அமையுதான்னு! நமக்கு நெருங்கிய எழுத்தாளர் தோழியின் சகோ அவர். 

 ஜாலியா மூணு பெண்கள் லேடீஸ் அவுட்! பேச்சும் சிரிப்புமா இருந்தவர்களைப் பார்த்த நம்ம கோபால் ஹஸ்பெண்ட் கூட இல்லைன்னா எவ்ளோ குக்ஷி பாரேன்னார். ஏன்? இருக்காதா? ன்னு ஏக்கமாக் கேட்டேன்:-))))) எனக்கு இப்படித் தோழிகளோடு போகணுமுன்னா விடுவீங்களா? ஏன் விடாம? நீதான் போகமாட்டேன்னார்! நெசமாவா!!!!!

திரும்பி வந்து மூணு நாள் தங்கும்போது நண்பர்களைச் சந்திக்க முடிவு. இப்ப சந்திப்பு ஒன் டு ஒன் என்று சீனுவோடு மட்டும். கொஞ்சநேரம் ஏர்ப்போர்ட்லேயே காத்திருந்து மினி பஸ்க்காரர் வந்து க்ஞாஞா ஞாஞ்ஞான்னு விசாரிச்சது புரிஞ்சதும் எழுந்து போனோம். ஹொட்டேல் க்ராண்ட் ச்சான்ஸ்லர் என்று சொன்னாராம்! எங்கூர் ஹொட்டேல் க்ராண்ட் ச்சான்ஸ்லர் (அஞ்சு ஸ்டார்) நிலநடுக்கத்தில் போயிருச்சு. அதான் இந்தப்பெயரில் ஒரு பாசத்தோடு இங்கே இடம் போட்டோம். மேலும் இது நம்ம சீனு வீட்டாண்டை அதே பேட்டையில் இருக்கு. சிங்கை லிட்டில் இண்டியா செராங்கூன் ரோடு. சமீபத்தில் வந்ததுதான். நம்ம வீரமாகாளியம்மன் கோவிலுக்கு ஜஸ்ட் பின்பக்கம். சூப்பர் லொகேஷன்

ஹொட்டேலுக்குப்போய்ச் சேர்ந்தோம். மூணு ஸ்டாராம்! 328 அறைகளாம். டாய்லெட் பேப்பருக்குப் பதிலா ஸேண்ட் பேப்பர் போல ஒன்னு! ஸ்டார் மூணு இல்லை , ஒன்னுன்னு தோணுச்சு! போகட்டும்.....

 சட்னு ரெடியாகி சீனுவை தரிசிக்க ஓடினோம். கோவிலுக்குள் நுழைஞ்சால் கூட்டம்! வசந்த உத்ஸவம் நடக்குதாம். மொத்தம் 11 நாட்களில் இன்னிக்கு அஞ்சாம் நாள். தவழ்ந்த க்ருஷ்ணர் அலங்காரம். குட்டி மண்டபத்தில் இருந்து சேவை சாதிக்கிறார். தொட்டடுத்து மேடையில் கலைநிகழ்ச்சிகள். இன்றைக்கு பாட்டும் நடனமுமா ரெண்டு நிகழ்வுகள் இருக்கு.

 சீனுவின் தரிசனம் வழக்கம்போல் அமோகம். கோவிலை ஒரு சுற்று வந்து புள்ளையார் முருகன் வைஷ்ணவி, நரசிம்ஹர், சுதர்சனர், தாயார் மஹாலக்ஷ்மி நம்ம ஆண்டாளம்மா எல்லோரையும் வணங்கி ஆண்டாள் ஸ்பெஷலா தூமணிமாடத்து பாடி மனம் நெகிழ்ந்து , ஆஞ்சநேயரைச் சுற்றிவந்து வணங்கி மீண்டும் மூலவரிடம் போய் நின்னு குசலவிசாரிப்புகளில் இருக்கும்போது பாட்டுக்கச்சேரி ஆரம்பிச்சது. முதல் பாட்டு ஸ்ரீமன் நாராயணா......

 சாந்தி முரளி உள்ளூர்க்காரர். நல்லாதான் பாடுனாங்க. சொன்னதைக்கேள் கண்ணான்னு யசோதை பாடினதா ஒரு பாட்டு. நம்ம ஊத்துக்காடு வெங்கடசுப்பையர் பாட்டாம்! நான் இதுவரை கேட்டதே இல்லையாக்கும்! சொன்னதைக்கேள் கோவிந்தா, சொன்னதைக்கேள் கோபாலா, மாதவா, மதுசூதனான்னு பலவிதமாப்பாடி சொன்னதைக்கேள் முரளின்னு தன் கணவர் முரளி இருந்த திசை பார்த்து முடிச்சாங்க:-)

இதுக்குள்ளே சுடச்சுட வெண்பொங்கல், முருங்கைக்காய் சாம்பார், தயிர் சாதம் ,கேஸரின்னு பிரஸாதம் ரெடி. எல்லாம் அமிர்தம். உள்ளே தள்ளிக்கிட்டே அடுத்த நிகழ்ச்சிக்குக் காத்திருந்தோம். நல்லவேளையா நாற்காலிகள் போட்டு வச்சுருந்ததால் முழங்கால் முட்டி தப்பிச்சது..


 காயத்ரி ஸ்ரீராம் நடனம். சென்னை க்ருஷ்ண கான சபாவில் ஆடி புகழ் பெற்றவராம். நிமிர்ந்து உட்கார்ந்தேன். ரொம்பவும் எளிமையான அலங்காரத்தில் நடனமணி. 'க்ருஷ்ணா நரஜன்ம பந்தாக......  ' புரந்தரதாஸா ! ஹரே க்ருஷ்ணா பஜன், விஷமக்காரக் கண்ணன் (தோழியின் பேரன் நினைப்பு வந்தது) ஆசை முகம் மறந்து போச்சே.... நந்த கோபாலா.... ஸ்ரீ நாரதகான லோலா(இதுவும் ஊத்துக்காடு!) எல்லாமே கண்ணன் பாட்டுகள். முகபாவம் அட்டகாசம். மாஸ்டர் பீஸாக கீதோபதேசம். குருக்ஷேத்ரம். கிருஷ்ணனும் அர்ஜுனனுமா மாறி மாறி..... ஹைய்யோ!!!! விஸ்வரூபம் காமிச்சபோது அசந்துதான் போனேன்! அர்ஜுனனின் பணிவு அருமை!

 கண்ணுக்கும் செவிக்கும், நாவிற்கும் இனிய விருந்து வைத்த சீனுவுக்கு இன்னொரு முறை நன்றி கூறி குட்நைட் சொல்லிட்டுக் கிளம்பி அறைக்கு வந்து விழுந்தேன் படுக்கையில்.

"இப்படித்தான் இருந்தான்! இப்படியேதான் இருந்தான் " (பாலி பயணத்தொடர் 2)

$
0
0
இருள்வெளியில் ஒரு 'ஓம்' கண்ணில் பட்டது . முதலில்  நான்  எங்கிருக்கிறேன் என்பது மனசுக்குத் தெளிவாகலை.  நியூஸி  நேரத்துக்கு உறக்கம் போயிருக்கு. பால்கனியில் வந்து நின்னால்.... மசமசன்னு அங்கொன்னும் இங்கொன்னுமா மினுக்கும்  பல்பு! எதிரில் வீரமாகாளியம்மன் கோவில். அந்தக் கோபுரத்தில்தான் இந்த ஓம் இருக்கு! இந்தப் பக்கம் கைலாஷ் பர்வத்!  இதுவும் இதே ஹொட்டேல் கட்டடத்தின் நீட்சி. இங்கே  ரெஸ்ட்டாரண்ட் ஒன்னு இந்தப்பெயரில்:-)))))

பொழுது புலரக் காத்திருந்து  குளிச்சு முடிச்சுக் கிளம்பி முதல்வேலையா  பேட் கி பூஜா. அப்படியே காளியம்மனுக்கு ஒரு கும்பிடு. கோவிலின் பின்பக்கத்தில் புதுசா ஒரு ஆறுமாடிக்கட்டிடம் வரப்போகுது.  அன்னதானக்கூடம்,  உணவுக்கூடம் (ரெண்டுமே ஒன்னில்லையோ? ) அடுக்களை, திருமணமண்டபம், அலுவலகம், ஸ்டோர் ரூம்,  கோவில் பணியாளர் விடுதி,  பல்நோக்கு அறைகள் இப்படி சகலவசதிகளும் ஒரே இடத்தில்!  அடுத்த வருசம் கும்பாபிஷேகம் வச்சுருக்காங்களாம்.



செராங்கூன்  சாலை லேசாக் கண்ணைத் திறக்க முயற்சி செய்யுது.  கோவிலின் அருகே இருக்கும் பூக்கடையில் மல்லிச்சரம் வாங்கிக்கிட்டேன்.  கொண்டை பூவுக்கு நிஜமாவே அழுதே! இங்கே நியூஸியில் பூவச்சுக்க முடியுதா?  ரொம்பப் பழைய காலனி ஆதிக்ககால கட்டிடங்கள் சில கண்ணில் பட்டன. மேல்மாடிகளை அப்படியப்படியே வச்சுக்கிட்டு கீழ்தளத்தில் கடைகள் விதவிதமாய்!

கோமளவிலாஸில்   ரெண்டொரு வாடிக்கையாளர்கள். கல்லாவில் இருந்தவங்களைக்  ( நமக்கு கடந்த 28 வருசமாப் பழக்கம்தான்!) குசலம் விசாரிச்சுட்டு  போய் உக்கார்ந்தோம். விலைவாசி என்னவோ தாறுமாறா ஏறுனாப்போல   இருக்கு. ஐட்டங்கள் அதே என்னும்போது எதுக்கு அனாவசியமான்னு  விலையை மட்டும் புதுப்பிச்சு  வச்சுருக்காங்க. என் கணக்குக்கு  இப்போ ( ஒரு எட்டு மாசத்துக்கு முன்னேதானே  வந்துட்டுப்போனேன் )எல்லாம் 50%  விலை அதிகம்.


கொஞ்சம் மெலிசாத் தட்டக்கூடாதோ? பூத வடையா இருக்கே!  படம் எடுக்கும்போது நம்பள்கியை நினைச்சுக்கிட்டே ...கோபாலத் தவிர்த்து, படம் எடுக்க முயற்சித்தேன். பழக்கதோஷம்  கோபாலும் படத்துலே  இருந்தார்:-))) சாப்பிட்டு முடிச்சு  சீனுவை நோக்கிப்போகும்போது  மூடிய கடை வாசல் வெராந்தாவில் உள்ளூர் கடைகளுக்கு பத்திரிகை விநியோகம் செய்ய  கட்டுகளைப்பிரிச்சு அடுக்கிக்கிட்டு  இருந்தாங்க ரெண்டு பேர். ஒரு ஆங்கிலமும் ஒரு தமிழுமாக ரெண்டு  தினசரிகளை வாங்கினோம்.  நெருங்கிய எழுத்தாளர் தோழி இப்போ அந்தத் தமிழ்ப் பத்திரிகையில் வேலைக்குச் சேர்ந்துருக்காங்க. அவுங்க கட்டுரை எப்படி வந்துருக்குன்னு பார்க்கும் ஆர்வம் எனக்கு:-)


இந்தத் தமிழ்பத்திரிகையில்  நமக்குத் தெரிஞ்ச  அக்கா ஒருத்தர் (ஃபிஜியில் இருந்தபோது பழக்கம்)  அந்தக் காலத்தில் வேலை செஞ்சுருந்தாங்க. மலேசியா & சிங்கைன்னு ரெண்டு பதிப்புகளையும் அப்போ கவனிச்சுக்கிட்டு இருந்ததால்  இங்கேயும் அங்கேயுமா பயணத்துலேயே இருப்பாங்க அந்த அக்கா, மிஸ் அம்மணி அய்யர்.   குழந்தையுடன் முதல்முறை சிங்கை வந்திருந்தோம். சேதி சொன்னதும் ஓடிவந்து குழந்தையை உச்சிமோந்து ஆசீர்வதித்த அன்பை இன்னும் என்னால் மறக்க முடியலை.


ஃபாரர் பார்க் பக்கம் கிச்சனர் சாலை &  ரங்கூன் சாலை  முனையில் புதுசா அடுக்கு மாடிக் கட்டிடம் வருது!  சிகிச்சை சுற்றுலாவுக்கு வரும் மக்களைக் குறிவச்சு கட்டிக்கிட்டு இருக்கு  ஃபா ர்டீஸ் நிறுவனம். ( Fortis Healthcare)  ஃபாரர் ஸ்கொயர் என்று பெயராம்.

கோவிலில் சின்னதா  ஒரு கூட்டம். பெரிய திருவடிக்கு முன் யாகம் நடந்துக்கிட்டு இருக்கு.  பெருசா ஒரு கலசம்/கும்பம் ஒரு மேடையில் ! புள்ளையாருக்கு ஒரு தேங்காய் அர்ச்சனை செஞ்சுக்கணும். ஒரு சமாச்சாரத்துக்கு அப்பீல் செஞ்சுக்கிட்டு இருக்கேன்.  எல்லா பட்டர்களும் யாகத்தில் பங்கேற்பதால்  அது முடிஞ்சாவுட்டுத்தான் அர்ச்சனை என்று கவுண்ட்டரில் சொன்னார்கள். சரி எப்படியும்  எட்டுநாளில் திரும்பி சிங்கை வரும்போது  வச்சுக்கலாமுன்னு  சீனுவை தரிசிக்கப்போனோம்.

'இப்படி.... இப்படித்தாம்மா இருந்தான் அன்னிக்கு திருப்பதியிலே! கேட்டுக்கிட்டே இருந்தியே எப்படி இருந்தான் எப்படி இருந்தான்னு இப்படியேதான் 'என்றார் கோபால்.(பாவம்... ரொம்பப் பட்டுட்டார்!)



ஒற்றை வஸ்த்திரமும் துளசி மாலையுமா  ..... நாமம் மட்டும்  மங்கலாத் தெரியுது!


"அன்னிக்கு உன் கண்ணில் படலையேன்னு இன்னிக்கு அப்படியே காட்சி கொடுக்கறான் பார் ... "கோபால். ஏகாந்த சேவையா வேற வாய்ச்சுருச்சு!



தாயார் சந்நிதி, ஆண்டாள் சந்நிதியில்  தூமணி மாடம் பாடுவது எல்லாம் முடிச்சுட்டுத் திரும்பிப் பார்த்தால் கோபாலைக் காணோம். கண்ணைத் துரத்தினால் சீனுவின் முன்னால் மண்டபத்தில் கம்பியை ஒட்டிப்பிடிச்சு உக்கார்ந்துருக்கார்.  என்னன்னு கிட்டே போனால்.... திருமஞ்சனம் ஆரம்பிக்கப்போகுதாம்!

அட்றா சக்கை! போனஸ் ஆப்ட்டது நமக்கு!





ஒரு மணி நேரம்! உற்சவருக்கும் மூலவருக்குமா  குளியல் ! அபிஷேகம் அர்ச்சனை ஆராதனை எல்லாம்  அமோகம். கண்குளிரக் கண்டோம்!

 திருப்பதி தரிசனத்தை இடைக்கிடை நினைச்சுக்கிட்டு நடுங்கினது என்னவோ நிஜம். ஒருவிநாடி கண்ணைத் திறக்குமுன்  கை இழுத்துக் கடாசும் கோவில் ஊழியர்களின் அட்டூழியம் கொஞ்சமா நஞ்சமா? 


மூலவருக்கு முன் திரை போட்டு அலங்காரங்கள்  ஒரு பக்கம் ஆரம்பிக்க,யாககுண்டத்தின் அருகில் அன்றைய கட்டளைதாரர்  மாலைகள் ஏந்திய தாம்பாளத்துடன் யாகத்துக்கான சீர்வரிசைகளுடன்  கோவிலைச் சுற்றி வந்து  நிற்க , யாக குண்டத்தின் ஆஹூதியில்  எல்லாம் சமர்ப்பிக்கப்பட்டு  பரிபூரணம் !  பரிவட்டம் கட்டிய பட்டர் கலசத்தைத் தலையில்சுமந்து  மேளதாளங்களுடனும்  தீவட்டி, குடைகள் போன்ற சம்ப்ரதாயங்களுடனும் கோவிலைச் சுற்றி வந்தார். கலசத்துக்கு தீபாரதனை காட்டினார்கள்.

நினைச்ச இடத்துக்குப்போகும் வகையில் சக்கரம் வச்ச வட்ட யாககுண்டம் அழகோ அழகு.

சிங்கை சீனு ஸ்பெஷலாக  பத்துப்பதினைஞ்சு வருசமா நான் ஒரு வழக்கம் ஏற்படுத்திக்கிட்டு இருக்கேன்.  கோவில் உக்கார்ந்து ஸ்ரீ விஷ்ணு சகஸ்ரநாமம் வாசிப்பது.  நம்மிடம் இருக்கும் பெரிய எழுத்துப் புத்தகத்தை சிங்கைப் பயணங்களில் கொண்டு போவேன். மிஞ்சிப்போனால் ஒரு அரைமணி நேரம். நம்ம தூண் வேற நமக்காகக் காத்திருந்தது.  வாசிச்சு முடிச்சு  பெருமாளுக்கும், அனுமனுக்கும்  நின்ன இடத்தில் இருந்தே ஒரு கும்பிடு போட்டு, எட்டுநாளில் மீண்டும் சந்திக்கலாமுன்னு சேதி சொல்லிட்டுக் கிளம்பினோம். ஜாய் ஆலூக்காஸ் கடை போட்டுருக்கு  கோவிலுக்கு எதிரில் கொஞ்சம் தள்ளி!

எப்பப் பார்த்தாலும் செராங்கூன் ரோடு என்ன வேண்டி இருக்குன்னு  குறுக்குச்சாலையில் புகுந்து புறப்பட்டோம். சின்னச் சின்ன  சந்துகளும் வீடுகளுமா  இருக்கு.  சுத்தம்  ஓரளவு பரவாயில்லை. சீனர்களின் கடைகளில் காய்கறிக் கூடைகள் விற்பனைக்கு வந்து இறங்கி இருந்தன. அங்குமிங்குமா  பழைய கலோனியல் ஸ்டைல் கட்டிடங்கள்.  போலீஸ் ஸ்டேஷன்கூட கண்ணில் பட்டது. கூடவே ஒரு பழைய சர்ச் !  கம்போங் கபோர் சர்ச்.

 1929/30 வது வருசம் கட்டப்பட்டது. சிங்கப்பூரில் லிட்டில் இந்தியான்னு சொல்லும் இந்தப்பகுதியில்  இந்தியர்கள்மட்டுமில்லாமல்  சீனர்களும் மற்ற இனத்தவர்களும்  கணிசமான அளவு இருந்துருக்காங்க.  அப்போ  1890களில்  பாபா என்னும் சீன ஆண்கலும் நோன்யா என்ன்னும் சீனப்பெண்களுமா சுமார் 20 பேர்கள் சேர்ந்து  சிங்கை மெதடிஸ்ட் சர்ச்சின் முதல் பெண் சமய போதகராக இருந்த சோஃபியா ப்ளாக்மோரின் வீட்டில் கூடி இருந்து ஆலயமொன்று வேண்டுமென தீர்மானித்துள்ளனர். 1891 முதல் மிடில் ரோடிலுள்ள கிறிஸ்துவ நிலையக் கட்டிடத்தில்  வழக்கமாகக்கூடி வழிபாடு நடத்தி இருக்காங்க.


இதே கட்டிடத்தில்தான்  மெதடிஸ்ட் பெண்கள் பள்ளி ஒன்னும்  1900 ஆம் ஆண்டு வரை நடந்துருக்கு.   வழிபாடு நடத்தும் கூட்டம் கொஞ்சம்கொஞ்சமா அதிகாமானதும் இடப்பற்றாக்குறை காரணமாக,  1927 ஆம் ஆண்டு தேவாலய உறுப்பினர்கள் நண்பர்கள், பிஷப் பிக்லி  குடும்பத்தினர் அனைவரும் சேர்ந்து  நிதி திரட்டி அம்பதாயிரம் அமெரிக்க டாலர்கள்  செலவில்  இப்போ நாம் நின்று பார்த்துக்கொண்டிருக்கும் தேவாலயத்தைக் கட்ட ஆரம்பிச்சுருக்காங்க. (கம்போங் கபோர் சாலையும் கஃப் சாலையும்  சந்திக்கும் மூலை இது) பிக்லி மெமோரியல்ன்னே ஒரு காலத்துலே இதைக் குறிப்பிட்டுச் சொல்லிக்கிட்டு இருந்துருக்காங்க.

சிங்கைச் சரித்திரத்தின் ஒரு பகுதியா அரசு இதை அறிவிச்சு  தகவல் பலகையும் வச்சுருக்கு.  சிங்கை அரசில் பாராட்டப்படவேண்டிய  ஒரு  முக்கிய  அம்சம் இப்படிப்பட்டத் தகவல் பலகைகள். ஆங்கிலம் தமிழ் சீனம் என்று மும்மொழிகளில்  பாரம்பரிய, சரித்திர அம்சங்களோடுள்ளதை மறக்காமல் மக்களுக்கு  எடுத்துச் சொல்லும் சிறப்பு எனக்கு ரொம்பவே பிடிச்சுருக்கு! அப்பாடா.... சரித்திரம் கிடைச்சுருச்சுன்னு  மகிழ்ச்சியா ரெண்டு க்ளிக் க்ளிக்கிட்டு  டன்லப் தெரு வந்து சேர்ந்தோம்

. பச்சைப்பசேலுன்னு காய்கறிக் கடைகள்.  ஒரு  ஆரம்பப் பள்ளி(Endeavour Primary )ஆசிரியர் ஒருவர் தன் வகுப்பு மாணாக்கரை  லைஃப் ஸ்டடி  டூர் என்ற வகையில்  கூட்டிவந்து  கடைகளையும் பொருட்களையும் காமிச்சு பாடம் சொல்லிக்கிட்டு இருந்தார். முத்தாத இளம் காய்கறிகளை எப்படிப் பார்த்து வாங்கணுமுன்னு சொல்லி இருப்பாரோ? மாணவர்கூட்டத்தில் சிறுமிகளை விட  சிறுவர்களே அதிகம் என்று தோணுச்சு எனக்கு. (நல்லாப் பார்த்துப் படிங்கப்பா....பின்னாளில் மனைவியிடம் பாராட்டு பெற உதவும்!)


பொடிநடையில் நாங்கள்  Tekka Centre (சிராங்கூன் சாலையின் ஆரம்பம்)  வந்து அங்கே அடித்தளத்தில் இருக்கும் சூப்பர் மார்கெட்டுக்குப்போய்  பழங்கள் பகுதியை நோட்டம் விட்டோம். அழகாக நறுக்கிய பழத்துண்டுகளை  சின்ன அளவில்  பொதிஞ்சு வச்சுருப்பாங்க இங்கே. பார்க்கவும் சுத்தமாக இருப்பதால் பயமில்லாமல் வாங்கிச்சாப்பிடலாம். பலாப்பழம் கிடைச்சது. டூரியனையும்  வெட்டி வச்சுக்கிட்டு இருந்தார்  ஒரு இளைஞர்.  இங்கே நியூஸியில் நான்  தேடிக்கிட்டு இருக்கும்  டெவில்ஸ் ஐவி (மணி ப்ளான்ட்ஸ்) செடிகள் விற்பனைக்கு இருக்கு.  ஐயோ.....  என்னால் வாங்கிவர முடியாதே............  நியூஸியில்  விமானம் இறங்கும்போது  ஒரு பூவோ, பழமோ இலையோ  நம்வசம் இருந்தால் தொலைஞ்சோம்!  பயோ செக்யூரிட்டி  இங்கே கடுமை.  பத்தாயிரம் டாலர் வரை அபராதம் உண்டு!

அப்படியே லிட்டில் இண்டியா ஆர்கேடுக்குள் நுழைஞ்சு  ஒரு புத்தகக்கடைக்குப்போய்ப் பார்த்தோம்.  துளசி கிடைச்சாள். பாலகுமாரன். பயண வாசிப்புக்கு வேணுமேன்னு பார்த்ததில்  எழில்வரதனின் 'கருங்கல் கோட்டை சிங்கபைரவன் கதை' ஆப்ட்டது. சிரிப்புக்கு  கேரண்டீன்னதால்வாங்கினேன். கூடவே வாடாமல்லியும்.(சு.சமுத்திரம்)




லெட்சிமி புஸ்பக்  கடையில்  அழகான மாலைகளும் இன்னொரு மூலைக்கடையில்  மாம்பழவகைகளும் அப்படியே  கண்ணையும் மனசையும் இழுத்துச்சு.   இன்னொரு கடையில்  இளநீர்  வாங்கிக்குடிச்சுட்டு  செராங்கூன் சாலையைக் கடந்தோம். ஏதோ  டிவிக்கான படப்பிடிப்பு.  நாயகி ஷாப்பிங் செஞ்ச  பைகளோடு  சாலையைக் கடக்குறாங்களாம்!!! படு பொருத்தம்:-)

வீரமாகாளியம்மன் கோவிலுக்குள் போய்  சாமி கும்பிட்டுவிட்டுக் கொஞ்ச நேரம் உக்கார்ந்துருந்தோம்.  பிரசாத விநியோகம் நடக்குது.  சாம்பார் சாதமும் கேஸரியும்  கண்ணை இழுத்தாலும் வயிற்றில் இடமில்லையே:(

ஹொட்டேலுக்கு வந்து அறையைக் காலி செஞ்சுட்டு (இங்கே செக் அவுட் டைம் பகல் 12. செக் இன்  மதியம் 3 )சிங்கை ஸ்டாப் ஓவரின்  ஃப்ரீ பிக்கப்   ஒரு பனிரெண்டரை மணிக்கு  வரும் என்று காத்திருந்தோம்.  சரியான நேரத்துக்கு வண்டி  வந்தது. நாங்க ரெண்டு பேர் மட்டுமே என்பதால் நேராக விமானநிலையம்தான். ஏர் ஏஷியா டெர்மினல்  நம்பர் ஒன்னில் இருந்து போகுதாம். ரொம்ப நல்லதாப்போச்சு.போன முறை விட்டுப்போன  காக்டெஸ் கார்டனைப் பார்த்துறலாம்!





நாலுநாள் அம்பானிகள் (பாலி பயணத்தொடர் 3)

$
0
0

கள்ளிப்ரியர்களுக்காக.......  சின்ன இடத்துலே இத்தனை வகைகளான்னு  வியப்புதான். செக்கின் பண்ண கையோடு   இதைத் தேடிப்போகலாமுன்னா  மணி ரெண்டாகுது. சாப்பிடலாமுன்னு  சொல்லிட்டார் கோபால். இந்த டெர்மினலில் நம்ம சாப்பாடு கிடைக்காது. போகட்டும் ராத்திரி முதல் தொடங்குவதை இப்பவே ஆரம்பிச்சால் என்ன தப்பு?

சாப்பாடு ஆச்சு. நான் வேற எதாவது  வாங்கிக்கலைன்னு  இவருக்கு மனக்குறை. ஐஸ்க்ரீம் தேடுனா... கிடைக்கலை!!! உண்மையில் இது உலகமகா அதிசயம்தான். இத்தனாம் பெரிய  ஏர்ப்போர்ட்டில் ஒரு ஐஸ்க்ரீம் கிடைகலையே:(


காக்டெஸ் கார்டனுக்குப்போகும் வழி கொஞ்சம் ட்ரிக்கியா இருக்கு. கண்டு பிடிக்க முடியாமல் நாலுமுறை ஏர்ப்போர்ட்டில் குறுக்கும் நெடுக்குமாப் போனபிறகொரு மாடிப்படியாண்டை   கண்ணில் பட்டது. எஸ்கலேட்டரில் ஏறிப்போய் அம்பு காட்டிய இன்னொரு மாடிக்குப்  படியேறிப்போனா  அடடா..................





நூறு வகைக்கு மேல் வச்சுருக்காங்க. ஆசியா, அமெரிக்கா, ஆஃப்ரிகா என்று உலகநாடுகள்  பலதும் இருக்கு:-) ட்ராகன் ட்ரீ, ப்ரிக்லி டவரிங் காக்டெஸ், பேரல் காக்டெஸ்ன்னு ஏராளமான வகைகள். நடைபாதையில் மட்டும் நடக்கவும். மரத்தில் ஏறாதீர்கள்(!!) என்ற அறிவிப்பு வேற:-)))))  இங்கேயே ஒரு ஒயின் பாரும் ரெஸ்ட்டாரண்டும் கூடுதல் வசதிக்கு!



ஒவ்வொன்னாய் ரசிச்சுப் பார்த்துக்  க்ளிக்கி...நேரம் போவதே தெரியலை. அடிக்கும் வெயிலுக்கு  அப்பப்ப வந்து நிழலில் கொஞ்சம் நிற்கலாம். பந்தல் போட்டு வச்சுருக்காங்க. உக்கார்ந்து ரசிக்க அங்கங்கே பெஞ்சுகள் வேற!  இடம்கூட ஒரு ஆயிரம் சதுரமீட்டர்கள்தான் இருக்கும். இடையிடையே பாதிரி மரங்கள். (Plumeria - Frangipani )ப்ராங்கிபாணின்னு  சொல்வோமே அவை!  ஆமாம்.... பெரியமரங்களா இருக்கே... எப்படி மாடித்தரையில் வச்சு வளர்க்குறாங்கன்னு வியப்புதான்.
















இதேபோல் ஒரு மொட்டு சிகப்பு நிறத்தில்  (மேலே உள்ள படம்)இங்கே  முதல்முறையா  நம்மூட்டுக்  கள்ளியிலும் வந்தது. முழுசா மலர்ந்தால்  என்ன நிறமோன்னு ஆசைஆசையாக் காத்திருந்தேன்.  திடீர்னு வந்த  ஃப்ராஸ்ட்டுலே  மொட்டு அப்படியே கருகிப்போச்சு:(


நேரமாகுதுன்னு  நம்ம கேட்டுக்குப் போனோம்.  ஃப்ளைட்  'டிலே' ஆகுது. அங்கிருந்து வந்தால் தான் இங்கிருந்து போக முடியும்!  இலவச இணையம் இருந்துச்சுன்னு கொஞ்சநேரம் மெயில் பார்த்துட்டு  மகளுக்கும் தோழிக்கும் மடல்கள் அனுப்பினேன். இந்த முறை பயணத்துலே  நம்ம மடிக்கணினி வேணாமுன்னு  முடிவு பண்ணி இருந்தோம்.

சும்மா வேடிக்கையில்  கொஞ்சநேரம் போச்சு. மூணரைக்கு வரவேண்டியது நாலே முக்காலுக்கு  வந்து, பயணிகள் இறங்குன அடுத்த நிமிசமே  நம்மை  உள்ளே போக விட்டாங்க. விமானத்தை சுத்தம் பண்ணும் வேலையெல்லாம் இல்லை. என்னதான் மலிவு விலை டிக்கெட்டுன்னாலும் இப்படியா!!!

நல்லவேளை துடைப்பத்தைக் கையில் கொடுத்து அவுங்கவுங்க உட்காரும் இடத்தைச் சுத்தம் செஞ்சுக்கோங்கன்னு சொல்லலை!

பாலிப் பயணம் இப்போதான் ஆரம்பிக்குது:-) நேத்து நாம் வந்த வழியாகவே திரும்பிப் போறோம். ரெண்டரை மணிநேரப்பயணம்.  இன்னும் கொஞ்சூண்டு போனால்  அஸ்ட்ராலியாவே வந்துரும்!  அந்த நாட்டு மக்களுக்கு  ரொம்பவேபிடிச்ச இடம் பாலி என்பதால்  எப்பவும் ஆஸி டூரிஸ்டுகள்  பாலியில் ஏராளம். என்கூட  நூலகத்தில் வேலை செய்த ஒரு  தோழி ஒருத்தர் இங்கே நியூஸியில்  குளிர்காலம் ஆரம்பிச்சதும் ஆறுமாசம் பாலித்தீவுக்குப் போயிருவாங்க.

ரொம்பவே விலை மலிவான இருப்பிடங்கள் எல்லாம் சின்ன ஊர்களில் கிடைக்குமாம்.  நியூஸியில் ஒரு மாசத்துக்குச் செலவாகும் பணத்தில்  பாலியில் தாராளமாக மூணு மாசங்கள் தங்கிடலாமுன்னு சொல்வாங்க.  அங்கேயும்  சின்னப்பிள்ளைகளுக்கு  ஆங்கிலம் பேசச் சொல்லித்தருவதும் கதை வாசித்துப்பழகச் சொல்லிக்கொடுப்பதுமா நேரம் போயிரும். எங்க நூலகத்தில்  இனி வேணாமுன்னு  கழிச்சுக் கட்டும்  புத்தகங்களை ஒரு மூட்டை அவர்கள் வசம் கொடுத்தனுப்புவோம். எங்கள் நூலகம் முற்றிலும் குழந்தைகளுக்கானது என்பதால்  பிரச்சனையே இல்லை:-)

'துளசி' வாசிக்க  ஆரம்பிச்சுருந்தேன்.  கண்ணனின் பிறப்பும் கோகுல வாழ்க்கையுமா 'கதை' போகுது.  வேற பொழுதுபோக்கு சமாச்சாரம் ஒன்னும் இந்த விமானத்தில் கிடையாது. 'கொடுக்கற காசுக்கு  இருக்க இடம் கொடுத்ததே அதிகம் ' என்றார் கோபால். அவர் என்ன வாசிக்கிறாருன்னு எட்டிப் பார்த்தேன்.  அமலா பாலுக்கு ஸ்பானிஷ் தெரியுமாம்:-)))))))

ஓளா (olah ) ன்னு மொத்த யூனிட்டும் சொல்லிக்கிட்டே இருந்துச்சாம்.  ஹாய்ன்னு அதுக்கு பொருளாம்.  நம்ம மக்களுக்கு  புதுப்புது சமாச்சாரங்களைச் சொல்லுவதில்  சினிமா சங்கதிகளை எழுதும்  'எழுத்தாளர்'கள் ரொம்பவே மெனெக்கெடறாங்க. புத்தக விற்பனை முக்கியம் இல்லையோ????  மக்களுக்கும்  நாட்டின் பல பிரச்சனைகளைப்பற்றி இப்போ என்ன கவலை வேண்டி இருக்கு?  சினிமாவே  கதின்னு  கிடக்கறாங்களே. குமுதம் ஒவ்வொரு காலக்கட்டத்துக்கும்  ஒருத்தரை பிடிச்சு வச்சுக்கும். முந்தி ஒரு காலத்துலே  வீணை காயத்ரி! இப்போ  அமலா பால். நாளை ...வேற யாராவது....


பொதுவா தலையை(மூளையை) கழட்டி வச்சுட்டு வாசிக்கும் பழக்கம் நம்ம கோபாலுக்கு. இதுக்குன்னே இந்த ஆ.வி, குமுதம் வகைகளை விடாமல்  வாங்குவார்.  ஃபிஜிக்கும் நியூஸிக்கும் சந்தா கட்டி விமானத் தபாலில்  வாங்கும் வழக்கமெல்லாம் இருந்துச்சு.  நான் வேப்பிலை அடிச்சு அடிச்சு இப்போ  ஒரு பத்து  வருசமா சந்தா கட்டுவதை நிறுத்தியாச்சு. ஆனாலும் சிங்கை, சென்னை பயணங்களில்  கண்ணுலெ பட்டால்போதும் விடமாட்டார்.

எனக்கு(ம்) இந்தோனேஷியன் பாஷா ( Bahasa Indonesia) தெரியுமுன்னு சொன்னேன்.  சாம்பிள் வேணுமா?

 அண்டா!  (Anda)

திருதிருன்னு  முழிச்சார். இது ஹிந்தி அண்டா இல்லை. அங்ரேஜி அண்டான்னேன். கூடவே kursi ன்னேன். இது ஹிந்தி குர்ஸிதான். திருதிரு அதிகமாச்சு.

இக்கடச் சூடுன்னு காமிச்சதும்  பொட்டிச் சிரி!

Terima kasih ன்னேன்:-))))  தேங்க் யூ.

விமானத்தில்  ஆங்கிலத்தில் பத்து விநாடி  சொன்ன அறிவிப்புகளையெல்லாம்  மொழிபெயர்த்து பத்து நிமிசம்  இந்தோனேஷியன் மொழியில் சொல்லிக்கிட்டு இருந்தாங்க. கடைசிச் சொல்  தெரிமா காசி.

விமானம் விட்டு இறங்குனதும்  நேராப்போய் நிற்கவேண்டிய இடம் விஸா ஆன் அரைவல் ஆளுக்கு 25 அமெரிக்க டாலர்.  ரொம்ப சாதாரணமான விமானநிலையம்தான்.  ஆனால் கூட்டம் அம்முச்சு.  உடனடிச் செலவுக்கு  கொஞ்சம்  உள்ளூர்காசை மாத்தி எடுத்துக்கணும். வரிசையா ஏகப்பட்ட  கரன்ஸி எக்ஸ்சேஞ்ச் கவுண்டர்கள்.  நூறு டாலர் நோட்டுக்கு தனி ரேட். நூறு  ரூபா கூடுதல்.  250 க்கு 2.3 மில்லியன் கிடைச்சது!  கம்போடியாவில் நாம்   இன்ஸ்டண்ட் பில்லியனர் ஆனது எல்லாம் இப்போ ஜூஜுபி!  இனிமேல் நாம் அம்பானிகளாக்கும் கேட்டோ:-)))


பொட்டியை எடுத்துக்கிட்டு வெளியே வந்தால் முதலில் கண்ணில் பட்டது
Roti 'O. இருக்கட்டும். பசி  நேரம். எதுக்கு இப்போ ரொட்டியை  ஞாபகப்படுத்துறே......

ஏர்ப்போர்ட் ட்ரான்ஸ்ஃபர் சொல்லி வச்சுருந்தோம். ஆல் சீஸன்ஸ் ஆள் வந்து காத்திருந்தார்.  பெயர்  மேடி(Ma De)! எங்க நாட்டுலே ஒரு சினிமா ஹீரோ இந்தப்பெயரில் இருக்காருன்னதும் அவருக்கு ஏகப்பட்ட  மகிழ்ச்சி. அரைமணி  நேரத்துலே  ஹொட்டேலுக்கு வந்து சேர்ந்தோம். மூணு மாடி. நமக்கு மூணாவது மாடியில் இடம் !  ஆஹான்னு   வரவேற்பைத் தாண்டி முற்றத்துலே காலு வச்சால்  மாடிப்படி:(   மின்தூக்கி இல்லையாம். போச்சுடா.......   20 கிராம் எடை குறைவு  உறுதியாச்சு.

நல்ல வசதியான அறைதான். பெரிய பால்கனி இருக்கு.  சாப்பிடப்போகணும். வரவேற்பில் ஒரு  டிஸ்கவுண்ட்   வவுச்சர் ஆளுக்கு அம்பதாயிரம்  ரூபா கொடுத்துருந்தாங்க.  அது இருக்கட்டும் வெளியே  இந்த பத்மா ஏரியாவில் காலாற நடந்துபோய்  பார்க்கலாம்.வரும்வழியில் நிறைய கூட்டமும்  ரெஸ்ட்டாரண்டுமாக் கண்ணில்பட்டதே!

தேடித்தேடி இருட்டு அதிகமா இருந்த இடத்துலே நுழைஞ்சோம்.  ஃப்ரூட் லஸ்ஸி,  Bir Bintang உட்பட செலவு ரெண்டு லட்சம்.  பரவாயில்லை. ஹொட்டேல் அறைக்கே  ஒரு நாளைக்கு ஒன்பது லட்சத்துச் சொச்சம் ஆகுதே!

தொடரும்.......:-)





விடியல் பொழுதில் ஒரு ப்ரஹஸ்பதி (பாலி பயணத்தொடர் 4 )

$
0
0
பொழுது இன்னும் சரியாப் புலராத ஒரு  காலையில்  கடற்கரையை நோக்கிப்போய்க்கிட்டு இருக்கோம். நேத்து நம்மை ஹொட்டேலுக்குக் கொண்டு வந்து இறக்கிவிட்ட மேடி  நம்ம தெருவுக்குள் நுழையுமுன் இடதுபக்கம் கை நீட்டி அங்கே பத்மா பீச் இருக்குன்னு சொல்லி இருந்தார். பத்மா ரிஸ்ஸார்ட் இருப்பதால் இதை பத்மா பீச்ன்னு சொல்றாங்களே தவிர இந்தப் பகுதிக்கு  Legian என்றே பெயர்.



இங்கே  இந்தப்பகுதியில் சாலை முழுசுமே கல்பாவி இருக்கு!  அதை கூட்டிப்பெருக்கிச் சுத்தம் செஞ்சுக்கிட்டு இருந்த பணியாளர்களிடம் பீச் ? என்று கேட்டதற்கு  நாம் போகும்திசையையே கைநீட்டிக் காமிச்சாங்க.    சாலைக்கு ரெண்டு பக்கமும் பச்சைப்பசேலுன்னு மரங்களும் செடிகொடிகளும். ராத்திரி இருட்டுலே சரியாத் தெரியலை!


நாயை வாக்கிங்  கூட்டிப்போறார் ஒரு உள்ளுர் வாசி!

அஞ்சாறு நிமிச  நடை. கடற்கரையில்   இங்கொன்னும் அங்கொன்னுமா சிலர்.  தண்ணீரில் போய் நின்னு பார்த்த கோபால் நல்லா வார்மா இருக்குன்னார். கொஞ்சதூரம் மணலில் நடந்துபோய்  கால் வலிச்சதும்   அமர்ந்தோம்.

இதேபோல் தைரியமா  நம்ம மெரீனாவில்  அமர முடியாது. ஏகப்பட்டபேர் 'உட்கார்ந்த தடயம்' மண்ணுக்குள் இருக்கும் அபாயமுண்டு  அங்கே:(

ஜப்பான் மங்கை ஒருவர் நீச்சலுடையுடன்  தண்ணீரில்  நின்னு போஸ் கொடுத்துக்கிட்டு இருந்தார். காலண்டர் ஷூட்டிங்கோ என்னவோ!


""  நம்மூரிலும்தான் அழகான கடற்கரை இருக்கு. ஒருநாளாவது அதிகாலையில் போனோமா?"

"  இங்கே மாதிரியா? குளிர் கொன்னுருமே... "

"  பரவாயில்லைன்னு  கிளம்பிப்போய்  வண்டியிலேயே  இருந்து சூரியோதயம் ஒரு நாள் பார்க்கணும். என்ன ஒரு நாள்  கிளம்பலாமா? "

"  சம்மர் வரட்டும் பார்க்கலாம். "

 " ஐயோ... அப்ப நாலுமணிக்கே எழுந்து கிளம்புனால்தான் உண்டு. அஞ்சுமணிக்கு சூரியன் வந்துருவானே! "

போகாத ஊருக்கு வழி தேடிக்கிட்டு இருந்தோம்:-)


மணலில் மூன்று நாய்கள் எஜமானை இழுத்துக்கிட்டு  போகுதுகள்;-)

வானத்தில்  உதயகால வெளிச்சங்கள் ! சூரியன் வருதான்னு கண்ணை நட்டபோதுதான்   மனசில் ஒரு விஷயம் புலனாச்சு. நமக்கு மேற்காலே கடல். அப்போ சூரியன் ?  சடார்னு திரும்பி  கிழக்கே பார்த்தால்  வரிசை கட்டி நிற்கும் ரிஸார்ட்டுகளின் பின்னால் மரக்கிளைகளுக்கிடையில்  இருக்கான்.

கடற்கரை மணலில் வரிசையாக் குடைகள். சர்ஃப் போர்டுகள்  ப்ளாஸ்டிக் நாற்காலிகள். சன்பாத் எடுக்கத்  தோதான படுக்கை நாற்காலிகள்  இப்படி ......   இன்னும் கொஞ்சம் நேரமானதும் எண்ணெய் மஸாஜ், ச்சில் பீர், தீனிகள் என்று இந்த இடமே சுறுசுறுப்பாகிவிடும் அடையாளம் பளிச்சுன்னு தெரியுது.




பெரிய சங்கு ,சோழிகள்  விற்பனையாளர்  அன்றைய வியாபாரத்துக்குக் கடை தொறந்துக்கிட்டு இருக்கார்.  வாங்கிக்க ஆசைதான். ஆனால்  இங்கே நியூஸிக்குக்  கொண்டுவர முடியாதே:(

மணி ஏழாகுது. அறைக்குத் திரும்பலாமுன்னு வந்தால்  கோவில்போல ஒன்னு பீச்சாண்டை கண்ணில் பட்டது. உள்ளே போய்ப்பார்த்தால் கோவிலேதான். ப்ரஹஸ்பதி மூலவர். ஆஹா.... இன்னிக்குத்தானே குருப்பெயர்ச்சி, இல்லையோ!!!!

காலையில் கோவிலைத் திறந்து(!!??)  பூஜைக்கான ஏற்பாடுகளைச் செய்து  பூஜைப் பொருட்களை  அடுக்கி வச்சுக்கிட்டு இருந்தாங்க ஒரு அழகான பெண்மணி. பெயர் மேடியாம். இங்கே இது முப்பாலருக்கும் பொதுவான பெயராக இருக்கோ?  அப்புறம் நம்ம கண்ணனின் பதிவில் பார்த்தது நினைவுக்கு வந்தது  ....  இந்தப்பெண்  அவுங்க அப்பா அம்மாவுக்கு ரெண்டாவதாப் பிறந்தவங்க.

முதல் குழந்தைக்கு 'வயான்(Wayan)', இரண்டாம் குழந்தைக்கு 'மேட்(Made), மூன்றாம் குழந்தைக்கு நியோமன்(Nyoman), நான்காம் குழந்தைக்கு கேடுட் (Kedut)'. இதன் தொடர்ச்சியில் ஐந்தாம் குழந்தை பிறந்தால் அதற்கு பெயர் 'அடுத்த வயான்', ஆறுக்கு 'அடுத்த மேட்', ஏழுக்கு 'அடுத்த நியூமான்', எட்டுக்கு 'அடுத்த கேடுட்'. ஒன்பதாம் குழந்தைக்கு 'கடைசி வயான்' இப்படியாக 12 குழந்தைகள் பிறக்கும் வரிசைக்கு பெயர் வைத்து அதன் படியே எந்த ஒரு குழந்தை அது ஆண் பெண் என்றாலும் வரிசைப்படி இருக்கும். பிறகு ஆண் பெண் குறித்த அடையாளம் 'I' (ஆண்) மற்றும் 'Ni' (பெண்) குறித்த அடையாளம், பிறகு சாதிப் பெயர்கள் இடம் பெறும்.

நன்றி: கோவியாரின் 'காலம்'

கோவிலில் உண்டியல் ஏதும் இல்லை!  பூஜை செய்யச் சொல்லி  இருபதாயிரம் ரூபாயை  'திடீர் அம்பானி' வழங்கினார். சின்னதா  குருத்தோலைகளால் பின்னப்பட்ட  விளிம்புள்ள   சின்னக் கூடைத் தட்டில்  பூக்கள், ஊதுபத்தி, மிட்டாய், பிஸ்கெட்,  கலர் போட்ட பிடிச்சோறு, எதாவது காய்கறிகள்    இப்படி வச்சுருக்காங்க.

'துள்ஸி, நாளைக்கு இதே டைமுக்கு வாங்க உங்களுக்கு ஸராங் கொண்டு வந்து  தரேன்' னு அன்பாச் சொன்னாங்க நம்ம மேடி! எஸ்  and நோவுக்கு மையமாத்  தலையாட்டி வச்சேன்.

காலை உணவுக்கான விலைப்பட்டியல்கள் அங்கங்கே ரெஸ்ட்டாரண்ட் வாசலில் இருக்கு.


வரும்வழியில் இருந்த கடையில் மூவாயிரத்து ஐநூறு ரூபாய்க்கு ஒரு தண்ணீர் பாட்டில் வாங்கிக்கிட்டோம். சைக்கிளில் ஒருவர் காலை ப்ரேக் ஃபாஸ்டுக்கான  இலையப்பம் போல உள்ள பொட்டலக் கொத்துகளுடனும் கூடவே சின்னச் சின்னப்ளாஸ்டிக் பாட்டில்களில்சட்னி, ஊறுகாய் துவையல் போன்ற சமாச்சாரங்களுடனும்  விற்பனையில்  மூழ்கி  இருந்தார்.

  எல்லா கடைகளிலும் வியாபார நிறுவனங்களிலும்  வாசலில் ஒரு சாமியை வச்சுருக்காங்க. கறுப்பு வெள்ளைன்னு பெரிய கட்டம் போட்ட துணிகள் சாமி போட்டுருக்கு. கூடவே ஒரு குடையும்! நம்ம ஹொட்டேல் வாசலில் புள்ளையார் இருக்கார். மங்களகரமான மஞ்சள் பட்டு கட்டியிருக்கார். மேட்சிங்கா மஞ்சள் குடை!

அறைக்குப்போய் குளிச்சுட்டு வந்து  ப்ரேக்ஃபாஸ்ட் சாப்பிடலாமுன்னா  மூணுமாடி ஏறி இறங்கணுமே என்ற பயத்தில் கையோடு சாப்பிட்டுட்டுப் போயிடலாமுன்னு சொன்னது நாந்தான்.உண்மையில் இது மூணுமாடின்னாலும் தரைதளம் ஒன்னாவது மாடியாம்.  அப்படியும் நாலுமுறை படியேறி இறங்க  முழங்கால் மறுக்குதே :(

அறை வாடகையில் காலை உணவும் சேர்த்தி.  சூப் முதற்கொண்டு ஏராளமான வகைகள் இருக்கு.   ப்ரேக்ஃபாஸ்டுக்கு  எதுக்கு சூப்? நமக்குண்டான ஸாலடோ, சாண்ட்விச்சோ நாமேகூட செஞ்சுக்கலாம்.  பேக்கரி ஐட்டங்களும்  அட்டகாசம்!

சாப்பாடை முடிச்ச கையோடு ஊர் சுத்திப் பார்க்கஒரு வண்டிக்கு ஏற்பாடு செஞ்சுக்கலாமேன்னு வரவேற்பில் கேட்டதுக்கு,  'நீங்கள் எங்கே போகணும் என்ன ஏதுன்ற விவரங்களைச் சொல்லி பேரம் பேசிக்குங்கோ'ன்னுட்டு,  ஒரே விநாடியில்  ஹொட்டேல் வாசலில் இருந்து ஒருத்தரை வரவழைச்சார். நம்முடைய ஒரே கண்டிஷன்  ட்ரைவருக்கு ஆங்கிலம் பேசத் தெரிஞ்சுருக்கணும் என்பதே.

வந்த இளைஞர்  Nyoman Urip Suryawan.  காலையில் சில இடங்களைப் பார்த்துட்டு அறைக்குத் திரும்பிட்டு  கொஞ்சநேர ஓய்வுக்குப்பின் மாலையில் சில இடங்களைப் பார்த்துக்கலாமுன்னு முடிவாச்சு. ஏழு லட்சம் கேட்டு, அஞ்சு லட்சத்துக்கு ஒத்துண்டார். முழுநாள் என்பதால் சரின்னு நினைச்சோம்.  இப்ப மணி எட்டேகால். இன்னும் ஒரு மணி நேரத்தில் கிளம்பலாமுன்னு சொல்லி அறைக்கு வந்து குளிச்சு தயாரானோம்.

ஏராளமான கோவில்கள் இருந்தாலும் முதலில்  Tanah Lot என்ற கோவிலுக்குப் போறோம்.  சுமார்  21 KM வடக்கே கடற்கரையோரமா இருக்கு.  கூட்டா ஏரியாவை விட்டு வெளிவர  ஒருவழிப்பாதைதான். போறவழியில் கடைத்தெருக்களையெல்லாம் கடந்து போகணும்.  ஊரைவிட்டு வெளிவந்துட்டால்.....   வழியெல்லாம் சிற்பங்களே!  ஏராளமான புத்தர்களும் புள்ளையாருமாத்தான் இருக்காங்க. காங்க்ரீட் சிற்பங்கள். கூடவே என்னென்னமோ சாமிச்சிலைகள். பார்க்க த்வாரபாலகர் மாதிரியே இருக்கு.  எல்லா சின்ன பெரிய கோவில்களில் எல்லாம் வாசலில் ரெண்டு பக்கம் கட்டம்போட்ட துணி கட்டிக்கிட்டு நிற்கறாங்க.


வீட்டுத் தோட்டங்களில் வைக்கும் அலங்காரச் சிலைகள்,  அலங்கார விளக்குகள். மரச்சாமான்கள் இப்படி கடைகள்  வரிசையாக் கண்ணில் பட்டுக்கிட்டே இருக்கு. பேசாம சிலவற்றை வாங்கிக் கப்பலில் அனுப்பிக்கலாமான்னு ஆசை வந்தது நிஜம்.

பசுமையோ பசுமைன்னு கண்ணுக்குக் குளிர்ச்சியான நெல்வயல்களும் மரஞ்செடி கொடிகளும். அலங்காரச் செடிகள் விற்கும் நர்ஸரிகள்  அடுத்தடுத்து சாலைகள் ஓரமாக ஏராளம். வழியில் தென்பட்ட வீடுகளின் முற்றத்தில் முதலில் இருப்பவை எல்லாம்  குடும்பக் கோவில்களே.  நல்லா அழகா ஓரம் கத்திரிச்ச வைக்கோல் கூரைகளுடன்  சின்னதும் பெருசுமா வரிசைவரிசையா காம்பவுண்டு சுவருக்குள்ளில் இருந்து தலை உயர்த்திப் பார்க்குது.

இந்தப் பயணப்பதிவில்  நாட்டைபற்றியோ, அங்குள்ள மக்களின் மனோபாவங்களைப்பற்றியோ  அதிகமா ஒன்னும் எழுதப்போறதில்லை. நம்ம கோவி.கண்ணன்  அவருடைய 'காலம்' பதிவில் ரொம்பவே விலாவரியா  இந்துத் தீவுன்னு 10 பகுதிகளில் அருமையான தொடர் எழுதி இருக்கார். அதை ஒரு எட்டு போய் பாருங்க.  படிக்காதவர்கள்  இந்தச் சுட்டியில் இருந்து நூல் பிடிச்சுப்போகலாம்.



http://govikannan.blogspot.co.nz/2012/02/1.html


தீவில் கிட்டத்தட்ட 85 சதவீதம் ஹிந்து மதம் சார்ந்த மக்களே இருக்காங்க. இந்தோனேஷியாவில் ஏராளமான தீவுகள் இருந்தாலும்  இந்த பாலித்தீவில் மட்டும்  ஹிந்துக்கள் எப்படி வந்துருப்பார்கள்? அநேகமாகப் புதியவரைச் சந்திக்கும்போது 'பேச்சுவாக்கில் ஹிந்துவா' ன்னு கேக்கறாங்க. ஆமாம்னு சொன்னதும் பெருமிதம் கலந்த குரலோடும் புன்னகையோடும் நானும் ஹிந்துன்னு சொல்லும்போது பார்க்கணுமே!

தொடரும்........:-)







கல்லா கட்டும் புனிதப் பாம்பு? (பாலி பயணத்தொடர் 5 )

$
0
0
சொன்னால் நம்பமாட்டீங்க...... இந்தோனேஷியா நாட்டில்  சின்னதும் பெருசுமா பதினேழாயிரத்து  ஐநூற்று எட்டு தீவுகள் (17,508 ) அடங்கி இருக்கு.  ஐயோடா..... இவுங்க ரூபாயைப் போலவே இதுக்கும் ஏராளமான எண்கள்!  இதுலே  ஒரு குட்டித்தீவுதான் நம்ம பாலி! நாட்டின் மொத்த ஜனத்தொகை 237.4 மில்லியன்ஸ்,2011 சென்சஸ் படி. இதுலே பாலி மட்டும் 4.2 மில்லியன். அட! எங்க நியூஸியின் மக்கள்தொகையேதான்!!!!   ஆனால் பரப்பளவில்  நியூஸியில்  46 இல் 1 . குறுக்கும் நெடுக்குமாப் பார்த்தால்  வடக்குலே இருந்து  தெற்கு 112 கி மீ, கிழக்குலே இருந்து மேற்கு 152 கிமீ.


சுமார் ஒரு மணி நேரப்பயணத்தில்  டனா லாட் வந்துருந்தோம்.  உள்ளெ நுழையவே கட்டணம் உண்டு. ஆளுக்கு  முப்பதாயிரம். கார் பார்க்கிங் அஞ்சாயிரம். பெரிய அலங்கார வாயில் முகப்பு. பாலி நடனமங்கையர் சிலை ஒன்று கொள்ளை அழகு!  ஒரு கோபுரம்போல இருக்கும்  டிஸைனை நட்ட நடுவில் செங்குத்தா  கோடு  வரைஞ்சு  கட் பண்ண மாதிரிதான்  வாசல்கள் இருக்கு. Candi bentar வகையாம்.  வீடுகளுக்குக்கூட இப்படித்தான்.ஆனால் சின்ன உயரம்.

ஏழெட்டுப் படிகளேறி  இன்னொரு அழகான  வாசல் (Paduraksa style) வழியா உள்ளே போனோம். கொஞ்ச தூரத்துலே இருந்த மேஜைக்கருகில் இருந்த நபர் இங்கே வாங்கன்னு  கை அசைச்சுக் கூப்பிட்டு டிக்கெட் கிழிச்சுக் கொடுத்தார்.  நடுவில் பாதைக்கு இடம் விட்டு இடமும் வலமுமா  சின்னதாத் தெருக்கள்.  ரெண்டு பக்கமும் கடைகளே கடைகள். பாதையின்  ஆரம்பத்தில் ஒரு பக்கம் சின்னதா ஒரு கோவிலும் இருக்கு. அங்கே பூஜை செஞ்சுட்டு கூடையை நம்ம பக்கம் கிராமத்து ஆட்கள் தலையிலே வச்சுக்கிட்டு கை வீசி நடப்பது போல்  ஒருத்தர்  நடந்து போனாங்க.  ஆனால் சும்மாடு ஒன்னும் இல்லை கேட்டோ!!!!

மார்கெட் வழியா நடந்து போறோம். புல்லாங்குழல்   வாசிச்சுக்கிட்டு இருக்கார் ஒரு கலைஞர்.  அடுத்து வெள்ளைப் பாம்பை மடியில்போட்டுத் தாலாட்டிக்கிட்டு இருக்கார் இன்னொருத்தர். தீனிகள், துணிமணிகள் கைவினைப்பொருட்கள் இப்படி எல்லாத்தையும் ஒரு கண்ணால் பார்த்தபடியே கோவில் என்று அம்பு போட்டுக் காட்டிய பாதையில் நடக்கறோம்.

Tanah டனா = நிலம்
Lot லாட் = கடல்.
Pura  புரா  =  கோவில்
கடலோர நிலம் என்றே பொருள் சொல்றாங்க.  கடலோரக்குன்றுன்னு சொல்லப்டாதோ?

கவனமா கால் வச்சு நடக்கவேண்டி இருக்கு.  சொரசொரன்னு கல்லும் குழியுமா சமமில்லாத நிலப்பகுதி. வலது பக்கம் கொஞ்சம் உசரமான மேட்டில் ஒரு கோவில். பூசாரி உள்ளே இருக்கார். ஆனால் பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை.

இடப்பக்கமும்  ஒரு குன்றும் கோவிலும். அதைத்தாண்டி  கொஞ்ச தூரத்தில்  கடலுக்குள் முளைச்சு நிற்கும் இன்னொரு  குன்று ! அதன்  உச்சியில் ஒரு கோவில் . அலைகள் ஆவேசமா வந்து பாறைகளின் மேல் மோதும் இரைச்சல்கள்.  இத்தனைக்கும்  டைட் குறைவான சமயம் இது. Low tide.

முழங்காலளவு  தண்ணீரில் நடந்துபோய்  கடலுக்குள் இருக்கும் குன்றின் பின்பகுதியில் நிற்கும் சிறு கூட்டத்தில்  கலக்கும் மனிதர்கள்.
உள்ளூர் மனிதர்கள் முக்கியமா  கோவில்சம்பந்தப்பட்ட ஆண்கள் அனைவரும் தலையில் சின்னதா ஒரு தலைப்பாவும் கட்டம்போட்ட சாமித்துணியில் முழங்காலுக்கு மேலே வரும் அரைவேட்டியுமா இருக்காங்க.
நம்மூர் தலைப்பாக்கட்டு மக்களில் ஒரு பகுதி, ஆதிகாலத்துலே இங்கே வந்துட்டாங்க போல இருக்குன்னார் கோபால்.


புனிதப் பாம்புன்னு எழுதுன   ஒரு அட்டை  என் முதுகுப்பக்கம்  வரும் குன்றின் சுவரில் !   இந்தக் குன்றே பாம்பு வடிவத்தில் இருக்கோ...  பரந்தாமன் பள்ளி கொண்ட சேஷன்?  அட்டைத் தகவலுக்கு அடியில் குன்றினடியில்  குகை.  அங்கே ஒரு சிறு பாறைக்கு  முன்புறம் ஒருவரும் பாறைக்குப் பின்புறம் ஒருவரும் ஸ்டூல் போட்டு உக்கார்ந்துருக்காங்க. முன்னவர் முன்னே  இன்னொரு ஸ்டூலில்  ஒரு தாம்பாளம்.  பூஜைச் சாமான்கள்  ஊதுவத்தி  புகையுது.




என்னன்னு கிட்டே போய்ப் பார்த்தோம். தாம்பாளத்தில் இருந்த பணத்தைப் பார்த்ததும்   எதோ விக்கறாங்களோன்னு நினைச்சேன்.  ஹோலி ஸ்நேக்ன்னு  சொல்லி தட்டைக் காமிச்சார் முன்னவர். ஆயிரம் ரூபாயை(இதுதான் ஆகக் குறைஞ்ச சில்லறை!) போட்டதும் பாறையின் பின்பக்கம் கை காமிச்சார்.
நம்மை ஏறிட்டுப்பார்த்த பின்னவர் டார்ச் அடிச்சு பாறையில் இருந்த சின்ன பொந்தைக் காமிச்சார்.  கூடவே 'ஓம் நமச்வாயா. ஓம் நமச்வாயா'ன்னு  சொல்லி அங்கே  மூச்சு விடாமத் தலையும் வாலும் தெரியாமச்  சுருண்டு படுத்திருந்த  பாம்பைத் தொட்டுத் தடவிக் கொடுத்தார். ஹோலி ஸ்நேக்.  தொட்டுப்பார் தொட்டுப்பார்னும் சொல்றார்.


வெளிறிய சாம்பல் நிறத்தில் கறுப்பு டிசைன் போட்ட தோலுள்ள பாம்பு நாகமா இருக்குமான்னே எனக்கொரு சந்தேகம்!  கடலுக்குள் நீண்டுபோகும்  குன்றின் மேல் இருக்கும் கோவிலைக் காமிச்சு       ' இந்த ஹோலி ஸ்நேக் தினமும் இரவில்  கோவிலுக்குப்போய் சாமி கும்பிடும்' என்றார். கோவிலில் என்ன  சாமி ? ன்னு கேட்டேன்.  சிவன்!

அட!  கண்ணை ஓட்டினால்  மலையேறிப் போகும் படிகளில் ஓரிடத்தில் ரெண்டு பக்கமும் சாமித்துணி   ஸ்கார்ஃப் கட்டிய நந்திகள்.

Danghyang Nirartha என்ற பெயரில்  ஜாவாத் தீவுக்கார சாமியார்  ஒருவர் கட்டுன கோவில் இது. இவர் சைவ மதக்காரர்.  காலம் பதினைஞ்சாம் நூற்றாண்டு.  இவருக்கு டைம்பாஸே கோவில் கட்டுவதுதான். கடலோரப்பகுதிகளில் பொருத்தமா இடம் கிடைச்சால் கோவில் ஒன்னு கட்டிட்டுத்தான் மறு வேலை!  இவருடைய சிலை ஒன்னு இங்கே!

இவர் கட்டுன கோவில்களில் எல்லாம் padmasana architecture வகைகளே.  நம்ம பத்மாசனம்போட்டுக்  கால் மடக்கி உக்கார்ந்துருக்கும்  சாமிச்சிலைகள் உள்ளே இருக்கான்னு பார்க்க எனக்கு ஆவல். ஆனாலும் கோவில்களை எல்லாம் மூடி வச்சுட்டு வெளிப்புறத்தை மட்டுமே சுற்றுலாப் பயணிகளுக்குக் காமிக்கிறாங்க.  அதிலும் பெண்கள் ஒரு குறிப்பிட்ட நிலையில் இருக்குபோது   எட்டிப்பார்க்கவும் அனுமதி இல்லை. அங்கங்கே  தகவல் பலகையில்  'தடா' சமாச்சாரம் எழுதிப் போட்டுருக்கு.

இந்தக் கோவில் பழுதடைஞ்சு  அபாய நிலைக்குப் போய்  இருக்கு. ஜப்பான் அரசு இதை பழுது பார்க்க 800 பில்லியன் ரூபாய்களை தானம்  வழங்கிப் புண்ணியம் கட்டிக்கிச்சு. பழுது பார்த்து (2003 வருசம் )  சரியாப் பத்து வருசம் ஆகி இருக்கு.  இந்தோனேசியாவின்  அப்போதைய  ஜனாதிபதி மேகாவதி சோகர்னோபுத்ரி   திறந்து வச்சுருக்காங்க.

தண்ணீருக்குள் நடக்கவேணாமுன்னு தோணுச்சு எனக்கு. கோபால் மட்டும் செருப்பை  என் காலருகே விட்டுட்டு  எதிர்க்குன்றுக்குப் போனார்.  வரும்போது  நெற்றியில்  திருநீறும் கையில் ஒரு பாதிரிப்பூவுமா வந்தார். வணங்கி தட்சிணை போட்டதும் மூங்கில் குழாய் வச்சு பாறை வழியாக வரும் ஊற்று நீர் தீர்த்தம் தர்றாராம் பூசாரி. கூடவே  விபூதியும் மலரும்.  காதில் பூ ஆண்களுக்கு!   தைரியம் இல்லாத கோபால்,  பூவை எனக்குக் கொடுத்துட்டார். குன்றின் மீதுள்ள கோவிலுக்குப்போக அனுமதி இல்லை. உள்ளூர்க்காரர்கள் மட்டும் போகலாம். அதுவும் காலையில் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே!

Low tide ன்னு  சொன்னாலும் அலைகள் வந்து கற்பாறைகளில் மோதும் வேகம்  பயங்கர அழகா இருக்கு. ஓயாத   அலைகளும் அவற்றின் இரைச்சலும்!  இப்பவே இப்படின்னா.... டைடு அதிகமாகும்போது எப்படி இருக்கும்!!!! இதுலே பாம்பார் எப்படி நீந்திப்போய் சாமி கும்பிட்டு வருவார்?  அலை அப்படியே அடிச்சுக்கிட்டுப் போயிடாதோ?

நான் ஆ....ன்னு வாய் பிளந்து வேடிக்கை பார்த்துக்கிட்டே இந்தப்பக்கம் திரும்பினா கோபால் செருப்புகளில் ஒன்னு காணோம்!  கண்ணை ஓட்டினால் சின்ன அலை தூக்கிக்கிட்டுப் போகுது! ஓடிப்போய் மீட்டு வந்தேன். கால் நனைய வேணாமுன்னு பார்த்தால்.....  இப்படி ஆச்சு:)




பாம்பு குகைக்கு மேல் பாறையில் தட்டுத் தடுமாறி ஏறிப்போனால் அங்கே ஒரு புரா! பூட்டிய வாசல். ஜஸ்ட் க்ளிக்கிட்டு எதிர்ப்பக்கம் நடந்தால் சுலபமா கீழே இறங்கிப் போகும்  வழி. அடடா.... முழங்கால்வலிக்க அபாயமான பாதையிலே  ஏறி வந்தோமேன்னு.........

எதிர்வாடையிலே  நாம் பார்த்தபோது அழகான  தோட்டம்.  மக்கள் எல்லா இடத்திலும் ஏறிப்போய் பார்த்துக்கிட்டு இருக்காங்க.  கூட்டத்தில் நாமும்:-)  கொஞ்சம் சமதரையான இடத்துலே  இன்னொரு  கோவில். நோ எண்ட்ரி நமக்கு!

அதைக்கடந்து கொஞ்சம் ஏற்றமாப் போகும் பாதையில் நடந்தோம். எங்கே பார்த்தாலும் பசுமையும் பளிச்சும்!   கல் பாவிய நடைபாதை. கண்ணெதிரே கொஞ்ச தூரத்தில் கடலுக்குள் நீட்டி இருக்கும்  குன்றும் அதன் மேல் இன்னொரு கோவிலும்.  தடுக்கி விழுந்தால் புராவில் விழுவோம் பாலியில்.  இருபதாயிரம் கோவில்கள் இருக்காம்!

கடலில் மூக்கு நீட்டி இருக்கும்  டைனோஸார்  போல் இருக்கு அந்தக்குன்று. அடியில் ஒரு  பெரிய  துளை. அதன்வழியா அலை அடிச்சு வரும்போது பார்க்கவே அழகா இருக்கு!



அங்கங்கே  சின்னக்கூரைகளுடன் உக்கார்ந்து ஓய்வெடுக்க ஒரு அமைப்பு. மரக்கட்டில் போல! பேசாம படுத்தே ஓய்வெடுத்துக்கலாம்:-) கழிப்பறை வசதிகளும் ஒரு கட்டிடத்துக்குள்ளே!  நல்ல விஷயம்!

அருமையா லொகேஷன் என்பதால்  கல்யாணப்பொண்ணு முதல் கமர்ஸியல்  ஷூட்டிங் வரை படம் புடிச்சுக்கன்னே வர்றாங்க.

கடைவீதி வழியாகவேதான்  திரும்பி வெளியே வரணும்.  கைவினைப்பொருட்கள் ஏராளம்.   குறிப்பா மரச்சிற்பங்கள் அலங்கார பேனல்கள் அபாரம். குரங்குகள்  ஒரு குட்டி பூதத்தை(??!!)  உண்டு இல்லைன்னு பண்ணும் மரச்சித்திரம்  சூப்பர். ஆசையோடு பார்த்த என்னிடம்  மரச்சாமான்களை நம்ம நாட்டில் அனுமதிக்க மாட்டாங்கன்னு  ஓதினார் நம்மவர். என்ன ஒரு முன் ஜாக்கிரதை!



ஆளுக்கொரு இளநீரை  வாங்கிக் குடிச்சுட்டுக் கிளம்பினோம்.  என்ன இளநீரோ........  அரைத்தேங்காய்ன்னு சொல்லணும். அதையும்  நீரெல்லாம்  வெளியே   வழியும்  வகையில் கிட்டத்தட்ட  அரையாகப்  பாதியில் வெட்டிக் கொடுக்கறாங்க.  நம்மூர் போல நாசுக்கா மேல்பக்கம் சீவுவது இல்லை. பெரிய அரிவாளால் போடுபோடுன்னு போட்டால் வேற எப்படி வரும்?  அந்தத் தேங்காயை எடுக்கக் கூடவே ஒரு டேபிள் ஸ்பூன். கடைசியில் ஸ்பூன் வளைஞ்சதுதான் மிச்சம்:-)

டனா லாட்டில் சூரிய அஸ்தமனம் பார்க்க பெரும் கூட்டமா மக்கள்  வருவாங்களாம்.  சன்செட் பாய்ண்ட் இது.  அஞ்சுமணிக்கு  கூட்டம் அம்முமாம். நாம்தான் ரெண்டுக்கெட்டான் நேரமா வந்துருக்கோம் போல!



தொடரும்..........:-)






இரு நிலவு!!!

$
0
0
நேத்து சூப்பர் மூனைக் கோட்டை விட்டுட்டதால் இன்னிக்கு ரெண்டு நிலாவாப் போட்டுருக்கேன்.






 மந்திரமில்லை மாயமில்லை..... தந்திரமில்லை பார்த்துக்கோங்க:-))))

யப்பா... என்னெவிட்டுப் போகாதேப்பா........... (பாலி பயணத்தொடர் 6 )

$
0
0
கோபாலின் காலைக் கட்டிப்புடிச்சுக்கிட்ட சின்னது  இப்படித்தான் நினைச்சு இருக்கும்!


அதுக்குள்ளே இன்னொன்னு ஓடி வந்து  எனக்கு என்னாப்பா வாங்கியாந்தேன்னு  ஷார்ட்ஸ் பாக்கெட்டைக் குடையுது:-)


ஒன்னும் இல்லை செல்லங்களான்னு கையை விரிச்சுக் காமிக்கிறார் இவர்.

இது எதையுமே எதிர்பாராத நான்  கேமெராவைக் கிளிக்கவும் விநாடி நேரம்  மறந்து போனேன் என்பதே உண்மை.


கூடவே வந்த கைடு மேடி (இங்கேயும் மேடிதான்!) அங்கெ பாருன்னு  கண் உயர்த்திக் காமிச்சதும் அதிசயமாத்தான் போச்சு.  தலைக்குமேல் ஒன்னு !

அப்புறம் அது தோளில் இறங்கி நிக்குது.  சடார்னு க்ளிக்கிட்டேன். (வீடு திரும்பி,  மகளிடம் காமிச்சபோதுதான்  'பாப்பா இருக்கு' என்று  சொன்னாள்.)

கணினியில் படங்களை லோடு செஞ்சு பெருசாக்கிப் பார்த்தால் முத்துப்போல் கண்  முழிச்சுப் பார்க்குது பேபி!!!!


என்னைவிட்டு ஓடிப்போகமுடியுமா  நாம் இருவரல்ல மூவர் என்று தெரியுமா?

டனாலாட்டிலிருந்து  Alas Kedaton  என்ற இடத்துக்குப் போயிருக்கோம். இதையும் தேடிபார்த்து வச்சுக்கிட்டுச் சொன்னவர்  நம்ம கோபால்தான். வெறும்18 கிமீ பயணதூரம்.  அவ்வளவாக் கூட்டமில்லாத சாலை. காமணியில் வந்து சேர்ந்துருந்தோம்.

நுழைவுக் கட்டணம் இங்கே ஆளுக்குப் பதினைஞ்சாயிரம் ரூபாய். பார்க்கிங் சார்ஜ்  இல்லை.

இங்கே பாலியில்  நுழைவுக் கட்டணம் செலுத்த தனிக் கட்டிடத்தில்  கவுண்ட்டர்கள்  முகப்பிலேயே வச்சுருக்காங்க.  அதை வாங்கிக்கிட்டுக் கொஞ்சதூரம் போனதும்தான் டிக்கெட் கிழிச்சுக் கொடுக்கும்  இடம் வருது.

இது   ரொம்பவே ' ஸ்நேகமுள்ள  குரங்கன்'மாரின் காடு.  Friendly Monkey Forest .  மொத்தம்  கிட்டத்தட்ட  முப்பது ஏக்கர்கள். நுழைவு வாசலில்  டிக்கெட் கிழிச்சுக் கொடுக்கும்போதே  நமக்கான ஒரு  கைடும்  கிடைக்கறாங்க. கையில் ஒரு நீளமான குச்சி. சும்மா ஒரு இதுக்குத்தானாம். கோலெடுத்தால் குரங்கு ஆடாதோ?

வாசலைக் கடந்து போகும் பாதையின் ரெண்டு பக்கமும் சின்னச்சின்ன கடைகள்.  கடைகளின் வெராந்தாவில்   நண்பர்களின்  நடமாட்டம். நமக்கு அவ்வளவா பரிச்சயமில்லாத முகங்கள். இவுங்கெல்லாம் macaque வகையினர்.

நொறுக்குத்தீனி வாங்கிப்போடுவீங்களான்னு  மேடி கேட்டதுக்கு  இருபதினாயிரம் எடுத்துக்கொடுத்தார் கோபால். ஆனால்.... அவுங்க ரெண்டேரெண்டு சின்னப்பொதி வெறும் நாலாயிரத்துக்கு வாங்கி வந்துட்டு மீதிக் காசைக் கையில்  கொடுத்தாங்க. (ஐ மீன் நம்ம கையில் !)


பொதியைப் பிரிச்சதும் நண்பர்கள் ஓடி வந்து கையில் இருந்து எடுத்துக்க ஆன நேரம்  ஒரு விநாடிக்கும் குறைவுதான்!


இந்தக் காட்டுக்குள்ளே  மூணு பகுதிகள்  இருக்காம்.  உள்ளே  மலைப்பாம்பு, ராக்ஷஸ  சைஸ் வௌவால்கள்  எல்லாம் இருக்கு.  கடைகள் உள்ள வெளிப்பகுதியை ஒட்டியே ஒரு கோவில்.  ஹனுமன் கோவிலோ?  இந்தக் குரங்கன்மாரெல்லாம்  கோவிலுக்கான காவல்தெய்வங்களா (வும்) இருக்காங்க(ளாம்).  புனிதக்குரங்கர்!

சுமார்  24 விதமான மரக்கூட்டங்கள்,   வசிக்கும் 'மக்களுக்கு' ஏத்தமாதிரி படு செழிப்பா வளர்ந்து நிற்கும் அடர்த்தியான காடு இது.


இதைப்போல  புனிதக் குரங்குக்காடுகள்  இந்தத் தீவில் இன்னும் நாலைஞ்சு இருப்பதாகவும் கேள்வி. ஆனால்  ரொம்பவே ஸ்நேகம் என்றால் அது இங்கே மட்டுமே! மேடிக்கு இதைச் சொல்லும்போதே ஏகக்குஷி!


பாலித் தீவு ஹிந்துக்களுக்கு ஒரு வருசம் என்பது ஒன்பது மாசங்கள்தான். அதனால் ஒவ்வொரு 210 நாட்களுக்கும் ஒரு வருசப்பிறப்பு வந்துருது.  வருசப்பிறப்புக்கு இந்த  ஹனுமன் கோவிலில்  திருவிழா நடக்குதாம்.

கேட் மூடிக்கிடந்த கோவிலை உள்ளே போய்பார்க்க விருப்பமான்னு கேட்டதுக்கு  ஆமாமுன்னு சொல்றதுக்குப் பதிலா வேணாமுன்னு தலை ஆடிருச்சு:(  உள்ளேதான் சாமி இல்லையேன்னு  ஒரு எண்ணம். ப்ச்.....   போகட்டும்   .......



மேடிக்கு எதாவது  கொடுக்கணுமுன்னு  காசை வெளியில் எடுத்தால்.... எனக்கு கைடு கூலி ஒன்னு வேணாம். இங்கே நான் வச்சுருக்கும் கடையில் எதாவது வாங்கினால் போதுமுன்னு  சொல்றாங்க.  முகப்பில் நாம் பார்த்த கடைகளின் பின் வரிசைகளிலும்  ஒரு பத்துப் பதினைஞ்சு கடைகள் இருக்கும்.

கடையின்  கதவாக  இருக்கும்  ஒரு துணியை (குரங்கன்மார் துணிக்கு அடியில் நுழைஞ்சு  எளிதாப் போகலாம்)  எடுத்தவுடன் கடைப்பொருட்கள் கண்ணில் பட்டன. நினைவுப்பொருட்கள், டீ ஷர்ட்ஸ், ஸராங் இப்படி.  பத்து பாதிரிப்பூ அஞ்சு நிறங்களில் இருக்கும்  பத்து ஹேர்க்ளிப்புகள் இருக்கும் அட்டையை வாங்கினேன்.  கூடவே மரத்தால் செய்த   சின்ன சைஸ் முகங்கள் (ராமர் & சீதா)  ரெண்டு.

மரச்சாமான்கள் கொண்டு போக முடியாது என்பது மறந்து போச்சா? வேணாம் வெணாமுன்னு பதறினார் கோபால். டிக்ளேர் செஞ்சுக்கலாம்.  ட்ரீட்டட் வுட் என்பதால் விட்டுருவாங்க.அப்படி இல்லைன்னா.... போயிட்டுப் போகுது.

நாளைக்குப் போகும் ஊர்,  கலைப்பொருட்களுக்குப் பேர் போனது. அங்கே பார்க்கலாமேன்னு இழுத்தார்.  அட! அப்படியா அங்கேயும் வேறெதாவது வாங்கலாம் என்றதும் கப்சுப்:-))))

பூவுக்கு ஒரு அம்பதாயிரம், முகங்களுக்கு  பேரம் பேசி  நூற்றியம்பதை பாதியாக் கேட்டு  எழுபத்தியஞ்சு.

திரும்ப கார் பார்க் வரை கூடவே வந்து வண்டியில் ஏறும்வரை  கையில் குச்சியோடு  நின்னாங்க மேடி.  குரங்கன்ஸ் எந்த ஒரு தடையும் இல்லாம  கார்பார்க் முழுசும் ஓடித் திரியுதுங்க.



வண்டியில் ஏறுனதும் ஆர்வ மிகுதியால்  இதுவரை க்ளிக்குன படங்களை ரீவைண்ட் செஞ்சு பார்த்தேன். இந்த 39 வருசத்துலே இவ்ளோ சிரிச்ச முகமாவும், திருப்தியான மனசோடும்  கோபாலை  பார்த்ததா ஞாபகமே இல்லை:-))))))


வெறும் இருபது நிமிட சொர்கம்!


தொடரும்...........:-)))))






ராஜான்னா ராஜாதான் இல்லே? (பாலி பயணத்தொடர் 7 )

$
0
0
மெங்வி தேசத்துக்கு ராஜகுடும்பத்தின் கோவிலுக்குள்ளே நுழையறோம்.Pura Taman Ayun ,  Desa Mengwi  தெருவிலிருந்து அகழிப்பாலம் போகுது. அகழி நல்ல அகலம். முப்பதடி  இருக்கும். முதலை இருக்கான்னு கண்ணு தேடுச்சு. நாம் , குரங்கன்ஸ் பார்த்த குஷியில்  கிளம்பிக்  காமணியில் இங்கே வந்துட்டொம். எல்லாம் அப்படி ஒன்னும் அதிக தூரமில்லை.  வெறும் ஏழே கி மீ.  முன்னாடியே நல்லா ப்ளான் போட்டு வச்சு , நமக்கு  நல்ல ஒரு கைடும் காரும் இருந்தால்  நாலே நாளில் மொத்த பாலியையும் இண்டு இடுக்கு விடாமல் பார்த்துறலாம்.  சின்னத்தீவுதான்.

பொதுவா சுற்றுலாப் பயணிகளுக்கு முகம் சுளிக்காமத்தான் மக்கள்ஸ் இருந்தாலும்,  நாமாகக் கேட்டால் மட்டுமே  உள்ளூர் சமாச்சாரங்களும் விவரங்களும் சொல்றாங்க. என்ன இடம் சொல்றோமோ அதுக்கு இவ்ளோ சார்ஜ்ன்னு  காரோட்டிகள்  'கோடி 'காமிச்சு,  நாம் பேரம் பேசிக்கணும். நம்ம காரோட்டி ந்யோமேனின்  முதலாளிக்கு  ஏழு வண்டிகள்  இருக்கு. அவை எல்லாமே இதே ஹொட்டேலுக்குன்னு ஒப்பந்தம் போட்டுருக்காராம். வாசலில் நிற்கும் வண்டிகள் எல்லாம் ஒரே கம்பெனிக்கு உரியவைகளாம்.
அஞ்சு வருச அனுபவம் இந்தக்கம்பெனியில் நம்ம ந்யோமேனுக்கு!

கோவிலுக்கு நுழைவு சார்ஜ் ஆளுக்கு பதினைஞ்சாயிரம். கார் பார்க் வெளியேதெருவில் என்பதால்  இலவசம்தான். டிக்கெட் கொடுக்கும்போதே கோவில்பற்றிய 'சரித்திரக்குறிப்பு ஒன்னும் தர்றாங்க.  அதை வாசிக்கும்போது சின்னதா ஒரு குழப்பம் வந்தது உண்மை.  மெங்வி ராஜாங்கம்  ஆரம்பிச்சது 1627 BC.    ராஜாங்கத்தின் முதல் ராஜா   Gusti Agung Ngurah Made Agung கோவிலைக் கட்டுனது  1634 AD ஆண்டு. தட்டச்சுப் பிழையாத்தான் இருக்கணும், இல்லை?


ராஜ குடும்பத்திற்கான தனிக் கோவிலாத்தான் இதைக் கட்டி இருக்காங்க. குடும்பத்தில் இறந்த முன்னோர்களுக்குத் தனித்தனி சந்நிதிகள், குடும்ப தெய்வங்களுக்கும், மற்ற பெரிய தெய்வங்களுக்கும்  பகோடா ஸ்டைலில்  மேரு என்ற அடுக்கு கோபுரங்கள் இப்படி. இந்த  அடுக்கெல்லாம்  அழகா வெட்டிய  ஓரங்கள் உள்ள  வைக்கோல் வச்ச கூரைகள்தான். எத்தனை அடுக்கு இருக்கோ அத்தனை  சக்தி அந்த தெய்வங்களுக்கு!  அங்கேயும்  க்ளாஸ் இருக்கு பாருங்களேன்!


 நம்ம மேருமலையைத்தான் சிம்பாலிக்கா மேருன்னு இவுங்க கட்டுறாங்க. வைக்கோல் கூரைன்னு நான் நினைச்சது  வைக்கோலே இல்லையாம்.  கருப்பு வகைக் கரும்பின் தோகையாம். ஓலை மாதிரிதானே இருக்கு. ஆமாமில்லே!!!


 புரா டமன் அயூன்  (Pura Taman Ayun ) என்று பெயர். அழகான தோட்டக்கோவில் என்று இதற்கு பொருளாம்.   பாலியில் இருக்கும் புகழபெற்ற ஏழு கோவில்களில் இதுவும் ஒன்னு.  பெயருக்கேத்தாற் போலவே  பெரிய தோட்டம் கோவிலுக்குப் பின்புறத்தில் பரவிக்கிடக்கு.  மொத்தம் 10 ஏக்கர் நிலம். இந்தக் கோவில் மூணு பகுதியா அமைஞ்சுருக்கு.


கோவிலைச் சுற்றிப்போகும்  அகழியைக் கடந்து  பாலி ஸ்டைல்  Candi bentar (நேர்பாதி கட் ஸ்டைல் )கேட் கடந்து முன்புறத்தோட்டத்திற்குள் நுழையறோம். விஸ்தாரமான கோவிலின் நான்கு மூலைகளிலும்  சின்னக்குடில் போன்ற  அமைப்புகள். காவல் தெய்வங்களுக்காக இருக்கலாம். வலப்பக்கம் டிக்கட்டு கவுண்ட்டர். அங்கே ஏராளமான பச்சைக்குடைகள்  ஒரு பீப்பாயில் போட்டு வச்சுருக்காங்க.   விருந்தினர்கள், மழையோ வெயிலோ கஷ்டப்படவேணாம். இதுதான் ராஜ உபசரிப்பு என்பது.


இடப்பக்கம் பெரிய ப்ரமாண்டமான புல்வெளி.  அதில் செயற்கை நீரூற்று.  கவுண்ட்டருக்கு எதிர்ப்புறமா சின்னதா ஒரு சந்நிதி. கோவில் பூனை ஒன்னு பூஜை செய்ய வந்துருக்கு!



 கல்பாவிய நீண்ட பாதையின்  வலப் பக்கம் ஒரு அழகான கட்டிடத்தில் ரெஸ்ட் ரூம்ஸ். வெரி குட்.

ஏழெட்டுப் படிகளுடன் உள்ள இன்னொரு ஸ்ப்ளிட் கேட் வாசல் கடந்து  உள்ளே போனால் பரந்த புல்வெளியின் நடுவில் காவல் மாடம்போல் வச்ச உயர்ந்த சிம்மாசனம்  ஒன்னு.  ராஜா அங்கே உக்கார்ந்து  தன் நாட்டைப் பார்வையிடலாம் போல!   (அப்புறம் விசாரிச்சப்ப சொல்றாங்க.... கோவில் மணி கட்டி இருக்காம். மரமணி என்பதால் நான் சரியாக் கவனிக்கலை. கண்ணாடி மாற்றும் நேரம் வந்துருக்கு)



அழகழகா  சின்னச்சின்ன குடில்கள் புல்கூரை அமைப்புடன்  அங்கங்கே.  டிக்கெட் செக்கிங் கூட இப்படி ஒரு குடிலில்தான்! பெரிய சாவடி ஸ்டைலில்  சில கட்டிடங்கள்.  உச்சிவெயிலுக்குப் படுத்தால் தூக்கம் அப்படியே இழுத்துரும். திருவிழா சமயங்களில் கலை நிகழ்ச்சிகள் இங்கே நடத்துவாங்களாம். அட! அரங்கு!

பாதையின் இடதுபக்கம் பிரியும் பகுதியில் ரெண்டு சாவடிக் கட்டிடங்கள். ஓவியர் ஒருவர் வரைஞ்சுக்கிட்டு இருக்கார். ஏகப்பட்ட அழகான ஓவியங்கள் வரிசைகட்டி நிக்குது. விற்பனைக்கு இருக்கலாம். நாம் ஒன்னும் கேட்டுக்கலை:(  செவ்விளநீர் குலை ஒன்னும் பாதிரிப்பூக் கொத்து ஒன்னும் மனசை அள்ளுச்சு.காலையில் நாம் பார்த்த டனாலாட் கூட அருமையா வரைஞ்சுருக்கார்.







இரண்டாம்  (நடுப் பகுதி) பிரகாரம் (?) முடிஞ்சு  கருவறைக்குடில்கள் இருக்கும்  முதல் பகுதிக்குப்போக கதவுள்ள மூடின வாசல் (Paduraksa style) ஒன்னு இருக்கு.  வழக்கம்போல் சுற்றுலாப்பயணிகளுக்கு அனுமதி இல்லை. ஆனால் கோவிலுக்குள்ளே என்ன இருக்குன்னு  பார்க்கும் வகையில்  சுற்றுச்சுவரை சின்ன உயரத்தில் கட்டி இருக்காங்க.




ஒரு நாலடிச்சுவர்.  வலம் வர நல்ல கல்பாவிய பாதை.  இந்த பாதையில் வலம் வரும்போது நமக்கிடது பக்கம் மரங்களும் செடிகொடிகளும் அடர்ந்த   அழகான தோப்பு.   மங்குஸ்தான், ரம்புத்தான்,  மாங்காய், டூரியன் வகைப் பழமரங்களும்  ஏராளம்.  பாதிரிப்பூ, செம்பகப்பூ, மனோரஞ்சிதம் ஆகிய   வாசனை மலர்களுக்கான  மரங்களுக்கும் பஞ்சமில்லை.  தோட்டத்தின் அக்கரை அகழியை ஒட்டியே போகுது.

தோப்புக்குள்ளே இருந்து அங்கும் இங்குமா அகால நேரத்துலே சேவல்கள்  விடாமக் கூப்புடுது!  இந்நேரத்துக்கு  என்ன கொக்கரக்கோ!!!!


நாம் எட்டிப்பார்க்கும் உட்பிரகாரத்தில்  சுற்றிலும்  இன்னொரு சின்ன அகழி. அல்லிப்பூக்கள் நிறைந்து  அழகாச் சுத்தி வருது.  நடுவில்தான்  சந்நிதிகளுக்கான சின்னச் சின்னக் குடில்கள். பதினோரு அடுக்கு மேருகள் முதல்  மூணடுக்குகள் வரை!  சிவனுக்கு  பதினொரு அடுக்கு. ப்ரம்மாவுக்கும் விஷ்ணுவுக்கும் ஒன்பது அடுக்குகள். (ஹா.... ஒரு படி கீழே!)


குடும்பக் கோவில்களில் கூட  அடுக்குகளை எண்ணினால் அவுங்க என்ன சாதின்னு தெரிஞ்சுருமாம்.  பதினோரு அடுக்கு  ராஜ வம்சம். அப்புறம் ஒரு அடுக்கு(?)  கீழ் சாதி. இடைப்பட்டவை எல்லாம்  அந்தந்த சாதிகளின் மதிப்புக்குத் தக்கபடியாம்.  இந்தியாவில் இருந்து போன மதம் சாதியை உதறித்தள்ளாமக் கூடவே கொண்டு போயிருக்கு பாருங்க:(


'டேவி ஸ்ரீ ' (Dewi Sri) என்ற அதி முக்கிய தேவதைக்கு ஒரு சந்நிதி வச்சுருக்காங்க. நானும் கையெடுத்துக் கும்பிட்டேன்.  போகும்வரை சோத்துக் கவலை இருக்கவேணாம் பாருங்க. அன்ன லட்சுமி தேவி ஸ்ரீ அரிசிக்கான சாமி.

சுட்ட படம். நன்றி விக்கியண்ணே /\

அங்கங்கே  பிரமாண்டமான  சாவடிகள்.  பூஜை புனஸ்காரம் நடத்துவாங்க போல. பூனைகள் ஓடித் திரியுதுகள். அங்கங்கே தினம் சாமிக்குப் படைக்கும்  ஓலைத்தட்டு சமாச்சாரங்களில் இருக்கும் முக்கிய வஸ்து ஒருவேளை இவுங்களுக்கான ஸ்பெஷலாகக்கூட  இருக்கலாம்.  கருவாடு வேணாமுன்னு  பூனை சொல்லுமா என்ன?

மெங்வி (MENGWI) மஹாராஜாக்கள் கோலோச்சி வளமா  இருந்தாங்க. பத்து தலைமுறை ஆகி இருக்கு.  அப்போ 1890 வது வருசம் பக்கத்து தேசமான படுங் (BADUNG)மகாராஜா இவுங்களோடு போர் தொடுத்தார்.

இந்த ரெண்டு தேசத்துக்கும் இடையில் இருக்கும் தூரம் வெறும் அஞ்சு கிமீதான்! உழக்குக்குள் கிழக்கு மேற்கு பார்த்த மாதிரிஒவ்வொரு கிராமமும் ஒவ்வொரு தேசமாத்தான் இருந்துருக்கு அப்ப.

போரில் வெற்றி படுங் ராஜாவுக்கே!  தோல்வியடைஞ்ச மெங்வி ராஜா  பாலித்தீவின் வடகிழக்குப்பக்கம்  குடிபெயர்ந்துட்டார்.  மெங்வி நாடு இப்போ படுங்கோடு சேர்ந்துருச்சு. படுங் ராஜா... தன் ஆட்சிக்குக்கீழ்வந்த மெங்வி நாட்டை சரியா கவனிக்கலை.  கோவிலும் பராமரிப்பு இல்லாம பாழாக ஆரம்பிச்சது.  நல்லவேளை ஒவ்வொரு ராஜாக்கள் போல  தோல்வி அடைஞ்ச நாட்டுக் கோவில்களை இடிச்சுத்தள்ளி பாழாக்கலை என்ற வரை நிம்மதி!

ஆச்சு 21 வருசம்.  மெங்வி ராஜ குடும்பத்தில் சிலர் மீண்டும் மெங்வி தேசத்துக்குத் திரும்பிவந்தாங்க. கோவிலின் கதி பார்த்து ரத்தக்கண்ணீர் வந்துருக்கு. மெள்ள மெள்ள கோவிலைத் திருப்பிக்கட்டும்  பணியை ஆரம்பிச்சாங்க. இது 1911 வது வருசம்.

படுங்  ராஜா எதிர்ப்பு ஒன்னும் தெரிவிக்கலை போல. நல்லதாப்போச்சுன்னு  இருந்துருக்கலாம்.

எல்லாம் நல்லபடியாப்போய்க்கிட்டு இருக்கும்போது  ஜனவரி 20, 1917 இல் ஒரு பெரிய நிலநடுக்கம்.  இடிஞ்சு விழுந்த ஏராளமான பழங்கோவில்கள், கட்டிடங்கள் கூட்டத்தில் இந்த ராஜகுடும்பக் கோவிலும் ஒன்னு:(
படிப்படியா பழுது பார்த்து மீண்டும் நல்ல நிலைக்குக் கொண்டு வந்துட்டாங்க. பாரம்பரிய சரித்திரப்புகழ் இருக்குன்னு யுனெஸ்கோ நிதி உதவி செஞ்சுருக்கு.


கோவிலைச் சுற்றி வரும்போது ஒவ்வொரு மூலையிலும்  கூண்டு ஒன்னு. அதில் சேவல்.  உள்ளூர் வாஸ்து போல!


அப்புறம் கோபால் ரெஸ்ட்ரூம்வரை போனவர் சேதி கொண்டு வந்தார். இங்கே சேவல்சண்டை நடக்குமாம். அதுக்கான ஒரு அரங்கு ரெஸ்ட் ரூம் போற வழியில் இருக்குன்னார். அரங்கு இருக்கட்டும் படம் இருக்கான்ன்னா.... எடுத்தாச்சுன்னார். அது போதும். வாஸ்து பிரச்சனை இல்லைன்னு  தெரிஞ்சுக்கிட்டோமே:-)



பகல் ஒன்னேகால் ஆச்சு. போதும் பார்த்தது.  கொஞ்சம் ஓய்வு வேணும். அறைக்குப் போகலாமுன்னு கிளம்பி 21 கிமீ பயணம் செஞ்சு ஹொட்டேலுக்கு வந்தோம். இதுக்கே  பகல் மணி ரெண்டு.


மாலை நாலு மணிக்கு மீண்டும் கிளம்புவதா ப்ளான்.  ட்ராஃபிக்  ஆரம்பிச்சுரும். அதனால் மூணரைக்குக் கிளம்பினால் சரியா இருக்குமென்றார்  நம்ம ந்யோமேன். சரி, நீங்களும் போய் சாப்பிட்டு ஓய்வெடுங்கன்னு சொன்னார் கோபால்.

தொடரும்.......:-)


Viewing all 1429 articles
Browse latest View live


<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>