Quantcast
Channel: துளசிதளம்
Viewing all 1430 articles
Browse latest View live

மலை முகடு என்னும் உலுவாட்டு .......... (பாலி பயணத்தொடர் 8 )

$
0
0
ஒன்னேகால் மணி நேரப் பயணத்தில் சின்னதா ஒரு மலைப்பாதை வழியா வந்து சேர்ந்த இடம் உலுவாட்டு.  நம்ம ந்யோமேன் சொன்னதுபோல  கொஞ்சம் ட்ராஃபிக் அதிகமே. தூரம் என்னவோ ஒரு 29 கி மீதான். கூட்டாவில் இருந்து  கிளம்பி தென்மேற்குக் கடலோரம்  வரணும்.


குன்றின் மேலே இருக்கும் கார் பார்க் பெருசாத்தான் இருக்கு.  உலுவாட்டு கோவில் பார்க்க ஆளுக்கு  இருபதினாயிரம் ரூபாய் கட்டணம்.  டிக்கெட்டைக் கிழிச்சுக் கொடுத்துட்டு ஒரு பர்ப்பிள் கலர் துணியை கோபாலின் இடுப்பில் கட்டிவிட்டாங்க. முழிச்சுப்பார்த்துக்கிட்டு இருந்த என்னிடம் ஒரு அகலமான மஞ்சள் ரிப்பன் கொடுத்து இடுப்பில் கட்டிக்கச் சொன்னாங்க. கோவிலில் இருக்கும் தெய்வங்களுக்கு நாம்செய்யும் மரியாதையாம் இது!

இந்தக் கோவில் தீய சக்திகளிடம்  இருந்து பாலித்தீவு முழுசையும் பாதுகாப்பதாக ஒரு ஐதீகம். இங்கே நாம் என்ன மாதிரி நடந்துக்கணுமுன்னு எச்சரிக்கை எழுதிப்போட்டுருக்காங்க. புனிதக் கோவில்!

வாசல் கேட்டைக் கடந்து மரங்கள் அடர்ந்த  கல்பாவிய பாதையில் போறோம். கொஞ்ச தூரத்தில் ஒரு இடத்தில்  சின்னக்கூட்டம் இருப்பதைப் பார்த்து 'என்ன ஆடுது'ன்னு கேட்டுக்குள் எட்டிப் பார்த்தேன். குரங்கன்ஸ்க்கு  ரெண்டுபேர் தின்னக் கொடுத்துக்கிட்டு இருந்தாங்க. அப்பக் கட்டைசுவர்மேலே ஏறி நம்ம பக்கமா வந்த குரங்கை நான் கவனிக்கலை. கண்ணாடி கண்ணாடின்னு ஒரு ஆள்  அதட்டுனார். ஐயோ...எச்சரிக்கையை எப்படி மறந்தேன்! நல்லவேளையா சட்ன்னு இடம்  விட்டேன்.

(ஏய்....கிட்டவராதே..... க்ளிக்கிருவேன்.....)

இன்னும் கொஞ்சதூரம் போனதும்   இந்தக் கோடிக்கும் அந்தக் கோடிக்குமா பெரிய முற்றம் ஒன்னு.முழுசும் கல்பாவிய தரை!  அதுக்குள்ளே ந்யோமேன் வந்து அன்றைக்கு  நாம் பார்க்கப்போகும்  நடனத்துக்கான டிக்கெட்டை வாங்கி  வச்சுடறேன். நீங்க எதிரில் முற்றத்துக்கு அப்பாலே இருக்கும் கோவிலுக்குப் போயிட்டு வந்துருங்கன்னார். நடனம் பார்க்க ஆளுக்கு எழுபதாயிரம் ரூபாய்.


நமக்கிடதுபக்கம் ஆர்ப்பரிக்கும்  கடல்.  கடலை எட்டிப் பார்த்தபடியே  எதிரில் இருக்கும் குன்றின் மேல் ஏறுகிறோம்.  படிகள் அங்கங்கே இருந்தாலும் உடைஞ்சு கிடக்கு.  கட்டைச்சுவருக்கு  அந்தப்பக்கம் வீசி அடிக்கும் அலைகளின் ஓசை.  டேஞ்சர் தான். இதுக்குள்ளே  பாதி வழியில்  அந்தப் படிகளில் நமக்கு எதிரா இறங்கி வரும் நபர்கள், கண்ணாடியைக் கழட்டிருன்னு எச்சரித்தார்கள். அதில் ஒருவர்  கழுத்து செயின், காது தோடு இப்படி மின்னும் சமாச்சாரமெல்லாம் ஆகாதுன்னதும்  கண்ணாடியைக் கழட்டிக் கைப்பையில் போட்டுக்கிட்டு துப்பட்டாவால் மூக்கைவிட்டுட்டு  தலை கழுத்து எல்லாத்தையும்  மூடிக்கெட்டினேன்.  கைப்பை  பத்திரம் என்றார் இன்னொருவர். போச்சுடா.....

ஊனக்கண் இனி இல்லை.எல்லாம் ஞானக்கண்ணேன்னு 'ஹலோ..... நீங்க யார்? எங்கிருக்கீங்க'ன்னதுக்கு  'அதெல்லாம் பயப்படதே நான் இருக்கேன்லெ' என்றுகுரல் கொடுத்தார் கோபால். இனி படிகள் , அபாயம் எதுவும் கண்ணுக்குத்தெரியாது.  ஈஸ்வரோ ரக்ஷிது....  கோபால் கை பிடித்துத் தட்டுத்தடுமாறி மேலேறிப்போனேன். எல்லாம் ஒரு பத்துப்படிகள்தான் இருக்கும்:-)


பத்தாம் நூற்றாண்டு கோவில் இது. அதுக்கேத்தமாதிரி  இடிஞ்சும் உடைஞ்சும்  கிடக்கு. அடுத்த சந்நிதி பார்க்கப்போனால்... தரை  நல்லாவே சமதளமா கல்பாவி இருக்கு. உள்ளே அனுமதி இல்லை. வழிபாட்டுக்கு மட்டுமுன்னு  போர்டு சொல்லுது.  உள்ளே தலைப்பாகை கட்டிய பூஜாரி தெரிஞ்சார். வெளியே நின்ன ரெண்டு தலைப்பாகை மனிதர்களிடம் ' நான்  ஹிந்துதான்.உள்ளே போய் சாமி கும்பிடணும்'  என்றதுக்கு  ஒரு விநாடி யோசிச்சவங்க.... உள்ளே படியேறிப் போங்கன்னார். நம்ம வழக்கப்படி வாசலில் செருப்பைக் கழட்டி விட்டதுக்கு,  செருப்போடே போங்க.  விட்டால் குரங்கு கொண்டு போயிரும் என்றார். மரியாதை, மனசில் இருந்தால் போதும் என்றோ!!!



உள்ளேயும் சிதிலமாகத்தான் இருக்கு.  வாசலுக்கு எதிரா ஒரு மாடத்துலே மர அலமாரி போல ஒன்னு. அதுக்கு  ஊதுபத்தி காமிச்சுட்டு  இருந்த பூஜாரியிடம் , என்ன சாமின்னு கேட்டதுக்கு  'விஸ்னு'  என்றார்.  அட நாராயணா!!!  விஷ்ணு சகஸ்ரநாமத்தில் இருக்கும்  ரெண்டு மூணு ஸ்லோகம் சொல்லிக் கும்பிட்டோம்.  கண் விரியப் பார்த்த பட்டர் தீர்த்தம் கொண்டு வந்து தந்தார். சடாரி ஒன்னும் இல்லை. பிரசாதமாக் கொஞ்சம் பூ கிடைச்சது. அலமாரிக் கதவை திறந்து காமிங்கன்னு ' கை ஜாடை'  செஞ்சதும்  சந்நிதி கதவு திறந்தது.

உள்ளே..... வெறும் மஞ்சள் துணி. பத்மாசனா என்று பல கோவில்களில்  வீட்டுக்கோவில் உள்பட  வச்சுருக்காங்களே இங்கே அப்படி  மஞ்சளா சாமித்துணி போர்த்த ஒரு வெற்றிடம். பெருமாள் ஆவாஹிச்சு இருப்பதாக  நினைச்சுக்கணும்.

நாம் உள்ளே இருப்பதைப் பார்த்து  இன்னும் சிலர் படியேறி வந்து சந்நிதிக்கு முன் நின்னு கையெடுத்துக் கும்பிட்டாங்க.

Empu (Sage) Kuturan, என்ற  சந்நியாசி  ஜாவாத்தீவில் இருந்து பாலிக்கு  பத்தாம் நூற்றாண்டுகளில் (மான்  மேலே ஏறி )வந்திருந்தார்.  அவர் கட்டுன கோவில்தானாம். அதுக்குப்பிறகு பதினைஞ்சாம் நூற்றாண்டுகளில்  பாலித்தீவுக்கு  (பூசணிக்காய் மேலே உக்கார்ந்து  கடலைக் கடந்தாராம்!) வந்த இன்னொரு சந்நியாசி Danghyang Nirartha (இவர்தான் நாம் காலையில் பார்த்த டனா லாட் கோவிலைக் கட்டியவர்) இன்னும் பல சந்நிதிகளைக் கட்டிக் கோவிலை விஸ்தரிச்சார்.  அதானே....கடலும் மலையும் இருந்தால் அங்கே  இவர் கோவில் கட்டாம விட்டால்தான் ஆச்சரியம்!




அடுத்த பகுதியைப் பூட்டியே வச்சுருக்காங்க. அதுக்குள்ளேஆடிப்பாடி ஓடும் குரங்கன்ஸ் . இதுக்கு அடுத்ததா கொஞ்சம் கீழிறங்கின சந்தில் நுழைஞ்சு இன்னொரு  ஓட்டுக்குடிலுக்கு வந்தோம்.  நல்ல கிங் சைஸ்  மரக்கட்டில்கள் ரெண்டு போட்டு வச்சுருக்கு.  கொடுத்து வச்ச சந்நியாசிகள் இல்லே!!!!


நாலடி தூரத்தில்  கட்டைச்சுவர் ஓடுது. எட்டிப் பார்த்தால்..... கிடுகிடு பாதாளமா கடலும் கரையுமா!    அடிச்சு வரும் அலை மலைப்பகுதியில் மோதி வேகம் குறைஞ்சு நிதானமா கரைக்கு வந்து திரும்புது.  அழகான  இளநீல வண்ணத்துலே லேஸ் போட்ட டிஸைன்ஸ்  உள்ள கோலம் வரைஞ்சு போகும்  தண்ணீர் பார்க்கப்பார்க்கப் பரவசம்!  எல்லா அலைகளும் இப்படிக் கோலம் போட்டுத் திரும்புமா?  ஒருவேளை  90 மீட்டர் உசரத்தில் இருந்து  பார்க்கிறோமே  அதான் காரணமா !!!




இங்கே இருந்து சூரிய அஸ்தமனம் பார்க்கன்னே ஏகப்பட்ட கூட்டம் வருது. பாலித்தீவின் தென்மேற்கில் இதுக்குன்னே வாகா அமைஞ்சுருக்கு இந்தக்கோவில்.  உலுவாட்டு என்ற சொல்லுக்கு  பாறை முனையில் என்றுதான் பொருளாம். ரொம்பச்சரி.  சரியான இடம் பார்த்துக் கோவிலைக் கட்டுன புண்ணியாத்மாவை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.




வேறெங்கேயோ செஞ்சு ஹெலிகாப்டரில் தூக்கி வந்து அப்படியே இறக்கி வச்சமாதிரி இருக்கு. அந்தக் கட்டைச்சுவர் சொன்னேன் பாருங்க.... அதுலே சாய்ஞ்சு நின்னு கீழே பார்க்கும்போது.......  சுவர் மட்டும் அசைஞ்சா... அம்புட்டுதான்:(   நேரா  ஸ்ரீவைகுண்டம்!

மலை முகட்டின் ஓரமாவே இன்னொரு  பாதை கொஞ்சம் கீழிறங்கிப்போகுது. கொஞ்ச தூரத்தில் லுக் அவுட் பார்க்கவே ஒரு குடில் கட்டுனமாதிரி இங்கிருந்து தெரியுது. அங்கே போய்வர நேரமாகுமுன்னு  இங்கே இருந்தே ஒரு க்ளிக்.

சூரியன் கடல்வாயில் விழும் சமயம் நெருங்குதே!  இன்னிக்குன்னு பார்த்து மேகக்கூட்டம் சூரியனைக் காபந்து பண்ணிக்கிட்டு இருக்கு.  ஆறுமணிக்கு நடன நிகழ்ச்சி ஆரம்பமாகுமேன்னு  கிளம்பி எதிர்குன்றுக்குப் போக வழி தேடுனால்....  இங்கிருந்து கீழிறங்க அட்டகாசமான படிவரிசை இருக்கு.  அட நாராயணா..... இது தெரியாமல்  சறுக்குப் பாதையில் போனோமே:(



இங்கிருக்கும் குரங்குகளை  கண்ணாடி, கைப்பைகளைத் திருட பழக்கி வச்சுருக்காங்களாம்  சிலர். கண்ணாடியை அது தூக்கிட்டு ஓடுனதும் உதவி செய்ய வர்றதுபோல் வந்து   இருபதாயிரம்,  முப்பதாயிரமுன்னு  பேரம் பேசி  குரங்கைத் துரத்திப்போய்  பொருளை மீட்டு வந்து  தருவாங்களாம்.  பாவம்...திருட்டுக்குரங்குன்னு  பேர்  என்னவோ   குரங்குகளுக்குத்தான்:(


குரங்கை ஓட்ட ஒரு குச்சி கிடைச்சதுன்னு அதையும் சுமந்துக்கிட்டுப் படி இறங்கி  முற்றத்துக்கு வந்தால் நமக்கான  டிக்கெட்டுகளோடு ந்யோமேன் காத்திருந்தார்.  கூடவே  நடனத்தைப் பற்றிய  ஆங்கிலக் குறிப்பு ஒன்னு.


 தொடரும்.........:-)






கீச்சக கீச்சக கீச்சக சக் சக் சக் சக்.......... (பாலி பயணத்தொடர் 9 )

$
0
0

எதிர்ப்புறம்  இன்னொரு கட்டைச்சுவர் அருகில்  போகும் ஒத்தையடிப் பாதை வழியாகப்போய் அரங்கில் நுழைஞ்சோம்.  சிமெண்டு தரை நடுவிலொரு கல் நிலவிளக்கு .  சுத்திவர  மேலேறிப்போகும் இருக்கை வரிசைகள்.  ஆம்பி தியேட்டர்!

 நாம் சீக்கிரம் போயிட்டோமுன்னு நினைச்சால் ஏற்கெனவே அங்கே  நல்லகூட்டம். கீழிருந்து ரெண்டாவது வரிசையில்  இடம் கிடைச்சது. கல்விளக்குக்கு ஒரு தலைப்பா கட்டுனவர்,  எண்ணெய் கொண்டு வந்து ஊற்றினார்.  திரியும்  போட்டார். நாம் இங்கொரு கண்ணும்  அந்திவானத்தில் ஒரு கண்ணுமாக  இருந்தோம்.  கொஞ்சம் பிரசாதத் தட்டுகளுடன் பூஜாரிஒருவர் வந்து கல் விளக்கு முன்னே  உட்காந்து பூஜை செய்தார்.   தீபமும் ஏற்றினார்.  தீவட்டி போல எரிய ஆரம்பிச்சது.


இங்கே நாம் பார்க்கப்போவது  கீச்சக் அண்ட் ஃபயர் டான்ஸ் ( KECAK & FIRE DANCE)


இன்னும் திமுதிமுன்னு  கூட்டம்  வந்துக்கிட்டேஇருக்கு.  நமக்கு முன் வரிசையும் நிறைஞ்சு  அதுக்குக் கீழே தரையிலொரு வரிசையும் ஆச்சு.  அப்படியும்  மக்கள்ஸ் வந்துக்கிட்டேதான் இருக்காங்க. ப்ளாஸ்டிக் நாற்காலிகளைக் கொண்டு வந்து  வாசலுக்கு எதிரிலும் கட்டைச்சுவர் அருகிலுமா போட்டுக்கிட்டேஇருக்காங்க.


அறிவிப்பாளர் ஒருவர்  அனைவரையும் வரவேற்ற பின்  நிகழ்ச்சி ஆரம்பிச்சது.  கீச்சக் கீச்சக் கீச்சக் என்ற குரல்கள்  மட்டும் மெள்ள ஆரம்பிச்சு ,  பலமா ஒலிக்க ஆரம்பிச்சது.  சாமித்துணியை  இடுப்போடு கட்டுன சுமார்  அறுபது பேர் அரங்குக்குள் வந்து விளக்கை சுத்தி  உக்கார்ந்தாங்க.



இந்த நடனம் பாலிமக்கள் ,  கெட்ட தேவதைகளைத் துரத்தும் நடனமா  நெடுங்காலமாக ஆடிக்கிட்டு இருந்ததுதான்.  கொள்ளை நோய்களில் இருந்து விடுபடவும், அசம்பாவிதம் நடந்த கிராமத்தைச் சுத்திகரிச்சுப் பரிகாரம் பண்ணுவதுமா ஏற்பட்ட சடங்குகளில் ஒன்னு. Sanghyang  என்ற பெயராம் அந்த சடங்கு முறைகளுக்கு.

1930 ஆண்டு Walter Spies என்ற ஓவியரும் இசைக் கலைஞருமான  ஜெர்மானிய  பயணி ஒருவர்  இதை கொஞ்சம் ஒழுங்கு செஞ்சு இப்போதைய வடிவில் ஆக்கிக் கொடுத்துருக்கார்.  பாலித் தீவு முழுசும் வெவ்வேற ஊர்களில்  வெவ்வேறு குழுக்கள் இதை ஆடிக்கிட்டு இருக்காங்க. சுற்றுலாப் பயணிகளுக்குப் பொழுது போக்கு.  உள்ளூர் மக்களுக்கு நல்ல வருமானம்.


இசைக்கருவிகள்  ஒன்னுமே இல்லை இந்த நடனத்துக்கு.  அந்த அறுபது  நபர்கள் சொல்லும் கீச்சக்  கீச்சக் தான்  இசை. வெவ்வேற தாளக்கட்டில்  வெவ்வேற ஸ்தாயிகளில்  ஆரம்பம் முதல்கடைசிவரை சுமார் ஒரு மணி நேரம்  கீச்சக் தவிர வேறொன்னுமில்லை. வெறும் கீச்சக்கா இல்லாமல்  குழுவின் நடுவில் ராமாயணமும் நடனமாகவே   நடக்குது.

 சீதையும் ராமனும் வந்து  ஆடுறாங்க .  பொன்மான் வந்து இவர்கள் முன்னால் நின்னு துள்ளி ஆடிட்டு ஓடுது. மான் வேணுமுன்னு சீதை கேட்க ,  லக்ஷ்மணனை காவல் வச்சுட்டு ராமர்  மானைப் பிடிக்கப் போயிட்டார்.


ராமர்  அலறல்  கேட்ட சீதை , லக்ஷ்மணனைப் போய் பார்த்து வரச் சொல்லும்போது  'வேணாம் தேவை இல்லை'ன்னு  அவன் ஆட.... இவள் கட்டாயம் போய் பார்க்கத்தான் வேணுமுன்னு ஆடி அடம்பிடிக்க  அவன்  கீச்சக் வட்டத்துக்குள்  அவளை விட்டுட்டுப்போறான்.

ராவணன் வந்தான். கீச்சக்கைத் தாண்டி உள்ளே வர முடியலை. திரும்பிப்போய்  சந்நியாசி வேஷம் கட்டிக்கிட்டு வர்றான். குடிக்கத்தண்ணி வேணுமுன்னு  சீதையிடம் கேக்க, அவள் வட்டம் தாண்டிப்போய்  தண்ணீர் கொடுக்க, அவளைப்பிடிச்சு இழுத்து தோளில் தூக்கிவச்சுக்கிட்டு வட்டத்துக்குள் வந்து ஆடோ ஆடுன்னு ஆடறான்.

  தோளில் சீதையோடு புறப்பட்டுப்போகும்போது ஜடாயு வந்து எதிர்க்க  அதனோடு சண்டைபோட்டு வெட்டி வீழ்த்திட்டுப் போயிட்டான்.


ராமனும் லக்ஷ்மணனும் திரும்பி வந்து பார்த்தால் சீதையைக் காணோம்!  புலம்பிக்கிட்டே ஆடித் தீர்த்தாங்க. அப்ப Twalen  என்ற  தேவதை வந்து ஆறுதல் சொல்லி சீதையைக் கண்டுபிடிக்க உதவறேன்னு சொல்லுது.

கூட்டத்தில் ஒரு சலசலப்பும் கீச்சக் குழுவின்  ஒலியில்  ஒரு மாறுதலும்.....  வெள்ளைக் குரங்கொன்னு கட்டை சுவர் ஏறிக் குதிச்சிருக்கு. அங்கங்கே கைக்கு வாகா இருக்கும்  பார்வையாளர் தலையில் பேன் பார்த்துகிட்டே அங்கிட்டு இங்கிட்டுமா  தாவி ஓடுச்சு.  அனோமேன் (ANOMAN)வந்துட்டாரு!!!


. கீச்சக் குழுவினரோடு கலந்து ஒரே ஆட்டம்.  ராமர்  தன் முன் மண்டியிட்ட அனோமேனுக்கு  மோதிரத்தைக் கழட்டிக் கொடுத்து ஆசீர்வதிச்சார்.

அஸ்தமன  சமயம் நடனம் ஆரம்பிச்சது. முக்கிய ஸீன்கள் வரவர கும்மிருட்டு. கல்விளக்கின் ஒளி மட்டுமே!  இப்படி இருக்கக் கல்விளக்கு காணாமப்போனது இப்போதான்! Alengka  Scene.

ஸீன் மாற்றம்.  அசோகவனத்தில்  சீதையும் திரிஜடையும். நளினமான விரல் அசைவுகளுடன் வழக்கம்போல் ஆடறாங்க. நாட்டிய நாடகம் என்பதால் எல்லோரும் ஆடத்தான் வேணும். ஆனால்  எந்த முக்கிய நடிகருக்கும்  (ராமர் சீதை லக்ஷ்மணன்) Bபாவம் துளி இல்லை முகத்தில் . ப்ளாஸ்டிக் முகமோன்னு சந்தேகம் வந்துரும் நமக்கு. ஆனால்.... ரியல் முகம்தான்.


இதுக்குள்ளே  சீதையைத் தேடிக்கிட்டு வந்த அனோமேன்   சீதையிடம்  கணையாழியைக் கொடுத்தார்.  கொடுத்துட்டு ஆடுனவரை அரக்கர்கள்  சண்டை போட்டுப் பிடிச்சுக்கிட்டுப்போய் கையைப் பின்னால் கட்டிட்டாங்க. அனோமேனை உக்கார்த்தி வச்சு பூஜை செஞ்சார் பூசாரி.

தேங்காய் நார் பிரி போல் ஒன்னு கொண்டுவந்து  அனுமோனைச் சுத்தி வட்டம் போட்டாங்க. தீ வச்சதும்  துள்ளிக் குதிச்சு எழுந்தார்.   தீக்குள்ளேயும் வெளியேயுமுன்னு லங்கா தகனம் ஆரம்பிச்சது.  எட்டி எட்டி உதைக்கும்போது  எரியும் நார் பறந்து இங்கேயும் அங்கேயும் விழுந்து சட்னு அணைஞ்சும் போச்சு.

ராமலக்ஷ்மணர்கள் வந்தாங்க  ராவணனுடன் போர்.  ராவணன் மாண்டான். எல்லாம் சுபம்.

நமக்கு ராமாயணம் ஓரளவு தெரிஞ்சதால் ' நடனம்' சுலபமாப் புரிஞ்சது.

மொத்த கீச்சக் குழுவும் அரங்கத்தை விட்டு ஒரு கணம் கூட அகலாமல் ஆரம்பம் முதல் கடைசிவரை சக் சக் சக் சக்  சொல்லிக்கிட்டே , ஸீனுக்கு ஏத்தாப்போல  ரெண்டா, மூணா, நாலாப் பிரிஞ்சும் சேர்ந்தும்  நின்னும் இருந்தும் கிடந்தும்  ஒரு லயத்தோடு இருந்தாங்க!

முழு நடனத்தையும்  ஒரு புண்ணியவான்  வீடியோ எடுத்து யூ ட்யூபில் போட்டு வச்சுருக்கார். அவர் நல்லா இருக்கணும்!   நேரம் இருப்பவர்கள் பார்த்து மகிழலாம். கிட்டத்தட்ட ஒரு மணி நேரம்.  நாம் எடுத்த  வீடியோ துணுக்குகளை விட இது நல்லாவே வந்துருக்கு.  க்ளிக்கலாம். அன்னாருக்கு எம் நன்றிகள்.  Thank you funkyluke2009.


முழு நடனமும்  இயற்கை ஒளியில் என்பதால்  மணிரத்தினம் படம் பார்த்த  எஃபெக்ட் நமக்கு.  கொஞ்சம் விளக்குகள் போட்டுருக்கலாம்.  நிகழ்ச்சி முடிஞ்சதும்   சின்னதா கொஞ்சம் வெளிச்சம். அட!  லைட் போட்டுட்டாங்கப்பா!!!

அரங்கைவிட்டு வெளியேறுவது கஷ்டமாப்போச்சு. பாதை சுத்தமாக் கண்ணுக்குத் தெரியலை. போதாக்குறைக்கு 'பேர் சொல்லாதது '  நடமாடும் இடமாம்.  டார்ச் வச்சுக்கிட்டு நடந்த ஒரு ஜோடியை விடாமல் தொடர்ந்தோம். பாவம்  அவரே   சமதரை இல்லாமல் இருந்த  ஒரு இடத்தில் விழத்தெரிஞ்சார்.

குறைஞ்சபட்சம்  நம்ம வீட்டுத் தோட்டத்தில்  இருப்பது போல் ஸோலார் விளக்குகளை  பாதையின் ஓரத்தில் நட்டு வைக்கப்டாதோ?  குரங்கன்ஸ் எல்லோரும்  தூங்கிட்டாங்க போல! நடமாட்டம் இல்லை:-)

ஆமாம்... நம்ம டார்ச் எங்கேன்னு கோபாலைக் கேட்டதுக்கு   ஹொட்டேல் ரூமிலே வச்சுருக்கேன்னார்:-))))

கல்பாவிய  தரை வரும்வரை தட்டுத் தடுமாறல்தான்:(

 கேட்டுக்கு அருகில் நமக்குக் கொடுத்த  'ஒட்டியாணத்தையும் ' ஸராங்கையும்  திருப்பி வாங்கிக்க சிலர் நின்னுருந்தாங்க.  ந்யோமேன்  கேட்டருகில் நமக்காகக் காத்திருந்தார்.  நேரம் ஒன்னும் அதிகமில்லை. ஏழரைதான். ஆனால் எங்கும் கும்மிருட்டு!


நடனம் பார்க்க எப்படி இவ்ளோ கூட்டமுன்னு  யோசிச்சவளுக்குக் கார்பார்க்கில் விடை  கிடைச்சது. எக்கச்சக்கமான  டூரிஸ்ட் பஸ்கள்.   மக்களைச்  சரியா  நடன நேரத்துக்குக் கொண்டு வந்து இறக்கி இருக்காங்க. நிகழ்ச்சி முடிஞ்சதும் எல்லோரும் ஜிம்பாரன் ஸீ  ஃபுட் ரெஸ்ட்டாரண்ட் போவாங்க.  சாப்பாடு நல்லா இருக்கும். உங்களை அங்கே கொண்டுபோறேன்னு சொன்ன ந்யோமேனுக்கு  கும்பிடு  போட்டுட்டு  ஹொட்டேலுக்கு வந்து சேர்ந்தோம். நாளைக்கும்  வண்டி காலை எட்டரைக்கு  வேணுமுன்னு சொல்லியாச்சு.


மூணுமாடிகளேறி அறைக்கு  வரும்போதே பயங்கர ஆயாசம். இனி ஒருமுறை சாப்பாட்டுக்குக் கீழே போகணுமான்னு  கால் கெஞ்சுது.  மணி வேற இரவு ஒன்பது. கெமெரா பாட்டரியைச் சார்ஜரில் போட்டுட்டு, ஒரு  பீட்ஸா, ரூம் சர்வீஸ்க்குச் சொல்லிட்டு  உடல்வலி போக சூடா ஒரு ஷவர்.


ஒன்பதே முக்காலுக்கு  சாப்பாடு வருது. கொண்டு வந்த இளம்பெண் மஹி, ஹிந்துவான்னு  கேட்டாங்க.  ஆமான்னதும்...... ரொம்ப சந்தோஷமா  முணுமுணுன்னு  என்னவோ நீளமாச் சொன்னாங்களா.... அவ்வை ஷண்முகியில் பிறவி ஊமை நாஸர்  சொன்ன ருத்திரம் மாதிரின்னா இருக்கு!

தெரிஞ்ச  ட்யூனா இருக்கே......

அட நாராயணா!!!!!   இது காயத்ரி இல்லையோ!!!  புரிஞ்சுண்டதும் சும்மா விடலாமோ?

ஓம்
பூர்: புவ: ஸுவ:
தத் ஸவிதுர் வரேண்யம்
பர்கோ தேவஸ்ய தீமஹி
தியோ: யோந: ப்ரசோதயாத்

ஆரம்பிச்சு வச்சேன். மஹியின்  மதிவதனம் பூராவும் விகசிப்பு! ரெண்டாம் முறை கூடவே சேர்ந்து சொன்னாங்க.  நம்ம கோபால் மட்டும் மனசுக்குள்ளேயே சொல்லி இருப்பார்!

பீட்ஸா சாப்பிடுமுன் காயத்ரி சொல்றது  நம்ம வழக்கம் கேட்டோ:-)))))

தொடரும்.........:-)






Barong Barong சிங்கம்புலி பாரோங்(கு) ... (பாலி பயணத்தொடர் 10 )

$
0
0
ஒரு காட்டிலே ஒரு புலி  ஒன்னு இருந்துச்சு. இதுக்கு சிங்கத்தைப்போலவே நீளநீளமான சடாமுடி. இது ரொம்ப நல்ல புலி.  இந்தப் புலிக்கு  நண்பனா இருந்துச்சு ஒரு குரங்கு. ரெண்டு பேரும் தினம் சந்திச்சு நல்லாப்பேசி பொழுது போக்குவாங்க.



ஒருநாள் பனங்கள்ளு இறக்கும் மூணு மனுசனுங்க காட்டுக்குள்ளே வர்றாங்க. குடி மயக்கத்தில் ரொம்ப ஜாலியா ஆடிக்கிட்டு வந்தவங்க புலியைப் பார்த்ததும் பயந்து ஓடாமக் கோவமா புலிமேல் பாயறாங்க. கடுமையான சண்டை நடக்குது. இந்த மூணு பேரிலொருவனது  குழந்தையை புலி முன்பொரு சமயம் கொன்னுருச்சு என்பதே கோபத்துக்குக் காரணம். சண்டை நடக்கும்போது குரங்கு பயந்து எதிர்ப்புறம் ஓடி  ஒளிஞ்சு உக்கார்ந்துச்சு. அப்புறம் சண்டையில் புலியின் கை கொஞ்சம் ஓய்ஞ்சு போனது தெரிஞ்சதும் உதவிக்கு வந்து மனுசரை  எதிர்த்து நிக்குது.    நடந்த சண்டையில்  ஒரு மனுசனின் மூக்கைக் கூடக் கடிச்சுருச்சு புலி. குய்யோ முறையோன்னு அவுங்க பாய்ஞ்சு ஒருபக்கம் ஓட புலியும் குரங்கும் இன்னொரு பக்கம் பாய்ஞ்சு போய் ஒளிஞ்சுக்கிச்சு. (குரங்கு எகிறிக்குதிச்சு பார்வையாளர்க்கிடையில் ஒளிஞ்சது! நல்ல சிரிச்ச முகம்)


ரெண்டு அழகான மங்கையர்  நளினமா விரல்களையும் இடுப்பையும் அசைச்சு  முழங்காலை அரையா மடக்கி  ஆடறாங்க.   (நிமிர்ந்து நிக்கவும் முடியாது , கீழே உக்காரவும் முடியாதுன்னா  எப்படி இருக்குமோ அப்படி!) ரங்டா   என்ற மன்னரின் அரசவை நாட்டியம்! ரங்டா  தீமைகளின் அரசன். கொடுங்கோலன்!


தேவி குந்டி  (குந்தி?) பிரதமரைப் பார்க்க அந்த வழியா வர்றாங்க. கூடவே அவருடைய மகன் செடேவா.(சகாதேவா?)


ஆடும் மங்கையர் உடலில்  இப்போ ஒரு கெட்ட ஆவி புகுந்துருச்சு. பார்வையே ஒன்னும் சரியில்லை! மன்னன் ரங்டா , குந்டியின் மகனை தனக்கு பலி கொடுக்கணுமுன்னு   தாயிடம் கேட்க , அம்மா சம்மதிச்சுட்டாள்!  குந்டிக்குள்ளேயும் கெட்ட ஆவி புகுந்துருச்சு! பிரதமர் வர்றாரு. கெட்ட ஆவி அவரையும் விட்டு வைக்கலை.  செடேவாவைக் கொண்டு போய் காட்டில்  ஒரு மரத்தில் கட்டிப்போட்டுட்டாங்க.






சிவன் (சாமி)  அப்ப தனியாக் கிடக்கும்  செடாவா முன் தோன்றி  சாகா வரம் கொடுத்துட்டுப் போறார். செடேவாவைக் கொல்ல ரங்டா வர்றான். அவனால் செடாவாவை சாகடிக்கவே முடியலை!  உடனே அவன் காலில் விழுந்து  எனக்கு மோட்சம் கொடுன்னதும் இட் வாஸ் க்ரான்ட்டட்:-) ரங்டாவைக்  கொன்னு சொர்கத்துக்கு அனுப்பியாச்சு.



ரங்டாவின்  வேலைக்காரி  கலிகா அப்போ அங்கே வந்து எனக்கும் சொர்க்கம் போகணுமுன்னு  கேட்க, செடேவா அதெல்லாம் முடியாதுன்னு சொன்னதும் கலிகாவுக்கு கோபம் வந்துருது. உடனே கரடி ரூபம் எடுத்து  'நான் உனக்கு மோட்சம் கொடுக்கறேன் பார்ன்னு ' அவனைக் கொல்லப் பாய்கிறாள்.

செடேவா கரடியுடன் சண்டை போட்டுத் துரத்தறான். கரடி உடனே பறவையா மாறிமீண்டும் அவனோடு சண்டை போடுது. அப்பவும் தோல்விதான்.  உடனே பறவை ரங்டாவா மாறி  செடேவா முன் நிக்குது. ஒன்னும் புரியாம ஆல்ரெடி  மோட்சத்துக்கு அனுப்புனவன் எப்படி  திரும்பி வந்தான்னு செடேவா திகைச்சு நிக்கறான். கொன்னவனை எப்படி திரும்பக் கொல்வது?

கண்ணை மூடி தியானிச்சதும்  செடெவா  பாரோங் என்னும் மிருகமா மாறிடறான்.  அட! இதுதான் நாம் முன்னே பார்த்த சிங்கம்புலி!   ஒரு  பூசாரி வந்து  பூஜை செஞ்சார் .

இதுக்குள்ளே  ரங்டாவின் படை வீரர்கள்   ராஜாவின் உதவிக்கு வந்து சேர்ந்தாங்க.  பெரிய போர் நடக்குது.  ஆனால் சிரஞ்சீவியான பாரோங்  எல்லாரையும் கொன்னு குவிச்சது.






கெட்டவங்க எல்லோரும் காலி.  நல்லவனுக்கு வெற்றி.

இதுவரை ஸ்கிப் பண்ணாம வாசிச்சவங்களுக்கு தலை சுத்தல் வரவே இல்லைன்னு துண்டையோ துப்பட்டாவையோப் போட்டுத் தாண்டுங்க பார்க்கலாம்!!

ராமாயணத்தை மட்டுமே தெரிஞ்சு வச்சுக்கிட்டவங்களுக்கு மகாபாரதம் நடந்த சமாச்சாரம் எப்படி தெரியவந்துச்சுன்னு என் விசாரம். இந்த பாரோங் நடனம் பத்தாம் நூற்றாண்டு பழசாம்.  BARONG &KRIS  DANCE..  Pemogan  Village.

பாலியில் பார்க்க வேண்டியமுக்கியமான  நடனம்  இந்த பாரோங்தான்னு  பலமுறை 'அழுத்திச் சொன்ன ந்யோமேனை நம்பினதால் வந்த வினைன்னும் வச்சுக்கலாம். காலையில்  நாம வண்டிக்குச் சொல்லி வச்சோம் பாருங்க அப்பவே  இந்த நடனம் ஒருமணி நேரம்தான். அதுவும் தினம்  மார்னிங் ஒரு ஷோ மட்டும்தான் நடக்கும். பார்த்துட்டுப்போறீங்களான்னு ஆவலைக் கிளப்பி விட்டுருந்தார்.  இதுலே நீங்க இப்போ பார்த்த  கீச்சக்கைவிட ரொம்பநல்லா இருக்குமுன்னு சர்ட்டிஃபிகேட் வேற.

நாங்களும் இன்னிக்குப் பொழுது விடிஞ்சதும் பீச் பார்க்கப்போகலை. எல்லாம் நேத்துக் காலையில் பார்த்த மாதிரி அதே கடல் தானேன்னு சுணக்கம். இன்னிக்கு இந்த ஊரில் இருந்து கிளம்பறோம் வேற. அதனால் காலையில் கடமைகளை முடிச்சுப் பொட்டிகளைக் கட்டி வச்சுட்டு கீழே ரெஸ்ட்டாரண்டில் காலை உணவுக்குப் போனோம். நல்ல கூட்டம்.  பொதுவா 'டே ட்ரிப்' போகும் மக்கள்ஸ்க்கான பஸ்கள் எட்டரைக்கு பிக்கப்.  அதுக்குள்ளே  சாப்பிட்டுக் கிளம்பணுமுன்னு அவசரம் எல்லோருக்கும். சாப்பாட்டை முடிச்சு ரெடியானவங்க கூட்டம் வரவேற்பில் காத்திருக்கு.

ந்யோமேனும் ரெடியா இருந்தார். நடனம் போய் பார்த்துட்டுத் திரும்பி இங்கே வந்து  அறையைக் காலிச் செஞ்சுக்கிட்டுப் போறோமுன்னு நிகழ்ச்சி நிரல் சொன்னேன். (இப்ப இன்னொருதடவை படியேறி இறங்க முடியாது.  கொஞ்ச நேரம் போகட்டும்)


பாரோங் நடனம் நடக்கும் இடத்துக்கு  ஒரு இருவது நிமிச  ட்ரைவ்தான். கோபால் வேற  லட்சம் லட்சமா செலவு பண்ணி  காசெல்லாம் தீர்ந்து போச்சு. இன்னும் கொஞ்சம் காசு மாத்திக்கணுமுன்னு  சொன்னார். முந்தாநாள் ஏர்ப்போர்ட்லே மாத்துனது கிட்டத்தட்ட எல்லாம் காலி. இதுலே ஒன்னு பாருங்க..... ஏர்ப்போர்ட்லே நல்லா ஏமாத்தறாங்க இந்த மணி சேஞ் மகாத்மாக்கள். அங்கே நூறு டாலர் நோட்டுக்கு ஒரு தொகை, மற்ற சில்லறை நோட்டுகளுக்கு  இன்னும் குறைஞ்ச தொகைன்னு  நம்ம தலையிலே மிளகாய் அரைக்கறாங்கன்னு  ஒரு ரெண்டு மணி நேரத்துலேயே தெரிஞ்சு போச்சு:(

விமானநிலையத்துலே இருந்து ஹொட்டேலுக்கு வந்துட்டு அப்புறம் சாப்பிட இடம் தேடி நடந்தோம் பாருங்க, அப்ப கண்ணில் பட்டுச்சு  இன்னொரு  மணி சேஞ்ச்  இடம்.  ஒரு யூ எஸ் டாலருக்கு  9750 ரூபாயாம்.  நூறுன்னு இல்லாம எல்லா நோட்டுக்கும்  ஒரே மாதிரி.  அடப்பாவிகளா...  நம்மகிட்டே  ஒரு லட்சத்துக்கு ஆட்டையைப் போட்டுட்டாங்களேன்னு .....

இந்தத் தெரு  ஒன்வே என்பதால் திரும்பி ஹொட்டேலுக்கு வரும்போது மறக்காம  இங்கேயே காசு மாத்தணுமுன்னு  மூளையில் முடிச்சுப்போட்டு வச்சேன்.

நடனம் நடக்கும் கோவிலுக்குப் போய்ச் சேர்ந்தோம்.  டிக்கெட்டு ஆளுக்கு  ஒரு லட்சம்  ரூபாய். கார்பார்க்  ஃப்ரீதான். கோவில் வாசலில்  காலை பூஜைக்கான பிரசாதம்(கோலம்) வச்சுருந்தாங்க. கோவில் என்பதால் சில தட்டுகள்  கூடுதலா  இருக்கு போல!  கோலமுன்னதும் நினைவுக்கு  வருது இன்னொன்னு. பல இடங்களில் தரை அலங்காரமா  கோலத்துக்குப் பதிலா டிஸைன்போட்டு வச்சுருக்காங்க.  காங்க்ரீட்லேயே சின்னச்சின்ன வண்ணக் கற்கள் (ஆரஞ்சு, கருப்பு, வெள்ளை) பதிச்சுருக்காங்க. நம்ம ஸ்டிக்கர்  கோலத்துக்கு இது பெட்டர் இல்லையோ!




வாசலில்  பாலி நடன உடை அணிஞ்ச பெண் கைகூப்பி நமஸ்கரிச்சு நம்ம டிக்கெட்டை  சரி பார்த்துட்டு நடனம் பற்றிய குறிப்பு ஒன்னும் (ஆங்கிலம்) கொடுத்தாங்க. நிகழ்ச்சியை படம் எடுக்க அனுமதி உண்டான்னா  'உண்டு. நீங்க உள்ளே போய்க் கோவிலைக் கூடப்போய்ப் பார்க்கலாம்' என்றும் சொன்னாங்க.

கோவில் வாசலுக்கு முன்  ஒரு பெரிய மேடை. கல்வச்சுக் கட்டுனது.  ரெண்டு பக்கமும் இடைவெளிவிட்டு   கூரை போட்ட பெரிய திண்ணைகள்.  மேடைக்கு முன்னே ஒரு மீட்டர் இடைவெளிவிட்டு  இன்னொரு பெரிய  மேடை அதே உயரத்தில்.  அங்கே வரிசையா நாற்காலிகள் போட்டு வச்சுருந்தாங்க.

முன் வரிசையில்  உக்கார்ந்தோம்.  நமக்கு நேர் எதிரா  கோவில் . வழக்கம்போல் மூடிய கதவு.வாசலில் த்வாரபாலகர்கள். வலப்பக்கத் திண்ணையில் ம்யூஸிக் பார்ட்டி. மிருதங்கம் ஜால்ரா, ஜலதரங்கம் மாதிரி  ஒலிக்கும்  மரக்கட்டை  இசைக்கருவின்னு ஒரு பத்துப்பேர். இடப்பக்கத் திண்ணை காலியாத்தான் இருந்துச்சு. சரியா ஒன்பதே காலுக்கு நிகழ்ச்சிஆரம்பம் ஆச்சு.  சிங்கம்புலி ( அவுங்க கொடுத்த குறிப்பில் புலின்னு போட்டுருந்தாலும்  சடைசடையான முடிகளோடு சிங்கம் போலத்தான் இருக்கு அந்த மிருகம்!) வந்து கொஞ்ச நேரம் ஆடிட்டுப் போச்சு.

எனக்கு  சீனர்களின்  சிங்க நடனம் ரொம்பப் பிடிக்குமென்பதால் இதை(யும்) வெகுவாகவே ரசிச்சேன். மிருகத்தின் முன்கால்களுக்கும் பின் கால்களுக்கும் (!!) நல்ல கோ ஆர்டிநேஷன் இல்லைன்னா டான்ஸ் பணால்!  அடுத்த சீனில் குரங்கு வந்து ஆடுனார். அப்புறம் சிங்கம்புலி வந்ததும் ரெண்டு பேருமா ஆடிட்டுக் கொஞ்ச நேரம் உக்கார்ந்து பேசுனாங்க.


மற்ற  கதையெல்லாம் நீங்க இந்த இடுகையின் முதல் பகுதியில் வாசிச்ச(??) மாதிரியேதான்.தலையும் புரியலை வாலும் புரியலை என்பதே நிஜம். பார்வையாளர் கூட்டத்திலே  நாங்க எல்லோருமே பயங்கர சைலன்ஸ். யாருக்காவது எதாவது புரிஞ்சால்தானே? இசைகுழுவின் ஜல்ஜல் சப்தம்தான் ஓங்கி ஒலிச்சுக்கிட்டு இருந்துச்சு.


நடனம் முடிஞ்சதுன்னு  வாசலில் நின்ன பாலிப் பொண்ணு வந்து மைக் பிடிச்சுச் சொன்னதும்தான் (அப்பாடா)  எல்லோரும் கை தட்டினோம்:-) நல்லவேளை ஆங்கிலத்தில்  சொன்னாங்க. இல்லைன்னா......


கோவிலைப் பார்க்கப் போனால்  மூடிய கதவுக்கு முன் படிகளில் சிங்கம்புலி உக்கார்ந்து ஃபோட்டோவுக்குப் போஸ் கொடுக்குது.  வாயில் கொஞ்சம் ரூபா நோட்டை திணிச்சுட்டு பக்கத்தில் நின்னு படம் எடுத்துக்கலாம்.


 சாமி எங்கேன்னு கேட்டதுக்கு ஒரு மரஸ்டேண்டில்  இருக்குன்னு காமிச்சாங்க. கும்பிடும் க்ளிக்கும் முடிச்சுக்கிட்டுக் கிளம்பினோம்.

இந்த பாரோங் நடனம் பாலி முழுசும் வெவ்வேற ஊர்களில்  நடக்குது. ஆனால் வெவ்வேற கதை(!) இருக்காம்.  ஹீரோ மட்டும் எப்பவும் பாரோங். வில்லன்ஸ்  சொல்லும் கதைகளும் கேரக்டரும் மட்டும் வேற!

கோவிலின் காம்பவுண்டு கட்டைச்சுவர்தான் நடன மேடைக்கு க்ரீன் ரூம். அங்கிருந்துதான் நடிகர்கள் என்ட்ரி.திறந்த வெளி என்பதால் நல்ல வெளிச்சம். பேக்ட்ராப்பில் சுள்ளுன்னு சூர்யரஸ்மிகள். படங்கள் எல்லாம் அவ்ளோ நல்லா வரலை. போகட்டும்....

சிட்டி வழியா வரும்போது இன்னொரு இடத்தில்  காசு மாத்திக்கலாமுன்னு ந்யோமேன்  வண்டி நிறுத்தினார்.  சொன்னா நம்ப மாட்டீங்க.....  ஒன்னு,நூறுன்னு பாகுபாடில்லாமல் எல்லா நோட்டுகளுக்கும்  டாலருக்கு 10200  ரூபா!!!

'ஆல் சீஸன்ஸ்'க்கு வந்து கணக்கை முடிச்சுட்டுப் பொட்டிகளை எடுத்துக்கிட்டுப் புள்ளையாருக்கு ஒரு கும்பிடும் போட்டுக்   கிளம்பினப்ப மணி சரியா 11.11.


தொடரும்.........:-)






சிட்டி சிட்டி (நோ) பேங் பேங் ( City City No bang bang )

$
0
0
வருசக் கெடு, மாசக் கெடு, வாரக்கெடுன்னு எல்லாம் போய்  நாள் கெடு அறிவிப்பு வந்துருச்சு.  'ஜூன் மாசம் 28 தேதிக்கு ஊர்மக்களுக்கு நகரத்தை முற்றிலும் திறந்து விடப்போறோம்'  எங்க எல்லோருக்கும் மனசுலே ஒரு மகிழ்ச்சி. கடந்த ஆறு மாசமா ஒவ்வொரு தெருவா  திறந்து விட்டுக்கிட்டுத் தானிருந்தாங்க.   இடிஞ்சவைகளைச்  சீர்ப்படுத்தி  இன்ன தெரு இன்று முதல் திறந்துவிடப்படுமுன்னு  நாளிதழிலும்  எங்கூரு தொலைக்காட்சியிலும் சேதி வர்றதும் (பொதுவா இது  ஒரு வெள்ளிக் கிழமையாத்தான் இருக்கும்.)வார இறுதியை வீணாக்காம ஊர் மக்கள் சோம்பல் கொஞ்சமும் இல்லாம 'என்ன ஆச்சு ? இப்போ எப்படி இருக்கு'ன்னு பதறிப் போய்ப் பார்ப்பதுமாத்தான் நாட்கள் கடந்து போகுது.

குளிரோ,மழையோ எப்பப் போனாலும்  நகர இடிபாடுகளை பார்க்கும்  மக்கள்  நடமாட்டம் உண்டு. இப்பெல்லாம் சுற்றுலாப் பயணிகள் இதைப் பார்க்கன்னே வர்றாங்க.


காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்ளணும்!

இதுக்கு நடுவிலே புது ஊரை நிர்மாணிக்கும் ஏற்பாடுகளில் சிட்டிக்கவுன்ஸில் தீவிரமா இயங்குது. ஊர் மக்களிடம்  இனி வரப்போகும் ஊர் எப்படி இருக்கணுமுன்னு எதிர்பார்க்கறீங்க? ன்னு ஆயிரத்தெட்டுக் கருத்துக் கணிப்பெல்லாம் நடத்துச்சு. நம்ம யோசனைகளைச் சொல்ல  வெப்ஸைட் ஒன்னு  வச்சு ஆன்லைனில் வசதி ஏற்படுத்திக் கொடுத்துச்சு. Rebuild Christchurch. கணினி இல்லாதவர்கள் என்ன செய்வாங்களோன்னு  ஊரில்   இடியாமல்  இருக்கும்  மொத்த வீடுகளுக்கும்  தபால் மூலமா  சேதி அனுப்பி பதில் சொல்லுங்கோன்னு வேண்டிக்கிட்டு,  அதுக்கான  படிவங்களையும்  நாம் பூர்த்தி செஞ்சு  திருப்பி அவுங்களுக்கு அனுப்புவதற்கான கடித உறைகளும் சேர்த்தே கொடுத்துச்சு.  நாம் தபால் செலவு கூட செய்ய வேணாம்.  ஃப்ரீ போஸ்ட்தான்.


மக்கள் சொன்ன விஷயங்கள் நடைமுறைக்கு ஒத்துவருமான்னு நிபுணர் குழுக்களைக்கொண்டு விவாதிச்சு ஒரு முடிவுக்கு வந்துருக்காங்க. ப்ளான்  என்னன்னு பேட்டைகள்  தோறும் ரோட்ஷோ நடத்தி எல்லாருக்கும் எல்லாத்தையும் அறிவிச்சாச்சு.

ஊர்மக்கள் என்றால் பெரியவங்க மட்டும்தானா?  சின்ன மனிதர்களையும் கலந்து ஆலோசிக்க வேணாமா?  எல்லா ஆரம்பப்பள்ளிகளும் இதில் ஜோராய் கலந்துக்கிட்டாங்க. அஞ்சு வயசு மனுசரின் கண்ணோட்டத்தில் நகரம் என்றால் எப்படி இருக்கணும் என்பதைத் தெரிஞ்சுக்கிட்டதும் எனக்கு வியப்புதான்! முக்கியமா  வெற்றிடங்களாக  விடப்போவதில்  பிள்ளைகளுக்கான  விளையாட்டுப்பூங்கா வச்சுக்கலாம் என்பதாக  ஒரு எண்ணம்.  அது எப்படி இருக்கணுமுன்னு  புள்ளைங்களைத்தானே கேக்கணும். அதுதான்:-)

யானை வச்சுக்கலாமுன்னு கூட  யோசனை சொல்லி இருக்கு ஒரு பிஞ்சு:-)

ரெண்டு மாசத்துக்கு   முன்  எங்கூர்  CBS Arena ( இப்போதைக்கு  எல்லா  சம்மேளனங்களுக்கும்  இதைவிட்டால் வேறிடம் இல்லையாக்கும்)வில்  ஒரு    Rebuild and Recovery Expo  ரெண்டு நாள் நடத்துனதும் போய் வந்தோம்.  அங்கேதான் புள்ளைங்க ஐடியாக்களை ரசித்தேன். (வெளயாட்டுப் புள்ளீங்கப்பா!)

அரசுத்துறை, தனியார் துறை, காப்பீடு நிறுவனங்கள், வீடு கட்டிக்கொடுக்கும் நிறுவனங்கள்,  வீடுகளுக்கான நிலத்தை  ஒழுங்குபடுத்தி  புதுப்பேட்டைகளை நிறுவ முயற்சிக்கும் ரியல் எஸ்ட்டேட் கம்பெனிகள்,  இவை எல்லாம்  சம்பந்தப்பட்ட நிபுணர்கள், கம்யூனிட்டி  குழுக்கள்,  புது வீட்டுக்கு இனி அரசு போடும்  கட்டிட அனுமதிகளின்  விளக்கங்கள்,  இப்படி ஏகப்பட்ட  சமாச்சாரங்களை  சம்பந்தப்பட்டவர்களிடம் நேருக்கு நேர் பார்த்து  விவாதிச்சு விவரம் தெரிஞ்சுக்கும் வகையில் இந்த ஏற்பாடு.  நாளைக்கு எதாச்சும் ஒன்னுன்னா 'எங்கிட்டே கேக்கவே இல்லை. எனக்கொன்னுமே தெரியாது'ன்னு  நாம் சொல்லித் தப்பிக்கவே முடியாது!
ஊர் அலங்காரத்தில் ஒன்னு.  

விளக்கப்படங்கள்  வீடியோ ஷோக்கள் நிபுணர்களிடம் கேள்வி நேரம் என்றெல்லாம் அமர்க்களப்பட்டுச்சு.  அனுமதி இலவசம்தான். ஊர் சனங்களைக் கட்டாயம் வாங்கன்னு  கூவுனதும் இல்லாம பேட்டைக்குப்பேட்டை  இலவச பஸ் ஏற்பாடு செஞ்சு ஒரே அட்டகாசாம்தான் போங்க. சின்னப்புள்ளைகளுக்குப் போரடிக்காம இருக்க  விளையாட்டு,பலூன், முட்டாய் , ஜூஸ் இப்படின்னா பெரியவங்களுக்கு காஃபி, டீ. கேக் பிஸ்கெட்டுன்னு ஒரு பக்கம்.

வீடுகளை எப்படி சரியான  உஷ்ணநிலையில் வச்சுக்கறது,  சுற்றுச்சூழல் பாதிக்காம செயல்படுவது, சமூகத்தில் குற்றங்கள் பெருகாம இருக்க என்ன செய்யணும், காவல்துறை உங்களுக்கு என்னென்ன உதவிகள் செய்யுது,  நம்மை நாம் ஆரோக்கியமா வச்சுக்கறது எப்படி?  குளிர்கால  ஃப்ளூ அட்டாக்கிலிருந்து  தப்பிக்க  என்ன முன்னேற்பாடு, இனி  வரும் நிலநடுக்கத்தை சமாளிப்பது எப்படி? என்னென்ன சப்போர்ட் க்ரூப் இருக்கு  இப்படி பலவிதமான ஸ்டால்கள்.

தயவு செஞ்சு பேருந்தில் பயணம் செய்யுங்களேன்னு  மெட்ரோ  பஸ் சர்வீஸ் கெஞ்சுது. உங்க வீட்டாண்டை எங்கே பஸ் ஸ்டாப், என்னென்ன நேரத்துக்கு எந்தந்த பஸ் வரும்னு சொல்லக்கூட ஒரு ஸ்டால் போட்டுருந்தாங்க. பஸ் கம்பெனிகள் நட்டத்துலே ஓடுதே.  பலசமயங்களில்  ட்ரைவர் மட்டுமே பஸ்ஸில் இருப்பார். பாவம் !  பயமா இருக்காதா அவருக்கு?

கிராம வாழ்க்கை இனிதா இருக்குமேன்னா  வில்லேஜ்  ஸ்டைலில்  உருவாகப்போகும் குடியிருப்புகள் அவற்றிற்கான நிலம் இப்படி கவர்ச்சிகரமான அம்சங்கள் நிறையவே இருந்துச்சு. ஆனா...தாறுமாறான விலை.

இப்போ நகரத்தில்  இடிபாடுகளை அகற்றினதும் 'இங்கே முந்தி என்ன மாதிரி கட்டிடம் இருந்துச்சுன்னு நினைவுக்கு வரலையே'ன்னு இருக்கும் என்னைப் போன்றவர்களுக்காக ஒரு ஸ்டால் சூப்பர்! வரப்போகும் கட்டிடங்கள் எப்படி எப்படி இருக்குமுன்னுதான் காமிச்சுக்கிட்டு இருந்தாங்க. பத்தே வருசம்தானாம்! புது ஊர்!

அதுலே  நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டு இடிஞ்சு விழுந்து  மறைஞ்சு போன கட்டிடங்கள் சிகப்பு வண்ணம் என்று சொன்னதும் பார்த்தால்..... மனசில் சுளீர்ன்னு ஒரு வலி. ஐயோ.... இத்தனையா? அப்பத்தான் அங்கே இருந்த பொறுப்பாளரிடம் முந்தி இங்கே என்ன இருந்துச்சுன்னு நினைவு இல்லைன்னதும்  மகராஜன் ஒரு   க்ளிக்குலே பழைய ஊரைக்கொண்டு வந்துட்டார்.  இது .....  இது......  இதைத்தான் நான் தேடிக்கிட்டே இருந்தேன்.  ஆனால் கூகுள் எர்த்தில் தேடணுமுன்னு தோணலையே:(



சரி...என்னமோ சொல்ல ஆரம்பிச்சு எங்கியோ போயிட்டேன். இப்பத்து நிலவரத்துக்கு வரலாம்.  போனவார வீக் எண்ட் நகரம் எப்படி இருக்குன்னு  போய்ப் பார்க்கப் போனா.....  சரியான மழையும் குளிருமா...... இதுலே என்னன்னு இறங்கி நடந்துபோய்ப் பார்ப்பது? அப்படியும்  குடையோடு மக்கள் நடமாட்டம்  இருந்துச்சுதான்.


இந்த வீக் எண்ட் நல்ல வெயில். 18டிகிரி!   குளிர்காலத்துக் கிடையில்  இப்படி ஒரு வெயில் நாள் கிடைப்பது ரொம்பவே அபூர்வம். விடறதில்லைன்னு  கிளம்பிப்போனோம்.  டெமாலிஷன் ட்ரக்குகளின் எண்ணிக்கையும்,  கிரேன்களின் எண்ணிக்கையும்   குறைஞ்சே போச்சு. Bang Bang ன்னு தலையிடி உண்டாக்கும்  மெஷீன்களின் சப்தம்  காணோம்.  அங்கங்கே ஒன்னு ரெண்டு க்ரேன்கள்தான் ஓசைப்படாமல் நின்னுக்கிட்டு இருக்கு. கட்டிடங்களுக்குள்ளே மட்டும்  சின்ன கேட் மெஷீன்கள் ரொம்பவே க்யூட்டா 360 டிகிரி சுத்திச் சுத்தி  வேலை செய்யுது




நகரச் சதுக்கத்துக்குப்போகும் வழி திறந்தாச்சு.  வழியெங்கும் இருக்கும் கம்பி ஃபென்ஸில் புதுசா கலைகள்  பரிணமிச்சு இருக்கு.  யாரோ வேலைமெனெக்கட உக்கார்ந்து யோசிச்சதின் பலன்.  நகரத்தை அப்படியே போட்டு வைக்காமக் கொஞ்சம் அழகுபடுத்தணுமுன்னு தோணி இருக்கு பாருங்க. சாலைகளில் கார் போகலாம்  என்றாலும் பல இடங்கள் நடந்து போய்ப் பார்க்கும் அளவில்தான் இருக்கு.



நகர சதுக்கத்தின் நடுவிலே இடிஞ்சு போய் நிற்கும் தேவாலயம் வழக்கம் போலவே கண்ணில் நீரை வரவழைச்சது உண்மை. ஆங்கிலிக்கன் சர்ச்சோட சொந்தமான (தனியார்) இடம் என்பதால்  நாம் ஒன்னும் கேட்டுக்கமுடியாது. அப்படியும் சர்ச்சைக் காப்பாத்தப் போராடிப் பார்த்துட்டோம். ஓட்டுக்கு விட்டதில் கூடுதலா  ஒரு சதவீத மக்கள்  இதை எடுத்துட்டு புதுசு ஒன்னு  பயன்பாட்டுக்குத் தகுந்தமாதிரி கட்டலாமுன்னுட்டாங்க.  பழமை மாறாமல் அப்படியே திரும்பக் கட்டணும் என்ற எங்க கோரிக்கை தோல்வி. 51ம்  49மா :(


தேவாலயத்துக்கு முன்னால் இருக்கும் சதுக்கம் சிட்டிக்கவுன்ஸிலுக்குச் சொந்தம். அப்டீன்னா நம்மது!  அங்கே  எதாவது நடந்தால்தானே சிட்டிக்குள்ளே மனுச நடமாட்டம் இருக்கும்.  சிட்டிக்கவுன்ஸில் ஏற்பாட்டில் பாட்டுக்கச்சேரி.  கோவிலின் அவலம் சட்ன்னு  கண்ணில் படாமல் இருக்க ஒரு  பலகை மறைப்பு. அதில்  அலங்கார டிஸைன்கள், பளிச்சுன்னு  கண்களை ஈர்க்கும் வண்ணங்களில். சதுக்கத்தின் சரித்திரத்தை அங்கங்கே தெரிவிக்கும் அம்சம். ஆற  அமர இருந்து ரசிக்க இருக்கைகள்.


அவலம் அவலமுன்னு சொன்னாலும்  அதையும் எட்டிப்பார்க்க ஏங்கும் கண்களுக்காக  அங்கங்கே  சின்ன இடைவெளியாக கம்பி போட்ட கதவுகள். . அதில் கெமெரா புகுந்து பார்க்க  கம்பி இல்லாத ஜன்னல்கள்.


எங்கூர் வார்மெமோரியல்தான்  தேவாலய வரம்புக்குள் மாட்டிக்கிச்சு:( 1937 இல் கட்டுனது. முதலாம் உலகப்போர் நினைவுச்சின்னம்.   பழுது ஒன்னும் இல்லாம இன்னும் நல்லா ஸ்ட்ராங்காத்தான் இருக்குன்னாலும் இருக்கும் இடம்  சரியில்லையே!

மனசுக்குப் புத்துணர்ச்சி அளிக்க   உசுருள்ள  கூரை அமைப்பு.  நடுவில் நுழைஞ்சு போய் கோவில் பக்கம் பார்த்துக்கலாம்.  கூரைகளில் பூக்கள் அரும்ப ஆரம்பிச்சு இருக்கு.  சின்னச்சின்னப் பூச்செடிகள். அவைகளுக்கு  மெல்லிசான குழாயில் தண்ணீர் சப்ளைன்னு  அருமையோ அருமை!



குழந்தையும் (நாய்க்) குட்டியுமா  மக்கள்ஸ் கூட்டம் அதிகமாவே இருந்துச்சு.

இடைவெளிகளை நிரப்பன்னு  ( http://www.gapfiller.org.nz/)  இன்னொரு ஐடியா  ஜரூரா நடக்குது. அங்கங்கே இருக்கும் இடைவெளிகள் மொட்டையா விரிச்சோன்னு கிடக்கே!  அந்த இடங்களுக்குச் சொந்தமானவர்கள் அங்கே என்ன கட்டலாமுன்னு முடிவுக்கு வரும்வரை சும்மாக் கிடக்கும் இடத்தை கம்யூனிட்டிக்குத் தேவையான பொழுதுபோக்கு அம்சங்களுடன் நிரப்பி வைக்கலாமேன்னுதான்.


ஒரு இடத்தில்  அரை ஃபுட்பால்  கோர்ட்கூடப்போட்டு வச்சுருக்காங்க.  சீர்செய்யும் பணியில் இருக்கும் தொழிலாளர்களுக்கு  இடைக்கிடை கிடைக்கும் ஓய்வு நேரத்தில் ஒரு காமணி வந்து  ஆடிட்டுப் புத்துணர்ச்சியுடன்  வேலையைப் பார்க்கலாமேன்னு!  இப்படியே சின்னதா கோல்ஃப் செயற்கை புல் வெளியில்.

PALLET PAVILION என்ற பெயரில் பெல்லட்ஸ் அடுக்குமாடி  சுற்றிலும்  கட்டி நடுவில்  இருக்கும் இடத்தில்   பகலில் பிக்னிக், மார்க்கெட்  டே,  மாலையில் லைவ் ம்யூஸிக்,  டான்ஸ்ன்னு   எங்க கோடை முடியும்வரை  கொஞ்சநாள் நடந்துச்சு. நமக்கு விருப்பம் என்றல் நம் பெயர் எழுதி பல்லட்  தானம் செய்யலாம். (நம்மூர் கோவிலுக்கு ட்யூப் லைட்  உபயம் செய்வது போல்!!!)


The Arcades Project ன்னு அலங்கார வளைவுகள், இடிஞ்ச கட்டிடத்தில் இருந்து  கிடைச்ச மரக்கட்டைகளை வச்சு.




விக்டோரியா சதுக்கத்துக்கு  வழி கிடைச்சுருச்சு.  இப்போ நடந்து போய்ப் பார்க்கலாம். ரெண்டரை வருசமா அதை வெளியே இருந்துகூட பார்க்க முடியாமல் இருந்துச்சு. செடிகள் வளர்ந்து சின்னக்காடாக இருந்ததை சீர் படுத்தி இருக்காங்க. நடந்து முடிஞ்ச அவலத்துக்கு மௌன சாட்சி மஹாராணி விக்டோரியாவும் நியூஸியைக் கண்டறிஞ்ச கேப்டன்  'ஜேம்ஸ் குக்' கும்தான்.


கல்பாவிய சதுக்கத்தைச் சுத்தம் செஞ்சு  புதுசா பூச்செடிகளை நட்டு வச்சுருக்காங்க. பரந்த காலி இடம் கிடைச்சா அதை எப்படிப் பயன்படுத்திக்கணுமுன்னு  பசங்களுக்குத் தெரிஞ்சுருது.  ஸ்கேட் போர்டுகளுடன்  ஆஜராகிடறாங்க.

கனத்த மனசோடுதான் திரும்பினேன். வெறும் நாற்பதே விநாடிகளில் ஊரே அழிஞ்சு போச்சே!!!

'கவலைப்படாதே..... நமக்கு  ப்ராண்ட் ந்யூ சிட்டி கிடைக்கப் போகுது 'என்றார் கோபால்.

" மாடர்ன் சிட்டி கிடைக்கும். ஆனால் ............  க்ளாஸிக் சிட்டி காணாமப் போயிருச்சே:( "



பறவைகள் பலவிதம்..... ஒவ்வொன்றும் ஒரு விதம் (பாலி பயணத்தொடர் 11 )

$
0
0
ஹைய்யோ.... என்ன அழகான தாமரைத் தடாகம்னு வியந்து நின்னபோது  வேகமா வந்த கோபால்  'இருபத்தியேழரை,  ரொம்ப அதிகமா இல்லை?' ன்னார். அட ராமா...... இவ்ளோவா? ரெண்டு லட்சத்து  எழுபத்தியஞ்சாயிரமா?  ஆளுக்கான்னேன். ஆமாவாம். சொர்கப்பறவை உண்டோன்னு  கேட்டதுக்கு உண்டுன்னார்,  கவுண்ட்டர்காரர். அப்ப வாங்கிருங்கோன்னேன்.

Kuta விலிருந்து ஒரு 70 நிமிசப்பயணத்தில்  பாலி பறவைகள் பூங்காவுக்கு வந்துருந்தோம். டிக்கெட்டைச் சரிபார்த்த பெண், பத்திரமா வச்சுக்குங்க. இதே டிக்கெட்டில்  ஊர்வன வகைகள் பூங்காவையும்  பார்க்கலாம் என்றார்.

உள்ளே நுழைஞ்சு நடக்கும்போதே இடதுபக்கம் ஒற்றைப்பட்டு நிக்கும் கட்டிடத்தின் அஞ்சாறு கண்ணாடி ஜன்னல்கள்.  எட்டிப்பார்த்தால் இறகு முளைக்கும் நிலையில் உள்ள பறவைக் குஞ்சுகள் இங்குபேட்டரில். ப்ரீடிங் ப்ரோக்ராம்  சக்ஸஸ்ஃபுல் என்று சொன்னாங்க.

மரங்களும் புல்வெளிகளும் தோப்பும் துரவுமா ரெண்டு ஹெக்டேர் (சுமார் 5 ஏக்கர்) நிலப்பரப்பில் இருக்கு பூங்கா.  நடைபாதையின் ஓரமாக இருக்கும் மரத்தில் கொஞ்சும் கிளிகளின் வரவேற்புக் குழு! ஹலோ சொல்லிட்டு இன்னும் நாலடி வச்சால் மயிலார்! வீட்டில் இன்னும் பூர்த்தி செய்யாமல் போட்டு வச்ச  பஸிலை (puzzle)ஞாபகப்படுத்தினார்.  'கொஞ்சம் அப்படியே நில்லேன். கவனமாப்பார்த்து மனசில் வச்சுக்கிட்டு ஊர் திரும்புனதும்  அடுக்கி முடிக்கறேன்'னு கெஞ்சினதை சட்டைசெய்யலை.







இந்தோனேஷியப் பறவை இனங்களில் நாற்பது வகைகளை இங்கே பாதுகாத்து வச்சு வளர்க்கிறார்கள்.  பூங்காவில்  ஒரு ஆயிரம் பறவைகள் உண்டு. 250 வகை  இனங்கள். உள்ளூர் பறவைகள் மட்டுமில்லாமல் தென் அமெரிகா, ஆஃப்ரிகா,  போர்னியோ, சுமத்ரா, ஜாவா,  பாபுவா நியூ கினியா மழைக்காடுகள்ன்னு  பல தேசத்து  வகைகளும்  கூடியவரை அவுங்கவுங்க  சொந்த சூழலில்  இருக்காங்க.

வலைக்கூரை போட்ட பிரமாண்டமான  கூடாரங்கள் நாலைஞ்சு. குளமும் கரையும் மரமும் செடிகளும்  பூவும்பிஞ்சுமா இருக்கும் இங்கே பறவைகள் ஜாலியா உலாத்திக்கிட்டு இருக்காங்க. மனுசப்பயம் துளியும் இல்லை!


எந்தெந்த நேரத்தில்  எந்தெந்த இனங்களுக்கு  சாப்பாட்டு வேளைன்னு  விவரங்கள் அடங்குன பார்க் மேப் ஒன்னும் கொடுத்தாங்க. அதைக் கையில் வச்சுக்கிட்டே  ஒன்னு விடாமல் சுத்திப் பார்த்துக்கலாம்.

செயற்கை நீரூற்றுகளுக்கும் பஞ்சமே இல்லை! கொக்கு நாரை காஸ்ஸோவாரி  இப்படி  பெரிய பறவைகள் கூட்டங்கூட்டமாக  அவரவர் பகுதியில் சுதந்திரமா உலாத்திக்கிட்டே இருக்குதுகள். நாங்களும் உலாத்திக்கிட்டே   ஒவ்வொன்னா ரசிச்சுக்கிட்டு இருந்தோம். அங்கங்கே கொஞ்சநேரம் கால்களுக்கு ஓய்வு கொடுக்கச் சின்னச்சின்ன குடில்கள். ஆனால் மழைக்காடுஎன்பதால் கொசு பிடுங்கி எடுத்துருது:(

பள்ளிக்கூட விடுமுறை  தொடங்கிருச்சுன்னு  கூடவே வந்த குட்டிப்பொண்  சொன்னாள். மூணாப்புலே இருந்து நாலாப்பாம்!  அங்கங்கே பறவைகளின் விவரம் அடங்கிய தகவல்பலகைகளை ஊன்றிப்பார்த்து  மெள்ள எழுத்துக்கூட்டி வாசிக்கும் அழகே அழகு!


நாங்கள் பெலிக்கன் பகுதிக்கு வந்துருந்தோம்.  சின்னதா ஒரு ரெய்ன் ஃபாரஸ்ட் கேஃபே.  ஒரு இருபது வகை ஐஸ்க்ரீம்கள் கண்ணை இழுத்தன.   வேறென்ன இருக்குன்னு பார்த்தால்  பனானா ஃப்ரை.  வாங்கித்தான் பார்க்கலாமுன்னு ஆர்டர் செஞ்சோம்.  கால்மணி காத்திருப்பு.  அதுவரை பெலிக்கன் நம்மை வேடிக்கை பார்க்கட்டுமேன்னு  உக்கார்ந்துருந்தோம்.  சுடச்சுட செஞ்சு கொடுத்தாங்க.   அட! இது நம்ம பழம்பொரி(ச்சது)  கேரளா ஸ்பெஷல் இல்லையோ!!!!   கூடவே ஆளுக்கொரு ஐஸ்க்ரீம். ஜஸ்ட் ஒரு லட்ச ரூபாயில் நம்ம லஞ்ச் முடிஞ்சது:-)





 பெலிக்கனின் லஞ்ச் டைம் ஆரம்பிச்சது.  பறவைப்பூங்கா பணியாளர் ஒரு தெர்மக்கோல் பொட்டி நிறைய மீன்களைக் கொண்டு வந்தார்.  நடந்து திரிஞ்சுக்கிட்டு இருந்த பெலிக்கன்களுக்கு  ஆளை எப்படித்தான் அடையாளம் தெரிஞ்சதோ, பாய்ஞ்சு போய் குளத்தில் கூட்டம் போட்டதுகள்.  ஒவ்வொரு மீனா தூக்கி எறிய கேட்ச் பிடிச்சதுகள். இதுலேயும்   சாமர்த்தியசாலிகள்  லபக் லபக் என்று லபக்குச்சு.ஏமாந்த சோணகிரிகள்  தன் வாயிலே அதுவா வந்து விழுமுன்னு வாயைத் திறந்துக்கிட்டு நின்னதுகள்.  மனுசனைப்போலத்தான், இல்லே?

வெப்ப மண்டலச் செடிகொடி வகைகள் ரெண்டாயிரமும் பனைவகைகளில் அம்பது தினுசுமா பச்சைப்பசேலுன்னு  இருக்கு!  பட்டாம்பூச்சிகளின்  கூட்டம் ஏராளம்! குருவி இனங்களின் கும்மாளமும் கூச்சலும்  பேஷ் பேஷ்.!

Avian Theatre  என்ற மினி தியேட்டரில்  பறவைகள் பற்றிய  ஃபில்ம் ஷோ   ஒன்னு காலை பத்து முதல் மாலை அஞ்சு வரை  மணிக்கொரு முறைன்னு   நடக்குது. இது 4D  என்பதால் நல்லா இருக்கும் . நமக்கு நேரக்குறைவுன்னு போகலை:(


சுதந்திரப் பறவைகள் ஒருபக்கமுன்னா கூண்டுப்பறவைகள் இன்னொரு பக்கம்.  ஊர்வாரியாப் பிரிச்சு தனித்தனிக் கூண்டுகள்.  ஒரு அறையைப்போல விசாலமான பெரிய கூண்டுகள்தான் என்றாலும் அதுக்குள்ளே ஏராளமான மரஞ்செடிகள் நிறைஞ்சுருப்பதால்  அங்கிருக்கும் பறவையைக் கண்டுபிடிக்கக் கண்ணாமூச்சி ஆடத்தான் வேணும். என்னைவிட கோபாலுக்குப் பார்வை கூர்மை என்றபடியால்  க்ளிக்கும் பொறுப்பு அவருக்குன்னு ஒதுக்கினேன்.புள்ளி அசரலையாக்கும்:-)))




ஒவ்வொரு பறவைகளையும்  கண்டுபிடிச்சுக் காட்டுவார். நானும் நம்ம கல்பட்டாரை நினைவுக்குக் கொண்டுவந்து பார்த்து மகிழ்வேன். இங்கே போய் எட்டிப் பாருங்க.  பறவைப்ரேமி!  இறைவன் படைப்பில்தான் எத்தனையெத்தனை வகை!!!


பெரிய சைஸ்  வௌவால்கள் ஒரு  இடத்தில் தொங்கிக்கிட்டு இருந்தன. பளிச்சுன்னு பகலில் அதுக்கு பேஜாரா இருந்துருக்கும்:(

பர்ட் ஆஃப் பாரடைஸ் பார்க்கணும். ஒவ்வொன்னும் எவ்ளோ அழகா இருக்குமோன்னு ஆசையோடு போனால் அங்கே  நம் கண்ணில் பட்டது  மஞ்சள் வாலும் ப்ரௌண் உடம்புமா ஒன்னு.  அப்புறம்  சிகப்பு இறக்கையுடன் ஒன்னு.  இந்த வகைப்பறவைகளில் வால் இறக்கைதான் பிரமாதமாக இருக்கும். இதுக்காகவே இதை வேட்டையாடுகிறார்களாம். அழகுதான் ஆபத்து:(  மொத்தம் 39 வகை பறவைகளாம் இந்த இனத்தில் மட்டும்!
இந்தச் சுட்டியில் க்ளிக்கினால் ஒரு 34 வகைகளின் படங்கள் இருக்கு. 

 Tim Laman அவர்களுக்கு நன்றிகள்.

முடிஞ்சால் இங்கேயும் ஒரு நாலு நிமிச வீடியோவாகப்பார்க்கலாம் முப்பத்தியொன்பதையும் பிடிச்சுருக்கார் . அன்னாருக்கு நன்றிகள்.


பறவைகளில்  சூப்பர் ஸ்டார் அந்தஸ்துள்ளவை பார்வையாளர்கள் தோளிலும் தலையிலும் உக்கார்ந்து போஸ் கொடுக்குதுகள்.

இந்தப் பூங்காவை அடுத்து இருக்கும்  ரெப்டைல் பார்க்  போகலாமான்னு கேட்டேன். ரெண்டுக்கும் சேர்த்துதானே இருக்கு இந்த டிக்கெட். ஊர்வன என்றதும் கோபாலுக்குக் கொஞ்சம் யோசனைதான். கமடோர் ட்ராகன்கள் இருக்குன்னு வலை வீசின்னேன். ஊஹூம்...சிக்கலை.  அதான்  அஸ்ட்ராலியாவில் பார்த்தோமேன்னார்.

இப்பவே மணி ரெண்டாகப்போகுது.  இன்னிக்கு ராத்தங்கல் வேற ஊரில். கிளம்பிப்போனால்  பொழுதோடு போய்ச்சேர்ந்து இடம் கண்டுபிடிக்க வசதியா இருக்குமாம். வாசலுக்கு வரும் வழியில் இருக்கும் நினைவுப் பொருட்கள் கடையில் நுழைஞ்சதும்  இவர் முகத்தில் லேசா ஒரு பதற்றம்:-)  ஜஸ்ட் விண்டோ ஷாப்பிங்தான்னு  உறுதி மொழி கொடுத்தேன்!  பொதுவா எல்லா இடங்களிலும் நினைவுப்பொருட்கள் கடையினூடாகத்தானே வழி வச்சுடறாங்க. இவுங்க மட்டும் விதி விலக்கா?

பூங்காவுக்குள் அனுமதிக்கட்டணம் கொஞ்சம் அதிகம் என்றாலும்கூட  அழிவு நிலைக்குப்போய்க் கொண்டிருக்கும் பறவை இனங்களை  பாதுகாத்து, அடுத்த தலைமுறைகளுக்குக் காண்பிக்கும் சேவையை நினைச்சால்,  கொடுத்த காசு செரிக்கும்தான்:-)

தொடரும்..........:-)







வாங்களேன் ஒரு (?) காஃபி குடிக்கலாம்.... (பாலி பயணத்தொடர் 12 )

$
0
0
அடடா.....  ந்யோமேனுக்கு நம்மீது எவ்ளோ அக்கறைன்னு புல்லரிச்சுப் போச்சு. " காஃபி குடிக்கறீங்களா?  இங்கே பக்கத்துலேதான். நாம் போகும் வழியில் " என்றார். நல்ல காஃபியான்னா...  அது காஃபி ப்ளான்டேஷன் என்றார்.  அட!  அப்போ காஃபி சூப்பரா இருக்கும். இதுவரை  ப்ளாண்டேஷன்  உள்ளே போய் பார்த்ததில்லையே:(    சலோ  காஃபி  ப்ரேக்..........

இருவதே நிமிசப் பயணத்தில்  டேபாசாரி(Teba sari)  ப்ளான்டேஷன் வந்துருந்தோம். இது அக்ரோடூரிஸம் (Agrotourism) என்ற வகை என்பது   அங்குள்ள போர்டு பார்த்துத்தான் தெரிஞ்சது.ரெண்டு வண்டிகள் கார்பார்க்கில். நாங்க மூணாவதாப் போயிருக்கோம்.

ஒரு இளம்பெண் வந்து எங்களை வரவேற்று உள்ளே கூட்டிப்போனாங்க. காஃபி குடிக்க ந்யோமேனையும் கூப்பிட்டப்ப 'நீங்க முதல்லே போங்க, நான் இதோ வரேன்'னார். வேலிகட்டி உள்ளாற நிறைய செடிகொடிகளா இருந்ததை ஒரு அஸ்வாரஸ்யமாப் பார்த்துக்கிட்டே பின் தொடர்ந்தேன் அந்த பொண்ணை. பெயர் கூட என்னவோ சொன்னாங்க. இப்போ சட்ன்னு நினைவுக்கு வரலை:(



பிங்க் நிறத்தில்  மரத்தண்டில் ஒட்டிப் பிடிச்சுருந்த பழங்களைக் காட்டி இதுதான் கோக்கோ என்றதும் சட்னு  மின்னல் அடிச்சது மனசில்!  அட! இப்படியா இருக்கும்!!!  ஆர்வம் திரும்பி வந்துருச்சு.  அடுத்து இஞ்சியும்  மஞ்சளுமா தளதளன்னு இலைகளுடன் செடிக்கொத்துகள்.  பெரிய இஞ்சியான்னு கேட்டேன்.  யானை இஞ்சியாம்! சிகப்பு வகை கூட இருக்குன்னாங்க.

கிளைகளில் முத்துமணிகளை வரிசையாக் கோர்த்துப்பிடிச்சுருக்கும்  காஃபிச்செடிகளைக் கண்டதும் கண்கள் விரிஞ்சது உண்மை.  நம்ம வீட்டில் இருக்கும் ஒரே ஒரு காஃபி செடியில் இந்த ஆறேழு வருசத்தில் ஒரே ஒருமுறை மூணே மூணு பழம் கிடைச்சது. அதுக்கே நான் ஆடுன ஆட்டம் கொஞ்சநஞ்சமில்லையாக்கும்! பதிவெல்லாம் கூடப் போட்டுருந்தேன்.  புதுச்செடிகள் வருமுன்னு  அந்தப் பழங்களை மீண்டும் நட்டு வச்சு இப்போ ஒன்னரை வருசம் ஆச்சு. கப்சுப்ன்னு கிடக்கு தொட்டி மண்ணில்:(

ஹைய்யோ  ஹைய்யோன்னு  வாய் தோறாமல் சொல்லிக்கிட்டு இருந்ததைக் கொஞ்சமும் சட்டை செய்யாமல் இருந்தார் கோபால்.  சின்ன வயசில் காஃபித் தோட்ட அனுபவம்  இருந்துருக்குன்னு ஒரு கெத்து!



ரெண்டு தனித்தனி கூண்டுகளில் ரெண்டு மிருகங்கள்  ஒரு விநாடி நின்ன இடத்தில் நிக்காமல் குறுக்கும் நெடுக்குமா போய்வருது. க்ளிக்குக்குச் சரியா அகப்படலை.  நரியோன்னு முதலில் நினைச்சாலும்.... இது  நரி இல்லை. புனுகுப் பூனை!!!!

நல்ல தரமான காஃபிப் பழங்களைப்பொறுக்கி எடுத்துத் தின்னுமாம். தின்னட்டுமே...யார் வேணான்னாங்க?  தின்னுட்டு?  கொட்டையைப் பிரிச்சு எடுத்துப் பழத்தை மட்டும் தனியாத் திங்கத் தெரியாதாம் இதுகளுக்கு. அப்படியே 'லபக்'தான்.  பழம் மட்டும் செரிச்சு, செரிக்காத கொட்டைகள் 'வெளியே' வருது பாருங்க,  அது அத்தனையும்  காசு!!!!  அம்பது கிராம் காஃபிப்பொடி  பதினேழரை யூ எஸ் டாலர் ! ஒரு லட்சத்து எழுபத்தி அஞ்சாயிரம் ரூபாய்.  (அம்மாடியோவ்!!!)

அந்தக் கொட்டைகளை எடுத்துச் சுத்தம் செஞ்சு  அதை வறுத்து  காஃபிப் பொடியாவும் காபிக்கொட்டையாவும் விற்பனை. Luwak Coffeeன்னு  சொல்றாங்க. (  Luwak, the Asian Palm Civet)

superb, exotic taste and aroma என்று உலகின் காஃபி ப்ரியர்கள் போற்றுகிறார்களாம்.  ஐயோ.... (yuck)

இன்னும் குறுமிளகு, கிராம்பு, வனிலா  எல்லாம்  பயிரிட்டு இருக்காங்க.







 தோட்டத்தில் சின்னதா ஒரு குடிலுக்குள்  இங்கே உள்ள விளைச்சல்களை  மூங்கில் தட்டுகளில் காட்சிக்கு வச்சுருக்காங்க. விறகு அடுப்பு மூட்டி காஃபிக்கொட்டை  வறுப்பும் அதை இடிச்சுத் தூளாக்க உரலும் உலக்கையுமா  ஒரு  'செட்டிங்' நானும் கொஞ்சம் இடிச்சுப் பார்த்தேன்:-)



சரி, வாங்க  காஃபி குடிக்கப்போகலாமுன்னு  கூட்டிப்போனாங்க.  இன்னொரு பெரிய  குடில். நடுவிலே ஒரு நீளமான மேசை. எனெக்கென்னமோ சட்னு கேரள வீடுகளின்  ஊட்டுப்பொறை நினைவுக்கு வந்துச்சு.  பழைய ஸ்டைல் உள்ள தரவாட்டில் மேல் அடுக்களை இப்படித்தான் மரமேசையுடன் இருக்கும். உக்கார பெஞ்சு போட்டுருக்கும். இங்கேயும் அதே!






மேசையின் ஒரு பக்கம் அழாகான கண்ணாடி ஜாடிகள்.  விதவிதமான  காஃபிக்கொட்டைகள். மேசையை ஒட்டி இருந்த  அரைச் சுவரின் மறைப்பில் அடுப்பாண்டை ஒரு பெண். ஓஹோ.... அப்ப அது கீழடுக்களை. சரிக்கும் கேரள வீடு தன்னே!

கொஞ்சம்   சாக்லேட் கொண்டு வந்து வச்சாங்க.  கோக்கோதான் காய்ச்சுத் தொங்குதே!

சூடான காஃபிக்குக் காத்திருந்தோம். பத்தே நிமிசத்தில் ஒரு ட்ரே முழுக்க கண்ணாடிக் கப்புகளில் காஃபி வருது. நாம் ரெண்டே பேர்தானே? எதுக்கு இத்தனை கப்? ஒருவேளை எல்லாருக்கும் சேர்த்தே தயாரிச்சு இருப்பாங்களாயிருக்கும். அங்கே ரெண்டு சின்னப்பசங்க ஒருமூலையில்  விளையாடிக்கிட்டு இருந்தாங்களே.


எல்லா கப்புகளையும்  ஒன்று இரண்டு மூன்று என வரிசைப்படுத்தி  நமக்கு முன்னால் வச்சாங்க. ஏழு கப்பு! என்னன்னு வாயைத்திறந்து விசாரிப்பதற்குள் இன்னொரு ஆறு கப் வந்து  வரிசைக்கு எதிர்வரிசையா உக்காந்துச்சு.  முக்காப்லா டீம்?

மெனு கார்டைக் கொண்டு வந்து எங்க கையில் கொடுத்துட்டு ஒரு சாஸரில் ரெண்டு ஸ்பூன்ஸ் வச்சாங்க. ஏழு வரிசை காஃபி ,ஆறு வரிசை டீ!  எல்லாத்தையும் டேஸ்ட் பண்ணிக் குடிக்கணுமாம்.


பாலி, கோகோனட், ஜின்செங், வனிலா, ஜிஞ்சர், ரெட் ரைஸ் இப்படி காஃபி வகைகள்.   லுவாக் இருக்கான்னு பார்த்தேன். நல்லவேளை இல்லை!
!
டீயிலும்  டாமரிண்ட் & ஸாஃப்ரொன், ஜிஞ்சர், லெமன்க்ராஸ், ரோஸல்லா,  லெமன்,  ரெட் ரைஸ் டீ! தேயிலைச் செடிகள் எங்கே இருக்குன்னு கேட்டால்.... அந்த டீ வகைகளில் தேயிலையே  கிடையாதாம் !!!  நோ டீ இன் டீ:-))))


  அஞ்சாறு கோப்பைகளில் இருந்ததை ஸ்பூனால் எடுத்து ருசி பார்த்தோம். காஃபி ஆசையே என்னைவிட்டுப் போயிருச்சு என்பதே உண்மை:-)  அதுக்காக.....   ?

ஆவலா நம் முகம் பார்த்து  நிற்கும்  டேப சாரி பணியாளர்களிடம் ,

பொய்மையும் வாய்மை யிடத்தபுரைதீர்ந்த
 நன்மை பயக்கும் எனின்

என்று தாடி சொல்லி வச்சுட்டுப் போனதை மனதில் நினைத்து  நல்லா இருந்தது. நன்றின்னு சொல்லிக்  கிளம்புனதும்  தோட்டம் கடந்து முகப்பில் உள்ள  இன்னொரு பெரிய குடிலுக்குக் கொண்டுபோகப்பட்டோம்.

இது கடை! ரகம்ரகமான  காஃபி, டீ, வாசனைப்பொருட்கள். மசாலா சாமான்கள் எல்லாம் வச்சுருக்காங்க. லுவாக் பக்கம் திரும்பாம,   பாதுகாப்பா இருக்கட்டுமேன்னு  பாலி ப்யூர் காஃபிக்கொட்டை வெறும் நூறு கிராம் பாக்கெட் ஒன்னு வாங்கினோம். எழுபத்தியஞ்சாயிரம் ரூபாய். இங்கே நம்மூருக்குக் காஃபி,டீ கொண்டுவரலாம். டிக்ளேர் செஞ்சுடணும். (இன்னும்  அதை திறக்கவே இல்லை!)


காஃபி நல்லா இருந்ததா என்று கேட்ட ந்யோமேனுக்கு(ம்) அதே குறள் தான்:-)  ஒரு கிராமத்தினூடாக வண்டி போகுது.   உபுட் என்ற   ஊர் வந்துருச்சாம். வீடுகளின் மதில்களில் எட்டிப்பார்க்கும்  வீட்டுக்கோவில்கள் எல்லாம் தாண்டி அடர்த்தியான மரங்களுக்கிடையில் போகும்  சாலையின் வழியாகப்போய்  வலது பக்கம் திரும்பிக் கொஞ்சதூரத்தில்  நாம் தங்கப்போகும் ஹொட்டேலுக்குப் போய்ச் சேர்ந்தோம்.
 ரெண்டே நாளில்  எங்களோடு அருமையாக பழகி  மனசில் இடம்பிடிச்ச   ந்யோமேனுக்கு  கொஞ்சம்  ருப்பைய்யா அன்பளிப்பாக் கொடுத்ததும்  அவர் கண்ணில் மின்னின மகிழ்ச்சியைப்பார்க்கணுமே!  இப்படி வெகுளியா இருக்காரே! நல்ல பையர். நல்லா இருக்கட்டும்!

தொடரும்...........:-)







கண்ணுக்கு(ம்) விருந்தாக ஒரு கலையழகு! (பாலி பயணத்தொடர் 13 )

$
0
0
318 என்ற அறைச்சாவியைக் கையில் வாங்குனதும் என் முதல் கேள்வி  லிஃப்ட் இருக்கா? இங்கே இல்லையாம்:(  அட ராமா......  சொல்லி  வாய்மூடுமுன் தரைத்தளம்தான் என்று வயிற்றில் பால் வார்த்தார் வரவேற்பாளர்.

ஸென்டானா  ரிஸார்ட்.  இந்த முறை மொத்தப் பயணத்திலும் என்ன பார்க்கப்போறோம் எங்கே தங்கப் போறோம் என்பதையெல்லாம்முழுசா கோபாலிடம் ஒப்படைச்சுட்டேன். ஹோம் ஒர்க் செஞ்சுக்கத்தோணலை. எது வருதோ அதுன்ற எண்ணம். ஆன்மீகவாதியாகிட்டேனோ என்னவோ!!!



ஆடம்பரம் இல்லாத சிம்பிளான வரவேற்பு குடில். ஓடு வேய்ஞ்சுருக்கு.  ரெண்டு பக்கமும் திறந்த வெளி.  முன்னால்  சின்னக்குளம். அதில் நீந்தும் தங்க மீன்கள்.  முன் வாசலில்  கார் பார்க். இடது பக்கம் ஒரு நீச்சல் குளம். வெயில் காய சாய்மானக் கட்டில்கள், ஒரு ஊஞ்சல், நிறைய மரஞ்செடிகொடிகள் நிலத்திலும் தொட்டிகளிலுமாய்.  பத்மாஸனா சாமி மஞ்சக்குடையின் கீழ் இருக்கார் (!!)

பணியாளர் நம்மை நம்ம அறைக்கு  வழிகாட்ட, நாம் அவர் பின்னே!   வரப்பு போல் ஒரு பாதை.  கொஞ்சம் அகலமா  மூணு அடி இருக்கும் காங்க்ரீட் பாதை. வலது பக்கம்  அஞ்சடி ஆழத்தில்  நெல் வயல். இடது பக்கம்  ரெண்டு கட்டிடங்கள்.  இதுலே ரெண்டாவது  கட்டிடத்தில்  இடதுபக்க அறை நமக்கு.  அச்சு அசலா கேரள வீட்டு உம்மரம். சாரு கசேறை உண்டு கேட்டோ!  பின்னே ரெண்டு நாற்காலிகளும்  காஃபி டேபிளுமாய்  ஒரு பக்கம்.


கதவு ஜன்னல் அலங்காரம் பார்த்து அப்படியே அசந்து போயிட்டேன். தாய்லாந்து புத்தர் கோவில்களில் இப்படி அழகான கதவுகளை பார்த்து ரசிச்சது நினைவுக்கு வந்தது.  அலங்காரக்  கதவு திறந்ததும்  மயங்கி விழாத குறை!  கொசுவலை போட்ட   பெரிய கட்டில். இதுவுமே மூங்கில் தான். அறைச்சுவர்கள் எல்லாம்  பளபளக்கும்  மூங்கில் பட்டைப் பின்னல்கள்.   அடைசல் இல்லாத  அலங்கார மேசை,  படுக்கைக்கு ரெண்டு பக்கமும் ரீடிங் லேம்ப்கள் வைக்க ஸ்டூல்கள்.  ஒரு கடிகாரமும் தொலைபேசியும்.  டிவி இல்லை!!!! ஹப்பாடா.... சனியன் ஒழிஞ்சதுன்னு  நிம்மதி எனக்கு.

நல்ல பெரிய குளியலறை.  தேவையான   சோப்பு ஷாம்பூ சமாச்சாரங்கள்.  எல்லாம் ஜஸ்ட்  பேஸிக்  அண்ட் நீட்.

ரெண்டு கட்டிடமுன்னு சொன்னேன்  பாருங்க. ஒவ்வொன்னிலும்  நாலு அறைகள். மாடியில் ரெண்டு கீழே ரெண்டு. இந்தப்பகுதிக்கு  அதாவது வயல் வியூ பகுதிக்கு  எட்டு அறைகள். ஒவ்வொரு  கட்டிடத்துக்கும் தனி வழி. அருமையான பராமரிப்புள்ள அட்டகாசமான  புல்வெளியில்  நேராவும் பக்கத்துக்கொன்னாவும்  மூணாகப்பிரியும் பாதை.  நேர் பாதை மாடிப்படிக்கு.  மாடி வாசலுக்கு  வேட்டி கட்டுன ரெண்டு த்வாரபாலகர்கள்.  நம்ம அறைகளுக்குப்போகும் பாதையின் ரெண்டு பக்கமும்  அழகான மரஞ்செடி கொடிகள்.  பார்க்கப்பார்க்க மனசு நிறைஞ்சு போச்சு.


கோபாலுக்கும் கொசுவத்தி!  கேரள வாழ்க்கையை நினைச்சுக்கிட்டார் போல! சட்ன்னு லுங்கிக்கு மாறி சாரு கசேறயைப் புடிச்சுக்கிட்டார். ஓ.... காரணவர் அல்லே!!!! அதுக்குள்ளே வெல்கம்  ட்ரிங் வந்தது.  பேசாம இங்கேயே  இருந்துடலாமான்னு ....    கொஞ்சம் ஓய்வு, ஒரு ஷவர்ன்னு  முடிச்சு  ஊர் சுத்திப் பார்க்கலாமான்னு கிளம்பினோம்.  கால்வலி என்பதால் எனக்கு ஒரு சுணக்கம். வரும்போது கடைவீதி பார்த்தோமே  அங்கே ஒரு வாக் போயிட்டு வரலாமுன்னார்.  தூண்டில் வேலை செஞ்சது.

நீச்சல் குளத்தைக் கடந்து போனப்ப ஒரு கூண்டில் மைனா ஒன்னு.   கார் பார்க் கடந்து வெளியே போகுமிடத்தில் இன்னொரு கூண்டு, அதிலும் ஒரு மைனா.  நம்ம ஸெண்டானா  தெருவிலிருந்து கொஞ்சம் உள்ளே தள்ளி இருக்கு.   நல்லதுதான். கடைத்தெருவின் களேபரம்  காதுக்கு எட்டாது.


இந்த சாலையின் பெயர்  சேக்ரட் மங்கி ஃபாரஸ்ட் ரோட்.  சரிவான சாலையா இருக்கு.  வலது பக்கம் ஏத்தம் என்பதால் இடது கைப்பக்கம் போனோம்.  நாம் வந்த சாலைதான். கலைப்பொருட்கள் கொட்டிக்கிடக்கு கடைகள் எங்கும்.  யானைக்கும் பூனைக்கும் குறைவே இல்லை.






 இந்து மதம் என்றவுடன்  யோகா செண்டர்களும்  ஏராளம். வகுப்புகள் நடத்துறாங்களாம்.  கூடவே   ஆர்ட் , ஆயுர்வேதம், அக்குபஞ்சர், சமையல் வகுப்புகள்,  அந்தத் தெரப்பி இந்தத் தெரப்பி ன்னு  டூரிஸ்டுகளைக் குறி வச்சே எல்லாமும்.  மசாஜ்  இன்னொரு  தொழில்.   அரை மணிக்கு அறுபதாயிரம்தான்னு  மக்களைப் பிடிச்சுக்கிட்டுப்போக  இளம் பெண்கள்   அடிக்கொன்னா நின்னுக்கிட்டு இருக்காங்க.






எல்லாக் கடைகளின் வாசலிலும் ஒரு சாமி.ஒரு  பூ அலங்காரம் இப்படி .... கடைக்காரரின் கலாரசனை   சூப்பர், இல்லே!!!

துளஸி  தேவி  பெண்கள் என்னிடம் கேட்டப்ப,  இது என்னுடைய பார்லர்தான். எங்கிட்டேயே  கேட்டால் எப்படின்னேன்:-)இறக்கம் என்பதால் கொஞ்சம் சுலபமாவே கீழே மெயின் ரோடுக்குப் போயிட்டோம்.  கண் எதிரில்  புனிதக் குரங்குக் காடு.





உள்ளே போகக் கட்டணம் உண்டு. ஆளுக்குப் பதினைஞ்சாயிரம்.  வாசலில்  நாம் செய்யக்கூடாதவை, குரங்குகள் செய்யக்கூடியவைன்னு  தகவல்களைக் கல்லில் பொறிச்சு வச்சுருக்காங்க. போர்டு வச்சா...அதையும் குரங்கு தூக்கிட்டுப்போயிரும் போல!  இன்னொரு இடத்தில் போர்டை நல்லா ஆணி வச்சு அடிச்சுருந்தாங்க.  உள்ளே மூணு கோவில்கள் கூட இருக்காம்.

இப்பவே மணி அஞ்சே கால்.  சட்னு இருட்டிரும். அப்புறம் எங்கே  உள்ளே போய் பத்திரமாத் திரும்பி வர்றது?  மேலும் கண்ணாடி போட்டுக்காதேன்னால்....   அப்புறம் என்னத்தைப் பார்ப்பேன்?  நேத்து நல்ல ஃப்ரெண்ட்லி மங்கீஸ் பார்த்தோமே அது போதுமுன்னு  உள்ளே போகலை.

திங்கிற சாமான் எதுவும் கண்ணில் காமிக்காதேன்னுட்டு  அங்கே காட்டு வாசக்கேட் பக்கம் வாழைப்பழம் வச்சு வித்துக்கிட்டு இருக்காங்க. குரங்குகளுக்கு வாங்கிப் போடவாம்!!!

நேத்துப் பார்த்த அதே   macaque இனக் குரங்குகள்தான் இங்கேயும். நீண்ட வால்கள். இதுகள் பாட்டுக்குக் கடைவீதியில் எல்லாம் வந்து சுத்திக்கிட்டு இருக்குதுங்க. குப்பைக்கூடையைப் பார்த்தால் விடறதில்லை:(

ஹொட்டேலுக்குத் திரும்பி வரணுமுன்னா ஏத்தத்தில் ஏறணும். எனக்கோ காலு பயங்கர வலி.  டெக்ஸி எடுத்துக்கிட்டு போயிடலாமுன்னு   கேட்டால்  ஒரு லட்சம் கொடுன்றாங்க.  ஒன்வே. நாங்க சுத்திக்கிட்டுத் திரும்பி வரணும்.  வேணாம் மெள்ள நடக்கறேன்னு சொன்னேன். அதுக்குள்ளே இவர் இன்னொரு டெக்ஸிகிட்டே  நாப்பதாயிரத்துக்கு பேரம் முடிச்சுட்டார்.   எண்ணி மூணே நிமிசம்.  வந்து சேர்ந்தோம்.
 கல்லைக்கூட விட்டு வைக்காமல் க(த)லையோ க(த)லை!

ராச்சாப்பாட்டுக்கு என்ன செய்யலாமுன்னு  யோசனையோடு வரவேற்பில் நல்ல சாப்பாட்டு விவரம் விசாரிக்கலாமுன்னு போனால் அங்கே ஒரு மேஜையில்  தினசரி டூர்,  மஸாஜ்,  அது இதுன்னு  ப்ரோஷர்ஸ்  கிடந்துச்சு. என் கண்ணில் பட்டது  க்வீன்ஸ் ஆஃப் இண்டியா ஹோம் டெலிவரி மெனு.

அடிச்சக்கை. இந்திய உணவகமா?  எவ்ளோ நாளாச்சு  நல்ல சோத்தைத் தின்னு! (உண்மையைச் சொன்னால்  இன்னிக்கு மூணாவதுநாள்தான். ஆனால் ஒருநாள் உணவை ஒழி என்றாலொழியாய் என்று  அவ்வைப்பாட்டி அன்றே சொல்லிட்டாங்களே!) அதில் இருந்த  தொலைபேசி எண்ணைக்கூப்பிட்டு  சாதம், பருப்பு, நான்,  காலிஃப்ளவர் ஆலூ கறின்னு ஆர்டர் கொடுத்தால்  இப்பவே கொண்டு வரட்டுமான்னு கேக்கறாங்க. ஐய்ய....மணி  ஆறுதான் இப்பவேவா?  ஏழரைக்குன்னு சொல்லிட்டு அறைக்குப் போகும் வழியில் காலடி வச்சேன்.

ஹலோ.....

ஹை ஹலோன்னு சொல்லிட்டுத் திரும்பினேன் . கரகரத்த குரலில் கூப்பிடுவது யாரு?

அட...மைனா! நீ பேசுவியா!!!!  தெரியாமப்போச்சே!  கொஞ்சம் நின்னு அதனுடன் கொஞ்சம் கதைச்சேன். மலாய்கூட பேசுதுப்பா!!!!

காலில் சூடா வெந்நீர் அபிஷேகம் பண்ணியதும் வலி  கொஞ்சம் குறைஞ்சது.  வீட்டு முன்புறத்தில்  மாலைக்காற்றை அனுபவிச்சபடி  நெல்வயலில் கண்ணு நட்டபடியே , மறுநாள் என்ன செய்யப்போறோமுன்னு கேட்டதுக்கு  உனக்கான ஸ்பெஷல் டே என்றார் கோபால்.  காலை எட்டரைக்கு வண்டிக்குச் சொல்லி இருக்கேன்னார்.  இது எப்ப?

நீ  ஓடி ஓடிப்போய்  நெல்வயலை க்ளிக்கிக்கிட்டு இருந்தியே அப்ப!

அப்படி எங்கே போறோம்?  யானை  ஸஃபாரி! ஹைய்யோ!!!!!

கட்டை சுவத்துக்கு மேல் ஒரு கல்லைக் கூட க்ரோஷாவால் அலங்கரிச்சு வச்சுருக்காங்க. இன்னொரு பக்கம் ஒரு குடை!

ஏழரைக்கு டான்னு சாப்பாடு வந்துருச்சு. அப்பளம், ஊறுகாய், ரைத்தான்னு  ...ஓஹோ பேஷ் பேஷ். ஒரு லட்சத்து தொன்னுத்தியஞ்சாயிரம்தான்:-) பாலியில் நாலு இடத்தில் கிளைகள் இருக்கு இதுக்கு. மனசில் குறிச்சு வச்சுக்குங்க. ஒரு நாள் தேவைப்படலாம்!

சாப்பாட்டு டைமில் ஒரு அதிதி வந்தார்.   ஏற்கெனவே சாப்பிட்டுட்டார் போல! வயிறு ஊதியே இருந்தது. ஆனாலும் பார்க்க வச்சு திங்க முடியாதுன்னு கொஞ்சம் வெறும் சோறு போட்டேன்.  பயந்து நடுங்கி தூணுக்குப்பின் போய் ஒளிஞ்சார்.

தூக்கத்திலும்கூட நாளைக்கு யானை யானை:-)

தொடரும்...:-)





யானை வரும் 'பின்னே!' (பாலி பயணத்தொடர் 14 )

$
0
0

கண்ணைத் திறந்ததும்  கதவைத் திறந்தால்..... பச்சைப்பசேலுன்னு  நெல்வயல்!  களை பிடுங்கவோ நாத்து நடவோ செஞ்சால்கூடத் தேவலை!  கெமெராவில் அடக்கிட்டு கடமைகள்  முடிச்சு, யானைபூனை மோதிரங்களும் யானை பெண்டன்ட்டுமா சிம்பிளா அலங்காரம்(!!)   ஆனதும் ,ப்ரேக்ஃபாஸ்டுக்குப் போனோம்.  சன்ரைஸ் ரெஸ்ட்டாரண்ட். செண்டானாவைச் சேர்ந்ததுதான். அறை வாடகையில் காலை உணவு சேர்த்தி.



ரொம்பத் தெரியாத ஊரில் காலை உணவுடன் கூடிய அறைகள்  கிடைச்சால்  உத்தமம். அலையவேணாம் பாருங்க. ரெஸ்ட்டாரண்ட் நம்ம  அறைக்குப்பக்கமே இருந்துச்சு.  அழகான பூச்செடிகளும் மரங்களும், சிற்பங்களுமா  லொகேஷன் சூப்பர்.  புள்ளையார் எல்லா மூலைகளிலும் இருக்கார். ஒரு மூலையில் மட்டும் ஹனுமன்:-)





ரெஸ்ட்டாரண்டுக்கு  முன்னால் இன்னொரு நீச்சல் குளம். கண்ணுக்குக் குளுமையா இருக்கட்டுமுன்னு ......




காலைப் பூஜைக்குன்னே  ஆள் வச்சுருக்காங்க போல. ஒருபெண் தலையில் சுமந்த பெரிய தட்டில் இருந்து  பூஜைக்கான நைவேத்தியமா  குருத்தோலையில் பின்னிய தட்டு பிரசாதத்தை ஒவ்வொரு சாமிச்சிலைகள் முன்னும் வச்சுட்டு  ஊதுபத்தி கொளுத்தி, கீழே விழுந்து கும்பிட்டுக்கிட்டே போனாங்க.

இந்த தினப்படி  சாமி உபச்சாரத்துக்கு Canang sari ன்னு பெயர்.   இந்தப் பெயருக்கு 'அழகிய குறிக்கோளின் சாரம்'  என்று பொருள் வருது. பொதுவா இவுங்க  சாமியையும் சமயத்தையும் சாப்பாட்டையும் சேர்த்து குழப்பிக்கறதில்லை.  பூஜை சமாச்சாரத்துலே  கருவாடும் உண்டு. இந்தப் பூஜைத்தட்டுலே பூக்களை அடுக்குவதுகூட  இதுக்குன்னு உள்ள ஒரு முறைப்படிதான்.

பூக்கள்  எந்த சாமிக்கு என்ன நிறம், எந்த திசையைப் பார்த்து அடுக்கணும் என்றெல்லாம் முறைப்படுத்தி இருக்காங்க. மும்மூர்த்திகள் என்று பொதுவாச் சொன்னாலும் நாலு சாமிகள் இருக்கு.  ஈஸ்வரனுக்கு  வெள்ளைப்பூ கிழக்கு பார்த்து,  பிரம்மாவுக்கு சிகப்பு பூ தெற்கே பார்த்து, விஷ்ணுவுக்கு  பச்சை  இல்லேன்னா நீலப்பூ  வடக்கு பார்த்து, மஹாதேவனுக்கு  மஞ்சள் பூ  மேற்கு பார்த்துன்னு  வைக்கணுமாம்.


சிவனுக்கு எலுமிச்சை இலை, விஷ்ணுவுக்கு வெத்திலை பிரம்மனுக்கு புகையிலை ன்னும்  தட்டுலே வைப்பார்களாம்.  தினம் வீட்டு வாசலில் கட்டாயம்  வைக்கணுமுன்னு நியதி உண்டு. கடவுளுக்கு நன்றி சொல்லி  எல்லாம் சமாதானமா  இருக்கணும் என்று வேண்டுதல் செய்யறாங்க. வீட்டுலே துக்கம் சாவு நடந்துட்டா அன்னிக்கு  வாசலில்  கனாங்  சாரி  வைக்கமாட்டாங்க. (அப்ப இது நம்ம கோலம் மாதிரிதான்!)  நாம் விசேஷ நாளிலே பெருசாக் கோலம் போடுவது போல இவுங்க ஒரு நல்லநாள் கிழமைன்னால்  ரெண்டு மூணு தட்டு கூடுதலா வைப்பதுடன்  அதுலே காசும் வைப்பாங்களாம். இதுக்குன்னே  அச்சடிச்ச நோட்டுகளும் காசுகளும் கிடைக்குதாமே!


என்ன ஜூஸ் வேணுமுன்னு கேட்டு  ஃப்ரெஷாப் பண்ணித் தர்றாங்க. மத்தபடி  பஃபே  வகை.  உள்ளுர் சமாச்சாரமா  பூரி போல ஒன்னு  கிடைச்சது.  அப்பம்! வெள்ளையர்களுக்கான  வகைகள் அதிகமா இருக்கு.  வெஜிடேரியன்  வகைகளை விசாரிச்சுக் கேட்டுக்கிட்டேன்.  காஃபி ரெண்டு பெரிய ஜக்கில் வந்துச்சு. ஆளுக்கு  ஒன்னாம்!!!! சூடான பால் வேணுமுன்னு  சொல்லி  வாங்கினேன்.


வண்டி வர்ற நேரமாச்சு. கிளம்பலாமுன்னா,  ஒன்பதுக்கு வரச் சொன்னாராம். ஹொட்டேலுக்கு  வெளியே போய்  கடைவீதியை நோட்டம் விட்டால்  அப்பதான் ஒன்னுரெண்டு கடைகளைத் திறந்துக்கிட்டு இருக்காங்க. நேரெதிரா ஒரு கலைப்பொருட்கள் கடை.  நேத்து பாரோங் டான்ஸ்லே பார்த்த, பாரோங்கின் முகமூடிகள்  வச்சுருக்காங்க.  மரம், உலோகம், துணிப்பொம்மைன்னு நிறைய இருக்கு. அதுலே ஒரு மும்முகம் உள்ள நான்முகன் கண்ணில் பட்டார்.  அவுங்க சொன்ன விலையை ரெண்டால் வகுத்தேன். கடை ஓனர் இன்னும் வரலை. கேட்டுட்டுச் சொல்ரேன்னு விற்பனையாளர் சொன்னதும் கேட்டு வையுங்க. சாயங்காலம் வர்றேன்னுட்டு  அங்கே இங்கேன்னு அஞ்சு நிமிசம் வேடிக்கை பார்த்துட்டு ஹொட்டேலுக்கு வந்தோம்.



நேரெதிரா கலைவாணி.  அந்தப்பக்கம் ஒரு  நீரூற்று.


வரவேற்பில் ஒரு புடைப்புச் சிற்பம்.  பஞ்சபாண்டவரும் கிருஷ்ணரும்  தேரோட்டி சஞ்சயனும் என்று  நினைச்சுக்கிட்டு அதையே கோபாலுக்கும் சொன்னேன்:-) வரவேற்பில்  காத்திருந்தப்ப ரெண்டு சின்னப்பெண்கள் உக்கார்ந்துருந்தாங்க.  பள்ளிக்கூடம் போறாங்க போலன்னு பேச்சுக் கொடுத்தேன்.  'ஒன்பது மணி' ன்னு  சொல்றாங்களே தவிர வேறொன்னும் சொல்லத் தெரியலை. மொழி தெரியலைன்னா முழி பிதுங்கிருது இல்லே?  பேர் கேட்டேன்.  காடெக், டேவிடா  (Kadek ,  Dewita)

பாலி மக்கள் மொழியில்  பிள்ளைகளுக்குப் பெயர் வைக்க ரொம்பக் கஷ்டப்படறதில்லை  போல.  காடெக் என்றால் ரெண்டாவது குழந்தை!  முதல் நாலு குழந்தைகளுக்கு சுருக்கமா பெயர் வரிசை இருக்கு.  முதல் குழந்தைன்னா  வயான் இல்லைன்னா புட்டு,  ரெண்டாவதுக்கு காடெக் இல்லைன்னா மேடி, மூணாவது ந்யோமேன் இல்லைன்னா  கொமங், நாலாவதுன்னா  கெடூட்.

அஞ்சு ஆறுன்னு பொறந்தா?  நோ ஒர்ரீஸ்!  அஞ்சுக்கு சின்ன வயான் . ஆறுக்கு  சின்ன  மேடி இப்படி 'சின்ன' வைச் சேர்த்துக்கிட்டால் ஆச்சு!  இதெல்லாம் இல்லாம நாலு வர்ணத்தாருக்குன்னு  தனித்தனிப் பெயர்களும் இருக்கு.




இதுக்குள்ளே நமக்கான வண்டி வந்துருச்சு. புத்ரா  என்பவர் வந்துருந்தார்.  I Gusti Putra. இந்த குஸ்டி என்பது க்ஷத்ரியர்களுக்கான பெயராம். நாப்பத்தி முணு நிமிசம் 28 கிலோ மீட்டர் தூரம். வழியெல்லாம் சின்னச் சின்ன கிராமங்கள் நெல் வயல்கள்,  அரிசி, நெல் மூட்டை வியாபாரம், சிறு கடைகள், வீடுகள், வாழை, தெங்கு இப்படி  எல்லாமே  அந்தக் காலக் கேரள கிராமங்களை ஞாபகப்படுத்தியது.  டாரோ  (Taro) என்ற கிராமத்திற்குள் புகுந்ததும் ஒரு கிலோமீட்டரில்    பயணம் முடிஞ்சு  எலிஃபெண்ட் சஃபாரி வாசலில் வந்து இறங்கினோம்.  புள்ளையார்  இருக்கார்.


அஸ்ட்ராலியாக்காரர் ஒருவரால் 1997 இல் ஆரம்பிக்கப்பட்டது.   அஞ்சு  ஏக்கர்  காட்டு நிலம் வாங்கி அதுலே ஆரம்பிச்சார். கைவசம் ஒரே ஒரு ஒற்றை யானை. அதுவும் அனாதை!  சுமித்ரா காடுகளின் ஒரு பகுதி அழிக்கப்பட்டபோது  தன்னந்தனியா   போக்கிடம் இல்லாமல் மாட்டிக்கிட்ட  யானை.  கப்பலில் கொண்டு வந்து இறக்கி இருப்பார் இல்லே?

இவருக்கு நல்ல காலமுன்னே சொல்லலாம்.  மூணு வருசத்தில்  இன்னும் சில யானைகள்.  அவைகளுக்கான  ஏற்பாடுகள் எல்லாம் அட்டகாசமாக இருப்பதைப் பார்த்து சுற்றுலாப் பயணிகள்  வர ஆரம்பிச்சாங்க.  2000 வருசம் டிசம்பர் மாசம் இந்தோனேசியா சுற்றுலாத்துறை  அமைச்சர் வந்து திறந்து வச்சுருக்கார்.    இப்போ முப்பத்தியொன்னு  யானைகள்.  அநேகமா எல்லாமே அனாதைகள்தானாம்.  முப்பதா இருந்த எண்ணிக்கை   இந்த மார்ச் 22, 2013   விடியலில்  முப்பத்தியொன்னாச்சு.  பெண் குழந்தை. பெயர் ஃபஜர்.  FAJAR  இந்தோனேசிய மொழியில் விடியற்காலை என்று பொருளாம்.  அட! நம்ம உஷா!!!!



பார்வையாளர்களுக்குப் பலதரத்தில் நுழைவுச்சீட்டு கிடைக்குது.  சும்மா யானைகளைப் பார்த்துட்டு வரணுமுன்னா  ஒரு லட்சத்து தொன்னூறாயிரம். யானைச் சவாரி செய்யணுமுன்னா   அஞ்சு லட்சத்து எம்பத்தியஞ்சாயிரம். பகல் சாப்பாடும் சேர்த்து வேணுமுன்னா  இன்னொரு ரெண்டு லட்சம் கூட.  இதுலே இன்ஸூரன்ஸ் தொகையும் அடக்கம்.  எதாவது  விபத்து ஏற்பட்டால்  .......    ஆஸ்பத்திரி செலவுக்குக் கஷ்டப்பட வேணாம் பாருங்க!

மேற்படி தொகை எல்லாம்  ஒரு ஆளுக்கு.  என்னடா .... லட்சக்கணக்குலே சொல்லிக்கிட்டே இருக்காளேன்னு பயந்துறாதீங்க.  உங்களுக்கு பத்தாயிரம் வாய்ப்பாடு  தெரியுமா?  தெரியலைன்னாலும் பாதகமில்லை. எல்லா லட்சங்களையும்  பத்தாயிரத்தால்  வகுக்கத் தெரிஞ்சால் போதும்:-)


பகல் சாப்பாடு  வேணாமுன்னு முடிவு  செஞ்சு, சீட்டு வாங்கிக்கிட்டு உள்ளே நுழைஞ்சோம்!

தொடரும்.......:-)







யானைக்குக் கரும்பு வேண்டாமாம்!!!! (பாலி பயணத்தொடர் 15 )

$
0
0
கைக்கட்டு கால்கட்டு போட்டு நிற்பவர்களும்,  உருகி உருகி எலும்புக்கூடாவே ஆனவர்களும் இருக்குமிடத்தைக் கடந்து தோட்டத்தில் கால் வச்சோம். இதோ ஒரு யானை ம்யூஸியம் கூட இருக்கு, அதை திரும்பிவரப்போ வச்சுக்கலாம். முதலில் ஃபஜரைப் பார்க்கணும்.

டிக்கெட்டு பரிசோதிச்சு உள்ளே அனுப்பும் பணியாளர்,  நீங்க யானைகளை வேடிக்கை பார்த்துக்கிட்டு  இருங்க.  யானை சவாரிக்கு உங்களைக் கூப்பிடுவாங்க'ன்னு சொன்னதும், ஐயோ காட்டுக்குள்ளே போயிருந்தோமுன்னா அவுங்க கூப்புடறது காது கேக்காதேன்னு எனக்குக் கவலையாப் போச்சு.

தென்னையும் கமுகுமா ரெண்டு பக்கமும் இருந்த நடைபாதையின் ஒருபக்கம்  தங்கமீன்களோடு சின்னதா ஒரு குளமும்,  குழப்பமா ரெண்டு யானைகள் சிற்பமும் இருந்துச்சு.

கண் எதிரே பெரிய குளம்.  அதுக்கு அப்பால் சின்னக்கூட்டமா யானைகளும் மனிதர்களும்.  குளத்தின் இடக் கரையோரம் அகலமான பாதை.    அங்கே ஒரு ரெஸ்ட்டாரண்டு. அதை அடுத்து  சின்னக்குடிலில் ஒரு ஃபோட்டோ ஷாப்.  இதெல்லாம் இருக்கட்டுமுன்னு கூட்டத்தை நோக்கிப் போனேன்.

ஒரு ட்ரம்மில் கரும்புத் துண்டுகளை வெட்டிப்போட்டு வச்சுருக்காங்க. அதை எடுத்து எதிரில் வரிசையா நிக்கும் யானைகளுக்கு நாம் கொடுக்கலாம்.  சின்னதும் பெருசுமா ஒரு அஞ்சு பேர்!. அநேகமா வயசு,  ஒரு நாலு  முதல்  இருபதுவரை இருக்கலாம்.  ஹாஃப் க்ரோன்.  அப்புறம் ஒரு  இளைஞர்  வந்து சேர்ந்துக்கிட்டார். வயசு அம்பது இருக்கலாம். பெரிய தந்தந்தங்கள்.

கோபால் கொடுத்த கரும்புத் துண்டங்களையெல்லாம் சின்னவர் அழகா வாங்கித் தின்னார். நம்ம டர்ன் என்று  மகிழ்ச்சியாக் கரும்பை அள்ளிக்கிட்டுப் போனேன். ஒவ்வொன்னா வாங்கிக் கீழே தரையில் போட்டதும்  கோபாலுக்கு  ரொம்பச்  சிரிப்பு.  'நீ கொடுத்தால் சாப்பிடமாட்டான்'  என்கிறார்.

'யானைக்காரி மானத்தை வாங்காதேடா'ன்னு  அழுது கெஞ்சுனதும் போனாப்போகுதுன்னு  ஒரே ஒரு துண்டை வாங்கி வாயில் தள்ளினான்  சின்னவன். நாலு வயசுதான். அப்புறம் இன்னும் கொஞ்சம் பெரியவனுக்கு  கரும்பு ஊட்டப்போனால்..... தும்பிக்கையை உயர்த்தி சலாம்  போட்டுட்டு  சிரிச்ச முகத்தோடு கரும்பை வாங்கிக் கீழே போட்டான்!   வெறும் கரும்பே தின்னு போரடிச்சுப்போச்சு:(




இந்தப் பக்கம் நாலைஞ்சு படிகள் வச்ச நீள மேடையின்  அந்தப்பக்கம் இருக்கும் கம்பித்தடுப்பைப் பிடிச்சுக்கிட்டு  அடுத்த பக்கம் பார்த்தபடி சிலர் நின்னுருக்காங்க. என்னத்தைப் பார்க்கறாங்கன்னு  போய்ப் பார்த்தால்  யானை சவாரி மேடை அது. யானைகள்   மண்டி போட்டு உக்கார்ந்து  ஆட்களை ஏத்திச் சிரமப்பட்டு எழுந்து நடக்க வேணாம்!  


ஆஹா.... இதைத்தான் நேத்துப்பூராவும்  யோசிச்சுக்கிட்டு இருந்தேன்.  பாவம் பசங்க.... உக்கார்ந்து எழுந்துன்னு எப்படி முழங்கால் வலிக்கும் :(  ஏணி போட்டு ஒரு பரண் கட்டி இருந்தால் நாம் நேரடியா ஏறி உட்காரலாமேன்னு இவர்கிட்டே சொல்லிக்கிட்டே இருந்தேன்.





அநந்தகோடி வணக்கம், ஆளை விடும்மா.........

கம்பித்தடுப்பில்  இன்  & அவுட் ன்னு ரெண்டு திறப்புகள்.   யானை வந்து அவுட் கேட்டில் நின்னு   சவாரி செய்யும் ஆட்களை இறக்கி விட்டுட்டு கொஞ்சம் முன்னோக்கி நாலடி நகர்ந்து  இன்  கேட்டில் தயாரா நிற்கும் ஆட்களை ஏத்திக்கிட்டுப்போகுது!



சவாரி ஏற்பாடுகளை கவனிக்கும் பணியாளர்  சவாரிக்குச் சீட்டு வாங்கிய  மக்களைப்  பெயர்  சொல்லி  மைக்கில் அழைக்கிறார். அவுங்க ஆஜர் ஆனதும் இன் கேட்டுக்குப் பக்கத்தில் போய் நிக்கச் சொல்றார்.  அடுத்து வரும் யானை அவுங்களுக்கு!

பெரிய கொம்பன் ஒருவன் ஆடிஆடி அழகா வந்தான்.  நமக்கு இவன் கிடைச்சால் கொள்ளாம் என்ற ஆசை இருந்துச்சு. இதுக்கு நடுவில்  நம்ம எடையை  யானை தாங்குமா என்ற பயம் வேற!  அங்கே பார்  உன்னைவிட எதை கூடுதல் மக்கள்ஸ் வர்றாங்கன்னார் இவர்.   ரொம்பப்பெரிய  சைஸுன்னா தனித்தனி யானைகளில் ஏற்றிக்கொண்டு போறதையும் கவனிச்சேன்.

கரும்பு தின்னும் வரிசைக்கு யானைஸ்  புதுசு புதுசா  வர்றதும் தின்னு போரடிச்சதும்   கிளம்பிப் போறதுமா இருக்கு. அதுலே ஒன்னு ரெண்டு நேராக் குளத்துக்குப் போய்  குளியல் போட்டன.  நேரங்காலமில்லாம  வெளியேற்றும் லத்திகளை  உடனுக்குடன் வாரி எடுத்து இடத்தைச் சுத்தம் செஞ்சுக்கிட்டே இருக்காங்க.  குளத்தில்  'இருந்தால்'   வலைக்கூடையை வீசி பிடிச்சுப் போட்டுடறாங்க.

ரெண்டு மூணு ரவுண்டு சவாரி முடிச்சதும்  அந்த யானைக்கு  கொஞ்சநேரம்  ரெஸ்ட்.  நேராத் தண்ணீருக்குப்போய்  விளையாடவோ, இல்லை  நொறுக்ஸ்  திங்கவோ கொண்டு போறாங்க.   அங்கங்கே யானைகளைக் கட்டிப்போட புல்தரையில் பெரிய வட்டங்களா சிமெண்ட்  போட்டு வச்சு நடுவில் இரும்புச் சங்கிலிகளை பதிச்சுருக்காங்க.  ஒரு காலில்  சங்கிலியை மாட்டி விட்டால் அது  வட்டத்துக்குள்ளேயே  வட்டம் போட முடியும். ஆனாலும் பாவம் இல்லையோ!!!! புல்தரையா இருந்தால் காலுக்கு மெத்துன்னு இருக்குமில்லே?

ஃபஜர் எங்கேன்னு கேட்டதுக்கு   மேடைக்கு எதிர்ப்புறமாக் கையைக் காமிச்சார்  ஒரு  பாப்பான்.(மாவுத்தன்)  கண்ணை ஓட்டினால் ஓடித் திரியும் பிஞ்சு. அன்றைக்கு அதன் வயசு  72 நாட்கள்.  அம்மாவைக் கட்டிப் போட்டுருந்தாங்க.  அவர் பெயர்  Yanti  (யாந்தி என்றால்  பார்வதி அம்மன்  என்று பொருளாம்.  காடெஸ் பார்வடி! )  அட! அப்ப புள்ளையாரின் அம்மா!!!


காஃபி ப்ரேக்குன்னு  போகும் பெரிய யானையை கம்பிக்குக்கிட்டே வந்து நின்னு பார்க்கும்  ஃபஜர். Small Talk?

அங்கே இங்கேன்னு ஓடாம அம்மாகிட்டே நில்லேன்....


குழந்தை பாட்டுக்கு அங்கும் இங்குமா ஓடி ஓடிப்போகுது.  அம்மாவை விட்டு எங்கேயும் போயிடப் போகுதோ என்ற கவலையுடன்  அது போகும் திசையெல்லாம் தன்னுடம்பைத் திருப்பிக்கிட்டு பார்க்கும் தாய்.  அம்மான்னால் சும்மா இல்லே!

குளிக்க டைம் ஆச்சுன்னு  அம்மாவைக் கூப்பிட்டுப் போனாங்க.  எல்லா இடமும் தனக்குத் தெரியும் என்ற தோரணையுடன் காலை வீசிப்போட்டு நடக்கும் குழந்தை!




புள்ளையாரே காப்பாத்து.......


யானைக்காரர் வந்து பேச்சுக் கொடுத்தார். எந்த ஊரு?  இந்தியா. (கோபால் எப்பவும் யார் கேட்டாலும்  இந்தியான்னே சொல்வார்.  இப்ப இருக்கறது எந்த ஊருன்னு கேட்டால்தான் சரியான பதில் வரும்.)

"ஷாருக் கான்"

"அட!  ஷாருக் கான் தெரியுமா? ஹிந்தி படம் பார்ப்பீங்களா?"

"ஒன்னுவிடாமப் பார்த்துருவேன். எனக்கு  ஷாருக் ரொம்பவே பிடிக்கும்.  அதுவும் பாட்டுன்னா...."

தேரே   ப்யார் மே(ய்)ன்...ன்னு பாட ஆரம்பிச்சார்.  கூட சேர்ந்து ஒரு வரி பாடுனதும் அந்த முகத்தைப் பார்க்கணுமே அப்படி ஒரு மகிழ்ச்சி:-)

"யானை சவாரி ஆச்சா?"

"இன்னும் இல்லே."

"கொஞ்சம் பொறுங்க உங்க  வரிசை வருது."

முந்தி ஒருகாலத்துலே  முக்கியமா ரஷ்யா போற இந்தியர்கள் கிட்டே அங்குள்ள மக்கள்ஸ் ராஜ் கபூர் பற்றி விசாரிப்பாங்களாம்.  ஆனா இப்ப  ரஷ்யர் மட்டுமில்லாம  உலகமெங்கும் ஷா ருக் கான். எல்லாம் க்ளோபல் ஆனதுபோல் சினிமாவும் ஆகி இருக்குல்லே:-)


பிரமாண்டத்தைப் பற்றி எழுத ஆரம்பிச்சால் ஒரு இடுகையோடு அடங்குவதில்லையாக்கும்......

யானை யானை அழகர் யானை (பாலி பயணத்தொடர் 16 )

$
0
0

ஒரு  சுத்து  சுத்தி வந்து தண்ணீரில் இறங்கி  ஓரமாவே வட்டம் போட்டுக் கரைக்கு ஏறி வந்து  ஆட்களை இறக்கி விட்டுக்கிட்டு பயங்கர பிஸியா இருக்குதுகள் நம்மாட்கள்.

நேரம் போவதே தெரியாமல் 'ஆ' ன்னு இருந்தேன்.  மைக்கில் நம்ம பெயரைக் கூப்பிட்டாங்க.  கொம்பனான்னு பார்த்தேன்...ஊஹும்.........   குழந்தை:(  அடப்பாவமே........

முதுகில் கால் வச்சு ஏறி இருக்கையில் உக்காரணும்.  கால் வைக்கும்போது , கணேசா மன்னிச்சுருன்னு மனசுக்குள் சொல்லி  உக்கார்ந்தேன். ஏற்கெனவே இருக்கை ஒரு பக்கமா சரிஞ்சு  இருக்கு.  இதுலே ..... கோபால்  பக்கத்துலே உக்கார்ந்ததும்  பேலன்ஸ் ஆகுமுன்னு பார்த்தால்....  ஊஹூம்........

அதெல்லாம் விழாது. நீங்க சேஃப்டி  பெல்டை போட்டுக்கோங்கன்னார்  மைக் பிடிச்ச மகராசர். இருக்கையின் ரெண்டு கைப்பிடிகளுக்கு நடுவில்  ஒரு பெல்ட்டு.  அதான் இன்ஸூரன்ஸ் இருக்கே!

மெள்ள அடி எடுத்து  வச்சாள் டெய்ஸி. வயசு வெறும் முப்பது. அம்பாரியும் அதுக்கேத்தமாதிரி ஆடுது. மரங்கள் அடர்ந்த தோட்டத்தின்  நடுவிலே யானைப்பாதை ஒன்னு போகுது.  நல்ல பசுமையான காடு.



நம்ம டெய்ஸியின் பாகன் பெயர்  ரட்னா. ஹிந்துவாம்!  நாம் இந்தியர் என்பதால்  'யானைச் சவாரி  அங்கே  இதை விட நல்லா இருக்குமே' ன்னார்.  யாருக்குத் தெரியும்?  இதுதான் எங்க  வாழ்க்கையில் முதல் முறை யானை சவாரின்னதும் அவருக்கு வியப்பு!  ஏன் ஏன்னா.... எங்களுக்கு யானை,  சாமின்னு சொல்லி வச்சேன். பொதுவா கோவில்களில் யானை வச்சுருப்போம் என்றேன். பிச்சை எடுக்கப் பழக்கி வச்சுருப்பதைச் சொல்லலை! கப்சுப்.


டெய்ஸிக்கு  வாக்கிங் போரடிக்குது  போல. அங்கங்கே ஸ்டாப் போட்டுக்கிட்டு  கயிறு கட்டின வேலிப்பக்கம் சாய்ஞ்சு  கையில்கிடைக்கும் கிளையை உடைச்சு வாயில் போட்டுக்கறாள்.  பசியோ என்னமோன்னு கேட்டால்..... இவளுக்கு எப்பவும் பசிதான்னு சொல்லிச் சிரிக்கிறார்  ரட்னா.

அவரைக் கிளிக்கினதும் உடனே நம்ம கேமெராக்களை வாங்கி நம்மையும் க்ளிக்கி உதவினார்.


நமக்கு முன்னாலும் பின்னாலுமா  யானைகள் வந்துக்கிட்டே இருக்கு/!  பார்க்குக்கு நல்லவருமானம் என்றாலும்  இத்தனை உயிர்களுக்கு சாப்பாடு போட்டு பராமரிக்கும் செலவும் இருக்கே! மேலும் இங்கே பணி புரிபவர்கள் ஏராளமா இருக்காங்க.

யானைச் சவாரின்னு சொன்னால்..... ஒரு அனுபவத்துக்கும் ஆசைக்கும் ஒருக்கா போகலாமே தவிர  அவ்வளவா  சௌகரியமில்லை. அந்தக் காலத்துலே இளவரசிகளும் அரசர்களும் அம்பாரிமேலே உக்கார்ந்து போனதை நினைச்சு  எவ்ளோ பொறாமைப்பட்டுருக்கேன்......   பாவம்.... அவுங்கெல்லாம்:(

சொல்ல மறந்துட்டேனே.... இவுங்களே  ஒரு  சஃபாரி லாட்ஜ் நடத்தறாங்க. இங்கேயே வந்து தங்கிக்கலாம். காலையில் கண் திறக்கும்போது  யானை தரிசனம் உறுதி!  எனக்கிது தெரியாமப் போச்சு:(  ஒரு நாள் இங்கே வந்துருக்கலாம்....  (மனப்புலம்பலுக்கு  சொல்லிவச்சேன்   நெவர்மைண்ட் நெக்ஸ்ட் டைம்)


பொதுவா அரை மணி நேரம் ஒரு சவாரி. நம்ம டெய்ஸி ஆற அமர நடந்து, இலை ஒடிச்சு,தின்னு இப்படி நிதானம் காட்டுனதில் . முக்காமணி ஆச்சு நமக்கு.   உள்ளே ஒரு  தடுப்புக்கம்பிக்குப் பின்னே தனித்தனியா ரெண்டு யானைகள் ! உடம்பு சரி இல்லையாம். மருந்து கொடுத்து தனியாக் கட்டி வச்சுருக்காங்களாம். ஐயோ பாவம்:(

ரட்னாவுக்கு என்ன தோணுச்சோ.... கோபாலிடம், 'யானை மேலே உக்கார விருப்பமா?'ன்னார். இவரும் ஆர்வத்தோடு  டக்ன்னு இறங்கி  ரத்னா சொன்னபடி ரெண்டு காலையும் கயித்துக்குள் நுழைச்சு  என்னமோ பொறந்தது முதல் யானை சவாரியில் பழக்கம் உள்ளவர்போல்  உக்கார்ந்துக்கிட்டார். (ஒருவேளை என் பக்கம்,  கனமா சரிஞ்சு சரிஞ்சுக்கிட்டு இருந்ததாலா?)
ஆஹா.... ரெண்டு பாப்பான்ஸ்:-) முழு சிம்மாசனமும் எனக்கே!!!

தோட்டப்பாதையில் ஒரு சுத்து  முடிச்சுத் தண்ணீர்க்குளத்தில் இறங்கினாள் டெய்ஸி.  ஓரமாகவே போகும்போது கரையில் நின்னுக்கிட்டு இருந்தவங்க எல்லோரும் கோபாலை ஆச்சரியமாப் பார்க்கறாங்க! யானை மேலே உக்கார்ந்தா எப்படி இருக்கு? அப்படி உக்காரப்பிடிக்குமா? ஆயிரம் கேள்விகள்:-)

டெய்ஸி கொஞ்சம் தண்ணீரை உறிஞ்சி பூமாரி பொழிந்தாள். ரெண்டு பேர் நல்ல கேமெரா வச்சுக்கிட்டு  நம்மை க்ளிக்குறாங்க.  மைக்காரர் என் கேமெராவை  வாங்கிக்கிட்டு க்ளிக்க ஆரம்பிச்சார்.  குளக்கரையில்  ஏகப்பட்ட கூட்டம்.

தலையைத் திருப்பினால்..... குழந்தையும் தாயும் தண்ணீருக்குள்ளே! ஆஹா..... அதானா:-) ஃபஜர்தான் அங்கே சூப்பர் ஸ்டார்!இந்தப் பதிவுவெளியிடும் இன்று குழந்தைக்கு வயசு நாலு மாசம்!

டெய்ஸி நம்மை இறக்கி விட்டதும் ரட்னாவுக்கு நன்றி  சொல்லி அன்பளிப்பு  கொஞ்சம்  கொடுத்தால் டெய்ஸிகிட்டே கொடுத்துருங்கன்னார்!!!!  (போச்சுடா..... இங்கேன்னா அன்பளிப்பு.  இந்தியான்னா பிச்சையா? நல்லா இருக்கே கதை!)அதுவும் சமத்தா வாங்கிக்கிச்சு:-)


நாம் இறங்குனதும் டெய்ஸிக்கு ஆஃப்  ட்யூட்டி:-) அதுக்குள்ளே மைக் காரர் வந்து நம்ம கேமெராவைத் திருப்பிக் கொடுத்துட்டு இன்னும் கொஞ்ச நேரத்துலே எலிஃபெண்ட் ஷோ இருக்கு. போயிறாதீங்கன்னார்.  அட! ஆமாம்லெ! விடமுடியுமா?


பாப்பாவை ரசிச்சுக்கிட்டே நின்னோம்.  அம்மாவை அப்படியே காப்பி அடிக்குது. அம்மாவுக்கு  சிறுதீனியா வாழைக்காய் துண்டுகளைப் பார்வையாளர்கள் கையால் ஊட்டிவிடச் சொல்றாங்க.அதுவும் 'ஆ'ன்னு வாய் திறந்து வாங்கிக்குது. (எனக்கு மும்பை எக்ஸ்ப்ரெஸில் தப்பி ஓடிவந்த பையன்  விவரம் சொல்லிக்கிட்டே 'ஆ'ன்னு வாய் காமிப்பது நினைவுக்கு வந்துச்சு.எனக்கு ரொம்பப்பிடிச்ச ஸீன்)

தவறிப்போய் கீழே விழுந்த காய்த் துண்டுகளை  தும்பிக்கையால் துழாவி எடுக்கும் அம்மாவைப் பார்த்து சின்னதும் தும்பிக்கையை குளக்கரையில் நீட்டி  வச்சது படா தமாஷ்!   'ஐயோடா என் செல்லமே'ன்னு வாரி அணைச்சுக்கத் தோணியது உண்மை.



ஃபோட்டோ ஷாப்பை எட்டிப் பார்த்தோம்.  நாலு படம் எடுத்துருக்காங்க. எது வேணுமுன்னு சொன்னால் அதை  A4  அளவில் ப்ரிண்ட் செஞ்சு கொடுப்பாங்களாம்.  மானீட்டரில் காமிச்சதும் எதுன்னு முழிச்சதும்  நாலையும்  சேர்த்து வேணுமாலும்  அதே அளவில்  தரேன்னதும்  அப்படியே போடச்சொல்லி அங்கேயே நாலா கட் பண்ணிக் கொடுக்கச் சொன்னோம். வீட்டுலே ஸ்கேன் பண்ணிண்டால் ஆச்சு. லட்ச ரூபாய் ஆச்சு:-)



இதுக்குள்ளே ஷோ டைம் ஆரம்பிக்கப் போகுதுன்ற அறிவிப்பு கேட்டு  இன்னொரு பாதையில் போனோம். சின்னதா ஒரு அரங்கம் மூன்று வீரர்கள் நுழைஞ்சாங்க.  சின்னப்பசங்கதான். ஆனாலும் மூணு வெவ்வேற வயசில்! தலைவர்  எல்லோருக்கும் (தும்பிக்) கை தூக்கி  ஹலோ சொல்லிக்கிட்டே வந்து  கொடிக்கம்பத்தின் கயிற்றை இழுத்துக் கொடி ஏத்துனார்!!




இத்தனாம் பெரிய உடம்போடு சின்ன மரத்தண்டில் உக்கார்ந்தது  பாவமா இருக்கே! அதுவும் பின்பக்கம் பார்த்தால் ........

எலிஃபெண்ட் வாக் ம்யூஸிக் போய்க்கிட்டே இருக்கு.  பெயிண்டிங் செய்வது, ஹூலா ஹூப் சுத்துவது,  பாகனைக் கையில் தூக்கிக்கிட்டு பீம் வாக்கிங், கால்பந்து கோல் போடுவது, பாஸ்கெட் பால்  கோல், 2 + 4 = 6 ன்னு கூட்டல் கணக்கு போடுவது இப்படி எல்லாம் ஆச்சு.



படங்களின் தரக்குறைவுக்கு மாப்பு!



இந்த பீம் வாக்கிங்தான் எனக்கு ரொம்பப் பயமாப் போச்சு! இதுக்கே சின்னக் குட்டியூண்டு கண்ணு. அதையும் மறைக்கிறது மாதிரி பாகன் சரியா மூக்குமேலே உக்கார்ந்துருக்கார்.  கீழே இருக்கும்  மரத்தண்டு படிகளை எப்படிச் சரியாப்  பார்த்துக் காலை வைக்கப்போகுதோன்னு கொஞ்சம் உதறல்தான் எனக்கு. கரணம் தப்பினால்......  நல்லவேளை! அப்படி ஒன்னும் இல்லாம புள்ளையார் காப்பாத்திக்கிட்டு இருக்கார்.


எல்லாம் ஒரு ஏழரை நிமிச வீடியோவில் இருக்கு பாருங்க.  ஆறையும் ஏழையும் கை மாத்தி மட்டும் வச்சுருந்தாருன்னா  கதை கந்தல்:-))))))))))    தண்ணீர்த் தொட்டி மூடியைத் திறந்து கொஞ்சம் தண்ணி குடிச்சுட்டு  நம்ம மேலும் தெளிச்சார் ஒருத்தர்.  எல்லாம் ஒரு இருவது நிமிசம் இருக்கும்.


என்ன அறிவுடா செல்லங்களான்னு சொல்லிச் சொல்லி மாய்ஞ்சு போனேன்.  இங்கேயே லஞ்சு முடிச்சுக்கலாமுன்னு  கோபால்  சொல்லிட்டார்.  ரெஸ்ட்டாரண்ட் போனோம். நல்ல பெரிய ஹால்.

ஒரு வெஜிட்டேரியன் பீட்ஸாவும்  இன்னும் அவரவருக்கு வேண்டியதையும்  சொல்லிட்டு அங்கிருந்து குளத்தை வேடிக்கை பார்த்துக்கிட்டு இருந்தோம்.  ஒரே விளையாட்டுதான் இதுகள்.  கடமையைச் செய்யும் கூட்டம் ஒன்னு  ! அநேகமா இனி பகல் நேர ஓய்வு  அதுகளுக்குக் கிடைக்கும். லஞ்ச் டைம் ஆகுதே!

சும்மாச் சொல்லக்கூடாது....  சோம்பேறியா இல்லாமல்  ஒவ்வொன்னும் உழைச்சு சாப்பிடுதுகள்.

ம்யூஸியத்துக்குள்ளே  போனோம்.  அழகழகான யானை பொம்மைகள்.  சூப்பரா ஒரு  சுவரில் மாட்டும் ஒரு  வால் பேனல் இருக்கு!  ஹைய்யோ..... எத்தனையெத்தனை!!!!


நீளத் தந்தத்தில் யானைக் கூட்டம் ஒன்னு பிரமாதம்.  சுமத்ராவின் மிகப்பெரிய யானையின் தந்தங்கள்ன்னு  வச்சுருக்காங்க.  பிரமாண்டமான யானை ஒன்னு (Mammoth)  எலும்புக்கூடா  நிக்குது! அது மட்டும் உசுரோட இருந்துருந்தால்..... எப்படி இருக்கும்!!!!


மனசில்லா மனசோடுதான்  கிளம்ப வேண்டியாச்சு.  ச்சும்மா ஒரு பக்கம் உக்காந்து  பசங்களைப் பார்த்துக்கிட்டு இருந்தாலே     போதும்!   யானையும் ரயிலும் கடலும்  அலுக்காத சமாச்சாரம் இல்லையோ?


 தொடரும்............:-)

PIN  குறிப்பு:   ஃபஜர் ஸ்பெஷல்ன்னு தனியா ஒரு படப்பதிவு போடலாமுன்னு  இருக்கேன் . ஓக்கேவா?




கோவா கஜா (பாலி பயணத்தொடர் 17 )

$
0
0

குகைக் கோவிலைக் கட்டுனது ஒன்பதாம் நுற்றண்டில். யானைக் குகைக் கோவில் என்று உள்ளூர் ஆட்கள் அடையாளப்படுத்துறாங்க. இதையும் 'கண்டு பிடிச்சு'ச்  சொன்னது நம்ம கோபால்தான். யானைகளை விட்டுப்பிரிய மனசில்லாமல் வெளிவந்து வண்டியில் ஏறினவுடன்,  கோவா கஜா போகலாமுன்னு புத்ராவிடம் சொன்னார்.  ம்ம்ம்ம்.... அது கொஞ்ச தூரமாச்சே...... இன்னும் அம்பதாயிரம் ஆகுமேன்னு இழுத்தார். பரவாயில்லை போங்கன்னதும்  வண்டி கிளம்புச்சு.

ஒரு  இருபத்தி எட்டு கிலோ மீட்டர்  ( ஸென்டானாவிலிருந்து  யானை சஃபாரிக்குப்  போன அதே தூரம்தான்) தொலைவில் இருக்கு  கோவா கஜா. நாலைஞ்சு கிலோமீட்டர் கடந்ததும் மழை ஆரம்பிச்சு வலுத்துக்கிட்டே போகுது.   ரெண்டு பக்கமும் கடைகள் நிறைஞ்சுருக்கும் ஒரு சின்ன சதுக்கம் கார் பார்க். வண்டிக் கதவைக்கூடத் திறக்க முடியாமல்  மழை அடிச்சுப்பெய்யுது. நம்மகிட்டே ஒரு சின்னக்குடைதான் இருக்கு.  இப்படி மழைன்னு தெரிஞ்சுருந்தால்  நம்ம அறை கைப்பிடிச்சுவரில் வச்சுருந்த குடையைக் கொண்டுவந்திருக்கலாம். புத்ராவிடமும் குடை ஒன்னும் இல்லை. ரொம்ப சர்வசாதாரணமா தினமும் இப்படித்தான் மழை பெய்யுமுன்னு சொல்றார். நேத்து என்னமோ அபூர்வமா மழை வரலை(யாம்!)  அடடா..... அதுதான் அறைகளில் குடைகள் வச்சுருந்தாங்களோ?

கோபால் மட்டும் சட்னு இறங்கிப்போய்  இன்னொரு குடையுடன் திரும்பி வந்து  என் பக்கத்துக் கதவைத் திறந்தார். வாடகைக்கு எடுத்தாராம். பத்தாயிரம் ரூபாய். தலையையும் தோளையும் மூட முடிஞ்சது.  என்ன ஒன்னு.... நியூஸி போல  குளிர் நடுக்கும் மழை இல்லை:-)

கடைகளின் முன்னே மழைக்கு மறைப்பை இழுத்துவிட்டுட்டு  சின்னதா  இடைவெளியில் எட்டிப் பார்க்கும் முகங்கள்.  சதுக்கம் விட்டு எதிர்ப்புறம் போய் படிகளில் இறங்கினால்  கல்பாவிய  பெரிய சதுக்கம். வலப்பக்கம்  நுழைவுச்சீட்டு வாங்கும் இடம். ஆளுக்கு பதினைஞ்சாயிரம் ருப்பையா.  டிக்கெட்டு வாங்கிக்கிட்டு அம்பு காமிச்ச பாதையில் போறோம். முழங்கால் வரை தொப்பலா நனைஞ்சு கிடக்கேன்.  போதாததுக்கு  தலையில் தண்ணீர் சொட்டுது.  குடைக்குள் மழை!!!!

இடப்பக்கம் சின்ன அறை போல் இருக்குமிடத்தில் ஜன்னலில் நம்ம டிக்கெட்டை நீட்டினால்  சரி பார்த்துட்டுத் திருப்பித் தரும்போது  வெளியில் ரெண்டு மரப்பெட்டிகளில் போட்டு வச்சுருக்கும் துண்டுகளில் ஒன்னை எடுத்து இடுப்பில் கட்டிக்கச் சொன்னாங்க. நல்லவேளை இது ஆண்களுக்கு மட்டும்:-) முழங்கால் மூடி இருக்கணும் என்பது பொது விதி இங்கே!


ஃபிஜியன் சுலு போல அதை இடுப்பில் சுத்திச் செருகிட்டு  படிகள் இறங்கிப் போறோம். நல்லவேளை கைப்பிடிக்கு  இரும்புக்குழாய் பிடிமானம் இருக்கு.  பைக்குள் இருக்கும் கெமெராவைக்கூட வெளியே எடுத்துக்கமுடியலை:( கீழே விழுந்து வைக்காமல் இருக்கணுமேன்னு கவனமாப் படிகள் இறங்கிப்போறோம்.  மலையின் மீது அடிச்சுப் பேயும் மழை வெள்ளம்   சரேலுன்னு இறங்கிக் குட்டிக்குட்டி நீர்வீழ்ச்சியா இரைச்சலோடு  படிகளின் ஓரத்தில் பாயுது.  அநேகமா நூறு மீட்டர்  ஆழம் கீழே  போகணும்.

படிகள் முடிஞ்ச இடத்துக்கு எதிரிலொரு பெரிய மண்டபம். சட்னு அதுலே புகுந்துக்கிட்டோம்.  நாலைஞ்சு உள்ளூர் மக்கள் நிதானமா உக்கார்ந்து பேசிக்கிட்டு இருக்காங்க. இளநீர், பழம் என்று சின்னதாக் கடை போட்டுருக்கவுங்க.  மண்டபத்தின் உள்ளே   நேரெதிரா இன்னொரு பக்கம் ஒரு மேடையும் அதில்மூணு அலங்காரக்  கதவுகளுமா இருக்கு. மேடையில் சிலர்  படுத்து ஓய்வெடுக்கறாங்க.  மேடை மேல் ஏறிப்பார்த்தார் கோபால். கதவுக்குப்பின்னே.....  ஒன்னுமே இல்லையாம்! ஓக்கே...  அப்ப இது பத்மாஸனா!   புனித நீராடும் பக்தர்கள் உடை மாற்றிக்கவாம்.  அங்கிருந்த ஒருவர் சொன்னார்.  இருக்காதுன்னு எனக்கொரு தோணல்.  மேடை போட்டா உடை மாற்றிக்குவாங்க?

ஒரு காலத்துலே முனிவர்கள் தவம் செஞ்சுக்க தங்கள்  வெறுங்கையாலேயே   பாறைகளைச் சுரண்டி  இந்தக் குகையை உண்டாக்குனதா ஒரு கர்ண பரம்பரைக் கதை இருக்கு. வெறுங்கையால் என்றதை நீக்கிட்டு  முனிவர்கள் கண்டுபிடிச்ச இயற்கை குகைன்னுகூட நாம் வச்சுக்கலாம்.   நாம் குகை என்று சொல்வதை வட இந்தியாவில்  குஃபா என்று சொல்வதைப்போல  பாலி மொழியில் கோவா( GOA)   என்கிறார்கள்.   யானைக்குகை  இங்கே  Goa Gajah .

தூரக்கே  இருந்து பார்த்தால் பெரிய யானை நிக்குது அதன் வயித்து பாகத்துலே  ரெண்டு ஜோடி கால்களுக்கு நடுவில்  நுழைவு வாசல்.


இது இங்கே  காடுகள் மண்டி, மண்மூடிக் கிடந்ததை 1923லே கண்டு பிடிச்சு செடிகொடிகளை அப்புறப்படுத்தி இருக்காங்க.  குகையின் முகப்பிலே  ராக்ஷச முகம் ஒன்னும்  சிலபல மிருகங்களும் செடிகொடிகளுமா இருக்கும்  சிற்பங்களுமாச் செதுக்கி இருப்பது கூட,   கண்டுபிடிக்கப்பட்ட பின்னே  உருவாக்கப்பட்டிருக்கலாம் என்றுதான் சொல்றாங்க.

பாலி நாட்டுப் புராணங்களில்  அகஸ்திய முனிவர் இங்கே இருந்து சிவனை வழி பட்டுத் தவம் செஞ்சாருன்னும் காலன்   அணுகாமல்  இருக்க காலதேவதையின் முகத்தை குகை வாசலில்  வச்சாருன்னும் சொல்றாங்க. எமன் முகம்  எப்படி இருக்குமுன்னு நமக்கும் இப்போ தெரிஞ்சு போச்சு.

பக்கத்துலே ஓடும் நதிக்கு யானை ஆறு என்ற பெயர் இருப்பதால் இதை யானைக் குகைன்னு  சொல்ல ஆரம்பிச்சு இருக்கலாம். நாம் இப்போ நிற்கும்  மண்டபத்துக்கு  இடப்புறம்  குகைக்குப்போகும் பாதையும்,   ஒரு தீர்த்தக் கட்டமும் இருக்கு.  தீர்த்தக்கட்டம் ரெண்டு பிரிவா நடுவில்  ஒரு மேடையோடு  இருக்கு. ஒவ்வொரு கட்டத்திலும் மும்மூணு   சிலை மங்கையர்  கையில் குடம்  ஏந்தி  நிற்க குடத்திலிருந்து  பெருகி  ஊற்றும் நீர்த்தாரைகள் !


இந்த  தீர்த்த கட்டத்தில்   சப்தநதிகள்  சேர்ந்து   வந்து இதை சப்த தீர்த்தமா ஆக்கி இருக்காம். புனித  நதிகளான கங்கை, சிந்து,  யமுனை, சரஸ்வதி, கோதாவரி,  நர்மதை, சரயூ  ஆகியவை  ஒன்னா சேர்ந்து  இங்கே இருக்காங்கன்னு ஐதீகம்.  ஆறு சிலைகள் தானே இருக்கு. ஏழாவது எங்கேன்னால்.... நடு மேடையில் இருந்துருக்கணும் .  சிலை  கிடைச்சுருக்குன்னும்  சேதி.




இந்த  தீர்த்த கட்டத்தில் முழுகி எழுந்து  இங்கிருந்து  நீர் கொண்டுபோய்  பூஜைக்குப் பயன்படுத்தினாங்க,  ரிஷிமுனிவர்கள் என்றும்  ஒரு நம்பிக்கை.

1923 இல் குகையைக் கண்டு பிடிச்ச  இருபத்தியேழு ஆண்டுகளுக்குப் பின் 1950 இல் தான் தீர்த்தக்கட்டம் இருப்பதையே  அகழ்வாராய்ச்சி செஞ்சவுங்க  கண்டு பிடிச்சாங்களாம். அப்போ தோண்டி எடுத்த கற்களின்   குவியல்களை , குளத்துக்கு எதிர்ப்புறமா  அழகா ஒரு இடத்துலே அடுக்கி வச்சுருக்காங்க.

கிட்டே போய் பார்க்கலாமுன்னு  பேய்மழையில்  எங்கே?   குகைக்குள்  போனோம். அகலம் குறைஞ்ச ஒரு  நீண்ட  காரிடோர் போல ஒன்னு.  ஒரு வெள்ளைக்காரப் பெண்  வாசலைப் பார்த்தபடி  உக்கார்ந்துருந்தாங்க.  மழை கொஞ்சம் ஓயட்டுமுன்னு  இருக்காங்களாம்.  பாம்பு  வங்கி (ஆர்ம் பேண்ட்) ஒன்னு போட்டுருந்தாங்க. ரொம்ப அழகா இருக்கேன்னு விசாரிச்சதில் தோழி கொடுத்த பரிசாம்.  இந்தியாவில் வாங்குனது! ஆஹா....


காரிடார் முடிவில் இன்னொரு வாசல்.  ஒரு ஸீரோ வாட் பல்பு  எரிஞ்சாலும் உள்ளே  கும்மிருட்டு.  செல்ஃபோன் வெளிச்சம் காட்ட  கண்ணை இடமும் வலமும் ஓட்டினோம்.  ஒரு நாப்பதடி நீள இடம். அகலம்  ஒரு பதினைஞ்சடிஇருக்கும். இடப்பக்கம்  குழி பறிச்ச ஒரு மாடத்தில்  புள்ளையார்.  நான்கு கைகள், கையில் மோதகம்,  ஜெபமாலை , ஆயுதங்கள், ஓலைச்சுவடி இப்படி  எல்லாமே அம்சமா இருக்கு. எல்லாம் பார்ட் பார்ட்டாத்தான் பார்க்கணும்.  வர்றளவு  வரட்டுமுன்னு க்ளிக்கிவச்சேன்.





அடுத்து அடுத்து நீண்ட சுவரில் மாடங்கள்.   காலிதான். பத்மாஸனாவா இருக்கலாம்.  வலப்பக்கம் இன்னொரு மாடத்தில்  மூணு  சிவலிங்கங்கள். த்ரிலிங்கம். முகம் கை காலுன்னு  இல்லாததால் ' மொழுக்'னு ஜொலிக்கும் சிவன். மூவருக்கும்  வெள்ளை, கருப்பு, சிகப்புன்னு  உடைகள்.

(பீடத்துலே ஒவ்வொன்னுக்கும்  எட்டு குட்டி லிங்கங்கள் இருக்காம். அடடா..... இதெல்லாம் அப்புறமால்லே தெரியவந்தது!  இதுக்குத்தான் கொஞ்சம் ஹோம் ஒர்க் பண்ணிக்கிட்டுப் பயணம் போகணும்)

பூஜை செஞ்ச அடையாளமா  குருத்தோலைத் தட்டுகளும் பிரசாதங்களுமா கண்ணில் பட்டன. புள்ளையாரைப் பார்த்தால் பாவமா இருந்தார்.  அவருக்கு ஒரு துதி  சொல்லலாமேன்னு ' கஜானனம்' சொல்லிட்டு  ரெண்டு பாட்டு பாடினேன்.

கஜானனம் பூத கணாதி ஸேவிதம்
கபித்த ஜம்பூ பலஸார பக்ஷிதம்
உமாஸுதம் சோக விநாச காரணம்
நமாமி விக்னேஸ்வர பாத பங்கஜம்.


விநாயகனே வினை தீர்த்தவனே.....

கணபதியே வருவாய்.....

அங்கே நம்மைத் தவிர வேற யாரும் இல்லை என்ற தைரியம்தான்:-)

கோபாலையும் ஒரு பாட்டுப் பாடச் சொன்னதுக்கு  அவருக்குத் தெரிஞ்ச ஒரே பாடலைப் பாடினார்.....   சினிமாப்பாட்டுதான்.    ' எல்லோரும் கொண்டாடுவோம்.... எல்லோரும் கொண்டாடுவோம்...'

தியானம் செய்ய நிஜமாவே தோதான இடம்தான் இது!  யாரும் வரமாட்டாங்க.  எல்லாம் அடங்கி இருக்கும் ,ஓசை உட்பட! இல்லையோ?

இதே குகைக்கு  புத்தமதத்தினரும்  சொந்தம் கொண்டாடுறாங்க.  கோவிலைச்சுற்றி இருக்கும் பெரிய தோட்டமும், இன்னும் கீழே கொஞ்சம் இறங்கிப்போனால் புத்தர் சிலையும் சின்னதா ஒரு நீர்வீழ்ச்சியும் இருக்காம். கடும் மழை காரணமா நாம் வேறெங்கியும் போகலை:(  அடர்த்தியான தோட்டம் இங்கிருந்தே தெரிஞ்சது.

இப்போ  சமீபத்துலே (1995) ஒரு பதினெட்டு வருசத்துக்கு முந்தி யுனெஸ்கோவின்  உலக பாரம்பரிய இடங்களின் ( UNESCO World Heritage Site) வகையில் சேர்க்கப்பட்டுருக்கு. இன்னும்  அகழ்வாராய்ச்சி  செய்வாங்க போல!


எங்கியாவது விழுந்து வைக்கப்போறோமோன்னு  கவனத்துடன் காலடி வச்சுப் படியேறி மேலே வந்து ஸராங்கை அவிழ்த்து   அங்கிருந்த ஒரு மரப்பொட்டியிலே போட்டுட்டுக் , குடையைத் திருப்பிக் கொடுத்துட்டுக் கிளம்பினோம். இப்படி ஒரு மழையை என்  வயசுக்குப் பார்த்ததே இல்லை. வானம் பொத்துக்கிட்டு ஊத்துதே!

ஈரக்குடையும் ஈர உடைகளுமா வண்டி பூராவும் நனைச்சு வச்சோம்.  நல்ல முறுகலாக் காய்ஞ்சு இருந்த ஒரே ஜீவன் புத்ராதான். வண்டியை வீட்டு இறங்கினால்தானே...............



தொடரும்.........:-)






யானைக்கு ஒரு காலம் என்றால் பூனைக்கும் ஒரு காலம்!! (பாலி பயணத்தொடர் 18 )

$
0
0
'உங்களை இந்த வாசலில் இறக்கிவிடறேன்.  சுத்திப் பார்த்து முடிச்சதும் செல்லில்  கூப்பிடுங்க.  நான் வந்து  பிக் பண்ணிக்கறேன். பார்க்கிங் ரொம்ப தூரத்துலே இருக்கு' ன்னார் நம்ம புத்ரா. எதோ  நாற்சந்தி இது.  நல்ல கூட்டம். ட்ராஃபிக்கும் தயங்கித் தயங்கித்தான் போகுது. மழை நின்னபாடில்லை இன்னும்:(

உபுட் அரண்மனை வாசலில் இருக்கோம்.  இங்கே மட்டும்தான் உள்ளே போகக் கட்டணம் ஒன்னும் இல்லை.  சுத்துச்சுவருக்குள்ளே  பெரிய திறந்தவெளி!   முற்றமும்  பெரிய பெரிய  திண்ணை மண்டபங்களுமா இருக்கு. இடது பக்க முதல் மண்டபத்துலே  அரண்மனைக் காவலர்கள்.  மழை நனையாமல் உக்கார்ந்து பார்வையாளர்களைப் பார்த்துக்கிட்டு இருக்காங்க.

சரியான  வடிகால் இல்லாமல் முற்றத்தில் தண்ணீர் தேங்கி நிக்குது. கண் எதிரே  ஒரு அலங்காரக் கதவு.  மூடி இருக்குன்னாலும்  அதுக்குப்பக்கத்தில் ரெண்டு பக்கமும்  அடுத்த சுற்றுக்குப்போக வாசல்கள்  உண்டு.  இடது பக்க வாசல்  வழியா உள்ளே நுழைஞ்சால்  அங்கேயும்முற்றங்களும் தோட்டங்களும் !  நல்ல பராமரிப்பு.  பிரகாரச் சுவருக்கு மேலே சின்னதாக் கோவில் விமானங்கள் போலுள்ளே தெரிஞ்சாலும் அங்கெல்லாம்  போகமுடியாமல்   ப்ரைவேட் ஏரியா என்ற  போர்டு.



அரசகுடும்பத்தினர்  இன்னும் இங்கே வசிக்கிறாங்க.  எட்டாம் நூற்றாண்டில் இருந்து அரசர்களின் ஆட்சி இங்கே நடந்ததாக  பனையோலைச் சுவடிகளில்  எழுதுன  ஆவணம் இருக்காம். அந்தக் காலங்களில் ஏகப்பட்ட சிற்றரசர்கள் சின்னச்சின்ன கிராமங்களில்  அரசு நடத்தி இருந்து இருக்காங்க.

டச்சு நாட்டுக்காரர்கள்  பிடியிலே இந்தோனேஷியா  ஒரு நானூறு ஆண்டுகளுக்கு மேல் இருந்துருக்கு. அந்த காலக் கட்டங்களில்  உள்ளூர் சிற்றரசர்களுக்கிடையில்  ஏகப்பட்ட சண்டைகள் நடந்துருக்கு. சண்டை மூட்டி விட்டவர்கள்  டச்சுக்காரர்கள்தானாம்.  பிரித்தாளும் கொள்கை  நல்லாவே ஒர்க் அவுட் ஆகி இருக்குமே!

இவைகளில் இருந்து  தப்பிப் பிழைச்ச   அரசர்கள்  அதிகமில்லை. அப்படி ஒரு அரச வம்சம் ஆண்டதுதான் இந்த உபுட்.  அவர்களுடைய அரண்மனைதான் இது.  1917 இல்  நிலநடுக்கத்தில்   அழிஞ்சு போனவைகளுக்குப் பதிலா கட்டுனவைகளே  இப்போ நாம் பார்க்கும் கட்டிடங்கள் எல்லாம்!

அரண்மனைக்குள்ளேயும்  போய்ப் பார்க்கலாமுன்னு  எனக்குத் தெரியலை.  அப்புறம் நம்ம  கோவி கண்ணனின் 'காலம்'  சேதி சொல்லுது அம்பதாயிரம் ரூபாய் கொடுத்தால் உள்ளேயும் பார்க்கலாமுன்னு. அடடா....தெரியாமப் போச்சே:(



ஆனால் அரண்மனை வாசியா தங்கலாம் நீங்க.   பெட் அண்ட் ப்ரேக்ஃபாஸ்ட்  ஸ்டைலில் ஹொட்டேல் நடத்துது  அரசர் குடும்பம்.    அரச குடும்பத்தின் கிளைகள் பலவும் இப்ப ஹொட்டேல் பிஸினெஸில் இருக்காங்க. கிட்டத்தட்ட 11 இருக்குன்னு பட்டியல் சொல்லுது.( இதையும் இந்தியாவில் இருந்து கத்துக்கிட்டாங்க போல)

அரண்மனைத் தோட்டத்தில் இருக்கும் மா இப்போதான் பிஞ்சு விட்டுருக்கு. தரையெல்லாம் வடுக்கள். பேசாம அரசர் , அரண்மனை  மாவடு ஸ்பெஷல் னுகூட  ஒரு வியாபாரம் ஆரம்பிக்கலாம்.







இந்த அரண்மனை முற்றத்தில்   மாலை நேரத்தில்  ஒரு நாளைக்கு ஒருவிதமுன்னு தினமும் கலை நிகழ்ச்சிகளை நடத்தறாங்க. நாம் போன அன்று  Legong Dance. மஹாபாரதக் கதை.


எனக்கு இந்த  நிழல் பொம்மலாட்டம் பார்க்கணுமுன்னு ரொம்ப ஆசை.   (Wayang Kulit . shadow puppet show)முகுந்தா..... முகுந்தா.......  க்ருஷ்ணா  முகுந்தா முகுந்தா  வரம் தா  வர ம் தா,  ப்ருந்தா வனம்தா.....    வனம் தா ( என்னமா எழுத்திட்டீர்,  ஐயா வாலி!!!)  எங்கே நடக்குதுன்னு  தெரியலை. ஹொட்டேலுக்குப்போய்  விவரம் கிடைக்குதான்னு பார்க்கணும். அப்பதான் நினைச்சேன்...பேசாம மடிக்கணினியைக் கொண்டு போயிருக்கலாம்...ப்ச்....

அரண்மனை மண்டபத்தில்  ஈரத்தோடு ஈரமா இருந்துட்டுப்போகட்டுமேன்னு  பெரிய மனசு பண்ணும் நாய்!

மழை லேசா விட்டது.  சரி,  பார்த்தது போதுமுன்னு  புத்ராவை செல்லில் கூப்பிட்ட ரெண்டாவது நிமிசம் வந்து பிக் பண்ணிட்டார்.  நாற்சந்தி கடைவீதிபோல ஒரே கலகல.

 எங்கேயும் போகாமல் நேரா ஹொட்டேலுக்கு வந்துட்டோம்.  மறுநாள் எட்டு மணிக்கு புத்ராவை வரச்சொல்லிட்டு  ஹொட்டேல் கார்பார்க்கைக் கடந்தால்   Apa kabar? ( How are you?)  என்று கரகரத்த குரல்.  ஆஹா.... நேத்து வாய் திறக்காமல் இருந்த  மைனா நம்பர் 2 !   'ஐ  அம் ஃபைன்.  ஹௌ ஆர் யூ' ன்னுட்டு  அறைக்குப் போனோம்.  அங்கே உம்மரத்தில் இருந்த கசேரகள் ஒன்னில் ஒரு பூச்ச!  ம்யாவ்!!!

பூனைப்பசங்களுக்குக் கூட ஒவ்வொரு தேசத்தில் ஒரு முகம்!  இது பாலினீஸ் இல்லையோ!.... கொஞ்சம் நீண்ட முகம். யார் வந்தா என்ன யார் போனா என்னன்னு நிம்மதியா உறக்கம்.  ஈர உடுப்பை அலசிப் போட்டுட்டு  சூடா ஒரு ஷவர் எடுத்தபின்தான்  கொஞ்சம் ஆசுவாசமா இருந்துச்சு.  இந்த செருப்புதான் மழையில்  நனைஞ்சே... ஊறிப்போன  ப்ரெட்  மாதிரி.  அது காய்ஞ்சால் தான் நடக்க வசதிப்படும். லக்கேஜ் ரொம்ப வேணாமுன்னு ஒரு ஜோடி செருப்போட தான்  வந்துருந்தேன்:(

அழைப்பு மணி என்ற ஆடம்பரம் கூட இல்லாத அறையில் நல்லவேளையா ஹேர் ட்ரையர் வச்சுருந்தாங்க.   கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.........கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்............

ரெண்டு காஃபி  கொண்டு வரச்சொல்லிட்டு  கோபாலும் குளிச்சுட்டு வந்தார்.  காஃபியும் வந்துச்சு. அதே ரெண்டு பெரிய ஜக்.  இப்படி மொடாக்குடியரா இருக்கமுடியுமோ? காஃபி குடிச்சுக்கிட்டே  பேசறோம். தமிழ் பேச்சு தாலாட்டா இருக்கு போல... ஒரு அனக்கமில்லாமத் தூங்கறான்.

ரொம்ப அலைஞ்சுட்டோம். எங்கேயும் போகாமல் ஓய்வெடுக்கலாமுன்னு  நினைச்சேன்.  நாளைக்கு இங்கிருந்து கிளம்பணும்.  நெல்வயலையும்  கேரளவீட்டையும்  விட்டுப்பிரியணுமேன்னு மனசு சோகம் பாடுது.  அஞ்சரைக்குத் தூக்கம் கலைஞ்சு  எழுந்து கட்டைச்சுவர் மேல் தாவி உக்கார்ந்தான்.


ராத்திரி சாப்பாட்டு?  பிரச்சனை இல்லை/ அதே இந்தியன் கடைக்கு  ஃபோன் போட்டால் ஆச்சு.  மெனு கார்டை எடுத்து வச்சுக்கிட்டு அரைமணி நேரம் அலசி ஆராய்ஞ்சு  ஏழரைக்கு கொண்டு வரச்சொல்லணுமுன்னு  ஃபோன் செஞ்சால்............     சண்டே ஹாலிடே!  போச்சுடா.....

தொடரும்............:-)




மும்முகமுள்ள நான்முகன் (பாலி பயணத்தொடர் 19 )

$
0
0
தேடிச்சோறு நிதம் தின்று பல... சின்னஞ் சிறுகதைகள் பேசி.....   இந்த நிமிசத்துக்கு பாரதியை மறக்கணும்.  ஒருநாள் உணவை  ஒழி என்றால்.... அவ்வையார் எதிர்ப்பாட்டு பாடிட்டார்....

கடைத்தெருவுக்குள் கால் வைச்சதும்தான் காலையில் பார்த்து வச்ச  எதிர்க் கடை , நினைவுக்கு வந்துச்சு. இப்போ அங்கே வியாபாரம் பார்த்துக்க வேறொரு பெண்.  பிரம்மன் இருக்காரான்னு பார்த்தால் நமக்காகக் காத்திருக்கார்.  விலை  காலையில் சொன்னதேதான்.  நான் என்னுடைய டீலைச் சொல்லி  காலையில் பார்த்த விற்பனைப்பிரிவுப் பெண், முதலாளியிடம் கேட்டு வைக்கிறேன்னு சொல்லி இருந்தாங்க.  கேட்டாங்களான்னு தெரியலைன்னு(ம்) சொன்னேன்.

ஒரு நிமிசம் யோசிச்சதும்,  'காலையில் நீங்க வந்து போன விவரம் என்னிடம் சொல்லிட்டுத்தான் போனாங்க.  நீங்க சொன்ன விலைக்குத் தர்றேன்.ஆனால்  நீங்க வேற யார்கிட்டேயும்  சொல்லிடாதீங்க'ன்னாங்க. அந்த வேற யார் யாருன்னு தெரிஞ்சால் சொல்லாம இருக்கலாமேன்னு நினைச்சேன்.  ரெண்டரை லட்சம் கை மாறுச்சு.


 உண்மையில் இது பிரம்மனான்னே  எனக்கு ஒரு சந்தேகம். அஞ்சு தலையுடன்  இருந்த பிரம்மனின் தலையை பொய் சொன்ன காரணத்தால் கிள்ளி எறிஞ்சார் சிவன் என்று ஒரு புராணக்கதை உண்டு. எல்லாம் அந்த அடி முடி விவகாரம்தான்.  முடி கண்டேன் என்று  தாழம்பூவை (பொய் )சாட்சி  வச்சு விட்ட ரீலுக்கான தண்டனை. இந்த தலை கொய்தல் சம்பவத்தின் பின்னே பல கதைகள் இருக்கு.  சிவன், பைரவரை உருவாக்கி அவர்மூலமாகத் தலையைக் கொய்தார் என்றும், சிவனே கோபம் கொண்டு சூலாயுதத்தால்  கிள்ளி எறிந்தார் என்றும்,  பிரம்மனொரு முறை,  தான்  சிருஷ்டித்த அழகியையே  கண்டு காமவசப்பட்டார்  என்றதால் அதற்கான தண்டனையாக அவர்  தலையைக் கொய்தார் ஈசன் என்றும்  வகை வகையாக நிறைய கதைகள்  உண்டு.  நான்முகன் அதுக்கப்புறம் என்ன தப்பு பண்ணினாரோ.... இப்ப  இன்னொரு தலை அவுட். ஒவ்வொரு தலையுடன் அதற்கான ஜோடிக் கைகளும்   காலி ஆனதால் இப்போ மூணு தலைகளும் ஆறு கைகளுமா இருக்கார்.

இப்போ நியூஸி  வர அவருக்கு லபிச்சுருக்கு.  இங்கே  வந்த பிறகாவது   அசட்டுத்தனமா எதாவது செய்யாம இருக்கணும்.  சட்டம் இங்கே அனைவருக்கும் ஒன்று என்பதால்  குற்றம் செஞ்சுட்டுத் தப்பிக்க முடியாது.

இந்தக் கடையில் இன்னும் ஏராளமான கைவினைப் பொருட்கள் இருக்கு. அனைத்துக்கும் ஆசைப்பட நமக்கு ஐவேஜ் இல்லை:(  பொம்மலாட்டம் பொம்மைகள் கூட இருக்கு!  க்ளிக் க்ளிக்...அம்புட்டுதான்.

பிரம்மனைத் தூக்கிக்கிட்டு  வலப்புறம்  ஒரு பத்து கடை தூரம் போனோம். ஏற்றமான சாலை என்பதால் கால்களுக்குச் சிரமமா இருக்கு.  போகட்டும் போன்னு  திரும்பி இறக்கத்தில் நடந்து போய் வழியில் ஒரு  இருட்டுக்கடையைக் கண்டோம்.  இருட்டு அதிகரிச்சால் அது நல்ல ரெஸ்ட்டாரண்டு என்று பொதுவா ஒரு எண்ணம் நிலவுது.  அதுக்குத் தகுந்த மாதிரி  விலையும் தாளிச்சுருவாங்க.  Kids friendly ன்னு போர்டு சொல்லுது.  அப்ப ஓக்கே எனக்கு:-)

சுப காரியங்களுக்கு சக்கரைக்கூடு  வைப்பாங்க  பாருங்க அது போல  கூம்பு வடிவில் சோறு கிடைச்சது.  புளிப்பே இல்லாத நல்ல தயிரில் ஒரு லஸ்ஸி. தாராளம்!

சாப்பாடு ஆன கையோடு  கொஞ்சம் நடையில்  கரன்ஸி எக்ஸ்சேஞ்ச் கண்ணில் பட்டதும் இன்னும் கொஞ்சம் காசு மாத்திக்கலாமுன்னு  போனார் கோபால். 9400 ரேட்.  எப்படியும் ஊர் விட்டுக் கிளம்பும்வரை தேவைதானே?  அதே கடையின் மறுபுறம்  ஒரு ம்யூஸிக் ஷாப்.  இன்னிக்குக் காலையில்  நம்ம ஸென்டானா ரெஸ்ட்டாரண்டில் கேட்ட குழலிசை மனசுக்குள் ஓடிக்கிட்டே இருக்கு. இதே மெட்டுகளில் சிலபல தமிழ் சினிமாப் பாட்டுகளைக் கேட்டுருக்கேன். என்ன பாட்டுன்னுதான் சட்னு நினைவுக்கு வரலை.

ம்யூஸிக் கடையில்  குழலிசை வேணுமுன்னதும்   அவர் காமிச்ச  சிடியைப்  போட்டுக் கேட்டால்... இதுவும் தமிழ்ப்பாட்டையே நினைவு படுத்துது. நல்லமெலடி. (மனசுக்குள்ளே ஓட்டிக்கிட்டே இருந்ததில்  பிடிபட்டுப்போச்சு. தொன்னூறுகளில் பிரபல இசை அமைப்பாளரின் பாட்டுகள்.  ஓக்கே ...இன்ஸ்பிரேஷன் யார் மூலம் யாருக்குன்னு தெரியாது என்பதால் தேவையில்லாத  விவாதங்கள் தவிர்க்கப்படணுமுன்னு  முடிவுக்கு வந்துவிட்டேன்)எது எப்படியோ  நமக்குத் தெரிஞ்ச பாட்டாக இருக்கே என்பதில் மகிழ்ச்சியே. ஆசைக்கு ஒன்னு இருக்கட்டுமுன்னு  வாங்கியாச்சு.  விலைதான் அறுபதினாயிரம் ரூபாய்.

அடுத்துப் பார்த்தது ஒரு துணிமணிக் கடை. மகளுக்கு  ஒன்னும் இதுவரை  வாங்கலையேன்னு  பார்த்து  ஒரு  ட்ரெஸ் வாங்கினோம். அப்படியே எனக்கு  ஒரு ஸராங். அரை விலை டெக்னிக்கில் பேரம்  படிஞ்சது. கடையில்வேலை செய்யும்   அழகான குட்டிப்பொண்  அப்பப்பக் கடை முதலாளியிடம்  கேட்டுட்டு  வந்து  வியாபாரம் செய்யறாங்க.  பெயர்  கேட்டேன். புட்டு!  ஆஹா....   தலைச்சன் குழந்தை!  கடைக்காரம்மா மடிக்கணினியில்  பயங்கர பிஸி.  பணம் கொடுக்கும்போது தற்செயலாப் பார்வையில் பட்டது  Zuma Game . அட!  உன் கேம்தான் இவுங்க விளையாடுறாங்கன்னார் கோபால்.


சகவிளையாட்டுக்காரி என்றதும் எங்களுக்குள்  ஒரு நட்பு ஏற்பட்டுப்போச்சு. மூளையை  அலர்ட்ட்டா வச்சுக்க இப்படிப்பட்ட கேம்ஸ் ஒன்னு ரெண்டு அப்பப்ப விளையாடணும் என்ற  என் அறிவுரையை  முற்றிலும்  ஆமோதிச்சாங்க:-)

ஆச்சு ... இன்னிக்கான கடமைகள் என்ற நிம்மதியோடு  அறைக்கு வந்து சேர்ந்தோம். மறுநாள்  பொழுது விடிஞ்சதும் எல்லாத்தையும் ஏறக் கட்டிட்டு ப்ரேக்ஃபாஸ்டுக்கு ஸென்டானா  ஸன் ரைஸ் ரெஸ்ட்டாரண்டு போனால் நேற்றைப்போலவே அதே புல்லாங்குழல் இசை !  அடடா..... கேட்க எவ்ளோ இனிமை!


இன்னிக்கு  பழவகைகளில்  ஒரு வித்தியாசமான ஒன்னு இருந்துச்சு. ஸ்நேக் ஸ்கின் ஃப்ரூட்! பெயர்ப் பொருத்தம்  சூப்பர்.  நான் மட்டும் ஒன்னு எடுத்துக்கிட்டு வந்தேன். Salak  என்றுபெயராம்.  உள்ளே மூன்று சுளைகள்.  கொட்டை ரொம்பப்பெருசு. சதைப்பற்று கொஞ்சூண்டுதான்.   நல்ல முதிர்ந்த பலா, ஜஸ்ட்  பழுக்குமுன்  உள்ள சுவை.  (பலா சிப்ஸ்க்கு  இப்படி உள்ள பலாக் காயைத்தான்  வெட்டுவோம். எல்லாம் கேரள வாழ்க்கை அனுபவம்தான்)





அப்புறம்  வாழை இலையில் மடிச்சு வேகவச்ச  ரெண்டு சமாச்சாரங்கள்.  க்ளூட்டோனியஸ் அரிசிமாவு தண்ணீர் சேர்த்துப் பிசைஞ்சு,  அதை  சின்ன வட்டமாகப் பரத்தி நடுவில்  நாட்டுச்சக்கரையும்  உலர்ந்த திராக்ஷையும் வைத்து  மூடி ,  மாவை இலைக்குள் பொதிஞ்சு  ஆவியில் வேக வச்சுருக்காங்க.  இன்னொன்னு தேங்காய் வெல்லம் அரிசி மாவு  குங்குமப்பூ சேர்த்து  செஞ்ச இலைக் கொழுக்கட்டை.

பரிமாறும் பெண்களிடம் என்ன ஏதுன்னு விசாரிச்சேன்.  ஒருத்தர் பெயர் புட்டு இன்னொருத்தர் காடெக். எல்லாமே கொள்ளை அழகு!  ஹெலிகோனியா (heleconia)க்கள்  அட்டகாசம். இந்த வகையில் மட்டும் 200 விதச் செடிகளிருக்காமே! என்ன ஒரு இனிய சூழல்.  விட்டுப் பிரிய மனமே இல்லை:(


போயிட்டு வரேன்டா  குரங்கன்மாரே!

அறைக்கு வந்ததும் கோபால் இன்னொருமுறை  டிக்கெட் சமாச்சாரங்களைச் செக் பண்ணியவர், அடடா..... ஃப்ளைட் 12 மணிக்கு நினைச்சு புத்ராவை  எட்டு மணிக்கு வரச்சொல்லிட்டேன்.  இப்பப் பார்த்தால்  ஃப்ளைட் 2 மணிக்குதான் என்றவர் புத்ராவுக்கு  ஃபோன் செஞ்சு பத்து மணிக்கு வரச் சொல்லிட்டார்.  முன்னமே தெரிஞ்சுருந்தால்  இங்கே பெரிய க்ராஃப்ட் மார்கெட் இருக்காமே போய் வந்திருக்கலாம்:(  எவ்வளவு தூரமோ என்னவோ.....  போகட்டுமுன்னு சொல்லிட்டு இவர் ஒரு தூக்கம் போட ஆரம்பிச்சார்.

நான் ஒருத்தி..... வாயிலே இருக்கு வழி என்பதைச் சுத்தமா மறந்து போயிருந்தேன். ஸென்டானாவைச் சுற்றிப்பார்த்துக் கிட்டும் மைனாக்களோடு பேசிக்கிட்டும்.  செடி கொடி மரங்களை க்ளிக்கிக்கிட்டும்  அவைகளிடம்  போய் வாரேன்னு  சொல்லிக்கிட்டும் திரிஞ்சேன்.

அறைக்குத் திரும்பினால் இவர் தூக்கம் முடிச்சு சாருகஸேரயில்  உக்கார்ந்துருக்கார்.  அதைப் பிரிய மனமில்லை போல!  அங்கே பாருன்னு  கண்ணைக் காமிச்சார்.  பக்கத்து அறையைச் சுத்தம் செய்யப் பணிப்பெண்கள் கைவண்டியைத் தள்ளிக்கிட்டு  வர்றாங்க. யாருன்னு பார்த்தால்..... அட... நேத்து பார்த்தப் பள்ளிக்கூடச் சிறுமிகள்..... ஓஹோ  அதுதான் ஒன்பது மணியாகட்டுமுன்னு காத்திருந்தாங்களோ!

குடும்பத்துலே பெண் குழந்தைகள் தாய் தகப்பனுக்குச் சுமையா இருக்காமல் எதாவது ஒரு வேலை தேடிக்கிட்டு சம்பாரிச்சுப் போடுறாங்களாம்.  கேக்கவே எனக்கு ரொம்பப் பெருமையா இருந்துச்சு. உண்மைதான். இதுவரை  எல்லா இடங்களிலும்  பார்த்த  இளம்பெண்கள்  மனசில் வந்து போனாங்க.

தொடரும்.............:-)





நோ லட்சம் ருப்பையா, இனி ரிங்கெட் ஒன்லி (பாலி பயணத்தொடர் 20 )

$
0
0
பத்துமணிக்கு அறையைக் காலி செஞ்சுக்கிட்டு புத்ராவின் வண்டியில் ஏறினோம். குரங்குக்காட்டு சாலை  ஒருவழிப்பாதை என்பதால் வலது பக்கம் வண்டி திரும்புது.  பத்து விநாடிகளில்  கண்ணில்பட்டது நேத்து மாலை நாம் போன உபுட் அரண்மனை. அடராமா.... இவ்வளோ பக்கத்தில் இருக்குதா என்ன? ஏற்றமா இருக்குன்னு சோம்பல் படாமல் இருந்திருந்தால்  கைவினைப்பொருட்கள் சந்தையை கோட்டை விட்டுருக்க மாட்டோமே:(

டென்பஸார் நோக்கிய பயணம். விமானநிலையம் அங்கேதான் இருக்கு.  உபுட் கிராமங்களில்  எங்கே பார்த்தாலும் குடிசைத்தொழில் போல கலை சமாச்சாரங்கள் கொட்டிக்கிடக்கு. திண்ணைகள் முழுசும்  சித்திரங்கள் விற்பனைக்கு வச்சுருக்காங்க. எல்லாம் ரொம்பவே பெரிய சைஸ்.நம்மாலே கொண்டு போகமுடியாதுன்னு   மனசை ஆறுதல் படுத்திக்கணும்.

சிற்பங்களுக்கும் சிலைகளுக்கும்   செடிகளுக்கான நர்ஸரிகளுக்கும்  குறைவே இல்லை.



முக்கிய சாலைகளில்  அங்கங்கே மனதைக் கவர்ந்து இழுக்கும் வகையில்  கலை அழகோடு கூடிய  பெரிய சிலைகளை  தீவு முழுசும்  வச்சுருக்காங்க.  கடல் தேவதை, கீதோபதேசம்.  கருடாழ்வார் கையில்  எழுந்தருளும் விஷ்ணு இப்படி. கோவில்களுக்கு உள்ளில்தான்  சாமிச் சிலைகள் இல்லை!


ஒன்னேகால் மணி நேரத்தில்  விமான நிலையம் வந்தாச்சு.  பெட்டிகளை தூக்கி வந்து  ட்ராலியில் வச்சார் புத்ரா. அட!  (ஓ....மழை இல்லையே அதான்....)

வருசத்துக்கு  முப்பது லட்சம் வெளிநாட்டுப் பயணிகள் வந்து போகும் விமானநிலையம் பாலி டென்பஸார்.   Departure Tax  US $ 20 வாங்கிடறாங்க. வரும்போது விஸா ஆன் அரைவல் என்று ஒரு 25$  அப்படிஒரு நபருக்கு 45 வீதம்  வருமானம். அப்ப மூணு மில்லியனுக்கு? சுற்றுலாத்துறையை சிறப்பாக நடத்துவதால்  கூட்டம் அம்முது.


இப்போதைக்குச்  சின்ன விமான நிலையம்தான். இப்போதான் அதை விரிவுபடுத்தும் வேலை நடந்துக்கிட்டு இருக்கு.
இங்கே உள்ளூர் பண்டிகை, விழாக்கள் சமயத்தில்  பாரம்பரிய நடனம், அலங்காரங்கள் எல்லாம் அட்டகாசமா இருக்கும் என்பதால் அந்த சமயங்களில் கூட்டம் ஏராளம்.  இந்தோனேஷிய மக்கள்  அதிகமா வந்து போவாங்களாம். இந்தோனேஷியாவில்  சின்னதும் பெருசுமாத் தீவுக் கூட்டங்கள் பதினேழாயிரம் இருக்காமே!  (அம்மாடியோவ்!)

Galungan என்ற  பண்டிகை நம்மூர் தீபாவளி மாதிரி பெரிய அளவில் கொண்டாடுறாங்க. பத்து நாள் விழாவாம். இதன் கடைசி நாள்  Kuningan விழா நடக்குமாம். இந்த பத்து நாட்களும் விடுமுறை காலம்.  இவுங்க நாள்காட்டி ,  சந்திரன்  சுற்றும் கணக்கையொட்டி இருப்பதால்  பத்து மாசம்தானாம் ஒரு வருசத்துக்கு. அதைக் கணக்கு வச்சு பண்டிகைகள் திருவிழாக்கள் எல்லாம் நடப்பதால்   வருசம் தோறும் வெவ்வேறு மாசங்களில் வருது.

சரஸ்வதி ன்னு ஒரு பண்டிகை. அஞ்சு நாள் விழா. இது எப்பவும் சனிக்கிழமைதான் வருமாம். முதல் நாள் வெள்ளியன்று வீட்டில் இருக்கும் புத்தகங்களை எல்லாம் எடுத்து தூசி தட்டி துடைச்சு அடுக்குவாங்க. மறுநாள்  சரஸ்வதி டே அன்று  சமுத்திர ஸ்நானம் செஞ்சு  வீட்டுலே பூஜை செய்வாங்க. பள்ளிக்கூடங்களிலும், அலுவலகங்களிலும்  கொண்டாட்டம் பூஜை எல்லாம் உண்டு. அன்னிக்கு யாரும் புத்தகங்களைப் படிப்பதோ,நோட்டுப்புத்தகங்களில் எழுதுவதோ கூடாது.  மாலை நேரம் விளக்கு வச்சதும்  எதாவது ராமாயணம், மகாபாரதம் இப்படி புராண இதிகாசங்கள் கொஞ்சம் வாசிக்கணும். கோவில்களில் வாசிக்கும்போது போய் கேட்டும் வரலாம்.  அப்புறம் ஞாயிறு, திங்கள் செவ்வாய்,புதன்னு  மொத்தம் அஞ்சு நாள் வழிபாடு நடத்துவாங்க. அறிவுக் கடவுளுக்கு அஞ்சு நாள். இந்த வருச சரஸ்வதி நாள் வரும் ஆகஸ்டு 10, 2013. சனிக்கிழமை!


புது வருசம் என்று கொண்டாடும் முக்கிய பண்டிகை  Nyepi  டே!  இந்த  நாள்  மொத்த   இந்தோனேசியாவுக்கும் விடுமுறை.  ஒரு கடை கண்ணிக்கூட  திறக்கமாட்டாங்க.   தீவு முழுக்க அமைதியா இருக்கும் நாள். தெருவில் யாரும் நடமாடக்கூடாது. அவரவர்  இருப்பிடத்தில்  இருந்து  அன்று முழுவதும்  வழிபாடும் தியானம் செய்வதும் என்று  சாமி சம்பந்தமுள்ளவைகள் மட்டும் செய்யணும்.   தீவு முழுக்கக் கம்ப்ளீட் சைலன்ஸ். ஏர்ப்போர்ட் கூட மூடிருவாங்களாம்.  அதனால் சுற்றுலாப் போகும் எண்ணம் இருக்கும் நம்மாட்கள்  அந்த சமயத்தில் பயணம் வச்சுக்க வேணாம். 2014 க்கு சைலன்ஸ் டே  மார்ச் 31.

இப்படி ஒரு நாள் இந்தியாவுக்கு  இருந்தால் எப்படி இருக்குமுன்னு  கற்பனை செஞ்சு பார்த்தேன்......  முக்கால் வாசி சனம் அவுட்!  செல்லில் பேசக்கூடாது, டி வி சேனல்கள்  இயங்கக்கூடாதுன்னால்....     இந்தியா  காலி!

செக்கின் செஞ்சுட்டு சும்மாச் சுத்திப் பார்த்துக்கிட்டு இருந்தோம்.

அங்காச புராவில் (அட! ஏர்ப்போர்ட்டுலே தாங்க) எங்கே பார்த்தாலும் கருடவாகனத்தில் விஸ்னு!  ரெண்டு இறக்கைகளையும்   நல்லா  உயரமாத் தூக்கி விரிச்சு வச்சுருக்கார்.



நினைவுப் பொருட்களுக்கான கடைகள் பார்க்கவே அருமை.

பகல் சாப்பாட்டை அங்கேயே ஒரு ரெஸ்ட்டாரண்டில் முடிச்சுக்கிட்டோம். பாஸ்தா & ஃபிங்கர் சிப்ஸ்.  வெறும்முட்டாய்களுக்குன்னே ஒரு கடை. புளி மிட்டாய்  பார்த்தேன்.  அசல் புளியம்பழமாம்.  மகளுக்குப் பிடிக்குமேன்னு  கொஞ்சம் வாங்கிக்  கைவசம் மிஞ்சி இருந்த சில ஆயிரங்களைக் கரைத்தேன். அப்படியும்   சில ஆயிரங்கள்  மிஞ்சியன.  அடுத்த பாலிப் பயணத்துக்கு இருக்கட்டுமுன்னு எடுத்து வைக்க வேண்டியதுதான்.

சொல்ல மறந்துட்டேனே... இங்கே உபுட் நகரத்தில் உலக எழுத்தாளர்கள் & வாசகர்கள் திருவிழா ஒன்னு செப்டம்பர் மாசத்தில் நடக்குது.  இந்த 2013 வது ஆண்டு இதுக்கு பத்து வயசு.  அதுக்கான  ஸ்பெஷலா அக்டோபர் 11முதல் 15வரை அஞ்சு நாள் விழாவாக் கொண்டாடுறாங்க.  சரஸ்வதி ஃபவுண்டேஷன்  ஏற்பாடு
!

வழக்கம்போல் ஏர் ஏசியா  தாமதமா வந்து நம்மளை ஏத்திக்கிச்சு.  நாலுநாள் லட்ச லட்சமா வாரி விட்டாச்சு. இனி  ருப்பையாவை விட்டுட்டு ரிங்கெட் கணக்கு பார்க்கலாம்.

பை பை பாலி.

PIN குறிப்பு:  வரும் இடுகையில் இருந்து தொடருக்குப் பெயர் மாற்றம் உண்டு:-))))

தொடரும்........:-)




கோலாகலமான ஊர் (மலேசியப் பயணம் 1)

$
0
0
ரொம்பவே அழகான  பன்னாட்டு விமானநிலையம் என்று கேள்விப்பட்டதால் ஆவலோடு காத்திருந்தேன்.  ஏர் ஏசியா போய் இறங்குன இடத்தைப் பார்த்தால்  அழகுக்குக் கொஞ்சம்கூட சம்பந்தமே இல்லாத இடம். என்ன ஆச்சுன்னு கண்ணை ஓட்டுனா... LCCT (Low cost carrier terminal)

புது விமான நிலையம் கட்டுனதும் பழைய டெர்மினலை இப்படி மலிவு விலை சமாச்சாரமா ஆக்கிட்டாங்க.  ஏணியை வச்சு ஆட்களை இறக்கி  நடந்து போங்கன்னு விரட்டாத குறை.  கூரை போட்ட பெரிய  நடைபாதையில்  நடக்க ஆரம்பிச்சோம். ஒரு ரெண்டு கிலோமீட்டர் தூரம் இருக்குமுன்னு நினைச்சேன். நல்லவேளை தலைக்கு மேல் கூரையாவது கிடக்கு. இல்லேன்னா அடிக்கிற வெயிலுக்கு  'பாலி கனாங் சாரி'யில் வைக்கும் ஒரு பொருளாக மாறிவிடலாம்.

எந்தவிதமான படிவமும் நிரப்பத்தேவை இல்லை என்பது ஒரே ஆறுதல்.  பாஸ்போர்ட் பார்த்து ஸ்டாம்ப்  பண்ணிடறாங்க. அம்புட்டுதான்!!!!  ரயில் இருக்காமே அதுலேயே போகலாமுன்னு விசாரிச்சால்.... அதுக்கு அந்த அழகான இன்ட்டர்நேஷனல் டெர்மினலுக்குப் போகணுமாம்.  இங்கிருந்து  ரொம்ப தூரமில்லை. ஜஸ்ட் 20 கிலோ மீட்டர்.  அங்கிருந்து 63 கிமீ  பயணம் கோலாலம்பூர் நகரத்துக்குள் நுழைய.

பேசாம இங்கிருந்தே  போகலாமுன்னா  68 கிமீ.  டாக்ஸியில் போகலாம். ஆனால்..... சீப் ஏர்லைன்ஸில் வந்துட்டு இதுக்கெல்லாம் அனாவசியமா செலவழிக்கலாமான்னு யோசனை:-) வாயில் இருக்கு வழின்னு  தமிழில் விசாரிச்சால் பஸ் இருக்கு.  அதுக்கு ஆளுக்கு  ஒன்பது ரிங்கெட்தானாம்.  இப்போ டாக்ஸியில் போய் என்ன வெட்டி முறிக்கப் போறோம்?  கொஞ்ச நேரத்துலே இருட்டப்போகுது. பேசாம பஸ்ஸில் போகலாம் என்று முடிவு செஞ்சேன்.

கோபாலைப் பொறுத்தவரை  கே எல் அனுபவம் உள்ள ஒரே ஆள் நம்ம குடும்பத்தில் நான் மட்டுமே!  அப்போ... (காலம்:  ப.மு )எப்போ?  சரியாப் பத்து வருசத்துக்கு முன் ஒருமுறை  சிங்கையில் இருந்து கே எல்லுக்கு  நியூஸித் தோழியுடன் பஸ்ஸில் வந்திருந்தேன். தோழி  வீட்டில் மூன்றுநாள் தங்கி  இன்னொரு பஸ்ஸில் சிங்கை திரும்பினதோடு மலேசியப்பயணம் முடிஞ்சிருந்தது. அந்த மூன்று நாட்களும் தோழியின்  உறவினர்களையும் நண்பிகளையும்  சந்திச்சதோடு சரி.  ஏர்ப்போர்ட் பக்கம் தலை வச்சுக்கூடப் படுக்கலை. ஆனால் கோபாலுக்கு என்னமோ நான் மலேசியாவை அதிலும் கே எல்லை இண்டு இடுக்கு விடாமல் சுத்திப் பார்த்துட்டேன்னு ஓர் எண்ணம்.  பாவம்,வெள்ளந்தி!!
!
இது என்னோட ரெண்டாவது வருகை மலேசியாவுக்கு.  ஒரு முறை சிங்கையில் இருந்து  மகளுடன் ஜோஹூர் பாரு வரை போய், அடுத்த  ஒரு மணி நேரத்தில் அலறியடிச்சுக்கிட்டு சிங்கை திரும்பின  சரித்திர சம்பவத்தை  விருப்பமுள்ளவர்கள் இங்கே வாசிக்கலாம்:-)



பஸ் டிக்கெட்டை வாங்கிக்கிட்டு  பஸ் ஸ்டாண்டைத் தேடி பத்து நிமிசம் அலைஞ்சு  கண்டுபிடிச்சோம்.  விமானநிலயத்தின் உள்ளும் புறமும் ஏகப்பட்ட கூட்டம்! கொஞ்ச நேரத்தில் ரெட் பஸ் ஒன்னு வந்துச்சு. அதுதானான்னா அது தான்:-) ஏறி வசதியான இருக்கை   பார்த்து உட்கார்ந்தோம்.  நகரத்துக்கு வரும் சாலை அருமையா இருக்கு.  ரெண்டு பக்கமும் ஒருவித பனை மரங்கள்  பெரிய அளவில் நட்டுவச்சுருக்காங்க. இதிலிருந்து வரும் கொட்டையில் இருந்துதான் பாமாயில் எடுக்கறாங்க.  ஏற்றுமதிக்கான பொருள் என்பதால் எக்கச்சக்கமா ஜேஜேன்னு இருக்கு. விமானம் கீழே  இறங்க ஆரம்பிச்சதுமே இதுதான்  தெரியுது!


கே எல் செண்ட்ரல் வர ஒன்னேகால் மணி நேரமாச்சு. இங்கிருந்து  நாம் புகிட்  பின்டாங் என்ற  பேட்டைக்குப் போகணும்.  நம்ம மலேசியத்தோழி  'சென்ட்ரலில்  இருந்து  புகிட் பின்டாங் போக பதினைஞ்சு ரிங்கெட்க்கு மேலே கொடுக்காதீங்க'ன் னு  சொல்லி இருந்தாங்க. டாக்ஸிக்காரங்க  ரெண்டு மூணு பேர் சொல்லிவச்சமாதிரி  முப்பது வெள்ளின்னதால் வேறவழி இல்லாம  ஒரு டாக்ஸி பிடிச்சோம்.  டிரைவர் கதிர். அவரிடம் பேச்சுக் கொடுத்தப்ப...  முதலில் கழுத்துலே இருக்கும் சங்கிலியைக் கழட்டி வச்சுருங்கன்னார்.  திருடர்கள் அதிகமாம்.  சரின்னு தலையாட்டிட்டு,  தோழி இப்படி பதினைஞ்சுக்கு மேலே கொடுக்க வேணாமுன்னு சொன்னதைச் சொன்னால்....  'அப்படின்னா அவுங்களே வந்து உங்களைக் கூட்டிட்டு போகலாமுல்லே'ன்னார்!  நல்ல பதில். நல்ல ஐடியா. ஆனால் இதுக்காக அவுங்க நியூஸியில் இருந்து  வரணுமா, இல்லையா!

பார்க் ராயலில் செக்கின் செஞ்சப்ப  சிட்டி வியூ வேணுமுன்னால்.....  ஸ்விம்மிங் பூல் வியூதான் இப்போதைக்கு இருக்குன்னுட்டாங்க.  வேற  அறை காலியானால் நாளைக்கு மாற்றிக்கலாமாம். நமக்கு  19 வது மாடி என்பதால்   பிரச்சனை இருக்காதுன்னு  இருந்துட்டேன். (மொத்தம் 21 மாடி இருக்கு) இந்த ஏரியா ஷாப்பிங் பிரசித்தமாம். எல்லாமே 'காலெட்டும்' தூரத்தில்!  ரெண்டு நிமிச நடையில் ஒரு பெரிய ஷாப்பிங் ஆர்கேட். அதன் மாடியில்  மோனோ ரயில் ஸ்டேஷன்.

நம்ம அறையில்  இருந்து பார்த்தால்  ரயில் நிலையம் கண்ணுக்குத் தெரியுது.  ஹொட்டேல் வாசலையொட்டியே  ரயில்கள் போறதும் வாரதுமா  ஓசைப்படாம ஓடுவது  பார்க்கவே ஒரு அழகு.


கொஞ்சம்  தலையை கீழ்நோக்கிச் சாய்ச்சால்  நீச்சல்குளம்!  பார்வையை நேரா செலுத்தினால்  கே எல் டவர்.
ப்ரெஷப் செஞ்சுக்கிட்டு  சாப்பாட்டைத் தேடி வெளியே போனோம்.  நம்மூர் சாப்பாடு ஏகத்துக்கும் இருக்கும் ஊரில்  பார்க் ராயலின் வெள்ளைக்கார மெனு யாருக்கு வேணும்?

பக்கத்து ஷாப்பிங் ஆர்கேட்  ஃபுட்கோர்ட்டில்  ஏகப்பட்ட உணவுக்கடைகள். ஆனால் மருந்துக்கும் இந்திய உணவு இல்லை. கால்வலிக்கும்வரைத் தேடிப்பார்த்துட்டு  தாய் உணவை வாங்கி உள்ளே தள்ளிட்டு  அங்கே இருந்த சூப்பர் மார்கெட்டுக்குள் நுழைஞ்சோம். ஒரு பாட்டில் தண்ணீர் வாங்கிக்கிட்டுச்  சும்மா ஒரு ரவுண்டு வந்தால்  பழங்கள் பகுதியில் மாம்பழம்!  பெருசா இருக்கு.  ஒன்னு வாங்கிக்கலாமுன்னா நறுக்கித் தின்ன கத்தி இல்லை.   நறுக்கித் தரமுடியுமான்னு  கேட்டதும் நோ ஒர்ரீஸ்ன்னு அழகா நறுக்கி  பேக் பண்ணிக் கொடுத்தாங்க.

ஆஹா ஆஹா....சர்வீஸ் என்றால் இது!

இரவில் கே எல் எப்படி இருக்குன்னு  அறையிலிருந்தே பார்த்து மகிழ்ந்தோம்.  தொலைக்காட்சியில்  எதோ தமிழ் நிகழ்ச்சி  போய்க்கிட்டு இருந்தது.  நாளைக்குக் கதை நாளைன்னு  படுக்கையில் விழுந்தோம்.

குவாலா லம்பூர்   Kuala Lumpur  என்பதை செல்லமா கே எல் என்று சுருக்கிட்டாங்க.  தமிழிலும்  கோலாகலமா இருக்கட்டுமேன்னு  கோலாலம்பூர் ஆகி இருக்கு போல!

கோலாலம்பூர் என்பதன் பொருள் என்னவாம்?   It means "Muddy confluence" (of two rivers, the Klang and the Gombak) விக்கியண்ணன் சொல்றார்.

வெள்ளீயச் சுரங்கம் (Tin mining )  காரணமா  1857 ஆண்டு உருவான சின்ன ஊர் இப்போ  மலேசிய நாட்டின் மிகப்பெரிய நகரமாவும், தலைநகராவும் வளர்ந்துருக்கு.  ஜனத்தொகை  நகரில் மட்டும்  ஏறக்குறைய 1.7  மில்லியன்.  பெரிய ஊரா இருந்து  நகரம் என்ற அந்தஸ்து கிடைச்சது  1972 இல்தான்.

நாட்டில் மன்னராட்சி  இருந்தாலும்  ஜப்பானியர்கள்  பிடியில் ஒரு மூணு வருசம் எட்டுமாசம் இருந்துருக்கு! (1942 -1945)

அதுக்குப்பிறகு  நாட்டில் தேர்தல் நடத்தி  நிர்வாகப்பொறுப்பை ஏற்று நடத்த மந்திரிசபை  உருவாக்குனாங்க. ஆனாலும் மன்னர்தான் தலை!  (சுருக்கமாச் சொன்னா ப்ரிட்டிஷ் அரசு இயங்குவதைப்போல)  1957  ஆகஸ்ட் 31க்கு சுதந்திரநாடாகப்  பிரகடனம் ஆச்சு.

நாட்டின்  எல்லா  சாலைகளின் விரிவமைப்பு வேலைகளுக்கும்,  ரப்பர்  தோட்டங்கள், சுரங்க வேலைகள் இப்படி  உருவான பொருளாதாரத்துக்கும்  இங்கேவந்து உழைச்ச   இந்தியர்கள் குறிப்பாக தமிழர்களின் பங்கு  மகத்தானது.

 கொஞ்சம் கொஞ்சமா   நமக்குக் கிடைச்ச  விவரங்களைப்  போகப்போகச் சொல்லலாம் என்ற எண்ணம் இப்போதைக்கு.

தொடரும்..........:-)





டுன் சம்பந்தன் (மலேசியப் பயணம் 2)

$
0
0

காலையில்  கண் முழிச்சதும்,  காஃபி போட்டுத் தரேன்னு கோபால் ஆரம்பிச்சதுமே ஐயோன்னு சின்னதா அலறினேன்.  காஃபி , டீக்கு பால் என்ற பெயரில் ஒரு டேபிள் ஸ்பூன் அளவு குட்டியா ஒரு ப்ளாஸ்டிக் குப்பியில் பால் வச்சுடறாங்க  ஹொட்டேல்களில். விமானத்தில் கொடுக்கறாங்களே அதே அளவுக் குப்பிகள்தான்.

ஒரு சாஷே காபிப்பொடிக்கு , சின்னக்குப்பி பால்விட்டாலும்  ஒன்னுதான் விடாட்டாலும் ஒன்னுதான். ரொம்பவே யக்கியா  இருக்கும். அதனால்   அரை சாஷே காபிப்பொடி மட்டும் போட்ட ஒரே ஒரு கப் காஃபிக்கு ரெண்டு குப்பி பால் விட்டு ஆளுக்கு அரைக் கப். சுமாரான சுவை. நாக்கே கெட்டுப்போச்சு:(  சாயங்காலம்  பால் பாக்கெட் ஒன்னு சூப்பர் மார்கெட்டில் இருந்து வாங்கி வச்சுக்கணும். நேத்து  சட்னு  மறந்துபோயிருந்தேன்.

வெளியே போனால் நம்மூர் சாப்பாட்டுக் கடைகள் ஏகத்துக்கும் இருக்கும்தானே?  குளிச்சு முடிச்சு ரெடியாகிக் கீழே வரவேற்புக்கு வந்தோம். மெயின் டெஸ்க் தவிர மத்த எல்லா இடத்திலும் ஏகப்பட்ட தமிழர்கள் வேலை செய்யறாங்க. வாயிலே இருக்கு வழி ன்னு விசாரிச்சால்  .
'இந்த புகிட் பின்டாங் ஏரியாவை விட லிட்டில் இண்டியா போயிட்டால் ஏகப்பட்டவை இருக்கு. சரவணபவன் கூட இருக்கு'ன்னாங்க. ஆஹா பேஷ் பேஷ்னு  வெளியே வந்தோம்.

 கதவு திறந்து விட்டு நமக்கு  வாடகைக்கார் வரவழைச்சுத்தரும் பணியாளர், 'எங்கெ ஸார் போகணுமு'ன்னு  தமிழில் கேட்டார்.  சொன்னதும், பேசாம மோனோ ரெயில்  எடுத்துருங்க , டுன் சம்பந்தனுக்குன்னார்.  கேட்டவுடன் இந்தப் பெயரின் ஒலி எனக்கு ரொம்பவே பிடிச்சுப் போச்சு.  டுன். டுன். டுன் சம்பந்தமுன்னு  மனசில் வந்துக்கிட்டே  இருக்கு.

அப்படின்னா என்னன்னு  யோசிச்சுக்கிட்டே ரெண்டே நிமிசத்தில் நேத்து இரவு சாப்பிடப்போன ஷாப்பிங் செண்டருக்குப்போய்  அங்கிருந்து மாடிகள் சிலகடந்து ரெயில் ஸ்டேஷன் போக  மேலும் மூணு நிமிசமாச்சு. மின் தூக்கி  இருக்கணும்தான். எங்கே இருக்குன்னு  தேடணும் இனி.

டிக்கெட் வாங்கும் இடத்தில் தான் தெரிஞ்சது டுன் சம்பந்தன் என்பது ஒரு  மோனோ ரயில் ஸ்டேஷன் பெயர்.  நம்ம புகிட் பின்டாங் என்ற  பகுதியில் இருக்கும் ஸ்டேஷன்  அந்த ஏரியாவின் பெயரிலேயே இருக்கு.  வடக்கு தெற்காக போகும்  இந்த மோனோ ரயில் பாதையில் மொத்தம் 11 நிறுத்தங்கள். நம்ம புகிட் பின்டாங்  சரியா  நட்ட நடுவில் இருக்கு.

 புகிட் என்றால் மேடு, பின்டாங் என்றால் ஸ்டார். ஸோ....மேட்டில் இருக்கும் நட்சத்திரம் என்று 'முழி' பெயர்க்கலாம்.

அப்ப டுன் சம்பந்தன்?   'கதை' கொஞ்சம் பெருசுதான். சுருக்கமாச் சொல்லப் பார்க்கிறேன்.

பிரிட்டிஷ்காரர்கள் மலேயாவுடன்  (  அப்ப இந்த நாட்டுக்குப் பேரு 'மலேயா'தான்) வியாபார உறவு வச்சுக்கிட்டு இருந்தது 1771 ஆம் வருசத்தில் ஆரம்பிச்சது.  அப்ப  அங்கே(யும்)  அரச வம்சத்து ஆட்சிதான்.  மலேயாவின் ஏழு பகுதிகளில் ஏழு  அரசர்களின் ஆட்சி.  வழக்கம்போல்  அரசர்களுக்குள்  மித்ரபேதம் செஞ்சு  நாட்டைக் கைக்குள் கொண்டு வந்தது  பிரிட்டிஷ் அரசு.  அங்கே நாடு என்பதே  ஒரே துண்டமா இந்தியா போல இல்லாமல்  பெருசும் சிறுசுமா நாலு துண்டங்கள்.  தாய்லாந்துலே இருந்து தெற்கே வந்துக்கிட்டே இருந்தால்  kangar  (National forest) என்ற இடம் தாண்டுனவுடன் மலேயா ஆரம்பிச்சுருது. அப்புறம் கிழக்கே கடல் தாண்டி இன்னொரு பெரிய தீவின் (indonesia)வடக்கு, வடமேற்கு பகுதிகளிலும் சராவாக், சபா ன்னு சிலமாநிலங்கள் மலேயாவைச் சேர்ந்ததே. இதில்லாம  இவுங்க எல்லைக்குள்ளே சிலபல தீவுகள்.

வீராசாமி  என்பவர் தமிழ்நாட்டுலே இருந்து  1896 ஆண்டு மலேயாவுக்கு ரப்பர் தோட்டத்தில்  வேலை செய்ய வர்றார்.  நல்ல  உழைப்பாளியா இருக்கணும்.  வேகமாமுன்னேறி  சொந்தமா சிலதோட்டங்களுக்கு அதிபதியானார்.  1919 வது ஆண்டு  மலேயாவில் இவருக்குப் பிறந்த ரெண்டாவது மகன் திருஞான சம்பந்தன். பள்ளிப்படிப்பை மலேயாவில்முடிச்சதும், பட்டப்படிப்புக்கு  தமிழ்நாட்டுக்கு வந்து அண்ணாமலைப் பல்கலையில்  சேர்ந்தார்.

இந்தியாவில்  சுதந்திரப்போராட்டம் தீவிரமா இருந்த காலக்கட்டம்.  காந்தி, நேரு, சுபாஷ் சந்த்ர போஸ்  கருத்துக்கள்  எல்லாம்   இவரைக் கவர்ந்தது.  இதே சமயம்  ரெண்டாம் உலகப்போர்  ஆரம்பிச்சது.  அங்கே மலேயாவில்  அப்பா வீராசாமி காலமானார்.  சட்னு ஊருக்குத் திரும்பமுடியலை:(   தகப்பன் இறந்து நாலு வருசத்துக்கு பின்னே மலேயா வந்து சேர்ந்தார். குடும்பத்தொழிலான  ரப்பர் தோட்டங்களை நிர்வகிக்கும் பொறுப்பு.

 அதே சமயம்  மலேயா தமிழர்களிடையே  கல்வி அறிவு போதிய அளவு இல்லையேன்னு மன வருத்தம்.  1954 இல்  மகாத்மா காந்தி தமிழ்பள்ளி என்ற பெயரிலொரு பள்ளிக்கூடம் ஆரம்பிச்சார். அந்த சமயம் மலேயாவுக்கு விஜயம் செஞ்ச விஜயலக்ஷ்மி பண்டிட் (நேருவின் சகோ) கையால் பள்ளிக்கூடத் திறப்பு விழா நடந்துச்சு.

அரசியல்  ஆர்வம் சும்மா இருக்கவிடலை . 1946 ஆண்டு மலேயா இண்டியன் காங்ரெஸ்  என்ற தேசிய கட்சி உதயமாச்சு.  இந்தியா சுதந்திரப் போராட்டம், வெள்ளையனே வெளியேறு என்ற புரட்சி எல்லாம்  பார்த்ததும்  இங்கேயும் பிரிட்டிஷ் பிடியில் இருந்து வலகணும் என்ற ஆவல் அதிகமாச்சு. புது கட்சிக்கு  18 கிளைகள்  பல ஊர்களில் உருவாகி இருந்துச்சு, நம்ம சம்பந்தன் காங்ரெஸில் இணைந்த சமயம். அப்போ அவருக்கு வயசு  36.

கொஞ்சம் நாளிலேயே   காங்ரெஸின் தலைமைப் பொறுப்பு கிடைச்சது.  மலேயா சீன காங்ரெஸ்,United Malays National Organisation என்ற கட்சிகளுடன் கூட்டணி  அமைச்சார்.  அதுக்குப்பிறகு  பொதுத்தேர்தலில் போட்டியிட்டு  ஜெயித்து அமைச்சரவையில் பங்கு பெற்றார். முதலில்  கிடைத்த பதவி தொழில்துறை அமைச்சர். இனி எல்லாம் ஏறு முகமே!  18 வருசங்கள் நாடாளுமன்றத்தின் அங்கமா இருந்து தொடர்ந்து சுகாதாரம், பொதுப்பணி, தபால் தந்தி துறை, தேசிய ஒற்றுமை  இப்படியான பதவிகளை சிறப்பான அளவில் செய்துள்ளார்!

1957 இல் சுதந்திர ஒப்பந்ததில்  கையெழுத்துப் போட்ட மூன்று அரசியல்தலைவர்களில் இவரும் ஒருவர். இந்தியர்களின் பிரதிநிதி! இவர் தமிழர் என்பதில் நமக்கும் பெருமையே!  இவருடைய செயல்களையும் உழைப்பையும் பாராட்டி  1967 இல் மலேசிய அரசு 'டுன்'  Tun என்ற விருது கொடுத்து  கௌரவப்படுத்துச்சு.  இது இந்திய அரசு கொடுக்கும் 'பாரத் ரத்னா'வுக்குச் சமமானது!

உண்மையான உழைப்புக்கு  நன்றியாக மலேயா பல்கலைக்கழகம் 1971 இல் டாக்டர் பட்டம் கொடுத்து கௌரவிச்சது.
அரசியலுக்கு வந்த அஞ்சாம் வருசமே  மலைநாடு என்ற தினசரியையும்,  மலேயன் டைம்ஸ் என்ற ஆங்கில தினசரியையும்  சொந்தப்பொறுப்பில்  வெளியிட்டு  நடத்திக்கொண்டிருந்தார்.  பத்திரிகை நஷ்டத்தில்  நடந்து இவரது  பூர்வீக சொத்தையெல்லாம் கரைச்சது உண்மை:(

தமிழர்களுக்கு இவரது ஒரே வேண்டுகோள்.... ஏழையாக இருக்கலாம்.ஆனால் கோழையாக  இருக்கக்கூடாது என்பதே.
1979 இல்  அறுபது வயது பூர்த்தியாகுமுன்  இதயநோய் என்ற காரணம் காட்டிக் காலன் இவரைக் கவர்ந்தான். அரசு  மரியாதையுடன்  இடுகாட்டிற்கு போனார்.

  மோனோ ரெயில் ஸ்டேஷன்களை அமைச்சப்ப,  நாட்டுக்கு இவர் செய்த சேவைகளை நினைவில் கொண்டு தமிழர்கள் அதிகமுள்ள பகுதியில் இவர் பெயரையே வச்சாங்க. அங்குள்ள ஒரு  நீண்ட சாலைக்கும்  ஜலான் டுன் சம்பந்தன் என்றே பெயர்.   (ஜலான் = சாலை)

தொடரும்.......... :-)



 PIN  குறிப்பு:  படம் ஒன்னும் பொருத்தமா இல்லையேன்னு  ரிஷானுக்காக  ஹொட்டேல் வரவேற்பில் இருக்கும் மலர் அலங்காரம் ரெண்டு  சேர்த்திருக்கேன்.

வேர்க்காத ரயிலும் வேகாத வடையும்! (மலேசியப் பயணம் 3)

$
0
0
ஆளுக்கு  ஒன்னு அறுபது கொடுத்து டிக்கெட்  வாங்கிக்கிட்டு மோனோ ரயில் ஸ்டேஷனுக்குள் நுழையறோம்.  பரவாயில்லை. சுத்தமாகத்தான் இருக்கு. எந்தப் பக்கம் போகணும் என்ற தகவல்கள் விளக்கமா இருக்கு.

எதிர்ப்பக்கம் போகும்  வண்டி  ஓசைப்படாமல் வந்து , நின்னு, புறப்பட்டது. ரெண்டு பெட்டிகள்தான். ரெண்டையும் இணைச்சுருக்காங்க. நம்ம சிங்காரச்  சென்னையிலும் இந்த ரயில் வரப்போகுது என்பதால் கவனிச்சுப் பார்த்தேன்.

இங்கே குவாலா லம்பூருக்கு  மோனோ ரயில் வந்து  இந்த  ஆகஸ்ட் மாசம் 31 தேதிக்கு சரியாப் பத்துவருசம் ஆகுது. பொதுவா முக்கியமான நிகழ்வுகள் இந்தத் தேதிக்குதான் ஆரம்பிக்கும்.  அது என்ன அதிர்ஷ்ட நாளான்னா...... அப்படித்தான் சொல்லணும். ஆகஸ்ட் 31,மலேசிய நாட்டின் சுதந்திரத் திருநாள்.



நகரின் வடக்கு, தெற்காக ரயில்பாதை.  மொத்தம் 11 ஸ்டேஷன்கள். காலை ஆறு மணிக்கு ஆரம்பிச்சால் இரவு பதினொன்னரை வரை ஓட்டம்.  பீக் அவரில்   அஞ்சு நிமிசத்துக்கு ஒன்னு.   மற்றநேரங்களில்  பனிரெண்டு நிமிசத்துக்கு ஒன்னு. 244 நபர்கள் ஒரே சமயம் பயணிக்கலாம். ஆனால் இருக்கைகள் 48 நபர்களுக்கு  மட்டுமே.  மற்றவர்கள்  எல்லாம் ஸ்டேண்டிங். வயசானவர்களுக்கும் கர்ப்பிணிகளுக்கும்  இருக்கை ஒதுக்கீடுன்னு தனியா இல்லை என்றாலும்  மக்கள்ஸ் புரிதலோடு அவுங்களுக்கு இடம் கொடுத்துடறாங்க.



மொத்தம் பத்து ரயில் வண்டிகள்   தினம் போய் வந்துக்கிட்டு இருக்கு.


இதுவரை  விபத்தே நடக்கலைன்னு நினைச்சுடக்கூடாது. மோனோ ரயில் பாதை அமைச்சு அதைப் பொதுமக்கள் பயனுக்குத் திறந்து விடுமுன் சோதனை ஓட்டங்கள்   ஒரு வருசமா  நடந்துக்கிட்டு இருந்த சமயம் அது.   ரயிலில் இருக்கும்   13.4 கிலோ எடையுள்ள  ஸேஃப்டி வீல்  கழண்டுக்கிச்சு. நேரா கீழே விழுந்தது அங்கே அகஸ்மாத்தா நடந்து போய்க்கிட்டு  இருந்த  மனிதர்  தலையில்.   இவர்   டேவிட் செல்லையா என்ற ஒரு தமிழ்காரர். (போச்சுடா..... தலையில் விழுந்தாலும் அது தமிழ்த்தலையா இருக்கணுமா!) இவர்  ஊடகவியலாளரும் கூட!  மருத்துவ மனையில் தங்கி சிகிச்சை பெற்றவர்,  ரயில் கம்பெனி மேலே வழக்கு தொடுத்தார்.


இப்படிப்பட்ட ஒரு விபத்து  நடக்கணுமுன்னா ஆறு வித இணைப்பு  அகற்றப்படணும். யாரோ 'விஷமிகள்' போல்ட்டை கழட்டி இருக்காங்க:( ரயிலில் இருந்த 23  பாதுகாப்பு சக்கரங்களையும் பரிசோதிக்கத் தவறிய மோனோ ரயில் கம்பெனி, தங்கள் தவறை உணர்ந்து  பாதிக்கப்பட்ட டேவிட் செல்லையாவுக்கு  ஒரு பெரும் தொகையை  நஷ்ட ஈடாக் கொடுத்து  நீதிமன்றத்துக்கு வெளியே வழக்கை செட்டில் செஞ்சுக்கிட்டாங்க.

அடுத்த விபத்து 2005 இல்  ரப்பர் டயர்  வெடிச்சதால் ஏற்பட்டது. ரெண்டு பெண்மணிகளுக்கு கையிலும் காலிலும் அடிபட்டது.  இரவு எட்டரை மணி என்பதால் ரயிலில் கூட்டமில்லை.வெறும் முப்பது நபர்கள்தான்.

மூணாம் விபத்து போனவருசம் ஆகஸ்ட் 11, 2012லே நம்ம டுன் சம்பந்தன் ஸ்டேஷனுக்குச் சமீபம். ப்ரேக்டவுன் ஆனதும் பவர் சப்ளை நின்னு போயிருக்கு.183 பயணிகள்.  ஏஸி வேலை செய்யாமப்போய்...... மூச்சு முட்டத்துடங்கி, கடைசியில்  ரயில் ஜன்னல் கண்ணாடிகளை உடைச்சுருக்காங்க பயணிகள்.  பாவம்....ரெண்டு மணி நேரம்  பொறியில் அகப்பட்ட எலிகளா ஒரே அவஸ்த்தை:(   விபத்தை ஆராய்ஞ்சு,   பவர் சப்ளையில்  கோளாறுன்னு கண்டு பிடிச்சாங்க.


இது நடந்து ஆறே நாளில் நம்ம புகிட் பின்டாங் அருகில்  இன்னொரு ப்ரேக் டவுன்.200 பயணிகள். நல்லவேலையா ஏஸி வேலை செஞ்சது. அரைமணி நேரத்தில்  பழுதை சரி செஞ்சுட்டாங்க.

இப்ப எதுக்கு விபத்துக்களைப் பற்றிய விஸ்தரிப்பு?  நம்மூருக்கும்  மோனோ ரயில் வரப்போகுதில்லையா?  அதனால்  என்ன மாதிரி விபத்துக்கள் நடக்கலாமுன்னு  தெரிஞ்சு வச்சுக்கிட்டா நல்லதுன்னுதான். என்னதான் கவனமா இருந்தாலும் விபத்துகள் நேருவது  சகஜம்தானே? அதுவும் பவர் சப்ளை சீராக இல்லைன்னா?

நாமும் டுன் சம்பந்தன்  ஸ்டேஷனில் இறங்கி வெளியே சாலைக்கு வந்தோம்.  ரயிலுக்குள்  ஏஸி சில். வெளியே வேகாத  வெயில்!  நல்லவேளை  நடைபாதைக்கு மேற்கூரை போட்டு வச்சுருக்காங்க.  நடைபாதை நடைபாதையாகவே இருக்கு என்பது சிறப்பு.  கொஞ்ச தூரம் போனதும்  சாலைகள் சேரும் மையப்பகுதி.  இது தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதி என்பதை  உடனே  உறுதிப்படுத்துச்சு! சென்னை வாசனை ரொம்ப ஸ்ட்ராங்கா இருக்கு:(

நாற்சந்தி மூலையில் பூமாலைக் கடைக்காரரிடம் சரவணபவன் எங்கே இருய்க்குன்னு விசாரிச்சால்  இடதுபக்கம் கை காமிக்கிறார். கிட்டவா தூரமான்னால்..... தூரம்தானாம்:(  வேற எதாவது  நம்ம உணவுக்கடை  இருக்கான்னா.. இந்தப்பக்கம் காவேரி இருக்குன்னு கை காமிச்சார். நாம் இப்போ வந்த சாலையின் மறுபக்கத்தில் பிரியும் தெரு.  அடடா  குதிரைக் கண்பட்டை போட்டுருந்தோம்:-)



இங்கே பொதுவா ஸ்பெல்லிங் பிரச்சனையே  இல்லை.  polis,  Kedai, Teksi, Restoran, Sentral  இப்படி எல்லாம் படு சிம்பிள் , யூ ஸீ!


சாலையைக் கடந்து எதிர்வாடைக்குப்போய் காவேரியை நோக்கி நடந்தோம். 1986 ஆண்டு ஆரம்பிச்சதாம். ஆச்சே  27  வருசம்.

அட! வடை! வெப்ப விளக்கு போட்ட கண்ணாடிப்பொட்டியில்  இட்லியும்  வடையும் 'ஹை'ன்னுச்சு.  மனசின் குரல், 'ஆசையை அடக்கு'.

 ரெஸ்டோரன்னில்  வாடிக்கையாளர் யாருமே இல்லை.  மணி ஒன்பது. வர்றவுங்க வந்துட்டுப் போயிருக்கலாம். தனக்கு ஒரு இட்லியும் வடையும்  வாங்கிக்கிட்டு,  ரவா தோசைக்கு  சொன்னார் கோபால்.  நான் ஒரு சாதா ரோஸ்ட். சட்னி, சாம்பார் ஐட்டங்களுக்கான  தூக்குவாளிக்கொத்து ஒன்னு வந்து மேசையில் உக்கார்ந்தது. ஹைய்யோ! எவ்ளோ நாளாச்சு இதையெல்லாம் பார்த்து!  நம்மூரில்,  கூடுதலாக் கொஞ்சம் சாம்பார் கேட்டால் சின்ன ப்ளாஸ்டிக்  கிண்ணத்துலே இல்லே கொண்டாந்து தர்றாங்க!(எனக்கு வெறும் தோசையே போதும்.  காரமா இருக்குன்னு  சாம்பார் சட்னிக்குத் தடா.)


உனக்கு வடை பிடிக்குமே, ஒன்னு வாங்கிக்கன்னு  வற்புறுத்துனார் இவர்.  வாடிக்கையாளரைப் பார்த்த அதீத ஆர்வத்தில் சூடாப்போட்டுக் கொண்டு வரேன்னு பரிமாறும் நபர் உள்ளெ ஓடுனார்.  பார்த்தால் மொறுமொறு வடை!  ரெண்டாவது விள்ளலில் தெரிஞ்சு போச்சு,  வேகாமக் கிடக்கு:(  ரொம்பச் சூடான எண்ணெயில் போட்டால்  இப்படித்தான்  ஆகும்.

அசடு வழிஞ்ச பணியாளர், வேற ஒன்னு போட்டு எடுத்து வரேன்னார்.   நோ சொன்னேன்.  கோப்பியா தேத்தண்ணியான்னவருக்கு   ரெண்டாவதைச் சொன்னேன்.  பியர் மக் போல் உள்ள பெரிய கண்ணாடி மக்கில் ஆளுக்கு அரை லிட்டர் வந்துச்சு.  சும்மாச் சொல்லக்கூடாது..... நல்ல சுவை. அதுக்காக  500 மில்லி  அதிகமில்லையோ?  பாலுக்கு இங்கெல்லாம் பவுடர்தான்:(  ஃப்ரெஷ் பாலையெல்லாம்  சிங்கைக்கு  ஏற்றுமதி செஞ்சுடறாங்க போல!

கல்லா காதுக்கெட்டும் தூரத்தில்.  வேகாத வடைக்குக் காசு  வாங்கிக்கலை.  எங்கிருந்து வர்றீங்கன்னார் அவர்.  ஊரிலே இருந்துன்னார்  இவர்.  இந்த ஊர்  சமாச்சாரம் நமக்கு ஃபிஜியிலேயே பழக்கம்.   அங்கும் தமிழர்களுக்கு  ஊர் என்றால் அது தமிழ்நாடுதான்.

'எல்லாம் சுத்திப் பார்த்துட்டீங்களா'ன்னார் கல்லாக்காரர். 'இன்னும் இல்லை. நேத்து ராத்திரிதான் வந்தோம்.  முதலில் 'பசியாறிட்டு'ப் போகலாமுன்னு  இங்கே வந்தோம்' என்றேன். எனக்கும் ஏகப்பட்ட மலேசிய நண்பர்கள் இருக்காங்கல்லே:-)

பக்கத்துலே  ரெண்டு தெரு தள்ளிப்போனா ஒரு பெரிய கோவில் இருக்கு. நல்லா இருக்குமுன்னார்.

முருகனாம்!  ஓக்கே!

அப்பதான் ஞாபகம் வந்துச்சு.....  பூமாலைக் கடைக்காரர் இருக்காருன்னா பக்கத்தில் கோவில் இருக்கணுமே! என்ன கோவிலுன்னு விசாரிக்காம விட்டுட்டமே:(

ஆனால்  பூக்கடைக்கு  எதிரால்லே  இப்ப போய்க்கிட்டு இருக்கொம்!

தொடரும்....:-)


பதிவுலக நண்பர்கள் அனைவருக்கும் ரமலான் பண்டிகைக்கான இனிய வாழ்த்து(க்)கள்.


கந்தசாமியும் செங்கற் சூளையும்...... (மலேசியப் பயணம் 4)

$
0
0
1857 இல்  ஊர் உருவாகி  மக்களுக்குத் தேவையான  வசதிகள்  வர ஆரம்பிச்ச  24  வது வருசம் (1881) வெள்ளத்தால் ஊரில்  பாதி அழிஞ்சது. மீதிப்பாதியை அழிச்சுப் புண்ணியம் கட்டிக்கிட்டது  அக்னி.  மரமும் ஓலையும் வச்சுக் கட்டுன கட்டிடங்கள் எல்லாம்  போன இடம் தெரியலை:(


இனிமேப்பட்டு  செங்கல் வச்சுக்  கட்டிடங்களைக் கட்டணுமுன்னு  அப்போ  ரெஸிடெண்ட் ஜெனரலா இருந்த   Sir Frank Athelstane Swettenham உத்தரவு போட்டுட்டார். பிரிட்டிஷ்காரர் சொன்னதைக் கேக்கணுமா இல்லையா?  அவுங்கதானே இப்ப நாட்டைப்புடிச்சு வச்சுக்கிட்டு இருக்காங்க.

ரெண்டு நதிகள் ஓடும் நிலப்பகுதியாக இருந்ததால்,  அருமையான  களிமண் பூமி.  செங்கல் அறுத்துச் சுட்டு, கட்ட ஆரம்பிச்சாங்க. ரொம்பவே தரமான செங்கல். ஊரில் இருக்கும் முக்கிய கட்டிடங்கள் எல்லாம் அப்போ கட்டுனவைதான்.  இந்தப்பகுதிக்கு  ப்ரிக் ஃபீல்ட்ஸ் என்றே பெயரும் அமைஞ்சது.நம்ம சிங்காரச் சென்னையின் சூளை,   சூளைமேடு கூட இப்படி  நம்ம ஊர் உருவான சமயம்  செங்கல் சூளை அதிகமா இருந்த பகுதியா இருந்து, அதனால் கிடைச்ச காரணப் பெயரோ என்னவோ?


ஏராளமான இந்தியர்கள் இந்தப்பகுதியில் வசிப்பதால்  லிட்டில்  இண்டியான்னும்  ஒரு செல்லப்பெயர் உண்டு.
மலேயன் ரயில்வேஸ்  தொடங்குச்சு 1885.  இதுலே வேலை செய்ய  இங்கிலாந்துலே இருந்து  நேரடியா ஆட்களைக் கொண்டு வர்றதுக்கு பதிலா,  அவுங்க  தங்கள் அடிமை நாடுகளில் இருந்து  ஏற்கெனவே ப்ரிடிஷாரால் பயிற்றுவிக்கப்பட்ட  மக்களைக்கொண்டு வரலாமேன்ற  யோசனையால்  சிலோன்காரர்களைக்  கொண்டு வந்தாங்க. அந்தக் கூட்டத்தில் சிலோனீஸ் என்ற  வகையில்  தமிழர், சிங்களர் எல்லோரும் இருந்தாலும் தமிழர்கள் எண்ணிக்கை  கொஞ்சம் அதிகமா இருந்துச்சு.

ரயில்வே நிர்வாகம், ஸ்டேஷன் எல்லாம்  இருந்த இந்தப் பகுதியிலேயே  வசிக்கவும் ஆரம்பிச்சாங்க. கொஞ்சகாலம் கழிச்சு கோவில் ஒன்னு தேவைப்படுதுன்னு  1890  டிசம்பர்  24 க்கு சின்னப்பா  என்றவர் வீட்டுலே கூடுன சிலோன்காரர்கள,  ஜஸ்ட் வேல் ஒன்னை நட்டு வச்சு முருகனை வழிபட ஆரம்பிச்சாங்க. இந்த முருகன் இருக்கான் பாருங்க......  தமிழன்  எங்கியாவது போனால்,  கூடவே பொட்டியைக் கட்டிக்கிட்டுக் கிளம்பிருவான்:-))))

அப்புறம் கோவில் கட்ட நிலம், செலவுக்கான பணம் எல்லாம் கொஞ்சம் கொஞ்சமா  ஒரு ஒழுங்குக்கு வந்து, 1902 வருசம்  சின்ன கோபுரத்தோடும்,   மூலவர் சந்நிதியில் முருகன் சிலையாகவும்  அழகா அமைஞ்சு போச்சு.  யாழ்பாணத்தில் இருக்கும் நல்லூர் ஸ்ரீ கந்தசாமி கோவிலை  முன்மாதிரியா வச்சுக்கிட்டாங்களாம்.  கோவிலுக்குப் பக்கத்தில் இருந்த இன்னொரு இடத்தையும் வாங்கி அங்கே கலாமண்டபம் என்ற பெயரில் ஒரு ஹாலும் கட்டிக்கிட்டாங்க. வீட்டு விழாக்கள் எல்லாம் இங்கே கனஜோராக நடத்திக்கலாமாம்.

கோவில் வாசலுக்குப் போய்ச் சேர்ந்தோம்.  நூறு வருசத்துக்கு மேல் ஆச்சுன்னாலும்  புதுக்கருக்கு அழியாமல் பளிச்ன்னு  இருக்கு.   ஆகம விதிப்படி  பனிரெண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை கும்பாபிஷேகம் எல்லாம் தவறாமல் செஞ்சுடறாங்க.


கோபுர வாசலில் 'டூஸ் அண்ட் டோண்ட்ஸ்' (எச்சரிக்கை) ஒட்டி வச்சுருக்காங்க. அஞ்சாவது பாய்ண்ட்டைப் பார்த்ததும் மனசு அப்படியே நொந்து போச்சு:(  உள்ளே போய்   கடவுள் கந்தசாமியை தரிசனம் செஞ்சுக்கிட்டு வெளியே வந்தோம்.  கோவிலுக்கு நேர் எதிரா இருக்கும் தெருவில் நடக்க ஆரம்பிச்சோம்.

கொஞ்சதூரத்தில்  ஏகப்பட்ட புறாக்கள் தரையில்!  கிட்டப்போய்ப் பார்த்தால்  ரெண்டு மூணு கிலோ அரிசியைத் தரையில் கொட்டி வச்சுருக்காங்க. அதுவும் கார் நிறுத்தும் இடத்தில்.  என்ன வழிபாடோ தெரியலை. அடுத்து  குழலோடு க்ருஷ்ணன்,  வாவான்னான்.  வீர ஹனுமான் கோவிலாம். கோவிலைப் புதுப்பிக்கும் வேலை நடக்குதுன்னு  எல்லோரையும் தாற்காலிக கொட்டகையில் கொண்டு வந்து வச்சுருக்காங்க.





  தொட்டடுத்து இன்னொரு கோவில். மகாமுனீஸ்வரர்  ஆலயம். எல்லோரும் ஷெட்டுக்கு வந்துட்டாங்க. அவரவருக்கு அவரவர் சாமிகள் வேண்டித்தான் இருக்கு. கோவில்களுக்கு   பக்ககத்திலும்  எதிர்வாடையிலும்  பூமாலைக்கடைகள். ஆர்கிட் பூக்களை வச்சுக் கட்டுன  அழகான மாலைகள்.

இங்கிருந்து தலையைத் திருப்பிப்பார்த்தால் கந்தசாமி கோவில் கம்பீரமா இருக்கு!


இன்னும் கொஞ்சதூரம் சிறுநடையில் புத்தகக்கடை ஒன்னு கன்ணில் பட்டது. காலத்தில் உறைஞ்சு போன தோற்றம் கடைக்கும் கடை ஓனருக்கும்.  நமக்கான வாசிப்புக்கு  ஒன்னும் அகப்படலை.  அப்படியும் தேடுனதில்  ' சின்ன நூல்கண்டா நம்மை சிறைப்படுத்துவது - சிவசங்கரி.'     பழையகால டைப்ரைட்டர்முன் கைகட்டி இருந்த பெண்மணி,  கையில் வாங்கிப் பார்த்து  கால்குலேட்டரில்  தட்டி 17 வெள்ளின்னார்.  இந்திய ரூபாயை  ரிங்கிட்டுக்கு மாத்தி மேலே ஒரு 12 ரிங்கிட் லாபம் வச்சுக்கறாங்க. நாள் முச்சூடும்  புத்தகங்களுக்கு முன்  வெறித்த பார்வையுடன்  இருந்து பாருங்க..... அவுங்க கஷ்டம் புரியும்!



மணி பத்தேகால் கூட இல்லை, வெயில் வாட்டி எடுக்குது.  கே எல்  சுற்றுலாப்பயணிகளுக்கான  வரைபடம், மலேசிய நாடு முழுமைக்கும்  உள்ள   வழிகாட்டிகள் இப்படி ரொம்ப அழகா அருமையா  விமானநிலையம், ஹொட்டேல்கள் இப்படி பல இடங்களில் குவிச்சுப்போட்டு வச்சுருக்காங்க.  கைப்பைக்குள் இருந்த  ப்ரோஷரைப் பார்த்து  அடுத்துப்போக வேண்டிய இடத்துக்கு ஒரு டெக்ஸி  அகப்படுமான்னு  நின்னதில்  ஒரு டெக்ஸி  கிடைச்சது.


வண்டியில் ஏறி உக்கார்ந்து வண்டி நகர ஆரம்பிச்சதும்  ரெயில்வே  ஸ்டேஷன் என்றார் நம்மவர். தலையை ஆட்டிய  ஓட்டுனர் (தமிழர்)  அடுத்த முப்பது விநாடிகளில்  ஒரு பாலத்தாண்டை வண்டியை நிறுத்தி  இந்தப்பாலத்தில் போங்க என்றார். பயணக்கட்டணம் மூணு வெள்ளி. கொடுத்துட்டு இறங்கும்போது சரியா முக்கால் நிமிசம்  ஆகி இருந்துச்சு. ஆனால் இந்தமுக்கால் நிமிசத்தில் கூட  சொல்லவேண்டிய அறிவுரையை மறக்காமல் சொன்னதுக்கு அவரைப் பாராட்டத்தான்(?!) வேணும்.

   "சங்கிலியைக் கழட்டிப் பையில் வச்சுக்குங்கம்மா. மலாய்க்காரனுங்க  சரியான திருட்டுப் பசங்க,அறுத்துக்கிட்டு ஓடிடுவாங்க"

இதென்னடா   பெரிய அபகடமா இருக்கேன்னு  பாலத்துக்குமேல் நடக்கும்போது சங்கிலியைக் கழட்டிக் கைப்பைக்குள் வச்சேன். இப்பப் பையைக் கட்டிக் காப்பாத்தணும். நல்லவேளையா நம்ம ஹொட்டேலில் எலெக்ட்ரானிக் ஸேஃப் இருப்பதால்  அதில் பாஸ்போர்ட்டுகளை வச்சுப்பூட்டி இருக்கோம். இல்லேன்னா நாந்தான் சுமப்பவள்.

பாலத்தினடியில் தண்டவாளங்களும், குஆலா லம்பூர்  என்ற  ஸ்டேஷன் பெயரும் தெரிஞ்சது
.

முதல் ரயில் போக்குவரத்து  தொடங்குனது  1886  செப்டம்பர்    KL  to  Klang . ஒரு 49 கிமீ தூரம். ரயில்வே ஸ்டெஷன் கட்டிடம் அப்போதான் கட்டி முடிச்சுருந்தாங்க. the residence of the British Resident, வீடு  அங்கே பக்கத்திலிருந்ததால் ரெஸிடெண்ட் ஸ்டேஷன் என்ற பெயர் அமைஞ்சது.  சில வருசங்களில் ரயில்பாதைகள் நீட்டிக்கப்பட்டு இந்த ஊருக்கும் சிங்கைக்கும் ரயில் பயணம் ஆரம்பிச்சது. தாய்லாந்து வரைகூட ரயிலில் போகலாம்!


ரெஸிடெண்ட் ஸ்டேஷன் கட்டிடம்  ஆங்கிலேய கட்டிடக்கலை நிபுணர்களால்  அமைக்கப்பட்டாலும்,  இருக்கும் நாட்டின் மதம் அனுசரிச்சு முகலாய கட்டிடக்கலைப் பாணியையும் கலந்து கட்டுனதே! தரமான உள்ளூர் செங்கல் பயன்படுத்தியிருந்தாங்க.  சூளை ரொம்பவே பக்கம் என்றபடியால்  சுடச்சுடக் கிடைச்சிருக்கலாம். அப்புறம்  ஒரு இருபத்தினாலு வருசம் கழிச்சு (1910 ) புனரமைப்பு செஞ்சாங்க.


இப்பப் பார்க்கும்போதும்  ஏதோ ராக்ஷஸ சைஸ்  பறவை ஒன்னு  அப்படியே சிறகுகளை விரிச்சு இறங்கி உக்கார்ந்தது போலத்தான் தோணும்.  நம்ம கேமெராவில் ஒரு ஃப்ரேமுக்குள் அடங்காது:(பிட் பிட்டா எடுத்தோம்.


வேறொரு சென்ட்ரல் ஸ்டேஷன் கட்டுனதும் இங்கே ரயில் நடமாட்டம்  அவ்வளவா இல்லையேன்னு  அழகான இந்த பாரம்பரியமுள்ள கட்டிடத்தை வீணாக்காமல்  ஹொட்டேல் ஹெரிடேஜ், ஸ்டேஷன் ஹொட்டேலா மாத்திட்டாங்க. வெளியே இருக்கும் அழகும்  எதோ போன வருசம் கட்டுனமாதிரி இருக்கும் புதுமையும் உள்ளே இல்லையாம். கார்பெட், அறைகள் எல்லாம் மக்கல்  மணமென்று  ஹொட்டேல் ரிவ்யூஸ் சொல்லுது.  ஒருவேளை 'பழமை போற்றுதும்' வகையில் 127  வருச கார்பெட் விட்டுவைக்கப் பட்டுள்ளதோ என்னமோ!!!

இந்த ஸ்டேஷனுக்கு எதிர்சாரியில் பிரமாண்டமான ரயில்வே நிர்வாக அலுவலகம், சட்னு பார்க்க லண்டன் பார்லிமெண்ட் பில்டிங் போல  நீளமா அரைத்தெருவுக்கு  இடம் பிடிச்சிருக்கு.  இதுவும் அட்டகாசமான அழகுதான்!  நம்ம சி,சென்னையில் செண்ட்ரல் ஸ்டேஷனைத் தொட்டடுத்து ரயில்வே ஆஃபீஸ் ஒன்னு தங்கசாலைத் தெரு ஆரம்பத்தில்  அட்டகாசமா இருக்கும் கவனிச்சு இருக்கீங்களா?

நம்ம குடும்பத்தில் ரெயில்வேகாரர்கள் அதிகம் என்பதால்  ரயில்வேன்னா ஒரு பாசம் பொத்துக்கிட்டு வந்துரும், எனக்கு கேட்டோ:-)

அக்கரையில் இருந்து படம் எடுக்கலாமுன்னு நினைச்சால்..... இங்கே எங்கேயுமே  ஸீப்ரா க்ராஸிங் என் கண்ணில் படலை.  அட்லீஸ்ட் சிக்னலில் வண்டி நிற்கும்போது பச்சை மனுசன் உண்டான்னா அவரையும் காணோம்?  சர்புர்ன்னு  தலை தெறிக்கும் வேகத்தில் கார்கள்.  நான் போகும்போது கூடவே (ஓடி)வான்றார் இவர். ஒரு வழியா எதிர்க்கரை போய்ச் சேர்ந்தோம்.






இனி எங்கே? எடு ப்ரோஷரை......

தொடரும்....:-)






கருப்பாக இருந்திருந்தால் ஆசை நிறைவேறி இருக்கும்..... (மலேசியப் பயணம் 5 )

$
0
0
வரைபடத்தில் பார்க்கும்போது எல்லாமே   ரொம்பப் பக்கத்தில் தான் இருக்கு. ஆனால்.... வெயில்....  சாலையில் இருந்த  கைகாட்டிப் பலகை சொல்லுது  மஸ்ஜித்  நெகரா இந்தப்பக்கமுன்னு.

முந்தியே குறிப்பிட்டமாதிரி மெனெக்கெடுதல்   ரொம்ப அதிகமில்லை. தேவையான சொற்களை அக்கம்பக்கம் இரவல் வாங்கிக்கலாம். இப்படித்தான்  நகரம்,  நெகாரா ஆகி இருக்கு.

தேசிய மசூதின்னு சொல்றாங்க. பொதுவான  மசூதிகளுக்குரிய  வெங்காயக்கூம்பு இல்லையேன்னு  பார்த்தால் வேற ஸ்டைலில் இருக்கு.  குட்டைப்பாவாடையுடன் தட்டாமாலை சுற்றும் சிறுமியின்  உடை அலைஅலையாய் வட்டம்போடுவதைப்போல்!   அச்சச்சோ..... சாமி சமாச்சாரத்துக்கு   உவமானம் சரி இல்லையே.....  குடையை விரிக்கும்போது  ஜஸ்ட் அது  முழுசுமா விரிஞ்சு க்ளிக்குமுன் இருப்பதைப்போலன்னு  வச்சுக்கலாம். ஓக்கேயா?

கைகாட்டி சொன்ன திசையில் நடந்தோம்.  மசூதி வளாகத்தில்  முன்புறத் தோட்டத்தின்  ஒரு ஓரத்தில்  ஏகப்பட்ட ஓவியங்களை வரைஞ்சு விற்பனைக்கு வச்சிருந்த ஓவியர்  சின்ன  ஸ்டூலில் உக்கார்ந்தபடி எதிரில் இருக்கும் குட்டியூண்டு  ஓவிய ஸ்டேண்டில் ஏறக்குறைய முடிஞ்சபடத்துக்கு நகாசு வேலை செஞ்சுக்கிட்டு இருக்கார்.  விலை ஒன்னும் அவ்ளோ அதிகமில்லை.  20 ரிங்கிட் முதல்  ஆரம்பம். நமக்கு வேணுமான்னு யோசனை .  ஆனால் நின்னு ரசிக்க தடை ஏது?  ரசிச்சுப் பாராட்டி நாலு சொற்கள் சொன்னதும் ஓவியருக்கு  முகத்தில் சிரிப்பும் நிறைவும்.




முன்புறத்தோட்டத்தில் குட்டியா ஒரு  மண்டபமும் அருகில்  உருது மொழியில் எழுதுன ஒரு  சுவரமைப்பும்.  மசூதின்னு எழுதி இருக்கும் போல!  உசர நெடுநெடுன்னு  போகும் மினாரா!  73 மீட்டர் என்றார்கள். அம்மாடியோவ்!!!

 நட்சத்திர வடிவ அமைப்பில் செயற்கை நீரூற்று. கடந்தால்  மேலே போக படிக்கட்டுகள்.  காலடி முடிஞ்சதும் கண்ணெதிரே  அற்புதம்!  இஸ்லாமியரல்லாதார் கூட உள்ளே போய்ப் பார்க்கலாமாம்! அடிச்சது ப்ரைஸ் எனக்கு.


படிகளின் அருகில்  காலியா இருந்த  காலணி ஸ்டேண்டில்  செருப்புகளைக் கழட்டி வைக்கப்போனார் கோபால்.  சட்னு அங்கிருந்த அறிவிப்பைப் பார்த்துட்டு வேணாமுன்னேன்.

berhati-hati pencuri.

திருடர்கள் ஜாக்கிரதை!  எனக்கும் கொஞ்சம்(!)   பஹாஸா மலேயு  Bahasa Melayu தெரியும்லெ:-))))))))

பார்வையாளர்களுக்கு  உதவும்  வாலண்டியர்கள்   இருக்கைக்குப் பக்கத்தில்  ரெண்டு  ஸ்டேண்டுகளில்  காலணிகள் நிறைய இருக்கு. அங்கே வச்சுட்டு இந்தப்பக்கம் வந்தோம்.  பார்வை நேரங்கள் தகவல்  எல்லாம்  சௌகரியமா இருக்கு.

ஆண்களுக்கும் பெண்களுக்கும்  மேலே போட்டுக்க  ஒரு  உடை தர்றாங்க.  தர்றது என்ன......   அணிவிச்சே  விட்டுடறாங்க. என் துப்பட்டாவை  தலையில் அழகாச்சுத்தி விட்டதும்  கண்ணாடியைத் தேடுச்சு மனம்.  நெற்றியில்  பளிச் ன்னு  கந்தசாமி கோவில் விபூதியுடன்  கோபால்!


படிகளேறி மாடிக்குப்போனோம்.  ஹைய்யோ!!!!    கண்ணில் ஒத்திக்கிறாப்போல்  பளிச்!  ஒரு தூசி துரும்பு?  ஊஹூம்....  பேசாம அங்கப்ரதக்ஷணம் செய்யலாம்.  பெரிய ஸ்விம்மிங் பூல் போல செயற்கை தடாகங்கள். பளிச்சிடும் பளிங்குத்தரைகள்.  சிம்பிளா நிற்கும் துண்கள் இப்படி எதைச் சொல்ல எதை விட?

மக்களுக்கு விளக்கிச் சொல்ல அங்கங்கே  கைடுகள். எல்லோருமே இங்கே தன்னார்வலர்களாம்.  இறைவனுக்கு சேவை செஞ்சால் புண்ணியம்.  நமக்கு உதவியவர்  ஸுரிலா. நியூஸிக்கு வந்துருக்காராம்.  ரொம்ப ஸ்நேகிதமான பேச்சும் பார்வையும்.  கிறைஸ்ட்சர்ச்சுக்கு வரலையாம். வரும்போது தகவல் சொல்லுங்கன்னு  விலாசமும் ஃபோன் நம்பரும் கொடுக்குமளவுக்கு  'கூட்டாளி'யாயிட்டொம்:-)


முன்னே சொன்ன   வட்டக்குடைக் கீழே  பெரிய வட்டமான கூடம். இதுதான்  மெயின் ப்ரேயர் ஹால். கருவறைன்னு வச்சுக்கலாம்.  இதுக்குள்ளே போக இஸ்லாமியர்களுக்கு மட்டுமே அனுமதி. ஆனால் சங்கிலித் தடுப்பில் நின்னு பார்க்க தடை ஒன்னுமில்லை.


ஷாண்டிலியர்களும்,  வண்ணக் கண்ணாடிகளும் ,அழகான  கார்பெட்டுமா  கண்ணைப்பறிக்குது ! விதானத்தைத் தாங்கிப்பிடிக்கும்  பிரமாண்டமான வட்டத்தூண்கள். அதில் ஆள் உசரத்துக்கு  டிஸைன் உள்ள வேலைப்பாடுன்னு அசல் தர்பார் !

இவ்ளோ பரந்த வெளி ஹாலில் சூடு ஒரு பிரச்சனையே இல்லை. காத்து அப்படியே அள்ளிக்கிட்டுப்போகுது. ஆனாலும்  நெடுக  ஃபேன்கள்  நிக்குது.

எனக்கு அதிகம் வியப்பைத் தந்ததுன்னா... அது,  அந்த சுத்தம்தான். உடனே மனசுக்குள் ஒரு குறுகுறு.....  ஏன் நம்ம ஹிந்துக்கோவில்களில் இப்படி ஒரு சுத்தத்தைப் பேணுவதில்லை?  ஒருவேளை கோவிலுக்குள் ஆயிரத்தெட்டு சந்நிதிகளை வச்சுக்கிட்டு அததுக்குத் தனித்தனியா எண்ணெய் விளக்கு, பூமாலைகள். விபூதி, குங்குமம் தீர்த்தமுன்னு  இருப்பதாலா? நாமும்  கையில் கிடைச்ச  விபூதி பிரசாதங்களை நெற்றியில் இட்ட மீதத்தை   தூண்களில் கொட்டி வச்சுட்டு வர்றதாலா?  அங்கங்கே கிண்ணங்களை வச்சு இருந்தாலும்  அங்கே கொண்டுபோய்ப் போட சோம்பும் மனசுக்கு  ஆதரவா?  இதுமட்டுமில்லாம கோவில் ப்ரசாதங்களை அதுவும்  ஆயிரம் தடா நெய்யொழுகும்  அக்காரவடிசலைத் தின்ன கையோடு தூணில் துடைச்சுகலைன்னா , எங்கே கோவிலுக்கு வந்த புண்ணியம் கிடைக்காமப் போயிடுமோ என்ற பயமா?

மொத்தம் பதிமூணு ஏக்கர் பரப்பில் கட்டி இருக்காங்க  இந்த மசூதியை.  இந்த இடத்தின் ஒரு பகுதி  முதலில் ஒரு  சர்ச்சுக்குச் சொந்தமானதாம். அதையும்   வாங்கிதான் கட்ட ஆரம்பிச்சதே!  மாடியில் கருவறையைச் சுற்றியும்  அப்படியே நாலாபக்கமும் விரிந்து பரந்து போகும்   பகுதிகள் அனைத்துமே பக்தர்கள் வழிபாட்டுக்குப் பொருத்தமான முறையிலேயே அமைக்கப்பட்டிருக்கு.  விதானத்தைத் தூக்கிப்பிடிக்கும் தூண்களின் அமைப்புகள் அபாரம்.

ஒரு விசேஷம் என்றால்....பதினைஞ்சாயிரம் நபர்கள்  இருந்து வழி பாடு நடத்தலாமாம்.  மாடியிலும் கீழேயுமாய் இடம் ஹோ ன்னு இருக்கு!   போனவாரம்  ரம்ஜான் பண்டிகைக்கு மசூதி நிறைஞ்சு வழிஞ்சுருக்கும், இல்லே???

மசூதியைக் கட்ட ஆரம்பிச்சு முடிச்சது 1965 வது  ஆண்டு.  அப்போ பிரதமராக இருந்த  (இவர்தான்  முதல் பிரதமரும் கூட!)  டுன்கு அப்துல் ரெஹ்மான் அவர்களின் பெயரை மசூதிக்குச் சூட்டவே எல்லோரும் விரும்பி இருக்காங்க. மலேயாவின் சுதந்திரம்  1957 இல் கிடைச்சது. அதுக்காக முன்னின்று பாடுபட்டவர் இவர்.  ஆனால்......  தன் பெயரை வச்சுக்க அவர் அனுமதி கொடுக்கலை.  மக்கள் ஒற்றுமையா அமைதியான முறையில்  சுதந்திரத்தைப் பெற உதவி செஞ்சதை நினைவுகூர்ந்து,  இது  தேசிய மசூதியாக(வே)   இருக்கணும் என்றார்.  (அச்சச்சோ..... எப்படிப்பட்ட சான்ஸ்! இப்படி வேணாமுன்னலாமோ? என்ன அரசியல்வாதியோ போங்க!!!!  ஒருமுறை தமிழ்நாட்டை எட்டிப் பார்த்திருக்கக்கூடாது?    அப்படிப் பார்த்திருந்தாலும் என்ன பயன்? அது வருசம்  1965 என்பதை நாம் நல்லா நினைவில் வச்சுக்கணும்)


வெளியே இந்த அழகான  கட்டிடத்தைச் சுற்றிவர செயற்கை நீர் ஊற்றுகளும்   அலங்காரமான   நடைபாதைகளுடன் தோட்டங்களும்  செடி கொடிகளுமாக  ஒரே அட்டகாசம்தான் போங்க.  ஒரு முறை நேரில் பார்த்துத்தான் ஆகணும்  என்ற வகை! எவ்வளவு நேரம் வேணுமென்றாலும்  நின்னு பார்த்து ரசிக்கலாம்தான்.  அதான் பகல் 12 வரை  அனுமதி உண்டே!

இங்கே ஒரு புண்ணியவான் எடுத்த வீடியோவைப் பாருங்க. அவருக்கு எம் நன்றிகள். (பயணங்களில்  நான் அவ்வளவாக வீடியோ க்ளிப்பிங்க்ஸ் எடுப்பதில்லை. என்னதான் ரெண்டு பேட்டரிகள் கைவசமிருந்தாலுமே  ரொம்பத்தேவையான இடத்தில்  பேட்டரி காலி ஆகி  என்னைத் தவிக்க விட்டுருமோ என்ற பயம்தான். அப்படியும் நடந்துருக்கு என்பதால், நான் ஒரு  சூடு பட்ட  ம்யாவ்!)


மலேசியாவின் தேசிய மதம் இஸ்லாம் என்றாலும் கூட அவர்கள் மற்ற மதத்தினரை எந்த ஒரு கட்டுப்பாட்டுக்குள்ளும்  வைக்கவில்லை.  அவரவர்  மதத்தைத் தொடர்ந்து கொள்ளும் சுதந்திரத்திலும்  தலையிடவில்லை.  இந்த மசூதியை வந்து பார்த்த  பல்வேறு இஸ்லாமிய நாட்டவர்கள்  மசூதியின் கூரை   பாரம்பரியமாக  இல்லை என்று  சொன்னதையும்  மனதில் கொள்ளவில்லை.   மாடர்ன் மலேசியா என்ற பெயர்  உண்மையில்  வெகு பொருத்தமே!

பொதுப்பணித்துறை கட்டிட நிபுணர்கள் மூவர் சேர்ந்து செய்து கொடுத்த ஐடியாவாம். திட்டத்தை முழுமையா நிறைவேற்ற  பிரிட்டிஷ்  கட்டிடக்கலை வல்லுனர்கள்  சிலர் உதவி இருக்காங்க.

ஆமாம்..... இவ்வளவு  அருமையான  கோவிலா என்று வாய் பிளந்த நிலையில்  இஸ்லாம் மதம் அப்படி என்னதான் போதிக்கிறதுன்னு  அங்கே விசாரிச்சதில்  அஞ்சு  அடிப்படையான  கொள்கைகளைத்தான் சொன்னாங்க. அந்த அஞ்சு தூண்கள்:


கடவுள் நம்பிக்கை

ப்ரார்த்தனைகள்/வழிபாடு

தானதருமம்

உண்ணா நோன்பு

புண்ணியத் தலங்களுக்கு  யாத்திரை



அட ராமா !   இது எல்லாமும்  எல்லா மதத்திலும் குறிப்பாக (எனக்குத் தெரியுமுன்னு நான் நினைச்சுக்கிட்டு இருக்கும்  ஹிந்து மதத்திலும் ) இருக்குதானே?  பின்னே எதுக்கு இப்படி அடிச்சுக்கறோமுன்னு  மனசு நொந்ததும் உண்மையே:(




வெளியே வந்து உடுப்பை அவிழ்த்துக் கொடுக்கும்போது  'எப்படி இருந்தது' என்று கேட்ட  வாலண்டியர் தோழியிடம்,  ' உங்க மசூதி சொர்கம் போல இருக்கு.  இந்த உடுப்பும் கருப்புலே இருந்திருந்தால்  எனக்கு இன்னும்கூடுதல் மகிழ்ச்சி கிடைச்சிருக்கும். என் நெடுநாள் ஆசை புர்க்கா அணிஞ்சு பார்க்கணும் என்பது' என்றதுடன், பார்வையாளர் பதிவேட்டில்,  மசூதியைப்பற்றிய என் கருத்தை  நியூஸி நாட்டின் சார்பாக பதிஞ்சுட்டுதான் வந்தேன்:-)

 சுற்றுலா போகும்போது  நாம் நமது நாட்டின் பிரதிநிதிகளாவே  அடுத்த நாட்டிற்குள்  நுழைகிறோம் என்பதை நினைவில் வச்சுக்கணும். நாம் செய்யும் சிறு தவறுகள் கூட  நமது நாட்டின் பெயருக்கு இழுக்கு,  இல்லையோ?

அடுத்த இடத்துக்குப்போக  டெக்ஸி  கிடைக்குதான்னு பார்க்கணும்.  வாங்க.

தொடரும்.......:-)





சந்தைக்கடையில் பச்சைப்புட்டு (மலேசியப் பயணம் 6 )

$
0
0
ப்ளூ டெக்ஸியில் ஏறி  நாலே நிமிசத்தில் மார்கெட்டில் இறங்கினோம்.  ஒன்னரை கி.மீட்டர். ஏழுவெள்ளி.  அதெப்படி?  ஏன்னா இது ப்ளூ டெக்ஸி.  மீட்டர் ஆரம்பமே ஆறு.  ரெட் டெக்ஸியை விட இது ரெண்டுமடங்கு அதிகம். அதுக்குப்பிறகு கி.மீட்டருக்கு ஒரு வெள்ளி ரெண்டிலுமே!

இந்த ப்ளூ வண்டி கொஞ்சம் பெருசு & புதுசு.  ரெண்டு வகை இருக்குன்றதை இப்பத்தானே கண்டு பிடிச்சோம்:-))))

  ஆரம்பத்தில்  ஃப்ரெஷ் காய்கறிகள், பழங்கள், இறைச்சி மீன்கள்  இப்படி விற்கும் வெட் மார்கெட் என்று சொல்லப்படும் வகை  மார்கெட் இது.  ப்ரிட்டிஷார் ஆண்ட பகுதிகளில் இப்படி ஒன்னு கட்டாயம்  இருக்கும் . நம்ம மூர் மார்கெட் யாருக்காவது நினைவு இருக்கோ?

அங்கே முன்புறக் கட்டிடத்தில்  பழைய  அண்ட் புதிய சாமான்கள் கொட்டிக்கிடக்கும் . ஒரு காலத்துலே புடவைக்கடை  பர்ச்சேஸ் முடிஞ்சதும் நேரா 'பஸ்' புடிச்சு மூர்மார்கெட் ஓடுவோம்.  அங்கே புத்தம்புது  தோல் செருப்புகள் நம்ம புடவையின் கலருக்கேத்தமாதிரி மேட்சிங்கா அஞ்சு ரூபாய்க்கும் குறைந்த விலையில் கிடைக்கும். ஆக்ஸெஸரீஸ்க்கு  அலைஞ்ச காலக்கட்டம் அவை:-)  அதிகநாள் உழைக்காதுதான். ஆனால்  அதே கலரா எப்பவும் கட்டப்போறோம்? பேஸிக்கா ஒரு பத்து கலர் இருந்தா சமாளிச்சுடுவொம்லெ:-))))

பழைய புத்தகங்கள் வேட்டையும் எனக்கு அங்கேதான். ஒரு முறை  பழைய பதிப்பு பாரதியார் பாடல்கள் வசனக்கவிதை உட்பட முழுத்தொகுதி, ரெண்டே ரூபாய்க்குக் கிடைச்சதாக்கும்!

அதே மூர்மார்கெட்டின் பின்புறக் கட்டிடத்திற்கு  எப்பவாவது போய்ப் பார்த்திருக்கீங்களா? நான் பார்த்திருக்கேன்.  பெரிய பிரம்புக்கூடைகளில்  கோழிக்குஞ்சுகள் முதல்  வான் கோழி வரை  உயிருடன் வச்சு விற்பாங்க. கிளிகளும், புறாக்களும் இன்னும் பலவித பறவைகளும் விற்பனைக்கு உண்டு.  லவ்பர்ட்ஸ்  பார்த்துப் பெருமூச்சு விட்டிருக்கேன்.வளர்க்க ஆசைதான்.... ஆனால்... ஹாஸ்டல் வாழ்க்கையில் .....   ஹூம்..... வேற வழி?

1888 வது ஆண்டு  பெருகி வரும்  ஊர் மக்கள் தொகைக்கு ஏற்ற படி, வெள்ளீயச்சுரங்கத்தில்  வேலை செய்ய இங்கே குடிவந்த குடும்பங்களுக்கான  சந்தை இது.  கூட்டம் பெருகப்பெருகத் தேவைகளும் கடைகளும் பெருகிவரவே அதுக்குத் தகுந்தாப்லெ  மரக்கட்டிடத்தை இன்னும் விரிவாக்கினாங்க. மாடியெல்லாம் கூட வந்துருச்சு. 1930களில் இதோ இப்போ நாம் பார்க்கும்  இந்த நிலையில் இருந்துச்சு. 1970 வது வருசம் கட்டிடத்தை இடிச்சுட்டு வேற மாதிரி கட்டிக்கலாமுன்னு   ஒரு எண்ணம்  வந்தப்ப, பாரம்பரியக் கட்டிடங்களின் அருமை தெரிஞ்சு அவற்றைக் காப்பாற்ற உருவான ஹெரிடேஜ்  சொஸைட்டி இதை இடிக்கக்கூடாதுன்னு போராடிக் காப்பாத்துனது ஒரு சரித்திரம்.

1980 இல் புது ஏரியாவில்  ஃப்ரெஷ் மார்கெட் ஒன்னு கட்டி முடிச்சதும்  இங்குள்ள வியாபாரிகளை அங்கே  அனுப்பிட்டாங்க. இந்தக் கட்டிடத்தை சீரமைச்சு, மலேசிய கைவினைப் பொருட்கள், கலைப்பொருட்கள் ,  குடிசைத்தொழிலா நடக்கும்  பத்தீக் டிஸைன்கள் இப்படிப் பிரத்யேகப்பொருட்களுக்கான  மார்கெட்டா மாத்திட்டாங்க.  புது ஓனர் இன்னும் பத்து மில்லியன் ரிங்கிட்ஸ் செலவு செஞ்சு அக்கம்பக்கத்து  இடங்களையெல்லாம் வாங்கி  நல்லா விஸ்தரிச்சுட்டார்.
 Kasturi walk இல் ஒரு வாக்:-)

மார்கெட்டின் பின்புறம் உள்ள பெரிய ஹாலில் ஆர்ட் கேலரி, பக்கவாட்டு திறந்த வெளியின் மற்ற  பக்கத்தில் இருக்கும் வரிசைக்கடைகளின் இடைவெளியில்   அலங்கார மேற்கூரை  (விதவிதமான  காற்றாடி(பட்டங்கள்) வடிவில் டிஸைன் செஞ்சவை) போட்டு  அந்த இடத்துக்கு கஸ்டூரி வாக் என்ற பெயர் சூட்டி,     உணவுக்கடைகள் இப்படி ஏகப்பட்ட அமர்க்களம்.


காலை 10 மணி முதல்  இரவு பத்துவரை தினமும் திறந்து வைக்கிறாங்க.  தினமும் இரவு ஒன்பது முதல் கலைநிகழ்ச்சிகள் வேற நடத்தறாங்க. பார்க்கவேண்டிய முக்கிய இடங்களில் ஒன்னு என்று இப்போ சுற்றுலாத்துறை ரொம்பப் பெருமையுடன் இதை விளம்பரப்படுத்துது!

பசார் சேனி க்குள் நுழைகிறோம்.  'ஹோ'வென்று பரந்து விரியும் ஹால். இடதுபக்கம்  கண்ணை இழுத்தது குட்டி இந்தியா. அதுக்குப் பக்கத்தில்  குட்டி கஷ்மீர். போச்சுடா.....   இனி குட்டி ம.பி, குட்டி உ.பி, குட்டி குஜராத்ன்னு ஆரம்பிச்சுருவாங்க  போல:(

ஒரு கடை எங்கே முடியுது, இன்னொன்னு எங்கே ஆரம்பிக்குதுன்னு தெரியாம தொடர்ச்சியா  ஒருபக்கம் ஓடும் கடைகள்.  நடுப்பகுதியில்   நடப்பதற்கு இடம் விட்டுத் தீவுகள் போல் தனித்தனியாகக் கடைகள்.  கடையைக் கட்டும்போது எப்படி மூடி வைப்பாங்களோ?

வாசனைத் தைலங்கள், துணி பொம்மைகள், மரச்சிலைகள், துணிமணிகள், காஸ்ட்யூம் நகைநட்டூஸ்  இப்படி ஏராளம்.

சிறுதீனியாக் கொறிக்க  கடலைகள், வற்றல்கள் இப்படி இன்னொரு பக்கம்.



அஞ்சு ரிங்கிட்டுக்கு  பத்து நிமிசம்  உங்க பாதங்களைக் கடிச்சுக் கிச்சுக்கிச்சு மூட்டிவிட மீன்கள் ரெடி:-)

ம்யாவ் டிஸைன்ஸ்க்குன்னே ஒருகுட்டிக்கடை.  வாவான்னு அது கை ஆட்ட, இவர் பைபை எனச் சொல்லிக்கிட்டே என்னை இழுத்துக்கிட்டுப் போயிட்டார். கடிகார டிஸைன்ஸ் ச்சும்மா எட்டிப் பார்த்தேன்.

நிர்மலா சாரி என்ற பெயரில் ஒரு  காஸ்மெடிக்  கடை!


பித்தளை மாடும், அம்பாரி யானையும் அழகோ அழகு! ஜஸ்ட் க்ளிக். அம்புட்டுதான்:(

மாடியில்  படீக் டிஸைன்ஸ்லே நான் தேடுவது கிடைக்குமான்னு பார்க்கப்போனேன்.  சில வருசங்களுக்கு முன் நம் சென்னை வாழ்க்கையில் நம்ம அல்ஸாமால் இருக்கு பாருங்க அங்கே பேஸ்மெண்ட்டில் ஒரு லினன் ட்ரெஸ் கிடைச்சது.  படீக் &  பூத்தையல்.  மலேசியத் தயாரிப்பு. அது போல வேறொன்னு கிடைக்குமான்னு என் தேடல். (காரணமே இல்லாம நான் ஷாப்பிங் போகமாட்டேன்னு உங்களுக்குத் தெரியாதா என்ன? )


ஒரு சில உடைகள் அழகாத்தான் இருக்கு. மகளுக்கு வாங்கலாமுன்னா   முன் அனுமதி இல்லாம எடுத்தோமுன்னா தொலைஞ்சோம்.  அவளுக்குக் காமிச்சுட்டு வாங்கலாமுன்னு  கோபாலின் ப்ளாக்பெர்ரியில் படம் எடுத்து  மகளுக்கு அனுப்பிட்டு பதில் வரட்டுமுன்னு  மற்ற கடைகளை வேடிக்கை பார்த்துக்கிட்டு இருந்தோம்.

அங்கங்கே கைத்தொலைபேசியை வச்சே அட்டகாசமான படம் எல்லாம் எடுக்கறாங்க இல்லே?  நம்ம கோபாலின் கைப்பேசி தனித்தரம். என்னதான் படு அழகான காட்சியும் லைட்டிங்ஸுமா அமைஞ்சிருந்தாலும் அது த்ராபையாத்தான் எடுக்கும். (செட்டிங்ஸ் சரி இல்லைன்னு சொல்லிக்கிட்டு இருக்கார்)  அதுலே எடுத்து அனுப்பிய படங்களுக்கு  கொஞ்ச நேரத்தில் எதிர்பார்த்த  பதில் வந்தது..... வாங்கவே வாங்காதேன்னு!  எப்படியோ  மிஷன் வெற்றி:-)))))

24 கடைகளில் கொட்டிக்கிடக்கும் படீக் வகைகளில் என்னிஷ்டம்போலவும் கிடைக்கலைதான்.  அதுக்காக.....  போனால் போகட்டுமுன்னு (கோபாலின் வற்புறுத்தலுக்காக) ஒரு டாப் மட்டும் வாங்கிக்கிட்டேன். இதே தளத்தில் மூணு  ரெஸ்ட்டாரண்டும் இயங்குது. எல்லாம்  சீனச்சாப்பாடு வகைகள்.

ரெஸ்ட்ரூம்  வசதிகளுக்கு  அரை வெள்ளி ஒரு நபருக்கு.

பின்பக்கக் கட்டிடத்தில்  ஆர்ட் கேலரி அனெக்ஸ்ன்னு  நிறைய படங்களை  காட்சிக்கு வச்சுருக்காங்க. என் கண்ணைக் கவர்ந்தது வண்ண மணல்  பாட்டில் அலங்காரம். அட்டகாசமான  வண்ணங்களில்  மிருதுவான பொடி மணல்களின் குவியல். மெல்லிசான  ஃபுனல் வச்சுருக்காங்க. வரைய ஆர்வம் இருந்தால்  வண்ண ஓவியங்களை நாமே பாட்டிலில் அடைச்சு வாங்கிக்கலாம்.  என்ன ஒரு அற்புதமுன்னு வா பிளந்து பார்த்துட்டு க்ளிக்கிட்டு வந்தேன். பாட்டிலை ஸீல் செஞ்சு கொடுத்துடறாங்க. அதுக்கப்புறம் எப்படி ஆட்டினாலும்  ஓவியங்கள் நகர்வதில்லை!!!!!



உள்வேடிக்கை போதும்னுன்னு வெளியே கஸ்டூரி வாக்கில் நடந்தோம். சின்னதும் பெருசுமா  நடுவில்  ஏகப்பட்ட தீனிக்கடைகள்.  எலெக்ட்ரிக் புட்டு  பார்த்தேன். மூங்கில்குழாய் புட்டு ட்ரெடிஷனல். அரிசிமாவு, பனை வெல்லம்,  தேங்காய்த்துருவல்,  பாண்டன் நிறமும்மணமும். (Pandan.  Screw pine  என்று சொல்லப்படும் ஒருவித தாழை வகை.  கேக்குகளிலும்  சீன மலேசிய உணவு வகைகளிலும் இந்த மணமுள்ள எஸ்ஸென்சைப் பயன்படுத்துவார்கள்.)

ஒரு  15 செமீ நீளம் வரும் உருளையில்  தண்ணிர் சேர்த்துப் பிசறின அரிசி மாவு பனைவெல்லாம் முக்கால்வாசி வரை நிரப்பி வச்சு அதன்மேல்  பாண்டன்  மணம்  கலந்ததேங்காய்ப்பூவை நிரப்பி வச்சுக்கறாங்க. பிறகு ஒரு பெரிய ட்ரே மாதிரி ஒன்னு. அதில்  9 X 7   ன்னு 63 வட்ட துவாரங்கள்.  இந்த மூங்கில் உருளைகள்  அந்த துவாரத்தில்  சக்ன்னு  உக்கார்ந்துக்குது.  ட்ரேயின் அடிப்பாகத்தில் மின்சாரம் மூலம் கொதிக்கும் வெந்நீர். அதில் வரும் நீராவியின் மூலம் அஞ்சே நிமிசத்தில்  சின்னதா அழகான 63 பிட்டு உருளைகளிலும் குழாப்புட்டு தயார்!







தயாரிப்பை கொஞ்சநேரம் நின்னு பார்த்துட்டு ஒரு செட் புட்டு வாங்கினோம்.  ஆறு   புட்டு பிட்டுகள் ஒரு செட்டில்! இன்னொரு கடையில்  நறுக்கி வச்ச  ராக்ஷச சைஸ் கொய்யாப் பழங்கள் ஒரு ட்ரே 1.20க்கு வாங்கிக்கிட்டோம்.  கோபாலின் கைப்பை எல்லாத்துக்கும் சௌகரியமா இருக்கு:-)

தாகமா இருக்கேன்னு  இன்னொரு ஸ்டாலில் ஆளுக்கொரு இளநீர்.  அம்மாம்பெரிய சைஸும் உள்ளே இருந்த இளம் தேங்காயுமாக  வயிறு ஃபுல்.  இனி லஞ்சுக்கு இடமில்லை:(  ஆனாலும் எதிர்வரிசைகளில் இருந்த உணவுக்கடைகள் ஒன்றில் அம்மும் கூட்டத்தைப் பார்த்து என்னதான்  சமையலுன்னு  தெரிஞ்சுக்கப்போனேன். ' யம்மா...... இவ்ளோ பெரிய மீன் தலையா?' என்றார் கோபால். எவ்ளோ பெருசா இருந்தாலும் எனெக்கென்ன பயம் ?க்ளிக் க்ளிக்.


 என்னை வசீகரிச்சது அங்கே இருந்த டேக்ஸாக்கள்.  ஹப்பா..... எவ்ளோ நாளாச்சு இந்தப் பாத்திரங்களை எல்லாம் பார்த்தே!  பாத்திரம் மட்டும் அழகல்ல  ..... அவை இருந்த சுத்தமும் நேர்த்தியும் இன்னும் அழகு. பளிச்சுன்னு துலக்கி  அளவான தட்டு மூடலுடன் அதற்கான கரண்டியுமா  ஜம்முன்னு உக்கார்ந்துருக்கு.  கரண்டியிலோ தட்டிலோ இல்லை அது இருக்கும் இடத்திலோ குழம்பின் சுவடு கூட இல்லை! (ஒரு வேளை காலியோ? ச்சீ.... இருக்காது! இருக்கவும் முடியாது )


மற்ற ஷாப்பிங் மால்களுக்குப் போகணுமுன்னா இலவச பஸ்ஸில் கொண்டு போய் விடறாங்க.


அதான் லஞ்சு வேண்டாமுன்னா ....  அறைக்குப்போய் கொஞ்சம் ஓய்வெடுக்கலாமேன்னு  டெக்ஸி தேடினால் அங்கே நின்னுக்கிட்டு இருந்த நாலைஞ்சு டெக்ஸிகளும்  லஞ்ச் டைம் ஓய்வாம்.  பக்கத்துலே  ரயில் நிலையம் இருக்கான்னா..... பசார் சேனி நிலையம் இருக்குன்னாங்க.  மெள்ள அங்கே நடந்து போய்  புகிட் பின்டாங் ஸ்டேஷனுக்கு  தானியங்கி டிக்கெட் மிஷீன்லே டிக்கெட்டை வாங்கிக்கிட்டு  மேலே படிகளேறிப்போய் பார்த்தால் அது மோனோ ரயில் இல்லை. லைட் ரயில். அதுலே ஏறினதும் அடுத்த ஸ்டேஷன் சென்ட்ரல்.  அவ்ளோதான் . அதுக்கு மேல்போகாது!


என்னடா  இதுன்னு  வெளியே  பாதி தூரத்தில் இருக்கும்  தகவல் உதவிப் பணியாளரிடம் கேட்டால்.....  வெளியே ரயில் நிலையத்தைக் கடந்து போய்  அரைக்கிலோ மீட்டர் நடந்தால் மோனோ ரயிலுக்கான சென்ட்ரல் ஸ்டேஷன் வருமாம். தொலையட்டும் நடந்தே போகலாமுன்னா.... இந்த ஸ்டேஷனை விட்டு வெளியே போகணுமுன்னா நம்ம கையில் இருக்கும் டிக்கெட்டை  அதற்கான  ஸ்லாட்டில் போட்டால்தான்  நம்மை வெளியே விடும்.  அப்புறம் அங்கே போய்  இன்னொரு டிக்கெட் வாங்கினால்தான் உள்ளெயே போக முடியும்.

எல்லாத்துக்கும் சேர்த்து டிக்கெட் கொடுக்கும் மிஷின் இருக்கு. ஆனால் சரியான  கோஆர்டிநேஷன்  komutersக்கு  இல்லையேன்னு கடுப்பு.  இவரோ துடிக்கிறார். வா வெளியே போய்  டெக்ஸி பிடிக்கலாமுன்னு. நான் சில சமயங்களில்  பிடிவாதமா அடம் பிடிப்பேன். இப்ப அப்படி ஒன்னு. இடும்பியோடு முப்பத்தியொன்பது வருசம் வாழ்ந்ததால்  பழக்கப்பட்டுப்போன  இவர்தான் பாவம்.


 வெளியே போகாமல் வேறென்ன வழி இருக்குன்னு விசாரிச்சால், நாம்  திரும்ப இதே லைட் ரயிலில் ஏறி  வந்தவழியே போய்  Hang Tuah ஸ்டேஷனில் (இங்கே இண்ட்டர் சேஞ்ச் கனெக்‌ஷன் இருக்கு.  மேல் மாடியில் ஒரு ரயிலும், மாடியில் ஒரு ரயிலுமா ஓடுது) மோனோ ரயிலுக்கு மாத்திக்கலாம் என்றார்கள்.

அப்படியே Hang Tuah ( தருமிக்கு: இவர்  15 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த  legendary Malay warrior) போய் இறங்கி இன்னொரு மாடியேறி நம்ம மோனோ ரெயில் பிடிச்சு  புகிட் பின்டாங் வந்து அறைக்குப் போனோம்.  லேட் லஞ்சுக்குப் பிட்டும் கொய்யாப்பழமும்:-)

கொஞ்சம் ஓய்வெடுத்துக்கிட்டு  நாலுமணி போல கிளம்பலாம். சரியா?

தொடரும்...............:-)





Viewing all 1430 articles
Browse latest View live


<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>